திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

பரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்


பரோல் - மம்முட்டி நடித்த புதிய மலையாளப்படம். துரதிர்ஷ்டவசமாக நிகழும் சம்பவங்களினால் சிறைக்குச் செல்லும் அலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மம்முட்டி. சிறையில் சக கைதிகளாலும், அதிகாரிகளாலும் நேசிக்கப்படும் மிக நல்ல உள்ளம் கொண்ட அலெக்ஸை அவரது மகன் வெறுக்கிறான். அலெக்ஸ் சிறைக்கு வரக் காரணம் என்ன என்ற மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டிய கட்டாயத்தில் அவர் பரோலில் வெளியே வந்து எப்படி தன் உறவினர், சுற்றத்தினரை எதிர்கொண்டு முடிச்சுகளை அவிழ்க்கிறார் என்பதுதான் கதை என்று சொல்லப்படுகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்றும் சொல்லப்படுகிறது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை.

சரி அப்படியானால் எதற்கு இதைப் பற்றி? வேறு ஒன்றுமில்லை. இப்படி மெகா ஸ்டார் மம்முட்டியின் படத்தைச் சொல்லி, சிறு இடைவெளியில் 6 வருடங்களுக்கு முன், உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், சாமானியனான நான் எங்கள் குழுவின் உதவியுடன் எடுத்த பரோல் எனும் குறும்படத்தைப் பற்றியும் (இங்கு முன்பு சொல்லியிருந்தாலும்) இப்போது இங்குச் சொல்லி, பார்க்காதவர்கள் பார்க்கலாமே என்ற ஒரு சிறு விளம்பரத்திற்காக என்றும் சொல்லிக் கொள்ளலாம்!

எனது குறும்படத்தில் சொல்ல முயற்சி செய்திருப்பது இதுதான். நொடிப் பொழுதில் குற்றம் புரிந்துவிட்டுப் பின்னர் அதற்காக வருந்தி, உறக்கத்தைத் தொலைத்து தவிக்கிறார்கள் பெரும்பான்மையான கைதிகள். செய்த குற்றத்தினால் அவர்களின் மனசாட்சி அவர்களை வதைத்துவிடுகிறது. சிறைத் தண்டனையை விட அவர்களின் மனசாட்சி அவர்களின் உறக்கத்தைப் பரித்து அவர்களை வதைப்பது மிகப் பெரிய தண்டனையே. இதைப் பெரும்பான்மையான கொலையாளிகள் தங்கள் சக கைதிகளிடம் சொல்லி அரற்றுவார்கள் என்பதையும் கேட்டதுண்டு. குற்றம் புரிந்த நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்!

அப்படித் தாங்கள் செய்த தவற்றை நினைத்து மருகி, திருந்தி வருபவர்களை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்வதில்லைதான். மாற்றுத் திறனாளிகளையும், மனநோயாளிகளையும் கண்டு இரக்கப்படும் நாம், ஒரு சில நொடித்துளிகளில் உணர்ச்சிவசப்பட்டுக் குற்றம் இழைத்துச் சிறைக்குச் சென்று அப்புறம் வருந்தித் திருந்தி வெளியில் வந்தாலும் அவர்களின் மீதான நம் பார்வை வித்தியாசமாகத்தான் இருக்கிறது. நாம் அவர்களை ஏற்கத் தயங்கத்தான் செய்கிறோம். இவர்களும் ஒரு வகையில் மன ஊனம் அடைந்தவர்கள்தாம்.

உடலில் ஏற்படும் நோய் குணமாக நாம் அதற்கான காலம் கொடுத்து அந்நோயைக் குணப்படுத்துவது போல நொடியில் உணர்ச்சிகள் பிறழ்வதால்  மனதில் ஏற்படும் இவ்வகையான ஊனம் குணமாக அவகாசம் கொடுப்பதில்லை. அவர்கள் திருந்தி, அவர்களுக்கு உரிய தண்டனையை அனுபவித்த பிறகு அக்காலம் முடிந்து வெளியில் வரும் போது குடும்பத்தாரும், சுற்றத்தாரும் ஏற்றுக் கொண்டு நல்வழிப்படுத்தி அவர்களும் இச்சமூகத்தில் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்திட உதவிடலாமே. அவர்களும் இச்சமூகத்தில் வாழ்வதற்கான உரிமை உண்டுதானே! அவர்களது வாழ்க்கையிலும் வெளிச்சத்தை இச்சமூகம் கொண்டுவரவேண்டும் என்பதே படத்தின் கரு.

20 நிமிடப் படம் தான். ஆனால் இரு பாகமாக இருக்கிறது. தங்களது மேலான கருத்துகளை வரவேற்கிறேன்.இதோ படத்திற்கான காணொளிகள். மிக்க நன்றி. 



------துளசிதரன் 

எல்லோருக்கும் எங்கள் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!




வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

சனி, 23 ஜூலை, 2016

கபாலி

உலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில் புதுமுகமாய் தோன்றிய ரஜனி 41 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு சரித்திரம் படைப்பார் என்று அன்று யாருமே எண்ணி இருக்க மாட்டார்கள். கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் பா, ரஞ்சித் எழுதி இயக்கிய “கபாலி” ஒரு வித்தியாசமான ரஜனியைத்தான் நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையாகும் கபாலியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாய் நம் முன் தோன்றச் செய்து, அவர் தன் நிறைமாத கர்ப்பிணியான மனைவியை இழந்து கைது செய்யப்படும் காட்சி வரை படம் விறு விறுப்பாகவே செல்கிறது. விடுதலையாகி வரும் கபாலி தன் வீட்டிற்குள் நுழையும் காட்சியில் ஒளிப்பதிவாளர் முரளியும், எடிட்டர் பிரவீணும், எழுதி இயக்கிய ரஞ்சித்தும் காட்சிக்கு உயிர் கொடுத்த ரஜனியும் தாங்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டி போட்டு அசத்தியிருக்கிறார்கள்.

அது போல் லோகாவை காரேற்றிக் கொல்லும் காட்சியும் கைதட்டல் பெறுகிறது. 150 நிமிடப்படத்தில் கபாலியின் காதலும், கல்யாணமும் எஸ்டேட் தொழிலாளர்களுக்கானப் போராட்டமும் வெற்றியும் மலேஷிய தமிழர் தலைவர் தமிழ்நேசனின் நட்பும், அதனால் நிகழும் இன்ப துன்பங்களும் மிகக் குறைந்த நேரத்தில் சொல்லிப் போன விதத்தைப் பாராட்டியே தீர வேண்டும்.

படம் இணையத்திலிருந்து

விரசேரனாக வரும் கிஷோர் கபாலியால் சுட்டுக் கொல்லப்படும்வரை தன் வில்லன் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார். கபாலியைக் கொல்ல முயலும் யோகி ஒவ்வொருமுறையும் தோல்வியுற்று கபாலியை தாய்லாந்திலுள்ள் வில்லன் வேலுவின் வீட்டில் கண்டதும் கபாலியைச் சுடாமல் தன்னுடன் வந்தவர்களைச் சுட்டு வீழ்த்தும் போது, நாம் வியந்தே போகிறோம். வேலு கபாலியின் மகள் உயிருடன் இருக்கிறாள் என்பதும், உடனே யோகி அப்பா என்றழைத்து கபாலியை வில்லன்களிடமிருந்துக் காப்பாற்றும் இடம் அருமை. 

மகளுடன் திரும்பும் வழியில் எதிர்பாராமல் சுடப்படும் கபாலி, உயிர் பிழைத்தபின் எங்கோ உயிரோடிருப்பதாகச் சொல்லப்படும் தன் மனைவி குமுதவல்லியையைத் தேடித் தன் மகளுடன் சென்னைக்கும், அங்கிருந்து பாண்டிச்சேரிக்கும் செல்லும் போது படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் கபாலி மற்றும் யோகியுடன் அதே பதட்டத்துடன் செல்ல வைக்கும் ரஞ்சித்தைப் பாராட்டியே தீர வேண்டும்.

இரண்டு வருடம், இரண்டு மாதம், 18 நாட்கள் மட்டும் கபாலியுடன் வாழ்ந்து, 25 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தன் கணவனைக் காணும் குமுதவல்லி கதறிக் கண்ணீர் விடும் இடத்தில் ராதிகா அப்தே நம் கண்களிலும் நீரைக் கசிய வைக்கிறார், இழந்த மனைவியையும், மகளையும் திரும்பப் பெற்ற கபாலி தன் நண்பர் அமீருக்கு நிகழ்ந்த விபத்திற்குக் காரணமான டோனி லீ மற்றும் வீரசேகரனைப் பழிவாங்குமிடம் மிகவும் அருமையாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. கபாலி நெருப்பாகி ரஜனி ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்க்கிறார்.

அதோடு படம் முடிந்தது என்று எல்லோரும் எழும் போது, கபாலி நடத்தும் சீர்த்திருத்தப் பள்ளியான ஸ்ரீ லைஃப் ஃபௌண்டேஷனில் படித்த டைகர் எனும் இளைஞனிடம் போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியைக் கொடுத்து கபாலியிடம் அனுப்புகிறார்கள். டைகர் கபாலியைச் சுடும் காட்சி காண்பிக்க வேண்டாம் என்று ரஜனியின் மகள் ஐஸ்வர்யா சொன்னதாலோ என்னவோ வெடிச்சத்தம் மட்டும்தான் கேட்கிறது. கபாலியைச் சுட்டாலும் கபாலி சாகமாட்டார்.  கபாலி 2 வில் கண்டிப்பாக மீண்டும் வருவார்.

தமிழ்நேசனாக வரும் நாசர், யோகியாக வரும் தனிஷ்கா, அமீராக வரும் ஜான் விஜய் போன்றோர் தங்களுடைய கதாபாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள். முக்கியமான வில்லன் டோனி லீயாக வரும் தாய்வான் நடிகர் வின்ஸ்டன் சாவோவின் நடிப்பு சுமார்தான்.
சந்தோஷ் நாராயணனின் இசையில், ஆனந்து, ப்ரதிப் குமார், ஸ்வேதா மோஹன் பாடும் “நெஞ்சமெல்லாம் பலவண்ணம்” பாடல் சற்று இனிமையாக இருக்கிறது.

Image result for kabali
படம் இணையத்திலிருந்து
பாடல் காட்சிகளில் நடிக்க மனம் ஒத்துழைக்க மறுக்கிறது என்று ரஜனி சொன்னதற்கு நாம் அதற்குரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.. காதல் காட்சிகளில் மட்டுமின்றி பல இடங்களில் ரஜனிக்கு நடிப்பின் மீதான ஆர்வம் குறைகிறதோ என்றும் தோன்றுகிறது. (அதனால்தானோ என்னவோ ரஞ்சித் ஏராளமான ரீடேக் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது) 66 வயதான ரஜனி தாடியுள்ள கபாலியாக வரும் போது ஜொலிக்கும் அளவிற்கு தாடியில்லாமல் வரும் போது ஜொலிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

மொத்தத்தில் மிகச் சாதாரணமான, வழக்கமான ஒரு நிழல் உலகக் கதை. அவ்வளவே. ரஜனி அதில் நடித்திருக்கிறார் என்பதால் மட்டுமே இப்படம் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படியாக ஒரு வழியாக கபாலி ஜுரம் குறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

(பின் குறிப்பு: "அப்பா" "சாட்டை" என்ற இரு மிக மிக நல்ல திரைப்படங்களைத் தவறவிட்டிருக்கிறேன். அவற்றைக் காண வேண்டும். )


திங்கள், 14 மார்ச், 2016

ஹச்சிகோ

 எங்கள் முந்தைய பதிவான நட்பின் அணிகலனாம் நன்றி மறவா டிண்டிம்! ற்கு மதுரைத் தமிழன் கொடுத்திருந்தப் பின்னூட்டம் இது.

எனது கவலை எல்லாம் அந்த மனிதர் வயதானவராக இருக்கிறார் தீடிரென்று இறந்து போனால் இந்தே பெங்குவினுக்கு எப்படி தெரியும் அல்லது புரியும் இந்த பெங்குவினிற்காகவது இந்த மனிதர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

வாசித்ததும் எனக்கு ஆச்சரியம். பதிவை எழுதிக் கொண்டே நானும் எனது மகனும் பெங்க்வினைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது இதே எண்ணம் என் மனதில் ஓடிட நான் மகனிடம் வருந்தினேன். இவர்கள் நிறைய நாட்கள் இருக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டேன். பேசிவிட்டு, எனக்கு எழுந்த எண்ணத்தைப் பதிவின் இறுதியில் சேர்த்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டே, இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் அப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் வெளியிடும் முன் படங்களை இணைத்து வெளியிடும் போதும் சேர்க்காமல் விட்டு விட்டேன்.


பல வருடங்களுக்கு முன் ஜப்பானில் நடந்த உண்மையான நிகழ்வின் நாயகனான ஹச்சிகோ எனும் நாலுகால் செல்லத்தைப் போன்று உள்ளது இந்த பெங்க்வின் நிகழ்வும் என்று நானும் மகனும் பேசியதால், இந்த எண்ணத்தைப் பதிவாக எழுதிவிடலாமே என்றும் தோன்றியது.  இப்போது பெங்க்வின் மனதை நெகிழ்த்தியது போல் ஹச்சிகோ மனதை நெகிழ்த்தியது அவனைப் பற்றி அறிந்த போது, பல வருடங்களுக்கு முன்.

அக்கிடோ ப்ரீட்: வலது புறம் இருப்பவை ஜப்பானின் வடக்குப் பிரதேச வகை. இடது புறம் இருப்பவை அமெரிக்க அக்கிடோ சாதிவகை

ஹச்சிகோ. 1924 ஆம் வருடம் டோக்யோ பல்கலைக்கழகத்தின் விவசாயத் துறை பேராசிரியர் Hidesaburo Ueno, ஹச்சிகோ என்று பெயரிடப்பட்ட, அக்கிடோ எனும் பெரிய சாதிவகைச் (Akito breed) செல்லத்தை வளர்த்து வந்தார்.


ஒவ்வொரு நாளும் ஹச்சிகோ தன் எஜமானரை வழி அனுப்பி, அவர் திரும்பும் வேளையில் ஷிபுயா ரயில் நிலையத்தில், அந்த ரயில் வரும் சரியான நேரத்திற்குச் சென்றுக் காத்திருந்து அவரை வரவேற்று, தவறாது, 1925 ஆம் வருடம் பேராசிரியர் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டுக் கல்லூரியிலேயே இறந்த முன் தினம் வரை அழைத்து வந்திருக்கிறான். இறந்த அன்று அவர் திரும்பவில்லை.


ஆனால், ஹச்சிகோ அவரை எதிர்பார்த்து ரயில் நிலையத்தில் காத்திருந்திருக்கிறான். இப்படி ஒரு நாள் அல்ல, 9 வருடங்கள், அவன் இறக்கும் வரை காத்திருந்திருக்கிறான்.

பேராசிரியரும், ஹச்சிகோவும் இப்படி இருப்பதை ஷிபுயா ரயில் நிலையத்தின் வழி பயணம் செய்யும் பல பிரயாணிகளும் பார்த்திருந்ததால், அவர்களை எல்லாம் இவன் தனது காத்திருப்பால் ஈர்த்திருந்திருக்கிறான். என்றாலும் அங்கிருந்த ரயில்நிலையத்தின் பணியாளர்கள் இவனைக் கண்டுகொள்ளவில்லை முதலில்.


அகிட்டோ வகைச்சாதியைப் பற்றி நன்றாக அறிந்திருந்த, பேராசிரியரின் மாணவர் ஒருவர், ஹச்சிகோ, ரயில் நிலையத்தில் இப்படிக் காத்திருப்பதைப் பார்த்து அவனைப் பின் தொடர, ஹச்சிகோ, பேராசிரியரின் தோட்டத்தை முன்பு பராமரித்தவரின் வீட்டிற்குச் செல்லுவதைப் பார்த்து அந்தப் பணியாளரிடம் ஹச்சிகோவின் கதையை அறிந்து, ஹச்சிகோவின் இந்த விசுவாசத்தைப் பற்றியும், அகிட்டோ வகை சாதிச் செல்லங்களின் இந்தக் கடமை உணர்ச்சி மற்றும் விசுவாச குணத்தைப் பற்றியும் 1932 ஆம் ஆண்டு கட்டுரை வெளியிட, ஹச்சிகோ பிரபலமடைய, மக்கள் ஹச்சிகோவுக்கு அவன் காத்திருந்த வேளையில் உணவு அளித்துக் காத்து வந்திருக்கின்றனர். 

அந்த மாணவர் ஹச்சிகோவை அடிக்கடிப் பார்த்துப் பல கட்டுரைகள் வெளியிட அவனது விசுவாசமும், பற்றுதலும் நாடு முழுவதும் பரவ, அவன் மிகவும் புகழ் பெற்று, விசுவாசத்திற்குத் தேசீய சின்னமாகக் கொண்டாடப்பட்டான். குடும்பத்தில் ஒவ்வொருவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவனை எடுத்துக்காட்டாக, பெற்றோரும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தனர்.

ஹச்சிகோ இறப்பதற்கு ஒரு வருடம் முன்னர்



அவனது உருவம் போல ஒரு வெண்கலச் சிலை 1934 ஆம் வருடம் செய்து ஷிபுயா ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டு அவன் முன்னிலையிலேயே திறப்புவிழா நடத்தித் திறந்து வைத்தனர். அந்தச் சிலை இருக்கும் வழி ஹச்சிகோ எக்சிட் என்றும் பெயரிடப்பட்டது.

இதன் நடுவில் உள்ள செய்தியைப் படித்தால் மனம் கனத்துவிடுகிறது

ஹச்சிகோ 1935 ஆம் வருடம் மார்ச் 8 ஆம் நாள், சிபுயாவில் ஒரு தெருவில் இறந்துக் கிடந்திருக்கிறான். அவனது எஜமானரின் மனைவி மற்றும் ரயில் நிலையப் பணியாளர்கள் அவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.


அவனது மயிர்த்தோல் “டாக்சிடெர்மி” செய்யப்பட்டு, அதாவது உயிருடன் இருக்கும் நிஜ உருவம் போல் செய்யப்பட்டு தேசிய அரும்பொருட்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள். 


அவன் உடல் எரிக்கப்பட்டச் சாம்பலை பேராசிரியரின் கல்லறைக்குப் பக்கத்திலேயே அடக்கம் செய்து கல்லறை எழுப்பியுள்ளனர். ஹச்சிகோ இறந்த தினம், மார்ச் 8, ஒவ்வொரு வருடமும் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

Hachi A Dog's Tale - அமெரிக்கத் திரைப்படம்

ஹச்சிகோ பற்றிய திரைப்படம் ஜப்பானிய மொழியில் 1987 ல் எடுத்திருக்கிறார்கள். மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 2009ல் ஹச்சி-எ டாக்’ஸ் டேல் (Hachi  A Dog’s Tale) என்று எடுக்கப்பட்ட அமெரிக்கப் படமும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஹச்சிகோ பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். அந்த நிகழ்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட மேற்சொன்ன படமும் கூட பார்த்திருப்பீர்கள். பார்த்ததும் நீங்கள் நாலுகால் செல்லங்களின் பிரியர் என்றால் நிச்சயமாக கண்ணில் கண்ணீர் வந்திருக்கும். இந்தப் படத்தைப் பார்த்ததும் மனம் என்னவோ செய்திட என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.

டிண்டிம் பெங்க்வின் நிகழ்வை வாசித்ததும், ஹச்சிகோ நினைவு வர, டிண்டிமும், டி சுசாவின் காலத்திற்குப் பிறகு இத்தனை தூரம் நீந்தி வருவானோ? தேடுவானோ? தவிப்பானோ? பாவம் குழந்தை. எப்படி உணர்வான் என்று தோன்றி மனம் மிகவும் வேதனை அடைந்தது. டிண்டினும், டி சுசாவும் இன்னும் பல ஆண்டு காலம் வாழ வேண்டும் அந்த அன்பிற்காகவேனும்.

ஒரு வேளை ஹச்சிகோ போல் டிண்டினிற்கும் உருவச் சிலை அமைக்கப்படலாம். படம் எடுக்கப்படலாம். ஹச்சிகோ போல் பிரபலமாகலாம்.


கடந்த வருடம் 2015ல் ஹச்சிகோவிற்கு அவனது எஜமானர், பேராசிரியர் மீண்டும் அவனைச் சந்திப்பது போல உருவச் சிலையை பல்கலைக்கழக விவசாயத் துறையினர் உருவாக்கியிருக்கிறார்கள்.

விலங்குகள் மனிதர்களை விட மேலானவைதான். எனவே, நாயே, எருமை மாடு, கழுதை, குள்ளநரி என்று சொல்லித் திட்டி நாலுகால்செல்லங்களைக் கேவலப்படுத்தவதைத் தவிர்க்கலாமே.

-----கீதா  

படங்கள், தகவல்கள் - நன்றி: இணையம், விக்கி, யூட்யூப்
  





சனி, 14 நவம்பர், 2015

இப்படிக்கு உன் மொய்தீன்

      உண்மை உறங்காது. எவ்வளவு ஆழத்தில் அதைப் புதைத்தாலும் என்றேனும் ஒரு நாள் உயிர்த்தெழும்.  அது போல் இறையுணர்வும் மனித மனதை விட்டு நீங்காத ஒன்றே.  குழந்தை பிறந்த சிலமணி நேரத்திற்குள் தான் கருவாகி உருவான தன் தாயை அடையாளம் காண்பது மட்டுமல்ல எவ்வளவு வளர்ந்து உருமாறினாலும் தனை ஈன்றத் தாயை விட உயரமாய் வளர்ந்த குழந்தைகளால் மறக்கவே முடியாது. 

அதுபோல் தான் நம்முள் உறையும் நாம் உருவாகக் காரணமான இறைவனையும் நாம் மறப்பது கடினம். சிலர், “நான் இறைவனை மறந்துவிட்டேன்”, “நான் இறைவனைப் பற்றி நினைப்பதே இல்லை” என்றெல்லாம் வீம்பளந்தாலும், அது உண்மையாதலால் இறையுணர்வை எவ்வளவு ஆழத்தில் புதைத்து வைத்தாலும் எப்போதாவது உயிர்த்தெழத்தான் செய்யும். 

அது போலவே காதல் எனும் புனிதமான உணர்வும் அழியாத ஒன்றே.  அன்பாக, பாசமாக உருமாறி குழந்தைப் பருவத்திலும், முதுமைப் பருவத்திலும் நம்முள் வாழும் அது இவ்விரு பருவத்தினிடையே விஸ்வரூபமெடுத்து ஒவ்வொருவரையும் முழுமையாக விழுங்கி அவர்களது வாழ்வையே திசை திருப்பிவிடும். அப்படி எங்கும் எப்போதும் எல்லோரிடத்தும் நிலைத்திருக்கும் ஒன்றுதான் காதல். 

அதனால்தான் நாம் கேட்ட கதைகளில் பெரும்பான்மையானவைகள் காதல் கதைகளாக இருந்தன.  நாம் கேட்கும் கதைகளில் பெரும்பான்மையானவைகள் காதல் கதைகளாக இருக்கின்றன. சந்தேகமே வேண்டாம், நாம் மட்டுமல்ல, வரும் தலைமுறையினரும் இனிக் கேட்கப் போகும் கதைகளிலும் பெரும்பான்மையானவைகள் காதல் கதைகளாகவே இருக்கும்.

கற்பனை கலந்த காதல் கதைகளில் வரும் காதலர்களை விட உண்மையாகவே காதலுக்காக வாழ்ந்து காதலுக்காகத் தங்கள் வாழ்வையே தியாகம் செய்தவர்களை நாம் ஒரு போதும் மறப்பதே இல்லை. அதனால்தான் ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி போன்றவர்கள் எக்காலத்தும் உண்மையான காதலுக்கு உதாரணங்களாகத் திகழ்கிறார்கள். 

இவ்வுலகில் இதன் முன் வாழ்ந்தவர்களிலும், இப்போது வாழ்பவர்களிலும் வெற்றி பெற்ற, வெற்றி பெறப்போகும் காதலர்கள்தான் அதிகம். அதனால்தான், வெற்றி பெற்ற எல்லா காதலர்களையும் மறந்து போகும் நாம் தோல்வியுற்ற மிகக் குறைவான எண்ணிகையுள்ள காதலர்களை மட்டும் மறப்பதே இல்லை.  எப்போதெல்லாம் தோல்வியுற்ற உண்மையானக் காதலர்களைப் பற்றிக் கேள்விப்படுகின்றோமோ அப்போதெல்லாம் நம் மனதை வேதனை சூழ்கின்றது. 

அப்படிப்பட்ட உண்மையானக் காதலர்களும், அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களும் அத்திப் பூத்தார் போல் எப்பொதாவது திரைப்படமாக்கப்படுவதுண்டு. அப்பொதெல்லாம் அதை எல்லோரும் இருகரம் நீட்டி வரவேற்று அக்காதலர்களையும் மேற்கூறிய பட்டியலில் கடைசியாகச் சேர்த்து அழகு பார்ப்பதுண்டு.  அப்படி அரிய காதலர்களாக அழகு பார்க்க வேண்டிய இரு பெயர்கள் இப்போது மலையாளத் திரைப்பட உலகில் மட்டுமல்ல தென்னகம் எங்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றது. 

அவர்களது வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களில் சிலவற்றைத் தொகுத்து எடுக்கப்பட்ட அப்படம் திரையிடப்பட்ட எல்லா திரையரங்குகளிலும் 50 வது நாளை நோக்கி வெற்றி நடை போடுகின்றது.  சில நாட்களுக்கு முன் “ப்ரேமம்” (காதல்) எனும் படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்ற போது காதல் இப்படிச் சிறுபிள்ளைத்தனமாக்கப்படுகின்றதே என்று வேதனைப்பட்டவர்கள் எல்லாம் இப்போது இப்படத்தின் வெற்றி கண்டு உண்மையானக் காதலுக்கு எப்போதும் இது போல் மரியாதை உண்டுதான் என்பதை உணர்ந்து இப்படத்தைப் பார்த்து நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.


 இதற்குக் காரணமான இருவரில் “மொய்தீன்” இப்போது உயிரோடு இல்லை ஆனால், அவரது காதலியான “காஞ்சனமாலா” 70 வது வயதைத் தாண்டினாலும் இப்போதும் ஆரோக்கியத்துடன், “எந்னு நிண்டெ மொய்தீன்” (இப்படிக்கு உன் மொய்தீன்) எனும் இப்படமெடுக்க எல்லாவித்த்திலும் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர், நடிகைகளுக்கும் ஊக்கமளித்து அப்படம் வெளிவர எல்லாவித்த்திலும் உதவியிருக்கிறார். 

முக்கம் பஞ்சாயத்து ப்ரெசிடென்டான உண்ணி மொய்தீன் சாஹிப்பின் மகனான கே பி மொய்தீனும், கொற்றாட்டில் மாதவனின் மகள் காஞ்சனமாலாவும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள்.  காஞ்சனாவின் அண்ணன் மொய்தீனுக்கு நெருங்கிய நண்பர். மொய்தீனும் வாப்பாவும் (அப்பா) காஞ்சனாவின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். இந்து முஸ்லீம் குடும்பத்தினரான அவர்கள் அன்புடனும் நட்புடனும் வாழ்ந்து வந்தனர்.

 இடையில் எப்போதோ மொய்தீனின் மனதில் காஞ்சனாவின் மேல் காதல் தோன்ற அதைக் காஞ்சனாவுக்கு அவள் படித்தக் கல்லூரிக்கு அனுப்பிக் கொடுத்தப் புத்தகத்தில் வித்தியாசமான முறையில் அடையாளப்படுத்திக் காதலை வெளிப்படுத்த, புத்திசாலியான காஞ்சனா, அனுப்பியது மொய்தீன் என்று அடையாளம் கண்டு மொய்தீனின் காதலை ஏற்க அவர்களிடையே கடிதங்கள் பரிமாறப்படுகின்றன. இடையில் எப்படியோ அனுப்பியக் கடிதங்களை வீட்டார்கள் கண்டு பிடித்து காஞ்சனாவின் கல்லூரி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றனர். 

காஞ்சனாவும் மொய்தீனும் வீட்டு வேலையாட்கள், பள்ளிச் சிறுவர்கள் போன்றவர்களின் உதவியால் மீண்டும் கடித்தங்களைப் பரிமாறிக் கொள்கின்றார்கள்.  மற்றவர்கள் வாசித்தாலும் புரிந்து கொள்ள முடியாத வித்த்தில் வித்தியாசமான ஒரு மொழியையே கண்டுபிடித்து கடிதம் எழுதித் தங்கள் காதலை வளர்த்துக் கொள்கின்றார்கள். மொய்தீனின் வாப்பா நல்ல உறவிலிருக்கும் இரு குடும்பங்களுக்கிடையே பகை உண்டாகாது இருக்க மகனான மொய்தீனிடம் காஞ்சனாவை மறக்கச் சொல்ல, மறுக்கும் மகனை ஆத்திரத்தில் கத்தியால் குத்தியே விடுகின்றார்.

மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் மொய்தீனுக்கு, மொய்தீனின் தாய் காஞ்சனாவின் கடிதங்களை மருந்துடன் கொடுத்து வாசிக்க வைத்து உயிர் பிழைகக் வைக்கிறார். கைது செய்யப்பட்ட மொய்தீனின் அப்பாவை ஜாமீனில் எடுப்பதோ காஞ்சனாவின் அப்பா.  திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தப்படும் காஞ்சனா, பெண் பார்க்க வருபவர்கள் முன்பாக வெள்ளைச் சேலை உடுத்தி வந்து, தான் மொய்தீனின் மனைவி என்று சொல்லி, பெண்பார்க்க வருபவர்க்ளை விரட்டுகிறார். 

மொய்தீனும் காஞ்சனாவும் கடிதம் எழுத முடியாத சூழலில், மொய்தீன் தன் காரில் ஹார்ன் சத்தத்தினால் (ஒரு ஹார்ன் வீட்டிலிருக்கிறேன்.  2 ஹார்ன் கோழிக்கோடு போகிறேன்.இப்படி) தான் எங்கு இருக்கிறேன் எங்கு போகிறேன் என்றெல்லாம் தெரியப்படுத்துகிறார்.  இருவரும் எங்கேனும் ஓடிச் சென்று திருமணம் செய்யாமல் எல்லோரும் சம்மதம் தரும் வரை காத்திருப்போம் என முடிவு செய்கின்றனர். இரு மதத்தினருக்கும் இடையே விரோதம் வளர தாங்கள் காரணமாகக் கூடாது எனவும் முடிவு செய்கின்றனர். 

இடையே தன்னைக் கொல்ல முயன்றதாகக் குற்றம் சுமத்துப்பட்டுள்ள உண்ணி மொய்தீன், தன்னைக் கத்தியால் குத்தவே இல்லை.  தான் தான் ஆற்றருகே நின்ற வெட்டப்பட்ட ஒரு செடியில் விழுந்தேன் என்றும், வழுக்கியதால் பலமுறை அந்தக் கூர்மையானக் கம்பில் விழ வேண்டியதானது என்றும் கூறி மொய்தீன் தன் தந்தையைக் காப்பாற்றுகிறார்.  மனம் மாறிய உண்ணி மொய்தீன் எதிர்பாராமல் திடீரென்று மரணமடைந்ததால் அவர்களது திருமணம் மீண்டும் நீண்டு போகிறது.

Image result for ennu ninte moideenImage result for ennu ninte moideen

 காஞ்சனா தனக்குத் திருமணம் வேண்டாம் என்பதால் அவளது தங்கைகளுக்குத் திருமணம் நடக்கிறது.  40 தை எட்டிய மொய்தீனும் காஞ்சனாவும் இனிமேலாவது ஒன்றாய் வாழ முடிவு செய்து முக்கத்தை விட்டு ஓர் இரவு  ஓடிவிடத் தீர்மானிக்கிறார்கள்.  எதிர்பாராமல் அன்று இரவு திடீரென மாரடைப்பால் இறந்த காஞ்சனாவின் அண்ணனின் உடல் ஆம்புலன்சில் கொண்டுவரப்படுகிறது.  அப்படி அவர்களது கனவு அன்றும் நிறைவேறாமல் போகிறது.  இறுதியாக இருவரும் யாருக்கும் தெரியாமல் பாஸ்போர்ட் எடுத்து வளைகுடா நாட்டிற்குச் சென்று வாழ முடிவு செய்கிறார்கள். 

ஒரு நண்பனின் உதவியால் பாஸ்போர்ட் வாங்கி வரும் வழியில், படகில் ஆற்றைக் கடக்கும் போது படகில் இருந்த ஓரிருவர் அசைய, படகு கவிழ்கிறது. மொய்தீன் ஆற்றில் நீந்தி ஏறக்குறைய 10 பேரைக் காப்பாற்றியபின் மீண்டும் சிலரைக் காப்பாற்ற தண்ணீருக்குள் மூழ்க எதிர்பாராமல் ஒரு சுழலில் சிக்கி உயிரிழக்கிறார்.  கதறி அழும் காஞ்சனாவின் கைபிடித்து மொய்தீனின் தாய், “நீ என் மருமகள். என் மொய்தீனின் மனைவி. வா!” என்று மொய்தீனின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதுடன் படம் முடிகின்றது.  (உண்மை வாழ்க்கையில் அத்தாயின் மரணத்திற்குப் பிறகு காஞ்சனா வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.  மொய்தீனின் பெயரில் நிறுவப்பட்ட ஒரு க்ளப்பில் (5 சென்ட் இடத்தில்) இப்போதும் தனியே மொய்தீனின் நினைவில் வாழ்கிறார். நடிகர் திலீப் அவ்விடத்தில் மொய்தீனின் நினைவாக ஒரு வீடு கட்ட முடிவு செய்திருக்கிறார்.)

படத்தில் காண்பிக்கப்பட்டக் காட்சிகளெல்லாம் மொய்தீன் மற்றும் காஞ்சனாவின் வாழ்வில் நடந்தைவைதான்.  காண்பிக்கப்படாத எத்தனையோ சம்பவங்களும் நடந்திருக்கின்றன.  காஞ்சனா மற்றும் மொய்தீனின் வாழ்வை படமாக்க இயக்குநரான ஆர் எஸ் விமல் தீர்மானித்த பின் காஞ்சனாவைச் சந்தித்த போது, அவர் மொய்தீனாக நடிக்க ப்ரித்விராஜ் தான் ஏற்றவர் என்று கூறியிருக்கின்றார். காஞ்சனா மாலாவாக நடித்தவர் பார்வதி மேனன். இருவரும் மொய்தீன் மற்றும் காஞ்சனமாலாவாக நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள் படத்தில்.


உண்ணி மொய்தீன் சாகிபாக வரும் சாய்குமார், மொய்தினின் அம்மாவாக வரும் லெனா இவர்களின் நடிப்பும் அருமை.  ஜோமோன் டி ஜானின் ஒளிப்பதிவு அருமை. நெஞ்சைத் தொடும் பாடல்கள்.  அழியாதக் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதும் வெற்றியே என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தப்படம். 

படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

70 ஆம் வயதில் முதன் முதலாய் ஓட்டுப்போடப் போகும் கவியூர் பொன் “அம்மா”


     மலையாளத் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக ஏறக்குறைய 400 திரைப்படங்களில் அன்பில், பாசத்தில் மொத்த உருவமான அம்மாவாக மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம், ஸ்ரீனிவாசன், முகேஷ், திலீப் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த, பல திரைப்பட விருதுகள் பெற்ற கவியூர் பொன்னம்மா அண்மையில் தனது 70 வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.


1960களில் கதாநாயகியாக நடித்த அவர், 1980களிலிருந்து அம்மாவாக நடிக்கத் தொடங்கித் தனக்கே உரித்தான சிறந்த நடிப்பாற்றலாலும், பாசம் ததும்பும் குரலாலும், சிரிப்பாலும் அம்மா என்றால் அது கவியூர் பொன்”அம்மா” தான் என்று எல்லோரும் சொல்லும்படி செய்துவிட்டவர்.

இதை எழுதும் போது என் மனதில், அவர் மம்முட்டியுடன் நடித்து 25 வருடங்களுக்கு முன் வெளிவந்த “தனியாவர்த்தனம்” எனும் மலையாளத் திரைப்படம் பளிச்சிடுகிறது.  மம்மூட்டி எனும் ஒரு மகா நடிகரின் நடிப்பைக் கண்டு நான் வியந்த படம் அது. இதோ காணொளி.  நீங்களும் பார்த்து ரசிப்பீர்கள் என்று பகிர்ந்துள்ளேன். 

க்ளைமாக்ஸ் காட்சி - தனியாவர்த்தனம்-மிக அருமையான காட்சி

இறுதிக் காட்சியில் சமூகத்தால் மனநோயாளியாக முத்திரைக் குத்தப்பட்டு வீட்டுக்குள் சங்கிலியால் கட்டப்பட்டுக் கிடக்கும் மகனுக்குத் தாய் விஷம் கலந்த சோற்றைக் கொடுத்துத் தானும் உண்ணும் அந்தக் காட்சியில் தாயாக நடித்த கவியூர் பொன்னம்மாவின் நடிப்பு மம்மூட்டியின் நடிப்பிற்கு இணையாக அமைந்து, அப்படமும் அக்காட்சியும் என் நினைவிலிருந்து ஒரு போதும் நீங்காத இடத்தைப் பெற்ற ஒன்று.

40 வயதுள்ள அம்மாக்கள் உலா வரும் இக்காலத்திலும் மம்மூட்டி, மோகன்லால் போன்றோருக்கு கவியூர் பொன்னம்மா அம்மாவாக வரும் போது, ரசிகர்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.

      ஆனால் அப்படிப்பட்ட அந்த 70 வயதாகும் அம்மா இதுவரை நடந்த ஒரு தேர்தலிலும் ஓட்டே போட்டதில்லையாம்!  தேர்தல் நேரத்தில் வழக்கம் போல் கேட்கும் வித்தியாசமான சம்பவங்களில் எல்லோருக்கும் வியப்பளித்த செய்தி அது.

கேரளத்தைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் எல்லோருமே பெரும்பாலும் வாழ்வது சென்னையில்தான். அதனால், படப்பிடிப்பு யாத்திரை என்று அலையும் அவர்கள், வாக்காளர் பட்டியல் தயாராகும் போது அவர்களது பெயர்கள் அதில் சேர்க்கப்படாமல் போவது இயல்பு. 

ஆனால், அரசியல் ஈடுபாடுள்ள நடிகர் நடிகைகள் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தங்களது வாக்கை தேர்தலின் போது, அவர்கள் ஆதரவளிக்கும்  கட்சியின் வேட்பாளர்களுக்கு அளிக்க மறக்கவே மாட்டார்கள். நடிகர் நடிகைகள் பலரும் வேட்பாளரும் ஆகியிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அமைச்சர்களும் ஆகியிருக்கிறார்கள்.

      வட இந்தியாவில் சுனில்தத், ராஜேஷ் கன்னா, சத்ருகன் சின்ஹா, வைஜெயந்திமாலா, ஹேமாமாலினி போன்றோர், இருந்தாலும் தென்னிந்தியாவில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மற்றும் என்டிஆருக்குக் கிடைத்த முதல்வராகும் வாய்ப்பு வட இந்தியர்களுக்குக் கிடைக்கவில்லைதான்.

ஏன் அவர்களுக்குப் பின் தென்னிந்தியாவிலும் அவர்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கை விஜய்காந்த், சிரஞ்சீவி பெற முடியவில்லைதானே. இருந்தாலும் திரைபடக் கலைஞர்களுக்கு அரசியலில் நுழைவது எளிதுதான்.  அதுதான் சினிமா நடிகர் நடிகைகளுக்கும், அரசியலுக்கும் உள்ள உறவு. 

அப்படிப்பட்ட ஆழமான, அழுத்தமான உறவு திரைப்படக் கலைஞர்களுக்கும் அரசியலுக்கும் உள்ள நம் நாட்டில்தான் பாவம் தனது 70 ஆம் வயதில் முதன் முதலாகத் தனது வாக்கை வேட்பாளர்களுக்கு வழங்க மலையாளத் திரையுலகின் அம்மாவான கவியூர் பொன்னம்மா அவர்கள் செல்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்க நேரிட்டதும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்பதால் பகிர்ந்து கொள்கின்றேன். 


கடந்த 12 வருடங்களாக கருமாளூரில்,  தான் கட்டிய வீட்டில் வசித்துவரும் அவரது பெயர் தேர்தல் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவருக்குத் தேர்தல் அடையாள அட்டையும் கடந்த மாதம் தான் கிடைத்திருக்கிறது. கவியூர் பொன்னம்மா அவர்கள் அன்புமிகு அம்மாவாக நடிப்பதுடன், ஒரு இந்தியக் குடிமகனா(ளா)கத் தனது ஓட்டளிக்கும் உரிமையைக் காப்பாற்றிக் கொண்டு பொறுப்புடன் இனி வரவிருக்கும் தேர்தல்களில் பொன்னம்மா தன் பொன்னான வாக்குகளை அளிப்பாராக!

படங்கள், காணொளிகள் - இணையத்திலிருந்து

நேற்று இதை இங்கு பதிய கூகுளார் ஏனோ மறுத்துவிட்டார். ரொம்பவே அடம் பிடித்தார் அதனால் விடுபட்டது. இன்று முயற்சி. நண்பர் குடந்தை ஆர் வி சரவணன் அவர்களின் குறும்படம் அகம் புறம் இதோ.அதன் காணொளியின் சுட்டி.  பார்த்துவிட்டுத் தங்கள் மேலான நிறை குறை கருத்துகளை யூட்யூபிலும் பதியலாம். 

https://www.youtube.com/watch?v=4OFO4SwfNn0