திங்கள், 6 ஜூலை, 2015

சாது மிரண்டால் காடும் கொள்ளாது....கடித்த நாயும் தப்பாது

இது நான் பார்த்த அதே படம் அல்ல - சும்மா பதிவிற்காக
படம் - கூகுள்

     என் பள்ளிப் பருவத்தில் நான் அதிசயத்துடன் எத்தனையோ முறை பார்த்த ஒரு தீப்பெட்டிப் படம், அந்தச் செய்தியை வாசித்ததும் திடீரென என் மனதில் தோன்றியது. ஒரு பெண் ஓங்கிய அறுவாளுடன், ஓடும் ஒரு புலியை வெட்டுவதற்கு, புலியை விரட்டும் படம் தான் அது.  தாய் தன் சேய்க்கு ஆபத்து விளைவிக்க வருவது எத்தகைய கொடிய மிருகமானாலும், துளியும் பயமின்றி அதைக் கொல்லவும் தயங்க மாட்டாள் என்பது உலகறிந்த உண்மைதானே. புலியை வெட்டி தன் குழந்தையைக் காத்த பெண் உண்மையிலேயே வட இந்தியாவில் எங்கோ வாழ்ந்தவள்தான் என்றும்,  அந் நிகழ்ச்சியை மையமாகக் கொண்டதுதான் அத்தீப்பெட்டிப் படம் என்றும் சிறு வயதில் எங்கள் குடும்ப நண்பர் திரு குருசாமித் தேவர் என்னிடம் ஒரு முறை கூறியதும் என் மனத் திரையில் அடுத்த காட்சியாய் வந்து மறைந்தது. இப்போது தாய்மார்கள் தேவைப்பட்டால், அது போல் சீறும் தாயாக மாறத் தயங்கவே மாட்டார்கள் என்பதற்கான ஒரு சான்று இதோ!

     ஆலப்புழா மாவட்டத்தில், காயன்குளம் அருகே 37 வயதான, சிறு வயதில் போலியோ பாதிப்பால், ஒரு கை பாதிக்கப்பட்ட ஷைலஜா, காய்ந்த துணிகளை எடுக்க வீட்டிலிருந்து வெளியே வந்ததும், திடீரென பின்னிலிருந்து தாவிய ஒரு நாய் அவரது பின் காலில் கடித்திருக்கிறது.  செய்வதறியாது திகைத்து நிலை குலைந்த ஷைலஜாவின் அலறலைக் கேட்டதும், அவரது 7 வயதான மகள் அகிலா கிருஷ்ணா வீட்டிலிருந்து வெளியே ஓடி வர, நாய் அகிலாவை நோக்கி ஓட ஆரம்பித்திருக்கிறது.  உடனே ஷைலஜா பாயும் புலியாய் மாறி நொடி இடையில், நாய் தன் மகளை நெருங்கும் முன் அதன் மேல் பாய்ந்து அதன் கழுத்தை இறுகப் பிடித்து அதன் மேல் அமர்ந்தும் விட்டார்!  நாய் அவர்  பிடியிலிருந்தும், பல முறை குதறி, அவரது நெற்றி மற்றும் புருவத்தில் எல்லாம் கடித்தும், அவர் பிடியை விடவில்லை.


இதனிடையே அகிலா ½ கிலோமீட்டர் தூரம் ஓடி, அங்குள்ள கடையில் இருந்தவர்களிடம் விவரத்தைச் சொல்ல, அவர்கள் ஓடிவந்து, அந் நாயை அடித்துக் கொல்லும் வரை அத்தாய் தன் உடும்புப் பிடியை விடவே இல்லை.  அவரது, பாதிக்கப்பட்ட ஒரு கையும், அதனால் இயன்ற மட்டும், மறு கைக்கு உதவியாய் அதன் கழுத்தைப் பிடிக்க உதவி இருக்கிறது.  ஷைலஜாவைக் கடிப்பதற்கு முன் அந்நாய் அப்பகுதியிலுள்ள ஓரிருவரைக் கடித்திருந்திருக்கிறது.  எப்படியோ நடந்த விவரமறிந்து உடனே அங்கு வந்த அவரது கணவரும் மற்றவர்களும் சேர்ந்து ரத்தத்தில் குளித்து நின்ற ஷைலஜாவை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தேவையான சிகிச்சை பெறச் செய்திருக்கிறார்கள்.  தன் குழந்தையை அந் நாயிடமிருந்துக் காப்பாற்றிய மகிழ்ச்சியில் அந்தத் தாய் தன் வலியை எல்லாம் மறந்தே போனார்.  போலியோவினால் வலுவிழந்த தன் கையையும் மறந்து தன் மகளைக் காக்கத் துணிந்த அந்த வீரத் தாயை புகழாத நாவே இல்லை இப்போது.  நெருக்கடியான நிலையில், நம் உயிருக்கோ அல்லது நம் குழந்தையின் உயிருக்கோ ஆபத்து என்று வரும் போது, நமது உள் மனதின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் தைரியமும், வேகமும் எப்படியேனும் மேலெழுந்து வந்து விடுமோ!? அப்படித்தான் இருக்க வேண்டும் இந்தத் தாயின் தைரியமும். நாமும் அவரை எண்ணி வியப்பதோடு, அவர் விரைவில் குணமாகப் பிரார்த்திப்போமே.  

36 கருத்துகள்:

 1. அந்த தாய் விரைவில் பூரண நலம் பெற வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
 2. வீரத்தாய்.

  அவருக்கு எங்கள் பாராட்டுகளும், அவர் குணமடைய எங்கள் பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
 3. தாய்மனம்.... காப்பாற்ற எதையும் செய்யும் தைரியம் வந்திருக்கும். அவருக்கு எனது பாராட்டுகளும்.

  விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
 4. பெற்ற தாயின் மனம் வலிமையானது..

  இயலாமையிலும் - மகளைக் காப்பாற்றிய தாய் - விரைவில் நலமடைய வேண்டுகின்றேன்..

  பதிலளிநீக்கு
 5. எல்லாப் பெண்களிலும் ஒரு ஷைலஜா ஒளிந்து கொண்டு தான் இருக்கிறாள்...

  பதிலளிநீக்கு
 6. ஷைலஜா அவர்களின் வீரம் போற்றத்தக்கது! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. எனக்கு என்னமோ இது வீரம் என்பதை விட தாய்மை என்றே படுகின்றது. தனக்கு என்ன ஆனாலும் பரவாயிலை ஆனால் தன் ராசாத்திக்கு எதுவும் ஆகா கூடாது என்று செயல்பட்ட வீர தாய்க்கு வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! சரியான கருத்து வீரம் என்பதை விட தாய்மை...ஆம் ! சிலருக்குத் தாய்மை இருந்தாலும், சிலர் அச்சமயத்தில் கொஞ்சம் பயத்தில் அரற்றுவார்கள் ஆனால் செயல்படபயம் குறுக்கே நிற்கும்....இல்லையோ நண்பரே!

   நீக்கு
 8. பிரமிக்க வைக்கும் துணிச்சல். தியாகம்.

  பதிலளிநீக்கு
 9. அப்பெண்ணின் வீரம் போற்றுதலுக்க உரியது
  போற்றுவோம் பாராட்டுவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
 10. உங்களோடு சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. இந்தத் தாயின் தைரியம்
  அந்த அச்சத்தின் விளைவால்
  அதிரினலின் சுரப்பு
  அதிரடியாக உதவியிருக்குமே!

  குழந்தையை மட்டுமல்ல
  பலரைக் கடிக்காது இருக்க
  கழுத்தை நெரித்து
  நாயை மடக்கிப் பேணிய
  தாய் குணமடைய
  இறைவனை வேண்டி நிற்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு. அழகிய.கவிதைக்கும்!

   நீக்கு
 12. கடிநாய் ஊசி போட வேண்டும், தாய் அன்பு விலங்குகளிடமே இருக்கும் போது
  ( நினைவிருக்கிறதா கரடி காணொளி) மனிதர்களிடமும் இருப்பதுசாத்தியமே. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார்! அருமையான காணொளி அது.....கடி நாய் ஊசி போட்டிருப்பார்கள் என்று நம்புவோம்....மிக்க னன்றி சார்!

   நீக்கு
 13. வணக்கம்,
  அருமையான தகவலை பகிர்ந்தீர்,
  வணங்குகிறோம்,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 14. தன்னைக் கடித்தால் தாங்கிக் கொள்ளும் தாய்மை ,தன் குழந்தைக்கு ஒஎறு என்றால் ஆயிரம் மடங்கு பலம் பெற்றுவிடும் !

  பதிலளிநீக்கு
 15. தாய்மை என்பது இதுதான்!.அந்தத்தாய்க்காகப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. இந்தச் செய்தியை இப்போதுதான் அறிகிறேன் துளசி சார்...
  அந்த அம்மா விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 17. வணக்கம்
  நிச்சயம் பிராத்திப்போம் குணமடைய.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு