வியாழன், 31 அக்டோபர், 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

நான் சரியாக பதிவேற்றம் செய்யாமல் போனதால் இந்த லிங்க் தமிழ்மணத்தில் சரியாக பதிவேற்றம் ஆகவில்லை என்று நண்பர்கள் சொல்ல அறிந்தேன். அதனால் மறுபதிவு.

ஓநாயும் ஆட்டுக் குட்டியும்

      

ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும், அதுல உள்ளவங்க எல்லாரும் ஒவ்வொரு டி.வி. சானலிலும் பேசுவாங்க பாருங்க, உலக மகா படம் எடுத்த மாதிரியும், உலகத்துலேயே யாரும் எடுக்காத படம் எடுத்தா மாதிரியும், இது ரொம்ப வித்தியாசமான கதை அப்படிம்பாங்க. 

ஆமாங்க, ரொம்பச் சரிதாங்க....நமக்குத்தானேங்கத் தெரியும்.  இது வரை யாருமே பார்க்காத இடங்கள்ல எல்லாம் ஷூட் பண்ணிருக்கோம் அப்படிம்பாங்க.  ஏதோ வாயில நுழையாத மாதிரி ஒரு வார்த்தைய போட்டு ஒரு காமேரா டெக்னாலஜி யூஸ் பண்ணிருக்கோம் அப்படிம்பாங்க. 

ஆடியன்ஸ் ரொம்ப யோசிக்கற அளவுக்குக் கதைய கோண்டு போயிருக்கோம்பாங்க.  அதாவது படம் பார்க்கறவங்க வெளிய போகும்போது ஆமாம் இதுல கதை என்ன அப்படினு ரூம் போட்டு யோசிக்க வைக்கிற மாதிரியா இருக்கும். கதைய யோசிக்கறதிலேயே டைம் போயிடும்போது அவங்க எங்கேங்க டைரக்ஷன் பத்தியோ, காமெரா பத்தியோ, எடிட்டிங்க் பத்தியோ, ஸ்க்ரீன் ப்ளே பத்தியோ, டயலாக் பத்தியோ யோசிக்கப் போறாங்க?

ஒரு காதல், பஞ்ச் டயலாக்கு, அதையும் ஹீரோ, நாம அடுத்த நாளு ஒரு டாக்டரப் போயி பார்க்கற அளவு கத்தணும், மரத்தச் சுத்தியோ, இல்ல வெளிநாட்டுல போயி கண்டிப்பா  ஒரு 3, 4, பாட்டு, அப்பத்தானே நம்ம மக்கள் பார்க்காத இடம்னு சொல்ல முடியும், ப்ரொட்யூசர் தலைல துண்டப் போட்டுக்கிட முடியும்....

ஹீரோயினுக்கு கொஞ்சமாவது வேலை வேணும்ல....அப்புறம் ஒரு 2, 3, ஸீன் செண்டிமென்ட்....கதைல சேராத ஒரு காமெடி ட்ராக், வில்லன்...வில்லனோட அல்லக்கைக்கு ஒரு குத்துப்பாட்டு, ஹீரோ ஒரு சோகமா சென்டிமெண்டா ஒரு பாட்டு, அப்புறம் ஹீரோ வில்லனைப் பார்த்து ஒரு பக்க டயலாக்கு, வில்லன் ஹீரோவைப் பார்த்து ஒரு பக்க டயலாக்கு, வில்லனின் ஆட்கள் ஏய். ஏய்’ நு கத்திக்கிட்டே, அறுவா, செயினு, கத்தினு தூக்கிக்கிட்டு கார்லயே கூட ஃபுட்போர்ட் தொங்கிகிட்டு சுத்தணும்..

அப்புறம் ஹீரோவோடு வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒண்ணு மொக்கை போட்டுகிட்டு, ஹீரோவோட காதலுக்கு ஹெல்ப் பண்ணுறோமுனு ரவுசு விட்டுகிட்டு......இப்படிப் போனாத்தானேயா ஒரு 2¼ மணி நேரத்த ஓட்ட முடியும்.  அதுக்கு அப்புறம் ஒரு ¼ மணி நேரம்தானேங்க.  பெரிய்ய்ய்ய கஷ்டம் பாருங்க.....கதை சொல்ல......ஒரு ஒண்ணாங்க்ளாஸ் படிக்கற புள்ளையே சொல்லிடும்க....

இதத்தானேயா இத்தன நாளு பொறுத்துக்கிட்டு பார்த்துக்கிட்டுருக்கோம்.  ஆனா, இடையில நல்ல மனசு உள்ள டைரெக்டர்ஸ் கொஞ்சம் நல்ல படமா எடுக்கத்தான் செய்றாங்க......இருந்தாலும்...


இப்படி நம்ம தமிழ் நாட்டு மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருந்த வேளைல, இல்லனா பழக்கப்பட்டு வேறவழி இல்லாம இப்படிப்பட்ட படங்களப் பார்த்துப் பழகி இருக்கும் வேளைல, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்னு ஒரு படம் வந்தா எப்படி இருக்கும் நம்ம மக்களுக்கு?

அதுவும் கால்சட்டை போட்டு, மேல்சட்டை பாதியாவும், தொப்புளும் காட்டற ஹீரோயின் இல்ல, பாட்டே இல்ல அப்படின்னா......ஓ! ஏதோ குழந்தைங்க படம் போல, அம்புலிமாமா படம் போலனுதானே நினைப்பாங்க?  போஸ்டர பார்த்துட்டு, ஏதோ இங்கிலீசு படம், தமிழ்ல போலனு நினைச்சுட்டாங்க போல......நம்ம மக்களுக்கு இப்படி எல்லாம் பேரு போட்டா என்னங்க புரியும்?  அதான் முதல்ல படம் பார்க்க ஒரு 10, 15 பேரு இருந்தாலே பெரிய விஷயம் மாதிரி கூட்டமே இல்லாம இருந்துச்சு. ஆனா இப்ப பிக்கப் ஆயிருக்கும்னு வைச்சுக்கங்க......

நம்ம மக்கள் இன்னும் இந்த மாதிரி படத்துக்கு எல்லாம் மனதளவில் தயாராகவில்லைனுதாங்க சொல்லணும். இந்த மாதிரியான் ஒரு சூழ்நிலையிலும் இப்படி ஒரு படம் எடுக்கத் துணிந்த டைரக்டர் மிஷ்கின் அவர்களுக்கு சல்யூட் அடித்துப் பாராட்டலாம்.  அசாத்திய துணிச்சல், மன தைரியம்.

திரு மிஷ்கின் அவர்களுக்கு,

இத இதத்தான்யா நாங்க இவ்வளவு நாளும் எதிர்பார்த்தோம் அப்படினு சொல்ற மாதிரி ஒரு படம் கொடுத்துருக்கீங்க.  மிஷ்கின் அவர்களே எப்படிய்யா இப்படி ஒரு வினோதமான, வித்தியாசமான ஒரு பேரு சிந்திக்கத் தோன்றியது உங்களுக்கு? சபாஷ்.!


கதை சொன்ன விதம் மிக அழகு,  மட்டுமல்ல தமிழுக்குப் புதிது.  ஆரம்பமே நம்மை நிமிர வைக்கிறது. தொய்வில்லாத ஸ்க்ரீன் ப்ளே, அடுத்து என்ன என்றுத் தோன்றும் அளவு, மிக அற்புதம்.  முழு கதையும் இரவில்தான்.  ஓநாயும், ஆட்டுக்குட்டியும் ஓடிக் கொண்டே இருக்கின்றன. 

ஆட்டுக்குட்டி ஓநாயிடம் சிக்கிவிட்டதோ என்று நினைக்கும் தருவாயில், ஓநாய் ஆட்டுக்குட்டியை ஒன்றும் செய்யாதிருக்க, அந்த ஆட்டுக்குட்டியே ஓநாயைச் சிக்கவைக்க முயலும்போதும் ஓநாய் ஒன்றும் செய்யாது இருக்க, ஆச்சரியம். 

இது வழக்கமானது இல்லையே.  ஓநாய் எதற்காக ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற நினைத்து ஆட்டுக் குட்டியையும் சேர்த்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது? ஒரு வேளை, ஃப்ளாஷ் பாக்காக அந்தக் கதையில் ஹீரோயின், ஹீரோவுடன் ஒரு பாட்டு என்று கொண்டு வந்துருப்பீங்களோனு பயந்து போய் பார்த்தா, நல்ல வேளை அப்படி அதுவும் இல்லை.

ஃப்ளாஷ் பாக் என்பதே இல்லாமல் நேரான கதை அமைப்பு. எதற்காக இந்த ஓட்டம் என்பதற்கானக் கதையை அந்தச் சிறு பெண் கதை சொல்லக் கேட்கும் போது ஓநாய்,  குழந்தைக்குச் சொல்வது போல பார்வையாளர்களுக்குப் படத்தின் கதையை சொல்லும் இடம் அருமை.

கதை, சின்னக் குழந்தைக்குச் சொல்லும் கதைதான் என்றாலும் அதில் இப்படி பெரியவர்க்குப் பொருந்தும் வகையில் ஒரு கதையாக, படமாக எடுத்த விதம் வித்தியாசம்தான்.

படத்தில் பல காட்சிகளின் அமைப்பு இன்றைய வாழ்வின் யதார்த்தத்தைப் பிளந்து வைக்கிறது.  அது நக்கல் நகைச்சுவையாகவும் வெளிப்படுகிறது.  வசனங்கள் மிகக் குறைவாக, அளவாக இருப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது. 

இசைஞானி இளயராஜாவின் BGM பற்றிச் சொல்லி மாள்வதற்கில்லை.  அப்படிப்பட்ட உயிர்த் துடிப்பு இந்தப் படத்திற்கு.  அதுவும் வெகு நாட்களுக்குப் பிறகு.

இந்தக் காட்டில், ஓநாய், ஆட்டுக்குட்டி, செந்நாய், புலி எல்லாமே சிறந்த, இயல்பான நடிப்பு.  சண்டைக் காட்சிகள் எல்லாமே சாதாரணமாக நடப்பது போல இருந்தாலும் இறுதியில் வரும் அந்தச் சண்டைக் காட்சி மட்டும் கொஞ்சம் மிகையாக உள்ளது. 

லைட்டிங்க் சூப்பர்.  அதுவும் இரவில் நடக்கும் கதை என்பதால் பல காட்சிகள் தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன.

அதுவும் இறுதியில், பங்களித்தவர்களின் பெயர்கள் வருகிறது பாருங்கள் அதுவும் புதுமை ஏதோ காட்டில் மிருகங்கள் நடித்தது போல, கரடி, செந்நாய், ஓநாய், ஆட்டுக்குட்டி, நீர்யானை, இலைகள் நாம், என்று வித்தியாசமான அறிமுகம். 

 நீங்கள் இதுவரை எடுத்த படங்களில் முகமூடியைத் தவிர மற்ற படங்கள் நன்றாக இருந்தாலும், இந்தப் படம் உங்களை உலகத் திரையரங்குகளுக்கு உயர்த்தி உள்ளது.  உங்களை நோக்கித் திரும்பவும் வாய்ப்புள்ளது.  உலகப் படங்களுக்கு இணையாகவும் நிறுத்தி உள்ளது எனலாம்.

 எனக்குத் தெரிந்தவரை, பெண்களை அதிகம் திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை.  ஒருவேளை இந்தப் படத்தில் பெண் காரெக்டர்கள் அதிகம் இல்லாததால் அவர்களை இப்படம் அதிகம் ஈர்க்கவில்லையோ என்றும் தோன்றுகிறது.  இல்லை, பெண்களுக்கு இந்தப் படம் அவ்வளவாக ரசிக்கவில்லையோ?  ஆனால், இந்தப் பதிவை எழுதும் நான் ஒரு பெண்தான்.

எதுவானாலும், இப்படம் தமிழ் திரையுலகிற்கு ஒரு மைல் கல்.  நாங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு, காதைப் பஞ்சினால் அடைத்துக் கொண்டு, சில சமயம் படம் தொடங்கும் போதே கொட்டாவி விட்டுத் தூங்கி, கொடுத்த காசிற்காக உட்கார்ந்து, மூளையைக் கசக்கி கதை என்ன என்று யோசித்து அல்லல் பட்டது போதும். 

எனவே, மிஷ்கின் அவர்களே, தமிழ்த் திரையுலகின் பழைய பஞ்சாங்கப் பாதையில் செல்லாமல் எங்களைப் போன்ற ரசிகர்களுக்காகவாவது இது போன்ற வித்தியாசமான. நேர்த்தியுடன் நல்லத் திரைப்படங்களைத் தருமாறு, நல்ல திரைப்படம் காண விரும்பும் ரசிகர்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

 

புதன், 30 அக்டோபர், 2013

கல்லெறிபவர்களே பாவம் செய்யாதீர்கள்


29-10-2013 அன்று, திரு 18 பேர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது, கேரள முதல்வர் உம்மன் சாண்டியை கண்ணூரில், கல்லெறிந்து காயப்படுத்திய சம்பவத்திற்காக.  கேரளத்திலுள்ள எல்லா அரசியல் தலைவர்களும், சமூகத்தலைவர்களும், கல்லெறிந்து காயப்படுத்தியதை எதிர்த்து, கண்டனம் தெரிவித்திருந்தனர்.  வரலாற்றில் மிகவும் மனதை வருத்தும் ஒரு சம்பவமாக மாறிவிட்ட ஒன்று இது.  இதற்கு முன் இரண்டு முதல்வர்களுக்கு கேரளாவில் இது போல் நிகழ்ந்திருக்கிறது.  இப்போது மூன்றாம் முதல்வர்.  கேரளாவில் அரசியல் காரணமாக, குத்து, வெட்டு, வெடிகுண்டுவீச்சு போன்றவை தாராளமாக அடிக்கடி நிகழும் கண்ணூர் மாவட்ட்த்தில்தான் இதுவும் நிகழ்ந்திருக்கிறது.  மதம், இனம், அரசியல், இவை எல்லாம் மனதில் எதிர்சாரியில் இருப்பவர்களிடம், ஆத்திரம், விரோதம் வெறுப்பு இவற்றை வளரச் செய்யும்தான்.  என்றாலும், நாம் இந்தியர்கள் என்றும், மத, இன, அரசியல்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் Secular India வில் வசிப்பவர்கள் என்பதையும் மறக்கக் கூடாது.  இந்த எண்ணம் அதிகமாகத் தங்கள் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தாத பெரும்பான்மையான இந்தியர்களிடம் இருப்பதால்தான் இது போன்ற ப்ரச்சினைகள் எப்போதேனும் திடீரென எதிர்பாராமல் உருவானாலும், மற்ற அனைவருடைய சமயோசிதமான தலையிடல் மூலம் மோசமான நிலைமைக்கு இழுத்துச் செல்லப்படாமல் appaஅப்பிரச்சினையோடு முடிகிறது.

முகத்தில் இரத்தக் கறையுடன் தனக்கு இது போன்று நிகழ்ந்ததற்காக வன்முறை கூடாது என்று சொல்லும் முதல்வரைக் கண்டதும், இடது சாரி அரசு கேரளாவை ஆள வேண்டும் என்று எப்போதும் விரும்பும் எனக்கே அணிகளின் இந்த அறிவின்மையை எண்ணி அடக்க முடியாத ஆத்திரம் வந்தது. 
திடீரென, ஏறத்தாழ 40 வருடங்களுக்கு முன்பு, நான் பிறந்து வளர்ந்த, தேனியருகே உள்ள ராசிங்கபுரம் எனும் கிராமத்தில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

அது ஒரு தேர்தல் நேரம். புரட்சித்தலைவர் தலைமையில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தீவிரமான போட்டி.  கிராமத்திலிருந்து அனைத்து தி.மு.க. ஆதரவாளர்களும் (அட்வகேட் முத்துமனோகரன், எம்.ஜி.ஆர். சைக்கிள் கடை முன்பு நடத்தி வந்த ஒரு நபர், பெயர் ஞாபகம் இல்லை.  இப்படி விரலில் எண்ணக் கூடிய சில ஆட்கள் மட்டும் தி.மு.க.வில்) ஏறத்தாழ 90% பேர் அ.தி.மு.க வில்.  ஒன்றுக்கு, இரண்டு அ.தி.மு.க கிளைகள் ராசிங்கபுரத்தில். ஒன்று இளைஞர்களுக்கும், நடுத்தர வயதினர்களுக்கும். ம்ற்றொன்று 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்.  என் அப்பா கிளைக்காக ஒரு ரூமே கொடுத்துவிட்டார்.  மேலும் திரு. சுருளிமுத்து என்பவருடன் சேர்ந்து தினமலர் பத்திரிகை ஏஜன்சி ஒன்று எடுத்துவிட்டார். அதனால் சிந்துபாத்திற்கும், லைலாவிற்கும் என்ன நடந்தது என்று தினத்தந்தி கிடைக்காமல் சிறுவர்களாகிய நாங்கள் தவித்த தவிப்பு எங்களுக்குத்தான் தெரியும்.
ஒரு மாலை நேரம். அட்வகேட் முத்துமனோகரன் வீட்டிற்கு முன்னால் தோரணம், கொடிகள், ஒலிபெருக்கியில் பாடல்கள்.  ப்ள்ளியிலிருந்து திரும்பிய நாங்கள் அங்கு கூடினோம். 
அன்று “கலைஞர் எங்கள் கிராமத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார் என்று சொன்னார்கள். பெரும் தலைவர்கள் யாரும் அப்படி அந்த நாட்களில் எங்கள் கிராமத்திற்கு வந்ததில்லை. அதன் முன் எப்போதோ ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் ஒரு மாலையில் வந்தது போல் எனக்கு ஞாபகம்.

இரவு 7 மணிக்கு, மேல்பாகம் திறக்கக் கூடிய வேன் நடுவில் வர அதன் முன்னும், பின்னும் கார்களின் அணிவகுப்பு. வேனில் கலைஞருக்கே உரித்தான அந்த கறுப்புக் கண்ணாடியுடன், வணங்கியபடி எழுந்த அவர் தன் சுற்றிலும் கையை வீசினார்.  அப்போது கவனித்தேன். சுற்றிலும் நல்ல கூட்டம்.  அப்போதுதான் புரட்சித் தலைவரின் ஆதரவாளர்கள், தி.மு.க. ஆதரவாளர்கள் கூட எதிர்பார்க்காத அந்தச் சம்பவம் நடந்ததது. கலைஞர் பேச ஆரம்பித்தார். அவருக்கு இடப்பக்கம், கொஞ்ச நாட்களாக அடைத்திருந்த ஹோட்டல். முன்புபுறம் பூட்டியிருந்தாலும், பின்புறமாக உள்ளே நுழைய முடியும்.  அங்கிருந்து திடீரென ஒரு கல், பேசிக்  கொண்டிருந்த கலஞரின் மேல் வந்து விழுந்தது. தனது இடது கையை உயர்த்தி, பெரும் பதட்டத்துடன் திரும்பி, திடீரெனப் பேச்சை நிறுத்திய போதுதான் கூடி இருந்தவர்களுக்கு, அவரை யாரோ, அடைந்து கிடந்த ஹோட்டலிருந்து கல் எறிந்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.  கலைஞர் “அந்தப் பகுதியில் இருந்துதான் கல் வந்தது என்றார். அங்கிருந்த போலிஸ்காரர்கள் கல்லெறிந்தவர்களை ஓடிச் சென்றுப் பிடிக்கச் செல்லாததற்கு அவர்களைக் கண்டிக்கவும் செய்தார். பேச்சை முடித்து உடனே அங்கிருந்து கிளம்பியும் விட்டார்.  புரட்சித் தலைவரின் ரசிகனான எனக்கும் கூட அந்த நிகழ்ச்சி  மிகுந்த வருத்தத்தைத் தந்தது.  கலைஞர் வருவதற்கு முன்னர் சிலர் டார்ச் அடித்துக் கொண்டு அந்த ஹோட்டலின் பின்முறம் சென்றதை நானும் கவனித்திருந்தேன்.  அவர்களுக்கு கலஞரிடம் இவ்வளவு விரோதம் வரக் காரணம் செய்தித் தாள்களிலும், மேடைகளிலும் கலஞருக்கு எதிராக நடத்தப்பட்ட ப்ரச்சாரங்களாகத்தான் இருக்க முடியும். அரசியல் தலைவர்கள் இளைஞர்களுக்கு இது போல் ஆவேசம் உண்டாக்கக் கூடிய ப்ரச்சாரங்களைத் தவிர்த்தால் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்வதையும் தடுக்க முடியும்.  எப்படியோ அந்த சம்பவம் நடந்த பின்பு நான் கலஞரை விரும்பத் தொடங்கினேன்.  அவரது தமிழ், என்னை அவர் பால் கூடுதலாக ஈர்த்தது எனலாம்.  புரட்சித்தலைவரது உடல் ந்லிவும், மரணமும் என்னை வருத்தினாலும் கலஞருக்கு நாடாளும் வாய்ப்பும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரப்போகிறது என்று அப்போது எண்ணிய போது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. 

கலைஞர் கன்னியாகுமரியில் வள்ளுவருக்குச் சிலை வைத்த போது என் கண்களில் நீர் நிறைந்தது. அப்படிப்பட்ட இனிய தமிழனுக்கு என் கிராமத்தில் நிகழ்ந்த அந்த வேதனைக்குறிய சம்பவம் அவர் மனதில் முள்ளாக நிலை நிற்குமே என்பதை நினைக்கும்போது இப்போதும் எனக்கு மனதை வலிக்கிறது.  அது போலத்தான் திரு உம்மன் சாண்டிக்கும் கண்ணூரில் நிகழ்ந்த சம்பவமும்.  எந்தக் கட்சியினர் ஆனாலும் இது போன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க எல்லா அரசியல் தலைவர்களும் தங்கள் அணிகளுக்கு வேண்டிய அறிவுரைகளைக் கொடுக்க வேண்டும்.   பெற்றோர்களை அடிக்கும் பிள்ளைகளையும், ஆசிரியர்களை அடிக்கும் (கொல்லும்) மாணவர்களையும், நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும் பார்க்கும் போதும்,  அவர்களைப் பற்றிக் கேட்கும் போதும் உண்டாகின்ற வலியும், நடுக்கமும், இந்தச் சம்பவங்களைப் பற்றி கேட்கும்போதும், பார்க்கும் போதும் நம் மனதிற்கு  உண்டாகிறது.

செவ்வாய், 29 அக்டோபர், 2013


பட்டாஸு வாங்க நீ(ங்க) ஓட, சத்தம் கேட்டு நாய் ஓட, எல்லோரும் கொண்டாடும் தீபாவளிஇதோ, தீபாவளி நெருங்கியாச்சு. நம்ம தமிழ் தொலைக்காட்சி சானல்கள் தயாராயாச்சு.  தீபாவளி சிறப்பு நிகழ்சிகள் அப்படினு “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்குவந்து சில மாதங்களே ஆன..(பெட்டியை விட்டு வெளியே கூட வராத, இல்ல வெளிய வந்தாலும் ஓடாத, இதையும் கூட சேர்த்துக்கலாமேங்க) புத்தம் புது திரைப்படம்னு ஏதோ யாருக்கும் காதுல கேக்காம போயிடக் கூடாதுனு செம டெசிபல்ல அரைகூவ ஆரம்பிச்சாச்சு. வெள்ளித்திரைல வந்து கொஞ்சமே நாட்களும்/மாசங்களும் ஆன, ரேஸில முந்திக்கிட்ட, முந்திக்கிட்டு இருக்கற நடிகருங்க, ஒரே ஒரு படத்துல முகம் காட்டின தமிழ் தெரியாத நடிகைங்க, எல்லோரும் கையில மத்தாப்பு, பட்டாஸுனு பிடிச்சுகிட்டு டி.வி.ல வந்து “தமில் மக்கல்கு திவாலி நல்வால்துகல்/வாத்துகல் அப்படினு கொஞ்சு தமிழில கொஞ்சிச் சொல்ல, அவங்க எல்லோரும் சின்ன வயசுல எப்படி பட்டாசு வெடிச்சாங்கனு, அந்த அனுபவத்த எல்லாம் சொல்ல, தமிழ் நாட்டு இளைஞர்களும், இளைஞிகளும் ஏக்கத்தோட, ஏதோ காணக்கிடைக்காத தெய்வம், பாக்கியம் வீட்குக்குள்ளயே வருதுனு ஜொள்ளொழுகப் பார்த்து பரவசமடைய ஒவ்வொரு பண்டிகைக்கும், ஒவ்வொரு வருஷமும் இதுதான் வழக்கம். உங்காத்து வழக்கமா?  எங்காத்து வழக்கமா?


வடக்கில் ராமரும், லக்ஷ்மியும், தீபாவளிக்கு ரெடியாகி விட்டார்களா என்று தெரியவில்லை.  தென்னகத்தில் கிருஷ்ண பகவான் ரெடியாகிவிட்டார், வடக்கே ராமரின் 14 வருட வன வாழ்க்கை முடிந்து வருவதையும், இலங்கை வெற்றியையும் கொண்டாட அவரை வரவேற்கும் பண்டிகையாகவும், வீடு முழுவதும் விளக்கு ஏற்றி வைத்து, புதுவருட தொடக்கமாக லஷ்மி பூஜையும், கொண்டாடுவது வழக்கம்.  பார்த்து, நம்மூர்ல பகல் கொள்ளைக்காரங்க நிறைய இருக்காங்க.  அதனால, லக்ஷ்மியிடம், ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீனு, தீபாவளி ஆஃப்ராக, கொட்டும் பணத்தை பாதுகாக்க செக்யூரிட்டி கார்டயும் அனுப்பச் சொல்லி வேண்டலாம். இது இலவச ஆலோசனைதான். No consultation fee charged. அதுக்கப்புறம், ராமர் வெற்றியை தீபாவளியாக கொண்டாடுறது இன்னும் சர்ச்சையாகவேதான் இருக்கு. தசாவதாரத்தில், (கமல் ஸார், இது உங்க படம் இல்லைங்க. உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விவகாரம். உங்க அவதாரங்களுக்கும் விமர்சனம் வந்துச்சு, அது வேற விஷயம்.) ராமாவதாரத்துக்கு அப்புறம்தானே கிருஷ்ணாவதாரம்? கிருஷ்ணர்தானே நரகாசுரனைக் கொன்னாரு?  அப்படி இருக்கும் போது அதுக்கு முன்னாடியே பிறந்த ராமர் எப்படி தீபாவளி கொண்டாடி இருப்பார்?  நியாயமான கேள்வி. வைணவ சமய சொற்பொழிவு ஆற்றுபவர்கள், ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதற்கு ஏதாவது ஒரு சானலில் விளக்கம் கொடுத்து சந்தேகத்தைத் தீர்த்து நம்ம தமிழ் மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தலாம்.  தனுஷ்கோடி கோதண்டராமர் அருள்வாராக.


தென்னகத்துல, கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்றதைக் கொண்டாட தீபாவளி.  ஆனா இதுல ஒரு சின்ன வழக்கு இருக்கு.  கொன்றது கிருஷ்ணரா, இல்ல அவர் மனைவி சத்யபாமாவானு.  இன்னும் அந்த வழக்கு முடிவுக்கு வரல. அதனால, நம்ம தமிழ் சானல்களுக்கு ஒரு சஜஷன். ராமர் விவகாரத்தையும், கிருஷ்ணர் விவகாரத்தையும் எடுத்துகிட்டு பட்டிமன்றம் நடத்தலாம்.  சாட்சிக்கு அந்த குருவாயூர் கிருஷ்ணன கூப்பிட்டுக்கலாம். சாலமன் பாப்பையா ஐயாவையோ, லியோனி ஐயாவையோ ஏன் நம்ம ராமரையே கூட நடுவரா போட்டுக்கலாம்.  ராமர் சத்யசீலர், எந்த புறமும் சாயாதவர்.  தன் மனைவியையே கற்பு, சத்திய, சோதனைக்கு உட்படுத்தியவர். அப்புறம் எவனோ ஒருத்தன் சொன்னான்னு, மனைவிய வீட்டை விட்டு வெளியே அனுப்பியவர்.  ஸோ அவர் ஒரு நல்ல நடுநிலையாளர்.  அப்புறம், ராமரும், கிருஷ்ணரும் எப்படி தீபாவளி கொண்டாடினாங்கனு, அதுவும் தலை தீபாவளி கொண்டாடினாங்கனு ஒரு ஷோ, நேரடி நிகழ்சி பண்ணலாம். பகவான் ராமரும், கிருஷ்ணரும் தமிழ் நாட்டு மக்களுக்கு சின்னத்திரை மூலமாக காட்சியளித்து, அவர்களோடு தீபாவளி கொண்டாடி அருள் பாலிக்கலாம்.  ராமர் கிட்டயும், கிருஷ்ணர்கிட்டயும் அப்பாயின்மென்ட் வாங்க மறந்துடாதீங்க.  அவங்க ரொம்ப ‘பிச்சி....

ஆரம்பிச்சுட்டாங்கய்யா...ஆரம்பிச்சுட்டாய்ங்க.....எல்லா சானலும் போட்டி போட்டுகிட்டு, ‘தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்னு ஒவ்வொரு ½ மணி நேரத்துக்கும் கூவ ஆரம்பிச்சுட்டாங்க.  தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள டைரெக்டர், ஹீரோ, ஹீரோயின், ம்யூசிக் டைரெக்டர் இப்படி எல்லாரையும் கூப்பிட்டு திரைல அலசுவாங்க.  நிறைய கதை கேக்கலாம்.  தீபாவளி அன்னிக்கு ஏதோ நம்ம சாதி, சனங்கள, இப்படி வருஷத்துல எப்பவாவது தானே பாக்கறோம்னு பாக்க போனா, சின்னஞ் சிறுசுகள்ல இருந்து, பெரிசு வரை எல்லாம் டி.வி.லயே தலைய விட்டுருப்பாங்க. சரி நடுல விளம்பரம் வருமே அப்பவாது தலைய வெளில எடுத்துப் பேசுவாங்கனு பார்த்தா, வேற சானல் மாத்தி, இப்படி மாத்தி, மாத்தி... நம்மளும் அவங்க கூட உக்காந்து டி.வி.ய பாத்துட்டு கடைசில போய்ட்டு வரோம்னு கிளம்பற டையத்துலதான், நம்ம மர மண்டைக்கு உறைக்கும். நம்ம வீட்டுலயும்தான் டி.வி. இருக்குது, பெட்ரோல் விக்கிற விலைல இம்புட்டு தூரம் வந்து டி. வி. பாக்கறதுக்கு, இதுக்கு நம்ம வீட்டுலயே உக்காந்து பாக்கலாம்லனு தோணும்....என்ன சொல்றீங்க?


சரி, அது ஒரு பக்கம்.. இந்தப் பட்டாஸு வெடிக்கறது இருக்கு பாருங்க.  ஊதுபத்திய கைல வைச்சுக்கிட்டு பசங்க அலையும் போது, ரோட்டுல நடக்கக் கூட முடியாம, எந்தப் புத்துல என்ன பாம்ப் இருக்கோனு பயந்துகிட்டே நடக்கணும்.  டூவீலர்ல போனாலும் பயம்தான்....நாமதான் தொடர் குண்டுவெடிப்புக்கு பழகின ஆளுங்கதானே..இதென்ன மாட்டரு...சப்ப மாட்டரு....இந்த பாம்ப் எல்லாம் ஜுஜுபி  அப்படினு தோணுதோ அதுவும் சரிதான்.  எத்தனை காது ரப்சர் ஆன கேஸு வருதோ... இந்தப் பசங்க கையில வைச்சுக்கிட்டே பட்டாஸத் தூக்கி ஏதோ பந்து எறியரா மாதிரி இல்லன பம்பரம் எறியரா மாதிரி ஸ்டைலா போடுவாங்க பாருங்க எங்கேயாவது நம்ம மேல விழுந்துருமோனு வேற பயமா இருக்கும்.  முன்பு, நம்ம இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பற ராகெட் எல்லாம் கடல்ல விழுந்தா மாதிரி, எங்க வீட்டு பால்கனில, மொட்டைமாடில நிறைய ராக்கெட் வந்து விழும் பாருங்க.. சில சமயம் அங்க காயற துணில கூட பட்டு எரிஞ்சு ஓட்டை விழுந்துடும்னா பார்த்துக்கங்க. அவங்க கிட்ட போயி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட சட்டத்துல ஏதாவது ஓட்டை இருக்கானு பாத்து வைச்சுக்கணும். 


வீட்டுல வளரும் செல்லப் பிராணிங்க, அதுவும் நாய்கள் இருக்கு பாருங்க வெடிச் சத்தத்துல பயந்து படற பாடு ரொம்ப பரிதாபம். பட்டாஸு சத்தம் கேட்டா போதும் எங்க வீட்டுல இருக்கற டைகரும், கீசரும், என் நண்பர் வீட்டுல இருக்கற கண்ணழகியும், ப்ரௌனியும் ரொம்ப அங்கயும், இங்கயும் அலைஞ்சு, தண்ணி, தண்ணியா குடிச்சு, சாப்பிடாம அலஞ்சு படற பாடு.... ‘நாய் மாதிரி அலையுது பாருனு சொல்லுவமே அது இதப் பாத்துதானோ?! இந்த பட்டாஸு சத்தம் நமக்கே டெஸிபல் அதிகம்.  அவங்களுக்கு கேக்கவே வேணாம். பட்டாஸோடு தீபாவளி இலவசமாக ரெண்டு காதுக்கு ரெண்டு கவசமும், மூக்குக்கு ஒரு கவசமும் (ஸ்வாசிக்க சிறு ஓட்டை மட்டும்) கொடுத்தா பட்டாஸு கடைக்காரர்களுக்கு புண்ணியம்.  மோக்ஷம் உறுதினு பகவான் கிருஷ்ண பரமாத்மா சொல்லி இருப்பதாகக் கேள்வி.

 பிராணிகளைக் காப்போம், பூமியைக் காப்போம்,  சுறுப்புறச்சூழல் அப்படினு எல்லாம் மேடை, மேடையா வாய் கிழிய பேசுவது, நாளிதழ், மாத இதழ், வலைத்தளம், ஏன் T-ஷர்ட் கூட விட்டு வைக்காம எல்லாத்துலயும் ஒரு பேனா விட்டு வைக்காம எழுதறது இல்லனா நைட்டெல்லாம் முழிச்சிருந்து கம்ப்யூட்டர்ல அடிக்கறது, ஸ்கூல்ல எல்லாம் டான்ஸும், ட்ராமாவும் போடறது எல்லாமே நாம ப்பளிசிட்டிக்கும், போட்டில ஜெயிக்கறதுக்கும்தானே செய்யறோம்? எல்லாமே ஏட்டுச் சுரைக்காய்தான். கேடுகெட்ட ஜென்மங்கள். திருந்தப் போவதில்லை.

தீபாவளி அன்னிக்கு ‘தலபடம் “ஆரம்பம், கார்த்தியோட படம் “ஆல் இன் ஆல் அழகு ராஜா,


டைரக்டர் செல்வராகவனின் “இரண்டாம் உலகம்,

விஷாலின் “பாண்டியநாடுரிலீஸ்.
  ஸோ ரசிகர்கள் எல்லாரும் இப்பவே முதல் ஷோவுக்கு புக் பண்ணிருப்பாங்க....இந்த சினிமாக்களூம், டி.வி. நிகழ்சிகளும், ஏன் மழையும் கூட எல்லாரையும் பிசியா வைச்சிடுச்சுனா பட்டாஸு புஸ்ஸுல!!? ஆனா ‘தல படம் ‘ஆரம்பம் ஆரம்பத்துக்கு பட்டாஸ் இல்லாம ரசிகர்கள் ஆரம்பிக்க மாட்டாங்களோ?!!

பி.கு - (இப்படி நடந்தா நான் குருவாயூருக்கு வந்து துலாபாரம் கொடுக்கறதா வேண்டியிருக்கேன். இல்லனா பங்களூர் இஸ்கான் கோவில்ல “பிட்ஸா ப்ரசாதம் தருவதாக வேண்டியிருக்கேன்.)

கொசுறு செய்தி - சென்னையில் எல்லா ஜவுளிக் கடைகளும், அதுவும், தி,நகரில் ரங்கநாதன் தெருவும், பாண்டிபஜாரும், பனகல்பார்க் ஏரியாவும் மக்கள் பிதுக்கம். அல்லோகலம். அபிமன்யு சக்கரவ்யூகம்.  உள்ளே போனால் வெளியேவரமுடியாது. பெண்களுக்கு கொண்டாட்டம்.  ஆண்கள் பாவம், பரிதாபம். உள்ளே போன மனைவியையும், பெண்ணையும் காணவில்லையாம், என் நண்பரின் SMS. தீபாவளிக்குள் திரும்பி வந்து விடுவார்கள் என் பதில் SMS.

திங்கள், 28 அக்டோபர், 2013

தொலைபேசியா?!!  தொல்லைபேசியா?!!!

(என் நண்பரின் அனுபவம்.  அதை அவர் சொல்ல அதை இங்கே பதிவு செய்திருக்கிறேன்)

நான் என் வீட்டில்  சமையல் செய்து  கொண்டிருந்த. போது ஃபோன் ரிங்க். எடுத்து காதுக்கு ஒற்றினேன்.

ஹலோ!

ஹலோ! அண்ணி எங்க இருக்கீங்க?

நீங்க கூப்பிடிருக்கிறது லாண்ட் லைன்..... எங்க இருக்கீங்கனு கேட்டா என்னங்க அர்த்தம்?...நான்.....வீட்டுலதான் இருக்கேன்.....
(நான் நீங்க?........என்று கேட்கும் முன்னமேயே....... கூப்பிட்டவர்.......)

எப்படி இருக்கீங்க அண்ணி?  எப்ப வந்தீங்க (கேள்வி எல்லாம் சரிதான்.  நான் பாண்டிச்சேரிக்கும், சென்னைக்குமாக அடிக்கடி பிரயாணம் செய்து கொண்டிருந்த நேரம்... ஆனா இது யாரா இருக்கும்...நேரடியா என்னை அண்ணினு வேற.....ஒருவேளை மாமியார், மாமனார் சைட் ஆளா இருக்குமோ....)

நல்லாருக்கேன்.....போன மாசம் வந்தேன்....(நான் என் தலைமுடிய பிச்சுகிட்டுருந்தேன் யார் இதுனு...நான் கேக்கறதுக்குள்ளயும் அவரு என்ன பேச விட்டாத்தானே) 

போனமாசாமா?  அப்ப ஒரு மாசமா நீங்க இங்கதான் இருக்கீங்க....ஆனா எங்க வீட்டுக்கு ஒரு தடவை கூட வரவே இல்ல...ஏன் அண்ணி ஏன்?

யார் பேசுறீங்கனு தெரிஞ்சுக்கலாமா? (ஹப்பா கேட்டுட்டேன் அந்தக் கேள்விய)

அண்ணி!!!!  என்ன கொடுமை இது?  என்ன தெரில?  என் வாய்ஸ் தெரில? இது ரொம்ப மோசம் அண்ணி ..(எனக்கு மெய்யாலுமே ரொம்பக் குழப்பமா இருந்துச்சு....பதிலே சொல்லாம விளையாடுறாரு...)
???????????
 அண்ணி நீங்க ரொம்ப மோசம்!  நீங்க சென்னைய விட்டு போகும்போது எங்க யார்கிட்டயும் சொல்லவே இல்ல.. (ரொம்ப சரியாதான் இவரு பேசறாரு...நான் யார்கிட்டயும் சொல்லலதான்....சொல்ல முடியாம ஒரு நிலைமை அந்த நேரம்...பாண்டிச்சேரிக்குத் தற்காலிகமாக என் ஜாகை மாற்றியது என் பையனுக்கு காலேஜ் அட்மிஷன் கிடைச்சது பற்றி ரொம்ப நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும்தான் சொன்னேன்.)

ஓ! ரொம்ப ஸாரி....ம்ம்ம்ம்ம்......(மனுஷன் பேசவிட்டாத்தானே.....அவரே பேசிக்கிட்டிருந்தாரு.....)

அண்ணி நீங்க ஒரு பார்ட்டி கூட தரல எங்களுக்கு....ரொம்ப வருத்தம்....எவ்வளவு நாள் ஆச்சுனு தெரியுமா உங்க சாக்கோ ஸ்வீட் சாப்ட்டு........நீங்க இப்பவும் செய்றீங்களா அண்ணி? என்ன டேஸ்ட்!!........ மறக்கவே முடியாது.....(இதுவும் கரெக்ட்டுதான்............நான் செய்து எல்லாருக்கும் கொடுக்கறதுண்டு...என்னடா ரொம்ப தெரிஞ்சவரு போல.....)
அண்ணி அந்த ஸ்வீட்ஸ் செஞ்சு கொடுத்து விடுங்க.........ஓகேயா?......அண்ணன் எப்படி இருக்காரு?  அண்ணனும், நீங்களும் வீட்டுக்கு வாங்க....நாங்க எல்லாரும் உங்கள ரொம்ப எதிர் பார்க்கறோம்........அம்மா, அப்பா எப்படி இருக்காங்க?...(எல்லாமே ரொம்ப பொருத்தமா இருக்குதே.......ஆனா ஆளு செம வேகம்....எனக்கு பல கேள்வி புரிஞ்சுக்க கூட முடில.....அவரே கேள்வி கேட்டு....அவரே பதிலும் சொல்லிக்கிட்டாரு..)
அண்ணி இப்ப டூர் எல்லாம் போறதே இல்லையா?  பிஸி இல்லையா?  ஆமா நீங்க தான் இப்ப சென்னைல இல்லைல........ஆமா...... நீங்க சென்னைக்கு ட்ரான்ஸ்ஃப்ர் ட்ரை பண்ணலையா அண்ணி?  ஏன் அண்ணி? ப்ளீஸ் அண்ணி சென்னைக்கு வந்துருங்களேன்.....ம்ம்ம் அண்ணா இல்லீங்களா?  இல்லைனா ஓகே...நான் அவருக்கு ஒரு மெயில் கொடுத்துருக்கேன்.... அவரு வந்த உடனே பார்த்து பதில் கொடுக்க சொல்லுங்க...இல்லனா என்ன கூப்பிடச் சொல்லுங்க அண்ணி.... ரொம்ப அர்ஜென்ட்  அண்ணி...(அவரு பாட்டுக்கு பேசிட்டே போனாரு....)

ஹப்பா....ஒரு வழியா சஸ்பென்ஸ் உடைஞ்சுச்சு..... யாருன்னு தெரிஞ்சு போச்சுங்க.....என் கணவரின் தம்பிக்கு வந்த கால் ங்க....அவரு ஃப்ரெண்ட்.... .....(என் கணவரின் தம்பி பிஸினஸ் செய்கிறார். அவரின் மனைவி நல்ல வேலையில் இருக்கறவங்க.....வேற ஒரு ஊருக்கு மாத்தலாகி போயிருந்தாங்க.........அவங்களும் இந்த மாதிரி ஸ்வீட்ஸ் எங்கிட்ட கத்துக்கிட்டு செய்வாங்க.....ஸோ....)

ஓ! உங்களுக்கு ----------அவர்கிட்டயும் அவங்க வொய்ஃப் கிட்டயும் பேசணுமா....அவங்க.. இப்ப வீட்டுல இல்ல.....அவங்க வந்ததும்.......

ஆமா!.......ஓ! அப்ப நான் தெரியாம அந்த அண்ணினு நினைச்சுட்டேன்.....ஸாரி ......ஸோ அப்ப நீங்க  ----------அண்ணி?  எப்படி இருக்கீங்க?  எப்ப வந்தீங்க? 
(ஐயோ! கடவுளே! திரும்பவுமா?!!!  அந்த ‘கால் ஐ கட் பண்ண நினைச்சு....)
---------அவரு வீட்டுல இல்ல....ஸோ நீங்க அப்புறமா கூப்பிடுங்க......நானும் உங்க ஃபெரெண்டுகிட்ட சொல்லறேன்....தொலைபேசியை படுக்கவைத்து விட்டு...திரும்பினா....

ஏய்!--------என்ன ப்ண்ணிக்கிட்டு இருக்க ஃபோன கையில வைச்சுக்கிட்டு......அங்க பாரு ஏதோ அடுப்புல தீயற வாசன வருது....என் மாமியார் கோபத்துல கத்தினாங்க....நியாயமான கோபம்......ஓ! கடவுளே!!...அந்த உருளைகிழங்கு வறுவல்......ரஸம் கொதிச்சு வத்தி..பாத்திரம் அடிப்பிடிச்சு......


(கார்ட்லெஸ் வொர்க் பண்ணாததுனால.வந்த வினை....இருந்தாலும்........இப்ப எல்லாம்...லாண்ட் லைன்ல வர ‘கால்னாலும் சரி...மொபைல்னாலும் சரி ...இந்த மாதிரி கால்ஸ் எப்படி சமாளிக்கணும்னு கத்துக்கிட்டேன்...)