வியாழன், 21 ஆகஸ்ட், 2014

OLD IS GOLD - சென்னைப் பட்டினத்தில் பத்திரிகை கலாசாரக் கண்காட்சி

      









         நாங்கள் இந்தப் பதிவு எழுதக் காரணமாக இருந்த செல்லப்பா தமிழ் டயரி, இமயத்தலைவன், வலைத்தளங்களின் பதிவர் திரு ராயச் செல்லப்பா அவர்களுக்கு எங்கள் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

      சென்னை தினத்தை முன்னிட்டு, ''சென்னைப் பட்டினத்தில் பத்திரிகை கலாசாரம்" என்ற தலைப்பில் பழைய இதழ்கள், தினசரிகளின் கண்காட்சி, தரமணியில் உள்ள “ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகத்தில்” துவங்கி இருக்கின்றது. 23ம் தேதி வரை கண்காட்சி இருக்கும். காலை 10:௦௦ முதல் மாலை 5:௦௦ மணி வரை நடக்கிறது என்றும் தகவல் கொடுத்தார்.  தானும் வருவதாகச் சொன்னார் ஆனால் அவரால் வர இயலவில்லை. அவர் அளவிற்கு எழுத முடியாவிட்டாலும் ஏதோ சிற்றறிவிற்கு எட்டியவரைத் தொகுத்து எழுதியுள்ளோம்.

      வீட்டின் மிக அருகில், தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடம்.  ஆர்வமுடன், கூட்டம் நிறைய இருக்குமோ என்று, பல எதிர்பார்ப்புகளுடன் சென்றால், வயதான அந்தக் கட்டிடம், வயதான முதியோரைப் போல், யாரின் கவனமும் பெறாத வண்ணம் மிகவும் அமைதியாக இருந்தது. ஒருவேளை கண்காட்சி இல்லையோ என்ற சந்தேகம் வரும் அளவிற்கு.  பின்னர் உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றால், அங்கு பணிபுரிபவர்களைத் தவிர வேறு யாரும் பத்திரிகைகள் காட்சிக்கு வைக்கப்பட்ட இடத்தில் இல்லை.  உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. பல பத்திரிகைகள் பெரிய பலகையில் குறிப்புகளுடன், சுவற்றில் இருந்தன.  ஒரு சில பத்திரிகைகளும், தினசரிகளும், தொட்டால் பொடியும் நிலையில் இருந்ததால் அவற்றைக் கண்ணாடிப் பேழைக்குள், ஒரு மேசையின் மேல், அருங்காட்சியகம் போல் அமைத்திருந்தார்கள்.  ஆம்! அருங்காட்சியகம் தான்.  பார்த்தவுடன் தோன்றியது, தற்போதுள்ள சென்னை பத்திரிகைக் கலாச்சாரத்தோடு ஒப்பிடும் போது “சென்னைப் பட்டினப் பத்திரிகைக் கலாச்சாரம்” OLD IS GOLD  Always! என்று! 

      அங்கு வைக்கப்பட்டிருந்த பத்திரிகைகள், தினசரிகள் பற்றிய ஒரு சிறு குறிப்பு.

The Mail

The Madras Mail என்ற பெயரில், 1868, டிசம்பர் மாதம் 15 ம் தேதி (விக்கியில் 14 ம் தேதி என்றுள்ளது) சார்ல்ஸ் லாசன், ஹென்றி கோர்னிஷ் (Lawson and Henry Cornish) என்பவர்களால் தொடங்கப்பட்டு மாலை நேர தினசரி செய்தித்தாளாக வெளிவந்தது. முதலில் செகண்ட் லைன் பீச் அருகிலிருந்து வெளி வந்து பின்னர், ஃபர்ஸ்ட் லைன் பீச் அருகில் மாற்றப்பட்டு, பின்னர் மௌன்ட் ரோடில் உள்ள ஹிந்து கட்டிடத்திலிருந்து வெளி வந்தது. 1921 லிருந்து த மெயில், த மெட்ராஸ் மெயிலாக ஆர்தெர் ஹாகெள்ஸ் என்பவரால் மாறி பின்னர் எஸ். அனந்தராமக்ருஷ்ணனும் அவரதுகுடும்பத்தாராலும் நிறுவப்பட்டு 1981ல் மூடப்பட்டது.



சுதேசமித்திரன்

தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ்.. 1882 ஆம் ஆண்டு இதழாளர் ஜி. சுப்பிரமணிய அய்யரால், தமிழர்களுக்கு அரசியலில் ஆர்வமும், விழிப்புணர்வும் ஏற்படுத்தத் துவங்கப்பட்டது. கீழ் மற்றும் மேல் பர்மா (மியான்மர்), இலங்கை,பினாங்கு, சிங்கப்பூர், மலாய் மாநில கூட்டாட்சி, சுமாத்திரா, போர்னியோ, கொச்சின் இராச்சியம், சீனா மற்றும் தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா என விற்பனை விரிந்திருந்தது.
1893 ல் வாரம் 2 முறை.  1897 ல் வாரம் 3 முறை.
மகாகவி பாரதியார் தனது 22ஆம் வயதில் 1904 ஆம் ஆண்டில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். ஆனால் அரசுடன் இணங்கியிருக்க விரும்பிய சுப்பிரமணிய அய்யருடன் எழுந்த வேறுபாட்டால் 1906 இல் விலகினார். ஜி. சுப்பிரமணிய அய்யர் 1915 இல் த இந்து அதிபர் கஸ்தூரிரங்கனின் உறவினர் இரங்கசாமி அய்யங்காரிடம் மேலாண்மையை ஒப்படைத்தார். சி. ஆர். சீனிவாசனை வணிக மேலாளராகவும்- 1962 வரை - பாரதியாரை 1920 இல் மீண்டும் துணை ஆசிரியராகவும் அமர்த்தினார்.
முதல் சுதந்திரத்தினச் சிறப்பிதழ் ஆகஸ்ட் 15, 1948 ல், 24 பக்கங்களுடன் 3 அணாவிற்கு விற்கப்பட்டது. “அணா” என்பது வேறு ஏதோ ஒரு மொழியோ என்று இப்போது தோன்றக் கூடும். (ஒரு அணாவில் நான்கு பைசாக்கள்- இப்போதைய பைசா அல்ல. ஒரு அணா என்பது ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள்.)  இந்திய அரசின் வெற்றிகரமான ஓராண்டு சாதனை பட்டியலிடப்பட்டது. 1970ல் மூடப்பட்டது.
 1962 இல் சீனிவாசனின் மறைவிற்குப் பிறகு இந்த நாளிதழும் புது தலைமுறை நாளிதழ்களான தினத்தந்திபோன்றவற்றுடன் போட்டியிட முடியாது 1970களில் மூடப்பட்டது.
ஜானகிராமன் எழுதிய மோகமுள் சுதேசமித்திரன் வார இதழில் தான் தொடராக வெளிவந்தது. மு. கருணாநிதி எழுதிய பரப்பிரம்மம், க.நா.சு. எழுதிய படித்திருக்கிறீர்களா போன்ற மிகச் சிறந்த கட்டுரைத் தொடர்கள் இந்த இதழில் தான் வெளிவந்தன. சுப்பிரமணிய பாரதியார், அறிஞர் வ.ரா, சுத்தானந்த பாரதியார், முனைவர் மு.வ. ஆகியோர்களின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

ஜனவினோதினி

சென்னை தேசீய பாஷாவிருத்தி சங்கத்தாரால் 1869 ல் (The Mdaras School book and Vernacular literature Society) தொடங்கப்பட்டது.  30 ஆண்டுகள் வெளிவந்தது. 1922 ஜீலை முதல், வி.ராதாகிருஷ்ணன் ஐயரால் மயிலாப்பூரிலிருந்து வெளியிடப்பட்டது.  இதில் சரித்திரம், இலக்கியம், நவீன சாஸ்திரம், கதை, விவசாயம், கைத்தொழில், சுகாதாரம், மதாசாரம், விரோதம், சிறுவர், சிறுமிகளுக்கான நீதி, சித்திரம் முதலியன வெளியிடப்பட்டது.

மாதர் மனோரஞ்சனி

      “அந்தப்புரத்துத் தமிழ் இதழ்” என்ற முழக்கத்தோடு அரசாங்க நிதியுதவியுடன், சி. எஸ். ராமசாமி ஐயரால் 1899ல் மாத இதழாகத் தொடங்கப்பட்டது.  இது ஏறத்தாழ 18  ஆண்டுகள் வெளிவந்த, கல்விச் சிந்தனை, விவாகச் சீர்திருத்தம், சம உரிமைக் கோரிக்கை, இல்லறதர்மம், அடிமட்டத்தில் கிடந்த பெண்கலைக் கல்வி மூலம் எழுச்சி பெறச் செய்தல் முதலிய நோக்கங்களுக்காக வெளியிடப்பட்டது.

ஜகன்மோகினி


இதன் ஆசிரியராக இருந்தவரைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் பெண்கள் சமுதாயத்திற்கே இழுக்கு. இவரப் பற்றிச் சொல்ல ஒரு தனி பதிவே வேண்டும் என்றாலும் இங்கு ஒரு சிறு குறிப்பு. நாவல் அரசி வை. மு. கோதைநாயகி - தமிழ்தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளர். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர்.  ‘‘நாவல்ராணி, கதா மோகினி, ஏக அரசி’’ என்று போற்றப்பட்டவர்.  மடிசாராக இருந்தாலும், பெண்ணீயவாதி. 
வை. மு. கோதை நாயகி அம்மாள், 1923 முதல் நாகசாமி ஐயர் நடத்திவந்த ஜகன்மோகினி இதழை, 1925 ல் விலைக்கு வாங்கித், தனிப் பெண்ணாக 35 ஆண்டுகள் நடத்திவந்தவர். மாத இதழ். திருவல்லிக்கேணியிலிருந்து வெளியிடப்பட்டது. ராஜாஜி, சோமசுந்தர பாரதியார், சுத்தானந்த பாரதியார், வரகவி சுப்பிரமணி பாரதியார் போன்றோர் இதில் எழுதியுள்ளனர். 
தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் இவரைச் சரியாக அடையாளப்படுத்தவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. மடிசார் மாமியாக இருந்ததாலோ என்னவோ?! பள்ளிக் கல்வி இல்லாதவர். குழந்தைத் திருமணம். காந்தியடிகளின் கொள்கைகளில் தீவிரப் பற்றுக் கொண்டதாலும், தேசீயவாதியாக இருந்ததாலும் 1929 ல் அம்புஜம்மாள் தொடங்கிய சுதேசி லீக் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கதர் காங்கிரஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 1932 ஆம் ஆண்டில், சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டு, பாரதியின் பாடல்களையும் தான் எழுதிய தேசபக்திப் பாடல்களையும் பாடிக் கொண்டு கூட்டத்தை முன்னின்று நடத்தியவர். 6 மாதம் சிறை சென்றவர். 

தினமணி


       சுதந்திர தின நாள் சிறப்பிதழாக - ஆகஸ்ட் 15, 1947 – 36 பக்கம், 6 அணா. வெளிவந்த போது இந்த முதல் பக்கத்தில் மகாத்மா காந்தி அருகிலிருந்து ஜவஹர்லால் நேரு கொடியேற்றும் வரைபடம் வெளியாகியது.

தினசரி

      1944-1952.  1944-ல் டி.எஸ் சொக்கலிங்கம் தொடங்கி நடத்தினார்.  அவர் காமராஜ் தொடங்கிய நவசக்தியின் ஆசிரியராக அதன் ஆரம்ப காலத்தில் பணியாற்றினார்.
நவசக்தி

      திரு வி. கலியாண சுந்தரனார், “தேசபக்தன்” ஆசிரியராகப் பணியாற்றினார்.  பின்னர் அதிலிருந்து விலதி, 1920 அக்டோபர் 22 ல் சென்னைத் தொழிலாளர்களின் ஆதரவுடன் நவசக்தி வார இதழைத் தொடங்கினார்.  கல்கி போன்ற இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கிய பெருமை நவசக்திக்கு உண்டு. 1924, 1925, 1926 ஆகிய ஆண்டுகளில் நடை பெற்ற ஸ்தல் ஸ்தாபனத் தேர்தல், சட்டசபைத் தேர்தல் முதலியவற்றில், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு நவசக்தி உதவியது.  நேதாஜி காங்கிரஸில் புரட்சி செய்த போது அவரை ஆதரித்தது. 1941 ஜனவரியில் திரு.வி.க. ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகினார்.  அதன் உதவி ஆசிரியர் சக்தி தாஸன் சுப்பிரமணியம் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.`

பிரசண்டவிகடன்
தேசியவாதிகளுக்கும், திராவிட இயக்கத்தவர்க்கும் தோழமையாகச் சிறந்த பத்திரிகையாளராக ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாக, நல்ல நாவலாசிரியராக, நல்ல நாடக ஆசிரியராக விளங்கியவர் நாரண. துரைக்கண்ணன். இவரது புனைபெயர் “ஜீவா’.  1932 ஆம் ஆண்டு “பிரசண்ட விகடன்‘ ஆசிரியர் பொறுப்பினை ஏற்றார். 1934-ல் “ஆனந்த போதினி‘யின் ஆசிரியர் பொறுப்பும் வந்தது.  நல்ல படைப்பாளரும் கூட.  இவரும், கல்கியும் தான் தமிழ் பத்திரிகை உலகில் ஆரம்பகலங்களில் நாவலுக்கென ஓர் இடம் பெற்றுத் தந்தவர்கள்.
பிரசண்ட விகடன் மூலம் “ஜீவா‘ என்ற புனைபெயரில் தமிழ் எழுத்துலகில் புதிய மாற்றத்தினை உருவாக்கினார்.

ஆனந்த விகடன்

எல்லோரும் அறிந்த ஒரு வார இதழ். எஸ். எஸ். வாசனால் 1928 இல் தொடங்கப்பட்டது. வாரம் தோறும் நூறாயிரத்திற்கும் மேலான படிகள் அச்சாகி விற்பனையாகும் இதழ்.

மணிக்கொடி

காந்தியின் கொள்கைகளைப் பரப்புவதற்காக வ.ராமசாமி, டி.எஸ். சொக்கலிங்கம் ஆகியோரின் துணையுடன் சீனிவாசன் அவர்களால் 1933 ல் ஓரணா பதிரிகையாக, வெளிவந்த வரலாற்றுப் புகழ்மிக்கதொரு தமிழ் இதழ். இது முதலில் மாதம் இரு முறையும், பின்னர் வார(கிழமை) இதழாகவும் வெளிவந்தது 1935ல் நின்று போனது. பி. எஸ். ராமையாஅவர்களின் முயற்சியால் பல்வேறு இதழ்களுடனும், நிறுவனங்களுடனும் சேர்ந்து மேலும் சில ஆண்டுகள் இவ்விதழ் வெளிவந்து 1939 ஆம் ஆண்டில் முற்றாக நின்று விட்டது.  இதைப் பற்றி எங்கள் ப்ளாகில் அழகாசச் சொல்லப்பட்டிருப்பதால் இங்கு நாங்கள் விளக்கமாகத் தரவில்லை.  எங்கள் ப்ளாக் சுட்டி இதோ.
http://engalblog.blogspot.in/2012/04/blog-post.html

சினிமா உலகம்


 "சினிமா உலகம்" - பி.எஸ் (பி.எஸ்.பக்கிரிசாமி செட்டியார்) சினிமா பத்திரிகளின் தந்தை. 1935 ல் தமிழ் புத்தாண்டு முதல், கோயம்புத்தூரிலிருந்து "சினிமா உலகம்" என்ற வார இதழை "அரையணா" விலையில் வெளியிட்டார். 16 பக்கங்கள். 1943 ல் இரண்டணா பத்திரிகை ஆகியது. இவரின் சினிமா உலகம் பத்திரிகையே திரைத்துறை பத்திரிகைகளின் முன்னோடி. இப் பத்திரிகையில் சினிமா, நாடகம், இசை பற்றிய செய்திகளும், விமர்சனங்களும் பிரசுரமாயின. எந்த நடிக-நடிகையர், கலைஞர் பற்றிய தனிநபர் துதி பாடாத பத்திரிகையாக "சினிமா உலகம்" திகழ்ந்தது. இவருடைய "சினிமா உலகில்" பொது விமர்சனங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.
இவருடைய "சினிமா உலகம்" இதழில் விபுலானந்த அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பாலபாரதி, சு.து. சுப்பிரமணிய யோகிசாமி, சிதம்பரனார், பி.ஆர். என் மணி, திருநாவுக்கரசு  முதலியோர் எழுதினர். "சினிமா உலகில்" தான் கவிக்குயில் கண்ணதாசனின் கவிதை முதலில் பிரசுரமானது. முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் "சினிமா உலகில்" சில சிறுகதைகளை எழுதியுள்ளார். தீரர் சத்தியமூர்த்தி, சினிமா பல்கலைக்கழகங்களில் இவ்விதழைப் பாடமாக வைக்கவேண்டும் என்று "சினிமா உலகில்" எழுதினார். 1935ல் சென்னையிலிருந்து வெளியிடப்பட்ட இப்பத்திரிகை 1947 வரை வெளிவந்தது.

சுதேசகீதங்கள்

      பாரதியார் இயற்றிய தேசியகீதங்கள் 1931, சென்னை பாரதி பிரசுராலயம் வெளியிட்டது 112 பக்கம்.  பாரதி நூல்களை வெளியிட வேண்டி அவருடைய தம்பி சி. விசுவநாதன் தொடங்கிய பாரதி பிரசுராலயம், நூல் வடிவம் பெறாத பாரதியின் படைப்புகளை வெளியிட்ட பெருமையுடையது. பாரதி பிரசுலாயம் பாரதியால் இயற்றப்பட்ட சுதேச கீதத் திரட்டு 16 பக்கங்கள் வெளியிட்டது.

சென்னை சண்டே டைம்ஸ் பிரஸ்

காங்கிரஸ், சத்தியாகிரகம், வ.ராமசாமி எழுதிய ஆண்டு நிறைவு: ஒருவருஷ காங்கிரஸ் ஆட்சி 1938 ல் வெளியிட்டது 90 பக்கம். 14.9.1937 காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் ஓராண்டில் செய்த சாதனைகளை விளக்கும் நூல்.  சென்னை சட்ட சபையின் கீழ் சபை, மேல் சபை உறுப்பினர்கள், மந்திரிகள் இடம் பெற்ற எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் எழுதிய சத்தியாகிரக போர் வீரர் சரித்திரம் 1931, மதராஸ் வீர விஜயகலயம், பதிப்பித்தது.  தில்லையாடி வள்ளியம்மை, துர்காயரகான் அப்துல்கபார், சையத் அமீர் பாட்சா இவர்களின் வரலாறும் வெளியிடப்பட்டது. 

தமிழன்










         
        1907 ல் அயோத்திதாசரால், புதன் கிழமை தோறும், வாரப் பத்திரிகையாக “ஒரு பைசாத் தமிழன்” வெளியிடப்பட்டது.  1908 ல் ஆகஸ்ட் 26 முதல் தமிழன் என பெயர் மாற்றம் அடைந்து 7 ஆண்டுகள் வெளி வந்தது.  அவரின் மறைவுக்குப் பிறகு அவர் மகன் பட்டாபிராமன் 1914-ஜூன் 17 முதல் 1915 ஆகஸ்ட் 26.  பின் கோலார் தங்க வயல் பண்டிதமணி, ஜி.அப்பாதுரை ஆசிரியர் ஆனார் 1926 ஜீலை 7 முதல் 1934 ஜூலை 27.  நவீன இந்தியாவில் தலித் விழிப்புணர்வை ஏற்படுத்திய முன்னோடியாகவும், தனித்தன்மை மிக்கச் சிந்தனையாளரகாவும் மதிக்கப்படும் அயோத்திதாரச பண்டிதரின் கருத்து பரப்பலுக்கு முதன்மை களம் தமிழன்.  4 பக்கம் அன்றைய காலணா விலையில் ஃபுல்ஸ்கேப் சைஸ் அளவில் இராயப்பேட்டையிலிருந்து, பர்மா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், ப்ரான்ஸ், இந்தோனேசியா, ஜாவா நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.  இதைப் பற்றிய விவரங்கள் குணாதமிழ் வலைத்தளத்தில் முனைவர் குணசீலன் அவர்கள் கொடுத்திருக்கின்றார். அதன் சுட்டி இதோ.
http://www.gunathamizh.com/2014/05/blog-post_19.html வேர்களைத் தேடி

காந்தி இதழ்

காந்தி 1931 ஏப்ரல் 14 அன்று டி.எஸ் சொக்கலிங்கம் அவர்களால் வாரம் 2 முறை இதழாகத் தொடங்கப்பட்டது.  பின்பு 1931 செப்டம்பர் 12 முதல் வாரம் 3 முறை வெளிவந்தது. சென்னை லக்ஷ்மி அச்சகம் வார இதழாக்கியது.  பின்னர் மாதம் 2 முறையாகி முடிவில் மாத இதழாகியது.  பக்கங்களும், அளவுகளும், வெளிவரும் நாட்களும் மாறுதல் ஏற்பட்டது.  இது காந்தி பற்றிய செய்திகளையும், உலக நடப்புகளையும், சுதந்திரத்திற்கான செயற்பாடுகளையும், நாடகவழியிலான கருத்து விதைப்பும், சிறுவர்களுக்கான பக்கங்களையும் வெளியிட்டது.
      புதுமைப் பித்தனின்முதல் படைப்பு “குலோப் ஜாமுன் காதல்” பி.எஸ் ராமையா போன்றோரின் கதைகள், ம. சிங்காரவேலு, டி.என் இராமசாமி முதலானோரின் கட்டுரைகள் இவ்விதழில் வெளிவந்தன.  எ.வே ராமசாமி, வி.வரத ராஜுலு நாயுடு, ராஜாஜி, திரு.வி.க, ஜார்ஜ் ஜோசஃப், வ.உ.சிதம்பரம் பிள்ளை, தி.சே சௌரிராஜன், சத்திய மூர்த்தி ஆகியோர் பற்றிய வ.ரா.வின் “புகழ் பெற்ற பெரியார்கள்” என்று வெளிவந்தது.

சுதந்திரச் சங்கு

      1930 ஜனவரி 26 அன்று சங்கு கணேசன் அவர்களால் காலணா பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது. பலமுறை ஆங்கில அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.  பின்னர் வார இதழாக மாறியது.  சட்ட மறுப்ப் போராட்டச் செய்திகள், பெண் விடுதலை, சத்தியாகிரகம், ஹரிஜன ஆலயப் பிரவேசம் போன்ற செய்திகள், காந்தி, ரோமன் ரோ, நேரு, ராஜாஜி, சந்தானம், பட்டாபி, சீதாராமையா போன்றோரின் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன.

                                         சக்தி                                 வை. கோ

      மாத இதழ், சக்தி காரியாலயத்திலிருந்து 1939 ஆகஸ்ட் முதல் வை. கோவிந்தன் அவர்களால் 1939-1954 வரை 141 இதழாக வெளிவந்தது.  1951 டிசம்பர் முதல் 1953 வரை நிறுத்திவைப்பட்டது.  1950 மார்ச்சுக்குப் பிறகு பத்திரிகைக் காகிதக் கட்டுப்பாட்டுச் சட்டம் வந்ததால் சிறிய அளவில் வெளியிடப்பட்டது. இரண்டாம் உலகப் போரினால் சென்னையில் ஏற்பட்ட அபாயத்தால் காரைக்குடிக்கு மாறியது.  கட்டுரை, மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், மொழி பெயர்ப்புக் கதைகள், அரசியல் கட்டுரைகள் வெளிவந்தது.

அணில்


 1944 – குழந்தைகளுக்காக வை. கோவிந்தன் அவர்கள் வார இதழாகச், சென்னை சண்டே டைம்ஸ் லிருந்து ஜே எஸ் வாசனால் அச்சிடப்பட்டு, பஞ்சதந்த்திரக் கதைகள், சிறு கதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், சிரிப்பு வேடிக்கைப்படங்கள் விடுகதை, அறிவியல் சோதனைகள், இடம் பெற்றன. சக்தி வை. கோவிந்தன்  தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும், சிங்கப்பூர்-மலேசியா ஆகிய நாடுகளிலும் அணில் இதழ் விற்பனையில் சிறப்பிடம் பெற்றிருந்தது. வெளிநாடுகளுக்கு கப்பல் மூலமாக இதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதழின் விலை தொடக்கத்தில் 15 பைசாவாகவும், பின்னர் 25 பைசாவாகவும் இருந்துள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் அணில் இதழ் சார்பில் தீபாவளி மலர் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தீபாவளி மலரின் விலை 50 காசுகளாகும். 26 பக்கங்கள் கொண்ட அந்த மலரின் அட்டை வார்னிஷ் அட்டையாக பளிச்சென்று வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக வெளியாகும் அணில் இதழில் அட்டை வண்ணமாகவும், உள்ளே கருப்பு-வெள்ளையிலும் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் அணில் தீபாவளி மலர் அட்டை மல்டிக்கலரிலும், உட்புறம் இரு வண்ணத்திலும் அச்சிடப்பட்டது.

கல்கி

கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941 இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.
காந்தி ஆவணப் படம் இருந்தது.  செய்தி மட்டுமே. புத்தகங்களும், பருவ இதழ்களும் என்று, மிகவும் பழையதாகக் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தன.
1.   The Madras Local Roads Mannual.
2.   சென்னை நகர வழிகாட்டி
3.   சென்னை நாகரீக விந்தை அலங்காரப் பாட்டு.
4.   சென்னை மாநகர் புத்தகங்கள்.
5.   பராசக்தி – பி ஆர். ராஜம் ஐயர்
6.   இயலிசை, இசைக்கலை உலதத் தமிழ் – எஸ் மீனாட்சி சுந்தரம்
7.   பத்மஜோதி – நா சின்னைய செட்டியார் – 2 முறை மாத இதழ்
8.   நாளிதழ்கள் – கலைரசிகன் – ஆசிரியர் – ஜெய பாண்டியன்
9.   புரட்சி கீதம் – ஆசிரியர் விஜய கணேசன்
10.  இன முழக்கம் – ஆசிரியர் கண்ணதாசன் – 20 காசு
11.  புரட்சியார் ரசிகன் – ஆசிரியர் – எஸ் வீரபத்திரன்
12.  பாரதம் – தேசீய முற்போக்கு வார ஏடு
13.  நகரசபை – ஆசிரியர் முல்லை முத்தையா
14.  Geography of The Madras Presidency -  பூமி சாஸ்திரம் - 1886
15.  நம் வாழ்வு - தமிழ் இறை மக்களின் தனிப் பெரும் வார இதழ். அங்கு
வைக்கப்பட்டிருந்த செய்தித் தாளில் வெளியாகியிருந்த கட்டுரை – இந்திய மக்களுக்குக் குடும்பக்கட்டுப்பாடு இயற்கை முறையே ஏற்றது என்ற கட்டுரை.  அப்பொழுதே குடும்பக் கட்டுப்பாடு பற்றி பேசியிருந்தது ஆச்சரியமாக இருக்கிறது.

16.  1970ம் ஆண்டு அமிர்தசரஸ் அச்சு இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. கவர்ந்ததென்னவோ உண்மை.  புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.

இவ்வாறு அங்கு வைக்கப்பட்டிருந்த இதழ்களின் குறிப்புகளை விக்கியில், இணையத்தில் தேடினால் அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்புகளுக்கும், விக்கியில்,இணையத்தில் கிடைத்த தகவல்களுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. எனவே இரண்டையும் ஒத்துப் பார்த்து சிலவற்றை மட்டுமே கொடுத்துள்ளோம்.  இன்னும் பல இதழ்கள் இருந்திருக்கின்றன என்று இணையம் சொல்லுகின்றது.  இருந்தாலும் அங்கு, இந்த நூலகம் சேகரித்து, பாதுகாத்து வைத்திருந்தவை மட்டுமே இங்கு சொல்லப்பட்டுள்ளது. 

நன்றி-ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், விக்கி
படங்கள் - கூகுள், இணையம்







43 கருத்துகள்:

  1. //கொடியேற்றும் வரைபடம்//

    புகைப்படம் இல்லையோ அது? :))))

    படித்துக் கொண்டே வரும்போது ஒரு சிறு இன்ப அதிர்ச்சி! எங்கள் ப்ளாக் சுட்டி! நன்றி... நன்றி!

    சினிமா உலகம் பத்திரிகையில் பெரிய பெரிய ஆட்கள் கூட எழுதி இருக்கிறார்கள் என்ற தகவல் ஆச்சர்யம்தான். ஆனால் கூடவே ஒன்று தோன்றியது. இப்போது புகழ்பெற்றவர்களாக அவர்கள் அறியப்பட்டாலும் அப்போது அவர்கள் பொது எழுத்தாளர்ககளாத்தானே இருந்திருப்பார்கள் என்று! :)))

    //அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்புகளுக்கும், விக்கியில்,இணையத்தில் கிடைத்த தகவல்களுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.//

    நேரில் பார்த்ததையே நாம் நம்பலாம். விக்கியை நாம் நம்ப வேண்டாம்!

    ஏராளமான தகவல்கள். சுவாரஸ்யம். இந்துநேசன் பத்திரிக்கை பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லையா? :)))))

    குண்டூசி, ராணி தேன்கூடு பாரதிதாசனின் பகுத்தறிவு பத்திரிகைகள் பற்றிய விவரங்கள் இல்லையோ! இதில் குன்டூசிப் பத்திரிகையில் என் அப்பாவின் படைப்பு வெளிவந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. கொடியேற்றும் வரைபடம்// புகைப்படம் இல்லை அது. வரைபடமே. ஆனால் அதுவும் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் எடுக்கவில்லை.

    எல்லா பெரிய ஆட்களுமே முதலில் பொது எழுத்தாளர்களாக இருந்து வளர்வதுதானே!! அதுவும் அப்போது எல்லாம் இப்போதுஇருக்கும் அளவு வசதிகளோ, தொழில் நுட்ப வளர்ச்சியோ இல்லையே. இப்போது யார் வேண்டுமானாலும் எழுதலாம். எதை வெண்டுமானாலும் எழுதலாமே.

    ஆம் சார். விக்கியை நம்ப வேண்டாம்தான். சில பத்திரிகைகளுக்கு அங்குமே மிகச் சிறு குறிப்பே இருந்ததால் , இணையத்தில் தேடினால் சில வலைத்தளங்களில் கிடைத்தாலும் அவையும், அந்தக் குறிப்புகளுமே சிறிதேனும் வித்தியாசப்பட்டன.

    ஆஹா! குழ்ண்டூசியில் தங்கள் அப்பாவின் படைப்பு வெளிவந்திருக்கின்றதா?!!! தங்கள் தந்தைக்கு எங்கள் வணக்கங்கள்! அதுதான் அந்த ஜீன் தான் தங்களிடமும் போல!!!! மிகவும் நல்லதொரு மகிழ்சியான விஷயம் சார்!

    இந்து நேசன், குண்டூசி, ராணி தேன் கூடு, பாரதிதாசனின் பகுத்தறிவு பத்திரிகைகள் இருந்ததாகசத் தெரியவில்லை. அங்கு இருந்து ஒவ்வொன்றின் முன்பும் நின்று கொண்டு எழுதி எடுத்ததுதான். கண்ண்டிப் பேழைக்குள் இருந்தவற்றில் பொடியும் அளவு இருந்த தாள்கள் போல்தான் வைக்கப்பட்டிருந்தன. குறிப்புகள் எதுவும் இல்லை. அதைப் பார்த்து எழுதி எடுத்ததுதான்.

    மிக்க நன்றி சார் தங்களின் மிக அருமையான, அழகான, கருத்துள்ள பின்னூட்டத்திற்கு!

    பதிலளிநீக்கு
  3. போட்டி உலகில் தரமான பத்திரிக்கைகள் காணாமல் போய்விடுகின்றன. அருங்காட்சியகமாக வைக்கப் பட்டிருந்த பத்திரிக்கைகளை வாசிக்க முடிந்ததா. ? சினிமாவின் தாக்கம் அவ்வளவாக இருந்திருக்காத காலப் பத்திரிக்கைகள்.படித்து வரும்போது பத்திரிக்கை நிறுவியவர்களும் ஆசிரியர்களும் தேசப் பற்று மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. குமுதம் கல்கண்டு போன்ற பத்திரிக்கைகள் பற்றிய செய்திகள் இல்லையா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டி உலகில் தரமான பத்திரிக்கைகள் காணாமல் போய்விடுகின்றன. // உண்மையே சார்!

      அருங்காட்சியகமாக வைக்கப் பட்டிருந்த பத்திரிக்கைகளை வாசிக்க முடிந்ததா. // இல்லை சார்

      குமுதம், கல்கண்டு பற்றி இருந்ததாகச் தெரியவில்லை சார்!

      நீக்கு
  4. அருமையான கட்டுரை! இவற்றுள் பல இதழ்கள் நான் கேள்விப்படாதவை. காந்தியடிகளின் கொள்கைகளுக்கெனவே 'காந்தி' எனும் பெயரில் ஓர் இதழே நடத்தியிருக்கிறார்கள் என்பது மறக்கப்பட்ட அந்தப் பெருமகனின் பெருமையை மீண்டும் நினைவூட்டுகிறது. சுதேசமித்திரன், அணில் ஆகியவை பற்றி ஏற்கெனவே நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும், அந்தக் காலத்திலேயே இவை வெளிநாடுகளுக்கெல்லாம் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டன என்பது தெரியாது. தொழில்நுட்ப வசதிகள் அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்திலேயே எவ்வளவெல்லாம் சாதித்திருக்கிறார்கள்! ஆப்செட் கூடக் கிடையாதே! எப்பேர்ப்பட்ட உழைப்பு!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொழில்னுட்பம் வளர்ச்சி அடைந்திருக்காத அந்த நாட்களில் பல நல்ல தரமான பத்திரிகைகள் வந்திருக்கின்றன. ஆனால் இப்போது எல்லா வசதிகளும் இருக்கும் இன் நாளில் தரமான பத்திரிகைகள் வருகின்றனவா??!!

      நீக்கு
    2. ஆனந்த விகடன், கல்கி, காலச்சுவடு ஆகியவை தரமான இதழ்கள்தாமே ஐயா?!

      நீக்கு
    3. ஆம் நிச்சயமாக! ஏன் அமுதசுரபி, கலைமகள் சொல்லல்லாம். ஆனால் சொற்பமாகி விட்டது என்பதுதான்....

      நீக்கு
  5. பதிவில் தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் பெயர் தவறாகத் தட்டெழுதப்பட்டுள்ளது. மேலும், 'ம. சிங்காரப்ற்லு' என்று ஒரு பெயர் இடம்பெற்றுள்ளது. இரண்டையும் திருத்தி விடுவது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி செய்துவிட்டோம் . தட்டெழுத்து செய்யும் போது பல சமயங்களில் எழுத்துக்கள் ஒடுகின்றன. மற்றபடி சரிசெய்துவிட்டோம்.

      நீக்கு
    2. சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி! ஐயா!

      நீக்கு
  6. எது செய்தாலும் தனி முத்திரையோடு செய்துவிடுகிறீர்கள் நண்பரே!...எப்படியும் நாளை அல்லது மறுநாள் வந்து பார்த்துவிடவேண்டும் என்று இருக்கிறேன். நமது எழுத்துப் பாரம்பரியத்தின் முன்னோர்களைப் பார்க்கக் கொடுத்துவைக்கவேண்டுமே!..நன்றி உங்கள் தொகுப்புக்கு! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார் பாராட்டிற்கு! தனி முத்திரை என்று நீங்கள் சொல்லியது சற்று மிகையானாலும்! பார்த்துவிட்டீர்களா சார்?

      நீக்கு
  7. சகோஸ்!!! உண்மையில் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம் உங்க பதிவு!!!
    அருமையான விளக்கங்கள்! அதிக தகவலுக்கு நட்புதளங்களின் அறிமுகம்!! சூப்பர் !! சூப்பர்!!
    கை வலிக்க குலுக்கலாம் சகோஸ்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் பாராட்டுதலுக்கு! கை குலுக்கலுக்கும் சேர்த்துத்தான்!

      நீக்கு
  8. விளக்கமான பதிவு மூலம் நேரில் சென்றால் கூட தெரிந்து கொள்ள முடியாத பல செய்திகளை தெரிந்து கொண்டேன் .மிக்க நன்றி !
    த ம 1

    பதிலளிநீக்கு
  9. நண்பரே மூன்று தினங்களாக இந்தப்பதிவு திறக்க முடியவில்லை இன்றுதான் கிடைத்தது காத்திருப்பிற்குப்பின் ஒரு பொக்கிஷமே கிடைத்தது சந்தோஷமே எவ்வளவு தூரம் தேடி சேகரித்திருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர் ஜி! பரவாயில்லை நீங்கள் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்ததற்கு!

      நீக்கு
  10. புதிய தகவல்கள் படிக்கத் தூண்டும் நடை!
    பட்டையக் கிளப்புங்க அய்யா!
    நிறையத் தெரிந்து கொண்டேன்.
    பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி விஜு ஐயா! உங்களை விடவா நாங்கள் பட்டையைக் கிளப்புகின்றோம்!

      நீக்கு
  11. சகாக்கள் தனி பார்வைக்கு :) **http://www.tronbrook.com/2014/08/ode-on-my-scooter.html* முதல் ஆங்கிலக்கவிதை முயற்சி! படிச்சுட்டு உண்மையான கருத்தை சொல்லுங்க:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்தோம் சகோதரி. பின்னூட்டம் கொடுத்துள்ளோம். மீண்டும் திரும்பவும் வருகின்றோம்! பின்னூட்டம் கொடுக்க...

      நீக்கு
  12. அந்த கால இதழ்களை பற்றி சுவையான தகவல்கள்! படிக்க படிக்க ஆச்சர்யமும் பிரமிப்பும் ஏற்பட்டது. அப்போதே சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் புத்தகம் வந்திருக்கிறது! இப்போதைய சிறுவர்களுக்கு ஏற்ற இதழ்கள் பெரிய அளவில் இல்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ்! தங்கள் கருத்திற்கு! கோகுலம், அம்புலி மாமா, எல்லாம் எங்கே போயிற்று? இருக்கின்றன அல்லவா?

      நீக்கு
    2. ஆம் ஐயா! கோகுலம், அம்புலிமாமா இரண்டு மட்டும்தான் இருக்கின்றன. (அவற்றில் கூட அம்புலிமாமா கடந்த ஓராண்டாக நின்று விட்டதாகத் தெரிகிறது. வலைத்தளம் கூடத் திறக்க மாட்டேன்கிறது). பூந்தளிர், பார்வதி சித்திரக்கதைகள், ராணி காமிக்சு, பொன்னி காமிக்சு, பாலமித்ரா இன்னும் எத்தனை எத்தனை இதழ்கள் இருந்தன! எல்லாம் இழுத்து மூடப்பட்டு விட்டன.

      நீக்கு
    3. மிகவும் வருத்தத்திற்குரிய விடயம்.

      நீக்கு
  13. அண்மைக்காலமாக, சிறுவர் இலக்கியத்தின் ஒரு பிரிவான சித்திரக்கதைகள் மட்டும் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளன. லயன் முத்து காமிக்சு மீண்டும் பிரம்மாண்டமாக இதழுலகில் கால் பதித்துள்ளது. (பார்க்க: http://lion-muthucomics.blogspot.in). மேத்தா காமிக்சும் விரைவில் மீண்டும் மலர இருப்பதாகச் சித்திரக்கதைகள் பற்றி எழுதும் பதிவர் ஜே.எஸ்.சி ஜானி கடந்த வாரம் தெரிவித்தார். (பார்க்க: http://johny-johnsimon.blogspot.in/2014/08/pt.html). மேலும், சித்திரக்கதைப் பதிவர்களில் தலையாய பதிவர் கிங் விஸ்வா அவர்களும் சிறுவர் இலக்கியத்துக்கெனவே பதிப்பகம் தொடங்கியுள்ளார். அழிந்தே விட்டது என்று கருதப்பட்ட தமிழ்ச் சிறுவர் இலக்கிய உலகில் மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த மலர்ச்சி விரைவில் எழுச்சி பெறும் என்றே நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தத் தளங்கள் சென்று பார்க்கின்றோம் ஐயா! குழந்தைகளின் வாசிப்பு பெருக இது போன்ற சிறுவர் இலக்கியங்கள் வர வேண்டும். சில செய்தித் தாள்களில் சிறுவர்களுக்கென பகுதி ஒதுக்கப்பட்டு கதைகள்,சித்திரக் கதைகள் வருகின்றனதான்.

      தங்கள் விளக்கமானத் தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
    2. தங்களைப் போன்ற ஆர்வலர்களுக்குச் செய்தியைத் தெரியப்படுத்தியதில் மகிழ்ச்சி!

      நீக்கு
  14. அந்த காலத்தில் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் ஆனால் மக்கள் நலனில் இஷ்டத்திலும் வெளிவந்த பத்திரிகைகள் பற்றிய அரிய தொகுப்பை அறியவைத்த பதிவு தந்த தங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதச் சொல்லுங்க! மிகவும் சரியே! எந்த டெக்னாலஜ்யும் இல்லாத அந்தக் கால கட்டத்தில் எவ்வளவு அருமையான பத்திரிகைகள்!

      மிக்க நன்றி!

      நீக்கு
  15. அருமையான இந்தத் தொகுப்புக் கட்டுரையில் தங்களின் கடின உழைப்பு புலனாகிறது.

    நன்றி துளசிதரன்.

    நான் பள்ளியில் படிக்கும்போது சுதேசமித்திரனில்தான் கதைகள் படித்தேன். கதை எழுதும் ஆர்வமும் பிறந்தது.

    கல்லூரியில் காலடி வைத்தபோது, பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி இதழ்களுக்கு எழுதினேன். மூன்று சிறுகதைகள் வெளியாயின.

    தங்களின் இந்தப் பதிவு இவ்வாறான பழைய நினைவுகளை என்னுள் கிளர்ந்தெழச் செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    மிக்க நன்றி துளசிதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுதேசமித்திரன் தங்களின் கதை எழுதும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றது என்றால் அது எத்தனை மகத்தான பத்திரிகையாக இருந்திருக்க வேண்டும்!

      பிரசண்ட விகடன், ஆனந்த போதினி இதழ்களிள் தங்கள் சிறுகதைகள் வெளியானது மிக்க மகிழ்ச்சி, எங்களுக்குத் தங்கள் அறிமுகம் கிடைத்ததற்கும் நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஐயா! இப்போது தாங்கள் எழுதுவதில்லையா? ஐயா? பத்திரிகைகளுக்கு? எழுதலாமே. இரு நாட்களுக்குப் பிறகு, வரும் வெள்ளிக் கிழமை இவற்றைப் பற்றியெல்லாம் ஒரு பதிவு இருக்கும் ஐயா!

      மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  16. சிறந்த பதிவு - தங்கள்
    பதிவை எனது தளத்திலும்
    அறிமுகம் செய்துள்ளேன்!

    தமிழகப் பழைய இதழ்கள், பத்திரிகைகள்
    http://yppubs.blogspot.com/2014/08/blog-post_27.html

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கும், தாங்கள் தங்கள் வலைத் தளத்தில் பகிர்ந்து கொண்டதற்கும்!

      நீக்கு
    2. பத்திரிகை உலகப்பாரம்பர்ய கண்காட்சியை அருமையான பகிர்வாக்கி காட்சிப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்.

      நீக்கு
  17. பத்திரிகைகளின் பாரம்பர்யத்தை சுவரஸ்யமான கண்காட்சியாக்கியிருப்பதை அருமையாகப் பகிர்ந்திருப்பதற்குப் பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும் வருகைக்கும்!

      நீக்கு