புதன், 27 ஆகஸ்ட், 2014

விசாலிப் பாட்டியும் எபோலாவும் - 2


(“டேய் விச்சு, என்னையா தேடற?  நாந்தாண்டா இது, எப்படிடா இருக்கே கோந்தே?” என்று அந்த பர்தா உருவத்திற்குள் இருந்து குரல் வரவும், சேச்சுவும், விச்சுவும் ஆச்சரியமாகவும், குழப்பத்துடனும் பார்த்து, ஏதோ சொல்ல ஆரம்பிக்க, விச்சுவின் அலைபேசி கூவியது.) நேற்றையத் தொடர்ச்சி இதோ.....
  
      “சார், நீங்கள் விஸ்வநாதன் சேஷாத்ரி தானே? உங்களைத் தொந்தரவு படுத்துவதற்கு மன்னிக்கவும். நாங்கள் ஏர்போர்ட்டிலிருந்து பேசுகின்றோம். நீங்கள் தயவு செய்து உடனே ஏர்போர்ட் அத்தாரிட்டியைச் சந்திக்க வேண்டும்.  எங்கள் அதிகாரி ஒருவர் உங்களை வந்து அழைத்து வருவார்.  நீங்கள் இப்போது எங்கிருக்கின்றீர்கள்?” விச்சுவுக்குக் குழப்பம்.

      “சார், நான் பார்க்கிங்க் ஏரியாவில்தான் இருக்கின்றேன். கார் மாருதி ஈக்கோ..... கார் நம்பர்....”...” சார், மன்னிக்கவும். காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?”

      “சாரி, எங்களுக்கு WHO லிருந்து இப்போதுதான் தகவல் வந்தது.  நீங்கள் எபோலாவுக்கு எக்ஸ்போஸ் ஆகியிருக்கலாம் என்று. நீங்கள் அங்கு, லாகோஸ் ஏர்போர்டில் தரப்பட்ட ஃபார்மில் நிரப்பிக் கொடுத்த தகவலின் படி வந்த சந்தேகம். உங்கள் அருகில் அமர்ந்து பயணித்தவர்களுடன் நீங்கள் உரையாடினீர்களா?  அவர்களைத் தொட்டீர்களா? இன்னும் சிலர் இந்த லிஸ்டில் உள்ளனர்.  எல்லோரையும் க்வாரண்டைன் செய்து, நாங்கள் டெஸ்ட் செய்ய வேண்டும். இது எங்கள்  கடமை சார்.  அதற்குத்தான்.  இப்போது உங்கள் அருகில் யார் இருக்கின்றார்கள்? தயவு செய்து சற்று தள்ளி இருக்கவும்” என்றதும்தான் யோசித்தான் விச்சு, தான் அப்படி என்ன எழுதினோம் என்று!
 
“ஓ!  ரெண்டு நாளா,  சின்ன தொண்டைக் கமரல், ஜலதோஷம் இருந்ததை எழுதியிருக்கப்படாதோ?  இப்ப எனக்கே எபோலா தோஷம் வந்துடுத்தோ? இவா என்னல்லாம் பண்ணப் போறாளோ” என்று தனக்குள் யோசிக்க அடி வயிற்றில் அட்ரினலைன் தன் வேலையைத் தொடங்கியது.  பாட்டிக்கு அந்த ஆங்கில உரையாடலில் இருந்து புரிந்து கொள்ள முடிந்த ஒரே வார்த்தை எபோலா டெஸ்ட் மட்டுமே! உடனே பாட்டி விச்சுவிடமும், சேச்சுவிடமும்,

“விச்சுவுக்கு எபோலாவாவது மண்ணாவது, ஒண்ணும் வராது.  நான் அவனுக்கு என்னவெல்லாம் கஷாயம், மூலிகை எல்லாம் கொடுத்து அவனுக்கு ஒரு சின்னத் தலைவலி கூட வராம பாத்துண்டேன் தெரியுமா? இப்பவும் அவன நான் பாத்துக்கறேன். இங்க பாருடா, விச்சு நான் சொல்ல்லற படி கேளு..ஒரு 10 நிமிஷம்தாண்டா...கொஞ்சம் பொறுமையா இரு....அதுக்கு அப்புறம் உன்ன அவா கூட்டிண்டு போய் டெஸ்ட் பண்ணட்டும்........உனக்கு டெஸ்டுல ஒண்ணும் வராது வேணா பாரேன்.” 

சேச்சுவிற்கு சரியான கோபம். பக்கத்திலிருந்த ஓட்டுனர்கள் இப்போது இன்னும் சற்று நெருங்கி வந்து வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.  சேச்சு பல்லைக் கடித்துக் கொண்டு, மிக மெல்லிய குரலில் கோபம் கொப்பளிக்க,

“என்னம்மா இது சீன் ஏர்போர்ட்ல...இதெல்லாம் ஆத்துல பண்ண வேண்டியதுதானே...இப்ப அந்த ஆஃபீஸர் வருவர் அவரோட இவன அனுப்பணும்...மூட்டைக் கட்டு உன் சாமான்லாம்....”

 “ஏண்டா சேச்சு என்னக் கோச்சுக்கற. எபோலானா பக்கத்துல இப்படி வெறுமன எல்லாம் போக்கூடாது. என்ன மாதிரி முழுசா கவர் பண்ணிண்டுதான் போகணும்.. நோக்குத் தெரியாதா..”

சேச்சு ஏற்கனவே எலி.....இப்போது, எபோலா கிலியில் வேறு இருந்தார்.... என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்க சுற்றி நடப்பது என்னவென்று அனுமானிக்க முடியாத ஒரு நிலையில் இருந்தார். 

“என்ன பாட்டி இது? என்ன செய்யப் போற?” இது விச்சு, அடுத்த கிலி பிடித்த எலி.

“சும்மா இருடா கோந்தே. நீ வேடிக்கை மட்டும் பாரு. கேள்வி கேக்கப்படாது.  நோக்கு பாட்டி மேல நம்பிக்கை இருக்கோல்லியோ?” என்று சொல்ல, விச்சுவும் “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்று இருந்ததால் “ஏதோ எபோலா இல்லாமல் இருந்தால் போதும்...அது மாயமோ, மருந்தோ என்ன எழவோ.......எதுவாருந்தா என்ன” என்று பேசாமல் திக்பிரமை பிடித்து, பொம்மையாக இருந்தான்.  விச்சுவை காரின் டிக்கியில் உட்காரச் சொன்னார். மேல் சட்டையைக் கழற்றச் சொன்னார்.

பாட்டி, தான் கொண்டுவந்த உப்பை, பாட்டிலில் இருந்த தண்ணீரில் கரைத்து, அதில் எலுமிச்சம் பழத்தையும் பிழிந்து, மஞ்சள் பொடியும் கலந்து,

“இந்தத் தண்ணியால உடம்ப நன்னா க்ளீன் பண்ணிக்கோ கண்ணா.  அப்புறம் டவலால நன்னா துடைச்சுக்கோ”

பின்னர், அந்தத் தண்ணீரால் ப்ரானிக் ஹீலிங்கில் செய்வது போல உடம்பைத் தொடாமல் கையால் வருடி வருடி கழிசல் செய்து, திருஷ்டி கழித்தார். அதாவது அவரது மொழியில் சொல்வதென்றால், உடம்பிலிருந்து எதிர்மறை சக்தியை வழித்து எடுத்தார்.  மீதமிருந்தத் தண்ணீரை விச்சுவின் தலை முதல் கால் வரை தெளித்துக் கழுவச் சொன்னார்.  பின்னர் மிளகாயையும், உப்பையும் கையில் வைத்துக் கொண்டு விச்சுவை சுற்றி மாற்றி மாற்றி சுற்றிவிட்டு, திருஷ்டி கழித்து

“விச்சு, துப்புடா கண்ணா” என

“அம்மா என்னம்மா நீ?  அவன உன் கையில துப்பச் சொல்லற? எம்மா...” என்று சேச்சு சொல்லி முடிக்கும் முன்

“டேய், சேச்சு எனக்கு ஒண்ணும் தெரியாதுனு நினைச்சியா.  இங்க பாருடா கையில க்ளவ். இங்க பாரு கிண்ணம். இதுலதான் மிளகாயும், உப்பையும் போட்டுருக்கேன்”

அதில் விச்சுவைத் துப்பச் சொன்னார்.  அவற்றைத் தனியாக எரிக்க வேண்டும் என்று ஒரு பையில் போட்டுக் கொண்டார்.  பின்னர் விபூதியையும், குங்குமத்தையும் நெற்றியில் தீட்டி, உடம்பு முழுவதும் தேய்த்துக் கொள்ளச் சொல்லி, வேப்பிலையால் உடம்பு முழுவதும் வருடிவிட்டு, இலைகளைப் பிய்த்து, விச்சுவின் கையில் கொடுத்து கசக்கச் சொல்லி, அதனுடன் மஞ்சள் பொடியும் கலந்து, அதை உடம்பு முழுவதும் தேய்த்துக் கொள்ளச் சொன்னார். வெற்றிலையையும், மிளகையும், துளசியையும் வாயில் போட்டு மெல்லச் சொன்னார். சூடன் கொளுத்தி திருஷ்டி கழித்தார்.  விச்சுவை ஒரு விதமாக மந்திரவாதச் சாமியாராக்கிவிட்டிருந்தார்.
 
“விச்சு நீ இனிமே எங்க வேணா போய்க்கோடா கோந்தே! போகும் போது அவா டெஸ்ட் பண்ணும் போதும் கந்த சஷ்டிக் கவசத்தைச் சொல்லிண்டே இருன்ன....நோக்கு எபோலாவது ஒண்ணாவது ஒண்ணும் அண்டாது” என்று சொல்லிக் கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டினார்.

சுற்றி இருந்தோர் இதையெல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க...செய்தி வேகமாகப் பரவ...அங்கு வந்த ஏர்போர்ட் அதிகாரிக்கு அந்தக் காட்சியைப் பார்த்து ஒன்றுமே புரியவில்லை. விச்சுவை எங்கே என்று தேடினார், பாட்டியின் உடையைப் பார்த்து சந்தேகம் தோன்ற அவர் கேள்வி மேல் கேள்வி கேட்க,  விச்சுவும், சேச்சுவும் மாறி மாறிச் சமாளிக்க,  ஒரு வழியாக விச்சுவைத் தனியாக அழைத்துச் சென்றார்.  அவனது பேக்கேஜ்களுக்குத் தனியாக ஒரு பெரிய ப்ளாஸ்டிக் உறை போட்டனர். 

வெளியில் சேச்சு, நகம் கடித்தார். எல்லா தெய்வங்களையும் அழைத்தார். பாட்டியுடன் சேர்ந்து கோயில்கள் வரிசைப்படுத்தப்பட்டு லிஸ்ட் தயாரிக்கப்பட்டது. இடையில் வீட்டிலிருந்து விஜயா கூப்பிட

“எபோலாவா...ஓ மை காட்” என்று விஜயா, கிச்சு, சுப்ரஜா மூவரும் பேயறைந்தது போல ஆயினர்.

 பாட்டி மட்டும் மிகவும் தைரியமாக சஷ்டிக் கவசம் சொல்லிக் கொண்டிருந்தார். வேகமாகப் பரவியச் செய்தியால் பலர் பாட்டியைச் சூழ்ந்தனர்.  அவர் என்ன செய்தார் என்ற கேள்வியுடன்...

8 மணி அளவில் விச்சு வாயெல்லாம் பல்லாக வெளியில் வந்தான். பாட்டிக்குப் பெருமை தாங்கவில்ல.  ஏதோ தனது பிரானிக் ஹீலிங்க், உப்பு கழிசல், திருஷ்டி சுத்தல்தான் எபோலாவை விரட்டியது போல. அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்து, WHO சொல்லியதையே இந்தப் பாட்டி முறியடித்துவிட்டாரே என்று சொல்லி பாட்டியைச் சூழ்ந்து கொண்டனர்.  செய்தி விரைவாகப் பரவியதுதான் தாமதம், வெளிநாட்டுப் பயணிகளும், நம்மவர்களும் பாட்டியைச் சூழ்ந்து விச்சுவுக்குச் செய்ததை செய்யச் சொல்லி வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டனர்.

சேச்சு, மயங்கி விழாத குறைதான்..  யாரும் அவரது வார்த்தைகளைக் கேட்பதாக இல்லை. எல்லோருக்கும் எபோலாவிலிருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே!

காட்டுத் தீயை விட அதி வேகமாகச் செய்தி பரவியதால், ஊடகங்கள் கூடிவிட்டன.  செய்தி “பாசிங்க் ஆன் சீக்ரட்” போல் ஆகி, விசாலிப் பாட்டியை படிக்காத மேதையாக்கி டாக்டருக்கெல்லாம் டாக்டர் ஆக்கிவிட்டது. ஃப்ளாஷ்கள் பளிச்சிட்டன.  இளம் நிரூபர்கள் கையில் ஐப்பாடுடன்/ஐப்பேடுடன் பேட்டி எடுக்க ஆரம்பித்தனர். பயணிகளைக் கூட்டிச் செல்ல குழுமி இருந்த கால் டாக்ஸி ஓட்டுநர்களும், உறாவினர்களும் அவர்களை மறந்து, பாட்டியை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

“பாட்டி, வாட் மேஜிக் ஆர் மெத்தட் டிட் யு அப்ளை ஆன் யுவர் க்ரான்ட் சன்?” என்று ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகை நிரூபர் கேட்க, அதை ஒரு தமிழ் பத்திரிகை நிரூபர் தமிழில் சொல்ல, பாட்டி நிரூபர்களுக்கு அடுத்த கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் பெரிய விரிவுரை, விளக்கவுரையே கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.  எல்லா சேனல்களிலும், தேசீய சானல்கள் உட்பட, நேரடி ஒளிபரப்பாகியது.

எல்லாத் தொலைக்காட்சிகளிலும், பெண்கள், சமயலறையையும் மறந்து மெய்மறந்து பார்க்கும் அழுவாச்சித் தொடர்கள் கூட பின்வாங்கின, மக்கள் தங்கள் “மெய்” பற்றியக் கவலையில் ஆழ்ந்ததால்.  செய்திகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு, ஃப்ளாஷ் செய்திகள் உடனுக்குடன் ஃப்ளாஷ் அடித்துக் கொண்டிருந்தன. ஆண்கள் எல்லோரும் எபோலாவுக்கும், விசாலிப் பாட்டிக்கும் நன்றி தெரிவித்தனர் தங்களுக்கு டிவி ஸ்லாட் கிடைத்ததால்.  நாடெங்கும் எல்லா ஊடகங்களின் நிரூபர்களும், பட்டி தொட்டிகளில் எல்லாம் மைக்குடன் அலைய ஆரம்பித்தார்கள், மக்களுடன் உரையாடி, எபோலா பற்றி மக்களின் கருத்தை அறிய வேண்டி.

டிவியில் ம்யூசிக் சானல் பார்த்துக் கொண்டிருந்த சுப்ரஜா,

“கிச்சு அண்ணா, விச்சு அண்ணாவைக் கூட்டிண்டுவர ஏர்போர்ட் போன அப்பா, பாட்டி அண்ணாவோடு இன்னும் வரலையே? அண்ணாவுக்கு எபோலா வந்துருக்குமோ?”

“சும்மா இருடி உன் வாய வச்சுண்டு.  அபத்தமா பேசாத.  அண்ணாவச் செக் பண்ணிட்டு அனுப்புவா அவ்வளவுதான்” என்று கிச்சு பதில் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், டிவியில் திடீரென பாட்டி தோன்ற, அதைப் பார்த்து வியந்தனர் மூவரும்.

“விடிக்காலம்பற போனவாள இன்னும் காணலியேடி விஜயா என்னாச்சு?  ஃப்ளைட் லேட்டா?” என்று கேட்டுக் கொண்டே வந்த, பக்கத்து வீட்டுக் கோமுப் பாட்டி டிவியில் விசாலிப் பாட்டியைப் பார்த்ததும் மூக்கின் மேல் விரல் வைத்து டிவியைப் பார்க்க ஆரம்பித்தார்.

“மேஜிக்கும் இல்ல ஒண்ணும் இல்ல” என்று பேச ஆரம்பித்தார் விசாலிப் பாட்டி. “இதெல்லாம் நாங்க அந்தக் காலத்துலருந்து செஞ்சுண்டு வரதுதான்.   என் பேரனுக்குச் சின்ன வயசுலருந்தே மூலிகை எண்ணைக் குளியல்தான். மூலிகைக் கஷாயம்தான்...டாக்டர்கிட்ட கூட்டிண்டு போனதே இல்ல. தெனம், வேப்பில போட்டு, அதுல கொஞ்சம் மஞ்சள் பொடி, கடைல வாங்கினது இல்ல, மஞ்சள் கொம்பு வாங்கி ஆத்துல வெயில்ல லேசா காய வைச்சு, மெஷின்ல கொடுத்து அரைச்ச பொடி, அதக் கலந்து, எலுமிச்சம் பழம் பிழிஞ்சு அதுலதான் குளியல்.  எல்லாமே எங்காத்துல நாட்டு மருந்து பொடிதான். 

நீங்கல்லாம் எச்சல் பாக்க மாட்டேள்.  ஒருத்தர் சாப்ட எச்சல் தட்டுல இன்னொருத்தர் சாப்டப்படாது. நாங்க வாழை இலைலதான் சாப்டுவோம். காப்பி, தண்ணி எல்லாம் சூப்பிக் குடிக்கப்படாது. டம்ளர தூக்கித்தான் குடிக்கணும். சூப்பிக் குடிக்கணும்னா அதுக்குத்தான் இப்ப டிஸ்போசபிள் பேப்பர் கப் வந்துருக்கே அதத்தான் யூஸ் பண்ணனும். எச்சத் தட்டுல வேற யாராவது சாப்டா அந்தத் தட்ட நெருப்புல காமிக்கணும்.  நகம் கடிக்கக் கூடாது.

“அப்போ, முத்தம்? நிஜ வாழ்க்கையிலும் சரி, படத்துலயும் அதுவும் வேற வேற ஹீரோ, ஹீரோயின்....அதுக்கு என்ன சொல்றீங்க பாட்டி?” என்று நாக்கு கேள்வி கேட்கத் துரு துருக்க நின்றிருந்த புது நிரூபர், இது அவருக்குக் கன்னிப் பேட்டியாதலால், தான் கேட்க நினைத்தக் கேள்வியை அப்படியே முழுங்கிக் கொண்டார், கூட்டம் ஸ்தம்பித்துப் பாட்டியின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்ததால்.

அந்தக் காலத்துல நாங்கல்லாம் ஆத்து வாசல்ல சாணம் போட்டுதான் மொழுகுவோம்.  மாட்டுச் சாணத்துல கிருமி நாசினி இருக்கு தெரியுமோ.  நாங்க இன்னும் எங்காத்து வாசல்ல சாணம் போட்டுத்தான் தெளிக்கறோம். ஆனா இப்பல்லாம் மாடு பாவம் கண்டத, பேப்பர்ல்லாம் சாப்டறது. மஞ்சத் தண்ணி தெளிக்கறுதுண்டு. மஞ்சள் கிருமிநாசினி. வேப்பலைய ஆத்துல கட்டித் தொங்க விடலாம். வேப்பமரம் வளர்க்கறோம். தினமும் துளசி இலை சாப்பிடறதுண்டு. துளசிச் செடி வளர்க்கறோம். நெல்லிக்காய். அத நெல்லிமுள்ளியாவும் பண்ணிவைச்சுண்டு சாப்பிடலாம். திரிபலா ரொம்ப நல்லது.  இதெல்லாம் நம்ம இம்யூன் சிஸ்டம வலுவாக்கும். என் பேரனுக்கு இதெல்லாம் கொடுத்துருக்கேன். வெளில போய்ட்டு, ஆத்துக்குள்ள வரும்போது கால நன்னா அலம்பிண்டுதான் உள்ள போணும்.

“எல்லாம் சரி பாட்டி..... அடுக்குமாடிக் காலாச்சாரம்ல இப்ப?  எப்படிக் கால் கழுவறது உள்ள வரும்போது” என்று ஏதோ ஒரு சமயோசித புத்தியுள்ள நிருபரால் கேட்கப்பட்டக் கேள்வி காற்றில் கரைந்தது.

அப்புறம் மாமிசம் சாப்பிடறவாள சாப்டாதேன்னு சொல்லக் கூடாது, சொல்லவும் முடியாது. இப்போ ஆப்பிரிக்காவுல மாமிசத்துலருந்து கூட எபோலா பரவரதுன்னு சொல்லிண்டுருக்கா...அதனால மாமிசம் சாப்பிடறவா எல்லாரும் அத நன்னா வேக வைச்சுச் சாப்பிடுங்கோ. 

நான் வாரத்துல ரெண்டு நாள் திருஷ்டி சுத்திப் போடுவேன். உப்பு கழிசல்னு சொல்லுவா. அதாவது கிட்டத்தட்ட ப்ரானிக் ஹீலிங்னு சொல்லலாம். நெகட்டிவ் எனர்ஜிய உடம்புலருந்து வழிச்சு எடுக்கறதுதான் அது. ஆத்துல உப்புத் தண்ணிய தெளிப்போம்.  கடல்லருந்து கூட கொண்டுவந்து தெளிக்கலாம்.  இதெல்லாம்தான் நான் செய்யறது. நீங்கல்லாம் என்னவோ சயின்ஸ் படிச்சுட்டு நெறய கேள்வி கேக்கறேள்.  நேக்கு சயின்ஸ் தெரியாது உங்களுக்குப் பதில் சொல்ல. அந்தக் காலத்துல பெரியவா செஞ்சத நாங்கல்லாம் கேள்வி கேக்காம செஞ்சுண்டு வரோம். அதுவும் சயின்ஸ்தான்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே....

கடைகளில் உப்பு, மிளகாய், மஞ்சள்,மிள்கு, வெற்றிலை, நெல்லிக்காய், க்ளவ், உடல் முழுதும் மறைக்கும் அங்கி என்று கிராக்கி ஆரம்பித்தது. கடல் நீர் வீடுகளுக்குச் சப்ளை செய்ய விவாதங்கள் நடக்கத் தொடங்கியது. நாட்டு மருந்துக் கடைகளில் திரிபலா, நெல்லிமுள்ளி என்று குரல் கேட்க ஆரம்பித்தது. எல்லா வீடுகளிலும், அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலும் வேப்பமரம், துளசி, வாழை எப்படி வளர்ப்பது என்ற விவாத மேடை அரங்கேற்றப்பட்டது. மெயிண்டனன்ஸ் கூடலாம் என்ற பேச்சு அடிபட்ட போது பலரும் ரிவர்ஸ் எடுக்கலாமா என யோசித்தனர்.

எல்லா வீடுகளிலும் வாசலில் சாணம் தெளித்து மொழுக வேண்டி. மாட்டுச் சாணத்திற்காக, மக்கள் மாட்டைக் கண்டால் அதன் பின்புறம் சென்று வாலைத் தூக்குகின்றதா என்று பார்த்து கையில் ஒரு வாளியுடன் நிற்க ஆரம்பித்தனர். மாடு வளர்ப்பவர்கள் தீனிக்காக மாட்டைச் சாலையில் அலைய விடாமல், தொழுவத்தில் கட்டி, நல்ல தீவனம் வாங்க ஏற்பாடு செய்யப் போவதாகவும், மாடு வளர்ப்பவர்கள் சாணத்தைச் சேகரிக்க ஆரம்பித்து விற்கத் தயாராவதாகவும், இன்னும் மாடுகள் வாங்கலாமா என்று யோசிப்பதாகவும், மாடு வளர்க்காதவர்கள் கூட வளர்க்க வேண்டி மாடுகளை விலை பேசத் தொடங்கப் போவதாகவும், அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து மாடுகள் வளர்க்க முடிவு செய்ததாகவும், அதனால், இன்னும் அதிகம் மாடுகள் சந்தையில் விலை போகும் என்றும் தகவல்கள் கசிய ஆரம்பித்தது.

இப்படியாகக் கால்நடை, விவசாயம் பக்கம் மக்களின் கவனம் செல்லத் தொடங்கலாம் என்றும், இந்தியாவின் தொழில் திட்டங்களிலும், பொருளாதாரச், சந்தையிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும்,  ஐடி துறையினர் கூட இந்தத் துறையை மெதுவாக எட்டிப் பார்க்கத் தொடங்கிவிடுவர் என்றும் எல்லா செய்திச் சானல்களிலும் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட விவாதங்கள், கலந்துரையாடல்களில் பொருளாதார நிபுணர்கள், வணிகத் துறையினர், அரசியல் கட்தித் தலைவர்கள் எல்லோரும் காரசாரமாக விவாதிக்கத் தொடங்கினர்.

பொதுமக்கள், எல்லா ஏர்போர்ட்டிலும் விசாலிப் பாட்டி மாதிரி பாட்டிகள் ப்ரானிக் ஹீலிங்க்/திருஷ்டி கழிசல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க, எல்லா ஊர்களில் இருந்தும் பாட்டிகள் வரவழைக்கப்பட்டு விசாலிப் பாட்டியிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் என்று சென்டிமென்டல் முதல்வர்களும், அதிகாரிகளும் உணர்வு பூர்வமாக முடிவு எடுத்தனர்.

மருத்துவர்கள் எல்லோரும் இந்தத் தகவல்களைக் கேட்டு, என்ன செய்வது என்று அறியாமல், தலையில் அடித்துக் கொண்டு,  கப்பல் கவிழ்ந்தது போல் கன்னத்தில் கை வைத்தபடி இருக்க, ஜோசியர்களுக்கும் பெப்பே சொன்ன எபோலாவால் இனி டிவியில் தோன்ற முடியாதே என்று கவலை கொண்டு, ஜோசியர்கள் ஜோசியத்தில் எபோலாவுக்கு என்ன பெயர், அதைப் பற்றி ஜோசியம் என்ன சொல்லுகின்றது, அதற்கு அதிபதியான கிரகம் எது என்று ஜோசிய நூல்களை அலசித் தேட ஆரம்பிக்க, மறுபுறம் ஆயுர்வேத, சித்த, யுனானி, இயற்கை வைத்திய மருத்துவர்கள், தாங்கள் இனி டிவியில் தோன்ற முடியாமல், தங்களுக்குப் போட்டியாக இப்படி ஒரு பாட்டியா என்று கலந்தாலோசிக்க முடிவு செய்ததாகவும், மத்திய அரசும், மாநில அரசுகளும் எவ்வழிச் செல்வது என்று அறியாமல் திகைத்து நிற்பதாகவும ஒன்றிற்கு இரண்டாகத் தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தது.

தற்போது வந்த தகவலின் படி, இப்படி, இந்தியாவே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்க, “தளிர்” வலைத்தளப் பதிவர் சுரேஷ் அவர்கள் தன் வலைத்தளத்தில்,

ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வந்த தேனி வாலிபரின் இரத்த மாதிரி புனே ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழக சுகாதாரத் துறையின் அலட்சியத்தையே காட்டுகிறது.”  என்று செய்தி வெளியிட, மக்கள் எல்லோரும் பீதி அடைந்து, பாம்பைக் கண்டால் படையும் அஞ்சும் என்பது போய், எந்தப் புத்துக்குள் பாம்பு இருக்கோ என்பது போய், எபோலா எல்லோரையும் நடுங்க வைத்து, யாருக்குள் எபோலா இருக்கின்றதோ என்று, பர்தா உடையில் நடமாடத் தொடங்கிவிட்டதாகவும்,  தமிழத்தின் தலைவர்கள் உடனே அந்த வாலிபரை விசாலிப் பாட்டியின் முன் நிறுத்த எண்ணி, அவரைத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும் தகவல். கண்டுபிடித்து விசாலிப் பாட்டியின் முன் நிறுத்தலாமா என்றும் யோசனையாம்!  எனவே, “மக்கள் எல்லோரும் எபோலா பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று அரசும் கையைப் பிசைந்து கொண்டு அறிக்”கை” வெளியிட்டது.

பாட்டியின் பேட்டி எப்போது முடியும் என்று சேச்சு, விச்சு இருவரும் திகைத்து நிற்க,

எபோலா எபோலா கண்ணைக் கட்டும் எபோலாவாகியது. விசாலிப் பாட்டி “எபோலா பாட்டி”யாகியிருந்தார்!


பி.கு. அந்தத் தேனி வாலிபரை நீங்களும் தேடலாம். தகவல் அறிந்தால் தெரிவிக்கலாம்.  உபயோகமாக, சமூக சேவை செய்ததாக, இருக்கும். அந்த சாட்சாத், சித்தருக்கெல்லாம் சித்தராகிய, மருந்தீஸ்வரர் உங்களுக்கு அருள் புரியக் கடவது!  ஏன் தமிழ்நாடு அரசின் அவார்ட், 18 வயதிற்குள்ளிருந்தால், நாஷனல் ப்ரேவரி அவார்ட் கூட கிடைக்கலாம், இத்தனை மக்களைக் காப்பாற்றியதற்கு! யார் கண்டார்கள்! 

படங்கள்-கூகுள்-இணையம்

30 கருத்துகள்:

  1. எபோலா இங்கே வந்தால்கூட இவ்வளவு தடபுடல் இருக்குமான்னு தெரியலே,உங்கள் கற்பனைக்கு 'நேஷனல் இமாஜிநெரி அவார்டே 'கிடைக்கும் போலிருக்கே !
    அட்வான்ஸ் ...த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசாலிப் பாட்டிக்கு ஒரே சந்தோஷம்! பகவான் ஜி! பாட்டியோட வைத்தியத்த பாராட்டினதுக்கு! முதல் ஓட்டு வேற போட்டுட்டீங்களாம்.....

      மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  2. உங்கள் கற்பனைக்கு 'நிச்சயம் விஜய் அவார்ட்ஸ் கண்டிப்பாக 'கிடைக்கும் ! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவார்ட் வாங்கும் போது எப்படி அழுகுவது என்பதுதான்

    நகைச்சுவை ஹிரோவே படைப்பு அருமை... பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....விஜய் அவார்ட்ஸ்? ஐயோ இப்பவே அழ வைச்சுட்டீங்களே!!!! நாங்க சிரிச்சுக்கிட்டே இருக்கணும்னு நினைக்கறோம்க!!!.... (அஃப்கோர்ஸ் எல்லாருமே அப்படித்தான் நினைப்பாங்க)

      பாராட்டுகளுக்கு மிக்க நன்றி தமிழா!!!

      நீக்கு
    2. மதுரைத் தமிழா...ஒரு சின்ன ரகசியத்தைச் சொல்லலாமா....நகைச்சுவை ஹீரோ இல்ல...ஹீரோயின்.....!! ஹீரோயினா...அப்ப கண்டிப்பா அழணும் அப்படின்னு சொன்னீங்கன்னா.....பூரிக்கட்டை பறக்கும்.....

      நீக்கு
  3. விசாலி பாட்டி சொன்ன நல்ல விசயங்கள் அனைத்தையும் இக்காலத்தில் நகைச்சுவைக்கா மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

    கதை நீண்டு இருந்தாலும் படிக்கத் துர்ண்டியது துளசிதரன் ஐயா.
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரி.....நகைச்சுவைக்காக மட்டுமே யதார்த்ததில் கேள்விக் குறியே!

      மிக்க நன்றி!

      நீக்கு
  4. பிரமாதம். இவ்வளவு நீட்டி முழக்கி விளக்கமாகச் சொல்ல முடியுமா? ஜோர்...ஜோர்!

    சமீபத்தில் சதுரங்க வேட்டை என்று ஒரு படம் பார்த்தேன். அதில் சொல்லும் பொய்யில் உண்மை கலந்து இருக்க கதாநாயகன் சொல்வார். அதுபோல, மிளகு, மஞ்சள், சாணம், மிளகாய், உப்பு என்று அதன் மருத்துவ குணங்களைச் சொல்லி இதனுடன் கலந்து அசத்தி விட்டீர்கள். சபாஷ்.

    நேற்றைய செய்தித் தாளில் ஹோமியோபதி மருத்துவத்தில் எபோலாவை குணமாக்க முடியும் என்று ஒரு மருஹ்துவர் கூறியுள்ளதைப் படித்தேன்.

    நடுவில் தளிர் சுரேஷ் வேற வந்து பரபரப்பைக் கிளப்பறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் சார்....நீட்டி முழக்கிச் சொல்லியே பழகி விட்டது.....ஹாஹாஹா....சீரியஸ் மேட்டர் கூட பதிவு நீண்டு விடும்.......

      அதில் சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் யாவுமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையே நீங்கள் சொல்லுவது போல்....ஆனால் இப்போது யதார்த்தத்தில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது...ஏனென்றால் எல்லாமே கெமிக்கல்ஸ் கலந்து வருவதால்....

      ஆமாம் சார் ஹோமியோ ய இருக்குனு சொல்றாங்கதான்....இணையத்திலும் தேடினோம்....நாச்சுரல் மெடிஸன்ஸ் இருக்கான்னு அப்போ ஹோமியோ பத்தி அறிந்தோம்....சித்தாவிலும், ஆயுர்வேதத்திலும் இருப்பதாகத்தான் சொல்லப்படுகின்றது....ஆனால்....எல்லாவற்றிற்கும் நிரூபணம் வேண்டுமே....அதுதானே மருத்துவ உலகிற்கு முக்கியம்!

      பாராட்டிற்கு மிக்க நன்றி!

      நீக்கு
    2. விசாலிப் பாட்டி பலே பாட்டியாக இருப்பார் போலிருக்கே.. நிறைய தகவல்களும் தெரிந்து கொண்டேன்..

      நீக்கு
    3. ஹாஹாஹா ஆமாங்க ஆவி! பாட்டி பலே ஆளுதான்!

      நீக்கு
  5. நாயகி பழமையைப் போற்றிப் புதுமையை கேலி செய்கிறார்.
    அதை அப்படியே வழிமொழியாமல் அங்கங்கே நீங்களே பாட்டியையும் கேலி செய்து விடுகிறீர்கள்.
    பின்னூட்டக் காரர்களின் மனதில் எழும் கேள்விகளை நிருபர்களைக் கொண்டு நீங்களே கேட்டு விட்டீர்கள்!
    கதையை தொடங்குபவர்கள் முடிக்கமால் போகமாட்டார்கள் என்பது தான் நான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது.
    ரசித்துப் படித்து முடித்தேன் அய்யா!
    “நன்றி“

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி விஜு ஐயா! தங்களது விளக்கமான பின்னூட்டத்திற்கு! ரசித்தற்கும் மிக்க நன்றி! ஐயா!

      நீக்கு
  6. நல்லவேளை நான் பயந்துகிட்டு ஒருவாரமா வீட்டை விட்டு வெளியே போகவில்லை ரெண்டாவது பதிவை படிச்சதாலதான் வெளியில கிளம்புறேன். உங்க கற்பனை வயிற்றில புளியை கரைச்சு கிலியாகிப்போச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹாஹாஅ....கில்லர்ஜி...இனி ஜாலியா எஞ்சாய் பண்ணுங்க ஜி! விசாலிப் பாட்டிதான் இருக்காங்களே!

      நீக்கு
  7. பாட்டி வைத்தியம் சுவாரஸ்யமாய் ரசிக்கவைத்தது..!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் !

    ஆஹா அழகான கதையின் நகர்வுகள் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் எபேலோ பாட்டி செம அலட்டல் ... யார் யாரையெல்லாம் முடிச்சு போடணுமோ அவர்களை பக்காவா கொழுவி விட்டீங்க அருமை !

    வாழ்க வளமுடன்
    தம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சீராளன் தங்கள் பாராட்டிற்கும், முதல் வருகைக்கும்! ஊக்கத்திற்கும் சேர்த்து!!

      நீக்கு
  9. பாட்டி வைத்தியம் சுவாரஸ்யமாய் ரசிக்கவைத்தது
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  10. இன்றைய 30.08.2014 வலைச்சரத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  11. ஆகா உங்க அதகளம் தாங்கலப்பா
    காற்றில் கரைந்த வினாக்கள் அருமை..

    பதிலளிநீக்கு
  12. சொல்லவந்த கருத்தை பாட்டி மூலமா அழகா சொல்லிடீங்க சகாஸ்:)) நடுவுல ஏர்போர்ட் பெட்டியில் தேசிய தொலைகாட்சிகளில் நம்ம தளிர் சுரேஷ் சார் புகழை பரப்பிய விசாலி பாட்டிக்கு நன்றி!! நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! சுரேஷ் கொடுத்த நியூஸ் அதுக்கு ரொம்ப பொருத்தமா இருந்தது நினைவுக்கு வந்தது...ஸோ அப்படியே சேர்த்துட்டோம்.....

      நீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. விசாலிப்பாட்டி பேமஸ் ஆனரோ இல்லையோ இந்த கதிய மூலமாக நீங்க ரொம்ப பேமஸ் ஆயிட்டீங்க துளசி சார். இதைத்தான் பாட்டி வைத்தியம்னு சொல்லுவாங்களோ!!!!!!

    அந்த காலத்து பாட்டி வைத்தியத்துக்கு ஈடு இணையில்லை என்பதை அழகாக நிரூபித்து விட்டீர்கள். என்னதான் கற்பனையாக இருந்தாலும், யார் கண்டா, இந்த வியாதிக்கும் பாட்டி வைத்தியத்தால குணமாக்க முடியுமோ என்னமோ!!!

    வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு