அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

கீதையும் கீதாவும்

 

//பொதுவாக நான் எனது என்று தன்னை கர்த்தாவாக எண்ணிக் கொண்டு செயல்களை செய்யாத பொழுது அவனை கர்மவினைகள் பாதிப்பதில்லை என்கிறார்கள் செய்பவன் நான் என்னால் தான் இது நடக்கிறது என்னும் புத்தியை விட்டுவிட்டு கர்மங்களில் பற்றற்று அவற்றின் பலனையும் எதிர்பாராமல் செயலாற்றுபவனை கர்மா பாதிப்பதில்லை என்பது ரமணர் அறிவுரையின் சாரம்.//

திங்கள், 14 ஜூலை, 2025

ஒழுக்கம் உடைமை குடிமை

 

(சிம்லா நாட்கள் - 3 விரைவில் வரும். முடிவுத் தொடர். துளசிக்குச் சற்று உடல் நலம் சரியில்லாததால் காணொளிக்கான குரல் அவரால் கொடுக்க முடியவில்லை. இந்த வாரம் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.)

பரிந்தோம்பிக் காக்க வேண்டிய ஒழுக்கம்

சுஜாதா அவர்கள் எழுதிய கதையான ஓலைப்பட்டாசு கதையில் சுஜாதா சொல்லியிருந்த ஒரு சம்பவம் குறித்து  எங்கள் ப்ளாகில் நம்ம ஜெ.கே. அண்ணா, தான் வேலை பார்த்த இடத்தில் தனக்கும் கிட்டத்தட்ட அதே போல ஒரு சம்பவம் நடந்ததாகச் சொல்லி எபியில் சென்ற சனிக்கிழமை எழுதியிருந்தார்.

புதன், 24 ஜனவரி, 2024

சில்லு சில்லாய் - 19 - பாட்டியும் சினிமா வைபவங்களும்

 

பாட்டியிடம் நான் போட்ட பிட் இதுதான் - “பாட்டி, நாங்க எல்லாரும் ஆத்துலதானே இருக்கோம். வடசேரி சந்தைக்கும், மாவு மெஷினுக்கும் போலாமா? நாங்க எல்லாம் தூக்கிண்டு வருவோமே….சிவாஜி படம் கூட ஏதோ புதுசா வந்திருக்காமே! அப்படியே அதையும்….”

என்ன ஆச்சு?!! குழந்தை அழுததா சிரித்ததா? தொடரும். //  இது முதல் பதிவு இங்கே

என்ன ஆச்சு!? பாட்டியிடமிருந்து பதில் இல்லை. தூங்கிட்டாங்க போல என்று நைஸாக எழுந்து என் வேலையைப் பார்க்கலாமே என்று நழுவினேன். என்னத்த பெரிய வேலை? அப்போதே என்னவோ பெரிய எழுத்தாளர் போல, கட்டுரை அல்லது கதை எழுத முயற்சி அல்லது படம் வரையறது, பேப்பர்ல கோலம் போட்டு டிசைன் போடுவது இப்படி ஏதாவதுதான். படிக்கும் புத்தகம் எல்லாம் டக்கென்று கையில் வராது அது சாட்சிக்கு அருகில் இருக்கும். பாட்டி எழுந்தால் புத்தகம் கைக்கு வந்துவிடும்.

வெள்ளி, 29 டிசம்பர், 2023

சில்லு சில்லாய் - 17 - பாட்டியின் ரகசியம் - ஓவியம் - கரும்புலிகள்

சில்லு - 1 - சினிமா வைபவங்கள்

சிறு வயது, இளம் வயதில் சினிமா பார்க்கச் சென்ற அனுபவங்களை ஸ்ரீராம் எழுதியிருந்தார். வாசித்த போது சினிமாவில் ஃப்ளாஷ் பேக் வரும் முன் ஒரு சக்கரம் போல வருமே அது மனதில் வந்தது. 

செவ்வாய், 14 மார்ச், 2023

சில்லு சில்லாய் - 7 - மாய வலைத் தொடர்பு உலகம்

 

என்னிடம் தொடர்பு எண்ணாக இருந்த என் தூரத்து நட்பு!!!!  (தூரத்து உறவு என்பது போலான பொருள்!!ஹிஹிஹிஹி) எப்போதேனும் உதவிக்கு அழைப்பதுண்டு. அப்படி ஓர் உதவிக்காக அழைத்தேன். இணைப்பு கிடைத்ததும்,

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

சில்லு சில்லாய் – 5 - இன்ஸ்டன்ட் பலன் - பறவை நடனம்

 

இன்ஸ்டன்ட் பலன்!


சொந்தத்தில், அண்ணா ஒருவரிடம் இருந்து அழைப்பு.

“ஏம்மா வாட்சப் என்னாச்சு இல்லையா? எஸ் எம் எஸ் அனுப்பிருந்தேன். பதிலே இல்லையே"

“அண்ணா, ஸாரி அண்ணா, லேட்டாத்தான் பார்த்தேன்.  வருத்தமான செய்தி.....சின்ன   வயசில்லையா? என்ன பேசறது, சொல்றதுன்னு தெரியலை.”

சனி, 7 மே, 2022

மணிச்சித்திரத்தாழே தாழ் திறவாய்

நீங்கள் காலையில் எழுந்து வீட்டு வாசல் கதவைத் திறக்கும் போது கதவு வெளியில் தாழ் போடப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?

யோசியுங்கள். அதற்குள் ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

திங்கள், 17 ஜனவரி, 2022

திருநெல்வேலி-நாகர்கோவில் - 3


 பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 8

திருநெல்வேலி - நாகர்கோவில் - 1

சென்ற பகுதியின் தொடர்ச்சியாக.......களக்காடு தாண்டி, ஏர்வாடி, வள்ளியூர் பகுதியிலிருந்து தொடர்ச்சியாக மஹேந்திரகிரி மலைத்தொடர். பணகுடியை அடுத்து காவல்கிணறு பகுதி வரை திருநெல்வேலி மாவட்டம். காவல்கிணறு பகுதியில் தான் மகேந்திரகிரி மலையின் சரிவின் அடிவாரத்தில் மகேந்திரகிரி திரவ எரிபொருள் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது.  சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.

சனி, 4 டிசம்பர், 2021

பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 3

சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 3



அடுத்த பதிவில் திருப்பதிசாரத்தின் கீழூர் மேலூர் பற்றியும், தேரேகால் எப்படி மரிந்து ஊருக்குள் பாய்ந்தது/புகுந்தது, ஜடாயுபுரத்தை நிறைத்தது, ஊருக்கு மிக அருகில் இருக்கும் பீமநகரி எனும் குக்கிராமத்தில் கிருஷி பாலத்தில் இந்தத் தேரேகால் வாய்க்காலின் நீர் வரத்து, மதகு திறக்கப்பட்டு மறுகால் திருப்பிவிடப்பட்ட படங்கள், உடைப்புகளின் படங்கள், காணொளிகள் எல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்கிறேன்//

என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். இதோ மேலூர்  கீழூர்.

செவ்வாய், 23 நவம்பர், 2021

பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 2

சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 2


https://thillaiakathuchronicles.blogspot.com/2021/11/%20%20%20%20%20%20%20%20%201.html   பகுதி 1


பகுதி 1ல் எங்கள் ஊரில் தண்ணீர் புகுந்ததைப் பற்றி எழுதத் தொடங்கினேன். அதன் படங்கள் மற்றும் காணொளிகளின் சுட்டி (துளசியின் தில்லைஅகத்து யுட்யூப் சானல்) சில இங்குப் பகிர்கிறேன்.

இன்னும் பல படங்கள், காணொளிகள் இருப்பதால் பகுதி பகுதியாக இங்குப் பகிர்கிறேன்.

தேரேகால் வாய்க்கால் வீட்டின் எதிரே - நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளில் இடம் பெறும் பேர் பெற்ற தேரேகால் வாய்க்கால்

இதன் காணொளியின் சுட்டி இதோ

https://www.youtube.com/watch?v=dG9FB2KmEZQ 

எங்கள் ஊரின் வழி செல்லும் தேரேகால் வாய்க்காலில் (அப்பா இருக்கும் (தம்பியின் வீடு - வீட்டிற்கு தொட்டடுத்து ஓடும் தேரேகால் வாய்க்காலில்) தண்ணீர் வரத்து கொஞ்சம் கொஞ்சமாக ஏறியதன் படங்கள் மற்றும் காணொளிகளை இங்குப் பகிர்ந்திருக்கிறேன். வீட்டிலிருந்து பார்த்தாலே தண்ணீர் வரத்து நன்றாகத் தெரியும்.


https://www.youtube.com/watch?v=_BNHjHliAXI

https://youtu.be/m6-JRfTSOr4

https://youtu.be/bbT5WO2b49I

வீட்டின் எதிரே முன்பு சிறிய தாமரைக் குளமாக இருந்த பகுதி

https://youtu.be/2LnO_GAIwsE

https://youtu.be/z0Y13hekIaU

கீழூர் வீடுகளின் பக்கவாட்டுப் பகுதியில் தேரேகால் தண்ணீர் வரத்து அதிகரித்து வீடுகளின் பின்பகுதி வழியும் புகுந்தது

திருப்பதிசாரம் கீழூர், மேலூர் விளக்கம் படங்களுடன் இனி வரும் பதிவுகளில். இரண்டிற்கும் நடுவில்தான் இந்த தேரேகால்.

https://youtu.be/-UC2gqozM7Y, 

அடுத்த பதிவில் தேரேகால் எப்படி மரிந்து கீழூர், மேலூருக்குள் பாய்ந்தது/புகுந்தது, ஜடாயுபுரத்தை நிறைத்தது, ஊருக்கு மிக அருகில் இருக்கும் பீமநகரி எனும் குக்கிராமத்தில் கிருஷி பாலத்தில் இந்தத் தேரேகால் வாய்க்காலின் நீர் வரத்து, மதகு திறக்கப்பட்டு மறுகால் திருப்பிவிடப்பட்ட படங்கள், உடைப்புகளின் படங்கள், காணொளிகள் எல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்கிறேன்.

இப்பதிவில் அதிகம் எழுத இயலவில்லை. எனவே அடுத்தடுத்த பதிவுகளில் ஊருக்குள் தண்ணீர் வந்ததற்கான படங்களுடன் காரணங்களையும் ஏன் வாய்க்காலின் குறுக்கே உடைத்து விட வேண்டியதானது என்பதையும் சொல்கிறேன்.

இந்தப் பெருமழையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை விட அதிகம் பாதிக்கப்பட்டவை பயிர்கள் –  வயல், வாழை, ரப்பர் தோட்டங்கள். எங்கள் ஊரில் வயல்களில் நாற்றுகள் பாதிக்கப்பட்டதால் நட்டம் என்று தெரிகிறது. செய்திகளிலும் பாதிக்கப்பட்ட ஊர்கள் பட்டியலில் திருப்பதிசாரத்தின் பெயர் அடிபட்டதாகத் தெரிகிறது.

ஒட்டுமொத்தமாகச் சொல்லப்படும் கருத்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் சமீபகாலமாக நீர் நிலைகளும் அதன் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது/படுவது மற்றும் ப்ளாஸ்டிக் குப்பைகள் என்பதுதான்.

அப்படிச் சொல்லப்படுவது சும்மா வாயளவில். வாய்ச்சொல்லில் வீரர்கள் அவ்வளவே. ஏனென்றால் நடைமுறையில் பூஜ்ஜியம். என்னதான் இவை காரணங்களாகச் சொல்லப்பட்டாலும் காரணத்திற்கு உரிய மக்கள் திருந்தப் போவதில்லை. திருந்தவும் மாட்டார்கள். ஆட்சியாளர்களும் அப்படியே.

குப்பைகளை வாய்க்காலில் கொட்டும் மக்களை என்ன சொல்வீர்கள்? குப்பைகளை அகற்ற பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? ஏதேதோ காரணங்கள்….எனக்குப் புரியவில்லை.

நீரின் பாய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகள் என்னை வருந்த வைக்கவில்லை. வைப்பதில்லை ஏனென்றால் நாம் செய்யும் தவறுகளுக்கான பின்விளைவுகளை நாம் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்! 

சிறிய சிறிய காணொளிகள்தான். நேரம் இருந்தால் பாருங்கள்.


  ------------கீதா



வியாழன், 18 நவம்பர், 2021

பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 1

 

சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 1

 

பெங்களூரிலிருந்து என் தாயக ஊராகிய நாகர்கோவிலுக்கு/திருவண்பரிசாரத்திற்குப் பயணம். கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் சென்று கடைசியில் திருப்பதிசாரத்திற்கு என்று திட்டமிட்டப் பயணம். 

பொதுவாகப் பயணத்தின் தொடக்கத்திலிருந்து நம் அனுபவங்களைச் சொல்வோம்.  ஆனால் நான் பயணத்தின் கடைசிப் பகுதியிலிருந்து தொடங்குகிறேன். அதாவது திருவண்பரிசாரத்து அனுபவங்களிலிருந்து குறிப்பாகச் சாது பொங்கிய கதையிலிருந்து தொடங்குகிறேன்.

சாது என்பதற்கு அப்பாவி என்று ஒரு பொருள் உண்டு. அப்பாவியாக இருக்கும் ஒருவர் திடீரென்று ஒரு நாள் பொங்கினால் அந்தத் தாக்கத்தை நம்மால் தாங்க இயலுமா?

சாது - ஞானி/அறிஞர் என்ற பொருளும் உண்டு. ஒரு சாதுவைப் பழித்தால் பின்விளைவுகளை நாம் எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம். போட்டுப் புரட்டித் தள்ளிவிடும். 

இங்கு எதற்கு இதைப் பற்றிச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றலாம். காரணம், என்னைப் பொருத்தவரை, இயற்கையும் சாதுதான். நமக்குப் பல தத்துவங்களை, பாடங்களை, அறிவைப் புகட்டும் சாதுவும் கூட.  

இயற்கை அமைதியாக இருக்கும் நேரத்தில் அது நமக்கு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டேதான் இருக்கிறது. நாம் அதைக் கூர்ந்து நோக்கிப் படிக்கத் தவறி பழித்துப் பகைத்துக் கொள்ளும் போதும் கூட அது தன் எச்சரிக்கையை ஓங்கி அறிவிக்கிறது. அதிலிருந்தும் நாம் பாடம் கற்கத் தவறினால் நாம் அழிவை நோக்கி வெகு விரைவாகச் சென்று கொண்டிருக்கிறோம், நம் அழிவு நிச்சயம் என்பதையும் இப்போது எங்கள் நாஞ்சில் நாட்டில் ஏற்பட்ட தண்ணீரின் பாய்ச்சல் சொல்லிச் சென்றிருக்கிறது.

தொடர் மழையில் எங்கள் ஊர்ப் பகுதி ஆறுகள், குளங்கள் உடைந்து தண்ணீர்ப் பாய்ச்சலை நாங்கள் சிறு வயதிலிருந்தே பார்த்துப் பழகியிருக்கிறோம். பயந்ததில்லை. பழித்ததில்லை. ஆனால் சென்ற முறையும், இம்முறையும் எச்சரிக்கை மணியை பலமாக அடித்து எதிர்காலத்தின் பயத்தை எங்களுக்குள் விதைத்துவிட்டுச் சென்றுள்ளது.

இதைத் தான் கல்கி இதழ் நடத்திய போட்டிக்கு நான் எழுதிய கதையில் மறைமுகமாகச் சொல்லியிருந்தேன். அது எபி யில் வெளிவந்தது. அப்போது அதில் சொல்லப்பட்ட சில கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் அதுதான் இப்போது நடந்துள்ளது.

இயற்கையின் நீதிமன்றம், நம் நீதிமன்றம் போன்றதல்ல. அதன் நீதிமன்றத்தில் பணமோ, சட்டத்தின் பொத்தல்களோ பயன்படுத்தித் திறமையாக வாதிட்டு வெல்ல முடியாது. நீதியை மாற்ற முடியாது. இயற்கை தேவதை தன் கண்களைக் கட்டிக் கொள்ள மாட்டாள்.

இயற்கையைப் பழித்து, அதற்கு எதிராக, அதன் வழித்தடத்தை நாம் மாற்ற நினைத்து அதன் வழியில் நாம் எதிர்த்து நின்றால் அழிவு, மரணம் நிச்சயம் என்பதை நம் அரசிற்கும், அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தற்போதைய நாஞ்சில் நாட்டு தண்ணீரின் பாய்ச்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதை சுட்டிக் காட்டி வலியுறுத்துகிறேன்.

கன்னியாகுமரி மாவட்டம் கேரளமா, தமிழ்நாடா என்ற குழப்பம் இன்னும் அவர்களுக்கு இருக்கிறது போலும்! கவனிக்கப்படாத மாவட்டம். அவர்கள் இதைக் கவனிப்பார்களா என்று தெரியவில்லை. என்றாலும் கவனிக்கக் கோரிக்கை விடுத்து, எங்கள் கிராமமும் சுற்றியுள்ள கிராமங்களையும் அமைப்பையும், காரணங்களையும் அனுபவங்களையும் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  

நன்றாகக் கவனியுங்கள், நான் ‘வெள்ளம்’ என்று சொல்லவில்லை. தண்ணீரின் பாய்ச்சல் என்றுதான் சொல்லியிருக்கிறேன். தண்ணீரின் பாய்ச்சலை வெள்ளமாக மாற்றிவிடாதீர்கள். அதைப் பின்வரும் பதிவுகளில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

அதுவரை, எங்கள் ஊர் மாறிவிடும் முன் தற்போதைய இப்படங்களைப் பார்த்துக் கொஞ்சம் சந்தோஷப்படுங்கள். இயற்கையோடு ஒன்றுங்கள். (எபியில் ஞாயிறுகளில் எங்கள் ஊர்ப் பகுதி படங்கள் வருகிறதே!!!!)

முதல் படம் ரயில் நாகர்கோவில் ஸ்டேஷனை நெருங்கும் போது எடுத்தது. மற்ற மூன்று படங்களுமே எங்கள் கிராமத்தின் வீடுகளை ஒட்டி இருக்கும் பகுதிகள். அதிலும் கடைசிப் படம் நாஞ்சில் நாடன் அவர்களின் ஊரான வீரநாராயணமங்கலம் செல்லும் ரோடு

இந்த நான்கு படங்களுமும் கிராமத்தின் பகுதிகள். இரண்டாவது படத்தில் ஒரு கட்டுமானம் தெரிகிறது இல்லையா அது நாலுவழிச் சாலை/பைபாஸ் ஊர் வழியாகச் செல்கிறது. வீட்டிலிருந்து 5 நிமிட நடையில்


முதல் இரு படங்களும் தோவாளைப் பகுதியைக் கடந்து வரும் போது ... அடுத்த இரு படங்களும் எங்கள் ஊரின் மிக அருகில் உள்ள பகுதி. 

-----கீதா



புதன், 20 அக்டோபர், 2021

மகன்தாய்க்கு ஆற்றும் உதவி – சியமளா மாமியின் கதை; மாமியார் மெச்சிய மருமகள்

 

மகன்தாய்க்கு ஆற்றும் உதவி……

முதியவர். முதுமையை எளிதாகக் கடப்பது என்பது எளிதல்ல. அதுவும் 90 வயதைக் கடந்தவரை, சுய நினைவுடன் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட அவரது உடல்நலத்தைப் பேணிக் கவனித்துக் கொளல் என்பது சாதாரண காரியமல்ல. 96 வயதான அம்மாவை எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும், அதுவும் இந்தக் கோவிட் சமயத்தில் என்பதற்கு அரிதான முன்னுதாரணமானவர்களில் ஒருவர்.

தன் தேவைகளைச் சுருக்கி, வயதான அம்மாவின் கோணத்திலிருந்து ஒவ்வொன்றையும் சிந்தித்து அதை ஒட்டியே தன் பணிகளை மேற்கொண்டு அம்மாவின் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப அம்மாவின் சௌகரியத்திற்கேற்ப, அம்மாவின் செயல்களை, நித்தியக் கடமைகளை எளிதாக்கிக் கொடுத்தும், உதவியும் பார்த்துக் கொண்டார் அந்த அம்மாவின் கடைசி மகன் தன் முதுகுவடத்தின் வால் பகுதிப் பிரச்சனையினால் ஏற்பட்ட இடுப்பு, முதுகுவலியினிடையில். அம்மாவிற்கு எப்படிச் செய்தால் அவருக்குப் பாதிப்பு இருக்காது, சௌகரியமாக இருக்கும் என்ற கோணத்தில் ஆராய்ந்து அதற்கேற்ப பல விஷயங்களையும் பார்த்துப்  பார்த்துச் செய்தார். 

அம்மாவின் வயதிற்கான சிறிய பயிற்சிகள், கூடியவரை தன்னைத்தானே பார்த்துக் கொள்வதற்கான உதவி மற்றும் பயிற்சி, நினைவுத்திறன் அதிகம் மங்கிவிடாமல் இருக்க சில பயிற்சிகள் (வாசிக்க வைத்தல், அவ்வப்போது கேள்விகள் கேட்டல், உறவினர் பெயர்கள் கேட்டல், அன்று அவர் சாப்பிட்ட உணவு, டிவி நிகழ்ச்சி பற்றி என்று), உணவைக் கூடத் தன் விருப்பம் பார்க்காமல் அம்மாவுக்கு ஏற்ற உணவு செய்தது உட்பட.

வயதான காரணத்தினால் அம்மா இயற்கை உபாதை கழிக்கச் சிரமப்பட்ட போது அருவருப்பு பாராமல், அம்மா கிரமப்படாமல் இயற்கை உபாதை கழிக்க உதவியது; வாக்கர் அல்லது சக்கரநாற்காலி உதவியுடன் வீட்டில் கைத்தாங்கலாய் வளைய வர வைத்தது; அம்மாவின் செவித்திறனுக்கேற்ப எழுதிக் காட்டி, அருகில் இருந்து ஒவ்வொரு தேவையையும், சிறு சிறு தேவையையும் கூடக் கவனித்து மிகவும் பொறுமையுடன் பதிலளித்து, அன்புடன் கவனித்துக் கொண்டது; எல்லாம் மிகையல்ல. இப்படிச் செய்பவர்கள் அரிதானவர்கள்! அந்த அரிதானவர்களில் ஒருவராய்...

எனது கடைசி மைத்துனர்!

மகன்தாய்க்கு ஆற்றும் உதவி இவன்தாய்

என்நோற்றாள் கொல்எனும் சொல்.

 *****************************************************************************************

சியமளா மாமி எழுதிய கதை: மாமியார் மெச்சிய மருமகள்

மாமியைப் பற்றி: மாமியும் அவரது  குடும்பமும் எங்களுக்குத் திருவனந்தபுரத்திலிருந்த போது மலர்ந்த நட்பு. நாங்கள் தாமசமிருந்த வீட்டின் கீழ்ப் பகுதியில் நாங்கள். மாடியில் மாமியின் குடும்பம். கணவர், இரு மகன்கள், ஒரு பெண். பெரிய மகன் அப்போது மருத்துவப் படிப்பில் ஹவுஸ் சர்ஜனாக இருந்தார். இரண்டாவது மகன் பொறியியல் படிப்பிலும், மகள் வேளாண்மைக் கல்லூரியிலும் படித்து வந்தனர்.

என் மகன் அப்போது ஒன்றே கால் வயதிற்குள்தான். இவர்கள் அனைவருக்கும் செல்லப் பிள்ளை. 

தற்போது மாமியின் பெரிய மகன் திருவனந்தபுரத்தில், அரசுமருத்துவமனையில் ஆர்த்தோ சர்ஜன். இரண்டாவது மகன் அமெரிக்காவில். மகள் இங்கு இருக்கிறார். மாமா தற்போது மகளுடன். அனைவருமே எங்கள் நலம்விரும்பிகள்.  

மாமி இறைவனடி சேர்ந்து 1 ½ வருடங்கள் ஆகிறது. மாமி கற்பனை வளம் உள்ளவர். தன் ஆத்ம திருப்திக்கு அவ்வப்போது எழுதுவதை என்னிடம் சொல்லிக் காட்டுவார். தற்போது அவரது மகள் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவரிடம் இருந்த சில கதைகளைக் கொண்டுவந்தேன். மீதி சென்னையில் இருக்கிறது.

மாமி, எழுத்தாளர் தேவனின் விசிறி. சாம்பு கேரக்டரை மிக மிக ரசித்தவர் என்பது அவர் கதைகளில் தெரிகிறது. அதையொத்த கதைகள் சிறிய சிறிய கதைகளாகச் சில எழுதியிருக்கிறார்.  அவற்றில் ஒன்று இங்கு. மற்றவை பிறிதொரு சமயம்.

மாமியார் மெச்சிய மருமகள்

போலீஸ் ஸ்டேஷனில் இருந்த இன்ஸ்பெக்டர் சந்தானத்தை நோக்கி ஒடி வந்தார், ஊரே மூக்கில் விரல் வைக்கும் கிரிமினல் வக்கீல் வரதராஜன்.

“உட்காருமய்யா. என்ன மூச்சிறைக்க ஒடி வருகிறீர்”

“ஸார், நான் என் வீட்டிலேயே ட்ராயரில் வைத்திருந்த 4 லட்சம் ரூபா எங்க போச்சு, எப்படிப் போச்சுன்னு தெரியலையே! அதான் கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்.”

“உமக்கே தெரியலையா!? யாரெல்லாம் வந்தா உங்களைப் பார்க்க”

“மதுரையிலருந்து சாம்பமூர்த்தி, ஒரு கேஸ் விஷயமா வந்திருந்தார். அப்புறம்…அதுதான்…எதிர்க்கட்சி அம்மா அடிதடி விஷயமா கேஸ் எடுத்துண்டு வந்தா. இப்படி 5,6 பேர் வந்தா. யார் மேல எப்படிக் குற்றம் சாட்டறது? புரியலை. அதான் உங்ககிட்ட கேஸ் கொடுத்துட்டுப் போகலாம்னு….”

இன்ஸ்பெக்டர் சந்தானம் ஆட்களை விட்டு வக்கீல் சொன்ன ஆட்களைச் சல்லடை போட்டு விசாரித்துக் குழம்பி நின்றார். அவர்களுக்கு எப்போதும்  ஆபத்பாந்தவன் விச்சு தானே! உடனே அவரைப் பார்க்கக் கிளம்பினார்.

விபரத்தைக் விச்சுவிடம் சொன்னார். விச்சு எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.

“என்ன ஓய் விச்சு! உமக்கு இந்த கேஸ்ல ஏதாவது பிடி கிடைத்ததா” என்றார் சந்தானம்.

அப்போது ரேடியோவில் ‘மாமியார் மெச்சிய மருமகள்’ படத்திலிருந்து பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. விச்சு உள்ளே பார்த்து,

“சச்சு, அந்த ‘மாமியார் மெச்சிய மருமகளை’ உரக்க வை” என்றார்.

உடனே சந்தானம், “என்ன விச்சு? நேரடியாய் சொல்ல மாட்டீரோ? இப்போதே வரதராஜன் வீட்டிற்குப் போய் விசாரிக்கிறேன்” எனப் புறப்பட்டார்.

வரதராஜன் வீட்டில் அவர் மனைவியையும், அம்மாவையும் தனித்தனியாக விசாரித்தார்.

“இத்தனைப் பேர் வந்து போற இடத்துல 4 லட்ச ரூபாயை ட்ராயர்ல பூட்டாம வைச்சுட்டுப் போனவரைக் கண்டிக்கணும்னு நான்தான் அதை எடுத்து என் மாமியார்கிட்ட கொடுத்தேன்.” – மருமகள்.

மாமியாரும் மருமகளை மெச்சி லாக்கரில் வைத்திருக்கிறாள். இதை அறியாத அந்த வக்கீல் பதறிப் போய் கேஸ் கொடுத்திருக்கிறார்.

‘விச்சுவுக்கு இதெல்லாம் எப்படிச் சட்டென உதித்ததோ’ இன்ஸ்பெக்டர் சந்தானத்துக்கு ஆச்சரியம்.  விச்சுவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனார் இன்ஸ்பெக்டர் சந்தானம்.

‘எதற்கு இந்த இன்ஸ்பெக்டர் நன்றி சொல்கிறார்?’ எனத் தெரியாமல் முழி முழின்னு முழித்துக் கொண்டிருந்தார் விச்சு! - ஷியாமளா (13-6-2010)

 

------கீதா

வியாழன், 7 அக்டோபர், 2021

நினைவோ, ஒரு பறவை…

 


நினைவுகள் பின்னிலிருந்து தள்ள கனவுகள் முன்பிருந்து இழுக்க, இப்படியாகத்தானே நம் வாழ்க்கைப் பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையே ஒவ்வொரு சூழலிலும்  நாம்  இறையருளால் கவனமாக இருந்து செயல்பட்டு ஓரளவு சுகமாக வாழ்கிறோம், எழுதுகிறோம், வாசிக்கிறோம் என்பது இதை  எழுதும் போது எனக்கும், வாசிக்கும் போது உங்களுக்கும் உறுதியாகியிருக்கும்தானே. இது போல் எப்போதும் இறையருளால் கனவு நனவாகும் நிகழ்காலமும், நிகழ்வு நினைவாகவிருக்கும் நினைவுக்காலமும் நமக்குத் துணையாகட்டும்.

இருந்தாலும் இளமையில் கனவுகளுக்கு இருந்த வேகமும் வித்தியாசமான தோற்றமும் முதுமையை நெருங்கும் போது இருப்பதில்லை. ஆனால் எப்படியோ நம் வாழ்க்கை ஓடத்தின் சீரான பயணத்தை நினைவுக்காற்று தேவையான நேரத்தில், தேவையான அளவு வீசி எளிமையும் இனிமையும் ஆக்கி விடுகிறது. சிறகு விரித்துப் பறக்கும் எண்ணங்கள் அப்படி 40 க்கும் 50க்கும் மேல் வயது ஏற ஏற நெல்லிக்கனியாய் இனிக்கிறது.

எங்கள் ப்ளாகில் வெள்ளி தோறும் ஒவ்வொருகாலகட்ட பாடல்களை,  தான் ரசித்த பாடல்களை மையமாகக் கொண்டு அவற்றைப் பற்றிய விவரங்களுடன் ஸ்ரீராம்ஜி எழுதும் போதெல்லாம் அவர் பதிவுகள் எனக்குப் பல நினைவுகளை எழுப்பிவிடுவதுண்டு. ஆனால் அவற்றை அங்கு கருத்தில் பகிர்ந்ததில்லை. பதிவு போன்றதாகிவிடுமே என்ற காரணத்தினால். பதிவு எழுதும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று ஓரிருவரிகளில் சொல்லிச் செல்வதுண்டு. நானும் கீதாவும் அவை தொடர்பான எங்கள் அனுபவங்கள், நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டதுண்டு. ஆனால், பதிவு எழுத முடியாமல் போனது. இனி அதையும் எழுத முயற்சி.

இங்கு தேவைப்படுவதெல்லாம் நேரமும் சூழலும் தான்.  அப்படிப்பட்ட நேரமும் சூழலும் சில நாட்களுக்கு முன் அதிர்ஷ்டவசமாக எனக்குக் கிடைத்தது. க்வாரண்டைன் ஃப்ரம் ரியாலிட்டி (Quarantine from Reality) சுபஸ்ரீ தணிகாச்சலம் தன் தொடரில் அப்படியான ஒரு பாடலைக் கடந்த வருடம் பகிர்ந்திருந்தது இப்போதுதான் என் கண்ணில் பட்டது. என்ன செய்ய? கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் ஒரு வருடம் அதுவும் இந்த கோவிட் நாட்களில் போனது பேரிழப்புதான்.



எங்கள் ப்ளாகில் அருமையாக எழுத்தில் பதிவது போல், QFR ல் சுபஸ்ரீயும் பாடல், ராகம், பாடகர்கள் மற்றும் இசைக்கருவிகள் இசைக்கலைஞர்களை அறிமுகப்படுத்தல் என்று அருமையாக க்வாரண்டைன் ஃப்ரம் ரியாலிட்டியை (QFR) கொண்டு செல்கிறார். அதில் நான் கேட்ட பாடல் ‘பிரியா’ படத்தில் ‘ஹே பாடல் ஒன்று’. இசை ஞானியின் இசையமைப்பில் பஞ்சு ஐயா எழுதி கான கந்தர்வன் ஏசுதாசும், இசைக்குயில் ஜானகி அம்மாவும் பாடியது. ஒரு கவிதையை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்குவது போல் அருமையான ஒரு விளக்கம் வேறு சுபஸ்ரீயிடமிருந்து. கூடவே அந்தப் பாடலுடன் தொடர்புள்ள நிகழ்வுகளையும் தருவது அருமை. இப்படிப் பாடல் கேட்கும் போதெல்லாம் கவிதை வரிகளும் குரல்களின் இனிமையும், கூடவே, ரஜனியும் ஸ்ரீதேவியும் மனதில் வருவது வழக்கம்தான்.

கேரளாவில் இருக்கும் எனக்கு இதெல்லாம் எப்போதாவது நிகழும் நிகழ்வுதான் பெரும்பாலும். அதனால் அப்போதெல்லாம் அப்பாடல் இடம் பெற்ற படமும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளும் வந்து நீண்ட நேரம் நினைவுகளில் பயணிக்க வைக்கும்.

ஆனால் சுபஸ்ரீயின் விளக்கமும், சிவாவின் எடிட்டிங்கும், புதிய இளம் பாடகர்களின் குரலும், இசைக்கருவிகளைக் கையாளும் மாயாஜாலக்காரர்களின் மந்திர விரல்களும் ஒரு புது உலகத்தையே என்னைப் போன்றவர்களுக்குக் காட்டித் தந்தது.  இது அவரால் மட்டும்தான் முடியும். (கீதா சொல்லி சுபஸ்ரீயைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன்). இதெல்லாம் தமிழுக்காகத் தமிழ் உள்ளங்களால் மட்டுமே சாதிக்கக் கூடிய ஒன்று. அவரது சேவை தொடரட்டும். புகழ் ஓங்கட்டும்.

இந்த “ஹே பாடல் ஒன்று’ பாடல் என் நினைவுச் சிறகை விரிக்க வைத்தது. என்னை என் வாழ்வின் 1978, 1979க்குக் கொண்டு சென்று என்னை இன்ப வானில் பறக்கச் செய்ததை சொல்லத்தான் இந்தப் பதிவு.

போடிநாயக்கனூர் சிபிஏ (CPA) கல்லூரியில் பியுசி படித்த காலம். செனட்ரல் தியேட்டரில் படம் பார்த்து நண்பர்களுடன் நடந்து, பரமசிவன் கோவில் மலை அருகேயுள்ள கல்லூரி விடுதிக்குச் சென்ற நாட்கள். எங்களில் இனிமையாகப் பாடும் மீனாட்சிபுரம் முருகேசின் குரலில் இப்பாடல் ஒலிப்பதை இப்போதும் உணரமுடிகிறது.

கல்லூரி உதவிப் பேராசிரியரும், விடுதி வார்டனுமான முருகானந்தன் சாரின் அன்பான, ஆறுதலான வார்த்தைகள். அதையெல்லாம் அப்போது புரிந்து கொள்ளாமல் அவருடன் விரோதித்துக் கொண்ட நாட்கள். அதன்பின் பலமுறை என் ஆசிரியப் பணியிடையே, பல மாணவர்கள் சீறும் போது, ‘அன்று முருகானந்தம் சார். இன்று நான்’ என்று எண்ணி சிரித்து, என் சீற்றத்தைத் தவிர்த்ததுண்டு.

எப்போது சிபிஏ (CPA) கல்லூரி நாட்கள் நினைவுகள் வந்தாலும் அதனுடன் வருசநாடு சேகர் நினைவுக்கு வருவதுண்டு. எப்போதும் சந்தோஷமாக, எதைப்பற்றியும் வருந்தாமல் இருக்கும் சேகர்.  வெளிப்படையாகப் பேசுபவர். குற்றம் காணும் போது அதைச் சுட்டியும் காட்டுவார். ஒரு பையன் ஷோலே என்பதற்குப் பதிலாக ஜோலே என்ற போது யாருக்குமே புரியவில்லை. சேகர், “ஓ ஷோலே படத்தைப் பத்தியா சொல்ற? ஒன்னு சரியா ஷோலேன்னு  சொல்லு இல்லேன்னா அட்லீஸ்ட் சோலே ன்னாவது சொல்லு. பியுசி படிக்கிற நீ இனி இப்படிச் சொல்லாதே” என்றது இப்போதும் நினைவில் பசுமையாய் வந்து சிரிக்க வைக்கிறது. சிந்திக்கவும் வைக்கிறது. தவறை தவறென்று சொல்லி திருந்தச் செய்யும் மனம் எத்தனை பேருக்கு இருக்கிறது?

“பியுசி படிக்கிறதில 5 பேர் மட்டும்தான் பாஸாக வாய்ப்பு. பாக்கி எல்லாம் சும்மா, இந்த நான் உட்பட” என்ற சேகரின் வார்த்தை உண்மையானது. இதைவிட ஆச்சரியம் ஒரு முறை சேகர் எழுதிய ஒரு கதையை எனக்குக் காண்பித்ததுதான். முதல் வரியே “நான் ஒரு நாற்காலியில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறேன். என் முன் பத்திக் குச்சிகளிலிருந்து வரும் மணமுள்ள புகை. என் முன் எல்லோரும் அழுது கொண்டும், தேம்பிக் கொண்டும் இருக்கிறார்கள்” என்ற வரிகள். நான் அதிர்ந்தே போனேன்.

சிரித்த சேகர், “இதும் நடக்கப் போற ஒன்னுதான்”.  என்றதும், அப்படி எல்லாம் பேசக் கூடாது என்று சொல்லி சமாதானப்படுத்தினாலும், சேகரின் பக்கத்து ஊர் பழனிச்சாமி, “சேகர் இதுக்கு முன்னாடி ஒரு தடவ தற்கொலை முயற்சி செய்திருக்கான்” என்று சொன்னது எனக்குப் பயத்தை ஏற்படுத்தியது. பியுசி ஒரு வருடம் தான். பிரிந்த நாங்கள் எல்லோரும் பல வழிகளில் பயணித்தோம்.

சில வருடங்களுக்குப் பின் தேனி பேருந்து நிலையத்தில் பழனிச்சாமியைச் சந்திக்க நேர்ந்த போது, பலதும் பேசினோம். அப்போது நான் மதுரைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். பேச்சினிடையே பேரிடியாய், “சேகர், போனவருடம் தற்கொலை செய்து கொண்டான்” என்ற செய்தி. அதன் பின் இன்று வரை எப்போதெல்லாம் என் வாழ்வில் என் சிபிஏ(CPA) கல்லூரி வாழ்க்கை நினைவுக்கு வந்தாலும் முருகானந்தம் சாருடன் சேகரின் நினைவும் வரும்.

மரணத்தை விரும்பிய சேகர். மரணத்தை மணந்து பிணக்கோலமாய் அமர்வதைக் கதையாய் எழுதிக் காத்திருந்த சேகர். காரணம் கேட்ட போதெல்லாம் சிரித்து மழுப்பிய சேகர், கூடாது என்று அறிவுரை சொன்ன போதெல்லாம் “அதெல்லாம் நான் சும்மா சொல்றது” என்று விசயம் மாற்றிய சேகர். நாற்பது வருடங்கள் கடந்தாலும், நினைக்கும் போதெல்லாம் மனதில் ஒரு வலி.

இனிய நினைவுகளுடன் நமக்கு வேதனை தந்த/தரும் நினைவுகளும் வருவது இயல்புதானே. “பிரியா” படம் பார்க்கப் போன போது சேகரும் எங்களுடன் வந்திருந்தார். இந்தப் பாடலைக் கேட்டதும் என் மனம் அந்த நாட்களை வட்டமிட்டது. இப்போதும் புரிந்துகொள்ள முடியாத டீன் ஏஜ் மனதை எனக்கு நினைவூட்டியது.

பயமறியாத காலம். ஓடும் பாம்பினை மிதிக்கத் தூண்டும் மனதைத் தரும் பருவ்ம். தவறை தவறென்று யார் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத பருவம். எல்லோரும் அல்ல, சிலர். இப்படி சில அல்லது பல பாடல்கள், தொடர்புடைய ஏதேனும் பொக்கிஷம் போன்ற நிகழ்வு, நினைவுகள், நாட்கள் உங்களுக்கும் நினைவுக்கு வரலாம். பகிர்ந்து கொள்ளுங்கள்.  வேதனயான நிகழ்வுகள் என்றால், பகிர்ந்தால் அந்த வேதனையே பாதியாகும். இன்பத்தைப் பகிர்ந்தால் இன்பம் இருமடங்கு இன்பமாகும்.


-----துளசிதரன்

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

ஊஞ்சலாடும் எண்ணங்கள்

 ஊஞ்சலாடும் எண்ணங்கள்

“குட்டி! நீ தமிழிலு எழுத்து எழுதுறியே, புறநானூறு ஓர்மையிருக்கா?” (நீ தமிழில் எழுதுகிறாயே புறநானூறு நினைவிருக்கிறதா?) மலையாள பூமியில் இருக்கும் என் அன்புத் தங்கையின் வாட்சப் கேள்வி. 

என்ன இது சம்பந்தமே இல்லாமல் இப்படி ஒரு கேள்வி? ஏதோ உப்புக்குச் சப்பாணியாய் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவையாய் என்னவோ எழுதுகிறேன் என்பதற்காக நான் என்னவோ தமிழ் இலக்கியத்தையே கரைத்துக் குடித்தவள் போல இப்படி ஒரு கேள்வி.

விளித்தேன். என்ன என்று கேட்டேன்.

“ஓஃபீஸ்ல, ஃப்ரென்ட், சம்சாரிச்சிட்டிருந்தப்ப புறநானூறுல ஒரு பாட்டு சொல்லி கேட்டப்போ, எனக்கு ஓர்மையில்லை. நீ தமிழிலு எழுதறியேன்னு உங்கிட்ட கேட்டுச் சொல்லலாமேன்னு…”

அவள் சொன்ன ஓரிரு சொற்கள் -  புலவர்கள், வறுமை, பரிசில் - கொண்டு கூகுள் களஞ்சிய அலமாறியை, பக்கங்களைப் புரட்டோ புரட்டு என்று புரட்டினேன். புறநானூற்றுப் பாடல்களில் புலவர்கள் தங்கள் வறுமையைச் சொற்களில் தோய்த்து எழுதியிருந்தது தெரியவந்தது. நான் பாடல்களை இங்கு குறிப்பிடவில்லை. கருத்துகள் மற்றும் அதோடு எழுந்த என் கோக்கு மாக்கு கற்பனை மட்டும். 

முற்காலத்தில் புலவர்கள் வறுமையில் வாழ்ந்ததாகப் பல செய்யுள்கள் சொல்கின்றன. சில புலவர்கள் மன்னர்களைச் சும்மானாலும் புகழ்ந்து பாடி, “ஏதேனும் கொடப்பா” என்று பரிசில்கள் வாங்கிச் சென்றதாக எதிலோ வாசித்த நினைவு. 

பரிசில்கள் கிடைக்கவில்லை என்றால் மன்னரைத் தூற்றிப் பாடிய புலவர்களும் உண்டாம். பின்ன கஷ்டப்பட்டு ஏதோ கிடைக்குமே என்று புகழ்ந்து பாடியும் பேமென்ட் கிடைக்கலைனா வீட்டம்மாகிட்ட வசை வாங்கணுமே!

பெருஞ்சித்திரனார் எனும் புலவர் தான் இயற்றிய பாடலைப் பெரும் வள்ளலான அதியமானைத் தேடிச் சென்ற போது அதியமான் இவரைப் பார்க்காமல், பாட்டைக் கேட்காமல், புலவருக்குப் பரிசிலை மட்டும் அனுப்பினானாம்.

புலவர் கொஞ்சம் மானஸ்தன்.

காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர்

வாணிகப் பரிசிலன் அல்லேன்

கடைசி வரி பாருங்க நச்! “நான் வாணிகப் பரிசிலன் அல்லேன்….வியாபாரி அல்லன் என் பாட்டை, அறிவை, புலமையைப் பார்த்து, கேட்டு, தகுதி இருக்கான்னு பார்த்து தந்தா ஓகே....இல்லைனா அட போயா! வேண்டாம்னு சொல்லிவிட்டார். 

அடுத்து, வறுமையில் வாழ்ந்தாலும் தகுதி இல்லாத மன்னரைப் பாடவே மாட்டார்களாம்.

இன்னொன்று, புலவர்கள் பாராட்டிப் பாடும் அளவுக்கு மன்னர்களும் தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டனராம்.

மன்னர்களுக்கு அறிவுரை செய்த புலவர்களும் உண்டு! ஔவையார் பற்றி நமக்குத் தெரியும்.

நம்ம மனசு சும்மாருக்குமா? போக்கிரித்தனமாகக் கற்பனை செய்தது. வேண்டாத வேலை!

இப்போதைய கவிஞர்களில் சினிமா பாடல்கள் எழுதுபவர்கள் (அதிலும் ஒரு சிலர் தானோ?) சம்பாதிக்கிறார்கள். ஏனையோர் எப்படியோ? தற்போது கவிஞர்களின் நூல்கள் போணியாகிறதோ?! சரியாகத் தெரியவில்லை. நேற்று மறைந்த கவிஞர் ஜெ. பிரான்ஸிஸ் கிருபா சில திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதியிருப்பதாக ஏகாந்தன் அண்ணா தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். கிருபா கவிதைப் புத்தகங்களும் போட்டிருக்கிறார்.  அவர் மறைந்த நிகழ்வு ஜெமோ தளத்தில் அறிந்தது.

ஆனால், ஏனோயொர்? தற்போது புகழ்ந்து பாடி சம்பாதிக்க மன்னர்களும் இல்லையே. சரி, தலைவர்களைப் புகழ்ந்து பாடினால் ஏதேனும் கிடைக்குமோ? 

ஒரு வேளை ஒன்றும் தேறவில்லை என்றால் அக்காலத்துப் புலவர்களைப் போல் தூற்றிப் பாடினால் என்ன ஆகும்?! இல்லை, தலைவர்களுக்குக் கவிஞர்கள் இடித்துரைத்து அறிவுரைகள் வழங்கினால்? கவிஞர்கள் பாடு திண்டாட்டம்தானோ?! 

சத்தியமாய் இது வேறு எதுவுமில்லை, சும்மா ஒரு கோக்கு மாக்கு கற்பனை! தில்லைஅம்பலனே சரணம்! காப்பாத்துப்பா! எனக்குச் சுயமாகப் பாடல் எல்லாம் எழுதத் தெரியாது ஈசா! அதுக்காக என்னைக் கண்டுக்காம இருந்திடாதப்பா, தில்லை அம்பல நடராஜா!

சென்ற மாதம் இந்த மாதிரி வேண்டாத சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்த சமயம், ஜெமோ தளம் அடிக்கடி வாசிப்பதால், மொபைலில் ஜெமோ தளத்தின் பதிவு ஒன்றை சென்ற மாதம் கூகுள் அனுப்பியது. (கூகுளுக்குத் தெரியாம (கூகுள் ஆண்டவர்??!!!) எதுவுமே செய்ய முடியாது போல. நாம் எதைப் பார்க்கிறோமோ அதைப் பற்றி, தளங்கள் பலவற்றை மொபைலுக்கு அனுப்பிடுது!!!) அதில் கவிஞர் விக்ரமாதித்தன் அவர்களுக்கான விஷ்ணுபுர விருது குறித்து. இந்த விருது 2010 லிருந்து கொடுப்பதாகத் தெரிகிறது. கவிஞர்களும் தற்போது கௌரவிக்கப்படுகிறார்கள்! நல்ல விஷயம். தொடர வேண்டும்.

*************

தங்கை வாட்சப்பில் அனுப்பியிருந்த அனந்துவின் படம் அனந்துவுடனான என் முதல் அனுபவத்தை நினைவுபடுத்தியது! பலவருடங்களுக்கு முன், அன்று, என் கற்பனையில் விரிந்ததை என்னவோ அதிசயமாக மூளை சேமித்து வைத்திருந்தது!!  

அனந்துவின் அப்பாயின்ட்மென்ட் கிடைப்பது சிரமம். உங்களுக்கு எப்படியோ தெரியாது. என் அனுபவம் அது. அனந்து பெரும்புள்ளி! மிகவும் பிராபல்யமானவர்! அப்பாயின்ட்மென்ட் கிடைத்தாலும் கெடுபிடிகள் அதிகம். பெரும் கூட்டம் வரும் முன் அதிகாலையில் பார்த்துவிட வேண்டும் என்று அப்பாயின்ட்மென்ட் …

சரி அப்படி அப்பாயின்ட்மென்ட் எதற்கு? 

அதென்ன அப்படி ஒரு கேள்வி? 

பிரபலமானவரை அருகில் பார்க்க விரும்புவோம்தானே. புலம்ப வேண்டாமா? வேறெதற்கு?

ஆனால் பாருங்க, மல்லாக்கப் படுத்துக் கொண்டு, கைகளை விரித்துக் கொண்டு, வலது கையை ஒய்யாரமாகத் தொங்க விட்டு, கண்ணை மூடிக் கொண்டு அஸிஸ்டென்ட்கள் சூழ என்ன ஒரு ரிலாக்ஸ்ட் சயனம்! 

அனந்த சயனம், யோக நித்ரா வாம். நானும் இப்படி சயனிக்கத்தான் நினைக்கிறேன். முடிகிறதோ?! யோக நித்ரா என்று தூங்கிவிடுகிறேனே! மனம் உடனே சிவ யோகம் பற்றியும் பதஞ்சலி முனிவர் பற்றியும் அவர் வழியில் வந்த என் யோகா குருஜி சொன்னதிற்குத் தாவியது. சிவ யோகம் என்பது எளிதல்ல. குருஜியும் எத்தனையோ அறிவுரைகள் சொல்லிக் கற்றுக் கொடுத்தார்.

ஆதியோகி ஈசனின் அத்தனை யோக நிலையும் மனதில் ஓடியது. எப்போதும் கண்மூடி யோகநிலை! நாம் தொழுவது அவர் யோகநிலையைக் கலைக்குமோ! ஸாரி ஆதியோகி! ஹூம் எந்த சிவ யோகமும் வாய்க்கவில்லை! ஒழுங்காகப் பயிற்சி செய்தால்தானே! அதாவது மனம் ஒன்றி! அதுதானே முக்கியம்.

ஹூம்!  உம் ஃப்ரென்ட் ஆதியோகி கண்டு கொள்ளவில்லை!  தாமோ? என்று அனந்துவிடம் புலம்பினால் பதில் சொல்வாரோ? மேலே நோக்கிக் கண்ணை மூடிக் கொண்டு நம்மைத்தான் பார்க்கவே இல்லையே பதில் வராது என்றே நினைத்தேன். இருந்தாலும்….

புலம்பினேன்! உலக யோகம் வேண்டிப் புலம்பத் தொடங்கவில்லை! அனந்துவாவது யோகநித்திரைக்கு அருள் செய்வாரோ என்று! நீங்கள் கண்டிப்பாக நம்ப மாட்டீகள் தெரியும். நானுமேதான். (அருளினாலும் நீயல்லவா பயிற்சி செய்ய வேண்டும்!! என் மனசாட்சி!) மனம் தாவியது.

எங்கு? அனந்து யோகநித்திரை என்றதும், திருமெய்யத்துக்கு. அங்கு சத்யமூர்த்தியும் யோகநித்திரையில்தான். அங்க ஒரே இடத்திற்குள் அடுத்தடுதாற்போல் ரெண்டுபேருமே இருக்கிறார்களே சத்யகிரீஸ்வரர்(சிவன்), சத்யமூர்த்தி! திருச்சுற்று இருவருக்கும் சேர்த்துதான். விண்ணப்பம் ஈசியா கொடுத்துவிடலாம்! ஆனால் பாருங்க நம்ம மனுஷங்கள் ரெண்டு பேருக்கும் நடுல மதிற்சுவர் கட்டிப் பிரிச்சுட்டாங்க என்ன சொல்ல?  நல்லகாலம் சுசீந்திரத்தில் பிரிக்கவில்லை!  சுசீந்திரம் போன மனது உடனே மீண்டும் அனந்துவிடம் வந்து நின்றது.

விண்ணப்பத்தைக் காது கொடுத்துக் கேட்டாரோ, தெரியவில்லை. எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. சரி, எப்போது வேண்டுமானாலும் பார்த்துச் செய்யட்டும், ஆதியோகியிடமும் சிபாரிசு செய்யட்டும், சொல்ல வேண்டியதைச் சொல்லி வைப்போம் என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து……

பார்த்தீர்களா, அனந்துவிடமிருந்து அடுத்து ரங்குவிடம் தாவிவிட்டேன். ரங்குவாச்சும் கொஞ்சம் சைடுல திரும்பி சயனம்! பூலோகத்தர்! நித்திரைன்னு எல்லாம் சொல்லப்படாததால் கண் மலர்ந்து நம்மைப் கொஞ்சம் பார்க்கறாற் போல இருக்கிறாரேன்னுதான்….திருஇந்தளூர் பரிமள ரங்கு விடம் கூட மனம் தாவியது ஆனால் அவர் நெடுந்துயிலாம்! திருமங்கை ஆழ்வாரே கோச்சுக்கிட்டு நிந்தா துதி பாடியிருக்க நம்மளை பார்த்துவிடப் போகிறாரா என்ன?

அனந்து முன்னே நின்று கொண்டு சத்தியகிரீஸ்வரர், சத்தியமூர்த்தி, பரிமளரங்கு, ரங்குவை எல்லாம் நினைக்கலாமா? அதனாலென்ன? எல்லாரும் ஒன்றுதானே. இப்போதைக்கு அனந்துவிடமே சொல்லிடலாம்….டக்கென்று மூளையில் பளிச்! ஓ! யோக நித்திரையாச்சே!! கலைக்கக் கூடாது! எதுவும் வேண்டக் கூடாது, புலம்பக் கூடாது என்று பாட்டி சொல்லிக் கேட்டதுண்டே! 

ஓ! அனந்து! உன் யோக நித்திரைக்குத் தொந்தரவு தரமாட்டேன்! ஸாரி அனந்து! மன்னித்துவிடு! சத்தியகிரீஸ்வரர், சத்திய மூர்த்தியும் யோகநிலை!  பரிமள ரங்குவோ ரொம்ப ரெஸ்டிங்க்! ரங்குவிடமே சொல்லிக் கொள்கிறேன்!

அட! ஏதோ கேட்கிறதே! இத்தனை பேரை பார்க்கலாம்னு சொன்னதும் அனந்து ரெஸ்பாண்டெட்? (இதான் டெக்னிக்?...பாத்துக்கோங்க!) அப்ப ஆதியோகிக்கும் செய்தி போய்விடும்!

“என்ன புலம்பப் போற? இந்த மாசக் காப்பி பொடி வாங்க வழி செய்துடுப்பான்னுதானே!!!”

ஹோ ! என்ன குறும்பு பாருங்க! வெரி நாட்டி!

--------கீதா

ரொம்ப நாள் கழித்து எங்கள் வலைத்தளத்தைத் தூசிதட்டியிருக்கிறோம்/றேன்.