“அவர்
உன்னை மன்னித்தாரா?” என்று ஒரு பெண்ணிடம் கேட்டால் அதன் அர்த்தமே மாறிவிடுமோ என்ற பயம்
வந்து விட்டது.
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
சமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017
வெள்ளி, 20 ஜனவரி, 2017
மவுஸ் தழுவுபவர்களும் ஏறு தழுவும் போராட்டக் களத்தில்!!!
என் வீட்டிற்கு அருகில் டைடல் பார்க்கின் முன்பு மென்பொருளாளர்கள் போராட்டத்தில்
இந்தியாவின் தென் கோடி மாநிங்களில்
ஒன்றான நம் தமிழ்நாட்டை இன்று உலகமே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த ஜல்லிக்கட்டுப்
போராட்டம் என்று சொல்லலாம். இதுவரை நம் மாணவர்களோ, மக்களோ இப்படி ஒரு தொடர் போராட்டத்தை
மாநிலமே இணையும் வகையில் போராடியிருக்குமா என்று என் சிறிய அறிவிற்குத் தெரியவில்லை.
இந்தப் போராட்டத்தை ஜல்லிக்கட்டிற்கு மட்டுமான போராட்டமாக என்னால் பார்க்க முடியவில்லை.
தமிழர் அனைவரும் தமிழ் உணர்வுடன் ஒருங்கிணைந்து, சமூகவலைத்தளங்களும் இணைந்து அரசியல்வாதிகளையும்,
ஜிகினாக்காரர்களையும் புறம்தள்ளி, அரசியல்வாதிகளுக்குச் சவால் விட்டு அவர்களையும் சற்று
மிரட்டும் ஒரு போராட்டமாகத்தான் தெரிகிறது.
இல்லை என்றால் குளிரூட்டப்பட்ட
அறைகளுக்குள், கணினியுடன் ஒட்டி உறவாடி, பின்னிப் பிணைந்து, தங்கள் வேலையே கதியென்று,
உழவர் குடும்பத்து இளைஞர்களும் கூட சுண்டெலியையே தழுவிக் கிடந்தவர்கள் ஏறுதழுவும் போராட்டக்
களத்தில் குதித்திருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் அதுதானே!
இந்த ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாளர்கள்
ஒரு புறம், எதிர்ப்பவர்கள் மறு புறம். எதிர்ப்பாளர்களில் இருவகை. ஒன்று இதனை விலங்கு
வதை என்று சொல்பவர்கள். மற்றொருவகை மனித உயிர்கள் பறி போகிறது என்று ஆதங்கப்படும் வகை.
இரு வகையையும் குற்றம் சொல்லுவதற்கில்லைதான். ஒரு காலத்தில் வீர விளையாட்டாக இருந்த
ஏறுதழுவுதல் என்பது இடைக்காலத்தில் சற்று விபரீத விளையாட்டாகத்தான் மாறியிருக்கிறது
என்று சொல்லலாம். ஒரு சில இடங்களில் காளைகளுக்குச் சாராயம் கொடுத்ததுண்டு. வாலை முறுக்கி
அவற்றைத் தூண்டிவிடுதல் என்ற துன்புறுத்தல்கள் நடந்ததுண்டுதான். அதற்கு அரசு தடை விதித்து
சட்டம் கொண்டு வந்துவிட்டது. அதே போன்று பலரும் உயிர் இழத்தல் அல்லது, குற்றுயிராய்
அடிபடுதல் என்பதும் நடக்கிறதுதான். இரு வகையினருக்கும் தீர்வுகள்
உண்டு.
அதற்கு முன்.....
அதற்கு முன்.....
நட்சத்திர ஆமைகளைக் கடத்துவதற்குத் தடையை அரசு கொண்டுவந்த போதிலும் கறுப்புச் சந்தையில் நடந்து கொண்டுதான்
இருக்கிறது. இவ்வகை ஆமைகள் மட்டுமின்றி, நம் நாட்டிலிருக்கும் அரிய இனவகைப் பறவைகள்,
அவற்றின் குஞ்சுகள், இறகுகள், காட்டு விலங்குகளின் நகங்கள், கொம்புகள், தோல்கள் என்று
பலதும் கறுப்புச் சந்தையில் இந்தியாவிற்குள்ளும், வெளிநாட்டிற்கும் கடத்தப்படுகின்றன. இதற்கு அரசியல் ரீதியாகப் பின்புலம் இல்லாமல் நடப்பதற்கு வழி இல்லை.
நாய் கறிக்காக நாய்கள் கொல்லப்படுவது, முயல்கள் கொல்லப்படுவது மான் கறிக்காக மான்கள் கொல்லப்படுவது?
விலங்குகளுக்குப் பொதுவாகச் சத்தம்
என்பதே கூடாது. அதுவும் பட்டாசு சத்தம் போன்றவை அவற்றிற்கு ஆகாது. யானைகளைக்
கோயில்களில் குறிப்பாகக் கேரளத்தில் கொட்டுச் சத்தங்களுக்கிடையில் தானே திருவிழாக்களில்
பயன்படுத்துகிறார்கள்.??
ஜல்லிக்கட்டு மிருகவதையா என்ற
பதிவில் ஒட்டகங்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி நம் நண்பர் வெங்கட்ஜி பதிந்திருந்தார்,
மனதை வேதனைப்படுத்திய பதிவு. இந்தக் கொடுமை எந்தவகையில் சேரும்?
மாடுகளை வண்டியில் ஏற்றி வேறு
இடத்திற்கு, அது வெட்டுவதற்கோ அல்லது விற்பதற்கோ எதுவாக இருந்தாலும், அனுப்புவதற்கு
என சில வரம்புகள் விதிகள் உண்டு. அதைப் பின்பற்றாமல், கால்களைக் கூட ஒடித்து, நெருக்கி
ஏற்றி, ஒன்றின் கொம்பு மற்றொன்றின் மீது பட்டு கண் பார்வை இழப்பதும், காயம் ஏற்படுவதும்
ஏன் பேசப்படுவதில்லை?
ஸ்பெயினில் விளையாடும் காளைச்
சண்டை, அதன் பெயர் டாரோமாக்கியா என்று நினைவு...அதைப் போன்ற ஒரு குரூரமான விளையாட்டை
யாரும் இவ்வுலகில் பார்த்திருக்க முடியாது. அப்படியான சண்டைகள், விளையாட்டு என்ற பெயரில்
நடத்தப்படுகிறது. நாலுகால் பிரியர்கள் அமைப்புகள் இதற்கு என்ன சொல்லுகின்றன?

விலங்குகளை வைத்துக் கோடிக்கோடியாகக் கறுப்புச்
சந்தையில் பண வர்த்தகம் நடைபெறுகிறது. அவை எல்லாம் விலங்குகள்
இல்லையோ?! தெரியவில்லை. அகராதியில் பார்க்க வேண்டும். பீட்டாவின் அகராதியிலா,
பொதுவான அகராதியிலா? ஏனென்றால் பீட்டாவிற்கு என்று ஒரு தனி அகராதி இருக்கிறது. 98 ஆம்
வருடத்திலிருந்து அது கொன்ற விலங்குகளின் எண்ணிக்கை 34,000.
செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ்,
அல்லது தொற்றக் கூடிய கொடிய நோய்கள் வந்தால் அவற்றைக் கருணைக் கொலை செய்வது என்பது
தவிர்க்க முடியாதுதான். ஆனால், விலங்குகள் காப்பகம் என்று ஆரம்பிக்கப்பட்ட பீட்டா
அமைப்பு தன் பெயரில் Ethical Treatment of Animals என்று வைத்துக் கொண்டு தெருவில்
அலையும் நாலுகால் செல்லங்களைப் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டு அவற்றைத் தேடி
யாரும் வரவில்லை என்றால் அதனைக் கொன்றுவிடுகிறது. இதை நான் சொல்லவில்லை. இதோ
இந்தச் சுட்டி ஆதாரங்களுடன் சொல்லுகிறது. https://www.petakillsanimals.com
எப்படி குழந்தை வளர்ப்பில் அவர்களின் உளவியல்படி
வளர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறதோ, எப்படி ஒரு குழந்தையை அதன் திறமையை, சுறுசுறுப்பாக
இருக்க வேண்டிய குழந்தையை முடக்கி வளர்த்தால் அதன் குணநலன் மாறி மன நலம் பாதிக்கப்படுமோ
அப்படித்தான் விலங்குகளும். விலங்குகளுக்கும் உளவியல் உண்டு.
விலங்குகளுக்குச் சில திறன்கள் உண்டு. வீட்டில்
வளர்த்தாலும் அந்தத் திறன்படி வளர்த்தால்தான் அவற்றிற்கு நல்லது. எடுத்துக்காட்டாக,
லேப்ரடார் எனும் வகை நாய்களை 4, 5 மைல் தூரம் நடக்க வைக்க வேண்டும். இல்லை என்றால் அவற்றின்
எடை கூடி சில உடல் உபாதைகள் வரும்.
குதிரைக்கும், யானைக்கும் முதுகெலும்பு நல்ல உறுதியாக
இருப்பதால்தான் அதன் மீது மனிதர்களை ஏற்றி உலா வரச் செய்வது நடக்கிறது. அவர்களுக்கு நாம்
அமர்ந்தால் புத்தகப்பையின் சுமை போலத்தான் இருக்கும். அவற்றிற்கு என்று சில பணிகள்
உண்டு. அவற்றைச் செய்ய வைத்தால்தான் அவற்றிற்கு நல்லது. ஹார்ஸ் பவர் என்று நாம்
சொல்லுவோம் இல்லையா அதற்கேற்ப குதிரைகள் மிகவும் வேகமாக ஓடும் திறன் உடையவை அதனால்
குதிரைகள் ஒட்டம் (பந்தையம்) சட்டத்திற்குள் உள்ளதுதான். அதற்காக அதற்கு
வளரூட்டிகள், ஊசிகள் கொடுக்கப்படுகிறதே! அதற்குத் தடை இல்லை. யானைகள் ஒட்டம்(பந்தையம்)
கேரளாவில் நடத்தப்படுகிறது. தடை இல்லையே!
விலங்கியல் பூங்கா என்று மக்களுக்குக் காட்சிப் பொருட்களாக
கூண்டிற்குள் வைக்கப்பட்டிருக்கும் விலங்குகள், விலங்குகள் இல்லை போலும். அவற்றிற்கு நடக்கும் அநீதிகள்
எல்லாம் அநீதிகள் இல்லை போலும், சுத்தமாக,
துர்நாற்றம் இல்லாத நீருடன், கூண்டுகளுடன் எத்தனைப் பூங்காக்கள் இருக்கின்றன? ஏழு
மாநில சகோதரிகள் பயணக் கட்டுரையில் கூட, விலங்கியல் பூங்கா பற்றி வேதனையுடன் வெங்கட்ஜி
சொல்லியிருந்தார்
காட்டில் இருக்க வேண்டிய சிங்கம் புலிகளைக் கூட்டில் அடைப்பதால் எப்படி
அவற்றின் இயல்பான வீரம் முடக்கப்படுகிறதோ அப்படித்தான் ஜல்லிக்கட்டுக் காளைகளும். காளைகளை
வளர்ப்பதே இனவிருத்திக்காகவும், வீர விளையாட்டிற்காகவும்தான். பண்டையக் காலத்தில்
காளைகளை இனவிருத்தி செய்வதற்கு சோதிப்பார்களாம். காளைகளை தூரத்திலிருந்து
அழைக்கும் போது, அது ஓடி வரும் போது அதனை வளர்ப்பவர்கள் ஓடிச் சென்று அதன் திமிலைப்
பிடித்து அடக்குவார்களாம். காளை மடிந்து உட்கார்ந்துவிட்டால் அதனை மாட்டுடன்
இணைவதற்கு அனுப்ப மாட்டார்களாம். அதே சமயம் ஓடி வரும் காளை திமிலைப்
பிடிப்பவரையும் தள்ளிவிட்டு ஓடிச் சென்றால் அதனைத்தான் இணைவதற்கு ஏற்ற காளை
என்பார்களாம். இப்படியாகக் காளைகளை வளர்த்துவந்த காலம் உண்டு.
இப்போது காளைகள் மிகவும் குறைவு! வட இந்தியாவில் ஒரே காளையை
வைத்துப் பல மாடுகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க வியாபார ரீதியில் விந்து
கொடுத்து பல லட்சங்கள் ஈட்டுபவரைப் பற்றி வெங்கட்ஜி தனது பதிவு ஒன்றில்
குறிப்பிட்டிருந்தார். இப்போதெல்லாம், பெரும்பாலும் செயற்கை முறையில்தான் மாடுகளுக்கு விந்து
செலுத்தப்படுகிறது. அந்த மாடுகளுள் எவ்வளவு பெரிய குழாய் போன்ற ஊசியை
செலுத்துவார்கள் என்பதை நான் நேரில் கண்டதுண்டு. கொடுமை. இயற்கைக்கு எதிராகத்தான்
எல்லாமே நடக்கிறது. இணைவதில் கூட சுதந்திரம் இல்லை. கால்நடை மருத்துவனான என் மகன்
காளை வளர்க்க வேண்டும் என்பான்.
இப்படிக் காளைகள் ஒழிக்கப்படுவதால் நமது நாட்டு
மாடுகளும் குறைந்து வரும் வேதனையான நிலைமை. கீதாசாம்பசிவம் அக்கா கூட அடிக்கடிச்
சொல்லுவதுண்டு, இப்போதெல்லாம் பசும் பால் நன்றாகவே இல்லை என்று. இந்தச் சந்தையை அறிந்து
கொள்ள, கறுப்புச் சந்தையாக மாறிய வியாபார உலகில் பாலிலும் அரசியல் புகுந்து
விளையாடுவதை இதோ இந்தச் சுட்டியில் பாருங்கள். விகடன்.காம் தளத்தில்
வெளியாகியிருக்கும் கட்டுரை யூரியா, சவுக்காரத்தூள் கலந்த பாலை குடிக்கத்தான்...
ஜல்லிக்கட்டுக்கு தடையா...? http://www.vikatan.com/news/coverstory/77967-milk-politics-behind-the-ban-on-jallikattu--justiceforjallikattu.art அதிர்ச்சித் தகவல்கள்! இந்தச் ஜல்லிக்கட்டுப்
போராட்டத்திற்கு இந்தக் காரணங்களும் உண்டு என்பதை இக்கட்டுரை மிக அழகாக
விளக்குகிறது.
சரி உயிர் பலியாவதனால் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு: உலக அளவில் நடக்கும் குத்துச்சண்டை, கராதே போட்டிகளில் இல்லாத ஆபத்தா? பைக் ரேஸ், கார் ரேஸ் விளையாட்டுக்களில் இல்லாத ஆபத்தா? அதற்கெல்லாம் அவர்கள் முறையான பாதுகாப்புக் கவசங்கள் அணிய வேண்டும், முறையான பயிற்சி பெற்றவர்கள்தான் ஈடுபட வேண்டும் என்ற விதிமுறைகள் இல்லையா? அது போன்று ஜல்லிக்கட்டையே தடை செய்வதற்குப் பதிலாக….
ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாக, இதற்கு
அரசியல் சாயம் பூசாதவர்களாக இருந்தால் போராட்டக் களத்திற்கு வந்திருக்க
வேண்டும். வந்து ஆதரவாளர்கள் மற்றும் அதனை எதிர்ப்பவர்கள் தரப்பிலிருந்து
குழுவையோ, இல்லை பிரதிநிகளையோ அழைத்து இரு தரப்பினரிடமும் பேசி, விலங்கு வதையோ,
உயிர்பலியோ இல்லாமல் முறையான பாதுகாப்பு முறைகளுடன், விதி முறைகளுக்கு உட்பட்டு,
மேற் சொன்ன விளையாட்டுகளுக்கு அணிவது போன்று தற்காப்புக் கவசங்கள் அணிந்து,
காளைகளின் கொம்புகளிலும் அப்படியான கவசம் அணிவித்து, உடனடி மருத்துவ முதலுதவிகள்
ஏற்பாடுகளுடன் அரசின் ஆதரவுடன் நடத்தலாம் என்று பேசியிருந்தால் இரு
தரப்பினருக்கும் நன்றாக இருந்திருக்கும். அதை விட்டு இப்படி மேலும் மேலும்
அரசியலாக்கிக் கொண்டு செல்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை. நம் அரசுகள் மக்கள்
அரசாக இல்லாமல், வியாபார உலகு சார்ந்த அரசாக இருப்பது வேதனையளிக்கிறது!
இது போன்று ஒன்றுபட்டு, மக்கள் பொதுப்
பிரச்சனைகளுக்குத் திரளுவார்கள் என்றால், ஆட்சியாளர்களுக்கு மக்களின் மேல் ஒரு வித
பயம் வரும். மக்களின் நலனில் நாட்டம் இல்லை என்றாலும் பயந்தேனும் நல்லாட்சி
புரிவார்கள்தானே!
------கீதா
வியாழன், 25 ஆகஸ்ட், 2016
போருக்குத் தயாராகும் தெரு நாய்கள்
படம் இணையத்திலிருந்து
சமீபத்தில் திருவனந்தபுரம் அருகே
கடற்கரையை ஒட்டிய புல்லுவிளா எனுமிடத்தில், பெண்மணி ஒருவர் வீட்டில் கழிப்பிடம் இல்லாததால்
இரவு 8.30 மணியளவில் வெளியிடத்திற்குச் சென்ற போது, 20 க்கும் மேற்பட்ட தெருநாய்க்
கூட்டம் அவரை விரட்டிக் கடித்துக் குதறிவிட்டன. சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் கண்டதோ
மயக்கமடைந்து கிடக்கும் தன் தாயை. நாய்கள் கடித்துக் குதறும் காட்சி. சத்தம் போட்டுக்
கத்தி அவற்றை விரட்ட முயன்ற மகனை நாய்கள் கூட்டம் விரட்ட ஆரம்பித்தது. துரத்தும் நாய்களிடமிருந்து
தப்பிக்க அவர் ஓடிக் கடலில் குதித்து உயிர் தப்பியிருக்கிறார். அலறல் கேட்டு ஓடி வந்த
ஒரு சிலரை நாய்கள் விரட்டிக் கடித்தன. அதன் பின் அப்பகுதி மக்கள் எல்லோரும் திரண்டு
கற்கள் மற்றும் கம்புகளுடன் வந்து நாய்களை விரட்டி, பாதிக்கும் மேற்பட்ட உடல் பகுதியை
நாய்களிடம் இழந்த அப்பெண்மணியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். மருத்துவமனை
செல்லும் வழியிலேயே பாவம் அப்பெண்மணி உயிரிழந்தார்.
கேரளத்தை உலுக்கிய இச்சம்பவம்
புதிதல்ல. 2012 முதல் இதுவரை நாய் கூட்டங்கள் கடித்து 50 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
(வெளியில் தெரியவராமல் இறந்தவர்கள் எத்தனையோ?) இதில் வீட்டுத் திண்ணையில் கிடந்தவர்கள்,
பள்ளி சென்று திரும்பிய குழந்தைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களுடன் வந்தவர்கள்
இப்படிப் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அச்சம்பவங்கள் எல்லாம் நடந்த மறுநாள் எல்லா
நாளிதழ்களிலும் அதுதான் முக்கியச் செய்தி. அடுத்த நாள், சிலர் அப்பகுதியில் அந்த நாய்களில்
சிலவற்றைக் கொன்றதாகவோ, கொல்ல முயன்றதாகவோ சொல்லப்படும் செய்தி.
அதற்கு அடுத்த நாள்
அப்படித் தெருநாய்களைக் கொல்ல முயன்றவர்களுக்கு, கொன்றவர்களுக்கு எதிராக தெருநாய்களின்
நலன் காப்போர் இயக்கம் புகார் கொடுத்த செய்தி. அதன் பின் ஓரிரு நாட்கள் பிரமுகர்கள்,
மத்திய அமைச்சர் மேனகா காந்தியை எதிர்த்தும், ஆதரித்தும் விடும் அறிக்கைகள். ஆனால்,
அடுத்த நாள் ஏதேனும் இளம்பெண் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டதோ, ஏதேனும் அமைச்சர் வாய்
உளறித் தவறாகப் பேசியதோ, ஏதேனும் மார்க்சிஸ்ட் அல்லது ஆர் எஸ் எஸ் ஆதரவாளரான இளைஞர்
கொல்லப்பட்டதோ, சரிதா நாயரின் மிரட்டல்களோ நாளிதழ்களில் முக்கியச் செய்தியாகும்.
மீண்டும் தெரு நாய்களைப் பற்றிய
செய்தி வர ஏதேனும் ஒருவர் நாய்களால் கடித்துக் கொல்லப்படும்வரை பேசப்படமாட்டாது. இப்படி
ஆவன செய்யப்படாமல் கொல்லப்பட்ட 50 வது நபர்தான் இந்தப் பெண்மணி. அடுத்த நாளே கொட்டாரக்கரையைச்
சேர்ந்த, கடந்த ஒரு மாதகாலமாக மருத்துவமனையில் நாய்கடிக்கான சிகிச்சை பெற்ற ஒருவர்
உயிரழந்தார்.
நேற்று பாலக்காடு குத்தனூரைச்
சேர்ந்த 60 வயதுள்ள ஒரு பெண்மணி நடந்து செல்லும் போது வழியோரத்தில் குவிக்கப்பட்டிருந்த
மாமிச மற்றும் உணவுக் கழிவுகளைத் தின்று கொண்டிருந்த ஒரு தெரு நாய் அவர் மீது தாவி
அவரைக் கடித்துக் குதறி இருக்கிறது. அவரது
அலறலைக் கேட்டு ஓடி வந்தவர்கள் அந்நாயை விரட்டி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று
அவர் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.
வீணாக்கப்பட்ட உணவுப் பொருட்கள்,
கோழி மற்றும் மாடு மற்றும் மீன் கழிவுகள் எல்லா சாலையோரத்திலும் அலட்சியமாகக் கொட்டப்படுகிறது.
அவற்றைத் தின்று வளரும் தெருநாய்கள் கூட்டமாகக் கூடும் போது கண்ணில்படுவோரைக் கடித்துக்
குதறத் துணிகின்றன. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, வானொலிச் செய்தி. கொல்லம் அருகே
வீட்டுத் திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தச் சிறுவனைத் தெரு நாய் கடித்ததாம். கீழுதடைக்
கடித்துத் துண்டித்து தொடையிலும் கடித்ததாம். காப்பாற்ற ஓடிவந்த அச்சிறுவனின் அம்மாவையும்
கடித்திருக்கிறது. (http://thillaiakathuchronicles.blogspot.com/2015/07/If-The-Meek-Get-Angered.html) இருவரும்
இப்போது கொல்லம் மருத்துவமனையில்.
கேரளாவில் ஏறத்தாழ 2 ½ இலட்சம்
தெருநாய்கள் உள்ளதாம். எல்லா பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் தெரு நாய்களைப்
பிடித்து ஏபிசி (அனிமல் பர்த் கன்ட்ரோல்) செய்ய வேண்டும். இனியும் தாமதிக்கக் கூடாது.
ஏபிசி செய்யப்படும் நாய்கள் சற்று அடங்கிக் கிடக்குமாம். ஆபத்தான சில தெரு நாய்களைக்
கொன்றே தீர வேண்டுமெனில், அதற்கும் தயங்கக் கூடாது. (நடிகர் மோகன்லால் இப்படிச் சொல்லித்தான்
முன்பு மாட்டிக் கொண்டார். ஹும் அது மோகன்லால். அவர் எங்கே நாம் எங்கே. நமக்கெல்லாம்
பிரச்சனை வராது)
நாய் பிடிப்பவர்கள் இல்லை என்று
கடந்த 10 வருடமாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், மக்களில் விலங்குப் பிரியர்களுக்குக்
கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் அதற்கான பயிற்சி அளித்து இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல்
இருக்க முயற்சி எடுக்காதது வியப்பளிக்கிறது. கொல்லப்பட்டவர்களின் வீட்டினரோ, உறவினரோ,
நண்பர்களோ ஆத்திரத்தில் ஓரிரு நாய்களைக் கொன்றால், உடனே காவல்துறையிலும், நீதி மன்றங்களிலும்
புகார் கொடுக்கும் தெருநாய்களின் நலன் விரும்பிகள் ஒவ்வொரு பஞ்சாயத்து, நகராட்சி மற்றும்
மாநகராட்சிக்கு எதிராகப் புகார் கொடுத்து தெருநாய்களுக்கு ஏபிசி செய்ய ஏன் நடவடிக்கை
எடுக்க உதவுவதில்லை?
அது போல் உணவுக் கழிவுகளை வழியில் எறிவோர்களும், நாம் செய்யும்
இந்தத் தவறு எவ்வளவு பெரிய ஆபத்திற்குக் காரணமாகிறது என்பதை உணர்ந்து, உணவுப் பொருட்களை
வீணாக்காமல் இருக்க முடிவெடுத்தால் அது சமூகத்திற்கு நன்மை பயப்பதுடன் அவர்களுக்கும்
பொருளாதார ரீதியாகவும் நன்மை ஏற்படுத்தும் என்பதை ஏன் உணர்வதில்லை.
அரசும் இதற்கு முன் செய்தது போல்
தற்காலிகமாகப் பிரச்சனைகளில் இருந்து தப்ப, நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சளவில்
சொல்லி நில்லாமல், தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்தே ஆக வேண்டும்.
சென்னையில் ப்ளூக்ராஸ் செய்யும்
சேவை இது போல் நல்ல மனம் படைத்த பலரது முயற்சியால்தான் தொடங்கியது. இப்போதும் தொடர்ந்து
நடக்கிறது. அதுபோன்ற இயக்கங்கள் கேரளாவில் ஓரிரு இடங்களிலேனும் துவங்க தெருநாய் நலன்விரும்பிகளும்,
அரசும், அதிகாரிகளும் முயல வேண்டும். சில மாதங்களுக்கு முன் நண்பர் ஸ்ரீராம் தன் வீட்டருகே
உள்ள நாயின் வேதனையை ப்ளூக்ராஸ் உதவியுடன் போக்கியிருக்கிறார். அவர் அவ்வப்போது இப்படிச்
செய்தும் வருகிறார்.
அது போன்று சென்னையில் இவைகளுக்கானக் காப்பகங்களும், பேணுபவர்களும்
கணிசமான அளவில் இருப்பதாக ஸ்ரீராம் அவர்களின் பாசிட்டிவ் செய்திகளிலிருந்து அறிய முடிகின்றது.
அது போல் கேரள மக்களும் தெருநாயைக் காணும் போது பயந்து ஓடும் அல்லது கல்லெடுத்து எறியும்
நிலை மாறி, அவற்றைக் கருணை தவழும் கண்களால் நோக்கும் ஒரு காலம் வருமா?....காத்திருப்போம்.
படம் இணையத்திலிருந்து - சமீபத்தில் கொச்சியில் ஒரு சில நடவடிக்கைகள், ரோட்டரி சங்கத்தினரால் எடுக்கப்பட்டதாகச் செய்தி
ஞாயிறு, 17 ஜூலை, 2016
பூமித்தாயின் கண்ணீர்
பூமியில் தான் குழப்பங்கள், பிரச்சினைகள் என்றால் அண்ட விண்வெளியில் உள்ள சூரிய குடும்பத்திலும் ஒரு பிரச்சினை என்று தெரிந்த பொழுது வியப்பாக இருந்தது. என்ன பிரச்சினையாக இருக்கும் என்று எட்டிப் பார்த்தபோது, குடும்பத்தின் தலைவனாகிய சூரியனிடம் பூமித்தாய் புலம்புவது கேட்டது.
“தலைவனே! இது என்ன கொடுமை? இந்தக் குடும்பத்தில் இத்தனைக் கோள்கள் இருக்கும் போது நான் மட்டும்தான் இவ்வளவு பாரம் சுமக்க வேண்டுமா? என் குழந்தைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறார்கள். நீங்கள் தான் இதற்கு ஒரு தீர்வு கொண்டுவர முடியும்.”
“உன் வேதனை எனக்குப் புரிகிறது. ஆனால் மற்ற கோள்களில் உனக்கிருப்பது போல் வளமும, செழிப்பும், நீரும், காற்றும், இல்லையே. ஏன், ஒளி கூட உனக்குத்தானே உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு சரியான அளவில் நான் கொடுத்திருக்கிறேன். அப்படி இருக்கும் போது மற்ற கோள்களிடம் எப்படி நான் கேட்க முடியும்?” என்றான் சூரியன்.
. அதற்குள் அங்கு செவ்வாய் கோளின் குரல். “பூமியே! உன் குழந்தைகள் என்று அடிக்கடிக் கூறிக் கொள்வாயே அதே குழந்தைகள் தான், என்னிடம் உன் குழந்தைகளை அனுப்ப முடியுமா என்று என் மீது அடிக்கடி, ராக்கெட் ஏவி என்னை வேவு பார்க்கிறார்கள். என்னிடம் காற்றில்லை, சூரிய ஒளி இல்லை என்பதை நம்பாமல் பொய் சொல்கிறேன் என்று நினைக்கிறார்கள் போலும்.”
புதன் அதற்குள், “உன்னை மட்டுமல்ல என்னையும்தான் வேவு பார்க்கிறார்கள். ஏன் சந்திரன் பூமிக்கு அருகில் இருப்பதால் அங்கு ராக்கெட் அடிக்கடி விட்டுப் பார்ப்பது அவர்களுக்கு வழக்கமாகிவிட்டது. அதிலும் சந்திரனைப் பார்த்து பூமியின் பிள்ளைகள் சிலர் நிலா நிலா என்று கவிதைகள் கூட நிறைய எழுதுகிறார்கள். சந்திரனுக்குப் பூமியில் நல்ல மவுசு” என்றது.
“நீங்கள் எல்லோரும் இப்படி என்னைப் புரிந்து கொள்ளாமல் பேசுகின்றீர்களே. வருத்தமாக இருக்கிறது. என் வருத்தத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல்தான், சூரியன் தலைவனிடம் வந்தேன். நான் என் குழந்தைகள் நன்றாக, செழிப்பாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று, பசுமையையும், நல்லக் காற்றையும், சூரியனிடமிருந்து ஒளியையும், நல்ல மழையையும் கொடுத்து, நதிகள், மரங்கள், கனிமங்கள், மலைகள், ஆறுகள், நிலத்தடித் தண்ணீர், பயிரிடுவதற்கான நல்ல மண் வளம் என்று பல சொத்துக்களை என் பல சந்ததியினர் அனுபவிக்க சேர்த்து வைத்தேன்.
ஆனால், என்ன பயன்? என் குழந்தைகள் எல்லாவற்றையும் உபயோகித்தால் அதைத் திரும்ப சேமிப்பதற்கும், என்னைப் பராமரித்துப் பாதுகாக்கவும், முயற்சி செய்ய வேண்டுமில்லையா? சொத்தைப் பராமரிக்காமல், பாதுகாக்காமல் அழித்து விட்டால் அடுத்து வரும் சந்ததியினர் என்ன செய்வர்? என் குழந்தைகள், வளமாகிய என் சொத்தை எல்லாம் அழித்துத்தான் வருகின்றனர்.
என் மீது எல்லா இடங்களிலும் கழிவையும், குப்பையையும் எறிகின்றனர். துப்புகின்றனர். சிறுநீரும், மலமும் கழித்து என்னைக் கேவலப்படுத்துகின்றனர். என் நீர் நிலைகளாகிய நதி நீரையும், கடல் நீரையும், ஏரிகளையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி, நீர் நிலைகள் குறைந்து நல்ல சுத்தமான தண்ணீர் இல்லாமல் தட்டுப்பாடு வந்து இன்று என் சொத்தாகிய நீரைக் குடைந்தெடுத்து, சுத்தாமாக்கி, புட்டிகளில் அடைத்து விற்கிறார்கள், கொழிக்கிறார்கள்.
நல்ல காற்று கிடைக்க நான் வைத்திருந்த மரங்களை எல்லாம் வெட்டிக், காடுகளும், சோலைகளும் இல்லாமல் செய்து, சுத்தமான காற்று இல்லாமல் செய்து வருகின்றனர். என் குழந்தைகள் பண வெறி பிடித்து நல்ல பயிர் விளையும் நிலங்களை எல்லாம் கட்டிடங்களாக்கி, அடுக்கு மாடி வீடுகளாகவும், பல்பொருள் அங்காடிகளாகவும் மாற்றி வருகின்றனர். விளை நிலங்களே இல்லாமல் போவதால் விளைச்சல் குறந்து உணவுப் பற்றாக் குறையும் ஏற்பட ஆரம்பித்து விட்டது. இன்னும் சொல்லப் போனால் நான்கு சக்கர வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும், ஆலைகளும் பெருகி புகையைப் பெருக்கி, என்னைச் சுற்றிப் புகை மண்டலத்தை எழுப்பி அடைத்து விட்டனர்.
அவர்களுக்குள் எனது சொத்தாகிய நிலத்தையும், நீரையும் பிரிப்பதற்குச் சண்டை. இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இவற்றை அவர்கள் உயிர் உள்ளவரை அனுபவித்து, பராமரித்துக் கட்டிப் பாதுகாக்க மட்டும்தானே அல்லாது சுய நலத்திற்காக உபயோகித்து அழிப்பதற்கல்ல என்பது என் குழந்தைகளுக்குப் புரிய வில்லை.
பேராசையும், கொலைகளும், கொள்ளைகளும், ஊழல்களும் தலை விரித்தாடுகிறது. எனக்கு மனிதர்கள் மட்டும்தான் குழந்தைகளா? ஐந்தறிவுடைய விலங்கினங்களிலிருந்து, ஒர் அறிவு கொண்ட உயிரனங்களூம், நுண்ணுயிரினங்களும், மரம் செடி கொடிகளும் என் குழந்தைகள் தான். எல்லா உயிரினங்களுக்கும் வெளித் தோற்றம், உருவம்தான் வேறு. உள்ளிருக்கும் உயிர் ஒன்றுதானே. ஆறறிவு கொண்ட என் குழந்தைகள் மற்ற என் குழந்தைகளையும் கொன்று அழிப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்க முடிகிறதே தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.


எனக்கு சுவாசிக்க நல்ல காற்று இல்லாமல் மூச்சுத் திணறுகிறது. ஓசோன் படலம் குறைந்து கிரீன் ஹவுஸ் விளைவினால் வெப்பம் கூடி என்னை தகிக்க வைக்கிறது. என்னுடைய நீரே எனக்குக் குடிப்பதற்கு மாசற்று, சுத்தமாகக் கிடைப்பதில்லை. எனக்கு அமைதியாக வாழக் கூட வழி இல்லாமல் போய் விட்டது. எனக்கும் வயதாகி வருகிறது. அன்னை, அன்புடன் கொடுத்த சொத்தை எல்லாம் அனுபவித்து அழிப்பவர்கள் அன்னைக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம் என்று நினைத்துப் பார்க்கிறார்களா? இல்லை. நானும் பொறுமையோடுதான் இருக்கிறேன்” என்று வருந்தினாள்.
ஆம், பூமித்தாய் பொறுமையானவள்தான். மனிதர்களாகிய நாம், நம் பூமித்தாய்க்கு இழைக்கும் கொடுமைகளைக் கண்டு அவளுக்குக் கோபமே வராதோ?
சூரியன், “பூமியே! நீயும் சில சமயம் கோபப்படுகிறாயே! அப்பொழுதும் உன் குழந்தைகள் உணரவில்லையா?” என்றதற்கு
“ஆம் ! நான் சில சமயம் கோபப்படத்தான் செய்கிறேன். என் பொறுமைக்கும் எல்லை உண்டு. இல்லையா? பூகம்பமாக, சுனாமியாக, மழையாக, வெள்ளமாக, கடல் கொந்தளிப்பாக, எரிமலைப் பிழம்பாக, நிலச்சரிவாக, புயலாக, சூறாவளிக் காற்றாக, வறட்சியாக என்று பல வகைகளில் என் சீற்றத்தைச் சிறிதாக வெளிப்படுத்தி என் குழந்தைகளை மிரட்டத்தான் செய்கிறேன்.
இது போன்று நான் மிரட்டும் போது, என்னைப் பராமரிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு சிலர் சிறிது நாட்கள் “பூமித்தாயைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.” என்று குரல் கொடுப்பார்கள். ஆனால் அதற்கெல்லாம் என் குழந்தைகள் பயப்படுவதாகவோ, தாங்கள் செய்யும் தவறை உணருவதாகவோ தெரியவில்லை. என் குழந்தைகளில் நல்ல மனதுடனும், அறிவுடனும் இருப்பவர்கள் என்னைப் பாதுகாக்கவேண்டும் என்றும், என் வளங்களை அழித்தால் அவர்களுக்கு அழிவு நிச்சயம் என்றும் அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது? என் குழந்தைகளை நினைத்து வருந்தத்தான் முடிகிறது.”
மற்ற கோள்கள் எல்லாம், “இப்படிப்பட்டவர்களை நாங்கள் எப்படி வைத்துக் கொள்ள முடியும்? எதற்காக வைத்துக் கொள்ள வேண்டும்? நல்லவேளை எங்களுக்கெல்லாம் உன்னைப் போன்று நல்ல வளங்கள் இல்லாமல் போயிற்று. இல்லையென்றால் நாங்களும் உன்னைப் போல் இப்படிப் புலம்ப வேண்டி வந்திருக்கும்.” என்றன.
“ரொம்ப சொல்லிக் கொள்ளாதீர்கள். சமீபத்தில் என் குழந்தைகள் சிலர், செவ்வாய் கோளிற்குச் சென்று தங்குவதற்கு விருப்பம் உள்ளவர்களை 2022-23 ல் அழைத்துச் செல்வதற்கான வழிகளைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக அறிகிறேன். அவர்களுக்குப் பயணத்திற்கான பயிற்சி அளிக்கவும் போகிறார்களாம். அதற்கு இப்போதே முன் பதிவு செய்ய வேண்டுமாம். போவதற்கான பயணச் சீட்டு பின்னர் தரப்படுமாம். அதற்கு எவ்வளவோ மில்லியன் டாலராம். ஆனால் போவதற்கான சீட்டு மட்டும்தான். வருவதற்கு அங்கு சென்ற பிறகுதான் திரும்பவும் பதிவு செய்ய வேண்டுமாம். அதற்கு தனி கட்டணம் செலுத்தி பயணச் சீட்டு பெற வேண்டுமாம். அதனால், செவ்வாய் கோளே உன்னிடமும் என் மனிதக் குழந்தைகள் வரப் போகிறார்கள். அதனால் உன் வாயை கொஞ்சம் அடக்கி வைத்துக் கொள்.” என்றாள் பூமித்தாய்.
செவ்வாய், “ஐயோ! இது என்ன கொடுமை? உன் மக்கள் என்னிடமும் வரப் போகிறார்களா? அப்படியென்றால் இன்னும் சில வருடங்களில் நானும் உன்னைப் போல் புலம்பி கண்ணீர் விட வேண்டியதுதான். தலைவா சூரியனே நீங்கள் இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று புலம்ப ஆரம்பித்து விட்டது.
"நானும் இதைக் கேள்விப் பட்டேன். MARS ONE என்று அதற்குப் பெயர். போவதற்கே ஏழு மாதங்கள் ஆகுமாம். அதெல்லாம் சரி, எனக்கு ஒரு சந்தேகம். போனால் முதலில் உயிருடன் போவார்களோ? அப்படியே போனாலும் உயிருடன் திரும்பி வர முடியுமா அவர்களால்? வர உத்தரவாதம் உண்டா?" என்றது வியாழன்.
"அதை ஏன் கேட்கிறீர்கள். இதற்கும் அங்கு கிறுக்குப் பிடித்தவர்கள் இருக்கிறார்கள். நிறைய மக்கள் பதிவு செய்திருக்கிறார்களே! அவர்களை என்னவென்று சொல்வதாம்?" - நெப்டியூன், ப்ளூட்டோ
“சந்திரனில் கூட நிலத்தைக் கூறு போட்டு விற்க உன் குழந்தைகள் முயல்வதாக கேள்விப்பட்டோம்.” என்று எள்ளி நகையாடியது வெள்ளிக் கோள்.
“எனக்கு மூச்சுத் திணறுகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை..” என்றது பூமி.
“எனக்கு மூச்சுத் திணறுகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை..” என்றது பூமி.
“நிச்சயமாக நீ ரொம்பப் பொறுமைசாலிதான் ! நம்மை எல்லாம் படைத்த அந்த அண்டவெளி சக்தியிடம் முறையிட்டுப் பார்” என்றான் தலைவன் சூரியன்.
ஆம் பூமித்தாய் ரொம்பப் பொறுமையானவள்தான்! அவள் ஒரு நல்ல தாய்!. நாம் செய்யும் தவறுகளை எல்லாம் பொறுத்து எந்தக் கைமாறும் எதிர்பார்க்காமல் நமக்குத் தன் வளங்களை எல்லாம் தந்து கொண்டுதான் இருக்கிறாள். நாம்தான் அழிவை நோக்கி நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருக்கிறோம். பூமித்தாய் பொறுமைசாலிதான்.!!! அவள் கண்ணீரும் வற்றி வருகிறது!
---கீதா
படங்கள் : இணையத்திலிருந்து
வலைப்பூ ஆரம்பித்த பொழுது எழுதிய பதிவு. எங்கள் வலைப்பூ அப்போது அறிமுகமாகியிராத காலம் ஆதலால் இப்போது மீள் பதிவு.
---கீதா
படங்கள் : இணையத்திலிருந்து
வலைப்பூ ஆரம்பித்த பொழுது எழுதிய பதிவு. எங்கள் வலைப்பூ அப்போது அறிமுகமாகியிராத காலம் ஆதலால் இப்போது மீள் பதிவு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











