வியாழன், 28 நவம்பர், 2013

ஜெகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன்(மக்கள்) எந்திரம் சிவ சம்போ!!!!!



 “Breaking news  என்று ஒரு ஆங்கிலச் சானலில், ஆங்கிலத்தில் செய்தி வாசித்த ஒரு பெண், தமிழ் பெயரை தத்தக்கா பித்தக்கா என்று கடித்துக் குதறி, 2004 ஆம் ஆண்டு, காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதியான காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதியும், அவருக்கு அடுத்து மடாதிபதியாகவிருக்கும் விஜயேந்திர சரஸ்வதியும், சங்கர ராமன் கொலைவழக்கில் சிக்கி, அந்த வழக்கிலிருந்து, இன்று, அந்தக் காஞ்சி காமாட்சியின் கடைக்கண் பார்வை பட்டு, அவளது அருளால் விடுதலையானார் என்று காஞ்சி மடத்து மடாதிபதியின் சிஷ்யகோடிகளுக்குக் காதில் தேன் பாயும் செய்தியைச் சொல்லிக்கொண்டிருந்தார்!  அவர் குற்றவாளியா, இல்லையா என்பதை நான் இங்கு ஆராயவில்லை. அது என் தொழில் அல்ல. ஆனால், ஆன்மீகம் என்ற பெயரில், ஒரு மடாதிபதியாக இருக்கும் ஒருவர் இது போன்ற செய்திகளில் இடம் பெறாமல், தன் எல்லைக் கோட்டுக்குள் இருப்பது அவசியம். நெருப்பில்லாமல் புகையாது என்பர். அவர் தன் எல்லைக் கோட்டைக் கணக்கில் கொண்டு சிவனே என்று, அரசியலில் தலையிடாது, மூக்கை நுழைக்காது, தான் என்ன பொறுப்புள்ள இடத்தில் இருக்கிறோம் என்பதை மனதில் கொண்டு இருந்திருக்க வேண்டும். எப்பொழுது அவர் அந்தக் கோட்டைத் தாண்டினாரோ, அன்றிலிருந்து, அவர் செய்திகளில் வரத் தொடங்கிவிட்டார். அதுவும் பெண்கள் தொடர்பாகவும். அது உண்மையா, பொய்யா என்பதை விட, அது போன்ற ஒரு செய்தி வருவதற்கு இடம் அளித்தது,  ஒரு மடாதிபதிக்குத் தேவையில்லாத ஒன்று.  ஆன்மீகத்திற்கே இழுக்கு.


     ஆன்மீகம் என்ற போர்வையில் உலவும் சாமியார்களும் நம் நாடும் இரண்டறக் கலந்தவை. அதில் நம் நாடு வல்லரசு! பெண்ணரசு, பொன்னரசு, நிதியரசு, காமஅரசர்களைச் சுமக்கும் புண்ணிய பூமி??!!. கேரளாவில், சந்தோஷ் மாதவன் என்னும் ஒரு சாமியார், அமிர்தா சைதன்யா எனும் பெயரில் உலவினார். இவர் கொஞ்சம் இன்டெர்நாஷனல் ஃப்ராட் சாமியார். UAE தேடிய சாமியார்.  இவர் சாந்திதீரம் எனும் ட்ரஸ்டை தன் பெயரிலும், தன் பெற்றோர் பெயரிலும் நடத்தி வந்திருக்கிறார்.  இந்த நூதனச் சாமியார் வயதுக்கு வராதா பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம்(pedophilia or paedophilia) செய்து அதை வீடியோவும் எடுத்துத் தான் கண்டு களிப்பதோடு மட்டுமல்லாமல், வெளிநாட்டவர்களான தன் சீடர்களுக்குக்(?!) கொடுத்தும் இருக்கிறார்.  இப்போது, அவர் சிறையில் கம்பி எண்ணுகிறார்.

     இதைப் போலவே, தினமும்(?!!) ஆனந்தமாக இருக்கும் ஒரு சாமியார், பெண்கள் கேஸில் சிக்கி மாமியார் வீட்டில் இருந்தவர் இப்போது பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டார். நம்மூர் சாமியார்கள் எல்லாரும் பெண்கள் விஷயத்தில் படு கில்லாடிகளாக  இருப்பார்கள் போல. இதற்கு எதற்கு சாமியார் என்ற போர்வை? இவரை முழுவதுமாக கார்பொரேட் சாமியார் என்று, சகுனி படத்தில் வருவது போல சொல்ல முடியா விட்டாலும், அந்தக் கூட்டத்தில் ஒருவர்தான்.

தினமும் டி.வி. யில் வந்து மானாட மயிலாட போன்று, தனியாகவும், க்ரூப் நடனமும் புரிந்து, மாறுவேஷம் கூட பூண்டு பரவசமாக்கிய அந்தச் சாமியாரை இப்போது காணமுடிவதில்லை. அதே போன்று, விஷ்ணுவின் அவதாரங்கள் என்றுக் கருதப்படும் ஒரு அவாதாரப் பெயரில் தம்பதி சமேதராய், தாயார், பெருமாள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் ஒரு சாமியார். பல வருடங்களுக்கு முன், இவரது குழுவில் சிஷ்யராய் சென்று ஒரு சில ஆயிரங்களையோ, லட்சங்களையோ இழந்தவரும் உண்டு. இவரைப் பற்றி பெண்கள் சம்பந்தப்பட்டு எதுவும் வரவில்லை.  ஒருவேளை தம்பதி சமேதராக இருப்பதால் இல்லையோ என்னமோ! 

இது போன்ற ஆன்மீகப் போர்வையில், நடமாடும் தெய்வங்களாக, முக்கியமாகப் பெண்களை ஈர்க்கும் சாமியார்களுக்குப் பஞ்சமில்லை.  மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருக்கும் மக்களை குறிப்பாகப் பெண்களை பேச்சாலும், மந்திரத்தாலும், கட்டுண்டுக் கிடக்கச் செய்யும் சாமியார்கள் கையாள்வதும் கூட ஒருவித மன உளவியலைச் சார்ந்ததுதான்.  அதாவது, ஒருவரது வீக்னஸைப் படித்து குறி வைத்து அடிப்பது, வசியப்படுத்துவது. பெரும்பான்மையாக பெண்கள்தான் இந்த வலையில் விழுகிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், I.T. துறையில் உள்ளவர்களும், பெரிய இடத்தைச் சேர்ந்தவர்களும்,  படித்தவர்களும், பணக்காரர்களும் இது போன்ற சாமியார்களின் காலடிகளில்!! ஆம்! விட்டமின் “M” இல்லை என்றால் இச் சாமியார்கள் எல்லாரும் உயிர் பிழைப்பது கஷ்டம்தான்! எத்தனை ஈ.வே. ராக்களும், விவேகானந்தர்களும் வந்தாலும், இப்படி ஆன்மீகம் என்ற பெயரில், இது போன்ற சாமியார்களின் காலடியில் போய் விழும் மக்களைத் திருத்த முடியுமா என்பது கேள்விக் குறியாகி விட்டது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை!

இது போன்ற சம்பவங்கள் மற்ற மதங்களிலும் நடக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட மத குருமார்களும், மதப் பண்டிதாகளும் மற்ற மதங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். கேரளாவில் உள்ள கோட்டயத்தில், ஸிஸ்டர் அபயாவின் கொலையும், கேரளாவில் மத்திரஸாவுக்குச் செல்லும் சிறுமிகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதால் கைது செய்யப்படும், மத்திரஸா ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற செய்திகளுக்கும், சம்பவங்களுக்கும் மத பேதம் கிடையாது.!

விவேகானந்தர் என்னும் ஒரு மஹான், எளிய வாழ்கையை மேற்கொண்ட ஒரு துறவி, வாழ்ந்த இந்த பூமியில் இப்படிப்பட்ட சாமியார்களும் வாழ்கிறார்கள் என்று நினைக்கும் போது வெட்கமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. விவேகானந்தர் அமெரிக்காவிற்குச் சொற்பொழிவு ஆற்றப் போயிருந்த போது, அவரின் பேச்சிலும், அறிவிலும் மயங்கிய ஒரு பெண் அவரிடம் சென்று,

 “எனக்கு உங்களை மணம் செய்ய விருப்பமாக உள்ளது என்றார்.  அதற்கு நம் சுவாமி, எதற்கு? எது உங்களை அப்படி நினைக்க வைத்தது?என்று கெட்க, அவர், “உங்கள் அறிவு. எனவே எனக்கு உங்களைப் போன்ற  அறிவைக் கொண்ட ஒரு குழந்தை வேண்டும் என்று சொல்ல, அதற்கு சுவாமி,

“ உங்கள் ஆசை புரிகிறது.  கல்யாணம் செய்து, நீங்கள் விரும்புவது போன்ற ஒரு குழந்தை இந்த உலகிற்கு வந்து அது ‘அறிவுள்ளதா என்று பார்க்க வெகுநாட்கள் ஆகும்.  அதற்கு உத்தரவாதமும் கிடையாது. அதற்குப் பதிலாக உங்கள் ஆசை எளிதே நிறைவேற உத்தரவாதமுள்ள ஒன்றை பரிந்துரை செய்கிறேன்.  இதோ, என்னை உங்கள் மகனாகப் பாவியுங்கள்.  நீங்கள் என் அம்மா.  நீங்கள் விரும்பிய படியே அறிவுள்ள குழந்தை. உங்கள் எண்ணம் ஈடேறியது.  அந்தப் பெண்மணி வாயடைத்துப் போனார்.

ஒருமுறை, பரமஹம்சரிடம், ஒருவர்,  “ஏன் விவேகானந்தைப் பற்றி மட்டும் மற்றவர்களை விட அதிகமாகப் புகழ்ந்து பேசுகிறீர்கள்.  எந்த வகையில் அவர் எல்லா சீடர்களையும் விட உயர்ந்தவர்? என்றதும்,.

“அவன் (விவேகான்ந்தர்) ‘தீ.  பரிசுத்தமான அக்னி. யாரும் அவனை நெருங்க முடியாது.தகாத எண்ணங்களுடன் நெருங்குபவர்கள் பஸ்பமாக்கப்படுவர் என்றார்.

இத்தகைய, அதிசயிக்க வைக்கும் சிறப்புகளை உடைய விவேகானந்தர் போந்ற ஆன்மீகவாதிகள் வாழ்ந்த நாடு இது. இப்போதும், உலகறியாமல் நூற்றுக்கணக்கான ஆன்மீகத்துறவிகள் உலக நன்மைக்காக தியானத்திலும், பிரார்த்தனயிலும் இமயமலையில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அதே சமயம் நம்மிடையே பல எண்ணற்ற கபட சந்நியாசிகள் பசுத்தோல் போர்த்திய காமப்புலிகளாக, ஆன்மீகம் என்ற பெயரில் ஆட்டம் போடுகிறார்கள்.  அவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து நாம் நம்மைக் காப்பாற்றினால் மட்டும் போதாது, பாமர மக்கள் அவர்களுக்கு பலியாடாகாமல் இருக்க, ஒரு விழிப்புணர்வை உருவாக்க நாம் ஆவன செய்ய வேண்டும்.








செவ்வாய், 26 நவம்பர், 2013

வேண்டும் விழிப்புணர்வு - அரட்டை அகம் 3

நேற்று இந்தப் பதிவை upload  செய்யிம் போது சரியாக ஏறவில்லை. வாசகர்களுக்கு ஏற்பட்ட குழப்பத்திற்காக வருந்துகிறோம்.   இப்போது அதை சரி செய்தாகி விட்டது.  இனி இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்.

வேண்டும் விழிப்புணர்வு

ஹலோ, கீதா என்ன சூடான நியூஸ் இன்னிக்கு?

என்ன துளசி?  குரல் என்னவோ மாதிரி இருக்கு?  க்ளாஸ்ல கத்தினியா!!!? உன்ன டெய்லி gargle பண்ணுனு சொல்லிட்டே இருக்கேன்ல...கேட்டாத்தானே?  ஒழுங்கா இன்னிக்கு பண்ணு.  என்ன? ம்ம்ம்ம்

O.K. O.K. எல்லாம் செய்யறேன்...நியூஸ் என்னனு சொல்லு..


கொஞ்சம் பழைய நியூஸ் தான். ஞாயித்துக் கிழமை நடந்தது. அறுவை சிகிச்சையை மாத்தி செஞ்சதுனால ஒரு நோயாளி இறந்துட்டாருனு சொல்லி அவரு சொந்தக்காரங்க எல்லாம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைல ஆர்பாட்டம் பண்ணிருக்காங்க.

என்னது?  சர்ஜரிய மாத்தி பண்ணிட்டாங்களா.....ஹேய் என்ன சொல்ற நீ?

ஆமாம். அதான் நியூஸ். இறந்தவர், சென்னைல எழும்பூர், டாக்டர் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவராம். பேரு ஏழுமலை.  47 வயசு. அவரு திடீர்னு மயங்கி விழுந்துருக்காரு. காப்பீட்டுத்திட்டத்தின் மூலமா ரூ.50,000 மதிப்புள்ள ஒரு ஊசி போட்டுருக்காங்க.  அதுக்கு அப்புறம் CT scan எடுத்துருக்காங்க. மூளைல ரத்தம் உறைஞ்சுருக்குனு தெரிஞ்சுருக்கு.  அதுக்கு அப்புறம் எடுத்த    CT scan ல மூளைப் பகுதி வீங்கி இருந்ததைக்  கண்டு பிடிச்சுருக்காங்க.  உடனே சர்ஜரி. திரும்பவும் scan. அப்போ கொஞ்சம் உடல் நிலைல முன்னேறம் இருக்கறதா சொல்லிருக்காங்க. ஆனா ஞாயிறு மதியம் அந்த ஆளு இறந்துட்டாராம். அவருக்கு எடுத்த அந்த ஸ்கானப் பார்த்த அவரு சொந்தக்காரங்களுக்கு அதுல 3 வதா எடுத்திருந்த ஸ்கான்ல ‘ஏழுமலை வயசு 17னு இருந்துச்சாம்.  ஸோ, 17 வயசுப் பையனுக்குச் செய்ய வேண்டிய சர்ஜரிய இவருக்குச் செஞ்சுட்டாங்கனும் அதனாலதான் அவரு இறந்துட்டாருன்னும் போராடியிருக்காங்க.  அந்த உடலை நேத்து பிரேத பரிசோசனை செஞ்சுருப்பாங்க.  அதை வீடியோவுல பதிவும் செய்யப் போறதா சொன்னாங்களாம்.  சொந்தக்காரங்க தரப்புல என்ன சொல்றாங்கனா, அந்த ந்ரம்பியல் கட்டிடத்துல ஏற்கனவே 47 வயசுல ஏழுமலைனு ஒருத்தரும், 17 வயசுல ஏழுமலைனு ஒரு பையனும், 3 வதா இந்த இறந்தவரும் இருந்தாங்களாம். அதான் இந்தக் குழப்பம்னு சொல்றாங்க.  ஆதாரம் ஸ்கான் அப்படினு சொல்றாங்க. டாக்டர் தரப்புல என்ன சொல்றாங்கனா, இவரைத் தவிர வேற யாரும் ஏழுமலைன்ற பேருல சேரல, இவர் மட்டும்தான் அப்படினும்...ஸ்கானில வயச டைப் செய்யும் போது தவறுதாலா 47க்குப் பதிலா 17னு டைப் செய்யப்பட்டு இருக்கலாம், மத்தபடி ஸ்கான் மாற வாய்ப்பில்லைனும், சர்ஜரியும் மாத்தி செய்யலனும் சொல்றாங்க. 

எது உண்மைனு தெரியாட்டாலும், இதுலருந்து என்ன தெரியுதுனா நாம கொஞ்சம் விழிப்புணர்வோட இருக்கணும்னு.  நாம எப்ப இந்த மாதிரி டெஸ்ட் எடுத்துக்கிட்டாலும் ரிப்போர்ட் வாங்கும் போது அது நம்முடைய ரிபோர்ட்தானா என்றும், எல்லா details உம் சரியாக உள்ளதானும் செக் செய்யறது நல்லது.

இதுல முக்கியமான ஒரு விஷயம், ஒரு ஆஸ்பத்திரில டாக்டர்ஸ் மட்டுமில்லாம அங்க வேலை செய்யற எல்லாருமே மெயினா லாப் டெனிஷியன்ஸ் ரொம்ப பொறுப்பா இருந்தாதான் இந்த மாதிரியான தப்பெல்லாம் நடக்காம இருக்கும்.  டாக்டர்ஸ் அந்த அளவுக்கு மோசமா இருப்பாங்களா என்ன? எனக்கென்னமோ அப்படித் தெரில.....ம்ம்ம்ம்

சரி, இது படிப்பறிவு, விவரம் உள்ளவங்களுக்கு ஓகே.  படிக்கத் தெரியாதவங்க, விவரம் இல்லாதவங்க என்ன செய்வாங்க?

ம்ம்ம்ம்..ஆமாம் நீ சொல்றதும் கரெக்டுதான்...நம்ம நாட்டுக்கு இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்....ஸோ டாக்டர் கையிலதான் இருக்குனு சொல்லு......சரி அப்ப அன்பேசிவம்ல நாஸர் சொல்றா மாதிரி...தென்நாடு சிவனே போற்றி எல்லாம் அவன் செயல்!!!!???  சரி வேற என்ன நியூஸ்?

அதை ஏன் கேக்கற நாம, தமிழ்நாட்டின் (நெடுஞ்)சாலைகள் படுகொலைச் சாலைகளா? என்ற இடுகையை நம்ம வலைப்பூவுல இட்டு 24 மணி நேரம் கூட ஆகவில்லை அதற்குள்ள ஞாயிறு செய்தித்தாள்ல வெளியான அந்தச் செய்தியைப் பார்த்ததும் அரண்டுட்டேன்!  “சினிமா பாணியில் சேசிங்க்: நடுரோட்டில் கவிழ்ந்த ஆட்டோ: அதிர்ஷ்டவசமக உயிர்தப்பிய பொதுமக்கள். அப்படின்னு!

ஹேய்! நானும் அதப் படிச்சேன். அதப் பத்திதான் இப்ப உங்கிட்ட பேசணும்னு நினைச்சிருந்தேன் அதுக்குள்ள நீயே சொல்லிட்ட அப்ப நாம அதுக்கு முந்தின நாள் இந்தத் தலைப்பை பத்தி discuss பண்ணி எழுத ரெடி பண்ணிகிட்டு இருந்த நேரம்னு சொல்லு.....

ஆமாம். ஞாயிற்றுக் கிழமைச் சென்னையில மதியம் 2 மணி அளவில வேப்பேரி ஈ.வி.கே சம்பத் ரோடு, பூந்தமல்லி ஹை ரோடு சிக்னல்ல, ஒரு லோடு ஆட்டோவை ஒரு டாட்டா இன்னோவா கார், சினிமா பாணியில, சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு துரத்தியிருக்கு. அதுக்கு முன்ன புரசைவாக்கத்தில, இந்த லோடு ஆட்டோ அந்த இன்னோவாவை உரசினதுல ஏற்பட்ட தகராறுதான் சண்டையா மாறி, சேசிங்கில முடிஞ்சிருக்கு பாத்துக்க!. சேசிங்கில அந்த ஆட்டோ பூந்தமல்லி நெடுஞ்சாலையில திரும்பும் சமயம் தலைகீழாக் கவிழ்ந்துருக்கு. அந்த இன்னோவா காராரு ஆட்டோவை விரட்டுற வேகத்துல, இத்தன பேரு ரோட்டுல வண்டி ஓட்டறாங்களேனு எல்லாம் யோசிக்காம மறந்துட்டு துரத்திருக்காரு பாரு. My God!  நல்ல காலம் பொது மக்கள் யாரும் விபத்துல சிக்கல. உயிர் பொழச்சாங்க.  ஆட்டோ ஓட்டுநர், தான் குடிச்சுருந்ததா ஒப்புக் கொண்டிருந்திருக்காரு. ரெண்டு தரப்பும் போலீசார் முன்னாடியே சண்டைபோட்டுருக்காங்க. இதில அந்த இன்னோவா காருக்குப் பக்கத்துல வந்த மற்றோரு காரோட்டி என்னை மோதிக் கொன்றிருப்பாயே, நல்ல வேளை உயிர்பிழைத்தேன் அப்படின்னு திட்டிவிட்டு போயிருக்காரு. ஆட்டோ டிரைவர் கை எடுத்துக் கும்பிட்டு அழுதிருக்காரு என் குடும்பமே பாதிக்கப்படும், குழந்தைங்க எல்லாமே பாதிக்கப்படும் அப்படினு. அத குடிச்சுட்டு வண்டி ஓட்டறதுக்கு முன்னமேயே யோசிக்க வேண்டாமா?  போலீசு அந்த ஆட்டோ டிரைவரைக் கொண்டு போயிட்டங்களாம்.  ஆனா ரெண்டு தரப்பினர் மேலயும் வழக்கு போடலயாம். இது எப்படி இருக்கு?

அப்ப நம்ம நம்பள்கி திருந்துவாங்களா ன்னு சொன்னது சரிதான்னு சொல்லு

ஆமாம். இது போல தினமுமே  வாகன ஓட்டிகளிடையே நடக்கத்தான் செய்யுதாம்.  ஞாயிறு அன்னிக்கு எல்லை மீறிடுச்சாம்.  இது எப்படி இருக்கு?! இது மாதிரி சம்பவங்களில யாரேனும் ஒருத்தர் பொறுமையைக் கடைப்பிடிச்சிருந்தா பிரச்சினை முற்றியிருந்திருக்காது. வாகன ஓட்டிகளுக்கு நிதானமும், பொறுமையும் தேவை என்பதுதான் இதிலிருக்கும் பாடம்.  கற்றுத் திருந்துவார்களா நம் மக்கள்? மக்கள் சற்று விழிப்புணர்வோடு இருந்தாதான் அவங்கவங்க உயிரக் காப்பாத்திக்க முடியும்.  



நீ இத சொல்லும் போது இன்னிக்கு, இங்க நம்ம ஏரியாவுல ஒரு பொண்ணு வண்டி ஓட்டிட்டு போயிட்டுருக்கும் போது ஒரு லாரி ஓவர் டேக் செஞ்சுருக்கு.   அந்தப் பொண்ணு “ட்துப்பட்டாவ இழுத்துக் கட்டியோ, பின் பண்ணியோ வைச்சுக்காம இருந்துருக்கா.  ஸோ, லாரியொட பின் பக்க ஹூக்ல அந்தப் பொண்ணோட “ட்துப்பட்டா”  மாட்டி இழுத்து, பொண்ணு விழுந்து on the spot out.

ஐயோ! ஏன் அந்தப் பொண்ணு அப்படி பண்ணிச்சு.? வண்டி ஓட்டும் போதும் சரி, வண்டி பின்னாடி உக்காந்து போகும் போதும் சரி, ட்துப்பட்டாவானாலும், சேலைத் தலப்பானாலும் நல்லா இழுத்து கட்டிக்கிட்டுதான் போகணும்.  இல்லனா டேஞ்சர்தான்....

ஏதோ! நம்ம மக்கள் விழிப்புணர்வோடு இருந்து நல்லது நடந்தா சரி! ம்ம்ம்ம்......சரி...BSNL லைன கட் பண்ணறதுக்குள்ள நாம முடிச்சுக்குவோம்.  ஏதாவது நல்ல டாப்பிக் அடுத்த பதிவுக்கு ரெடி பண்ணு.  ஆனா வேற டாப்பிக்கா இருக்கட்டும்.  அப்புறம் அதப் பத்திப் பேசி எடிட் பண்ணலாம். இப்ப, பை! பை!!


  

மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்






அன்றே குரல் கொடுத்துவிட்டார் பாரதி. இன்று 25/11, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம். நவம்பர் மாதம் 25ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலக அளவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளை ஒழிப்பு தினமாக, UN ஆல் அனுசரிக்கப்படுகிறது.
1960 ஆம் வருடம் இதே நாளில், டொமினிகா ரிபப்ளிக்கில், அரசியல் ஆர்வலர்களான Hermanas Mirabal-Mirabal சகோதரிகள் 3 பேர், Rafael Trujillo வின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததனால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். எனவே, 1999 ஆம் வருடத்திலிருந்து அந்தச் சகோதரிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. (விவரம் Wikipedia).
இந்நாளில், நாம், சமீபத்தில் தாலிபன் தீவிர வாதிகளால் மிருகத்தனமாக்க் கொல்லப்பட்ட மேற்கு வங்க எழுத்தாசிரியை, சுஷ்மிதா பானர்ஜியை  மறக்கக் கூடாது. தான் உயிருக்கு உயிராய் நேசித்த ஜான்பாஸ்கானை மணம் முடித்து அவருடன் இன்பமான இல்லற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்த போது, தலிபான் தீவிரவாதிகள் அவரை மதம் மாற வற்புறுத்திய போது அஞ்சாது அதற்கு எதிராகப் போராடி உயிருக்கு ஆபத்து வரும் என்ற நிலையில் 18 வருடங்களுக்கு முன்பு, மேற்கு வங்கத்திற்குத் திரும்பியவர். பெண் சுதந்திரத்திற்கு எதிரான சமூக அநீதிகளைத் தான் எழுதிய “A Kabuli Man’s Bengali Wife” என்ற புத்தகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.  சமீப காலத்தில் மீண்டும் தன் கணவருடன் சேர்ந்து வாழ ஆப்கானிஸ்தான் சென்ற சில நாடளுக்குள்ளாகவே தீவிரவாதிகளின் வெடி குண்டுகளுக்குப் பலியானவர். அந்த வீராங்கனை, இந்த நாளில் பெண் சுதந்திரத்திற்காகப் போராடும் பெண்களுக்கு ஒரு நல்ல முன்னோடி.  WHO வின் 2013 ன் ஆய்வின் படி உலகெங்கிலும் உள்ள 35%, பெண்கள் உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.  ஆனால், நமது நாட்டின் ஆய்வின் படி, 70% பெண்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.

பெண்கள் இன்று உலகளவில் எத்தனையோ துறைகளில் சாதனைகள் படைத்து வரத்தான் செய்கிறார்கள். ஓவையார், ஹெலன்கெல்லர், காலத்திலிருந்து, இதோ சமீபத்தில் விண்ணில் பறந்த, (மறைந்த) கல்பன சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க வெளியுறவு இணையமைச்சராக பதவி ஏற்றிருக்கும்
நிஷா தேசாய், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பெண் எம்.பி, பிரித்தி பட்டேலுக்கு ஆசிய வர்த்தக ஆசிரியரின் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது வரை பெண்களின் நிலைப்பாடும், சாதனைகளும் எண்ணில் அடங்காதவை. மலாலா யோசப்சையி என்பவர் பாகிஸ்த்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி. இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். மறைமுகமாக பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளை எழுதிவந்தவர், அண்மையில் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். மலாலா அவர்களை அக்டோபர் 9,2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.
இவர் படு காயம் அடைந்தைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத, இன, வயது பாகுபாடின்றி கல்வி உரிமையை நிலைநாட்டவும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் அருந்தொண்டாற்றியமைக்காக பல விருதுகள் பெற்ற மலாலாவிற்கு பாக்கிஸ்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.



இவர்களைப் போல், வறுமையிலும், அன்றாடங்காய்ச்சிகளாக, வயலில் கூலி வேலை செய்தும், வெயிலிலும், மழையிலும், தன் தோளிலும், தலையிலும், முதுகிலும், மனதிலும் சுமைகளைச் சுமந்து கூலி வேலை செய்து, குடிகாரக் கணவனின் வருமானத்தை எதிர்பாராது, தன் வருமானத்தை மட்டுமே நம்பி தன் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளின் சாதனையும மேலே சொலப்பட்ட பெண்களின் சாதனைகளுக்கு இணையாகத்தான் கருதப்பட வேண்டும்.  எப்படி பெண்களின் சாதனைகளைக் கூற ஒரு பதிவு பத்தாதோ,  அதே போன்று பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளைச் சொல்ல ஒரு பதிவு போதாது.  ஒரு பக்கம் பெண்கள் சாதனைகள் படைத்தாலும், மறு பக்கம் அவர்கள் பல வன்முறைகளைச் சந்திக்கத்தான் செய்கிறார்கள் ஏன் கருவிலேயே அழிக்கப்படும், பெண் சிசுக் கொலைகள் இன்னும் நடக்கத்தான் செய்கின்றன. இந்த வன்முறைகளில் கொலைகளும் பாலியல் வன்முறைகளும் மட்டுமல்ல, கணவனால் நிகழும் வன்முறையும் அடங்கும். பெண்களுக்கு எதிரான ஆண்களின் வன்முறைகள் மட்டுமல்ல, பெண்களே, பெண்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டால் என்னவென்று சொல்லுவது? (மாமியார்களே! நீங்களும் ஒரு காலத்தில் மருமகள்களாக வாழ்ந்தவர்கள்தான்.  நீங்களும் பெண்கள்தான்! மருமகள்களே! உங்களது பெற்றோரைப் போலவே உங்கள் கணவன்மார்களின் பெற்றோர்களுக்கும், அன்பும் பாசமும் கொடுக்க நீங்கள் கடமைப்பட்டவர்கள்தான்!)

நம் நாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவிற்கான சுற்றுலாவுக்கான குறிப்பில், “இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடு என்று பதிவாகி உள்ளது. இந்தப் பதிவு இந்தியவைப் பற்றிய மதிப்பை சர்வதேச அளவில் வெகுவாகப் பாதித்துள்ளது. 

பெண்குழ்ந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை, வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் வன்முறைகளுக்கு உள்ளாவது வருத்தத்திற்கும், வேதனைக்கும் உரியது.  சமீபத்தில் டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை ஒன்று போதும்.  என்ன சொல்ல?  இந்த ஒரு நாள் மட்டும் அனுசரிக்கப்பட்டால் போதாது, எல்லா நாளுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் தினமாகத்தான் விடிய வேண்டும். அனுசரிக்கப்படவேண்டும். 

திங்கள், 25 நவம்பர், 2013

தமிழ்நாட்டின் (நெடுஞ்)சாலைகள் படுகொலைச் சாலைகளா??






24.11.2013, தி இந்து தமிழ் செய்தித்தாளில் வெளியாகி இருக்கும் செய்தி “கொலைக்களமாகும் சாலைகள் என்று. காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூரில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  இது வாடிக்கையாகி விட்டது.  இதில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தவர் அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகன விபத்து மட்டுமா?

நாம் நடராஜா சர்வீஸில் போனாலும் நம்மை இடித்துத் தள்ளிவிட்டுத்தானே செல்கிறார்கள். நடப்பது கூட இப்போது பாதுக்காப்பானதாக இல்லாமல் ஆகிவிட்டது. 


     புள்ளி விவரம் சொல்வதாவது - 67,757 விபத்துக்களில் 16,175 மரணங்கள். அதுவும் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முதலிடம். பெரும்பான்மையான விபத்துக்கள், மதியம் 3 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள்ளும் (16.7%), மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள்ளும் (16.6%) நடக்கின்றது. மற்ற நேரங்களைக் கணக்கிடும் போது நடு நிசி 12 மணியிலிருந்து விடியற் காலை 3 மணி வரை ரோடுகள் கொஞ்சம் பாதுகாப்பாக ???!!!! (6.3%) இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் மே மாதம் தான் அதிகமான விபத்துகள் (38,920) நடக்கிறதாம்.  எமனுக்குப் பிடித்த மாதமோ?!

                10 வது முறையாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாம். 3 நிமிடங்களுக்கு ஒரு சாலை விபத்து நடைபெறுகிறதாம். எப்பேர்பட்ட பெருமை மிக்க விஷயம்...

    
சாலை விபத்துக்களுக்குக் காரணங்கள் என்று பார்க்கப் போனால், வளைவுகளிலும், ஏற்றங்களிலும், பாலங்களிலும் ஓவர்டேக் செய்வது, யாரேனும் ஒவெர்டேக் செய்ய முயலும்போது வேகத்தைக் கூட்டுவது, ஓவர்டேக் செய்ய முயலும் வாகனத்திற்கு முன் செல்லும் வாகனம் சிக்னல் தராமல் இருப்பது, மது அருந்தி ஓட்டுவது, இடையில் அறியாமல் உறங்கிப் போவது, அது போல இரவில் எதிரே வரும் வாகனங்களுக்கு வண்டியின் ஹெட்லைட்டை “டிம் (Dim) செய்யாமல் ஓட்டுவது, 
மொபைல் பேசிக் கொண்டே ஓட்டுவது, .சாலை விதிகளை மீறுதல், பின்பற்றாமல் இருத்தல்,  வண்டிகளுக்கிடையே போதுமான இடைவெளி இல்லாமல் ஓட்டுதல், அதிவேகமாக ஓட்டுவது, விதிமுறைகளைக் கடைபிடிப்பதில் சட்டம், ஒழுங்கு முறை கடுமையாக இல்லாது இருத்தல்,
சாலைகள் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பது, அவசியமான இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் இல்லாமல் இருத்தல், இப்படிப் பல.




வாகன ஓட்டுநர் என்றால் நல்ல பொறுமையும், மற்றவர்களின் உயிருக்கு தன் சிறிய கவனக் குறைவு ஒருபோதும் காரணமாகக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சியும், மற்றவர்களின் தேவை இல்லாத அவசரத்தையும், பழக்கமின்மையால் செய்யும் தவறுகளையும் புரிந்து அதற்கேற்ப வளைந்து கொடுக்கும் பெருந்தன்மையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். எனவே ஓட்டுநர் உரிமம் பெறும் ஒரு நபர் இவற்றை எல்லாம் அறிந்தவராக இருத்தல் அவசியம். அது போல் உரிமம் வழங்கும் போது அவருடைய வாகனம் ஓட்டும் திறனை மட்டும் அல்லாமல் இது போன்ற குணங்களையும் உடையவரா என்று உறுதிப்படுத்த வேண்டும்.

ஆனால், முகம் காட்டாமலேயே கூட உரிமம் இந்தியாவில் மட்டும்தான் வாங்க முடியும் என்று நினைக்கிறேன்.  சமீபத்தில் சென்னையில் உள்ள எனது நண்பரின் மகனுக்கு, இரண்டுச் சக்கர வாகனத்திற்கும்(பைக்), காருக்கும் சேர்த்து ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டி பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, கற்று பின்னர் உரிமம் வாங்கும் நாள் வந்து, அந்த அலுவலகத்துக்குச் சென்றாயிற்று.  டெஸ்டுக்கு வேண்டிக் காத்திருந்து, காத்திருந்து, ஒரு வழியாக மதியம் 1 மணிக்கு மேல் பிரேக் இன்ஸ்பெக்டர் வந்துத் தன் திருமுகத்தைக் காட்ட, அவர் அங்கு டெஸ்டுக்கு இருக்கும் யாருடையத் திரு முகத்தையும் பாராது, எல்லா பயிற்சிப் பள்ளிப் பிரதிநிதிகளையும் கூப்பிட்டு, எல்லா விண்ணப்பங்களையும் வாங்கிப் படிக்காமலேயே கையொப்பம் இட்டுக் கொடுத்துவிட்டார்.  ஓட்டுநர் உரிமமும் வாங்கியாயிற்று.  இவன் அங்கு செல்லும் முன்னும், சென்ற பிறகும், 8 போட்டுப் பழகியதும், காரை முன்னும், பின்னும் எடுத்துப் பார்த்துப் பழகியதும் எதற்கோ?  இதற்கு எதற்கு ஓட்டுநர் உரிமம் என்று தெரியவில்லை. இப்படி ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டால், ஏன் சாலை விபத்துக்கள் நடக்காது? 

     எனது நண்பர் அமெரிக்காவில், கலிபோர்னியாவில் தான் ஓட்டுநர் உரிமம் வாங்கியதை விவரித்த போது, எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. முதலில் ஒரு written test  அதிலும் குறிப்பிட்டத் தவறுகளுக்கு மேல் இருந்தால் fail.  அதன் பின்னர் ரோட்டில், ட்ராஃப்பிக்கில், அருகில் DMV சோதனையாளர் இருக்க, அவர் இவரைக் கவனிக்க, அவர் சொல்லும் instructions க்கு இவர் ஓட்டிக் காட்ட வேண்டுமாம்.  அதிலும் குறிப்பிட்டத் தவறுகளுக்குள் இருந்தால் மட்டும்தான் உரிமம். இல்லை என்றால் திரும்பவும் டெஸ்ட். அதைக் கேட்ட பொது அவர்கள் எப்படி மனித உயிருக்கு மதிப்புக் கொடுக்கிறார்கள் என்றுத் தோன்றியது.  அதே போன்று இங்கும் மனித உயிரை மதித்து அது போன்ற கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும், சாலை விதிகளும் பின்பற்றப்பட்டால் இது போன்ற விபத்துக்களைத் தவிர்க்கலாமே?  எதற்காக இப்படி உயிரிலும் ஊழல் விளையாடி உயிரைப் பலி வாங்குகின்றது?  


   விபத்து நடந்த பின்பு, விபத்துக்குக் காரணமான வாகனத்தின் ஓட்டுநரை அடிப்பது, உதைப்பது போன்றவற்றில் செலுத்தும் ஆர்வத்தை பொதுமக்கள் காயமடந்தைவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் ஆர்வத்தைக் காண்பிக்காமல் இருப்பதும், பின் போலீசுக்கு ஃபோன் செய்து காத்திருப்பதும், விபத்துக்குள்ளான நபருக்குக் கொடுக்கவேண்டிய முதல் உதவிகளைக் குறித்து அறியாமல் இருப்பதும், விபத்துக்கு உள்ளானவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால், போலீஸ், கேஸ், நீதி மன்றம் என்று வீண்ணாக அலைய வேண்டி வரும் என்று பயப்படுவது, இப்படிப்பட்ட ஏராளமானப் பிரச்சினைகள்தான் விபத்துக்கு உள்ளானவர்களைக் காப்பாற்ற முடியாமல் போவதற்கான காரணங்கள்.  இவற்றிற்கெல்லாம், அரசுதான் ஏதாவது வழி காணவேண்டும் என்று நினைக்காமல், நல்ல மனது படைத்த இளைஞர்கர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், இப்படி எல்லோரும் சேர்ந்து ஒவ்வொரு கிராமத்திலும் விபத்து உதவி மையம் தொடங்கினால் அது போன்ற உதவி மையங்கள் எல்லா இடங்களிலும் பரவி விபத்துகள் மூலம் உண்டாகும் மரணங்களைக் குறைக்கலாம்.  உண்மையிலேயே இது போன்ற மக்கள் சேவையே நாம் மகேசனுக்குச் செய்யும் சேவை.

     இன்று சென்னை T. நகர் சிக்னலில் வண்டியை நிறுத்திய போது, நான் நினைத்தது போல், “தோழன் என்ற அமைப்பு, நோட்டீஸ் ஒன்று கொடுத்தார்கள்.  அது “சாலை விதிகளை மதிப்போம் வீதிகளைக் கடப்போம் என்பதைப் பற்றியது.  அதில் நான் இங்கே மேலே கொடுத்திருக்கும் புள்ளி விவரங்களுடன் (தி இந்து தமிழ் நாளிதழ் 23.11.2013) பொது மக்களின் கடமையைச் சுட்டிக் காட்டி, ஆதரவைக் கோரும் நோட்டீஸ்.  நம் ஆதரவை அதில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு குறுஞ்செய்தி கொடுத்து நமது ஆதரவைத் தெரிவிப்போம். இது எங்களது வேண்டுகோளும் கூட. இது போன்ற நல்லார்வ அமைப்புகள் நம் நாடெங்கும் உருவாகி, விபத்துகள் நிகழாமல் இருக்க வேண்டிய அறிவுரைகளை, பரிந்துரைகளை வழங்குவதோடு நின்றுவிடாமல் விபத்துகுள்ளானவரைக் காக்கும் கரங்களாகவும் மாறும் என்ற எங்கள் கனவு மெய்படட்டும்.