புதன், 27 ஆகஸ்ட், 2014

விசாலிப் பாட்டியும் எபோலாவும் - 2


(“டேய் விச்சு, என்னையா தேடற?  நாந்தாண்டா இது, எப்படிடா இருக்கே கோந்தே?” என்று அந்த பர்தா உருவத்திற்குள் இருந்து குரல் வரவும், சேச்சுவும், விச்சுவும் ஆச்சரியமாகவும், குழப்பத்துடனும் பார்த்து, ஏதோ சொல்ல ஆரம்பிக்க, விச்சுவின் அலைபேசி கூவியது.) நேற்றையத் தொடர்ச்சி இதோ.....
  
      “சார், நீங்கள் விஸ்வநாதன் சேஷாத்ரி தானே? உங்களைத் தொந்தரவு படுத்துவதற்கு மன்னிக்கவும். நாங்கள் ஏர்போர்ட்டிலிருந்து பேசுகின்றோம். நீங்கள் தயவு செய்து உடனே ஏர்போர்ட் அத்தாரிட்டியைச் சந்திக்க வேண்டும்.  எங்கள் அதிகாரி ஒருவர் உங்களை வந்து அழைத்து வருவார்.  நீங்கள் இப்போது எங்கிருக்கின்றீர்கள்?” விச்சுவுக்குக் குழப்பம்.

      “சார், நான் பார்க்கிங்க் ஏரியாவில்தான் இருக்கின்றேன். கார் மாருதி ஈக்கோ..... கார் நம்பர்....”...” சார், மன்னிக்கவும். காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?”

      “சாரி, எங்களுக்கு WHO லிருந்து இப்போதுதான் தகவல் வந்தது.  நீங்கள் எபோலாவுக்கு எக்ஸ்போஸ் ஆகியிருக்கலாம் என்று. நீங்கள் அங்கு, லாகோஸ் ஏர்போர்டில் தரப்பட்ட ஃபார்மில் நிரப்பிக் கொடுத்த தகவலின் படி வந்த சந்தேகம். உங்கள் அருகில் அமர்ந்து பயணித்தவர்களுடன் நீங்கள் உரையாடினீர்களா?  அவர்களைத் தொட்டீர்களா? இன்னும் சிலர் இந்த லிஸ்டில் உள்ளனர்.  எல்லோரையும் க்வாரண்டைன் செய்து, நாங்கள் டெஸ்ட் செய்ய வேண்டும். இது எங்கள்  கடமை சார்.  அதற்குத்தான்.  இப்போது உங்கள் அருகில் யார் இருக்கின்றார்கள்? தயவு செய்து சற்று தள்ளி இருக்கவும்” என்றதும்தான் யோசித்தான் விச்சு, தான் அப்படி என்ன எழுதினோம் என்று!
 
“ஓ!  ரெண்டு நாளா,  சின்ன தொண்டைக் கமரல், ஜலதோஷம் இருந்ததை எழுதியிருக்கப்படாதோ?  இப்ப எனக்கே எபோலா தோஷம் வந்துடுத்தோ? இவா என்னல்லாம் பண்ணப் போறாளோ” என்று தனக்குள் யோசிக்க அடி வயிற்றில் அட்ரினலைன் தன் வேலையைத் தொடங்கியது.  பாட்டிக்கு அந்த ஆங்கில உரையாடலில் இருந்து புரிந்து கொள்ள முடிந்த ஒரே வார்த்தை எபோலா டெஸ்ட் மட்டுமே! உடனே பாட்டி விச்சுவிடமும், சேச்சுவிடமும்,

“விச்சுவுக்கு எபோலாவாவது மண்ணாவது, ஒண்ணும் வராது.  நான் அவனுக்கு என்னவெல்லாம் கஷாயம், மூலிகை எல்லாம் கொடுத்து அவனுக்கு ஒரு சின்னத் தலைவலி கூட வராம பாத்துண்டேன் தெரியுமா? இப்பவும் அவன நான் பாத்துக்கறேன். இங்க பாருடா, விச்சு நான் சொல்ல்லற படி கேளு..ஒரு 10 நிமிஷம்தாண்டா...கொஞ்சம் பொறுமையா இரு....அதுக்கு அப்புறம் உன்ன அவா கூட்டிண்டு போய் டெஸ்ட் பண்ணட்டும்........உனக்கு டெஸ்டுல ஒண்ணும் வராது வேணா பாரேன்.” 

சேச்சுவிற்கு சரியான கோபம். பக்கத்திலிருந்த ஓட்டுனர்கள் இப்போது இன்னும் சற்று நெருங்கி வந்து வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.  சேச்சு பல்லைக் கடித்துக் கொண்டு, மிக மெல்லிய குரலில் கோபம் கொப்பளிக்க,

“என்னம்மா இது சீன் ஏர்போர்ட்ல...இதெல்லாம் ஆத்துல பண்ண வேண்டியதுதானே...இப்ப அந்த ஆஃபீஸர் வருவர் அவரோட இவன அனுப்பணும்...மூட்டைக் கட்டு உன் சாமான்லாம்....”

 “ஏண்டா சேச்சு என்னக் கோச்சுக்கற. எபோலானா பக்கத்துல இப்படி வெறுமன எல்லாம் போக்கூடாது. என்ன மாதிரி முழுசா கவர் பண்ணிண்டுதான் போகணும்.. நோக்குத் தெரியாதா..”

சேச்சு ஏற்கனவே எலி.....இப்போது, எபோலா கிலியில் வேறு இருந்தார்.... என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்க சுற்றி நடப்பது என்னவென்று அனுமானிக்க முடியாத ஒரு நிலையில் இருந்தார். 

“என்ன பாட்டி இது? என்ன செய்யப் போற?” இது விச்சு, அடுத்த கிலி பிடித்த எலி.

“சும்மா இருடா கோந்தே. நீ வேடிக்கை மட்டும் பாரு. கேள்வி கேக்கப்படாது.  நோக்கு பாட்டி மேல நம்பிக்கை இருக்கோல்லியோ?” என்று சொல்ல, விச்சுவும் “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்று இருந்ததால் “ஏதோ எபோலா இல்லாமல் இருந்தால் போதும்...அது மாயமோ, மருந்தோ என்ன எழவோ.......எதுவாருந்தா என்ன” என்று பேசாமல் திக்பிரமை பிடித்து, பொம்மையாக இருந்தான்.  விச்சுவை காரின் டிக்கியில் உட்காரச் சொன்னார். மேல் சட்டையைக் கழற்றச் சொன்னார்.

பாட்டி, தான் கொண்டுவந்த உப்பை, பாட்டிலில் இருந்த தண்ணீரில் கரைத்து, அதில் எலுமிச்சம் பழத்தையும் பிழிந்து, மஞ்சள் பொடியும் கலந்து,

“இந்தத் தண்ணியால உடம்ப நன்னா க்ளீன் பண்ணிக்கோ கண்ணா.  அப்புறம் டவலால நன்னா துடைச்சுக்கோ”

பின்னர், அந்தத் தண்ணீரால் ப்ரானிக் ஹீலிங்கில் செய்வது போல உடம்பைத் தொடாமல் கையால் வருடி வருடி கழிசல் செய்து, திருஷ்டி கழித்தார். அதாவது அவரது மொழியில் சொல்வதென்றால், உடம்பிலிருந்து எதிர்மறை சக்தியை வழித்து எடுத்தார்.  மீதமிருந்தத் தண்ணீரை விச்சுவின் தலை முதல் கால் வரை தெளித்துக் கழுவச் சொன்னார்.  பின்னர் மிளகாயையும், உப்பையும் கையில் வைத்துக் கொண்டு விச்சுவை சுற்றி மாற்றி மாற்றி சுற்றிவிட்டு, திருஷ்டி கழித்து

“விச்சு, துப்புடா கண்ணா” என

“அம்மா என்னம்மா நீ?  அவன உன் கையில துப்பச் சொல்லற? எம்மா...” என்று சேச்சு சொல்லி முடிக்கும் முன்

“டேய், சேச்சு எனக்கு ஒண்ணும் தெரியாதுனு நினைச்சியா.  இங்க பாருடா கையில க்ளவ். இங்க பாரு கிண்ணம். இதுலதான் மிளகாயும், உப்பையும் போட்டுருக்கேன்”

அதில் விச்சுவைத் துப்பச் சொன்னார்.  அவற்றைத் தனியாக எரிக்க வேண்டும் என்று ஒரு பையில் போட்டுக் கொண்டார்.  பின்னர் விபூதியையும், குங்குமத்தையும் நெற்றியில் தீட்டி, உடம்பு முழுவதும் தேய்த்துக் கொள்ளச் சொல்லி, வேப்பிலையால் உடம்பு முழுவதும் வருடிவிட்டு, இலைகளைப் பிய்த்து, விச்சுவின் கையில் கொடுத்து கசக்கச் சொல்லி, அதனுடன் மஞ்சள் பொடியும் கலந்து, அதை உடம்பு முழுவதும் தேய்த்துக் கொள்ளச் சொன்னார். வெற்றிலையையும், மிளகையும், துளசியையும் வாயில் போட்டு மெல்லச் சொன்னார். சூடன் கொளுத்தி திருஷ்டி கழித்தார்.  விச்சுவை ஒரு விதமாக மந்திரவாதச் சாமியாராக்கிவிட்டிருந்தார்.
 
“விச்சு நீ இனிமே எங்க வேணா போய்க்கோடா கோந்தே! போகும் போது அவா டெஸ்ட் பண்ணும் போதும் கந்த சஷ்டிக் கவசத்தைச் சொல்லிண்டே இருன்ன....நோக்கு எபோலாவது ஒண்ணாவது ஒண்ணும் அண்டாது” என்று சொல்லிக் கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டினார்.

சுற்றி இருந்தோர் இதையெல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க...செய்தி வேகமாகப் பரவ...அங்கு வந்த ஏர்போர்ட் அதிகாரிக்கு அந்தக் காட்சியைப் பார்த்து ஒன்றுமே புரியவில்லை. விச்சுவை எங்கே என்று தேடினார், பாட்டியின் உடையைப் பார்த்து சந்தேகம் தோன்ற அவர் கேள்வி மேல் கேள்வி கேட்க,  விச்சுவும், சேச்சுவும் மாறி மாறிச் சமாளிக்க,  ஒரு வழியாக விச்சுவைத் தனியாக அழைத்துச் சென்றார்.  அவனது பேக்கேஜ்களுக்குத் தனியாக ஒரு பெரிய ப்ளாஸ்டிக் உறை போட்டனர். 

வெளியில் சேச்சு, நகம் கடித்தார். எல்லா தெய்வங்களையும் அழைத்தார். பாட்டியுடன் சேர்ந்து கோயில்கள் வரிசைப்படுத்தப்பட்டு லிஸ்ட் தயாரிக்கப்பட்டது. இடையில் வீட்டிலிருந்து விஜயா கூப்பிட

“எபோலாவா...ஓ மை காட்” என்று விஜயா, கிச்சு, சுப்ரஜா மூவரும் பேயறைந்தது போல ஆயினர்.

 பாட்டி மட்டும் மிகவும் தைரியமாக சஷ்டிக் கவசம் சொல்லிக் கொண்டிருந்தார். வேகமாகப் பரவியச் செய்தியால் பலர் பாட்டியைச் சூழ்ந்தனர்.  அவர் என்ன செய்தார் என்ற கேள்வியுடன்...

8 மணி அளவில் விச்சு வாயெல்லாம் பல்லாக வெளியில் வந்தான். பாட்டிக்குப் பெருமை தாங்கவில்ல.  ஏதோ தனது பிரானிக் ஹீலிங்க், உப்பு கழிசல், திருஷ்டி சுத்தல்தான் எபோலாவை விரட்டியது போல. அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்து, WHO சொல்லியதையே இந்தப் பாட்டி முறியடித்துவிட்டாரே என்று சொல்லி பாட்டியைச் சூழ்ந்து கொண்டனர்.  செய்தி விரைவாகப் பரவியதுதான் தாமதம், வெளிநாட்டுப் பயணிகளும், நம்மவர்களும் பாட்டியைச் சூழ்ந்து விச்சுவுக்குச் செய்ததை செய்யச் சொல்லி வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டனர்.

சேச்சு, மயங்கி விழாத குறைதான்..  யாரும் அவரது வார்த்தைகளைக் கேட்பதாக இல்லை. எல்லோருக்கும் எபோலாவிலிருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே!

காட்டுத் தீயை விட அதி வேகமாகச் செய்தி பரவியதால், ஊடகங்கள் கூடிவிட்டன.  செய்தி “பாசிங்க் ஆன் சீக்ரட்” போல் ஆகி, விசாலிப் பாட்டியை படிக்காத மேதையாக்கி டாக்டருக்கெல்லாம் டாக்டர் ஆக்கிவிட்டது. ஃப்ளாஷ்கள் பளிச்சிட்டன.  இளம் நிரூபர்கள் கையில் ஐப்பாடுடன்/ஐப்பேடுடன் பேட்டி எடுக்க ஆரம்பித்தனர். பயணிகளைக் கூட்டிச் செல்ல குழுமி இருந்த கால் டாக்ஸி ஓட்டுநர்களும், உறாவினர்களும் அவர்களை மறந்து, பாட்டியை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

“பாட்டி, வாட் மேஜிக் ஆர் மெத்தட் டிட் யு அப்ளை ஆன் யுவர் க்ரான்ட் சன்?” என்று ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகை நிரூபர் கேட்க, அதை ஒரு தமிழ் பத்திரிகை நிரூபர் தமிழில் சொல்ல, பாட்டி நிரூபர்களுக்கு அடுத்த கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் பெரிய விரிவுரை, விளக்கவுரையே கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.  எல்லா சேனல்களிலும், தேசீய சானல்கள் உட்பட, நேரடி ஒளிபரப்பாகியது.

எல்லாத் தொலைக்காட்சிகளிலும், பெண்கள், சமயலறையையும் மறந்து மெய்மறந்து பார்க்கும் அழுவாச்சித் தொடர்கள் கூட பின்வாங்கின, மக்கள் தங்கள் “மெய்” பற்றியக் கவலையில் ஆழ்ந்ததால்.  செய்திகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு, ஃப்ளாஷ் செய்திகள் உடனுக்குடன் ஃப்ளாஷ் அடித்துக் கொண்டிருந்தன. ஆண்கள் எல்லோரும் எபோலாவுக்கும், விசாலிப் பாட்டிக்கும் நன்றி தெரிவித்தனர் தங்களுக்கு டிவி ஸ்லாட் கிடைத்ததால்.  நாடெங்கும் எல்லா ஊடகங்களின் நிரூபர்களும், பட்டி தொட்டிகளில் எல்லாம் மைக்குடன் அலைய ஆரம்பித்தார்கள், மக்களுடன் உரையாடி, எபோலா பற்றி மக்களின் கருத்தை அறிய வேண்டி.

டிவியில் ம்யூசிக் சானல் பார்த்துக் கொண்டிருந்த சுப்ரஜா,

“கிச்சு அண்ணா, விச்சு அண்ணாவைக் கூட்டிண்டுவர ஏர்போர்ட் போன அப்பா, பாட்டி அண்ணாவோடு இன்னும் வரலையே? அண்ணாவுக்கு எபோலா வந்துருக்குமோ?”

“சும்மா இருடி உன் வாய வச்சுண்டு.  அபத்தமா பேசாத.  அண்ணாவச் செக் பண்ணிட்டு அனுப்புவா அவ்வளவுதான்” என்று கிச்சு பதில் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், டிவியில் திடீரென பாட்டி தோன்ற, அதைப் பார்த்து வியந்தனர் மூவரும்.

“விடிக்காலம்பற போனவாள இன்னும் காணலியேடி விஜயா என்னாச்சு?  ஃப்ளைட் லேட்டா?” என்று கேட்டுக் கொண்டே வந்த, பக்கத்து வீட்டுக் கோமுப் பாட்டி டிவியில் விசாலிப் பாட்டியைப் பார்த்ததும் மூக்கின் மேல் விரல் வைத்து டிவியைப் பார்க்க ஆரம்பித்தார்.

“மேஜிக்கும் இல்ல ஒண்ணும் இல்ல” என்று பேச ஆரம்பித்தார் விசாலிப் பாட்டி. “இதெல்லாம் நாங்க அந்தக் காலத்துலருந்து செஞ்சுண்டு வரதுதான்.   என் பேரனுக்குச் சின்ன வயசுலருந்தே மூலிகை எண்ணைக் குளியல்தான். மூலிகைக் கஷாயம்தான்...டாக்டர்கிட்ட கூட்டிண்டு போனதே இல்ல. தெனம், வேப்பில போட்டு, அதுல கொஞ்சம் மஞ்சள் பொடி, கடைல வாங்கினது இல்ல, மஞ்சள் கொம்பு வாங்கி ஆத்துல வெயில்ல லேசா காய வைச்சு, மெஷின்ல கொடுத்து அரைச்ச பொடி, அதக் கலந்து, எலுமிச்சம் பழம் பிழிஞ்சு அதுலதான் குளியல்.  எல்லாமே எங்காத்துல நாட்டு மருந்து பொடிதான். 

நீங்கல்லாம் எச்சல் பாக்க மாட்டேள்.  ஒருத்தர் சாப்ட எச்சல் தட்டுல இன்னொருத்தர் சாப்டப்படாது. நாங்க வாழை இலைலதான் சாப்டுவோம். காப்பி, தண்ணி எல்லாம் சூப்பிக் குடிக்கப்படாது. டம்ளர தூக்கித்தான் குடிக்கணும். சூப்பிக் குடிக்கணும்னா அதுக்குத்தான் இப்ப டிஸ்போசபிள் பேப்பர் கப் வந்துருக்கே அதத்தான் யூஸ் பண்ணனும். எச்சத் தட்டுல வேற யாராவது சாப்டா அந்தத் தட்ட நெருப்புல காமிக்கணும்.  நகம் கடிக்கக் கூடாது.

“அப்போ, முத்தம்? நிஜ வாழ்க்கையிலும் சரி, படத்துலயும் அதுவும் வேற வேற ஹீரோ, ஹீரோயின்....அதுக்கு என்ன சொல்றீங்க பாட்டி?” என்று நாக்கு கேள்வி கேட்கத் துரு துருக்க நின்றிருந்த புது நிரூபர், இது அவருக்குக் கன்னிப் பேட்டியாதலால், தான் கேட்க நினைத்தக் கேள்வியை அப்படியே முழுங்கிக் கொண்டார், கூட்டம் ஸ்தம்பித்துப் பாட்டியின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்ததால்.

அந்தக் காலத்துல நாங்கல்லாம் ஆத்து வாசல்ல சாணம் போட்டுதான் மொழுகுவோம்.  மாட்டுச் சாணத்துல கிருமி நாசினி இருக்கு தெரியுமோ.  நாங்க இன்னும் எங்காத்து வாசல்ல சாணம் போட்டுத்தான் தெளிக்கறோம். ஆனா இப்பல்லாம் மாடு பாவம் கண்டத, பேப்பர்ல்லாம் சாப்டறது. மஞ்சத் தண்ணி தெளிக்கறுதுண்டு. மஞ்சள் கிருமிநாசினி. வேப்பலைய ஆத்துல கட்டித் தொங்க விடலாம். வேப்பமரம் வளர்க்கறோம். தினமும் துளசி இலை சாப்பிடறதுண்டு. துளசிச் செடி வளர்க்கறோம். நெல்லிக்காய். அத நெல்லிமுள்ளியாவும் பண்ணிவைச்சுண்டு சாப்பிடலாம். திரிபலா ரொம்ப நல்லது.  இதெல்லாம் நம்ம இம்யூன் சிஸ்டம வலுவாக்கும். என் பேரனுக்கு இதெல்லாம் கொடுத்துருக்கேன். வெளில போய்ட்டு, ஆத்துக்குள்ள வரும்போது கால நன்னா அலம்பிண்டுதான் உள்ள போணும்.

“எல்லாம் சரி பாட்டி..... அடுக்குமாடிக் காலாச்சாரம்ல இப்ப?  எப்படிக் கால் கழுவறது உள்ள வரும்போது” என்று ஏதோ ஒரு சமயோசித புத்தியுள்ள நிருபரால் கேட்கப்பட்டக் கேள்வி காற்றில் கரைந்தது.

அப்புறம் மாமிசம் சாப்பிடறவாள சாப்டாதேன்னு சொல்லக் கூடாது, சொல்லவும் முடியாது. இப்போ ஆப்பிரிக்காவுல மாமிசத்துலருந்து கூட எபோலா பரவரதுன்னு சொல்லிண்டுருக்கா...அதனால மாமிசம் சாப்பிடறவா எல்லாரும் அத நன்னா வேக வைச்சுச் சாப்பிடுங்கோ. 

நான் வாரத்துல ரெண்டு நாள் திருஷ்டி சுத்திப் போடுவேன். உப்பு கழிசல்னு சொல்லுவா. அதாவது கிட்டத்தட்ட ப்ரானிக் ஹீலிங்னு சொல்லலாம். நெகட்டிவ் எனர்ஜிய உடம்புலருந்து வழிச்சு எடுக்கறதுதான் அது. ஆத்துல உப்புத் தண்ணிய தெளிப்போம்.  கடல்லருந்து கூட கொண்டுவந்து தெளிக்கலாம்.  இதெல்லாம்தான் நான் செய்யறது. நீங்கல்லாம் என்னவோ சயின்ஸ் படிச்சுட்டு நெறய கேள்வி கேக்கறேள்.  நேக்கு சயின்ஸ் தெரியாது உங்களுக்குப் பதில் சொல்ல. அந்தக் காலத்துல பெரியவா செஞ்சத நாங்கல்லாம் கேள்வி கேக்காம செஞ்சுண்டு வரோம். அதுவும் சயின்ஸ்தான்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே....

கடைகளில் உப்பு, மிளகாய், மஞ்சள்,மிள்கு, வெற்றிலை, நெல்லிக்காய், க்ளவ், உடல் முழுதும் மறைக்கும் அங்கி என்று கிராக்கி ஆரம்பித்தது. கடல் நீர் வீடுகளுக்குச் சப்ளை செய்ய விவாதங்கள் நடக்கத் தொடங்கியது. நாட்டு மருந்துக் கடைகளில் திரிபலா, நெல்லிமுள்ளி என்று குரல் கேட்க ஆரம்பித்தது. எல்லா வீடுகளிலும், அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலும் வேப்பமரம், துளசி, வாழை எப்படி வளர்ப்பது என்ற விவாத மேடை அரங்கேற்றப்பட்டது. மெயிண்டனன்ஸ் கூடலாம் என்ற பேச்சு அடிபட்ட போது பலரும் ரிவர்ஸ் எடுக்கலாமா என யோசித்தனர்.

எல்லா வீடுகளிலும் வாசலில் சாணம் தெளித்து மொழுக வேண்டி. மாட்டுச் சாணத்திற்காக, மக்கள் மாட்டைக் கண்டால் அதன் பின்புறம் சென்று வாலைத் தூக்குகின்றதா என்று பார்த்து கையில் ஒரு வாளியுடன் நிற்க ஆரம்பித்தனர். மாடு வளர்ப்பவர்கள் தீனிக்காக மாட்டைச் சாலையில் அலைய விடாமல், தொழுவத்தில் கட்டி, நல்ல தீவனம் வாங்க ஏற்பாடு செய்யப் போவதாகவும், மாடு வளர்ப்பவர்கள் சாணத்தைச் சேகரிக்க ஆரம்பித்து விற்கத் தயாராவதாகவும், இன்னும் மாடுகள் வாங்கலாமா என்று யோசிப்பதாகவும், மாடு வளர்க்காதவர்கள் கூட வளர்க்க வேண்டி மாடுகளை விலை பேசத் தொடங்கப் போவதாகவும், அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து மாடுகள் வளர்க்க முடிவு செய்ததாகவும், அதனால், இன்னும் அதிகம் மாடுகள் சந்தையில் விலை போகும் என்றும் தகவல்கள் கசிய ஆரம்பித்தது.

இப்படியாகக் கால்நடை, விவசாயம் பக்கம் மக்களின் கவனம் செல்லத் தொடங்கலாம் என்றும், இந்தியாவின் தொழில் திட்டங்களிலும், பொருளாதாரச், சந்தையிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும்,  ஐடி துறையினர் கூட இந்தத் துறையை மெதுவாக எட்டிப் பார்க்கத் தொடங்கிவிடுவர் என்றும் எல்லா செய்திச் சானல்களிலும் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட விவாதங்கள், கலந்துரையாடல்களில் பொருளாதார நிபுணர்கள், வணிகத் துறையினர், அரசியல் கட்தித் தலைவர்கள் எல்லோரும் காரசாரமாக விவாதிக்கத் தொடங்கினர்.

பொதுமக்கள், எல்லா ஏர்போர்ட்டிலும் விசாலிப் பாட்டி மாதிரி பாட்டிகள் ப்ரானிக் ஹீலிங்க்/திருஷ்டி கழிசல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க, எல்லா ஊர்களில் இருந்தும் பாட்டிகள் வரவழைக்கப்பட்டு விசாலிப் பாட்டியிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் என்று சென்டிமென்டல் முதல்வர்களும், அதிகாரிகளும் உணர்வு பூர்வமாக முடிவு எடுத்தனர்.

மருத்துவர்கள் எல்லோரும் இந்தத் தகவல்களைக் கேட்டு, என்ன செய்வது என்று அறியாமல், தலையில் அடித்துக் கொண்டு,  கப்பல் கவிழ்ந்தது போல் கன்னத்தில் கை வைத்தபடி இருக்க, ஜோசியர்களுக்கும் பெப்பே சொன்ன எபோலாவால் இனி டிவியில் தோன்ற முடியாதே என்று கவலை கொண்டு, ஜோசியர்கள் ஜோசியத்தில் எபோலாவுக்கு என்ன பெயர், அதைப் பற்றி ஜோசியம் என்ன சொல்லுகின்றது, அதற்கு அதிபதியான கிரகம் எது என்று ஜோசிய நூல்களை அலசித் தேட ஆரம்பிக்க, மறுபுறம் ஆயுர்வேத, சித்த, யுனானி, இயற்கை வைத்திய மருத்துவர்கள், தாங்கள் இனி டிவியில் தோன்ற முடியாமல், தங்களுக்குப் போட்டியாக இப்படி ஒரு பாட்டியா என்று கலந்தாலோசிக்க முடிவு செய்ததாகவும், மத்திய அரசும், மாநில அரசுகளும் எவ்வழிச் செல்வது என்று அறியாமல் திகைத்து நிற்பதாகவும ஒன்றிற்கு இரண்டாகத் தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தது.

தற்போது வந்த தகவலின் படி, இப்படி, இந்தியாவே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்க, “தளிர்” வலைத்தளப் பதிவர் சுரேஷ் அவர்கள் தன் வலைத்தளத்தில்,

ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வந்த தேனி வாலிபரின் இரத்த மாதிரி புனே ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழக சுகாதாரத் துறையின் அலட்சியத்தையே காட்டுகிறது.”  என்று செய்தி வெளியிட, மக்கள் எல்லோரும் பீதி அடைந்து, பாம்பைக் கண்டால் படையும் அஞ்சும் என்பது போய், எந்தப் புத்துக்குள் பாம்பு இருக்கோ என்பது போய், எபோலா எல்லோரையும் நடுங்க வைத்து, யாருக்குள் எபோலா இருக்கின்றதோ என்று, பர்தா உடையில் நடமாடத் தொடங்கிவிட்டதாகவும்,  தமிழத்தின் தலைவர்கள் உடனே அந்த வாலிபரை விசாலிப் பாட்டியின் முன் நிறுத்த எண்ணி, அவரைத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும் தகவல். கண்டுபிடித்து விசாலிப் பாட்டியின் முன் நிறுத்தலாமா என்றும் யோசனையாம்!  எனவே, “மக்கள் எல்லோரும் எபோலா பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று அரசும் கையைப் பிசைந்து கொண்டு அறிக்”கை” வெளியிட்டது.

பாட்டியின் பேட்டி எப்போது முடியும் என்று சேச்சு, விச்சு இருவரும் திகைத்து நிற்க,

எபோலா எபோலா கண்ணைக் கட்டும் எபோலாவாகியது. விசாலிப் பாட்டி “எபோலா பாட்டி”யாகியிருந்தார்!


பி.கு. அந்தத் தேனி வாலிபரை நீங்களும் தேடலாம். தகவல் அறிந்தால் தெரிவிக்கலாம்.  உபயோகமாக, சமூக சேவை செய்ததாக, இருக்கும். அந்த சாட்சாத், சித்தருக்கெல்லாம் சித்தராகிய, மருந்தீஸ்வரர் உங்களுக்கு அருள் புரியக் கடவது!  ஏன் தமிழ்நாடு அரசின் அவார்ட், 18 வயதிற்குள்ளிருந்தால், நாஷனல் ப்ரேவரி அவார்ட் கூட கிடைக்கலாம், இத்தனை மக்களைக் காப்பாற்றியதற்கு! யார் கண்டார்கள்! 

படங்கள்-கூகுள்-இணையம்

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

விசாலிப் பாட்டியும் எபோலாவும்

சென்னை விமான நிலையம்  படம்-கூகுள்

இனிய காலைப் பொழுதின், வழக்கமான பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது அந்த வீடு.  சமையலறையில் அந்த வீட்டு நிதி மந்திரி,  விஜயா, கௌசல்யா சுப்ரஜா....என்று சுப்ரபாதம் சொல்லிக் கொண்டு பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருந்தாள், ஆனால் அந்த வீட்டு கடைக்குட்டித் தேவதை சுப்ரஜாவை, நித்ராதேவி இன்னும் விடுவிக்கவில்லை. கல்லூரியில் இரண்டாம் வருடம் அமைதியான படிப்பு....அதாங்க பிகாம்.....படிக்கும் அந்த தேவதை கனவில் தன் நாயகனுடன் பனிச்சருக்கு விளையாடிக் கொண்டிருந்ததை அடுப்பிலிருந்த குக்கர் மாமி எப்படி அறிந்தாளோ தெரியவில்லை, விசில் அடித்தாள். வழக்கமாகக்  கரகரப்ரியாவில் கீதம் இசைக்கும் மிக்சி மாமிக்கு என்ன ஆயிற்றோ, அன்று கொரகொரப்ரியாவில் இசைத்துக்  கொண்டிருந்தாள்.

“ம்ம்ம்மா....காஃபி.....”  இது அந்த வீட்டு இரண்டாவது மகன் கிருஷ்ணா, சுருக்கமாகக் கிச்சு. வருங்காலத்தில் எஞ்சினை ஓட்டும் - எஞ்சினீயரிங்கில் இறுதிவருடம். அம்மா சுப்ரபாதத்தில் இருப்பதைக் கண்டு,

“ம்மா நேத்திக்கு ராத்திரி முழுசும் யாரும் தூங்கவே இல்ல...பக்கத்து கோயில் அம்மன் கோயில் கொட்டு...வேட்டு சத்தம்...அதுக்கு அப்புறம்......செம மின்னல்....இடி..நம்ம தலைல வந்து விழறா மாதிரி......அப்புறம் எதுக்கு சுப்ரபாதம்?”

“டேய்! இது ஸ்வாமிக்கு...உங்களுக்கில்ல.......”

“நான் சுப்ரஜாவுக்குனு நினைச்சேன்.....அய்யயோ...!!. 24 ஹவர்ஸ் நான் ஸ்டாப் செர்வீஸ் செய்யற உம்மாச்சி கூட அசந்துட்டாரா....அடப் பாவமே....சூப்பர் மேன் நம்ம பண்ற அட்டகாசத்துனால டயர்டாயி தூங்கிட்டார் போல...ஸோ பேட்...ஸோ பேட்...அவர் பாவம்மா...கொஞ்சம் தூங்கட்டும்மா”

“ஏய்! கிச்சு...போறும் உன் நக்கல், நையாண்டி....இந்தா காஃபி......குடிச்சுட்டு ஒழுங்கா கிரிக்கெட் ப்ராக்டீஸ் போற வழிய பாரு....”

இத்தனை சப்தங்களின் நடுவில், ஹாலில் அலைபேசிக் குயில் கூவினால் விஜயாவுக்குக் கேட்குமா என்ன? ஆனால், பூஜை அறையில், கண்களை மூடிக்கொண்டு, கைகளை புடவைத் தலைப்புக்குள் வைத்துக் கொண்டு ஜபித்துக் கொண்டிருந்தாலும், பக்கத்து வீட்டில் ரகசியமாய் பேசப்படும் பேச்சுகள் காதில் விழும் அளவு செவிப்புலன் வாய்க்கப் பெற்றிருக்கும், 80 வயதை நெருங்கும் விஜயாவின் மாமியாரான, விசாலிப் பாட்டிக்குக் கேட்காமலா போகும்! உடனே எழுந்து சென்று அலைபேசிக்கு உயிர் கொடுத்தார்.

“ஹலோ, குட்மார்னிங்க். விசாலி ஹியர்”. (பாட்டிக்குத் தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை).

“ஹை பாட்டி, நான் விச்சு பேசறேன்”.......விஜயாவின் மூத்த மகன் விச்சு. அவன் அடுத்தது சொல்ல வருவதற்குள்,

“டேய் விச்சு, கோந்தே நன்னாருக்கியாடா? சேச்சு (அவரது மகன், விஜயாவின் கணவர்) வாக்கிங்க் போயிருக்கான்....உன் தம்பி கிச்சு வழக்கம்போல கிரிக்கெட்.....சுப்ரஜா எழுந்துருக்கல....ஆவணியாவட்டம் அன்னிக்கு உன் அழுக்குப் பூணலை மாத்தினியோ?...உன் ஃப்ரெண்டு பாச்சாக்கு......” என்று இழுக்க

“ஐயோ பாட்டி கதை எல்லாம் நாளைக்கு அங்க வந்தப்புறம் கேக்கறேன்..... அம்மாகிட்ட கொஞ்சம் ஃபோனைக் கொடேன்....”

“டேய்! நீ நாளைக்கு இங்க வரியா!!! ஓ! அப்போ நீதான் நாளைக்கு வந்துடறியே....நாளைக்கு வந்து அம்மாகிட்ட பேசிக்கோயேன்....நீ வர்ரத அம்மாகிட்ட சொல்லணும் அவ்வளவுதானே நான் சொல்லிக்கறேன்...”

“ஐயோ பாட்டீ...ப்ளீஸ்...அம்மாகிட்ட கொடு....”

“ஹூம்...போடா போ” என்று அலுத்துக் கொண்டு கையில் மொபைலுடன் சமையலறையை நோக்கி, “விஜயா...விஜயா....உன் அருமை பிள்ளாண்டன் விச்சுட்டருந்து ஃபோன் என்று சொல்லிக் கொண்டே சென்றார்.

இந்த வீட்டில், விஸ்வநாதன் என்றால் விச்சு, சேஷாத்திரி என்றால் சேச்சு, கிருஷ்ணா என்றால் கிச்சு/கிச்சா, பார்த்தசாரதி என்றால் பாச்சு/பாச்சா, என்று எல்லா பேர்களையும் “உச்சு”க் கொட்டுவார்கள் இல்லையென்றால் “ச்சா” கொடுப்பார்கள். அஸ்வின் “அச்சு”  ஆகிவிடுவான். பாச்சா என்றால் கரப்பான் பூச்சி என்றோ, ரஜனிகாந்தின் பா(ட்)ச்சா என்றோ நீங்கள் நினைத்தால் அது உங்கள் இஷ்டம். அப்போ மூர்த்தியை “ச்சா” போட்டு அழைப்பார்களா, ”ச்சு” போட்டு அழைப்பார்களா என்று என்னைக் கேட்கப்படாது.

இந்த விச்சு நைஜீரீயாவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன் ஆஃபீஸ் ப்ராஜெக்ட்டுக்காக அனுப்பப்பட்டவன். என்ன வேலை, என்ன ஆஃபீஸ் என்றெல்லாம் கேட்கப்படாது. எல்லாம் ஐடி சம்பந்தப்பட்ட மொழிகள்.. தற்போது நமக்கு வேண்டாம். 

ஃபோனை விஜயாவின் கையில் கொடுத்த விசாலிப் பாட்டி காதை தீட்டி வைத்துக் கொண்டார்.

“விச்சு சொல்லுடா......என்னடா இந்த நேரத்துல...உனக்கு இப்ப அங்க ராத்திரி 1.30 மணிலியோ.....என்னடா பண்ணற.....?”

“அம்மா, நான் இப்ப அவசர அவசரமா கிளம்பிண்டுருக்கேன்......இன்னிக்கு இங்க லாகோஸ்லருந்து கார்த்தால 9.20 க்கு ஃப்ளைட்.  நாளைக்கு அங்க (சென்னை) விடிக்காலம்பற 3.50 க்கு ஃப்ளைட் லாண்ட் ஆகும். அபுதாபி வழியா.  மத்த ஃப்ளைட் டிடெய்ல்ஸ் எல்லாம் அப்பாவுக்கு மெயில் பண்ணறேம்மா”

“ஐயோ டேய் கண்ணா....என்னடா...சொல்லற...இப்ப அங்க எபோலா ப்ரேக் அவுட் ஆயிருக்கேடா.........அப்போ எபொலாவோட வரீயா....நேக்கு பயமா இருக்குடா...”

“என்னம்மா நீ...என்ன அம்மா நீ...உன் பிள்ளைம்மா நான்.... 2 வருஷம் கழிச்சு வர்ரேன்... சந்தோஷமா கேப்பியா......எபோலா பத்தி நீ இப்படி பயந்தா எப்படிம்மா.....அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.....எப்படிருந்தாலும் இங்கயும் சரி...அங்கயும் சரி ஏர்போர்ட்ல செக் பண்ணித்தான் உள்ள விடுவா.....அப்புறம் என்னம்மா.”

“டேய் கண்ணா....உனக்கு ஒண்ணும் இல்லியே......நேக்கு பயமா இருக்குடா.”   மறுபுறம் பதில் இல்லை.  ஃபோன் கட் ஆகிவிட்டது.

விசாலிப் பாட்டியின் காதில் “அப்போ எபோலாவோடு வர்ரியா” என்பது மட்டும் காதில் வடிகட்டப்பட்டது. பாட்டியின் மண்டைக்குள் ரத்த ஓட்டம் அதிகரித்தது. மூளை அதி வேகமாகச் சிந்திக்கப் பல காட்சிகள் விரிந்தன.

 “ஓ! என்னவோ எபோலாவாமே...அவனோடு வரதாமே! என்ன பிள்ளாண்டன் இவன்...சேச்சு என்ன சொல்லப் போறானோ? கண்றாவி...எபோலானா.....ஆப்பிரிக்கா பொண்ணோ?....கறுப்பா...இந்த தலை முடி எல்லாம் பின்னி பின்னி என்னமோ கண்றாவியா எல்லாம் பண்ணிண்டுருப்பாளே...அப்போ...அந்தப் பொண்ணு என்ன பாஷை பேசும்?  குயா..முயானா? அது புடவை கட்டிக்குமோ?  இல்ல அரை டிராயர்தான் போட்டுக்குமோ.....ஐயோ! ஆப்பிரிக்கா காரால்லாம் மாமிசம்னா சாப்பிடுவா...என்ன எழவோ...ஈஸ்வரா.....பக்கத்தாத்துக் கோமு கிட்ட இத டிஸ்கஸ் பண்ணியே ஆகணும்” என்று நினைத்தவாறே வாசல் பக்கம் அதி வேக நடையில் சென்றார், பூஜைக்கு லீவு! அன்றைய ஜெபம் எபோலாவாகியது!

“கோமு...கோமு...”  அவரது வீட்டு வராண்டாவில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் கோமு பாட்டி.

“என்ன விசாலி என்னாச்சு இப்படி ஒரு வேகம்...பாத்து வா...” கோமுப்பாட்டிக்கும் 75 வயதாகின்றது. இருவரும் நல்ல தோழிகள். 

“கோமு, நாளைக்கு என் பேரன் விச்சு ஆப்பிரிக்காவுலருந்து வராண்டி...என்னவோ எபோலான்னு ஒரு பொண்ணாம் அவளோடு வரானாம்...” என்று தன் ஊகங்களை எல்லாம் சொல்லிவிட்டு, “என்ன எழவோ... போ..இந்த வயசான காலத்துல இந்தக் கண்றாவி எல்லாம் பாத்துத் தொலைக்கணும் போல...அந்த ஈஸ்வரன் ஏன் என்ன இன்னும் விட்டு வைச்சுருக்கான்னு தெரில..” என்று புலம்பினாள்.

கோமுப் பாட்டிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. பெரிதாகச் சிரிக்கவும், விசாலிப் பாட்டிக்குக் கோபம் வந்துவிட்டது.

“ஏண்டி கோமு நான் இத்தனை சீரியஸா சொல்லிண்டுருக்கேன்...நீ என்னன்னா இப்படி விழுந்து விழுந்து சிரிக்கறயே”

“ஐயோ விசாலி...அந்த எபோலாங்கறது பொண்ணு இல்ல...அது ஒரு பயங்கரமான தொத்து வியாதி....இப்போ டிவில, பேப்பர்ல எல்லாம் அதானே நியூஸு.....அலறிண்டுருக்கு  நீ பாக்கலயா டிவில....”

“ஹும்...சுப்ரஜா...ம்யூசிக் சானல்....அதுல எல்லாம் அரைகுறையா டான்ஸ் ஆடிண்டுருக்கும்...நேக்குப் பிடிக்காது....பேரன் கிச்சு...கிரிக்கெட் இல்லனா...இங்கிலிஷ் படம்......விஜயா உக்காந்தானா சீரியல்....பாவம் என் பிள்ளை சேச்சு...அவனுக்கு நியூஸ் பாக்கணும்னா கூட இதுகள் எங்க கொடுக்கறது....நேக்கும் இதுகள் என்ன பாக்கறதோ அதானே...நோக்கு பரவால்லடி....உன் பிள்ளாண்டன் நியூஸ் பாக்கறதுனால லோக விஷயம் எல்லாம் அத்துப்புடி...ஹூம்”

“சரி பரவால்ல விசாலி இப்ப தெரிஞ்சுக்கோ. ஆப்பிரிக்கவுல எபோலானு ஒரு தொத்து வியாதி பரவ ஆரம்பிச்சுருக்காம். வைரஸ் நால பரவர விஷக் காய்ச்சல்டி அது.....அது ரொம்ப பயங்கரமன காய்ச்சல்டி.. வந்துதுனா. உசுர வாங்கிடும்...அதுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கலயாம்.... அதான் அங்கருந்தும், மத்த வெளிநாட்டுலருந்தும் வர்றவாள எல்லாரையும் டெஸ்ட் பண்ணி அந்த வியாதி இல்லனா தான் நம்மூர்ல, உள்ள விடுவா...இருந்துதுனா...அவாள தனியா வைச்சு ட்ரீட்மென்ட் கொடுப்பா...யாரும் பக்கத்துல போக முடியாது...அவா, வியர்வை, எச்சல், எதுனா நம்ம மேல பட்டுதுனா பரவிடும்...அதனால அவாள ட்ரீட் பண்றவா கூட உடம்பெல்லாம் மறைச்சுண்டு கண்ணக் கூட மறைச்சுண்டுதான் ட்ரீட் பண்ணுவா....சரி.....அப்போ நாளைக்கு விச்சு வரான்னா அங்கயே அவா டெஸ்ட் பண்ணிட்டுதான் அனுப்புவா இங்க வந்தப்புறமும்.....ஏர்போர்ட்ல அவா டெஸ்ட் பண்ணிட்டுதான் அனுப்புவான்னு நினைக்கறேன்”

இப்போது விசாலிப் பாட்டிக்கு அடி வயிற்றில் பயம் கவ்விக் கொண்டது.

“அதான் விஜயா அப்படி டென்ஷன் ஆனா போலருக்கு....பாவம்டி..அவளயும் தேத்தணும். ஈஸ்வரா, குழந்தைக்கு ஒண்ணும் இல்லாம வந்து சேரணும்...கோமு நீயும் விச்சுக்காக வேண்டிக்கோடி........நான் ஆத்துக்குப் போறேன்...சேச்சு வாக்கிங்க் போய்ட்டு வந்துருப்பான்...அவன்கிட்ட பேசணும்....” என்று சொல்லிவிட்டு, மனதில் வேறு ஏதோ சிந்தனைகளுடன் நடந்தார்.

வீட்டிற்குள் நுழைந்ததும், சேச்சுவின் ஷூ இருந்தது.  சேச்சு வந்தாச்சு. “டேய், சேச்சு, விச்சு நாளைக்கு வரானாம்,தெரியுமோன்னோ.”

“ம்.ம்... விஜயா சொன்னா.”

“நாளைக்கு நீ ஏர்போர்ட் போம்போது என்னையும் கூட்டிண்டு போ”

“அவன் ஆத்துக்குத்தானே வரான்....நீ எதுக்கும்மா அங்க எல்லாம் வந்துண்டு”

“இதப் பாரு என்ன நீ கூட்டிண்டு போயே ஆகணும்”  அம்மாவின் பிடிவாதம் தெரிந்த விஷயம்.  எனவே சேச்சுவிடமிருந்து மௌனம்தான் பதிலாகியது.

“குழந்தைக்கு திருஷ்டி சுத்திப் போடணும். ஆஃபீஸ்ல யாருமே ஆப்பிரிக்காவுக்குப் போக மாட்டேனுட்டா. இவன் மட்டும்தான் சரின்னு போனானோல்லியோ, இங்க உள்ளவா எல்லாரும் அவன் மேல திருஷ்டி போட்டுட்டா.”

சேச்சு தலையில் அடித்துக் கொண்டார்.  கிச்சு வீட்டுக்கு வந்ததும், அண்ணா வரப்போவதை அறிந்த அவன், அண்ணன் கொண்டு வரப்போகும் கிரிக்கெட் மட்டையால் விளையாடுவதைக் கனவு காண ஆரம்பித்தான். சுப்ரஜா, அண்ணன் வாங்கி வருவதாகச் சொன்ன, ஆப்ரிக்கப் பழங்குடி மக்களின் பாரம்பரிய உடையான “ஃபுலானி” உடையில், தன் தோழிகள் முன்னும், காதலன் முன்னும் வலம் வருவதாகக் கனவு காண ஆரம்பித்தாள். அம்மா எபோலா கவலையில், அப்பாவிற்கும் கவலை ஒருபுறம் இருந்தாலும், அவன் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்க, பாட்டி வேறொரு விதமாகத் தயாராகிக் கொண்டிருந்தார்.

“டேய், கிச்சு இங்க வா” என்று கூப்பிட்டு ரகசிய குரலில் பேச ஆரம்பித்தார். 

“கிச்சு, நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்”.

“பாட்டி, என்ன வேணாலும் பண்ணறேன்.  ஆனா எனக்கு நீ ஒரு 500 ரூபா தருவியா?  பாக்கெட் மணி.”

“தந்து தொலைக்கறேண்டா. நான் ஒரு லிஸ்ட் தருவேன்.  நீ அத வாங்கித் தரணும்.” என்று சொல்லி, பர்தா உடை, க்ளவ், மஞ்சள் பொடி பாக்கெட், கல் உப்பு பாக்கெட், எலுமிச்சம் பழம், மிளகு பாக்கெட், வெத்தலை, சூடன், சிவப்பு மிளகாய், வேப்பிலை என்று எழுதிக் கொடுக்கவும்,

“என்ன பாட்டி இது லிஸ்ட்?  எதுக்கு இதெல்லாம்...என்னவோ மந்திரவாதி லிஸ்ட் போலருக்கு”

“டேய் சத்தம் போடாத...500 ருபா....ஞாபகம் இருக்கட்டும்.  பேசாம போய் வாங்கிண்டு வா....ரகசியமா எங்கிட்ட தரணும்.....அதுக்கப்புறம் உன் ஹெல்மெட்டும், ஷூ, சாக்ஸ் எல்லாம் கொஞ்சம் நேரம் வேணும்.......வெளில யாருக்கும் தெரியக் கூடாது......500 ரூபா......” என்று 500 ருபாயை அவன் கண் முன் ஆட்டிக் காட்டினார்.

“ம்ம்ம் என்ன செய்ய...என் பொழப்பு இப்படி.....வாங்கிண்டு வரேன்...”

அடுத்த நாள் ஏர்போர்டிற்கு, சேச்சு காரோட்ட, பாட்டியும் உடன் சென்றார்.  விஜயாவும் வந்தால் மூன்று பேராகப் போகக்கூடாது என்பது பாட்டியின் சென்டிமென்ட்.  அப்படிப் போவதாக இருந்தால் சென்டிமென்ட் இடமாகிய 4 வது இடத்தை யாராவது நிரப்ப வேண்டும்.  டாமியைத் தவிர வேறு யாருக்கும் அந்த அதிகாலை நேரத்தில் நித்ரா தேவியைப் பிரிய மனமில்லை.  எனவே சேச்சுவும், பாட்டியும்.

ஏர்போர்ட் போனதும், பாட்டி, சேச்சுவை, டிக்கியைத் திறக்கச் சொல்லி, முதல் நாள், பாட்டி கிச்சுவின் உதவியுடன் காரின் டிக்கியில் யாருக்கும் தெரியாமல் ஏற்றியிருந்த தன் மூட்டையை எடுத்துக் கொண்டார். சேச்சுவுக்கு ஆச்சரியம் ஒரு புறம், கோபம் ஒரு புறம்.

“என்னம்மா இதெல்லாம்?  ஏர்போர்ட்டுக்கு எடுத்துண்டு வந்துருக்க?” என்று கேட்டவர்தான்....பாட்டியின் முறைப்பில் மௌனம் சாதித்தார், ஏர்போர்டில் ரகளை வேண்டாம் என்று. சிறு வயதிலிருந்தே அம்மாவின் வார்த்தைகளுக்கு இரண்டாவது முறை மறுத்துப் பேசிய பழக்கம் இல்லாததால்.

ஃப்ளைட் சரியாக 3.50க்கு லான்ட் ஆகி ¼ மணி நேரம் ஆகி இருந்தது. விச்சு வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகிவிடும் என்றாலும் சேச்சு பயணிகள் வெளி வரும் வாயிலையே பார்த்துக் கொண்டு எபோலா பற்றிய கவலையிலும் இருந்த வேளையில், 5 மணி ஆனதும்,

“சேச்சு, நான் கார் பக்கத்துல போய் இருக்கேண்டா. என்னைத் தேடாதே”

என்று சொல்லிவிட்டு, இன்னும் விடியாததால், பாட்டி மெதுவாகக் கொஞ்சம் தள்ளிக் கூட்டம் இல்லாத, ஏர்போர்ட் வெளிச்சம் சற்றுக் குறைவாக இருந்த கார் இருந்த இடத்திற்குச் சென்று, தன் மூட்டையைப் பிரித்து தன் சாமான்களை எல்லாம் வெளியில் எடுத்துத் தனது வேலையைத் தொடங்கினார். கார் மாருதி ஈக்கோ ஆதலால், டிக்கியே தன் வேலைக்கு வசதி என பாட்டி தீர்மானித்தார். அங்கு பக்கத்தில் நின்றிருந்த கார்களின் ஓட்டுனர்கள் சிலர் பாட்டியை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.

“ஒரு வேளை ஏதாவது ஷூட்டிங்கா இருக்குமோ.... ஔவை சண்முகி 2 வது பார்ட் ஏதாச்சும் எடுக்கறாங்களோ” என்று அவர்களின் மனதில் எண்ண ஓட்டங்கள், பக்கத்தில் கேமரா ஏதாவது இருக்கிறதோ என்ற தேடல் வேறு.

5 மணி தாண்டும் சமயம் விச்சு தன் செக்கின் பாகேஜுடன் வெளியில் வர, சேச்சு அவனைக் கூட்டிக் கொண்டு காரின் அருகே வந்தார். அங்கு பர்தா உடையில், கையில் க்ளவ், காலில் சாக்ஸ், ஷூ, தலையில் தலைக்கவசம் என்று ஏதோ விசித்தரமக ஒரு உருவத்தைப் பார்த்ததும், இருவரும் சற்றுப் பயந்து, அருகிலும் வேடிக்கைப் பார்ப்பவர்கள் இருப்பதைப் பார்த்துக் குழம்பி,

“யார் நீ? உனக்கு இங்க என்ன வேலை” என்று கேட்டுக் கொண்டே விசாலிப் பாட்டியைத் தேட,

“டேய் விச்சு, என்னையா தேடற?  நாந்தாண்டா இது, எப்படிடா இருக்கே கோந்தே?” என்று அந்த பர்தா உருவத்திற்குள் இருந்து குரல் வரவும், சேச்சுவும், விச்சுவும் ஆச்சரியமாகவும், குழப்பத்துடனும் பார்த்து, ஏதோ சொல்ல ஆரம்பிக்க, விச்சுவின் அலைபேசி கூவியது. 


அலைபேசி கூவியது எதற்கு?  நாளை......    தொடர் நாளை நிறைவுபெறுகின்றது