திங்கள், 31 மார்ச், 2014

கல்யாண வீரர்களிடம் சிக்கி சீரழியும், பரிதாபத்திற்குரிய பெண்கள்


     குடிகாரக் கணவர்களிடமும், சந்தேகப் பேர்வழிகளான கணவர்களிடமும் சிக்கித் தவிக்கும் ஏராளமானப் பெண்களைப்பற்றி கேட்டும், வாசித்தும், வேதனைப் படும் நமக்கு, கல்யாண வீரர்களாம், கயவர்கள் தங்கள் மனைவியரிடம் காண்பிக்கும் காட்டுமிராண்டித்தனத்தைப் பற்றிக் கேட்கும் போது உண்டாகும் இந்த வலி சகிக்க முடியாத ஒன்று.
courtesy cartoonstock.com/google

     70 வயதான, திருவனந்தபுரம், முரிக்குப்புழா புதுவல்புத்தன் வீட்டில் அலியார் குஞ்ஞு என்னும் கல்யாண வீரர், ஒரு மனைவியுடன், 5 ஆண்டுத் திட்டம் போல், 5 வருடம்தான் குடித்தனம் நடத்துவாராம்.  பின்னர், அந்த மனைவியை அடித்து, உதைத்து எப்படியாவது “மொழி சொல்லி விடுவாராம்.  (மொழி சொல்லல் என்றால் விவாகரத்து செய்தல்).  கடந்த 20 வருடங்களில், 4 பேர், இப்படி அவரால் கைவிடப்பட்டு, அவர்களுடைய பெற்றோர்கள், மற்றும் சகோதரர்களுடன் வாழ்ந்து வருகிறார்களாம். இதில் ஒரு மனைவிக்கு, இப்போது 18 வயதுதான் ஆகிறதாம்.  5 ஆம் மனைவியான, ஆலுவா, குஞ்ஞுண்ணிக்கரையில், ஷாகிதாவை, அடித்தும் உதைத்தும், “மொழி சொல்ல முயன்ற போது, ஷாகிதாவுக்கு உதவ அவரது உறவினரும், அண்டை அயல் வீட்டாரும் முன்வந்து, போலீசில் புகார் செய்து, அவரைக் கைது செய்து, அவருக்கு எதிரே வழக்குத் தொடர வைத்திருக்கிரார்கள்.  இது போன்ற, அநீதிக்கும், அக்கிரமத்திற்கும் எதிரே, நடவடிக்கை எடுக்க ஆவன செய்த அந்த நல்ல மனம் படைத்தவர்கள், பாராட்டுக்குறியவர்களே!

courtesy google

     அலியார் குஞ்ஞைப் போல் 5 வருடம் குடும்பம் நடத்த பொறுமை இல்லாத, பாலக்காடு, வல்லப்புழா, கிழக்கேபாட்டுத்தொடி வீட்டில் மஜீத் (38), வட கேரளத்திலுள்ள 14 இடங்களிலிருந்து, 14 கல்யாணங்கள் செய்திருக்கிறார்.  இவர், மனைவிகளை, “மொழி சொல்லி அவர்களைத் துன்புறுத்த மாட்டாராம். பதிலுக்கு அவரது நகைகளைக் கவர்ந்து காணாமல் போய்விடுவாராம்.  15 வது முறையாக, கொஞ்சம் அவசரப்பட்டுக் கல்யாணம் செய்யாமலேயே நகைகளைக் கவர முயன்ற போது, போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

     
courtesy google

    இவர், நாளிதழ்களில், “மணமகள் தேவை விளம்பரம் கொடுத்து, அதன் மூலம்தான் தன் கைவரிசையைக் காண்பித்து வந்திருக்கிறார், இத்தனைக் காலமாக.  அப்படி இவரது விளம்பரம் கண்டு, மன்னார்காடைச் சேர்ந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணின் பெற்றோர் இவரருடன் தொடர்பு கொண்டிருக்கின்றார்கள்.  தன் தாய், நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் இருப்பதாகவும், தன் மனைவியாகப் போகும் பெண்ணை அவர் பார்க்க ஆசைப்படுகிறார் என்றும், அவருக்குப் பிடித்துவிட்டால், உடனே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் கூறி, அவர்களை ஏமாற்றி, தன் நண்பன், பனமன்னா சுலைமானின் காரில், அந்தப் பெண்ணை ஏற்றி, ஒரு காட்டுப் பிரதேசத்திற்குக் கொண்டுச் சென்று, மிரட்டி நகைகளைக் கவர்ந்துச் சென்றிருக்கிறார்.  எப்படியோ, வீட்டை அடைந்த அந்தப் பெண், போலீசில் புகார் கொடுக்க, மஜீதும், நண்பர்களும் கைது செய்யப்பட்டு, அவர்கள் ஒற்றப்பாலத்தில் விற்ற நகைகளும் மீட்கப்பட்டன.  இது போல் கைது செய்யப்படாத எத்தனையோ, மஜீதுகளும், அலியார் குஞ்ஞுகளும், கேரளத்தில் தங்கள் கைவரிசைகளைக் காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெற்றோர்கள், அவசரப்படாமல், சிந்தித்து, தீரவிசாரித்து மட்டுமே பெண்களை மணமுடித்துக் கொடுக்கவேண்டும். பெண்களும் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்து, இது போன்ற சம்பவங்கள் அவர்களது வாழ்வில் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது போன்ற சம்பவங்களைப் பற்றிக் கேட்கவோ, காணவோ செய்யும் போது, பொதுமக்களும் அதற்கு எதிராகப் புகார் கொடுக்கவோ, எதிர்த்துப் போராடவோ தயங்கக் கூடாது! அப்போதுதான் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்களை வேரோடு பிடுங்கி எறிய முடியும்! 

ஞாயிறு, 23 மார்ச், 2014

தேர்தல் பணியினிடையே கணினியில் திரைப்படம் பார்த்ததால் வேலை போன அரசு ஊழியர் மனம் உடைந்து தற்கொலைமுளையிலேயேக் கிள்ளி எறியப்படாத தன்மானம் மற்றும் கௌரவப் பிரச்சினைகள் வளர்ந்து உயிரையேக் கிள்ளி எறியும் திறன் பெறுகின்றன.  எர்ணாகுளம் அருகே உள்ள கும்பளங்கியிலுள்ள கிராம அலுவலகத்தில், தேர்தல் நெருங்கியதால், ஞாயிற்றுக்கிழமை அன்றும்(09/03/2014) ஊழியர்கள், வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  எப்போதாவது ஓரிருவர் வந்ததாலோ, மாலை நேரத்தில் எவரும் வர வாய்ப்பில்லை என்று முடிவு செய்ததாலோ என்னவோ, அலுவலகத்தில் இருந்தவர்கள் கணினியில் ஒரு திரைப்படம் காணத் தொடங்கினார்கள்! எதிர்பாராமல் திடீரென பரிசோதனைக்காக அங்கு வந்த ஃபோர்ட் கொச்சியின், மாவட்ட துணை ஆட்சியாளர், ஸ்வாகத் பண்டாரி ரண்வீர் சந்த், ஊழியர்களின் பொறுப்பற்ற இச்செயலைக் கண்டு கோபம் கொண்டு, மாவட்ட ஆட்சி அலுவலரிடம் தெரிவிக்க, தேர்தல் நேரமானதால், உடனே மின்னல் நடவடிக்கை எடுக்கப்பட்டும் விட்டது! கிராம அதிகாரியும், கிராம சேவகர், கே.ஜி. கிருஷ்ணனும் (53) அன்று இரவே தற்காலப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

   தேர்தல் நேரங்களில், தேர்தல் வேலைகள் பிரச்சினையின்றி நடக்க, போலீசார்கள் கூட்டத்தைக் கலைக்க ஆகாயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை விடுவது போல், யாரையேனும் ஒருவரைத் தற்காலிக வேலை நீக்கம் செய்து இப்படி எச்சரிப்பது வழக்கமே! அது போல் ஒன்றுதான் இதுவும்!  ஆனால், தொலைக்காட்சிச். சானல்கள், தேர்தல் செய்திகளை வித்தியாசமாகக் கொடுக்க முயன்று கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்குக் கிடைத்த அல்வாத் துண்டுதான் இந்த தற்காலிக வேலை நீக்குதல் விவாகாரம்.  எனவே, மாவட்டத் துணை ஆட்சியாளர், மற்றும் மாவட்ட ஆட்சியாளரின் அறிக்கைகளுடன் தற்காலிக வேலை நீக்கம் செய்யபட்ட, இரு அரசு ஊழியர்களின் புகைப்படங்களையும், சம்பந்தப்பட்ட சாட்சிகளையும், எல்லாச் சானல்களும் இடையிடையே காண்பித்து அன்றைய தினத்தைக் கொண்டாடிவிட்டார்கள்! 

திங்கட் கிழமை, மனிதர்கள் முகத்தில் எப்படி விழிப்பது என்ற தன்மானப் பிரச்சினை கிருஷ்ணன் மனதில் பெரிதாகிக் கொண்டிருந்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சினை, திங்கட் கிழமை நடக்கவிருந்த, +1 படிக்கும் தன் இளைய மகளின் கணக்குத் தேர்வைப் பற்றியோ, செவ்வாய் கிழமை முதல் B.Com.  படிக்கும் தன் மூத்த மகளுக்கு நடக்கவிருக்கும் தேர்வுகளைப் பற்றியோக் கூடச் சிந்திக்க அவரை அனுமதிக்கவில்லை! தன் மரணம் அந்தக் குடும்பத்திற்கு ஏற்படுத்தும் ஈடுசெய்ய முடியாத சேதத்தைப் பற்றியும் அவர் சிந்திக்கவில்லை! அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, தன் மரணத்தால் மட்டுமே முடியும் என முடிவு செய்த அவர், விடியும் முன், தன் அறையில், கயிற்றில் தொங்கி நிற்கும் பிணமாய் மாறிவிட்டார். 

சஹாரா குழுமத்தின் அதிபர் சுப்ரடா ராய்

கோடிக் கணக்கான ரூபாய், பொது மக்களிடமிருந்து வசூலித்து திரும்பக் கொடுக்காததால், மோசடிக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட சஹாரா குழுமத்தின் அதிபர், சுப்ரடா ராய், நீதி மன்றத்திற்குக் கொண்டு செல்லபடும் போது அவர் முகத்தில் மை வீசப்பட, அதைத் துடைத்துப் போன அவர் தற்கொலை முயற்சி ஏதும் செய்ததாகத் தெரியவில்லை! பேட்டியின் போது, கன்னத்தில் அறைவாங்கிய சரத்பவாரும் தற்கொலை முயற்சி செய்யவில்லை! அவர்களுக்கெல்லாம், அந்த எதிர்பாராத சம்பவங்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து,(செய்தது தவறுதான் என்றாலும்) அதற்கேற்றபடித், தங்கள் சிந்தனைகளை அதன் போக்கில் விடாமல் நேர்முகப்படுத்தி, செயல்பட்டதால் தானே அவர்கள் நம் மத்தியில் உயிர் வாழ்கின்றார்கள்!  இவ்வுலகில் எல்லோரது வாழ்விலும் இப்படிப்பட்ட அவமானப்பட வேண்டிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படத்தான் செய்யும். அதை எல்லாம் காலத்தின் கைகளில் ஏற்பித்து பொறுமையுடன் காத்திருந்தவர்கள் இப்புவியில் வாழ்வைத் தொடர்கின்றார்கள்! “பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற முதுமொழிக்கிணங்க?! 

ராபர்ட் க்ளைவ்


ஒரு சில நேரங்களில், நீண்ட போராட்டம், போராடுபவர்களை மிகவும் பலவீனப்படுத்தி, இனி போராட முடியாது, போராடிப் பயனில்லை எனும் நிலை அவர்களது வாழ்வில் வரும்போது, அவர்கள் தற்கொலை முடிவுகளை எடுப்பதுண்டு. கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் இங்கிலாந்து நாட்டிற்கு இந்தியாவை ஆள அவசியமான அடித்தளம் கட்டிய ராபர்ட் க்ளைவ் அவர் செய்த சில தவறுகளுக்காக “இம்பீச்செய்யப்பட்டு, அவரது பேரும், புகழும், பதவியும் எல்லாம் நஷ்டமானபோது, தான் நாட்டுக்குச் செய்த நன்மை எல்லாம் மறந்து, தன் தவறை மட்டும் கணக்கில் கொள்வதைக் கண்டு மனம் நொந்து, கத்தியால் தன்னைத் தானேக் குத்திக் கொண்டு இறந்ததும் அது போன்ற ஒரு சம்பவமே.

பேராசிரியர் டி.ஜே. ஜோசஃப்        .           ஸலோமி
                                                        
அது போல, சென்ற வாரம் “பாப்புலர் ஃப்ரண்ட் (Popular Front) எனும் கட்ச்சியைச் சேர்ந்தவர்களால் கை வெட்டப்பட்ட தொடுபுழா நியூமேன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் டி.ஜே. ஜோசஃபின் மனைவி சலோமி(49) தற்கொலை செய்துகொண்ட சம்பவம். அல்லாவை அவமானப்படுத்தும் விதத்தில், கல்லூரி மாணவர்கள் எழுத வேண்டிய வினாத்தாள் தயாரித்தார் என்பதற்காக, அந்த வினாத்தாள் எழுத உதவிய அவரது வலது கை வெட்டப்பட்டது. மட்டுமல்ல, அவரைக் கல்லூரி நிர்வாகம் வேlலையிலிருந்து நீக்கவும் செய்தது.  மறுபடியும் வேலையில் சேர அவர் எல்லா வழிகளிலும் முயன்று கொண்டிருந்தார்.  ஆனால், திரு ஜோசஃப், ஓய்வு பெறவேண்டிய 2014 மார்ச் 31 க்கு முன் தன் கணவருக்குப் பதவி திரும்பக் கிடைக்காது என்பதை அறிந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும் அவரது தற்கொலைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.


கை வெட்டப்பட்ட நாள் முதல் (ஜூலை 4, 2010) தன் கணவருக்கு நெடும் தூணாய் நின்று, அவரைக் காத்தவருக்கு, தன் கணவருக்குச் சாதகமான முடிவை கல்லூரி நிர்வாகம் எடுக்கவில்லையே என்ற வேதனை அவரை அந்த முடிவுக்குத் தள்ளிவிட்டிருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இதில் வேதனைக்குறிய விஷயம் என்னவென்றால், சலோமி இறந்து 3 நாட்களுக்குப் பிறகு கல்லூரி நிர்வாகம் வேறு வழியின்றி அவரை வேலையில் மறுபடியும் சேர்த்துக் கொள்ளத் தீர்மானம் எடுத்திருக்கிறது! (கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்).


எப்படிப் பார்த்தாலும், ராபர்ட் க்ளைவும், சலோமியும். ஜி.கிருஷ்ணனைப் போல் பிரச்சினை ஏற்பட்ட உடனேயே, முன்பின் சிந்திக்காமல் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர்கள் போராடியிருக்கிறார்கள்.  தோற்றுவிட்டோம் என்ற நிலை வந்தபோது, இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்ற எண்ணம் வந்ததும், தற்கொலை செய்து கொண்டிருந்திருக்கின்றார்கள். இங்கு, ராபர்ட் க்ளைவும், சலோமியும் செய்ததுதான் சரி என்பதல்ல எங்கள் வாதம். அவர்கள் தொடர்ந்து போராடியிருக்க வேண்டும். வெற்றி பெற முடியாவிட்டாலும், இறுதி வரை போராடியிருக்க வேண்டும்.  எர்னஸ்ட் ஹெமிங்க்வே (Ernest Hemingway) எழுதிய  “Old Man and the Sea எனும் நாவலில் வரும் வயதான மீனவரான ‘ஸாண்டியாகோவைப் (Santiago) போல.
 

தற்கொலை என்பது பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடும் கோழைகளின் செயலே!- அது பிரச்சினையைக் கண்டவுடன் பயந்து ஓடிப்போய் செய்துகொண்டாலும் சரி அதனுடன் இயன்ற மட்டும் போராடி, இனி போராடிப் பயனில்லை, என்ற கட்டத்தில் செய்துகொண்டாலும் சரி. அவர்களது பிரச்சினை அவர்கள் நினைப்பது போல் அவர்கள் மரணத்தோடு காணாமல் போவதில்லை! அவர்களது மரணம், அவர்களது பிரச்சினைகளைப் பன்மடங்காக்கி, அவர்களை நம்பியவர்களை, அவர்களை மிகவும் அதிகமாக நேசித்தவர்களை, அதே போல், அவர்கள் மிகவும் அதிகமாக நேசிப்பவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தி, அவர்கள் முன் அப்பிரச்சினைகளை இட்டுச் சென்றுவிடும்! எனவே, தன் குடும்பத்தினரை உண்மையாக நேசிக்கும் ஒருவரால் ஒரு போதும் பிரச்சினைகளைக் கண்டு பயந்து தற்கொலை செய்து கொள்ள முடியாது! அப்படிப்பட்டவர்கள் தற்கொலை செய்யவும் மாட்டார்கள்!

வெள்ளி, 21 மார்ச், 2014

தேர்தல் களத்தில் 158 வது முறையாகவும் குதிக்கும் தேர்தல் ராஜாகுழல்மந்நம் ராமகிருஷ்ணன்

உலகிலேயே நீண்ட மீசையுள்ள-ராம்சிங்க் சௌஹான்


உலகிலேயே உயரம் அதிகமுள்ள சுல்தான் கோசன்


உலகிலேயே உயரம் குறைவான சந்த்ர பஹதூர் தாங்கி

உலகிலேயே உயரம் குறைவான கதாநாயகன் ப்க்ரூ என்ற அஜித்

     நீண்ட நேரம் மிருதங்கம் வாசித்து, லிம்கா, கின்னஸ் ரெக்கார்ட் வென்ற குழல்மந்நம் ராமகிருஷ்ணன், அது போல், நீண்ட மீசையுள்ளதாலும், உயரம் அதிகமானதாலும், உயரம் குறைந்ததாலும், உயரம் குறைந்து கதாநாயகனாக நடித்ததாலும் (பக்ரூ என்ற அஜித்), கின்னஸ் ரெக்கார்ட் வென்ற ஏராளமானவர்களைப் பற்றி நமக்குத் தெரியும். இதோ, அந்த வரிசையில், தேர்தல் நேரமான இப்போது நம் முன் கின்னஸ் ரெக்கார்டில் தேர்தல் சம்பந்தமான ஒன்றில் இடம் பிடித்த தேர்தல் ராஜா! இவரது கின்னஸ் தகுதி, உலகில், அதிகமாகத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றது என்பதுதான்!

ஆல் இந்தியா தேர்தல் ராஜா - Dr. பத்மராஜன்(ஹோமியோ) - அதிக முறை தேர்தலில் தோற்றவர் - கின்னஸ் ரெக்கார்ட்

மீண்டும், நடக்கவிருக்கும் 2014 தேர்தலிலும், தோற்பதற்காக, 158 வது முறையாக, வாரனாசியில் நரேந்திர மோடிக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோற்கப்போகிறார்! மே 12ம் தேதி, வாரனாசியில் நடக்கும் தேர்தலில் போட்டியிட, நாமினேஷன் கொடுக்க, வரும் ஏப்ரல் 17அம் தேதி அங்கு செல்ல முடிவு செய்திருக்கிறார்! அதற்கு முன், ஐயப்ப பக்தரான அவர், சபரிமலை சென்று ஐயப்ப தரிசனம் செய்தும் விட்டார். இனி பயப்பட ஒன்றுமில்லை!.  சேலம், மேட்டூர், ராம் நகரைச் சேர்ந்த இவர், வாரனாசியில் மட்டுமல்ல, தர்மபுரி பாராளுமன்றத் தொகுதியில் அன்புமணி ராமதாஸுக்கு எதிராகவும் போட்டியிடுகிறார்!

     1988ல் மேட்டூர் சட்டசபைத் தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட ஆரம்பித்த இவர், இதுவரை 156 முறை போட்டியிட்டு, ஏறத்தாழ 13 லட்சம் ரூபாய் தேர்தலுக்காகச் செலவிட்டிருக்கிறார்.  தோல்வியைச் தழுவியதால் மட்டும் கின்னஸ் தகுதியைப் பெற்று எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்! அவர், தான், போட்டியிடுவதற்காக்ச் சொன்ன காரணம், எனக்கு மிகவும் வித்தியாசமாகத் தோன்றியதால்தான் அவரைப் பற்றி இந்த இடுகை!

“அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் களம் எனும் எண்ணத்தை மக்கள் மனதிலிருந்து அழிப்பது என் நோக்கம்! எந்த ஒரு சாதாரண இந்தியக் குடிமகனுக்கும், இந்தியாவிலுள்ள எந்த்த் தொகுதியிலும் தேர்தலில் நின்று போட்டியிட உரிமை உண்டு என்ற உண்மையை எல்லோருக்கும் உணர்த்துவதுதான் என் லட்சியம்!

அவரது இந்த வார்த்தைகளும், இந்தச் செயலும், இந்தியக் குடிமகனுக்கு உலகில் எங்குமே இல்லாத அளவிற்குச் சுதந்திரமும், பாதுகாப்பும், உரிமையும் நம் நாட்டில் உண்டு என்ற உண்மையை பறைசாற்றுவதை நினைக்கையில், வருத்தப்பட, வேதனைப்பட, வெட்கப்படக், கோபம் கொண்டு குமுற ஏராளமான சம்பவங்கள் தினமும் நடக்கும் நம் நாட்டில் வாழும் என்னை, கொஞ்சம் பெருமைப்படவும் வைத்தது! (கோபம் வேண்டாம்! மிக்ச் சிறிய அளவு பெருமை அவ்வளவே!). 

“இதில் பெருமைப் பட என்ன இருக்கிறது?....டெபாசிட் கட்ட பணம் இருந்தால் போதுமே என்ற எண்ணம் வேண்டாம்.  1991ல், ஆந்திராவில், நந்தியால் எனும் தொகுதியில், இவர் நரசிம்ம ராவுக்கு எதிராகப் போட்டியிட்ட போது, இவருக்கு மிரட்டல் மட்டுமல்ல, இவரைக் கடத்திக் கொண்டே போயிருக்கிறார்கள்! எதிராளிகள் எவருமின்றி நரசிம்மராவைத் தேர்ந்தெடுக்க நடந்த முயற்சி அது!  எப்படியோ, ஒரு பாஜக வேட்பாளர் போட்டியிட வந்ததால், நம் தேர்தல் ராஜா வேட்பாளராகி வழக்கம் போல் தோற்றிருக்கிறார்! இப்படிப்பட்டப் பிரச்சினைகளும் தேர்தல் ராஜாவுக்கு உண்டாகி  இருக்கிறது. எனவே பணம் மட்டும் போதாது, பணத்துடன் கொஞ்சம் தைரியமும் தேவை!  அதனால்தானோ என்னவோ, ஒரு தைரியத்திற்காக வீரப்பன் மீசையையும் வைத்திருக்கிறார்,  இந்த டையர் ரீட்ரீடிங் கடை நடத்தும்  மேட்டூர் குடிமகன். 

     ராஜன் என்று அழைக்கப்படும் இந்த டாக்டர் பத்மராஜன்,(ஹோமியோ மருத்துவர்) எப்போதும் தன்னுடைய போராட்டத்தை அரசியல் பிரமுகர்களுடன் மட்டுமே நடத்துவார்!  இதற்கு முன், கலைஞர், ஜெயலலிதா, வாஜ்பாய், நரசிம்மாராவ், அப்துல்கலாம், ப்ரதிபாபட்டில், கே.ஆர்.நாராயணன் போன்றவர்களுடன் போட்டி போட்டுத் தோற்றிருக்கிறார்! (இப்படி ஒரு ஆள் போட்டிப்போட்டது அவர்களுக்கேத் தெரியாமல் இருந்திருக்கலாம்). அப்போதுதான், பொதுமக்களுக்குச், சாதாரண மனிதன், அரசியல் செல்வாக்குள்ளவர்களுடன் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதை எளிதாகப் புரியவைக்க முடியும் என்பது இவரது வாதம்! இதை கேட்கும் நாமும் வாதிக்கலாம் – இது சுயநலமும், சுயவிளம்பரமும் கலந்த பொதுநலம் என்று!  இருப்பினும், அதில் பொது நலம் சிறிதளவேனும் உண்டு என்பதை நம்மால் மறுக்க முடியாதுதானே! தேர்தல் ராஜா, 158வது முறையும் வெற்றிகரமாகத் தோற்று(!?), தன் கின்னஸ் தகுதியை எவருக்கும் விட்டுக் கொடுக்காமல், தன்னிடமே தக்கவைத்துக் கொள்ள வாழ்த்துக்கள!

     

திங்கள், 17 மார்ச், 2014

பாலஸ்தீனில் பிறக்கும் குழந்தைகளில் சில, கருத்தரிக்கும் முன் சில காத தூரம் பறக்கின்றன!?...........இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் கொன்று குவித்த இலட்சக்கணக்கான யூதர்களைப் பற்றி எண்ணும் போது மனிதாபிமானமுள்ள எல்லோருக்கும் மனதில் உண்டாகும் வலியை விவரிக்க இயலாதுதான். 

உலகெங்கிலும் சிதறிக் கிடந்த யூதர்கள் தங்களுக்கெனத் தனிநாடை உருவாக்கி, அப்படி, இஸ்ரேல் எனும் நாடு உதித்த போது, உதிர்ந்து போன உயிர்களை எண்ணும் போதும் வலி உண்டாகத்தான் செய்தது.


 ஆனால், இப்போது அந்நாட்டைப் பாதுகாக்கவும், அந்நாட்டின் எல்லையைப் பாதுகாக்கவும், இஸ்ரேல் செய்து கொண்டிருக்கும், குண்டு வீச்சும். துப்பாக்கிச் சூடும், மனிதர்களைச் சிறை வைத்தலும், நம்மில் உண்டாக்கும் வலி, ஹிட்லரும், அவரது ஆதரவாளர்களும், யூதர்களுக்கு எதிரே செய்த கொடுமைகளுக்குச் சமமாக ஆகிக் கொண்டு இருக்கிறதோ என்ற ஐயத்தை எழ வைக்கிறது. 


பாலஸ்தீனில் குண்டு வெடிப்பில், இறக்க நேரிடும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், பாலஸ்தீனியர்கள், இறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பதிலாக ஆயிரம் குழந்தைகளுக்கு உயிர் கொடுக்கும் ஒரு போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். 


அந்தப் போராட்டத்தின் பாகமாகத்தான், சிறையில் அடைபட்டிருக்கும் தங்களின் தந்தைகளிடமிருந்து உயிர் அணுக்களாக இருக்கும் போதே, குழந்தைகள் பறந்து தாயின் கர்ப்பப்பைக்குள் சென்று உயிர் பிழைக்க வேண்டிய சூழல்கள் அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

பாலஸ்தீனில் உள்ள ஹனா அல் ஸான், எட்டு வருடங்களுக்கு முன், தன் 18 ஆம் வயதில் தாமிர் அல் ஸானை மணந்து, ஒரு மாதம் ஆகும் முன், தாமிர் சிறைப்படுத்தப்பட்டார்.  ஹனா தன் கணவனை ஒரு முறை காண 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதுவும் கண்ணாடிச் சிறையின் அப்புறம் தாமிரும், இப்புறம் ஹனாவும் நின்று கொண்டு.  தனிமையை வெல்ல அவர் இன்டெர்னெட்டை நாடுவது வழக்கமாக இருந்தது.  அப்படி அவர் நெட்டில் ஒரு நாள், ஒரு பாலஸ்தீனக்காரர் தன் விந்தை யாருக்கும் தெரியாமல் சிறையிலிருந்துக் கடத்தி, ஒரு குழந்தைக்குத் தந்தை ஆன விவரம் அறிந்ததும், அவருக்குத் தலை கால் புரியவில்லை. 


தானும் அப்படித் தாமிரின் குழந்தைக்குத் தாயாகத் தீர்மானித்தே விட்டார்.  உதவிக்கு, ஹனா மற்றும் தாமிரின் குடும்பத்தினர் அனைவரும் கச்சை கட்டி இறங்கி விட்டார்கள்.  எப்படித் தாமிரின் விந்தைக் கழுகுக் கண்கள் உள்ள சிறை அதிகாரிகளின், மற்றும் சோதனைச் சாவடிப் பாதுகாவலர்களின் கண்களில் படாமல், காசா சிட்டியில் உள்ள IVF கிளினிக்கில் கொண்டு சேர்ப்பது என்ற சிந்தனை எல்லோர் மனதிலும் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது. மனம் இருந்தால் மார்கமுண்டு என்பதால், நீண்ட ஆலோசனைக்குப் பின், அவர்கள் வெற்றிக்கு நல்ல ஒரு வழியும் தெளிந்தது.  


இதை அறிந்த வேறு நான்கு பெண்கள் ஹனாவைப் போல் சிறைப்படுத்தப்பட்ட கணவனைப் பிரிந்து வாழ்பவர்கள் இப்படி ஹனாவைப் போல், IVF  கிளினிக்கில் காத்திருக்கத் தொடங்கினார்கள்!.  ஏறத்தாழ 5000 பேர் இப்படிச் சிறைச் சாலைகளில் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்களாம்!  


ஹிட்லரைப் போல் அந்த அளவு கல் நெஞ்சம் படைத்தவர்கள் அல்லாததாலோ என்னவோ, இஸ்ரேலியர்களின் இஸ்ரேலிய அரசு, 10 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளைக் கண்ணாடிச் சிறைக்கு உள்ளே போகவும், சிறைப்படுத்தப்பட்ட அவர்களது தந்தைகளைக் கட்டித்தழுவவும் அனுமதிப்பது உண்டாம். 


ஹனாவின், சிறையிலுள்ள இரு சகோதரர்களில் ஒருவருக்கு 7 வயதுள்ள மகன் இருந்ததால், அவன், சிறைச்சாலைக்குள் சென்று, தன் தந்தையைக் கட்டித் தழுவிய தருணத்தில், தந்தை அவன் கையில் ஏற்பித்த உயிர் துடிப்புள்ளத் தாமிரின் விந்தை சிறைச் சாலை மற்றும், சோதனைச் சாவடிக்கு வெளியிலும், யார் க்ண்ணிலும் படாமல் பொறுப்புடன் செயல்பட்டுக், கொண்டு சேர்த்ததை நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறது.  


அப்படிக், கோடிக் கணக்கான உயிர் துடிப்புள்ள உயிர் அணுக்கள், இறை அருளால் ஹனாவின் கர்ப்பப்பைக்குள், IVF க்ளினிக்கில் மருத்துவர்களின் உதவியால், செலுத்தப்பட, அவற்றில் ஒன்று வெற்றி வாகை சூடி, உயிர் பெற்று எழுந்து, கருவாகி, உருவாகி, சில மாதங்களுக்கு முன் ஒரு பாலஸ்தீனியனாகப் பிறந்து, கடந்த 8 வருடங்களாகப் பிரிந்து வாழும் தாமிரையும், ஹனாவையும் மகிழ்ச்சியின் எல்லையைத் தொட வைத்திருக்கிறது. 


தாமிருக்காகவும், ஹனாவுக்காகவும், பிறந்த அந்த அதிசயப் பிறவியாம் குழந்தைக்காகவும், அவனது ஆரோக்கியத்துக்காகவும், அது போல் பிறக்கும் மற்ற குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்வோம்.  கூடவே இது போன்ற துயரங்களை அனுபவிப்பவர்களுக்கு, அதிலிருந்து மீண்டு நல்வாழ்வு வாழ வைக்கவும் வேண்டிக் கொள்வோம்! இறையுணர்வு இல்லாதவர்கள் அவர்களை வாழ்த்தினாலே போதும்.  அவர்களது மனம் நிறைந்த வாழ்த்து இறையுணர்வு உள்ளவர்களின் மனமுருகி வேண்டும் வேண்டுதலுக்குச் சமமே!
    

 Courtesy : Google Pictures