நான் எடுத்த நிழற்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நான் எடுத்த நிழற்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 மார்ச், 2020

கோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4

இந்தப் பதிவின் தொடர்ச்சியைப் போட பல மாதங்கள் ஆகிவிட்டதால், இங்குள்ள படங்களின் குறிப்புகள் புரிந்து கொள்ள என்றால் இதற்கு முந்தைய பகுதியை ஜஸ்ட் ஒரு பார்வை பார்த்தால் அதன் தொடர்ச்சி இது என்று அறியலாம்.  உங்கள் விருப்பம். இதுதான் கோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் கோயிலின் புகைப்படங்களின் கடைசிப் பகுதி. வேறு சில கோபுரங்கள் பின்னர் தருகிறேன். 

திங்கள், 14 அக்டோபர், 2019

கோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 2

முந்தைய பதிவில், அடுத்த பதிவில் கோபுரங்கள் படம் போடுவதாகச் சொல்லியிருந்தேன். அதற்குச் செல்லும் வழியைக் காட்ட வேண்டாமா உங்கள் எல்லோருக்கும்? இதோ படங்களுடன் விவரமாகச் சொல்கிறேன். 

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

கோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 1 - பாப்பா சினிமா - துணுக்குகள் பகிர்வு


இப்படிப் போட்டால் கூட்டம் சேருமா!!!!


அனைவருக்கும் இனிய வணக்கம் + மகிழ்வான காலை வணக்கம்! ஒரு மாதம் கழித்து தளம் பக்கம் வந்தாலும், பதிவுகள் எழுதி பல மாசம் ஆகிவிட்டதே, தளத்தை எல்லோரும் மறந்தே போயிடுவாங்களே என்ற பயம் பிடித்துக் கொண்டதால் சும்மாவேனும் ஒரு பதிவு போட்டு வைப்போம். அப்புறம் தொடர்வதைப் பற்றி யோசிக்கலாம் என்று எங்க வீட்டைத் திறந்து தூசி தட்டி கழுவி, தொடங்கி இனியும் தொடர வேண்டும் என்று இப்பபடத்துடன் தொடக்கம். 

வியாழன், 10 மே, 2018

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே!

அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்ளை நிற வண்ணத்துப் பூச்சிகள். இதோ கீழே உள்ள படத்தில் போன்றவை.

இது என் பால்கனி தோட்டமல்ல! நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் சீசனின் போது எடுத்தது. 

பூப்பூவாய்ப் பறந்து போகும் பட்டுபூச்சியக்காக்கள் பச்சை நிறமே பச்சை நிறமே என்று கறிவேப்பிலையைச் சுற்றி சுற்றிப் பறந்திட, கறிவேப்பிலை, ஏன்? சுத்தி சுத்தி வந்தீகனு கேட்டது. வாச கறிவேப்பிலையே என்ற வண்ணத்துப் பூச்சிகள் கறிவேப்பிலையின் மீது அமர்ந்தன. வண்ணத்துப் பூச்சிகளைப் புகைப்படம் எடுக்க ஆசை இருந்தாலும் அருகில் சென்றால் அவை இலையின் மீது அமராமல் பறந்துவிடும் பாவம் என்று புகைப்படம் எடுக்கவில்லை.

சிறிது நாட்கள் கழித்துப் பார்த்தால் கறிவேப்பிலை செடியில் கரும்பச்சை நிறத்தில் புழு ஒன்று தென்பட மற்றொரு புழு இலையின் அடியில் இருந்தார். கேமரா ரிப்பேருக்குப் போயிருந்ததாலும் மொபைலில் படங்கள் சரியாக வருவதில்லை அதன் கேமராவில் ஏதோ பிரச்சனை போலும் என்று நினைத்துவந்ததாலும் படம் எடுக்காமல் இருந்த நான் இதனை வந்தது வரட்டும் என்று எடுத்தேன். நன்றாக வரவில்லை என்று தெரியும். மொபைலில் கேமராவில் என்ன பிரச்சனை? காரணம் பதிவின் முடிவில்!!! ரொம்ம்ம்ம்ப அறிவுக் கொழுந்து நான் என்பது புரியும்!! 

இதோ அம்புக் குறி இட்டுக் காட்டியிருக்கிறேன் பாருங்கள் அதுதான் முதலில் வந்த கரும்பச்சை நிறப் புழு(க்கள்.) கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்தான் தெரிவார். மற்றொருவர் புகைப்படத்தில் சரியாக வரவில்லை. அதனால் இங்கில்லை


தினமும் பார்த்தாலும் அத்தனை வித்தியாசம் டக்கென்று தெரியவில்லை. 4, 5 நாட்களில் பார்த்தால் அசந்துவிட்டேன் வியப்பில். கண்ணிற்கு எதுவும் புலப்படவில்லை. புழுக்கள் என்ன ஆனார்கள்? என்று பார்த்தால் கொழு கொழுவென்று பச்சையோடு பச்சையாக இலைகளில் உட்கார்ந்து கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டு இலைகளைக் காணவில்லை. என்ன அழகாய் கொழு கொழுவென்று இருக்கிறார்கள் பாருங்கள்!! கேமரா என்றால் இன்னும் நன்றாக, அழகாகத் தெரிந்திருப்பார்கள். இருந்தாலும் க்ளிக்கினேன்.

அவற்றை ரசித்தேன் ரசித்தேன். அதன் அழகை ரசித்துக் கொண்டே இருந்தேன். அவை நகர்வதே தெரியவில்லை. சரி அவை சுதந்திரமாகத் தின்னட்டும் என்று படங்கள் எடுத்துவிட்டு உள்ளே வந்துவிட்டேன். மகனுக்கும் அனுப்பினேன். இந்தப் படங்களைத்தான்!! 

மகன் சொன்னான் பாவம் அம்மா. அதை ஒன்னும் செஞ்சிடாதே. சாப்பிட்டா சாப்பிடட்டுமே இப்ப என்ன? நீ கடைல வாங்கிக்கமா கறிவேப்பிலை எல்லாம். “அடேய்! மகனே! "ஒன்னும் செஞ்சிடாதே"?? உனக்குச் சொல்லிக் கொடுத்த எனக்கே பாடமா?”


அடுத்த 4 தினங்களில் பார்த்தால் நான் வியப்பின் உச்சியில். எல்லா இலைகளையும் நன்றாகத் தின்று செடியை மொட்டை அடித்து இருந்ததைப் பார்த்ததும், கேமராவும் ரிப்பேர் சரியாகி வந்திருந்ததால் உடனே க்ளிக்கிவிட்டேன். அப்போது இந்தக் கொழு கொழு பச்சையான புழுக்களைக் காணவில்லை. எங்கே போனார்கள்?

பாருங்கள் எப்படி சாப்பிட்டுருக்கிறார்கள் கமுக்கமாய்! ஹா ஹா ஹா

என்னாச்சு மீண்டும்? காகம் வந்து கொத்திக் கொண்டு சென்றுவிட்டதா? என்று தோன்றிட கறிவேப்பிலையை ஆராய்ந்தால் ஆஹா! அவை இலையையே கூடாரம் போல் கூடு கட்டிக் கொண்டு கருவறையாக்கிக் கொண்டுவிட்டன. இது எப்படி செய்தன என்பதைப் பார்க்க முடியவில்லை. அவை எப்போது செய்யும் என்று தெரியவில்லையே! அனிமல் ப்ளானெட் எல்லாம் செய்வது போல் அங்கே எப்போதும் ஓடும் கேமரா ஒன்றை வைக்க வேண்டும் போல!   

எப்படி இருக்கிறது பாருங்கள். புழு இருப்பது தெரிகிறதல்லவா? இலையையே கூடாரம் போல் செய்து கருவறையாக்கிக் கொண்டு!!!
இது மற்றொருவரின் கருவறை


சரி அடுத்து எப்படியும் வண்ணத்துப் பூச்சி வருமே அதைப் பார்க்க வேண்டும் என்று காத்திருந்து காத்திருந்து.....!காத்திருந்தேன். என்று எப்போது ப்ரௌன் நிறமாகியதோ? பச்சை ப்ரௌன் நிறமாகியிருந்தது. உள்ளுக்குள் இருக்கா என்றும் தெரியவில்லை. அதைத் தொட்டுப் பார்த்து அதற்குத் தொந்ததரவு கொடுக்க வேண்டாமே என்று தோன்றிட விட்டுவிட்டேன். நாள் பார்த்தால் கூடு வெற்றிடமாகத் தோல் மட்டும் இருந்தது போல் தோன்றிட தொட்டுப் பார்த்தேன். வெறும் கூடு மட்டுமே இருந்தது. வண்ணத்துப் பூச்சி பிறந்து பறந்து போய்விட்டது போலும். வண்ணத்துப் பூச்சி வெளியில் வருவதைப் பார்க்க இயலவில்லை என்று. வருத்தமாகிவிட்டது! அவள் பறந்து போனாளே! என்னை மறந்து போனாளே!! ஹா ஹா ஹா…  

கூடு மட்டும். பூச்சியைக் காணவில்லை

ஓ! பட்டர்ஃபளை பட்டர் ஃப்ளை! ஏன் விரித்தாய் சிறகை!

இந்த வருடம் சீசன் தொடங்கட்டும்! விடுவேனா? இம்முறை என் கறிவேப்பிலை பூக்கத் தொடங்கிவிட்டது! எனவே வண்ணத்துப் பூச்சிகள் நிச்சயமாக வரும். இம்முறை ஆதியிலிருந்து எடுத்திட வேண்டும். விடமாட்டேன்! விடமாட்டேனாக்கும்!! 

  மொட்டுவிட்டிருக்கும் கறிவேப்பிலை. (பொத்தி வைச்ச கறிவேப்பிலை மொட்டு!!!) இரவில் எடுத்த புகைப்படம். நேற்று ஒரு சிறு குளியல் அவளுக்கு

இது பகலில் எடுத்தேன் மொட்டுவிட்டிருக்கும் கறிவேப்பிலையை. எவ்வளவு அழகாக இருக்கிறாள் இல்லையா? குளித்தும் அதற்குள் தூசி படிந்து அழுக்காகிவிட்டாள். குளிப்பாட்ட வேண்டும். பூ பூக்கும் ஓசையைக் கேட்கக் காத்திருக்கிறேன்

தற்போது என் கேமரா முழுவதும் பழுதடைந்துவிட்டது. எனவே மொபைலில் தான் எனது மூன்றாவது விழி படங்கள் எல்லாம் எடுக்கிறேன். இதோ இந்த கடைசி இரு படங்களும் மொபைலில் தான் எடுத்தேன். கேமரா இல்லாதது ஏதோ போல இருக்கு. மொபைலில் சில நன்றாக வருகின்றன. சில படங்கள் நன்றாக வருவதில்லை. என் மொபைலும் மொபைல் கேமராவும் அத்தனை ஹை டெக் இல்லை.

என் மொபைல் கேமராவில் என்ன பிரச்சனை இருந்தது? மொபைலில் கேமரா சரியில்லை படங்கள் எல்லாம் ஏதோ புகை மூடியது போல வருகிறது என்று நினைத்திருந்த எனக்கு ஒரு நாள் திடீரென்று மூளையில் பல்பு எறிந்திட கேமராவை பார்த்தால்.....அதன் மேல் ஏதோ இருப்பது போல் புலப்பட.....அறிவுக் கொழுந்தே புது கேமராவின் லென்ஸ் மேல் கண்ணாடிப் பேப்பர் ஒட்டிர்யிருப்பாங்க அதுகூடவா உனக்குத் தெரியாது? தெரியலை? அதை ஒன்றரை வருஷமா அகற்றாமலேயே இருந்திட்டு மொபைல் கேமரா சரியில்லை சரியில்லை அப்படினு புலம்பிக்கிட்டு...என்னா அறிவு!! ஹிஹிஹிஹிஹி!!! பேப்பர் இருப்பதைக் கண்டுபிடிச்சு அதை அகற்றிய இந்த அறிவுக் கொழுந்தை, குழந்தையை எல்லாரும் ஜோரா கைதட்டி பாராட்டுங்கப்பா!!!

-------கீதா



திங்கள், 9 அக்டோபர், 2017

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 11 - கா...கா...கா...என்னை கா 2

கொஞ்சம் காத்திருப்பீங்கதானே! அப்படினு சொல்லிருந்தேன்ல...அதுக்கு மிக்க நன்றி! என்னை பயமுறுத்தியவர் பூனையாராம்/பூஸாராம்!!! அவர் வேறு நான் இங்கிலீஷில் பேசுவதாகச் சொல்லியிருந்தார். ஆமாம்! நான் தமிழ்நாட்டுக் காக்கைக் குஞ்சு தமிழ்தான் பேசணும் இல்லையா. அதனால் தான் 'நன்றி' என்று சொல்லியிருக்கிறேன். 

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 10 - கா....கா....கா என்னை கா! 1

"நான் வெளிய போய் உனக்குச் சாப்பாடு கொண்டு வருகிறேன். அது வரை நீ கூட்டில் பத்திரமாக இருக்க வேண்டும். நான் வந்த பிறகு என் முன்னால் பறக்க முயற்சி செய்தா போதும். தாந்தோன்றித்தனமா பறக்க முயற்சி செய்யாதே” னு அம்மா சொல்லிட்டுத்தான் போனாங்க. நான் கேட்டால்தானே! அதான் நான் பறக்க முயற்சி செய்து இதோ கீழே விழுந்துவிட்டேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. அண்ணன் எங்கு போனானோ அவனையும் காணவில்லை. சரி அதோ ஏதோ தரை தெரிகிறதே! அங்கு போய் பார்ப்போம்னு கொஞ்சம் பறக்க முயற்சி செய்து தத்தி நடக்கத் தொடங்கின்.

சனி, 19 ஆகஸ்ட், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 9

இன்று மாலை நான் கோடம்பாக்கத்திலிருந்து தரமணிக்குப் பேருந்தில் ஏறுவதற்குக் காத்திருந்த சமயத்தில்தான் இன்று உலகப் புகைப்பட தினம் என்று அறிய நேர்ந்தது. வீட்டுக்குச் சென்று இன்று புகைப்படங்களைப் பகிரலாம் என்று நினைத்த சமயம், அழகான படங்கள் பகிரும் வெங்கட்ஜி, தோழி கீதாமதிவாணன், அனு, கோமதியக்கா, எங்கள்ப்ளாக் எல்லோரும் நினைவுக்கு வர, வெங்கட்ஜியின் பதிவு ஏன் வரவில்லை என்று நினைத்துக் கொண்டே அலைபேசியில் மெயில் பார்த்தால் வெங்கட்ஜியின் புகைப்படப் பதிவு! மிக மிக அழகான படங்கள். வெங்கட்ஜி மற்றும் தோழி கீதாமதிவாணன் அவர்களின் படங்கள் போல் இருக்காது என்றாலும் எனக்குப் புகைப்படங்கள் எடுப்பதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் இன்றைய தினத்தில் இங்குப் பகிர்கின்றேன்.  


இந்த இரு படங்களும் என்ன படங்கள் என்று சொல்ல முடிகிறதா ஊகித்துப் பாருங்களேன். பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!


நடைப்பயிற்சி செல்லும் போது என் செல்லம் கண்ணழகியைப் பார்த்துக் குரைக்கத் தயராக இருக்கும் செல்லம்


மரத்தின் அடியில்தான் வேர் இருக்கும்...இங்கு பாருங்கள் மரத்தின் நடுவில் கோயிலின் கூரையில் வேர் விட்டு மரமாகப் பார்க்கவே வியப்பாக இருந்ததால் உடனே க்ளிக்கினேன்!
இவ்விரண்டு படங்களிலும் இருக்கும் பூச்சியும் ஒன்றே! முதலில் உள்ள படம் தானாகவே  ஃப்ளாஷ் இயங்கி எடுத்தது. இரண்டாவது படம் நான் ஃப்ளாஷ் பட்டனை எழும்பவிடாமல் அழுத்திக் கொண்டு ஃப்ளாஷ் இல்லாமல் எடுத்த படம். 

எருக்கம்பூவில் வண்டு


  
இந்தக் காளானைப் பாருங்கள்! அடுக்கடுக்காகப் பூ போன்று!! என் மாமியார் வீட்டுத் தோட்டத்தில்..



வித்தியாசமான உருண்டை வடிவில் பூ தானே இது? இல்லை காயா?  முதன்முறையாகப் பார்க்கிறேன். ! தொட்டுப்பார்க்க முடியவில்லை. மரத்தில் உயரத்தில் இருந்தது.  ஜூம் பண்ணி எடுத்தேன். இது என்ன என்று அறிந்தவர்கள் சொல்லலாம்!




தாமதமாகிவிட்டதால், எல்லாவற்றிற்கும் வழக்கம் போல் கருத்துகள் எழுத நேரம் இல்லை....

------கீதா

ஞாயிறு, 30 ஜூலை, 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 8 - மரங்களும், மலர்களும் பேசினால்


அந்நியன் மரம்!!!???.... மூட மாந்தர்களே! எங்களையா வெட்டி வீழ்த்துகிறீர்கள்! உங்களுக்குக் கும்பிபோஜன, அக்னிக்குண்டத் தண்டனைகள் கிடைப்பதாக! ஹஹஹ!

மலர்ந்துவிட்டேன் நான்!
காத்திருக்கிறேன் 
என் தேனினைப் பருக வரும்
என் காதலன் வண்டிற்காக!
சூரியன் வந்துவிட்டான்!
காதலனே! எங்கே சென்றாய்?
என் தேனும் வற்றுகிறதே! 
 
காத்திருந்துக் காத்திருந்து 
பொழுதே சாய்ந்திட்டது
என் காதலனைக் காணாது
என் மகரந்தமும் சோர்ந்துவிட்டது!
 
நாங்கள் இயற்கையில் அமைந்த பௌ (Bow) பட்டன்கள்! எவ்வளவு அழகாய் இருக்கிறோம் இல்லையா!!
காலையில் மலர்ந்து
மாலையில் வாடுகிறோம்
வாழ்வதே ஒரு நாள்!
இடையில் எங்களை 
ஏன் கொய்து பிய்த்துக் குதறுகிறீர்கள்!
நீங்கள் கட்டடங்களாகக் கட்டிக் கொண்டே போனால் நாங்கள் வளர்ந்து மலர்வதற்கு இடமே இல்லாமல் போகுமே! நீங்கள் வாழ்வதற்கு நாங்களும் மிகவும் முக்கியம் மக்களே! 
நாங்கள் மலர்வதே 
உங்களை மகிழ்விக்கத்தான்! 
உங்கள் மரணத்தில் நாங்கள் மிதிபட்டு 
மரணமடைகிறோம்!
உங்கள் திருமணத்திலும் நாங்கள் மிதிபட்டு
மரணமடைகிறோம்! 
முரண்!
 
பூப்போன்ற பூவையர் 
என்று  உவமையுடன் 
சொல்லும்  நீங்கள்
பூவாகிய எங்களைப் பிய்த்து மிதிப்பதேனோ?
பூப்போன்ற பூவையரை
 மிதித்துத் துன்புறுத்தாதீர்
என்று குரல் கொடுக்கும் நீங்கள்
இளம் பூவையர் எங்களையும்
காப்பதற்குக் குரல் கொடுங்களேன்!
பூப்போன்ற மனம்
என்று சொல்லிவிட்டு
வேதனையுறும் வார்த்தைகளை
உதிர்க்கலாமோ?
எங்களயும்தான்!
நாங்கள் விரும்புவதும் இயற்கை மரணத்தைதான்!

நாங்கள் வீழ நினைப்பதும் நாங்கள் பிறந்த நிலத்தில் தான் குப்பைத் தொட்டியிலல்ல…வீழ்ந்தாலும் உரமாவோம்!

உங்கள் வீடு வண்ணமயமாக வேண்டுமா?! எங்களைத்தான் நாடுவார்கள் வண்ணத்துப் பூச்சிகள்! நீங்கள் அலங்காரமாக வைக்கும் ப்ளாஸ்டிக் பூக்களை அல்ல! எங்களைப் போற்றுங்கள்! உங்கள் வீட்டினை நாங்கள் அலங்கரிக்கிறோம்! 
வண்ணத்துப் பூச்சிகளுடன், புள்ளினங்களுடன்!

 நாங்கள் மிகவும் பொறுமைசாலிகள்! சரிதானே!!?

எங்களை உற்று நோக்குங்கள்! உங்களை அறியாமலேயே நாங்கள் உங்கள் முகத்தில் மலர்வோம்! புன்சிரிப்பாய்!!! புன்சிரிப்பு மன அழுத்தத்தை மாற்றிவிடும் தெரியுமா!!!

நான் பாடும் மௌன ராகம் கேட்கிறதா!!

யப்பா! என்ன வெயில்! நீங்களெல்லாம் வெயிலுக்கு ஒதுங்கிடறீங்க! எங்களையும் கொஞ்சம் நிழல்ல வையுங்கப்பா! கருத்துப் போயிடுவோம்ல!  

இயற்கை அன்னை மௌனமாக இசைத்திடும் இசையாய் நாங்கள்!

இயற்கை அன்னை எங்கள் வழியாய் புன்சிரிப்பை உதிர்க்கிறாள்! உங்களுக்கும் அது பரவட்டும்! 
நாங்கள் ஒவ்வொருவரும் மலர்கிறோம்! அருகருகே இருக்கும் எங்களுக்குள் போட்டியில்லை…பொறாமையில்லை! 

 எங்கள் இதழ்களைப் பிரிக்காமல் அழகை ரசியுங்கள்!




வண்ண வண்ண இலைகள் வடிவில் பூக்களாய்
நாங்களும் அழகுதான் இல்லையா!

எனக்குக் கவிதை எழுதத் தெரியாது! எனவே பூக்கள் பேசுவது போல என் மனதில் தோன்றிய எண்ணங்களே இங்கு! ஆயின், அருமையாகக் கவிதை எழுதுபவர்களும் நம் வலை உறவுகளில் இருக்கிறார்கள். பெண் பூக்கள் - நம் தோழி/சகோதரி தேனம்மை அவர்கள் எழுதிய இப்புத்தகத்தில் பூக்களின் உணர்வுகளை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். புத்தக விமர்சனத்தை இங்கு 1, (எங்கள் ப்ளாக்) 2. (வை கோ சார் ப்ளாக்) காணலாம். 
வித விதமான பூக்களை மிக மிக அழகாக, மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும்படி மனதைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் படம் பிடித்துத் தனது தளத்தில் பகிர்ந்து வரும் தோழி கீதா மதிவாணன் அவர்கள் தற்போது பூக்களைப் பற்றி விவரமான தகவல்களுடன் எழுதத் தொடங்கியுள்ளார். 

-----கீதா