வியாழன், 14 நவம்பர், 2013

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மகன்களை நினைக்கையிலே


சில விஷயங்களைக் கேட்கும்போது, நம் மனதில் யாரோ தீக்கங்குகளை வாரி இறைத்தது போல் இருக்கும்.  அந்தத் தீப்புண் ஆற நிறைய நாட்கள் வேண்டிவரும்.  அது போன்ற ஒரு சம்பவம் நேற்று கேட்க நேர்ந்தது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்கு திருச்சூர் வானொலி நிலையத்திலிருந்து ஒலி பரப்பப்படும், ஜோய் ஆலூக்காஸ் ஸ்பான்ஸ்ர் செய்யும் ஒரு நிகழ்ச்சி. நேயர்கள் அனுப்பும் கடிதங்களை, பாலேட்டனும், ஆஷா சேச்சியும், வாசித்து வானொலி நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு நல்ல நிகழ்ச்சி. இறுதியில் அவர்கள் விரும்பும் ஒரு திரைப்படப் பாடலும் ஒலிபரப்பப்படும்.  வித்தியாசமான, சுவாரசியமான பல சம்பவங்களையும் நேயர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரு நல்ல நிகழ்ச்சியானதால் நான் இதைப் பெரும்பாலும் கேட்பதுண்டு.  நேற்று ஒரு கடிதம் வாசிக்கப்பட்டது.

கோழிக்கோடு அருகேயுள்ள ஒருவர் அனுப்பியது. அவர் ஒரு சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி எழுதியிருந்தார்.  கடந்த சில மாதங்களாக, பாவம், மனதில் போட்டுக் குமுறிக் கொண்டு இருந்திருந்தார் போலும்.  அவர் தன் மனதில் இருந்ததை இறக்கி வைத்துவிட்டார்.  இதோ, நானும் இங்கு இறக்கி பதிந்து விட்டேன். இதை வாசிக்கும் உங்கள் மனதில் ஏற்றி விட்டேன்.



சில மாதங்களுக்கு முன், கோழிக்கோடு அருகே, கன்னியாஸ்த்ரீகள் நடத்தி வரும் விடுதிக்கு, வழக்கமாக உதவித்தொகை வழங்கும் வழக்கம் உள்ள ஒரு நண்பருடன், அவர் தற்செயலாகச் சென்றிருக்கிறார். அங்கு தங்கியிருப்போர் பெரும்பாலும் வயதான அம்மாக்கள். அப்போது, கையில் ஒரு துணிப் பையுடன் யாரையோ ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான தாய்  இவருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறார்.  இவர் அவரைப் பற்றி விசாரித்தபோது அங்கிருந்த கன்னியா ஸ்த்ரீகளிடமிருந்து  அறிந்து கொண்டது,



“அந்தப் பெண் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். கணவன் மற்றும் 4 குழந்தைகளுடன் நல்ல மேம்பட்ட, குறையற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை. குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை, எந்தக் கஷ்டமும் இல்லாத நல்ல குடும்ப வாழ்க்கை.  திடீரென்று எதிர்பாராத விதமாக கணவனின் மறைவு. அதனால் இந்தப் பெண்ணின் மனநிலை பாதிப்பு.  மன நோயாளியான அம்மாவைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனது ஏனோ அந்த 4 பிள்ளைகளுக்கும் இல்ல்லாமல் போனது இந்த அம்மாவின் துரதிர்ஷ்டம். மன நிலை சரியில்லாததால்   அம்மாவினால் ஒரு சில பிரச்சினைகள் வந்திருக்கலாம், அக்கம்பக்கதிலிருந்து புகார்கள் வந்திருக்கலாம். பிள்ளைகளின் மனைவிகள் இதை எல்லாம் மன்னிக்க முடியாதக் குற்றமாக நினைத்திருக்கலாம், சொல்லியிருக்கலாம். இந்த 4 பிள்ளைகளும் அம்மவை அழைத்துக் கொண்டு ரயிலில் ஏறியிருக்கிறார்கள். அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி அதை சாப்பிடக் கொடுத்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் அம்மா மயங்கி விட்டார். உடனே 4 பேரும் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.வீரியமுள்ள மயக்க மருந்தாக இருந்திருக்க வேண்டும்.  அவருக்கு நினைவு வந்த போது, அவர் கோழிக்கோடு ரயில்வே ஸ்ட்ஷனில். பதட்டத்துடன் இறங்கி அவருக்குத் தெரிந்த பாஷையில் ஏதேதோ சொல்லி அலைந்திருக்கிறார். பகல் நேரத்தில் அவரைப் பார்த்த பரிதாபக் கண்கள் சிலதில் எங்கோ காமப் பேய் ஒளிந்திருந்திருக்க வேண்டும்.


கைகளிலும், கால்களிலும் வெண்குஷ்ட்த்தால் பாதிக்கப்பட்ட அந்த 55 வயது அம்மாவை, இரவில், சில காமவெறியர்கள், மறைவில் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சமயம், நல்ல மனதும், சமயோசிதமும் உள்ள ஒருவர் தலையிட,  ரயில்வே போலீஸ் வந்து அந்த அம்மாவை மருத்துவ மனைக்குக் கொண்டுச் சென்று காப்பாற்றி உள்ளார்கள்.  அதன் பின் இங்கு கொண்டுவந்து சேர்த்தனர். (பாருங்க, எந்த அளவுக்கு இருக்கு நம்ம சமூகம்! ஒரு மிருகத்த விட கேவலமான மனோநிலை. 5, மாசமோ, 5 வயசோ, 50 வயசொ 75 வயசானாலும் இந்தக் காமவெறியர்களுக்கு கொத்திக் கிழிப்பதில் என்னதான் கிடைக்கிறதோ?)  பாவம், மன நிலை சரியில்லாததால் அந்த அம்மாவிற்கு இப்போதும் தெரியாது தன் பிள்ளைகள் தன்னை கொல்லாமல் கொன்றிருக்கிறார்கள் என்று. இப்போதும், அவர்கள் வருவார்கள், திரும்பக் கொண்டு போவார்கள் என்று அந்தத் தாய் மனம் காத்துக் கொண்டே இருக்கிறது.


எனக்கு இதைக் கேட்டவுடன், இதோ, இப்போது இதை எழுதும் போது, என் வாயில் “தூய தமிழில் கெட்டவார்த்தைகள் வருகிறது.  ஆனால், தில்லைஅகமும், தமிழ்மணமும் நாறிவிடக் கூடாது என்று மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு எழுதுகிறேன்.  அந்த 4 நாய்களும் என்னதான் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் நல்ல வாழ்க்கை வாழ்வதாகச் சொல்லப்பட்டாலும், தெரு நாய்களை விடக் கேடுகெட்ட வாழ்க்கைதான் அது.

“டேய், அயோக்கிய ராஸ்கல்களா, நீங்கள் மனுஷங்களாடா? எப்படிடா உங்களுக்கு மனசு வந்திச்சு, இந்த மாதிரி செய்ய? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்காடா? உங்களால் நிம்மதியா தூங்க முடியுதாடா? சாப்பாடு தொண்டைக்குள்ள இறங்குதாடா? உங்களுக்கும்தானேடா குழந்தைங்க இருக்காங்க?  அவங்க, உங்க வயசான காலத்துல உங்களுக்கு வைக்கப் போறாங்கடா ஆப்பு.  தன் வினை தன்னைச் சுடும். ஞாபகம் வைச்சுக்கோங்க  .....டேய் பாவிங்களா உங்கள்ல கொஞ்சமாவது மனசாட்சி உள்ள ஒருத்தனாவது வந்து உங்க அம்மாவைக் கூட்டிட்டு போங்கடா.  மனநிலை சரியில்லாத, அழக்கூடத் தெரியாமல் தவித்து, உங்களின் வருகைக்காகக் காத்திருக்கும் அந்தத் தாயின் ஏக்கம், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பொசுக்கிவிடும். மன நிலைக்கு நல்ல சிகிச்சை கொடுத்து உங்க கூட வைச்சுக் காப்பாத்த முடியலனாலும், உங்கள் பக்கத்துல உள்ள முதியோர் இல்லத்துலயோ, மனநிலை காப்பகத்துலயோ வைச்சாவது காப்பாத்துங்கடா? தாயிற் சிறந்தக் கோயிலும் இல்லை!!....அது தெரியுமா உங்களுக்கு? .........



நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மகன்களை நினைக்கையிலே!!!!

2 கருத்துகள்:

  1. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மகன்களை நினைக்கையிலே!!!! It is true that these children are worse and good for nothing. But a mother will never ever abuse her child. Like how a mother bears a child for 10 months in her womb..this universe bears us for our lifetime. Neenga solra mathiri manasalayo...illa vayalayo thittanumnnu soninalum..... We are dropping each every word in this universe . We are indirectly dirtying our own place. Every word dropped in this universe is given back to us 100 folds. So, my personal request is when you write for this society or take a documentary, I request you to put it in a more beautiful manner. Your intentions are very good, but your can present the same in a more acceptable manner where all readers will feel comfortable. I request you to take this in a positve manner and consider my humble suggestions. We all are against the happenings around us. But we should not forget that ' WE are in the WOMB OF OUR MOTHER UNIVERSE "

    பதிலளிநீக்கு
  2. நண்பரே மிக்க நன்றி! இதைக் கேட்ட போது கொஞ்சம் (ஓவராக) உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். உலகம் சுத்தும் வாலிபன் படம் பாத்திருக்கிறீர்களா? அதுல மறைந்த நம்ம அசோகன், மறைந்த திருமதி மஞ்சுளா விஜயகுமாரை, எம்.ஜி.ஆருக்கு சுய நினைவு திரும்ப வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் (நல்ல எண்ணம் என்று சொல்ல முடியாது ஏன்னா வில்லன் இல்லியா கெட்ட எண்ணம்தான்) கற்பழிப்பது போல் நடிக்க ஆரம்பித்து, இடையில் கற்பழிக்கவே ஆரம்பித்து விடுவார். அதன் பிறகு எம்.ஜி.ஆரிடமிருந்து நல்ல அடியும் உதையும் கிடைத்த பிறகு கொஞ்சஞ்ச்ஞ்ச்ஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன் அப்படினு சொல்லுவாரு. அந்த மாதிரி , மன நிலை சரியில்லாத அம்மாவ அம்போனு ட்ரெயின்ல மயக்க மருந்து கொடுத்து உதறிய பிள்ளைகளைப் பற்றிக் கேட்ட பொத, அவர்களைப் பற்றி எழுதிய போது கொஞ்சஞ்ச்ஞ்ச்ஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன். மன்னிச்சுக்குங்க ஸார். உங்கள் கருத்துக்கு நன்றி. I will try my best not to repeat the same in the future. Thank You very much!

    பதிலளிநீக்கு