வெள்ளி, 7 மார்ச், 2014

Vishnu Narayanan Namboothiri Sir, I'm Sorry, I can't agree with you..... 1


மதிப்பிற்குரிய, விஷ்ணு நாராயணன் நம்பூதிரி ஸார், மன்னிக்க!

திரு.விஷ்ணு நாராயணன் நம்பூதிரி 

திரு. கிருஷ்ணவாரியர்

     தாங்கள் ஸ்வாமி விவேகானந்தரின் வாக்குகளை மேற்கோள் காட்டி Comparative Grammar of Dravidian Linguistics”, எனும் ஆராய்ச்சிப் புத்தகம் எழுதிய ராபர்ட் கால்ட்வெல் (Robert Caldwell - http://en.wikipedia.org/wiki/Robert_Caldwell) எனும் மனிதாபிமானமுள்ள ஒரு அறிஞரை துரோகி என்று சொல்லியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  இப்படிச் சொல்ல உங்களுக்குத் தைரியம் தந்தது என்று நீங்களே உங்கள் கட்டுரையில் (மாத்ருபூமி செய்தித்தாளின் வாராந்திர ஞாயிறு மலரில்-ஜனவரி 16 & 23) சொல்லியிருக்கும், திரு. C. நாராயணராவ் மற்றும் திரு N.V. கிருஷ்ணவாரியர் போன்றவர்கள் எழுதியவையும், சொல்லியவையும்தான் ஆதாரம் என்றதால், அதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  காரணம், திரு நாராயணராவ், “சுத்தமான திராவிட மொழி என்று ஒன்று இருக்குமேயானால் அது இந்தி மொழி அன்றி தமிழல்ல என்றெல்லாம் கண்மூடித்தனமாய் சொன்னதாலும், இப்படிச் சொல்லும் அவரது புத்தகத்தை வாசித்ததும், திரு கிருஷ்ணவாரியர் ஆவேசத்துடன் (நீங்கள் சொன்னதுதான்), “இந்தியாவுக்கு மிக அதிக அளவில் துரோகம் செய்தது ராபர்ட் கால்ட்வெல் தான், என்று சொன்னதும்தான்.

     இவர்கள் இருவரும் தமிழர்கள் அல்ல. மட்டுமல்ல, சமஸ்கிருதத்தை உயிருக்குயிராக நேசிப்பவர்கள் போல் தெரிகிறது. அதனால் திராவிடநாடு, திராவிட மொழி என்றெல்லாம் கேட்பதே இவர்களுக்கு எரிச்சல் மூட்டலாம்.  அதனால், அவர்கள் அப்படித்தானே சொல்வார்கள்! 

ராபர்ட் கால்ட்வெல்

மாக்ஸ்முல்லர்                            மோனியர் வில்லியம்ஸ்
மோனியர் வில்லியம்ஸ்

லார்ட்மெக்காலே

ஆனால் கால்ட்வெல், மாக்ஸ்முல்லர், லார்ட்மெக்காலே, மோனியர் வில்லியம்ஸ் போன்றவர்கள் அப்படி அல்ல.  அவர்களுக்குத் திராவிட மொழிகள் தாய் மொழி அல்லாததால், திராவிட மொழிகளைத் தலையில் தூக்கி வைத்து ஆடி, சமஸ்கிருதத்தைக் கீழே போட்டு மிதிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லையே!  இறைவன் பெயரால் இந்தியாவில் மட்டும் அவர்கள் கண்ட சில அநீதிகள் “ஏன் என்ற சிந்தனை, கால்ட்வெல் போன்றவர்களைச் சில ஆராய்சிகள் மேற்கொள்ள வைத்திருக்கலாம்.  அப்படி கால்ட்வெல் அறிந்ததைப் புத்தக வடிவில் அவர் இப்படிக் கொண்டு வந்திருக்கலாம்.

முல்லைப் பெரியாறு அணை             கர்னல் ஜான் பென்னிகுயிக்

ஜெனரல் டையர்

     


மனிதாபிமானமிக்க ஏராளமான இங்கிலாந்து நாட்டினர் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள்.  முல்லைப் பெரியார் அணை கட்ட (1887-1895) (அன்றைய மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் நல்லெண்ணத்துடன்) பிரிட்டிஷ் அரசைக் கட்டாயப்படுத்தி, அணை கட்டி, பாதி நிலையில் பணப்பற்றாக்குறை காரணமாக நிறுத்த வேண்டிய நிலை வந்த போது, தன் சொந்த சொத்துக்களை எல்லாம் விற்று, 1895 ல் அணையைக் கட்டி முடித்த அந்த மனிதருள் மாணிக்கமாம் கர்னல் ஜான் பென்னிகுயிக் போன்றவர்களை நாம் இங்கு நினைவு கூற வேண்டும்.  இது போன்று நல்லவர்களுக்கிடையில் ஜெனரல் டையர் போன்ற வெறுக்கப்பட வேண்டியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். எனவே, ஆரியர்கள், திராவிடர்கள் என்று சொல்லி இந்தியர்களைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என்று கால்ட்வெல் போன்றவர்களைக் குற்றம் சொல்லும், இந்தியர்களை ஒன்றாய் காண விரும்பும் இம்மனிதர்கள், பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று நான்காய் மனித குலத்தைப் பிரித்தெறிந்த அநீதியையும், பெண்களுக்கு சம உரிமை இல்லை என்பதை பறைசாற்றும் மனுஸ்ம்ருதி போன்றவற்றையும், ஏன் அப்படியே விழுங்குகிறார்கள் என்பதுதான் எனக்கு விளங்காத புதிர்!

     இங்குதான் ஸார், 32 வருடம் கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம் கற்பித்த, மலையாள கவிதை உலகில் உங்களுக்கெனத் தனி இடத்தைத் தக்க வைத்துள்ள, ஏராளமான விருதுகள் பெற்ற உங்களுடன் எனக்கு முரண்பாடு.  'நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என வாதித்த நக்கீரன் போன்றவர்களின் வாக்குகள் என் சிந்தனைகளில் வளர்ந்து மரமாய் நிற்பதால், என்னால் இதையெல்லாம் கேட்கும் போது மௌனம் சாதிக்க முடியவில்லை.

     பிரிட்டிஷ்காரர்கள், தமிழர்கள், மலையாளிகள், கன்னடியர் மற்றும் தெலுங்கர்களை “திராவிடர்கள் என்று சொன்னதால் மட்டும், சொல்லிய பிறகு “வாருங்கள் நாம் எல்லோரும் திராவிடர்கள் என்று ஆங்கிலேயர்கள் சொல்லிவிட்டார்கள்.  அதனால், நாம் இனி திராவிடர்களாக வாழ்வோம் என்று எவரும் தீர்மானிக்கவில்லை. தென்னிந்தியாவில் உள்ளவர்கள் மொழி, உருவம், மற்றும் பண்பாடு போன்றவற்றில், வட இந்தியர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே! வட இந்தியாவில் ராஜ்ஸ்தானியர்களுக்கும், குஜராத்தியர்களுக்கும் வித்தியாசம் எப்படியோ, அது போன்ற வித்தியாசங்கள்தான், ஒரு தமிழனுக்கும், மலையாளிக்கும் உள்ளது என்பது ஒவ்வொரு வட இந்தியனுக்கும், தென்னிந்தியனுக்கும் தெரிந்த ஒன்றே! 

இந்தியாவில் மிகவும் தொன்மையான, மற்ற மொழிகள் மற்றும் பண்பாடுகளின் தாக்கம் அதிகம் இல்லாமல், தனித் தன்மையுள்ள ஒரு பண்பாடு தென்னிந்தியர்களின் பண்பாடுதான் என்றும், அதில் வட இந்தியப் பண்பாடும், வடமொழி ஆதிக்கம் ஏதும் ஏற்படாமல், தன் தனித்தன்மையை முன்பு போல் பாதுகாக்கும் பகுதிதான் தமிழ்நாடு என்றும் ஒவ்வொரு இந்தியனுக்கும் (வரலாற்று அறிவுள்ள) தெரிந்ததுதானே!  அதைக் கண்டும், கேட்டும், ஆராய்ந்தும், அறிந்த ஆங்கிலேயர்கள், அதை எழுதவும், உலகுக்கு அறிவிக்கவும் செய்தார்கள் என்பதுதான் உண்மையில் நடந்த சம்பவம்.  எனவே, வெள்ளையர்கள் நம்மைப் பிரிக்கப் பார்த்து அதில் வெற்றி கொண்டார்கள் என்பதை விட, நான் நம்புவது மனுஸ்ம்ருதி போன்றவைகள்தான், இந்தியர்களைச் சாதி அடிப்படையில் பிரித்து, இந்தியர்களைச் சின்னாபின்னமாக்கியது என்பதையே!. எப்படியோ, நாம் இருவரும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போகிறோம்,  இந்தியர்களைப் பிரித்ததையும், அவர்களை ஒருவருக்கொருவர் பகைவர்களாக்க நடந்த முயற்சியையும் நாம் இருவரும் எதிர்க்கிறோம்.

இருப்பினும், திராவிடர்கள் என்ற ஒரு பிரிவினரே இந்தியாவில் இல்லை, அது வெறும் கற்பனை, கட்டுக்கதை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  தமிழகத்தில், ஆட்சிக்கு மாறி மாறி வரும் இரு கட்சிகளும் (திமுக, அதிமுக) திராவிடர்களின் முன்னேற்றம் கருதி உருவாக்கப்பட்டவைதான்.  ஒவ்வொரு தமிழனும் தான் இந்தியன் என்றும், இந்தியர்களில் திராவிடன் என்றும், திராவிடர்களில் தமிழன் என்றும் தான் பெருமையோடும் சொல்லிக் கொள்கிறான்.  அதற்கு முக்கியக் காரணம், அவனுக்கு வேதங்கள், மனுஸ்ம்ருதி, பகவத்கீதை போன்றவற்றை வாசிக்காமலேயே இறைவனையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் அறிந்து வாழ உதவும் ஏராளமான நூல்கள் தமிழில் உள்ளதுதான்.  சித்தர்களும், யோகிகளும் அருளிய திருமந்திரமும், தேவாரமும், திருவாசகமும் அவனுக்கு இறைவனை அறிய உதவியது போல், திருக்குறள், ஆத்திச்சூடி, இன்னாநாற்பது, இனியவை நாற்பது போன்றவை நல்வாழ்வு வாழ உதவுவதால்தான்.  நற்றிணையும், குறுந்தொகையும், அகநானூறும், புறநானூறும் அவனுக்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நல்வாழ்வு வாழ்ந்த தன் முன்னோர்களைப் பற்றி அறிய உதவி, தான் “கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றி வளர்ந்த மூத்தக்குடித் தமிழன்”  மரபில் வழி வந்தோன் என்று பெருமையுடன் சொல்ல வைக்கிறது.  தமிழ் மரபையும், தமிழையும் உயிருக்கு மேலாக மதிப்பதால்தான், “தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று சொல்லிலும், குமரிமுனையில் வள்ளுவனுக்கு சிலைவைத்து செயலிலும் காட்டியிருக்கிறான் தமிழன். (வள்ளுவனுக்குச் சிலையெடுத்தக் கலைஞர் இங்கு 970 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜராஜ சோழனுக்குச் சமமாகிறார்).


இதன் தொடர்ச்சி நளைய இடுகையில் முடியும்.........   

29 கருத்துகள்:

 1. அறியாத பல வராலாற்றுச் சம்பவங்களை இன்றைய தங்களின்
  பகிர்வினூடாக அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சியே .அருமையான இத்
  தொடர் மேலும் சிறப்பாகத் தொடர என் வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 2. இப்படியெல்லாம் பிதற்றுவதற்கு மனநிலை பாதிப்பாக இருக்குமோ...?

  பதிலளிநீக்கு
 3. ஆணித்தரமான ஆதாரங்களுடன் கூடிய
  உணர்வுப்பூர்வமான அற்புதமான பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் மனம்ப்பூர்வமான
  நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. மிகச் சிறந்த பதிவு ஐயா. திராவிட இனம் திராவிட மொழி என்பதையே எதோ கால்டுவேல் தான் உருவாக்கியது போன்ற பிரமையை இந்துத்வாவாதிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்தியா பல்லினம் ஐக்கியப்பட்ட சமூகம் என்பதில் ஐயமில்லை, இனவகையாக நோக்கினால் சுத்த ஆரியன் சுத்த திராவிடன் இங்கில்லை. ஆனாலும் இந்தியாவை மொழி கலாச்சாரம் வாழ்வியல் எனப் பிரித்தால் , இந்தியாவை பல பாகங்களாக பிரிக்கலாம். குறிப்பாக தென்னிந்தியா ஏனைய இந்திய பகுதியை விட மொழி, கலாச்சாரம் மற்றும் வாழ்வியல்களில் தனித்துவமாக இருக்கின்றது என்பது தெள்ளத் தெளிவு. குறிப்பாக கால்டுவேல் இந்தோ-ஆரிய மொழிகளில் இருந்து தென்னிந்திய மொழிகளை வேறுபட்டு உள்ளதை அறிந்து, இம் மொழிக் குடும்பத்துக்கு தனி பெயரிட்டார், அதுவும் தென்னிந்தியாவை குறிக்க ஆரியர்கள் பயன்படுத்திய திராவிட என்ற சொல்லை பயன்படுத்தினார். அது போக திராவிட மொழி பேசும் பழங்குடி இனங்களின் உடல் அளவுகள் மற்றும் மரபணுக்களை ஆராய்ந்த மானிட ஆய்வாளர்கள், இம் மக்கள் ஆஸ்திரோ ஆசியாடிக் கறுப்பின மக்களோடு பெரிதும் தொடர்பு பட்டு உள்ளதையும், மத்திய தரைக்கடல் மக்களோடு கலப்புற்று இருப்பதையும் மண்டை ஓட்டு அளவு, மூக்கின் அளவு மற்றும் மரபணுக்களை கொண்டு எடுத்துக் காட்டியுள்ளனர். தென்னிந்திய மக்களின் உணவு, உடை, கலப்பு நிறங்கள், முக்கியமாய் மொழி என்பவை தனித்துவமாய் உள்ளன என்பதை வெளிப்படையாகவே நாம் அறிவோம்.. இந்த வேறுபாடுகளைத் தான் திராவிட என்ற பொதுப் பெயரால் அழைக்கின்றோம்..! இதைக் கூட அறியாத சிலர் எதோ தாமே பேரறிஞர் போல எழுதியுள்ளமை ஏமாற்றம் அளிக்கின்றது..! குறிப்பாக வடமொழி பாசம் கொண்ட சிலர் தென்னிந்தியத்தை குறைத்துக் காட்ட இவ்வாறு செயல்படுவது ஏளனத்துக்குறியது..

  பதிலளிநீக்கு
 5. கடைசி பாராவில் முத்தாய்ப்பாய் சொல்லி இருக்கும் விஷயங்கள் அருமை !
  த ம 7

  பதிலளிநீக்கு
 6. ஹலோ பாஸ் ,இவரை வந்து என்னான்னு பாருங்க >>ஹனீமூன் போகத் தயங்கும் கணவன்

  http://www.jokkaali.in/2014/03/blog-post_6.htm

  பதிலளிநீக்கு
 7. ஆராய்ச்சியெல்லாம் ஆரம்பிச்சுடீங்க சாரே...!! நன்று...!!
  அருமையான பதிவு...!! அடுத்த இடுகையை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்
  +1

  பதிலளிநீக்கு
 8. மிஸ்டர் ஒன் டூ த்ரீ
  நோ! நான் நம்பூதிரி!
  +1

  பதிலளிநீக்கு
 9. காலம் காலமா இவங்க எழுதினதை நாம படிச்சுட்டு இருந்தோம் இல்லையா இனியும் நம்புவோம்னு நினைக்கிறாங்க ! நான் ஒரு முறை என் அண்ணாரவி (தமிழ்) சாரிடம் ஏன் சார் சேரநாடுங்குறது தமிழகத்தின் ஒரு பகுதினா ஒரு காலத்தில் கேரளா வே தமிழகத்தின் ஒரு பகுதிதானே அப்டின்னு கேட்டேன்.அப்போ நான் டென்த் படிச்சேன்.ரவி சார் இப்புடி நம்ம ஆளுங்க பேசிப்பேசிதான் நம்பூதிரிகள் எல்லாம் டென்சன் ஆகுறாங்கனு சொன்னார். இப்போ தான் புரியுது. ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ! மொழி ஆசிரியர் பொறுப்புணர்ந்து நீங்கள் வெளியிட்டிருக்கும் இப்பதிவிற்கு மற்றொரு மொழி ஆசிரியரின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!

  பதிலளிநீக்கு
 10. அம்பாள் அடியாள் சகோதரி! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

  பதிலளிநீக்கு
 11. ஹஹஹா இருக்கலாம் DD! மிக்க நன்றி!

  என்ன DD! லீவன்னு சொன்னாங்க பகவன் ஜி! ஐயோ டிடி நீங்க லீவெல்லாம் போட்டா இந்த வலைப் "பூக்கள்" எல்லாம் டிடி தேனீ இல்லாமல் ......எப்படி?

  போட்டி முடிவுகளில் பிஸி அப்படித்தானே!

  பதிலளிநீக்கு
 12. ரமணி ஸார் மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு! ரொம்ப ஷந்தோஷமாக உள்ளது தங்கள் வருகை கண்டு வெகு நாட்களுக்குப் பின்!

  பதிலளிநீக்கு
 13. ஜி மிக்க நன்றி ! தங்கள் பாராட்டிற்கு!

  பதிலளிநீக்கு
 14. ஆராய்ச்சி எல்லாம் இல்ல மலர்! ஏதோ சில உண்மைகள் சொல்லணும்நு தோணிச்சு அதான்! மிக்க நன்றி மலர்....2வதும் போட்டாச்சு!

  பதிலளிநீக்கு
 15. நம்பள்கி நீங்கள் என்ன சொன்னாலும் அராய்ந்து சரியாகச் சொல்லுவீர்கள்! மனிதாபிமானத்துடன் நன்மைப் பக்கம்தான் பேசுவீர்கள்! நாங்கள் நோய்க்குத்தான் எதிரே ஒழிய நோயாளிகளுக்கோ, நோயாளிகளின் வாரிசுகளுக்கோ அல்ல.

  மிக்க நன்றி நம்பள்கி!

  பதிலளிநீக்கு
 16. மிக்க நன்றி இக்பால் செல்வன் தங்கள் முதல் வருகைக்கும் மிக அருமையான, ஆழமான இந்த இடுகைக்குத் தேவையான கருத்துக்களுக்கு! அழகான ஒரு இடுகையைப் போன்றதொரு பின்னூட்டம்! உண்மைகள் மறைக்கப்படக்க்கூடாது என்பதற்காகத்தானே அல்லாமல் வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் என்றப் பிரித்துப் பார்க்கும் எண்ணத்துடன் அல்ல. வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதுதான் நம் இந்தியா!

  பல நல்ல தகவல்கள் தந்துள்ளீர்கள். மற்றவர்களும் இவற்றை வாசித்து ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும் வகையில்.!

  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 17. சிறப்பான தகவல்கள். பின்னூட்டத்திலும் சேரநாடு பற்றிய தகவல்கள் அருமை! தொடருங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 18. சகோதரி! இதுல ஆண் பிசாசு பாலக்காட்டுல இருக்கு! பெண் பிசாசு சென்னைல இருக்கு! ஆண் பிசாசு இங்கிலீஷ் பிஜி.இதுக்கு அப்புறம் உள்ளத போட்டா பிசாசுக்கு பிடிக்காது! பெண் பிசாசு பொருளாதார பி ஜி.

  எ.இ.ஒ அம்மாவுக்கு எங்கள் நன்றியையும், வாழ்த்தையும் சொல்லுங்க!

  பதிலளிநீக்கு
 19. சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் மிக்க நன்றி!

  சேரநாடு, மலைநாடு என்பது பண்டைய தமிழ் நாட்டின் ஒரு பாகம்தான்....கடலால் சூழப்பட்ட இந்தியாவின் தென்கோடியை சேர சோழ பாண்டியர்கள்தான் ஆண்டிருக்கிறார்கள். தென்பாகத்தை பாண்டியனும், வட பகுதியைச் சோழனும், மேற்குப் பகுதியை சேரனும் ஆண்டிருந்திருக்கிறார்கள்! நாளடைவில் மேற்கு பகுதி பல சிற்றர்சுகளாகப் பிரிந்திருக்கலாம்.
  சுந்தரர் கொடுங்கல்லூரை ஆண்ட அரசரிடம் கோயில் கட்டுவதற்காக நிதி வசூலித்ததாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அதே போல் 12 அம் நூற்றாண்டில் எல்லாம் கேரளாவின் வட பகுதி சோழர்கள் ஆண்டிருந்தார்கள் என்பதற்கான சான்று கண்ணூர் தளிப்பரம்பில் அன்று புதுப்பிக்கப்பட்ட ராஜராஜேஸ்வர ஆலயமும், பெருஞ்ஜெல்லூர் செப்பேடும்தான்.
  பெருஞ்ஜெல்லூர் செப்பேடு A.D.1145 கேரளாவில் முதன் முதலில் குடியேறிய பிராமணர்கள் குழுவாகிய பெருன்ஜெல்லூர் மற்றும் த்ரிச்சம்பரம் குழுக்களைப் பற்றியதுதான். இந்தப் பிராமணக் குழுக்களிடமிருந்து புகல்மலைச்சேரி சுவரன் தேவன் என்பவர், 707 ஆனைஅச்சு (அன்றைய நாணயம்-பொற்காசு) கடன் வாங்கியதாகவும் அதற்குப் பணயமாக பூமியும், வட்டியும் கொடுத்தது பற்றி உள்ள விவரங்கள்தான் அந்த செப்பேடில் உள்ளது.

  இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது,,,தமிழ் மன்னர்களாகிய சோழர்களும், பாண்டியர்களும் வட கேரளத்தை, 12ஆம் நூற்றாண்டிலும், அதற்கு முன்பும் ஆண்டிருந்தார்கள் என்பதும் 12ஆம் நூற்றாண்டில்தான் பிராமணர்களின் முதல் குடியேற்றம் நடந்தது என்பதும்தான்....மட்டுமல்ல ஆங்கில மொழிக்கு எப்படி ஆங்கிலோ -ஸாக்ஸன் (anglo-saxon ) மொழி ஆதாரமாகியதோ அது போலத்தான் மலையாள மொழிக்கு தமிழும். தமிழிலிருது உயிர் பெற்றதுதான் மலையாளம்! ஆங்கிலத்தில் ஃப்ரென்ஞ்சு வார்த்தைகள் கலந்தது போல் மலையாளத்திலும் சமஸ்க்ருத வார்த்தைகளும் கலந்திருக்கிறது.
  உற்சாகமும் ஊக்கமும் அளிக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கு நாங்களும் தலைவணங்குகிறோம்

  மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

  பதிலளிநீக்கு
 20. //ஆரியர்கள், திராவிடர்கள் என்று சொல்லி இந்தியர்களைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என்று கால்ட்வெல் போன்றவர்களைக் குற்றம் சொல்லும், இந்தியர்களை ஒன்றாய் காண விரும்பும் இம்மனிதர்கள், பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று நான்காய் மனித குலத்தைப் பிரித்தெறிந்த அநீதியையும், பெண்களுக்கு சம உரிமை இல்லை என்பதை பறைசாற்றும் மனுஸ்ம்ருதி போன்றவற்றையும், ஏன் அப்படியே விழுங்குகிறார்கள்// - நாக்கைப் பிடுங்கிக்கொள்ள வைக்கக்கூடிய கேள்வி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! முதற்கண் எங்கள் வணக்கம் தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்!

   தங்கள் வலைத் தளத்தைத் தொடர்கின்றோம்!

   நீக்கு
  2. மகிழ்ச்சி ஐயா! தங்களைப் போன்ற சான்றோர்கள் என் தளத்தைத் தொடர்வது சிறியேனுக்குப் பெருமை!

   நீக்கு
 21. ஆனால், இப்படிப்பட்ட ஆழமான, கனமான பதிவில் சில எழுத்துப்பிழைகளும் இருப்பது உறுத்துகிறது! 'பெரியார் அணை', 'நினைவு கூற', 'நளைய இடுகை' போன்றவற்றைத் திருத்தினால் நன்றாக இருக்கும்!

  ஆனால், 'மதிப்பிற்குறிய' என்பது அப்படியே இருக்கலாம். தாய்மொழியின் வேர்மொழியை இழித்துப் பேசும் அவர் உண்மையில் மதிப்பிற்குரியவரல்லர், மதிப்பிற்குறியவர்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழில் எழுதும் போது வராத பிழை கணினியில் தமிழ் மென் பொருளில் அடிக்கும் போது நிறையவே வருகின்றது ஐயா! பல தடவை வாசித்தும் எழுத்துப் பிழைகள் சில சமயம்...பல சமயம் என்றும் கூட சொல்லலாம்....கண்களில் படாமல் போய்விடுகின்றன..இது சாக்குப் போக்குதான் ....இனி இது போன்ற பிழைகள் வராது கவனமாக இருக்கின்றோம் ஐயா! தாங்கள் சொல்லியது மிகச் சரியே! தங்களது சுட்டிக் காட்டலுக்கு மிக்க நன்றி ஐயா! இது போன்ற கருத்துக்களை நாங்கள் மிகவுமே வரவேற்கின்றோம்! மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது!

   மிக்க மிக்க நன்றி! ஐயா!

   நீக்கு
  2. ஐயா எனத் தாங்கள் விளிக்குமளவுக்கு எனக்கு அகவையோ தகுதியோ போதா! சிறியவன் கருத்தைத் தாங்கள் ஏற்றதே எனக்குப் பெருமை! நன்றியை நான்தான் கூற வேண்டும்! மேலும், தாங்கள் கூறியதில் சாக்குப்போக்கும் ஏதுமில்லை; முற்றிலும் உண்மையே! நாம் தட்டெழுதும்பொழுது நமக்குப் பிழைகள் ஒருபொழுதும் கண்ணில் படுவதில்லை. அடுத்தவர் எழுத்தில் பளிச்செனப் புலப்படுகின்றன. மூளைக்கும் விரல்களுக்கும் இடையில் ஏதோ ஒரு கள்ளத்தனமான ஒப்பந்தம் இருக்கும் போலும்! ;-)

   மிகவும் நன்றி ஐயா!

   நீக்கு
  3. ஐயா என விளிப்பதற்கு அகவை கணக்கல்ல! அறிவுதான் கணக்கு! அகவைக்கும், அறிவிற்கும் சம்பந்தம் இல்லையே! அறிவில் சிறந்தவர் சிறியவராயினும் அவரை மரியாதை நிமித்தம் ஐயா என விளிப்பதில் தவறில்லையே! தந்தைக்கு உபதேசம் செய்தவன் தானே முருகன்!

   அப்படிப் பார்த்தால் தாங்கள் எங்களைச் சான்றோர் எனச் சொல்லியதற்கு நாங்கள் தகுதியற்றவர்கள்! நாங்கள் சாதாரண சாமானியன்கள்தான்!

   மிக்க நன்றி! தங்களைப் போன்ற அறிவுள்ளவர்களின் நட்பு கிடைத்ததற்கு!

   நீக்கு