சனி, 19 அக்டோபர், 2013



புதிய பாடகி சந்திரலேகா...



http://www.youtube.com/watch?v=6znBLiA_ui8

       சமையலறையில் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டே பாடிய "ராஜஹம்ஸமே" என்ற பாடலைத் தன் மைத்துனர் மொபைலில் எடுத்த போது, பாவம் சந்திரலேகா ஒரு போதும் நினைத்திருக்க வழியில்லை, இந்த சம்பவம் தன் வாழ்வில் ஒரு திருப்பு முனையாகும் என்று.


        கேரளா, பத்தம்திட்ட ஜில்லாவில், வடசேரிக்கரையில். பரங்கிமாமூட்டில் ரகுநாதனின் மனைவிதான் சந்திரலேகா.  தன் கணவனுடனும், மற்றும் மூன்று வயதாகிய தன் மகன் ஸ்ரீஹரியுடனும் ஒரு சிறிய,உட்புறம் தேய்க்கப்படாத சுவர்கள் உள்ள வீட்டின் சமையலறையிலிருந்து திரைப்படப் பாடல்களைத், தன் குழந்தைக்குச் சோறூட்டும்போது பாடுவதுண்டு.  B.A. படித்திருந்தாலும், தன் குழந்தையைக் கருதி வேலைக்குச் செல்லாமல், கணவனின் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் திறமைசாலி.  தன் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் ஒரு நல்ல பாடகி என்று எல்லாராலும் பாராட்டப்பட்டவள். 



        மைத்துனன் ரதீஷ் பல நேரங்களில் தன் அண்ணியின் நல்ல குரல்வளத்தோடு பாடும் பாடல்களைக் கேட்டு அதிசயப்பட்டிருக்கிறான். பாட வாய்ப்புத் தேடிப் போக முடியாதபடி பொருளாதார நிலை. டி.வி. சானல்களில் கூட பங்கெடுக்க, திருவனந்தபுரம், கொச்சி என்று போகமுடியாது என்பதால், அவற்றிற்கான வாய்ப்புகளை எல்லாம் வேதனையோடு தவறவிட்ட அண்ணியின் திறமையை வெளிப்படுத்த Youtube உதவியாக இருக்கும் என்று நினைத்து, குழந்தையை இடுப்பில் வைத்து சமைத்துக் கொண்டிருந்த அண்ணியைப் பாடச் சொல்ல, சந்திடலேகா மிக அருமையாக "ராஜஹம்சமே" என்ற சிதிராவின் பாடலைப் பாட, அதனைத் தன் மொபைல் ஃபோனில் முழுமையாக ரெக்கார்ட் செய்து தன் நண்பர்களிடம் காட்ட, அப் பாடலைக் கேட்ட ஒவ்வொருவரும் தந்த ஊக்கத்தினால், ரதீஷ் அந்தப் பாடலை youtube ல் upload செய்ய, பின்பு நடந்ததெல்லாம், வரலாற்றின் பாகமாக்கப் பட வேண்டியதற்கு சமமான நிகழ்சிகள். இலட்சக்கணக்கான நேயர்கள் Youtube ல் சந்திரலேகாவின் பாடலைக் கேட்டு, மகிழ்ந்ததோடுமட்டுமல்லாமல், அதைப் பகிர்ந்து கொள்ளவும் மறக்கவில்லை.  கடந்த வாரம் மிகுந்த பரபரப்பைச் சந்திரலேகா கேரளாவில் ஏற்படுத்தியேவிட்டார்.



        விளைவோ, அந்தப் பாடலைக் கேட்ட அனைவருக்கும் காதில் தேனாய்ப் பாய்ந்தது அவரது குரல்.  17.10.2013 அன்று கொச்சியிலுள்ள Freddy ஸ்டுடியோவில், பிரஷாந்த் இயக்கும் 'லவ் ஸ்டோரி' என்னும் திரைப்படத்திற்கானப் பாடலை, டேவிட் ஷோன் என்பவரின் இசையமைப்பில், பிரபல இயக்குனரான சிபிமலையிலின் முன்னிலையில் சந்திரலேகா பாடினார். உடனே 'ஈஸ்ட்கோஸ்ட்' விஜயன் தம் அடுத்த ஆல்பத்திற்காகச் சந்திரலேகாவை ஒப்பந்தமும் செய்தார்.  அப்போதே வேறு  ஒரு திரைப்படத்திற்கும் பாட வேண்டும் என அழைப்பும் வந்தது.  இதை நீங்கள் வாசிக்கும் போது சந்திரலேகாவுக்கு எத்தனையோ படங்களில் பாட வாய்ப்புக் கிடைத்திருக்கலாம்.  இது போல் குப்பையில் கிடக்கும் மாணிக்கங்களை அடையாளம் கண்டு அதற்குறிய இடத்தை அளிக்கப்படவேண்டிய சந்தர்பங்களுக்காக நாம் அனைவரும் இறைவனிடம் மன்றாடுவோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக