குறிக்காரி
அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. அந்தக் கிழமைக்கே உரிய
ஓய்வு எடுக்கும் மன நிலையில் நான் T.V. பார்த்துக் கொண்டிருந்தேன். கேட் திறக்கும் சத்தம். ‘குறி பார்க்கலையோ குறி’ என்றக் குரல்
கேட்டு வாணி
கதவைத் திறந்து வெளியே சென்றாள். குறி என்ற அந்த வார்த்தையைக் கேட்டதும் உடனே
எனக்கு நம் தமிழ் குறிஞ்சிப் பாடல்களிலும், குறிஞ்சித் திணையிலும் சொல்லப்பட்ட குறி சொல்பவர்களைப்
பற்றிய பாடல்கள் நினைவுக்கு வந்தது. ‘சிவப்புப் புடவை, கைகளில் பச்சை குத்திய அடையாளம், கண்களில் மை, நெற்றியில் பெரிய
குங்குமப் பொட்டு, இடுப்பில்
ஒரு கூடை, கையில்
மந்திரக் கோல்’ இப்படி ஒரு பிம்பம், படித்ததிலிருந்து
மனதில் பதிந்திருந்ததால் இந்தக் குறிக்காரியும் அப்படித்தான் இருப்பாளோ என்று அறிய நானும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். தோளில் ஒரு போர்வையை பத்தாக
மடக்கி இட்டு, கையில்
ஒரு அரை அடி நீளக் கம்பு, இடுப்பில்
ஒரு கூடை, நெற்றியில்
பெரிய வட்டக் குங்குமப் பொட்டு என்று கிட்டத்தட்ட என் மனதில் பதிந்திருந்த
அடையாளங்கள் இருந்தாலும் அவள் கையில் இருந்த கோல் மந்திரக் கோலாக இருக்க
வாய்ப்புண்டா என்றுத் தெரியவில்லை.
“மலையாள பகவதி என் மனசில இருந்து சொல்றதைச்
சொல்றேன் தாயி உன் கவலையெல்லாம் கேளு” என்றுத் தொடங்கினாள். என் மனதில் இலக்கியப் பாடல்களில் படித்தது நினைவுக்கு
வந்தது.
சிலப்பதிகாரத்தில் கூட சாலினி என்னும் குறிக்காரி தெய்வம் ஏறிக் குறி
சொல்லுவதாக வருகிறது.
வெறிபாடியகாமக்கண்ணியார் என்பவர் பாடியனவாகச் சங்கநூல்களில் (புறநானூறு, அகநானூறு, நற்றிணை) இருக்கும் இரண்டு/மூன்று பாடல்களும், குறிஞ்சித் திணை பற்றிப் பாடிய அகப்பொருள் பாடல்கள். தலைவி
மெலிவுக்குக் காரணம் என்னவென்று அவளது தாய் குறிசொல்லும் முதுவாய்ப் பெண்ணைக்
கேட்கிறாள். அவள் பிரம்பைத் தலைவியின் கையில் வைத்துப் பார்த்துக் குறி
சொல்கிறாள். குறிக்காரி நெடுவேளாகிய முருகனைப் பேணி விழாக் கொண்டாடினால் இவள்
ஏக்கம் தணியும் என்கிறாள்.
ஒளவையார் பாடிய பாடலில் கூட குறிக்காரியைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
ஒளவையார் பாடிய பாடலில் கூட குறிக்காரியைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்.....
(அகவல் மகள் என்பவள்
குறி சொல்லும் பெண். அகவல் மகள் குறி சொல்லத் தொடங்கும்போது முதலில் முருகனையும், அவன் குடிகொண்டுள்ள மலையையும் வாழ்த்திப்
பாடிவிட்டுதான் குறி சொல்லத் தொடங்குவாள்.)
ஒருவேளை இந்தக் குறிக்காரியும் வாணியின் தலையில்
பிரம்பை வைத்துக் குறி சொல்லுவாளோ என்று நினைத்தேன். எனக்குத் தெரிந்தவரை குறி
சொல்பவள், மேலே சொன்னபடி, தமிழ் கடவுள் முருகன் வழி வரும் குறத்தி இனத்தைச்
சேர்ந்தவள் மட்டுமல்ல, அவள் முருகனை வேண்டிவிட்டுதான் குறி சொல்வாள் என்றுதான்
இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இவளோ மலையாள பகவதி என்று சொல்கிறாளே? ஒருவேளை இவள், இப்போதெல்லாம் குறி
சொல்லும் வேடத்தில் வந்து பெண்களையும், வீட்டையும் ஏமாற்றும் கூட்டம் இருப்பதாகச்
சொல்கிறார்களே, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவளோ என்று கூட சந்தேகம் நிழலாடியது.
இவள் வேஷம் அதே போல இருந்தாலும், கண்டிப்பாக பண்டையக் காலத்துக் குறிக்காரி அல்ல.
இன்றையக் காலக் கட்டத்துக்கு உட்பட்டவளே. இன்றைக்கும், விஞ்ஞானம் வெகுவாக வளர்ந்து வரும் இந்த 21 ஆம்
நூற்றாண்டிலும் கூட, குறி சொல்வது, குறி கேட்பது போன்றவை நமது சமூகத்தில் பரவலாக உள்ளது என்பது
சற்று வியப்பாகத்தான் இருந்தது.
வாணி வேண்டாம் என்று சொன்னாலும், அவள் விடவில்லை. இரண்டே
நிமிடத்தில் வாணி, அவள்
வார்த்தைகளில் மயங்கிவிட்டாள். அவள் வாணியிடம், 'வீட்டு முகப்புத் திண்ணையில் உட்காரு தாயி’ என்றாள். வாணி
அனுசரணையுடன் அமர்ந்தாள். எனக்குக்
கோபம் வந்து எழுந்தேன். திடீரென
மனதில் ஒரு மின்னல். இவள் என்னதான் சொல்கிறாள் என்று கேட்கலாமே என்ற எண்ணம்
வந்தது. டி.வி.
சப்தத்தைக் குறைத்து காதைக் கூர்மையாக்கிக் கேட்டேன். அவள் சொன்னதில் 60%
எல்லோருக்கும் பொருந்துவது. 20% வீடு சுற்றுப்புறம் பார்த்துச் சொன்னதாக
இருந்தது. மீதி 20% சொன்னாளில்லை. வாணி அவள் சொல்வதைக் கேட்பாள் என்பது
உறுதியானதும் “தாயி இந்தக் கம்பளிக்குள்ள காணிக்கை வை தாயி. என் மனசு குளிர்ந்தாத்தான்
மகமாயி என் மனசில் உட்கார்ந்து சொல்லுவா தாயி என்றாள்” – நான் மெதுவாக
எழுந்து சென்றதும் இருவருக்கும் “இவர் ஏன் இப்ப வந்தார்”?
என்ற எண்ணம் முகத்தில் பிரதிபலித்தது.
நான், “என்னய கவனிக்காம ரெண்டு பேரும், கேக்கறதக்
கேட்டு சொல்லறத சொல்லிக்கங்க” என்றேன்.
என் வரவை எதிர்பாராததால் அவள்
முகம் வாட்டம் அடைந்தது என்றாலும் தைரியமாகப் பேசினாள்.
“சாமி, அப்படி எல்லாம் சொல்லாதீங்க சாமி. நான் அந்த மலையாள பகவதி சொல்றதத்தானே சாமி
சொல்றேனுங்க. பொய் இல்லைங்க சாமி. சாமி நீங்க வேணா அந்த மகமாயியையேக் கேளுங்க
சாமி”
நான், “மலையாள பகவதிகிட்டக் கேளு. உனக்கு இங்கருந்து
எத்தனை ரூபா கிடைக்கும்னு” என்றேன்.
பலதும் பேசிப் பேசி இறுதியாக “அம்மா சொல்றா
கொடுக்கணும்னு. ஆனா, அம்மாவுக்கும், சாமிக்கும் எங்கயுமே
ஜெயிக்கணும்கர மனசு இருக்கிறதால இங்கயும் ஜெயிகணும்ல. அதனால எனக்கு இங்கருந்து ஒண்ணும் கிடைக்காதுனு மகமாயி
சொல்றா சாமி”. என்றபடி வருத்தத்துடன் எழுந்தாள்.
‘உட்கார்’ என்றேன். 100 ரூபாய் எடுத்துக்
கொடுத்தேன். சிரித்துக் கொண்டே வாங்கிய அவள் தன் கண்களில் ஒற்றி இடுப்பிலிருந்த
சுருக்குப் பையில் வைத்த பின்,
“சாமி, ஆத்தா சொல்லிச்சு, எனக்கு 100 ரூபானுதான். ஆனா
எங்கயும் வித்தியாசமா இருக்கணும், எல்லாத்திலயும் ஜெயிக்கணும்னு நெனைக்கற உங்க
கிட்ட இப்பிடி சொன்னாத்தான் அந்த 100 ரூபா கெடைக்கும்னும் அந்த மகமாயி
சொன்னதாலதான் நான் அப்பிடி ஒண்ணும் கெடைக்காதுன்னேன். உடனே நீங்க என் வாக்க
பொய்யாக்க நெனைச்சு 20 ரூபா தர இருந்த நீங்க 100 ரூபாய எடுத்து நீட்டிட்டீங்க
இல்லியா சாமி? இந்த கொணத்தால உங்களுக்குச் சின்ன சின்ன நஷ்டங்களு எடையிடையே வந்தாலும்,
அது ஒங்களுக்கு ரொம்ப நல்லதத்தான் ஒங்க வாழ்க்கைல தந்திருக்கு சாமி. யார் மனசையும் நோகடிக்காத குணமுள்ளவங்க நீங்க ரெண்டுபேரும்
எல்லாருக்குமே உங்களால முடிஞ்ச ஒதவிய செய்வீங்க சாமி. அதனால ஒங்கள யாரும் வயிரெறிஞ்சுத் தூத்தாம,
எல்லாரும் மனசால வாழ்த்த மட்டும்தான் செஞ்சுருக்காங்க சாமி. அதனாலதான் ஒங்களுக்கு
மலபோல வார ப்ரச்செனங்க எல்லாம் பனி போல போயிடுதுங்க சாமி.
ஆறுபடைஅப்பனும், அவங்க அண்ணனும், அப்பனும்,
ஆத்தாளும் ஒங்களுக்கு தொணையுண்டு சாமி.
சாமிக்கும், அம்மாவுக்கும் எல்லா நல்லதும் கெடைக்கட்டும்”
என்று சொல்லி வாழ்த்தி விட்டுச் சென்றாள். வெற்றி யாருக்கு? அவளை அளந்த எனக்கா? என்னை அளந்த அவளுக்கா? உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?
வெற்றி யாருக்கு? அவளை அளந்த எனக்கா? என்னை அளந்த அவளுக்கா? உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?///
பதிலளிநீக்குகதையை படிச்சதும் ஒரே confusion:-)))
நான் பொதுவாக இது போன்ற மணிதர்கலை நம்புவது கிடையாது. ஆனா இந்த கதையோட முடிவு வித்யாசமா இருந்திச்சு
பாராட்டுக்கள் சார்.