விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஜனவரி, 2017

இளைய தமிழகமே/இந்தியாவே வா வா வா!!!

Image result for youngsters protested at marina

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா

எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா

ஏறு போல் நடையினாய் வா வா வா


வந்தாய்! திரண்டாய்! கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் செய்தாய்! வென்றாய்! வாழ்த்துகிறோம்! சல்லிக்கட்டைப் பற்றிப் பேசப் போவதில்லை. அறப்போராட்டம் வெல்லும் என்பதை உறுதிசெய்துவிட்டீர்கள்! இனி நம் நாடு இளைஞர்கள் கையில் ஒளிர்ந்திடும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது! இளைஞர்கள் கையில் ஒப்படைக்கலாம்! ஏனென்றால் அவர்கள் அரசியல்வாதிகளையும், ஜிகினாக்களையும் புறம்தள்ளி வெற்றி கண்டுள்ளார்கள்!


இது முடிவல்ல! இதுதான் தொடக்கம்! நாம் இனி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர வேண்டும். ஏறு தழுவுதல் போராட்டம் என்பதை விட அதன் திரைமறைவில் இருக்கும் நல்ல காரணங்கள், மற்றும் அரசியல் பற்றி முந்தைய பதிவில் கோடிட்டுச் சொன்னதாலும், பொதுவெளியில் பேசப்படுவதாலும் இங்கு நான் சொல்லப் போவதில்லை. அதற்குக் காண்செவிக் குழு இருக்கிறது!


இந்தியா விவசாய நாடு என்றும், கிராமங்கள் சார்ந்த நாடு என்பதும் நாம் எல்லோரும் அறிந்ததே. முன்பெல்லாம் வயல்களை வைத்திருந்தோர் வீட்டில் கண்டிப்பாக மாடுகள், காளைகள் இருந்துவந்தன. விவசாயம், கால்நடை வளம், மீன் வளம், நீர் வளம், மனித வளம் எல்லாம் பின்னிப் பிணைந்த ஒன்று என்பது நாம் எல்லோரும் அறிந்ததே!


போராடிய இளைஞர்கள் பலரும் விவசாயக் குடும்பங்களில் இருந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அல்லாதவர்களும் போராடினார்கள், ஆதரவு அளித்தார்கள். சமூக வலைத்தளங்களும்,. பிற மாநிலத்தவர்களும், வெளிநாட்டுத் தமிழர்களும்,  ஆதரவு அளித்தார்கள். உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!


பால் உற்பத்தியில் நடக்கும் ஊழல்கள் அதனால் உடல்நலத்திற்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்பதெல்லாம் ஒரு சில வருடங்களுக்கு முன்னரே பொதுவெளியில் பேசப்பட்டாலும் தீவிரமாகப் பேசப்படாததற்குக் காரணம் அரசியல்! நம் நாட்டில் எதில்தான் அரசியல் இல்லை? இப்போதேனும் அந்த அரசியல் இல்லாமல் போராட்டம் முன்வைக்கப்பட்டதற்குப் பெருமைதான்!


1970களுக்குப் பிறகுதான் நம் நாட்டின் அரசே நம் நாட்டிற்குள் அந்நிய மாடுகளை உள்ளே இறக்கினார்கள். அதன் பின் தொடங்கியது கால்நடைத் துறையில் ஒரு பெரிய எதிர்மறை மாற்றம். அதை எல்லாம் நீங்கள் கூகுள் தேவனை கேட்டால் அள்ளித் தருவார்.


நம் நாட்டுக் காளைகளால் ஏற்படும் இனப்பெருக்க நன்மைகள், நாட்டுமாட்டின் பால் நன்மைகள் என்று எல்லாம் பேசி, காளைகளுக்காகவும், மாடுகளுக்காகவும், உழவர்களுக்காகவும், கலாச்சாரத்திற்காகவும் போராடியது நன்மைக்கே என்றாலும் அதற்கும் அப்பால் நாம் சிந்திக்க வேண்டிய விசயங்கள் பல உள்ளன. இதோ நான் சொல்லப் போவதை, இப்போராட்டத்தினால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் காரணத்தினால், அதன் பாகமாக ஒரு வேண்டுகோளாக எடுத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் முன்வைக்கிறேன்.


நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தின் நிலைமை இன்று நலிவடைந்ததற்குக் காரணங்களை நான் இங்குச் சொல்லத் தேவையில்லை. அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை எல்லோருமே அறிவோம். உலகமயமாக்கலும், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் தாங்கள் சார்ந்துள்ள பெருமுதலைகளுக்காக, சுயநலத்திற்காக, நம் நாட்டிற்குள் அடிப்படைத் தேவைகளான உணவு, விவசாயம், மருத்துவம் போன்றவற்றில் தேவையில்லாமல் பன்னாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய அனுமதித்ததே முதற்காரணம்.


பல விவசாய நிலங்கள் விற்கப்பட்டு இன்று பல மாடிக் கட்டிடங்கள் எழுந்து நிற்கின்றன. இப்போது கிராமங்களில் விவசாயம் செய்யும் தலைமுறையினருக்கு அப்புறம் விவசாயம், கால்நடையின் எதிர்காலம் என்ன? அடுத்த தலைமுறை எல்லாம் பெரு நகரங்களிலும், சிறு நகரங்களிலும், வெளிநாட்டிலும் வயிற்றுப் பிழைப்புக்காக இருக்கிறீர்கள். நகரங்களும் நகரத் தொடங்கி கிராமங்களை எட்டும் நிலையில் இருக்கின்றன.


விவசாயக் குடும்பத்தில் உள்ளவர்களும் சரி, அல்லாதவர்களும் சரி உங்கள் வாழ்க்கைப் பாதையே மாறியிருக்கிறது இல்லையா? மீண்டும் கிராமம் சென்று விவசாயம் செய்து காளைகள் வளர்க்க முடியுமா? யோசிக்க வேண்டிய விசயம் இல்லையா? முடியாது என்ற நிலையில் இப்போது இருக்கும் விவசாயிகளுக்கு உதவலாம், எதிர்கால உழவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.


குரல் கொடுத்து ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு பெற்றதோடு நிறுத்திவிடாமல், அடுத்தக் கட்டமாக கிராமத்து வளம், கிராமத்து மனிதவளம் பெருகிடவும், குடிசைத் தொழில்கள் தழைத்திடவும் நாம் உதவலாம்தானே! மாணவ இளைஞர்கள் ஆற்றல் இப்போது இவ்வளவு திரண்டிருக்கும் போது, நீங்கள் நினைத்தால் அதையும் சாதிக்க முடியும்தானே? இப்போது எப்படி அரசியலையும், ஜிகினாக்களையும் உள்ளே வரவிடாமல் போராடினீர்களோ அப்படி நீங்கள் நினைத்தால் செய்ய முடியாதா என்ன! யோசியுங்கள் இளைய சமுதாயமே! உங்களால் முடியும்!


காந்தியப் பொருளாதாரம் பற்றி எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள் என்று தெரியவில்லை. பொருளாதாரம் கற்ற மாணவர்கள் கண்டிப்பாக காந்தியப் பொருளாதாரம் பற்றி அறிந்திருப்பார்கள். காந்தியப் பொருளாதாரம் என்பது சுயசார்புப் பொருளாதாரம். கிராமங்கள், குடிசைத் தொழில்கள், உழவுத் தொழிலுக்கும் மற்றும் தங்கள் பொருட்களைத் தாங்களே விளைவிக்கும், தொழிலாளியின் உழைப்பிற்கு மரியாதை செலுத்தும், முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதாரம். அப்பொருளாதாரம் இயந்திரத்திற்கு எதிரி அல்ல. இயந்திரம் மனிதனை ஆளத் தொடங்கிவிட்டால், தற்சார்பை இழந்து விடும் அபாயம், மற்றும் மனித நேயம் எல்லாம் மறைந்துவிடும் என்றுதான் எச்சரிக்கிறது.


அந்தப் பொருளாதாரத்தை நாம் கடைப்பிடித்திருந்தால், சிறிதளவேனும் கடைப்பிடித்திருந்தால், இன்று நாம் பால் அரசியல் பேச வேண்டி வந்திருக்காது என்பது உறுதி. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டி வந்திராது. நீங்கள் போராடியிருக்க வேண்டிய அவசியே இருந்திருக்காது. நமது முதல் பிரதமருக்குக் காந்தியப் பொருளாதாரத்தில் காந்தியுடன் கருத்து வேறுபாடு இருந்தது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நமது அடிப்படைத் துறையான விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், தொழில்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தவறில்லை. ஆனால் அதன் பின் ஒவ்வொரு திட்டத்திலும் தொழில்துறைககன முக்கியத்துவம் அதிகரித்து, வேளாண்மை பேசப்பட்டாலும் நடைமுறையில் அதன் முக்கியத்துவம் செயலாக்கத்தில் இல்லாமல் போனது.


இன்று நாம் தொழில்நுட்பத்தில் பல எல்லைகளைத் தொட்டுவிட்டோம். தொழில் நுட்பத்தில் வல்லவர்களாகிய இளைய சமுதாயமே நீங்கள் தொழில்நுட்பத்தை அளவோடு காந்தியப் பொருளாதாரத்தில் உட்படுத்தி, மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் இயற்கை விவசாய நுட்பங்களை உட்படுத்தி, நீர்வள மேம்பாட்டை உட்படுத்தி, கால்நடை நிபுணர் திரு சிவசேனாபதி அவர்களின் வழிநடத்தலில்  கிராமங்களைத் தற்சார்பு உடையதாக மாற்ற முனையலாம். நீங்கள் நினைத்தால் செய்து காட்ட முடியும்.


காந்தியப் பொருளாதாரம் பற்றி நான் இங்கு ஆழமாகப் பேசவில்லை. ஏனென்றால் 60 வருடங்களுக்கும் மேலாகச் சீரழிக்கப்பட்ட நம் தமிழகத்தையும், நாட்டையும் ஒரே நாளில் சீரமைத்திட முடியாது! பல வருடங்கள் ஆகும்! இப்போது விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில் அதையும் தொடங்கலாமே என்ற ஒரு ஆதங்கம். 


இப்போது நம் அரசியல்வாதிகளுக்கு இளைஞர்களின் மற்றும் மக்களின் ஆற்றல் நன்கு தெரிந்துவிட்டது. இனி அவர்கள் தவறு செய்தால் போராடிய மாபெரும் இயக்கமே இருக்கிறது என்று அறிந்துவிட்டார்கள். இந்த அறப்போராட்டம் அவர்களைச் சற்றுப் பயம் கொள்ள வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. 


எனவே, தமிழகம், சல்லிக்கட்டுடன் நின்றிடாமல் கிராமங்களும் இயற்கை உழவும், கால்நடையும், மீன்வளமும், இயற்கையும், மனித வளமும் தழைத்து, கிராமங்கள் தற்சார்பு உடையதாக மாறினால், தமிழகமே மாறிவிடும் என்பதால், மாற்றிடவும், தமிழகம் நாட்டிற்கே முன்னோடியாக அமைந்து, நாட்டையும் மாற்றிடவும், அரசின் உதவியைக் கோரியோ, போராடியோ வாங்குங்கள், ஆனால் அரசியலை நுழைத்துவிடாமல், அடுத்தக் கட்டத்திற்குப் பயணிப்பீர்! புதியதோர் பாதை வகுத்திடுவீர்! இளைஞர்களே! நாங்களும் பயணிப்போம்!


(போராட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சங்கள் பல இருந்தும், “Most remarkable thing about the jallikattu protests is the young women staying at the beach with no fear of harassment. Delhi should learn” என்று என்டிடிவி எடிட்டோரியல் டைரக்டர் சோனியாசிங்க் ட்வீட்டியதாக வாட்சப்பில் வந்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது! பாராட்டுகள் இளைஞர்களே!

 


-------கீதா

படம் இணையத்திலிருந்து.






வெள்ளி, 1 ஜூலை, 2016

BGR-34 நீரிழிவு நோயைத் தடுக்கும் ஆயுர்வேத மருந்தும், நீரிழிவு நோயும்

Image result for bgr 34
நம் சகோ மதுரைத் தமிழன் இந்த மருந்தைக் குறித்த  ஒரு நல்ல அறிமுகப் பதிவு போட்டிருந்தார். நீரிழிவு நோயின் தலைநகரம் என்று சொல்லும் நிலைக்கு உள்ளான நம் நாட்டிற்குத் தேவையான ஒன்றுதான், நமது மத்திய அரசின் CSIR சமீபத்தில் வெளியிட்ட BGR 34 எனும் நீரிழிவு நோய்க்கான/ஆண்டி டயபட்டிக் ஆயுர்வேத மருந்து. நல்ல மருந்தாகவே இருந்தாலும் அதற்கு முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை.

இந்த மருந்தைப் பற்றி அறிந்ததும் என் மகன் கேட்ட கேள்விகள். இதனை மனிதர்களிடம் உபயோகித்துப் பார்த்தார்களா? எத்தனை பேரின் சுகர் லெவல் குறைந்தது. ஆய்வு நடத்தப்பட்டதா? எந்த ஒரு மருத்துவம் பற்றிய ஆய்வும் பல நிபுணர்களின் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டப் பிறகே, அதுவும் வெளிப்படையாக அந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டு அது பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே வெளியிடப்பட வேண்டும். இதைப் பற்றிய ஆய்வுப் பேப்பர்கள், விவாதப் பேப்பர்கள் இருக்கிறதா? என்றும் கேட்டான்.

நல்ல கேள்வி. நான் கூகுளில் தேடியவரை நம்பள்கி, மதுரைத் தமிழனின் தளத்தில் கொடுத்திருந்த லிங்க் மட்டுமே கிடைத்தது. தகவல்கள் இருந்தனவே அல்லாமல், ஆய்வுப் பற்றிய விரிவான குறிப்புகள் எதுவும் இல்லை. ஒரு வேளை என் அறிவுக்கு எட்டவில்லையோ என்றும் தெரியவில்லை.

நம்பள்கி அவர்கள் கொடுத்த லிங்கில் நான் அறிந்தவை, இந்த மருந்து ஒரு குளிகை ரூ 5 என்றாலும், 2 காலையிலும், 2 மாலையிலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அப்படியானால் ஒரு நாளைக்கு ரூ 20 செலவாகும் இது மட்டும் எடுத்துக் கொண்டால். அலோபதி மருந்துடன் எடுத்துக் கொண்டால் இன்னும் ரூ 500 கூடலாம். அப்படிப் பார்க்கும் போது இந்த மருந்து விலை குறைவு என்று சொல்வதற்கில்லை.

பக்க விளைவுகள் இருக்காது என்று சொல்லுகின்றார்கள். அது சரியாக இருக்கலாம். ஆனால், அலோபதியிலும் பக்க விளைவுகள் என்று பெருவாரியாகச் சொல்லுவதற்கில்லை. மெட்ஃபார்மின் வகைகள் ஒரு சிறிய வயிறு உப்பலை ஏற்படுத்துகிறது என்று பொதுவாகவே சொல்லப்படுகிறது. எனக்கும் உண்டு.

முதலில் நாம் அறிய வேண்டியது என்னவென்றால், குளுக்கோஸ் டாலரன்ஸ் GTT. ஒரு சில நீரிழிவு நோய் மருத்துவமனைகள், மருத்துவர்கள் மட்டுமே இந்தச் சோதனையைச் செய்யச் சொல்லுகின்றனர். இதைக் கண்டறிந்தால் சர்க்கரையை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் சக்தியைப் பெற்றிருக்கிறதா, எவ்வளவு, நாம் நீரிழிவு நோய்க்காரரா, நாம் நீரிழிவு நோய் வரும் வட்டத்திற்குள் சிக்கி இருக்கிறோமா என்பது தெரிந்துவிடும்.

ஆனால் பல மருத்துவர்கள், மருத்துவமனைகள் வெறும் வயிற்றிலும், சாப்பாட்டிற்குப் பிறகு 1 ½ , 2 மணி நேரத்திற்குப் பிறகான பரிசோதனையைச் செய்யச் சொல்லுகின்றனர். இந்தச் சோதனை தற்காலிகமானதே. இதை வைத்து ஒருவரை நீரிழிவு நோய்க்காரார் என்று தீர்மானிக்க முடியாது. ஆனால், வரும் வாய்ப்பு உள்ளதா என்று ஓரளவு யூகிக்கலாம். நீரிழிவு நோய்க்காரார்கள் இந்தப் பரிசோதனையை நன்றாக டபாய்க்க வழி உண்டு. டபாய்க்கவும் செய்கிறார்கள். இது தங்களையே தாங்கள் ஏமாற்றிக் கொள்வதாகும்.

அடுத்து 3 மாத சர்க்கரை அளவு.  இதையும் ஒரு சிலர்தான் பரிந்துரைக்கிறார்கள். இதுவும் முக்கியமான பரிசோதனை. நாம் மூன்று மாதங்களில் செய்த திருட்டுத்தனங்கள் தெரிந்துவிடும். ஆனால், இதையும் டபாய்க்கலாம் அதற்கான சூத்திரங்கள் இங்கு பொதுவெளியில் பேச முடியாது. அது நல்லதல்ல. இதுவும் தங்களையே ஏமாற்றிக் கொள்வதாகும்.

ஒவ்வொருவருக்கும் இன்சுலின் சுரப்பும், மெட்டபாலிசமும் வேறுபடும். ஒரு சிலருக்கு என்னதான் இன்சுலினே எடுத்துக் கொண்டாலும், குறைந்து கூடி என்று வேரி ஆகும். இன்சுலின் டிப்பெண்டன்ட் ஆகாமல் மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கே கூட ஒருவர் மூன்று வேளை, ஒரு சிலர் இரு வேளை, ஒரு சிலர் ஒரு வேளை என்று சாப்பாட்டுடன், சாப்பிட்ட பிறகு, சாப்பிடும் முன், 1/2 மணி நேரம் முன், பின் என்று எத்தனையோ இருக்கிறது.

ஒவ்வொருவரது வாழ்க்கை முறையும் கூட இதில் உட்படும். பலரும் எனர்ஜி பர்ன் செய்ய எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் வெறும் மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டு, உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல், இல்லை உடற்பயிற்சி செய்தாலும் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல், “நான் சர்க்கரை நோயாளி” என்றும் "எனக்குச் சர்க்கரை குறையவே மாட்டேன் என்கிறது” என்றும் பெருமையாகச் சொல்பவர்களையும் பார்க்க நேரிடுகிறது.

இப்படி இருக்க இந்த மருந்து எல்லோருக்கும் பொதுவாக, ஒரே அளவாக எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படி எடுத்துக் கொண்டாலும், அதை நாம் அலோபதியுடன் எடுத்துக் கொள்ளும் போது இதன் பலனை எப்படி அறிய முடியும்.?

நம்பள்கி கொடுத்த லிங்கில் பலரும் இதை அலோபதியுடனே எடுத்துக் கொள்வதாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். 3, 4 மாதம் எடுத்தும் பலன் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால் ஆயுர்வேத மருந்துகள் அலோபதி போன்று உடனடி நிவாரணம் தராது. ஒரு சில காலம் கழித்தே அதன் பலன் அறிய முடியும். இந்த மருந்தைத் தனியாக எடுத்துக் கொண்டு பலன் அறிய வேண்டும். அதுவும் முழுமையான பலனைக் குறைந்த காலத்தில் அறிய முடியாது. அந்தச் சுட்டியில் 1000 பேருக்குப் பரிசோதனை செய்து பலன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த ஆயிரம் பேரில் எத்தனை பேர் இன்சுலின் டிப்பெண்டன்ட்? இதைப் பற்றிய தகவல்கள் இல்லை. பொதுவாக “நீரிழிவு நோயாளிகள்” என்று சொல்லிவிட முடியாது. சிலர் பார்டரில் இருந்தால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மட்டுமே பரிந்துரைக்கப்படும்.

மட்டுமல்ல 1000 என்பது மிகவும் குறைவு. நீரிழிவு நோயே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் இருக்கும் பொது மேற்கொண்ட பரிசோதனைகளை, முடிவுகளை விவரமாக வெளியிட வேண்டும்.

இங்கு ஒரு சிறு உதாரணம். நான் சென்ற 20 வருடங்களுக்கும் மேலாக நான் நீரிழிவு நோயாளி. மாத்திரை மட்டுமே. 10 வருடங்களுக்கு முன் என் இடது கண்ணில் ஒரு மிகச் சிறிய புள்ளி போன்ற இடத்தில் மட்டும் சிறிது நிழல் போல மறைக்கும். பரிசோதனையில் தெரிந்தது டயபட்டிக் ரெட்டினோபதி என்று.  ரெட்டினாவைப் பாதிக்கவில்லை. பார்வையில் கோளாறு இல்லை.
Image result for 24 hrs diabetic monitor
எப்படி இது? என் எல்லா சர்க்கரை அளவும் மிகவும் கட்டுப்பாட்டிற்குள்தானே இருக்கிறது? என்று மருத்துவரிடம் வினவிய போது அவர் சொன்னது இதுதான். நாம் என்ன 24 மணி நேரமுமா சர்க்கரை அளவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்? எப்போது அது ஏறுகிறது என்று நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. நாம் இடையிடையில் விருந்துச் சாப்பாடும், இனிப்புகளும் சாப்பிடுவது இல்லையா? அப்படி ஏதேனும் ஒரு சமயத்தில் கண்ணைப் பாதித்திருக்கும் வாய்ப்பு உள்ளது. (இப்போது மேலை நாடுகளில் நம் உடம்புடன் பொருத்தப்படும் கைக்கடிகாரம் போன்று சர்க்கரை மானிட்டர் வித விதமாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள என் கசின் வாங்கித் தரட்டுமா என்றான்? அதை அணிந்து கொண்டு டென்ஷனுடன் அட போடா என்றுவிட்டேன்)

3 வருடங்களுக்கு முன் எனக்கு நடந்த அறுவை சிகிச்சைக்கு முன் எடுக்கப்பட்ட ரத்தத்தில் எனது சர்க்கரை மூன்று மாத ஆவரேஜ் "நான் டயபடிக் ரேஞ்சில்" இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும், எனது சர்க்கரை அளவு மருந்து இல்லாமலேயே அப்படித்தான் இருந்தது. இந்தப் பரிசோதனைகள் தற்காலிகமானவையே. எனக்கு குளுக்கோஸ் டாலரன்ஸ் இல்லை என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டதே. நானும் கள்ளத்தனங்கள் செய்வதுண்டு. ஆனால், அதற்கு ஏற்றபடி அன்றைய உணவு முறை உடற்பயிற்சி எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டுவிடுவேன்.

நான் என் அனுபவத்திலிருந்து அறிந்தது என்னவென்றால், இது என்னையே நான் பல முறை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுச் சொல்வது.

என்ன மருந்து எடுத்துக் கொண்டாலும், மனதை அமைதியாக வைத்துக் கொண்டு உணவிலிருந்து, உடற் பயிற்சி வரை, ஸிஸ்டமாட்டிக்காக இருந்தால், குறித்துக் கொள்ளுங்கள் மிக மிக ஒழுங்கு முறையுடன் கள்ளத்தனங்கள் இல்லாமல், (ஒரு சிலர் நன்றாக வளைத்துக் கட்டி இனிப்பு, ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை எடுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்) இருந்தால் சர்க்கரை அளவை நன்றாகப் பராமரிக்க முடியும்.  நீரிழிவு நோய் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே. கட்டுப்பாட்டிற்குள் இருந்தால், பிற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். வாழ்க்கையைக் கட்டுப்பாட்டோடு அனுபவியுங்கள்!

------கீதா

படங்கள் இணையத்திலிருந்து.  (நான் மருத்துவரும் அல்ல நிபுணியும் அல்ல. இந்தப் பதிவு என் அனுபவத்தில் அறிந்ததைப் பகிர்ந்துள்ளேன்.)

புதன், 13 ஏப்ரல், 2016

அனோஸ்மியா


உலகில் எத்தனயோ கோடி மக்கள் ஒரு வேளை உணவு கூட இன்றித் தவிக்கும் வேளையில், நம்மில் பலரும் உணவைக் குறை சொல்லிக் கொண்டும், வீணாக்கிக் கொண்டும் இருக்கின்றோம். உணவைச் சுவைத்து அனுபவித்து உண்ணுவது நல்லதுதான் என்றாலும் சுவைக்கு அடிமையாகி நாம் வீணாக்கும் உணவின் மணமே தெரியாமல் போனால்? சற்று யோசிப்போமே..

சாப்பிடுவது எதுவாக இருந்தாலும் (சைவம்), அதன் சுவையை, மணத்தை வைத்தே அதில் என்னவெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடித்து அதைச் செய்துவந்தவள். அது வரை அவள் சுவைத்து மகிழ்ந்திருந்த உணவுகள் எல்லாவற்றின் மணம், குணம், எல்லாம் தற்போது அவளது மூளையின் நினைவு ந்யூரான்களில் மட்டுமே.

நான்கு வருடங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றாள். எப்போதுமே இரு பக்கம் கால்கள் இட்டு அமர்பவள் (குதிரையில் அமர்வது போல) அன்று ஒரே பக்கமாக அமர்ந்திருந்தாலும் நன்றாகப் பிடித்துக் கொண்டும்தான் சென்றாள். ஒரு பெரிய வேகத்தடையில், நண்பர், வண்டியை ஏற்றி இறக்கும் போது அவள் கீழே விழுந்தாள். விழுந்தது மட்டுமே அறிவாள். சுவாசம் இருந்தது. நினைவில்லை. பின்பக்கத் தலையில் அடி. காயங்கள் எதுவுமில்லை. (பின்னால் அமர்பவரும் தலைக்கவசம் அணிவது அவசியம்)

3 மணி நேரத்திற்குப் பிறகு சிறிதாக நினைவு வந்தபோது அரசு மருத்துவமனையில் படுத்திருந்ததும், சுற்றியும் வீட்டின் அருகில் இருக்கும் அனைவரும் அங்கு குழுமியிருந்ததும் நிழலாகத் தெரிந்தாலும், மீண்டும் கண் அயர்ந்துவிட்டாள்.

தலையை எக்ஸ்ரே, ஸ்கான் செய்து பார்த்ததில் எல்லாம் சரியாகவே இருந்தது. மருத்துவரின் கேள்விகளுக்குத் தெளிவாகவே தான் விழுந்தவிதம், விலாசம், தன்னுடன் இருந்த பெண் என்று எல்லாமும் சொல்ல முடிந்தது.

கழிவறைக்குச் சென்ற போது, “அட! பரவாயில்லையே! அரசு மருத்துவமனையில் கூட கழிவறை சுத்தமாக வாடை எதுவும் இல்லாமல் இருக்கிறதே!” என்று வியக்க, அவளுடன் இருந்த பெண்ணோ “இல்லையே தெரியுதே” என்று சொல்லி குழப்பமாகப் பார்த்தாள்.

சுய உணர்வுடன் இருந்தாள். ஆனால் எந்த உணவின் மணமும் தெரியவில்லை. அப்போதுதான் தெரிந்தது அல்ஃபேக்டரி நெர்வ் பாதிக்கப்பட்டிருப்பது. “அனோஸ்மியா”.


மணம் முகர்ந்து அறியும் சக்தியை இழந்துவிட்டாள். நல்லகாலம் அவளுக்குச் சுவை அறியும் திறன் (சுவை அரும்புகள்) பாதிக்கப்படவில்லை. சரி அப்படியென்றால்?

Olfactorynerve2.jpgHead olfactory nerve.jpg
olfactory nerve the first cranial nerve; it is purely sensory and is concerned with the sense of smell. 
நாம் சாப்பிடும் உணவின் மணம், நமக்கு முகர்ந்து அறியும் சக்தியினால்தான் தெரிகின்றதே அல்லாமல், அது நாவிலுள்ள சுவை அரும்புகளினால் அல்ல. என்றாலும் சுவையும், மணமும் நெருங்கிய தொடர்புடையதால், அனோஸ்மியா ஏற்பட்டவர்கள், பொதுவாக மருத்துவரிடம் சுவை/டேஸ்ட் தெரியவில்லை என்று சொல்லுவது வழக்கம். அது தவறாகக் கொள்ளப்படும். மணம்/ஸ்மெல்/ஃப்ளேவர் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சுவை தெரியவில்லை என்றால், அறுசுவை – உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு, துவர்ப்பு, கசப்பு – இந்தச் சுவைகளை அறிய உதவும் நாவின் சுவை அரும்புகளில் பிரச்சனை என்று கொள்ளப்படும். சில சமயம் இந்த அனோஸ்மியா அறுசுவையை இழக்கவும் காரணமாகக் கூடும்.


மணம் இழப்பதற்குப் பல காரணங்கள் உண்டு
. மூக்கில் இன்ஃப்ளமேஷன் ஏற்பட்டாலும் ஏற்படலாம் ஆனால் அது தற்காலிகமானது. வயதானவர்களுக்கும், நீரிழிவு நோய் http://engalblog.blogspot.com/2014/05/blog-post_28.html உள்ளவர்களுக்கும் கூட,  அனோஸ்மியா ஏற்படலாம். சிலருக்குப் பிறவியிலேயே இருக்க வாய்ப்புண்டு.

பேருந்தில் செல்லும் போது, கம்பியில் நம் தலை இடிக்க நேர்ந்தாலும் கூட, சில சமயம் அல்ஃபேக்டரி நெர்வுகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதனால்தான் குழந்தைகளைக் கூட தலையில் குட்டக் கூடாது, அடிக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. 

.தீர்வு? மூக்கில் ஏற்படும் இன்ஃப்ளமேஷனால் என்றால் (ஸ்டெராய்ட்) மருந்துகள் உள்ளனவாம். ஆனால், தலையில் அடிபட்டதால் ஏற்படுவதற்கு சரியான தீர்வு இல்லை என்றும், சில சமயம் தானாகவும் சரியாகலாம் இல்லை என்றால் அப்படியேதான் இருக்கும் என்றும் மருத்துவர் சொன்னார்.

சில சமயம், கறிவேப்பிலையின் மணம் தெரியும். சிலவற்றின் மணம் எக்குத் தப்பாகவும் தெரியும். தேநீரில் பல சமயங்களில் சோப் ஏதோ கலந்தது போல இருக்கும். என்ன சோப் கலந்திருக்கிறது என்று வீட்டார் அவளைக் கலாய்ப்பது வழக்கம். வெங்காயம், பூண்டு போட்டிருந்தால் ஏதோ நாள்பட்டது போட்டிருப்பது போல், எப்போதாவது, கொஞ்சமாகத் தெரியும்.

அவளுக்கு மணமே தெரியவில்லை என்றாலும் கூட, சாப்பிடுவதில் ஆர்வம் சற்றும் குறையவில்லை. யாரேனும் ஏதேனும் புதியதாய்ச் செய்திருந்தால், உடன் அதைச் சாப்பிட்டுப் பார்த்து அதில் என்ன சேர்க்கப்பட்டிருக்கிறது என்று ருசித்துப் பார்த்து ஆராய முற்படுவதும், அதைச் செய்து பார்ப்பதும் தொடர்கின்றது. கடனே என்று சாப்பிடாமல் ரசித்து, ருசித்துச்?? சாப்பிடுவதால் தனக்கென்ற வாசமிக்க ஒர் அகராதியை உருவாக்கி ந்யூரானில் சேமித்து வைத்திருக்கிறாள்.

சாதகங்கள் - எந்த உணவையும், யார் செய்த உணவையும் குறை சொல்லாதவள், அப்படியே சொல்ல நேரிட்டாலும் அதை அந்த நபரிடம் தனியாக மனம் புண்படாத வகையில் சொல்லி வந்தவள், அனோஸ்மியாவிற்குப் பிறகு மனம் இன்னும் பக்குவப்பட்டிருக்கிறது. கூடியவரையிலும் பிறரைச் சார்ந்திராத வாழ்க்கைக்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டாள்.

பாதகங்கள் - கெட்ட வாடை தெரியாது. (அதனால், கழிவறை சுத்தம் போன்றவற்றில் கவனம் இன்னும் கூடியிருக்கிறது +) குறிப்பாக சமையலறையில் எரிவாயு கசிந்தால்http://sivamgss.blogspot.in/2015/12/blog-post_23.html (சகோ கீதா சாம்பசிவத்தின் இந்தப் பதிவு எனக்கு இந்தப் பதிவு எழுதக் காரணம் என்றும் சொல்லலாம்)

மற்றவர்கள் அவளைப் பார்த்து இரக்கப்படுவதைச் சுத்தமாக விரும்பாததால், தனக்கு மணம் முகரும் சக்தி இல்லை என்பதைப் பற்றிச் சொல்லாமல் எப்போதும் போல் எல்லாவற்றையும் சுவைத்துக் கொண்டிருக்கின்றாள்.

தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியே அடிபட்டதனாலோ, இல்லை வேறு காரணங்களினால் அனோஸ்மியா ஏற்பட்டாலும் சோர்ந்துவிடாமல் மனதை மகிழ்வாக, உற்சாகமாக வைத்துக் கொண்டுவிட்டால் வாழ்க்கையையே சுவைக்கலாம்!

--கீதா

படங்கள் இணையத்திலிருந்து