மகன்தாய்க்கு ஆற்றும்
உதவி……
முதியவர். முதுமையை எளிதாகக் கடப்பது என்பது எளிதல்ல. அதுவும்
90 வயதைக் கடந்தவரை, சுய நினைவுடன் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட அவரது உடல்நலத்தைப் பேணிக் கவனித்துக் கொளல் என்பது சாதாரண காரியமல்ல.
96 வயதான அம்மாவை எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும், அதுவும்
இந்தக் கோவிட் சமயத்தில் என்பதற்கு அரிதான முன்னுதாரணமானவர்களில்
ஒருவர்.
தன் தேவைகளைச் சுருக்கி,
வயதான அம்மாவின் கோணத்திலிருந்து ஒவ்வொன்றையும் சிந்தித்து அதை ஒட்டியே தன் பணிகளை
மேற்கொண்டு அம்மாவின் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப அம்மாவின் சௌகரியத்திற்கேற்ப, அம்மாவின் செயல்களை, நித்தியக் கடமைகளை எளிதாக்கிக் கொடுத்தும், உதவியும்
பார்த்துக் கொண்டார் அந்த அம்மாவின் கடைசி மகன் தன் முதுகுவடத்தின் வால் பகுதிப் பிரச்சனையினால் ஏற்பட்ட இடுப்பு, முதுகுவலியினிடையில். அம்மாவிற்கு எப்படிச் செய்தால் அவருக்குப் பாதிப்பு இருக்காது, சௌகரியமாக இருக்கும் என்ற கோணத்தில் ஆராய்ந்து அதற்கேற்ப பல விஷயங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்தார்.
அம்மாவின் வயதிற்கான சிறிய பயிற்சிகள், கூடியவரை தன்னைத்தானே பார்த்துக் கொள்வதற்கான உதவி மற்றும் பயிற்சி,
நினைவுத்திறன் அதிகம் மங்கிவிடாமல் இருக்க சில பயிற்சிகள் (வாசிக்க வைத்தல், அவ்வப்போது
கேள்விகள் கேட்டல், உறவினர் பெயர்கள் கேட்டல், அன்று அவர் சாப்பிட்ட உணவு, டிவி நிகழ்ச்சி
பற்றி என்று), உணவைக் கூடத் தன் விருப்பம் பார்க்காமல் அம்மாவுக்கு ஏற்ற உணவு செய்தது உட்பட.
வயதான காரணத்தினால் அம்மா இயற்கை உபாதை கழிக்கச் சிரமப்பட்ட போது அருவருப்பு பாராமல், அம்மா கிரமப்படாமல் இயற்கை உபாதை கழிக்க உதவியது; வாக்கர் அல்லது சக்கரநாற்காலி உதவியுடன் வீட்டில் கைத்தாங்கலாய் வளைய வர வைத்தது; அம்மாவின் செவித்திறனுக்கேற்ப எழுதிக் காட்டி, அருகில் இருந்து ஒவ்வொரு தேவையையும், சிறு சிறு தேவையையும் கூடக் கவனித்து மிகவும் பொறுமையுடன் பதிலளித்து, அன்புடன் கவனித்துக் கொண்டது; எல்லாம் மிகையல்ல. இப்படிச் செய்பவர்கள் அரிதானவர்கள்! அந்த அரிதானவர்களில் ஒருவராய்...
எனது கடைசி மைத்துனர்!
மகன்தாய்க்கு ஆற்றும்
உதவி இவன்தாய்
என்நோற்றாள் கொல்எனும்
சொல்.
சியமளா மாமி எழுதிய கதை: மாமியார் மெச்சிய மருமகள்
மாமியைப் பற்றி: மாமியும் அவரது குடும்பமும் எங்களுக்குத் திருவனந்தபுரத்திலிருந்த போது மலர்ந்த நட்பு. நாங்கள் தாமசமிருந்த வீட்டின் கீழ்ப் பகுதியில் நாங்கள். மாடியில் மாமியின்
குடும்பம். கணவர், இரு மகன்கள், ஒரு பெண். பெரிய மகன் அப்போது மருத்துவப் படிப்பில்
ஹவுஸ் சர்ஜனாக இருந்தார். இரண்டாவது மகன் பொறியியல் படிப்பிலும், மகள் வேளாண்மைக் கல்லூரியிலும்
படித்து வந்தனர்.
என் மகன் அப்போது ஒன்றே
கால் வயதிற்குள்தான். இவர்கள் அனைவருக்கும்
செல்லப் பிள்ளை.
தற்போது மாமியின் பெரிய மகன் திருவனந்தபுரத்தில், அரசுமருத்துவமனையில் ஆர்த்தோ சர்ஜன். இரண்டாவது மகன் அமெரிக்காவில். மகள் இங்கு இருக்கிறார். மாமா தற்போது மகளுடன். அனைவருமே எங்கள் நலம்விரும்பிகள்.
மாமி இறைவனடி சேர்ந்து
1 ½ வருடங்கள் ஆகிறது. மாமி கற்பனை வளம் உள்ளவர். தன் ஆத்ம திருப்திக்கு அவ்வப்போது
எழுதுவதை என்னிடம் சொல்லிக் காட்டுவார். தற்போது அவரது மகள் வீட்டிற்குச் சென்றிருந்த போது
அவரிடம் இருந்த சில கதைகளைக் கொண்டுவந்தேன். மீதி சென்னையில் இருக்கிறது.
மாமி, எழுத்தாளர் தேவனின்
விசிறி. சாம்பு கேரக்டரை மிக மிக ரசித்தவர் என்பது அவர் கதைகளில் தெரிகிறது. அதையொத்த கதைகள் சிறிய சிறிய கதைகளாகச்
சில எழுதியிருக்கிறார். அவற்றில் ஒன்று இங்கு.
மற்றவை பிறிதொரு சமயம்.
மாமியார் மெச்சிய மருமகள்
போலீஸ் ஸ்டேஷனில் இருந்த
இன்ஸ்பெக்டர் சந்தானத்தை நோக்கி ஒடி வந்தார், ஊரே மூக்கில் விரல் வைக்கும் கிரிமினல்
வக்கீல் வரதராஜன்.
“உட்காருமய்யா. என்ன
மூச்சிறைக்க ஒடி வருகிறீர்”
“ஸார், நான் என் வீட்டிலேயே
ட்ராயரில் வைத்திருந்த 4 லட்சம் ரூபா எங்க போச்சு, எப்படிப் போச்சுன்னு தெரியலையே!
அதான் கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்.”
“உமக்கே தெரியலையா!?
யாரெல்லாம் வந்தா உங்களைப் பார்க்க”
“மதுரையிலருந்து சாம்பமூர்த்தி,
ஒரு கேஸ் விஷயமா வந்திருந்தார். அப்புறம்…அதுதான்…எதிர்க்கட்சி அம்மா அடிதடி விஷயமா
கேஸ் எடுத்துண்டு வந்தா. இப்படி 5,6 பேர் வந்தா. யார் மேல எப்படிக் குற்றம் சாட்டறது?
புரியலை. அதான் உங்ககிட்ட கேஸ் கொடுத்துட்டுப் போகலாம்னு….”
இன்ஸ்பெக்டர் சந்தானம்
ஆட்களை விட்டு வக்கீல் சொன்ன ஆட்களைச் சல்லடை போட்டு விசாரித்துக் குழம்பி நின்றார்.
அவர்களுக்கு எப்போதும் ஆபத்பாந்தவன் விச்சு
தானே! உடனே அவரைப் பார்க்கக் கிளம்பினார்.
விபரத்தைக் விச்சுவிடம்
சொன்னார். விச்சு எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.
“என்ன ஓய் விச்சு! உமக்கு
இந்த கேஸ்ல ஏதாவது பிடி கிடைத்ததா” என்றார் சந்தானம்.
அப்போது ரேடியோவில்
‘மாமியார் மெச்சிய மருமகள்’ படத்திலிருந்து பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
விச்சு உள்ளே பார்த்து,
“சச்சு, அந்த ‘மாமியார்
மெச்சிய மருமகளை’ உரக்க வை” என்றார்.
உடனே சந்தானம், “என்ன
விச்சு? நேரடியாய் சொல்ல மாட்டீரோ? இப்போதே வரதராஜன் வீட்டிற்குப் போய் விசாரிக்கிறேன்”
எனப் புறப்பட்டார்.
வரதராஜன் வீட்டில் அவர்
மனைவியையும், அம்மாவையும் தனித்தனியாக விசாரித்தார்.
“இத்தனைப் பேர் வந்து
போற இடத்துல 4 லட்ச ரூபாயை ட்ராயர்ல பூட்டாம வைச்சுட்டுப் போனவரைக் கண்டிக்கணும்னு
நான்தான் அதை எடுத்து என் மாமியார்கிட்ட கொடுத்தேன்.” – மருமகள்.
மாமியாரும் மருமகளை மெச்சி
லாக்கரில் வைத்திருக்கிறாள். இதை அறியாத அந்த வக்கீல் பதறிப் போய் கேஸ் கொடுத்திருக்கிறார்.
‘விச்சுவுக்கு இதெல்லாம்
எப்படிச் சட்டென உதித்ததோ’ இன்ஸ்பெக்டர் சந்தானத்துக்கு ஆச்சரியம். விச்சுவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனார் இன்ஸ்பெக்டர்
சந்தானம்.
‘எதற்கு இந்த இன்ஸ்பெக்டர்
நன்றி சொல்கிறார்?’ எனத் தெரியாமல் முழி முழின்னு முழித்துக் கொண்டிருந்தார் விச்சு! - ஷியாமளா (13-6-2010)