வியாழன், 27 பிப்ரவரி, 2014

வாழ நினைத்தால் வாழலாம்.........வழியா இல்லை பூமியில்


நானும், எனது நண்பர் பிஜுவும், மம்மூட்டியின் "இம்மானுவல்" எனும் படத்தை டி.வியில் பார்த்துக் கொண்டிருந்த போது அருணும், சரவணவினாயக்கும் பதட்டத்துடன் "போலீஸ்" "போலீஸ்" என்று சொல்லியபடி வரவேற்பறைக்குள் ஓடி வந்தார்கள்.  புட்டுக்க்கான காம்பினேஷன் பழம் வாங்க கடைக்குப் போனவர்கள். 15 வயது அண்ணனும், 13 வயது தம்பியும் அவர்களது சைக்கிளை எடுக்காமல், என் பைக்கை எடுத்து ஓட்டிக்கொண்டுப் போயிருந்திருக்கிறார்கள். 
 இப்படி, நான் யாருடனாவது பேசிக்கொண்டோ, டி.வி. பார்த்துக் கொண்டோ இருக்கும் போது, என் கவனம் அவர்கள் மேல் அதிகம் பதியாது என்பது உறுதியானால், எனக்குத் தெரியாமல், 1/2 கி.மீ. தொலைவிலுள்ள கடைக்கு பைக் எடுத்துக் கொண்டு போய்விடுவது வழக்கம். (வீட்டின் முகப்பிலிருந்து (போர்ச்), வாயிற் கதவு வரை பைக்கைத் தள்ளிக் கொண்டு போய்)பள்ளி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டி விபத்துக்கள் இடையிடையெ ஏற்படுவதால், காவல் துறையினர் எப்போதும் அப்பகுதியைக் கண்காணிப்பது உண்டு.  உரிமம் இல்லாமல் பைக் ஓட்டும் மாணவர்கள் பிடிபட்டால், அவர்களது பெற்றோர்களுக்குக், குறிப்பாக அப்பாவுக்கு, அவருடைய உருவம், தகுதி, வயதுக் கேற்ப திட்டும், அபராதமும் உண்டு.  எனவே, காவலர்களை எதிர்பார்த்து பரிதாபகரமாக மாறிப் போன முகத்தை வைத்துக் கொண்டு காவலர்களின் திட்டுக்களை வாங்கத் தயாராகி சிட் அவுட்டைத் தாண்டி வாயில் முகப்பில் இறங்கி நடந்தேன்.
வாயிற் கதவிற்கு வெளியே, சாலையில் ஒரு காவலர் ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது.  இரண்டு போலீஸார் நிற்க, இருவர் - ஒரு பெண் காவலதிகாரி முன்னே வர அவர் பின்னே ஒரு ஆண் காவலரும்  வாயிற் கதவைத் தாண்டி உள்ளெ வந்து கொண்டிருந்தனர்.  அருண், கேட்டுக்கும், வீட்டின் முகப்புக்கும் இடையே நிறுத்தியிருந்த பைக்குக்கு அருகே வந்திருந்தார்கள்.

"ஹெல்மெட்டும், லைசன்சும் இல்லாம, 2 பேரு பைக்குல வந்தானுங்களே, எங்க அவனுங்க?" என்று சிரித்துக் கொண்டே நடந்து வரும் அந்தப் பெண் காவலர் யார்?.....சுதாவா?.....


"ஆம், சுதாவேதான்"! கோபால் அண்ணனின் (என் பெரியப்பா மகன்) மனைவி விமலாவின் தங்கை சுதா.  எர்ணாகுளம், ஆலுவாவில் சர்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தவர்.  

நிலம்பூருக்கு மாற்றலாகி 2 நாட்கள்தான் ஆகிறதாம். அமைச்சரவையில் வரும் மாற்றங்கள் இது போன்ற இடமாற்றங்களைக் காவல் துறையில் ஏற்படுத்துமாம்.  உள்துறை, திருவஞ்சியூர் ராதாகிருஷ்ணன் கையிலிருந்து, ரமேஷ் சென்னித்தலையின் கையில் வந்ததுதான் காரணமாம்.  சுதாவின் குடும்பம் எர்ணாகுளத்தில்.  மகனுக்குத் துபாயில் வேலை.  மகள் எர்ணாகுளத்தில் படித்துக் கொண்டிருப்பதால், எர்ணாகுளம் ஜில்லாவில் எங்கேனும் மாற்றலாகிப் போக முயல்வதாகவும், விரைவில் போக வாய்ப்புண்டு என்றும் சொன்னார். 
 கோபால் அண்ணனின் ஆரோக்கிய நிலை பற்றியும், குமுளி அருகே உள்ள உறவினர் பற்றியும் பேசியபின், பேச்சு நிலம்பூரில் சில நாட்களுக்கு முன் அமைச்சரான திரு ஆரியாடன் முகம்மதுவின், உதவியாளரான கே.எம்.பிஜு என்பவர், கட்சி அலுவலகத்தில் பணி புரிந்த ஸ்வீப்பர் சிறக்கல் ராதா என்பவரைக் கொன்று சாக்கில் கட்டிக் குளத்தில் இட்ட சம்பவத்திற்குத் திரும்பியது.கொலைக்குப் பின் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை அப்புறப்படுத்த கொலையாளிகளுக்கு, மோஹன்லால் நடித்த "த்ருஷ்யம்" என்னும் படம் உதவியாக இருந்ததாம்.  

கொடுமையைப் பாருங்கள்!  நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினி சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயில் கவ்வி, இளைஞர்களை ஒரு காலத்தில் ஈர்த்து சிகரெட் பிடிக்கக் காரணாமானது போல், மோஹன்லால் கொலைகாரர்கள் உருவாகக் காரணமாகிறாராம், எப்படிப் போகிறது கதை! 

மிகவும் சாமர்த்தியமாகக் கொல்லப்பட்ட உடலை மறைத்து, கொலைக் குற்றத்திலிருந்து தன் மகளைக் காப்பாற்றுவதுதான் படத்தின் கதை. (அருமையான படம்!. மோஹன்லாலின் அற்புதமான நடிப்பு!  அழகாகச் சொல்லப்பட்டத் திரைக்கதை! எடிட்டிங்க்!-இதைச் சொல்லியே ஆக வேண்டும்...சொல்லாவிட்டால் என் தலை வெடித்துவிடும் என்பதால் சொல்கிறேன்!  மன்னிக்கவும்!)

இந்த நிலம்பூர் கொலை காரணமாக, தான் நிலம்பூரில் எப்போதும் இருக்க வேண்டிய நிர்பந்தம் என்றார். அரசியல் தலைவர்களும், மேலதிகாரிகளும், எப்போதும் நேரில் வரவும், தொலைபேசியில் அழைக்கவும் வாய்ப்புண்டாம். இதை, அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, இடையிடையே தொலைபேசி அழைப்பு வந்து கொண்டிருந்தது. 1/2 மணி நேரம் இப்படிக் கதைகளைப் பேசிய பின், சுதா, அருண் மற்றும் வினாயக்கிடம், 

"ரெண்டு பேரும் முதல்ல க்ரவுண்டுல ஓட்டிப் பழகுங்க, போதும். லைசன்ஸ் எடுத்தப்புறம்தான் ரோட்ல ஓட்டணும்.  அப்புறம் ஹெல்மெட் போட்டுட்டுத்தான் ஓட்டணும்...புரிஞ்சுச்சா"  என்று அறிவுரை சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

இதற்கிடையில், என்னுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த நண்பர் பிஜு எப்போதோ கிளம்பிச் சென்றிருந்திருக்கிறார்.  எனக்கும் ஆர்வம் போய்விட்டதால்,  என் மனத்திரையில்  27  ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் ஃப்ளஷ்பேக்காக ஓடத் தொடங்கியது (வெறும் வாயை மெல்லும் எனக்கு அவல் கிடைத்தால் எப்படி இருக்கும்!)

1986-ல் நான் "மாதவன் மாமாவின்"(இடுகை-) மகன் "இஸபெல்லா விஜயன்" எர்ணாகுளத்தில் நிறுவிய நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த காலம்.  ஒரு நாள் மாலை நான் இந்து அக்காவின் வீட்டை அடைந்த போது, அங்கே கோபால் அண்ணன் சுதாவுடன் வந்திருந்தார்.  அப்போது சுதாவின் திருமணம் நடந்து 8 மாதங்களே ஆகியிருந்தது! கணவன் குடியும், கூட்டாளிகளுடன் கூத்தும், சீட்டாட்டமுமாம்.  இடையிடையே கோபம் வரும் போதும், சந்தோஷம் கூடும் போதும் சுதாவுக்கு, அடி, உதை உறுதியாம். சுதா சொன்னதிலிருந்து, பெண்களை வேதனைப் படுத்தி இன்பம் காணும் ஒரு ஜென்மம் போலத் தெரிந்தது!

"எனக்கு அவரப் பாத்தாலே பயமாருக்குது", என்று சுதா சொன்னதை முதலில் பொருட்படுத்தாத சுதாவின் வீட்டார், விரைவிலேயே சுதாவின் துயர வாழ்க்கையை நேரில் கண்டு, புரிந்து கொண்டு, சுதாவைத் தங்கள் வீட்டிற்கு அழத்துக் கொண்டு வந்து விட்டார்களாம்.  விவாகரத்து வாங்கியபின், சுதாவை M.A.  படிக்க வைக்க முடிவும் செய்திருந்தார்களாம். வீட்டுத் தொலைபேசிக்கு அந்த குடிகாரக் கணவனின் மிரட்டல்கள் இடையிடையே வந்து சுதாவை நிம்மதி இழக்கச் செய்ததாம்.  அதனால் சுதா பயந்து எங்கும் வெளியில் தனியே போவதைத் தவிர்த்திருந்திருக்கிறார்.  

இடையே ஒரு நாள் தன் தோழியின் குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றுத் திரும்பும் போது, திரைப்படத்தில் காட்டப்படும் சம்பவம் போல், ஒரு ஜீப், நடந்து சென்று கொண்டிருந்த சுதா அருகே நிற்க, அதிலிருந்து இறங்கிய கயவனானக் கணவன் சுதாவைத் தூக்கி ஜீப்பில் போட, சுதாவின் கூச்சல் கேட்டு, நடந்து சென்ற சிலர் உதவிக்கு வரும் முன் ஜீப் பறந்திருக்கிறது.  எப்படியோ இடையே ஒரு பஸ் எதிரே வர, ஜீப்பின் வேகம் குறைய, சுதா கூச்சலிட்டுக் கொண்டே ஜீப்பிலிருந்து வெளியே குதித்து ஓட, பேருந்தும், எதிரே வந்த வாகனங்களும் நின்றிருந்திருக்கின்றன. இரையைத் தன் பிடியிலிருந்துத் தவற விட்ட வேட்டை மிருகத்தைப் போல் ஆன கணவன் திகைத்துச் சிறிது நேரம் நின்று, பின்னர் வேறு வழியின்றி அங்கிருந்து போக, மரணத்தின் பிடியிலிருந்து தப்பி உயிர் பிழைத்த மானைப் போல் சுதா ஓடி அருகில் நின்றிருந்த பேருந்தில் ஏறி அந்த மனித மிருகத்திடமிருந்து தப்பியிருந்திருக்கிறார். 

இந்தச் சம்பவம் சுதாவையும், அவர் குடும்பதினரையும் உலுக்கிவிட்டிருந்திருக்கிறது. இனி எப்படி அங்கு நிம்மதியாக வாழ்வது என்ற பயம் அவர்களுக்கு வந்திருக்கிறது. போலீசார் கயவனானக் கணவனை எச்சரித்திருந்தாலும், சுதாவைச் சற்றுத் தொலை தூர இடத்தில் எங்கேனும் சில நாட்கள் தங்க வைக்க முடிவு செய்திருந்திருக்கிறார்கள். அப்படித்தான், எர்ணாகுளத்தில் உள்ள திரு. விஜயனின் நிறுவனத்தில் வேலையும், நிறுவனத்தின் அருகிலிருந்த ஒரு பெண்கள் விடுதியில் தங்கவும் ஏற்பாடு செய்வதற்காக கோபால் அண்ணனும், சுதாவும், நான் அன்று இந்து அக்காவின் வீட்டிற்குச்  சென்றிருந்த சமயம், அங்கு வந்திருந்தார்கள். 

சுதாவின் பிரச்சினைகளை அறிந்த விஜயன், எர்ணாகுளத்திலுள்ளத் தன் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சுதாவுக்கு வேலை கொடுக்க, சுதாவும் அதன் அடுத்திருந்த விடுதியில் தங்கிப் பணிபுரியத் தொடங்கினார்.  ஆனால், 6 மாதங்களுக்குப் பின் விஜயன் தன் நிறுவனத்தின் நஷ்டங்களைக் குறைக்க பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  அவ்வேளையில் சுதாவுக்கு மிகவும் ஆறுதலாக இருந்த வேலை அவரது கைவிட்டுப் போனது.  அதை அறிந்து அதிர்ந்த நான், அன்று மாலை சுதாவைக் காண அவரது விடுதிக்குப் போன போது, கதறி அழுத சுதாவின் முகம் என் மனத்திரையில் இப்போதும் அழியாமல் நிலைத்திருக்கிறது!

மறுநாளே, கோபால் அண்ணன் சுதாவை குமுளிக்குக் கூட்டிப் போனார்.  இதற்கிடையில், சுதாவின் நிலைமையைப் புரிந்து கொண்டு, சுதாவுக்கு மறுவாழ்வு கொடுக்கத் தயாராக, தயாநந்தன் என்னும் ஒரு இளைஞர் முன்வந்தார்.  மறுமணச் சடங்குகள் நடத்த குமுளியை விட எர்ணாகுளமே ஏற்றது என்பதால் (கயவன் கணவன் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுத்த வாய்ப்புண்டு என்பதால்) சுதாவின் மறுமணம் வைக்கம் அருகே உள்ள ஒரு கோயிலில் நடத்தப்பட்டது.  இருவரும் இந்து அக்காவின் வீட்டருகே ஒரு வாடகை வீட்டில் தங்கி, தங்கள் புது வாழ்வைத் தொடங்கினார்கள்.  வாழ்வில்  நேர்ந்த துன்பங்களும், துயரங்களும், சுதாவிற்கு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.  தனக்குத் தன் சொந்தக் காலில் நிற்க ஒரு வேலை அவசியம் என்று புரிந்து கொண்டு, அதற்கானத் தீவிர முயற்சியை மேற் கொண்டார். கேரள அரசு காவல்துறையில் மகளிர் காவல்துறைப் பிரிவு ஆரம்பிக்க தீர்மானித்திருந்த நேரம் அது.  "Where There is a will there is a Way".  சாதிக்க வேண்டும் என்ற மனம் இருந்தால், அதற்கான வழி உண்டு என்பது போல், சுதாவின் முயற்சி வீண் போகவில்லை.  பெண் கவலராகப் பதவியேற்று, அவர் விரைவிலேயே (முதல் Batch ஆனதாலும், சுதா ஒரு க்ராஜுவேட்  என்பதாலும்) பதவி உயர்வு கிடைக்கப் பெற்று, சர்கிள் இன்ஸ்பெக்டராகப் பணி புரிகிறார்.  48 வயதாகும் அவருக்கு இனி 8 வருட சேவை பாக்கி உள்ளது.  எப்படியும் ஒரு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதால் DSP ஆகி ஓய்வு பெறக் காத்திருக்கிறார் சுதா.

அவரது மூத்த மகன் துபாயில் மென்பொருள் பொறியாளராகப் பணி புரிகின்றார்.  இளைய மகள் கல்லூரி மாணவி.    கணவன் தயாநந்தன் ஒரு ஹார்ட்வேர் கடை நடத்துகிறார்.  மாஜி கணவன் குமுளிக்குக் "குட்பை" சொல்லிவிட்டு, கர்நாடகாவில், உடுப்பி அருகே உள்ள எங்கோ ஓரிடத்திற்குப் போய்விட்டதாகக் கேள்வி.  (போலீஸ் அதிகாரியான மாஜி மனைவி தன்னை அடிக்கவும், உதைக்கவும் வாய்ப்புண்டு என்ற பயத்தாலோ என்னவோ!).

சுதாவை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது! பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.  துன்பம் வரும் வேளையில் தளர்ந்து விடக் கூடாது.  தன் எதிர்காலத்தைத் தகர்க்க எவரையும் அனுமதிக்கவும் கூடாது. 

வாழ்க்கை என்றால் இப்படித்தான்.  கல்லும், முள்ளும் நிறைந்த காட்டுப் பாதை போல் சிலசமயங்களில் மாறிவிடும். எதிர்பாராமல் ஏற்படும் துன்பங்களையும், துயரங்களையும் கண்டு துவளாமல், சிந்தித்து செயல்பட்டு எதிர்நீச்சல் போட்டுப் போராடினால் சுதா வாழ்வது போல் சுகமான வாழ்க்கை வாழலாம்.

வாழ நினைத்தால் வாழலாம்.......வழிகளா இல்லை பூமியில்?!!!?!செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

ஆவிப்பா-ஒரு பார்வை


    “ஆவிப்பா கேட்பதற்குப் புதுமையாகத்தான் இருக்கிறது இல்லையா?!  “ஹேய் அது ஆவிப்பா! என்று பயந்து விடாதீர்கள்! இது, பதிவர் கோவை “ஆவியின் காதல் பாக்கள்.  ஆவிக்கு ஏதப்பா காதல்?  என்றுக் கேள்வியா?  இது ஆனந்த விஜயராகவனின் காதல் பாக்கள்! காதலியை, கண்களையேத் தூரிகையாய் கொண்டு வரைந்திடும் திறமை மிக்க கவிஞனுக்கு “காதல்ப்பா எழுதுவது ஒன்றும் பிரம்ம சூத்திரம் இல்லையே!

              முதலாம், இரண்டாம் மற்றும் எல்லாக் காதலிகளுக்கும் சமர்ப்பணம் செய்யும் கவிஞர், காதல் கவிதைகளில் புகுந்து விளையாடாமல் இருப்பாரா?! விளையாடிப் பதக்கமே வென்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்!

“ஒற்றை வார்த்தையில்
ஒரு பாடல்
“சரிகமபதநீ’”

என்ற ஆரம்பமே ஆரோஹணம்தான்! ஆஹா! சங்கீதத்தில் ஆரோகணம், அவரோகணம் இருந்தாலும், ஆசிரியர், காதலில் ஆரோகணம் மட்டுமே! அவரோகணம் இல்லை என்ற அழகான வெளிப்பாடுடன் ஆரம்பிக்கின்றார்! ஆம்! காதல் பாக்கள் படைத்ததிலும் காதல் அழகு மிளிர்ந்து கூடுகிறதே அல்லாமல் இறங்குவரிசை இல்லை!

கடவுளையே காத்திருக்கச் சொல்லும் காதல் ஹைக்கூ! கடவுள் கூட காதலுக்காகக் காத்திருப்பார் போலும்!  கவிஞரின் வரிகளில்!

காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள்!  இவர் காதலுக்கு வயதில்லை என்கின்றார்!  ஆம்! அது தோன்றியது எப்போது? மனிதன் தன் ஆறறிவு கொண்டு சிந்திக்கத் தொடங்கியதினாலா இல்லை மனிதன் தோன்றிய காலத்தேவா?!! என்ற கேள்வியும் கேட்டு அவரே இனிமையாகப் பதிலுரைக்கிறார்! எந்த டெக்னாலஜியும் இல்லாத காலத்தே தோன்றியதுதான் காதல்பா என்று!

அவரது சக போட்டியாளன், காதலி கிடைக்காத வருத்தத்தில் காப்பியில் விழுந்து உயிர்விட்ட ‘ஈயாகிப் போக, ஒருவேளை அந்த ஈ ஆவியாக வந்து ஆவியின் ஆவிப்பாவைப் பார்த்து விட்டு “ஈப்பா எழுத ஆரம்பிக்குமோ?!!  இருக்கலாம்! அதற்கு பதிலுரைப்பதாக “ஆவிப்பா இரண்டாவது பகுதியாக வெளிவந்தாலும் வரலாம்!

காதல் என்றாலே பெரும்பான்மையோர் “சோகப்பா, “கோபப்பாவாக எழுதுவார்கள்! ஆனால், நம் ஆவிப்பா எல்லா பாக்களையும் இனிமைப்பாவாக நேர்மறையாக எழுதியுள்ளது மிகவும் ரசிக்கும்படியும், இதமாகவும் உள்ளது!  பாரதியாரே காதல் போயின் சாதல் என்றார். ஆனால் ஆவி, காதலொன்றும் கலிங்கத்துப்பரணியில்லை கஷ்டப்பட்டு சாவதற்கு!  என்கின்றார்!  என்னே அருமையான ஒரு சிந்தனை!

இன்றைய காலகட்டத்திற்கேற்ற “ஹைடெக் ஊடுருவிய பாக்களும் இடையிடையே நெய்திருப்பது, ஆசிரியர் கணினித்துறையில் பொறியியல் பட்டதாரி என்பதையும் சொல்லாமல் சொல்லுகின்றதோ!

இலக்கண வரையறைக்குட்பட்ட கலிப்பா அல்லாமல் இந்த ஆவிப்பா, காதல் இலக்கணத்திற்குள் எழுதப்பட்டிருப்பதால், மழைச் சாரலாகவும், துள்ளி ஓடி வரும் குற்றாலமாகவும், பல இடங்கள் மனதிற்கு இதமளிக்கும் சுகப்பாவாகவும் உள்ளது. மறுபடியும் வாசிக்கத் தூண்டிஹை!” சொல்ல வைக்கும் ஹைக்கூக்கள்! ஒரு சில பாக்களில் காதல் ரசம் சொட்டும் வார்த்தை ஜாலங்கள்!

“மையல் கொள்ளும் போது
நாணிச் சிவக்கும்
தையல் பெண்ணே
நீ என் நெஞ்சம்
பறிக்கிறாய்!

“கோலமயில் நீ
கோலம் போடும்
கோலத்தைக் காண
கண்ணுறக்கமில்லாமல்
அலங்கோலமாய் நான்!!

இது போன்று, “இடை, “தினம் என்ற சொற்களை வைத்தும் பாக்களில் பௌண்டரி அடித்துள்ளார், கோவை ஆவி!  ஒவ்வொன்றின் அழகையும் சொல்ல விழைந்தால் எல்லா பாக்களையும் நாங்கள் இங்கு தர வேண்டி வரும். இந்த விமர்சனப் பதிவு, எங்கள் வலைப்பூவை மற்றொரு பதிப்பகம் ஆக்கிவிடும், நஸ்ரியா இல்லாதப் பாலைவனமாய்! (அந்த அளவிற்கு நஸ்ரியா “ஆவிப்பாவுடன் இரண்டறக் கலந்திருக்கிறார்!)

ஆசிரியற்கு, காதல்பா இயற்றியதால் கல்லறைதான் கிடைத்ததாம்!.  இல்லை! காதல்பாவாகிய “ஆவிப்பா காதல் சின்னமாகக் கூறப்படும் தாஜ்மஹாலையும் விஞ்சி நிற்கிறது எனலாம்! அத்தனைப் பாக்களுமே காதல் நயாகராதான்! அவரது கன்னி முயற்சியாகிய இந்த “ஆவிப்பாவை வாசித்து அந்த இனிய உணர்வுகளை, காதல் மொழியின் அழகை, நூலகமாய் பாதுகாக்க, கல்லறை அல்லாது பல இதய அறைகள் கிடைத்துள்ளன என்று சொன்னால் அது மிகையாகாது! அவருக்குக் கிடைத்த வெற்றியே!

சுருங்கச் சொன்னால், வாசித்தவுடன் இது ஆவியாகிப் போகிற ‘ஆவிப்பா இல்லை! வாசிப்பவரின் மனதை, உடனே தாவிப் பிடிக்கும் “தாவிப்பா! எப்போதும், எல்லோர் மனதிலும் ‘ரிங்க்டோனாய் ஒலிக்கப் போகும் “கூவிப்பா”! வாசிப்பவர் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிடும் “மேவிப்பா! (அப்பா!  மூக்சு வாங்குதுப்பா!!)


வாழ்த்துக்கள்! கோவை ஆவி எனும் ஆனந்த விஜயராகவன்!


இந்த நூலை அழகு செய்திருக்கும் பதிவர்களால் "வாத்தியார்" என்று செல்லமாக, நட்புடன் அழைக்கப்படும் பதிவர் திரு பாலகணேஷ் அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்! மிக நேர்த்தியான நூலழகு! வாழ்த்துக்கள் "வாத்தியாரே"!!

-கீதா, துளசிதரன்

வெளியீடு" இந்திரா ப்ரியதர்ஷினி பப்ளிகேஷன்ஸ், ஆச்சிப்பட்டி, பொள்ளாச்சி
கிடைக்கும் இடம் Discovery Book Palace PVT.LTD
K.K. Nagar West, Chennai-78 (Near Pondicherry Guest House)
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

ஊருக்குத்தான் உபதேசம்......அதை உரைக்கும் அவர்களுக்கல்ல!

பாலக்காடு நகரம், தமிழ்நாட்டிற்குத் திருநெல்வேலி எப்படியோ, அப்படி ஓர் மூலையில், தானுண்டு தன் பழம் பெருமைகள் உண்டு, நடக்காத சில கனவுகளும் உண்டு என்று மற்ற நகரங்களுடன் போட்டி போடாமல் அமைதி காக்கும் ஒரு சிறிய நகரம்தான்.  கடந்த சில வருடங்களாக, 'பாலக்காடு ஃபெஸ்ட்' என்ற பெயரில், 10 நாட்கள் தொடர்ந்து நடக்கும் ஒரு திருவிழா.  பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மலையாள மனோரமா நாளிதழும், நேரு குழுமம் கல்வி நிறுவனங்களும் சேர்ந்து நடத்தி வருகின்றார்கள்.  இவ்வருடமும், பிப்ரவரி 20 அன்று தொடங்கிய 'பாலக்காடு ஃபெஸ்ட்',  மார்ச் 2 வரை நடக்கவிருக்கிறது. நேற்று (21-02-2014) நானும், எங்கள் பள்ளியின் முதல்வர் திரு. ஜோஸ் மாத்யுவும், சம்பள பில்லை, கூரியரில், குற்றிப்புரத்திலுள்ள, உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பிய பின், 'பாலக்காடு ஃபெஸ்ட்' க்கு போக முடிவு செய்தோம்.  முன்பெல்லாம் கோட்டை மைதானத்தில் நடந்துவந்த இது போன்ற நிகழ்சிகள், மைதானத்தின் பெரும்பகுதியை கிரிக்கெட் தளம் விழுங்கியதால், இப்போது ஸ்டேடியம் க்ரவுண்டில்தான் நடத்தப்படுகின்றன. 
ஆறு மணிக்கு முன்பே நாங்கள் க்ரவுண்டை அடைந்தோம். சுற்றிலும் அலுமினியம் ரூஃபிங்க் ஷீட்டால் மறைக்கப்பட்டு, உள்ளே நான்கைந்து அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்ட நவீன பந்தல்கள் போடப்பட்டிருந்தன.  அவற்றில் இரண்டு பந்தல்கள் முழுமையாக குளிரூட்டப்பட்டிருந்தன.  நுழைவுக் கட்டணம் ரூ.50.  தரையில் பலகைகள் இடப்பட்டு  அதில் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.  எனவே கோடைகால வெப்பமும், தூசும் இல்லாமல் ஃபெஸ்ட் கண்டு களித்துத் திரும்பலாம். ஏராளமான கடைகள் உள்ளே போடப்பட்டிருந்தன.  'துருக்கி லெதரால்' செய்யப்பட்ட இருக்கைகள், பல வகை கணிணிகள், குளிரூட்டும் சாதனங்கள், குளிர் காற்றுப் பெட்டிகள், பாடி மாசாஜர்ஸ், கைரேகை ஸ்கான் செய்து உடனடியாக எதிர்காலத்தை ரூ.100 க்கு, அச்சடித்து தரும் நவீன சோதிடர், வெறும்  ரூ.1000 க்கு (!?) கனமில்லாத மூன்று மடிப்புள்ள கொக்கிகள் (மாங்காய், முருங்கைக்காய்.....பறிப்பதற்கு) இப்படி விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது போல், குண்டூசி முதல், ஹுண்டாய் கார் வரை, உள்ளே, பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.  

உணவுப் பிரிவான 'ஃபுட் கோர்ட்' டில்,  30 விதமான தோசைகள், 10 விதமான பிரியாணிகள், வட இந்திய, சைனீஸ், கான்டினென்டல் உணவு வகைகள், இப்படி, அங்கு செல்பவர்களது மனம் கொஞ்சம் தடுமாறினால், கையிலுள்ள பணம் காணாமல் போய் விடும் அளவிற்கு, காண்பவரது மனதைக் கவரும் வகையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் இருவரும்,  2 ரோஸ்ட் சாப்பிட்டபின், ஃபெஸ்டின் பாகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாஜிக் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியைக் காண அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்ட பந்தலில், மேடை அருகே போய் அமர்ந்தோம்.  டி.வி. நிகழ்சிகளில் பங்கெடுத்த பல திறமை மிக்க சகோதர, சகோதரிகள் மிகவும் நன்றாகப் பாடினார்கள்.  சிறிது நேரம் கேட்டதும்,  காதில் சிறிதாக வலியும், குடைச்சலும் ஏற்பட்டது.  காதுக்குள் சிறு விரலை விட்டு இடையிடையே குடைந்து பாடலைக் கேட்கவும்,  காட்சிகளைக் காணவும் தொடங்கினேன்.  மிகவும் அருமையாக ஒரு வட இந்திய இளஞர்  ஆடிய மாஜிக் நடனத்தைக் கண்டு களித்து இரவு 8.30க்கு அங்கிருந்து வெளியேறினோம். 

வெளியே சுற்றி மறைக்கப்பட்டிருந்த பகுதிக்குத் தொட்டடுத்தாற் போல் நிறுத்தியிருந்த என் இரு சக்கர வாகனத்தை எடுக்கப் போன போது,  மறைக்க உபயோகிக்கப்பட்டிருந்த அலுமினியம் ரூஃபிங்க் ஷீட்டுகள் இடையிடையே அதிர்ந்ததைக் கவனித்தேன்.  பயந்து பின் வாங்கிய எனக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை.  பின்புதான் தெரிந்தது, அப்போதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த இசைநிகழ்ச்சியின் இடையே வரும் இசைக்கருவிகளின் சப்தம்தான் அந்த அதிர்வுக்குக் காரணம் என்று.  அலுமினியம் ஷீட்டைத் தொட்டுப் பார்த்து, அதிர்வு இடையிடையே உச்சத்தில் கேட்கும் இசைக் கருவிகளின் சப்தத்தால் தான் உண்டாகிறது என்று உறுதி செய்தேன். அப்பகுதியில் சாலையின் இரு புறமும் ஏராளமான அக்கேஷியா மரங்கள் உள்ளன.  ஒவ்வொரு மரத்தின் கீழும் வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு தெளித்தது போல் காணப்படும் பறவைகளின் எச்சங்கள் விழுந்திருந்தன. மரத்தின் கீழே ஏறத்தாழ 3 மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஒன்றில் கூட அந்த இரவு நேரத்தில், பறவைகளின் எச்சங்கள் விழந்திருக்கவில்லை.  பாவம் பறவைகள், இந்த சகிக்க முடியாத சத்தத்தைத் தாங்க முடியாமல் எங்கேனும் தூர இடங்களுக்குப் பறந்து சென்றிருக்கலாம்.  சத்தத்தை அளக்கும் ஃபோனோ மீட்டர் வைத்து அளந்தால் ஏறத்தாழ 110 db (டெசிபல்) முதல் 140 db வரையுள்ள சத்தம் அங்கு ஒலித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.  60 db முதல் 70 db வரை மனிதனுக்கு பிரச்சினை ஏற்படுத்தாதாம்.  அதற்கு மேல் உள்ள சத்தங்கள் செவிப்பறையைச் சேதப்படுத்துவது மட்டுமல்ல, இதயத் துடிப்பையும், இரத்த ஓட்டத்தையும் கூட்டி ஆரோக்கியத்திற்கு பாதிப்பும் ஏற்படுத்துமாம்.  மட்டுமல்ல, பெண்களுக்கு கரு கலைதலும், அதையும் மீறி பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியப் பிரச்சினையும் உண்டாக்குமாம்.  இத்தகையத் தீங்குகளைப் பற்றித் தெரிந்துதான் அரசும் பொது இடங்களில் இது போன்ற ஒலி பெருக்கிகளை உபயோகிக்கத் தடை விதித்திருக்கிறது.  

இதில் அதிசயம் என்னவென்றால், பொது மக்கள், பறவைகள் போன்ற உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கும் இது போன்ற சம்பவங்களைக் கேட்டறிந்து, அங்கு சென்று முழு விபரமும் அறிந்து, பொது மக்களுக்கும், காவல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்து, இத்தகையச் சட்ட விரோத மற்றும் சமூகத்திற்குத் தீங்கிழைக்கும் செயல்களை நடக்கவிடாமல் தடுக்க வேண்டிய செய்தித்தாளான மலையாள மனோரமாவும், உயர்மட்ட அளவில் மனித குலத்திற்கு இது போன்ற ஆபத்துகளை ஆராய்ந்து அறிந்து, அதிலிருந்து மீள உதவும் வழிவகைகளையும் கற்பிப்பதைத் தன் கடமையாகக் கருதும் நேரு குழும கல்வி நிறுவனங்களும் சேர்ந்து நடத்தும் இந்தப் 'பாலக்காடு ஃபெஸ்ட்' ல் நடக்கும் இந்தக் கொடுமையை அவர்கள் கண்டும் காணாமல், அறிந்தும் அறியாமல் இருப்பதுதான். இதைத்தான் நம் முன்னோர்கள் சொல்வார்களே, "படிப்பது பெரியபுராணம், இடிப்பது பரமசிவன் கோயில்" என்று, அது போல் இருக்கிறது. ஊருக்குத்தான் உபதேசம்.. உபதேசிக்கும் அவர்களுக்கல்ல, போலும்!!

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

கண்ணால் காண்பதும் பொய்.....காதால் கேட்பதும் பொய்....தீர விசாரித்து அறிவதே மெய்.மலம்புழையில், தெற்கேமலை என்னும் இடத்தில், சாலை அருகே காணப்படும் பாறைக் கூட்டங்களுக்கு இடையே உள்ள ஒரு சிறிய குகையிலிருந்து, கடந்த வாரம் திடீரென புகை வர ஆரம்பித்தது.  அருகே சென்று என்னவென்று அறிய முயன்றவர்களுக்கு, சகிக்க முடியாத நாற்றமும், கண்களில் எரிச்சலும், தலை சுற்றலும் ஏற்பட, எல்லோரும் உள்ளே போகப் பயந்து வெளியிலேயே நின்று விட்டார்கள்.  புகை வருவது ஓரிரு நாட்கள் தொடர்ந்ததால், எல்லோருக்கும் பலவித சந்தேகங்கள் ஏற்பட்டது.  அதில் எல்லோராலும், கொஞ்சம் பயத்துடன் அதிகமாகப் பேசப்பட்ட சந்தேகம் தோய்ந்த வாசகம், "பூகம்பம் ஏற்படும் முன் சில இடங்களில் இது போன்ற அறிகுறிகள் தோன்றுமாம்" என்பதுதான்.  அதைக் கேட்ட பாதி, கேட்காத பாதி பொதுமக்கள் "மலம்புழையில் பூகம்பம் உண்டாகப் போகிறது" என்றும், "பாலக்காட்டில் பூகம்பம் உண்டாக வாய்ப்புண்டு" என்றும், தோன்றிய இடங்களில் தங்கள் முன் தோன்றியவர்களிடம் எல்லாம் அவசியம் இல்லாமல் சொல்லி, தங்களின் தூக்கத்தையும், கேட்பவர்களின் தூக்கத்தையும்  கெடுக்கத் தொடங்கி விட்டார்கள்.


காவல்துறையினர், தீயணைக்கும் படை மற்றும் தீயணைப்பு வண்டியுடன், புகைந்து கொண்டிருக்கும் குகையை நோக்கிப் பாய்ந்தனர்.  கூடவே மலம்புழா மக்கள் மட்டுமல்ல, சுற்றுலா பயணிகளில் சிலரும் பாய்ந்தனர்.  தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து, மிகவும் கவனமாக சில காவல்துறை மற்றும் தீயணப்பு படையைச் சேர்ந்தவர்கள் குகைக்கு உள்ளேச் சென்றன்ர்.  தலை சுற்றி வீழவோ, வெடிப்போ ஏற்பட்டால் அவர்களைக் காப்பாற்றி வெளியில் கொண்டுவர தயாராக காவல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வெளியே  காத்திருந்தனர்.  ஏதாவது சத்தம் கேட்டால் தலை தெறிக்க ஓடி, எதிலாவது தட்டி விழுந்து தங்கள் கை, கால்களை உடைத்துக் கொள்ளத் தயாராகத் திகிலுடன் காத்திருக்கும், சாதாரண மக்கள் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு குகைக்கு வெளியே கத்திருந்தார்கள்.  


நேரடி ஒளிபரப்பாக, சம்பவத்தைப் பதிவேற்றம் செய்யத் தயாராக, மொபைல்ஃபோன்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு முகனூல்காரர்களும், வலைப்பதிவ்ர்களும், ஊடகக்காரர்கள் மட்டுமல்ல நாங்களும், இங்கிருக்கிறோம் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.  இப்படி கண்ணிமையையும், திறந்த வாயையும் மூடாமல் எல்லோரும் சில நொடி நேரங்களை நகர மறுக்கும் நிமிடங்களாக உணர்ந்து சலித்துக் கொண்டிருந்த நேரம அது.  "பிரச்சினை இல்லை போல் தெரிகிறது.  இதுவரை உள்ளேயிருந்து, கத்தல்களோ, கதறல்களோ வெடிச் சத்தமோ கேட்கவில்லை" என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.


சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்தக் காவல் துறையினரின் கையில் கறுகிப் போன உடல் பாகங்கள் போல் சிலவற்றைக் கண்டதும், பொதுமக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி.  ஆனால், போலீசார் அதை உயர்த்திக் காண்பித்து, "பயப்பட ஒன்றும் இல்லை.  இதெல்லாம் தீவிபத்தில் கறுகிய வௌவ்வால்களின் உடல்கள்தான்.  காட்டுத்தீ படர்ந்து, இதோ இந்தக் காய்ந்த மரத்தில் பற்றிப் பிடித்து, இதன் வேர் குகைக்குள் சென்றிருந்ததால், அதன் வழியே உள்ளே சென்று, அங்குள்ள காய்ந்த செடிகள், சறுகுகள், இலைகள் மற்றும் வேரின் பகுதிகளில் எல்லாம் தீ பரவி புகை வந்திருக்கின்றது.  பின் வௌவ்வால்களின் உடல் மற்றும் அவற்றின் எச்சம் தீ பற்றி எரிந்த போது உண்டான புகைதான் கண் எரிச்சலுக்கும், தலை சுற்றலுக்கும் காரணமாகி இருந்திருக்கிறது. எனவே பயமின்றி எல்லோரும் திரும்பிச் செல்லுங்கள்.  வீணான பூகம்பப் பயம் எல்லாம் வேண்டாம்",  என்றதும், எல்லோர் முகத்திலும் "அப்பாடா....நிம்மதி!" என்ற புன்முறுவல்.  இப்படிக், "கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்து அறிவதே மெய்" என்ற உண்மையை உணர்ந்த மக்கள் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பாத்திரமறிந்து பிச்சையிடு!பொங்கல் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த சீசனுக்கே உரிய கரும்பு, சிறுகிழங்கு-சீவக் கிழங்கு என்று சொல்லுவதும் உண்டு-அவரை, துவரை, மொச்சை, கடலை என்று எல்லாம் அங்கங்கு, கிராமத்து மக்களால் கடைகள் போடப்பட்டு இருந்தன. நானும் சில சாமான்கள் வாங்கிவிட்டு போடிநாயக்கனூரிலிருந்து, ராசிங்கபுரத்திற்குச் செல்ல ராணிமங்கம்மாள் பேருந்தில் ஏறினேன்.  பொங்கல் சமயம் ஆதலால், பேருந்தில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் கூட்டம்.  எப்படியோ ஏறி ஒண்டிக்கொண்டு நின்றேன். இந்தப் பேருந்தை விட்டால் அடுத்து 1/2 மணி நேரம் காத்திருக்க வேண்டும். 


நடத்துனர் ஏறியதும் வண்டி கிளம்பியது.  நடத்துனர், ‘யாரும் படிகளில் நிற்கக் கூடாது என்று சொல்லி எல்லோரையும் பேருந்திற்குள் வரச் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தார்.  நாங்களும் மெதுவாக முண்டி அடித்து முன்னேறினோம். அப்போதுதான் ஒரு குண்டு மனிதனும், நல்ல ஆரோகியமாக, மெலிந்த தேகத்துடன் இருந்த ஒருவரும் ஊனமுற்றோர் இருக்கையில் சௌகரியமாக அமர்ந்து இருந்ததைக் கவனித்தேன். குண்டு மனிதர் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தார். 
 

தர்மத்துப்பட்டியில் பேருந்து நின்றது. அங்கு ஒரு சிறிய கூட்டம் இறங்கியதால் கொஞ்சம் இடைவெளி கிடைத்தது நிற்பதற்கு. தர்மத்துப்பட்டியில், ஒரு லாட்டரி விற்பனை செய்பவர் ஏறினார்.  அவருக்கு ஒரு கால் இல்லை.  அவர் கஷ்டப்பட்டு ஏறியதும்,  ஊனமுற்றோர் இருக்கையில் அமர்ந்திருப்பவரில் யாராவது ஒருவர் எழுந்து இடம் கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன்.  நான் மட்டுமல்ல பேருந்தில் இருந்த எல்லோருமே அந்த இருவரையும் பார்த்தனர். ஒருவேளை அந்த இருகை உடல் ஊனமுற்றோருக்கு மட்டுமின்றி, மனம் ஊனமுற்றோருக்கும் போலும் என்று எண்ணத் தோன்றியது. அந்த இருவரில் மெலிந்த மனிதர் கண்களை மூடி உறங்குவது போல நடிப்பது நன்றாகவேத் தெரிந்தது.  ஜன்னலோரம் இருந்த குண்டு மனிதர் ஏதோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பது போல ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தார்.  லாட்டரி பேர்வழி, இரண்டு சீட் கம்பிகளில் ஒன்றில் சாய்ந்து, மற்றொன்றைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார். ஜன்னலோரம் இருந்தவர் உட்பக்கம் திரும்பிய சமயம், லாட்டரி விற்பனையாளர் அவரைப் பார்த்து புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்தார்.  அவர் கௌரவத்துடன் இவரைப் பார்ப்பதும், வெளியே பார்ப்பதுமாக, ஒன்றுமே கவனியாதவர் போல இருந்தார்.  பொறுமை இழந்த நான், லாட்டரி விற்பவைப் பார்த்து,

“அண்ணே!, நீங்க அவங்கள்ல யாராவது ஒருத்தரை எந்திரிக்கச் சொல்லிட்டு உட்கார வேண்டியதுதானே என்றேன்.

“ஏன் கொஞ்ச நேரம் நின்னா என்னவாம் குறைஞ்சா போயிடப் போறாரு. இந்தா அடுத்த பஸ் ஸ்டாப்புல சில்லமரத்துப்பட்டியில கொஞ்ச பேரு எறங்கத்தானே செய்வாங்க? என்று, அந்த குண்டு மனிதர் என்னைக் நோக்கி எகிறினார்.

என்னிடம், “பரவாயில்லை தம்பி, நான் ஒரு இடத்துல உட்கார்ந்து லாட்டரி விக்கறது இல்லையே...தம்பி.........தம்பி...சிக்கிம் பம்பர் 10 ரூபாய்தான் என்றார்” 

எனக்கு இப்போதுதான் புரிந்தது, லாட்டரியின் புன்சிரிப்பின் அர்த்தம் அந்த குண்டு மனிதரைப் பார்த்து.....லாட்டரி டிக்கெட் வாங்கி அவருக்கு உதவ முடியாத நான் நழுவி முன்னோக்கி நகர்ந்தேன. .ஆனால், அதிசயம், அந்த ஜன்னலோரக் குண்டுப் பேர்வழி 10 ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கினார்.  லாட்டரிக்காரரும் மகிழ்சியுடன் டிக்கெட்டைக் கொடுத்தார். 

நான், கொஞ்சம் முன்பு, மனம் ஊனமுற்றவர் என்று மனதில் எண்ணியது தவறோ என்றுத் தோன்றத் தொடங்கியது!  நான், லாட்டரிக்காரருக்குப் பரிந்து சீட் கொடுக்க வேண்டி சொன்னதை ஏதோ மாபெரும் உதவி செய்வது போல் நினைத்தேன்.  ஆனால், அவர் முகத்தில் அப்போது தோன்றிய சந்தோஷத்தை விட, அவரிடம் குண்டு மனிதர் 10 ரூபாய் நீட்டி டிக்கெட் வாங்கியதும் ஏற்பட்ட சந்தோஷம் அவர் முகத்தில் கூடுதலாக இருந்தது. 

இரண்டு செய்கைகளையும் தராசில் தூக்கிப் பார்த்த போது, கண்டிப்பாக அவருக்கு அந்த குண்டு மனிதர் செய்ததே பெரிதாகத் தோன்றி அவர் மீதுதான் மதிப்புக் கூடியிருக்கும். அவருக்கு அந்த ஒரு 15 நிமிடம் உட்கார்ந்து போவதை விட, ஒரு டிக்கெட் விற்று அதில் அவருக்குக் கிடைக்கும் கமிஷன் மிகவும் அவருக்கு அவசியமானதாகத் தோன்றியிருக்கலாம். அது போல், அந்த குண்டுமனிதருக்கு, உட்காரும் இடத்திலிருந்து எழுந்து நிற்பதை விட, அந்த ஊனமுற்ற மனிதரிடம் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கி, அவருக்கு உதவிசெய்து, அந்த உதவியின் மறைவில் 10, 15 நிமிடம் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து, குற்ற உணர்வு இல்லாமலேயே பயணம் செய்யலாம் என்றும் தோன்றியிருக்கலாம். 

லாட்டரி டிக்கெட் விற்பது, அவரது வயிற்றுப் பிழைப்பு!. அவர் நின்றும், நடந்தும், அலைந்தும் டிக்கெட் விற்கத்தானே செய்வார்! எனவே, இங்கு இருக்கையை அவர் தானம் செய்து ஒரு டிக்கெட் விற்றது அவருக்கு வெற்றிதானே! இந்த உலகம் வியாபார நோக்குடன் சுற்றும் போது, என் போன்ற மனிதர்களின் உணர்வுகள் எல்லா இடத்திலும் மதிக்கப்பட வாய்ப்பில்லைதானே! என்பதற்காக, நான் என்னுள் வரும் இது போன்ற நல்லுணர்வுகளத் தடையிட வேண்டிய அவசியம் இல்லையே! இனி பாத்திரமறிந்து பிச்சை இட வேண்டியதுதான்!

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

நான் ஏன் பிறந்தேன்......நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்?


     அன்று ஞாயிற்றுக் கிழமை. மதுரை மாநகரின் பெயரைத் தாங்கிய, மதுரைக் கல்லூரி வளாகம் அமைதி காத்தது. விடுதியில் தங்கியிருந்த நாங்கள் சோம்பலுடன் அந்த நாளை வரவேற்றோம்.  எல்லாம் முந்தைய இரவின் விளைவு!  இரவுக்காட்சி சினிமா பார்த்துவிட்டு, வெகு நேரம் விழித்திருந்து, கல்லூரியில் அன்று நடந்த விஷயங்களை எல்லாம் அரட்டை அடித்துவிட்டு, எல்லா பேராசிரியர்களின் தலையையும் உருட்டி விட்டுத் தூங்கச் சென்ற போது சரியாக 3 மணி. சொல்லப் போனால் அது இரவல்ல.  ஞாயிறின் விடியற்காலம்! ஆதலால், ஞாயிறு காலை ஜன்னல் வழி வந்த சூரியனின் உஷ்ணக் கதிர்கள்தான் எங்களை எழுப்பியது.

      நேரம் பார்த்தால் மணி 10. ஜன்னலுக்கு அருகில் இருந்த மரங்களில் காக்கைக் கூட்டம் தங்களது அடிக்குரலினால் ஊரையே கூட்டிக் கொண்டிருந்தன. ஒருவேளை காக்கை ஏதாவது இறந்து விட்டதோ என்று எட்டிப் பார்த்தேன். விடுதி மெஸ்ஸில் இருந்து உணவு அங்கு போடப்பட்டு இருந்ததைப் பார்த்தேன்.  இனி விடுதி மெஸ்ஸில் காலை உணவு கிடைக்காது என்று உறுதியானது! எனவே, நானும் கனகரத்தினமும், “செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும் என்று வள்ளுவர் எங்களுக்காகவே எழுதி வைத்து விட்டுப் போனதாக நினைத்து, வயிற்றிற்கு வஞ்சனை செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் வெளியில் செல்ல தீர்மானித்தோம்.

 இங்கு கனகரத்தினம் பற்றி ஒரு சில வரிகள் சொல்லியே ஆக வேண்டும்! அவன் விடுதி மாணவன் அல்ல.  மதுரை மேலமாசி வீதியில் இருந்த அவன் வீடு முகவரிக்கு மட்டும்தான். பெரும்பாலும், அவன் எங்களுடன் ஹாஸ்டலில் தான் இருப்பான். எங்களுக்கு ‘மாப்ளே, எனக்கு “மாப்பிள்ளை கனகு, உங்களுக்கு கனகு. இந்தக் கனகு தொலைந்து பலவருடங்கள் ஆயிற்று.  தற்போது தஞ்சாவூர் அருகில் இருப்பதாகக் கேள்வி.


      திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து எங்கள் கல்லூரி நுழைவாயிலின் அருகாமையில் முடிவடையும் மேம்பாலம். மேம்பாலத்தின் அந்தப்பக்கம் சுப்பிரமணியபுரம் என்றால், இந்தப்பக்கம் திருவள்ளுவர் பேருந்து நிலைத்திற்கும், ரயில்வே ட்ராக்குக்கும் இடையில் திடீர்நகர். இந்த்த் திடீர்நகரைத் தாண்டினால், திடீரென்று வரும் எங்கள் மதுரைக் கல்லூரியின் க்ரௌண்ட். மேம்பாலத்தின் அடியில், ரயில்வே ட்ராக்கின் அருகாமையில்தான் நாயர் டீக்கடை. ஹாஸ்டல் மெஸ்ஸின் டீயை விட நாயர் டீ அருமையாக இருக்கும்! கடையில் அன்று கூட்டம் அலை மோதியது. சிங்கிள் டீ க்கு ஒரு பிஸ்கட்/பன் இலவசம்னு நாயர் அறிவிச்சுருப்பாரோ?  நாயரிடம் கேட்டதற்கு,

     “யப்பா, ஏன் தம்பி என் பொழப்ப, இலவசம்னு சொல்லிக் கெடுக்கற?  பக்கத்துல ஜெய்ஹிந்துபுரத்துல கோயில் திருவிழா.  அதான் கூட்டம்!”  நாயர் என்றாலும், தமிழ் சங்கம் வளர்த்த  மதுரையில் பல வருடங்களாக வாழ்ந்ததாலோ என்னவோ, மதுரையின் தமிழ் காதல் இவரிடமும் தொற்றிக் கொண்டுவிட்டது போலும்.  தமிழ்  நன்றாகப் பேசுவார்.

     “ஓ!  அப்படியா!  உங்க பொழப்ப எல்லாம் கெடுக்க மாட்டோம் நாயரே! .....சரி...சரி 2 லைட் டீ போடுங்க நாயரே! என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த செய்தித் தாளைக் கையில் எடுத்துக் கொண்டு, பெஞ்சில் அமர்ந்தோம். டீக்கடை ரேடியோவில் பழைய பாடல், டி,எம்.எஸ், எம்.ஜி.ஆருக்காகக்க் குரல் கொடுத்து, “நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன் என்று கேட்டுக் கொண்டிருந்தார்! எங்களுக்கும் அது ஏனோ சற்று உரைத்த்து.  நாங்கள் எங்களுக்குள் கேட்டுக் கொண்டோம்.

     “மாப்ளே, பாட்டக் கேட்டியா?  நம்ம தலைவர் பாட்டு!  நாம என்னடா நல்லது பண்ணினோம், இந்த சமூகத்துக்காக?  நாட்டுக்காக?

     “ஆமாம்ல...நீ இப்பக் கேட்டதும்தான் தோணுது! நமக்கும் இப்பதான் இப்படிக் கேக்கணும்னு பொறுப்பு எட்டிப் பாக்குதோ?!

     “ஏதாவது நாம பொறுப்பா செஞ்சா என்ன?
“ம்....கண்டிப்பா செய்யலாம்...யோசிப்போம்  என்று பேசிக் கொண்டே டீயை குடித்துவிட்டு நடையைக் கட்டினோம். எதிர்த்தாற் போல் “சிம்லா ஸ்பெஷல் உலக நாயகனின்  படம் ரிலீசான சுவரொட்டி, மற்றொரு சுவரில் சூப்பர் ஸ்டாரின் “ரங்கா சுவரொட்டி  எங்களை ஈர்த்தது.  ஞாயிற்றுக் கிழமை வேறு! கேட்கணுமா! அதுவும் சினிமா ஆர்வம் உள்ள எனக்கு! நாங்கள் லீவை அனுபவிக்க நினைத்து, எந்தப் படத்திற்கு டிக்கெட் கிடைக்கிறதோ அதற்குப் போகலாம் என்று முடிவு செய்தோம். புது ரிலீஸ், கூட்டமாக இருக்குமே, அதுவும், கமல், ரஜனி படம் வேறு, டிக்கெட் கிடைக்குமா என்று யோசித்தவாறே வரிசையில் முண்டியடித்து நின்றோம். வேறு எந்த வரிசையிலாவது இது போல முண்டியடிப்பீர்களா என்று நீங்கள் கேட்கக் கூடாது!  ரஜனி படம்தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், சிம்லா ஸ்பெஷல் மதியக் காட்சிக்குத்தான் டிக்கெட் கிடைத்தது. (என்ன ஆச்சரியமா இருக்கா?  சம்பவம் நடந்தது 1982 ல). படம் முடிந்து வெளியில் வரும் சமயம் மாலையானதால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று விட்டு, ஹாஸ்டலை நோக்கிப் பொடி நடை போட்டோம். அப்பொழுதே மணி இரவு 7.30.  8.30 மணிக்குள் சென்றால்தான் இரவு உணவு கிடைக்கும்!  காலையிலேயே தவற விட்டுவிட்டோம்.  ‘இப்போதாவது, நேரத்திற்குச் சென்று விட வேண்டும் என்று வேகமாக நடந்தோம். வழியில் திடீர் நகரில், ரயில்வே ட்ராக்கின் அருகில் ஒரு 2 வயது குழந்தை அழுது கொண்டிருந்தது.


“என்னடா, இங்க பாரு தனியா அழுதுகிட்டிருக்கு இந்த பாப்பா.  ஒருவேளை கோயில் திருவிழாவுக்கு வந்த கூட்டத்துல பிரிஞ்சு வந்துருக்குமோ – இது நான்

“இருக்கலாம்...அங்க பாரு அந்தக் குழந்தை பக்கத்துல ஒரு பொம்பளை

அருகில் சென்றோம். அந்தப் பெண்மணியின் தோற்றம் சந்தேகதிற்கு உரியதாகவே என் கண்ணில் பட்டது. இப்போதெல்லாம் நாகரீகமாக இருப்பவர்கள் கூட ஏமாற்றுகிறார்கள்.! என்ற யோசனையில், குழந்தைக் கடத்தல் பற்றிய ஒரு காட்சியே மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்த வேளையில், அந்தப் பெண்மணி குழந்தையிடம் “கண்ணு, உன் பெயர் என்னமா? உன் வீடு எங்க இருக்குமா?  யார் கூட வந்த? என்று கேட்டுக் கொண்டிருந்தாள், ஏதோ அந்த 2 வயதுக் குழந்தை இவளுக்கு பதில் சொல்லுவது போல. எங்களைப் பார்த்ததும்,

“தம்பி, பாவம், இந்தக் குழந்தை வழி தவறி வந்திருச்சி போல.  யார் பெத்த புள்ளையோ?  பெத்தவங்க எப்படி தவிச்சுகிட்டு இருக்காங்களோ?  என்று சொல்லிவிட்டுக் குழந்தையிடம் திரும்பினாள்.

“வா பாப்பா, எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன் என்று தன் கையிலிருந்தச் சாக்கலேட்டைக் குழந்தைக்குக் கொடுத்தாள்.  நானும், கனகுவும் உஷாரானோம். “ஒருவேளைக் குழந்தைகளைக் கடத்தும் பெண்மணியோ என்று அவள் காது படாமல் பேசிக் கொண்டு, பக்கத்துக் கடைகளில் விசாரித்தோம்.  எல்லோருமே அப்போதுதான் கவனித்தது போல பதில் சொன்னார்கள். பதில்கள் எதுவுமே சாதகமாகவோ, திருப்திகரமாகவோ இல்லை.  என்ன செய்வது என்று யோசித்தோம்.

“படிச்சவங்கதானே நீங்க! ஏதாவது செய்யுங்க! எங்களுக்கும் காலையில் டீக்கடையில் கேட்ட பாடலும், நாங்கள் பேசிக் கொண்டதும் நினைவுக்கு வர,

“மாப்ளே, நாம ஏன் குழந்தையக் கூட்டிக் கொண்டு பக்கத்துல இருக்கற போலீஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளையின்ட் கொடுக்கக் கூடாது?  அவங்க குழந்தையோட அம்மா, அப்பாவக் கண்டுபிடிச்சு சேர்த்துடுவாங்கல.  கனகுவும் சரியென்று தலையசைக்க, நாங்கள் குழந்தையை அந்தப் பெண்மணியிடம் இருந்து வாங்க முயற்சித்தோம்.

“நாங்க குழந்தைய பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் ஒப்படைச்சுடறோம். அவங்க எப்படியாவது கண்டுபிடிச்சு சேர்த்துடுவாங்க

“இந்தா, என்ன குழந்தைய நைசா கடத்திப்புட்டு போகலாம்னு பாத்திங்களாடா. நான் தரமாட்டேன். நான் அதோட அம்மா. அப்பாவக் கண்டுபிடிச்சு ஒப்படைச்சுக்கறேன்!

“ஐயோ! நாங்க பக்கத்துல இருக்கற காலேஜ்ல படிக்கற பசங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அருகில் ஒரு சிறிய கூட்டம் கூடத் தொடங்கியது.  அதில் எங்களுக்குப் பரிச்சயமானவர்களும் இருந்ததால்

“நீ யாரும்மா?  உன்ன இந்தப் பக்கம் பாத்ததே இல்ல.  இந்தத் தம்பிங்ககிட்ட வம்பு வளர்க்கற...பேசாம குழந்தைய இந்தத் தம்பிங்ககிட்ட கொடு....அவங்க இங்க படிக்கற பசங்கதான். எங்களுக்குத் தெரிஞ்சவங்கதான்....அவங்க பாத்துப்பாங்க..நீ உன் வேலையப் பாத்துட்டு போ...இல்ல போலீஸ்ல பிடிச்சுக் கொடுப்போம்  என்று சொல்லி எங்களுக்குச் சப்போர்ட் கொடுக்க, நாங்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் B-2  போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றோம். அங்கு 3 போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருந்தார்கள். 

“படிக்கற பசங்க நீங்க உங்க வேலையப் பார்த்துட்டு போக வேண்டியதுதானே?  குழந்தைய இப்ப நாங்க என்ன பண்ண? என்று அங்கலாய்த்தனர்.

“என்ன சார்...போலீஸ் நீங்களே இப்படிச் சொன்னா எப்படி?  நாங்க மக்கள் எல்லாரும் உங்க பாதுகாப்ப நம்பித்தானே இருக்கோம், சார்...பாவ்ம் இந்தக் குழந்தை...அதுவும் பெண் குழந்தை சார்....பக்கதுல நடக்கற திருவிழாக்கு வந்த ஏதோ ஒரு குடும்பத்துல இருந்து பிரிஞ்சு வந்துருக்குமோனு சந்தேகமா இருக்கு சார்...நீங்கதான் கண்டுபிடிச்சு இந்தக் குழந்தைய அவங்க அம்மா, அப்பாகிட்ட சேர்க்கணும் சார்.


“என்ன, எழவோ...இதெல்லாம் தலைவேதனை பிடிச்ச வேலை.  இங்க கூட்டிட்டு வந்து நம்மள ரோதனை பண்ணுறானுங்கஎன்று அவர்கள் முணுமுணுத்தாலும், நாங்கள் எப்படியோ அவர்களிடம் பேசி அவர்கள் எங்கள் குலம், கோத்திரம் எல்லாம் எழுதி வாங்கிக் கொள்ள, குழந்தையை அங்கு விட்டுவிட்டு நகரத் தொடங்கினோம். மனசில் ஒரு சமாதானம்.  ஏதோ நல்லது செய்துவிட்ட ஒரு மகிழ்வு, திருப்தி.  ஆனால், அது சிறிது நேரம்தான்.

வழியில் வந்த ஒரு சிலர், அதோ அந்த 2 ஆளுங்கதான்.  பிள்ளையக் கொண்டுட்டு வந்தது.  பிடிங்கடா அவனுங்கள என்று கத்திக் கொண்ட எங்களை நோக்கி ஓடி வரத் தொடங்கினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  என்ன நடக்கிறது இங்கு என்று யோசிக்கும் முன்னர்,


“டேய் குழந்தைய எங்கடா ஒளிச்சு வைச்சுருக்கீங்க...சொல்லுங்கடா உண்மைய...இல்ல இங்க ஒரு கொலையே விழும்..என்று கத்திக் கொண்டே இரண்டு, மூன்று பேர் எங்கள் மீது பாய்ந்து அடியும், உதையுமாகக் கொடுக்கத் தொடங்கினர்.

“ஐயோ! அம்மா, ஏண்டா, எங்கள எதுக்காக இந்த அடி அடிக்கிறீங்க?  நாங்க குழந்தையக் கடத்தல..நம்புங்க...ஏம்பா இப்படிப் போட்டு மொத்தி நையப் புடைக்கிறீங்க!

.நாங்கள் சொன்னது எதுவும் அவர்கள் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. வாயில் ஏதோ உப்பு கரிப்பது போல் இருந்தது.  கடைவாயில் ரத்தம். சட்டைக் கிழிந்தது.

“டேய்!. உன் பேச்சைக் கேட்டேன் பாரு... இது நமக்குத் தேவைதான்......நாம நல்லது செய்யணும்னு நினைச்சுக் குழந்தையக் கொண்டு போயி போலீஸ் ஸ்டேஷன்ல விடப் போக...பாரு ..இப்ப நமக்கு நல்லா கிடைச்சுருக்கு பரிசு!......இந்தச் சட்டைக் கிழிசலும், ரத்தமும்தான்...ஐயோ உடம்பு வலி தாங்கலடா.....இப்படிப் போட்டு அடிக்கறாங்களேடா கனகு அந்த களேபரத்திலும் புலம்பினான்.

அவன் புலம்பியது அவர்கள் செவியில் விழுந்தது போலும், “இங்க இருக்கற போலீஸ் ஸ்டேஷன்லயா? பொய்யா சொல்றீங்க?  மரியாதையா நடங்கடா ஸ்டேஷனுக்கு என்று சொல்லி எங்களை அந்தக் கோலத்திலேயே ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றனர்.   அங்கு சென்றதும் குழந்தையைப் பார்த்த மாத்திரத்தில் எங்களை விட்டுவிட்டு, ஓடிச் சென்று, அந்தக் கும்பலில் இருந்து அப்பா, மாமா, சித்தப்பா என்று குழந்தையைத்  தூக்கிக் கொஞ்சத் தொடங்கினர். குழந்தையும் அவர்களைக் கண்டதும் அவர்களை நோக்கி ஓடத் தொடங்க.... போலீசார் அவர்களைக் கண்டித்தனர்.

“கூட்டதுல இப்படியா அஜாக்கிரதையா தவற விடுறது?  ஜாக்கிரதையா இருக்கத் தெரியாதா? இனி இந்த மாதிரி அஜாக்கிரதையா இருக்காதீங்க...என்று கண்டித்து ஒரு பெரிய லெக்சரே கொடுத்தார்கள். அவர்களிடமும் அவர்கள் குலம்,கோத்திரம் எல்லாம் வாங்கிக் கொண்டு, குழந்தை அவர்களுடைய குழந்தைதான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டனர்.

நேரம் 9.30 ஆகியிருந்தது. போயே போச்சு! இரவு உணவும்! நையப் புடைத்தார்களே தவிர எங்களை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை! நாங்கள் அங்குத் தேவையில்லாத ஆட்களாக மாறியதால் நடந்தோம், கல்லூரியை நோக்கி, ஹாஸ்டலில் போய் சகாக்களிடம் எங்கள் வீர சாகசத்தின் மானம் கப்பலேறாமல் இருக்க என்ன பொய் சொல்லி சாமாளிப்பது என்று சிந்தித்துக் கொண்டே!.