வெள்ளி, 30 டிசம்பர், 2022

இந்திய கடற்படையின் கிழக்குக் கரையோரத் தலைமையக நகரத்தில் பயணம் - 11 - அரக்கு பழங்குடி மக்கள் அருங்காட்சியகம்

பகுதி 10, பகுதி 9பகுதி 8பகுதி 7பகுதி 6,  பகுதி 5,  பகுதி 4பகுதி 3பகுதி 2பகுதி 1

பத்மாபுரம் தாவரவியல் பூங்காவைப் பார்த்த பிறகு, அடுத்து பழங்குடி மக்கள் அருகாட்சியகம் சென்றோம். அதைப் பற்றி அடுத்த பதிவில்//

என்று சொல்லியிருந்தேன். இடையில் அன்பினால் பொறுப்புகள் சில. பதிவைத் தொடர இயலாமல் போனது.  தொடர்ந்து எழுத முடியவில்லை என்றாலும் என் பதிவுகளை வாசித்துக் கருத்திடும் நட்புகள், பார்த்துவிட்டுக் கடந்து செல்லும் அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இதோ பதிவு தொடர்கிறது.

வியாழன், 8 டிசம்பர், 2022

இந்திய கடற்படையின் கிழக்குக் கரையோரத் தலைமையக நகரத்தில் பயணம் - 10 - அரக்கு பள்ளத்தாக்கில் பத்மாபுரம் தாவரவியல் பூங்கா

பகுதி 9பகுதி 8பகுதி 7பகுதி 6,  பகுதி 5,  பகுதி 4பகுதி 3பகுதி 2பகுதி 1

நாங்கள் அரக்கு ரயில் நிலையத்தில் இறங்கிட முடிவு செய்தோம் என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். பார்த்தால் ரயில் நடைமேடையைக் கடந்து சென்ற போது, நாங்கள் இருந்த பெட்டியும் நடை மேடையைக் கடந்து சென்று கொண்டிருந்தது.  அரக்கு ரயில் நிலையத்தில் நிற்க வேண்டுமே என்று குழப்பத்துடன்  பேசிக் கொண்டிருந்த போது ரயிலோ எங்கள் கவலையைப் பொருட்படுத்தாமல் மெதுவாகச் சென்று நின்றது. 

நடை மேடை தாண்டியிருந்ததால் இறங்கும் இடத்தில் கற்கள். தூரத்தில் நடைமேடை தெரிந்தது. சிறிய ரயில் நிலையம் என்று தோன்றியது. 

இறங்கிய இடத்தில் நேராகப் பார்த்தால் ஊருக்குள் செல்லும் சிறிய மண் பாதை, வீடுகள் தெருக்கள் தெரிய இறங்கிய கூட்டத்துடன் நாங்களும் கூடவே நடந்து சென்றோம்.  ஊருக்குள் பல தெருக்கள் சிறிய வீடுகள். முடுக்கு முடுக்காகக் கடந்து நடந்து சென்ற போது மலை வாழ் மக்களின் வாழ்க்கையையும் காண முடிந்தது. ஃபோட்டோ எடுக்கப் பயம், தயக்கம். 

15 நிமிட நடையில் ஊரின் மெயின் சாலையை அடைந்தோம். அங்கு உணவகங்கள், பலசரக்குக் கடைகள், காய்கறி பழங்கள் என்று கடை வீதி. போக்குவரத்து. டாக்ஸி, ஆட்டோக்கள் நிறுத்தும் இடம், பேருந்துகள் வந்து சென்று கொண்டிருந்தன. அதுதான் அரக்கு ரோடு என்று தெரிந்தது.

கடை வீதியில் உள்ள உணவகங்களில் சைவ உணவகம் என்று  ஒன்று கண்ணில் பட, அங்கு கிடைத்த தோசையை சாப்பிட்டு விட்டு நான் குறித்து வைத்திருந்த பத்மாபுரம் தாவரவியல் பூங்கா மற்றும் பழங்குடி மக்கள் அருங்காட்சியகத்தைக் காணச் செல்லலாம் என்ற போது மணி 12. சாப்பிட்ட இடத்திற்கு எதிரிலேயே பழங்குடி மக்கள் அருங்காட்சியகம் இருந்தாலும், முதலில் பூங்காவைப் பார்த்துவிட்டு வரலாம் என்று பூங்காவிற்குச் சென்றோம்.

பத்மாபுரம் தாவரவியல் பூங்கா நுழைவு வாயில்

நாங்கள் சாப்பிட்ட வீதியிலேயே நேராக 10  நிமிடம் நடந்தால் (ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தூரம் இருக்கும் இந்தப் பூங்கா)  போக்குவரத்து நெரிசலில் இருந்து ஒதுங்கி ஒதுக்குப் புறத்தில்  பத்மாபுரம் தாவரவியல் பூங்கா. அரக்கு சாலையில் உள்ளது.  நுழைவுக் கட்டணம் உண்டு. 

இதற்கும் ஒரு வரலாற்றுக் கதை. இரண்டாம் உலகப் போரின் போது போரில் போராடும் வீரர்களுக்குக் காய்கறிகள் பழங்கள் வளர்த்து விநியோகிக்கும் நோக்கத்தில் இந்தத் தோட்டம் 1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாம். 26 ஏக்கராம்.

ஆனால் அதன் பின் தோட்டக்கலை பயிற்சி மையமாகவும் நர்சரியாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.  அரிய வகைப் பூக்கள், அயல்நாட்டுப் பூக்கள் போன்றவை வளர்க்கப்படுகின்றன. மரங்களின் மேல் மர வீடுகள்/தொங்கும் வீடுகள் இருக்கின்றன. (நான் எடுத்த ஃபோட்டோக்கள் சரியாக வரவில்லை. மூன்றாவது விழி திடீரென்று விழியைத் திறக்கவில்லை) இந்த மர வீடுகளில் முன் பதிவு செய்து தங்கலாம். 

அழகான க்ரோட்டன்ஸ் செடிகளின் அணிவகுப்புடன் நடை பாதை


பெரிய பூங்காதான். நிறையப் பூக்கள் அழகுப் பூக்கள். ரோஜாவிற்காகத் தனி தோட்டம் இருந்தது. 

 

இடையிடையே சிலைகள்

செடிகளை வண்ணத்துப் பூச்சி, ஆடு, கோழி?  மயில், ஜாடி போன்ற வடிவங்களில் வெட்டி அழகுபடுத்தியிருந்தார்கள். 

சிறிய குளங்கள் (தொட்டிகள் எனலாமோ!) நடுவில் சிலைகள். பல இடங்கள் வெற்றிடமாக இருந்தன. இன்னும் நன்றாகப் பராமரிக்கலாம். பராமரித்தால் சுற்றுலாப்பயணிகளை இன்னும் ஈர்க்கலாம்.  

ஒரு பகுதியில் சிவன் பார்வதி சிலை.  

Engineering Marvel of Ants/Termites!

தோட்டத்தில் இயற்கைக் கட்டிடக் கலைஞர்கள் எறும்பார்கள்/கரையான்கள் கட்டிய அழகான மாளிகை! என்ன ஒரு Engineering Marvel!!!! 

பூங்காவில் குழந்தைகளைக் கவரும் வகையில் சின்ன டாய் ரயில் இருந்தது. பூங்காவின் முழுப் பகுதியையும் சுற்றிப் பார்க்கலாம். பெரியவர்களும் குழந்தைகளானார்கள். 

இன்னும் அதிக நேரம் இருந்திருந்தால் நிதானமாகப் பார்த்திருக்கலாம்.  இப்போது இப்பூங்கா இன்னும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.  

எனக்கு இப்பூங்காவிற்குப் பதில் ஊருக்குள் மக்கள் குடியிருக்கும் பகுதி தெருக்களையும் ஊரையும் சுற்றி, இந்த அரக்கு தெருவைத் தாண்டினால் மலைப்பகுதி சாலைதான் என்பதால் மலைப்பகுதியையும் பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. சுவாரசியமாக இருந்திருக்கும். 

இதை அடுத்து பழங்குடிமக்கள் அருங்காட்சியகம் சென்றோம். அதைப் பற்றி அடுத்த பதிவில். 

(வரும் சனி ஞாயிறு பிஸி. வலைப்பக்கம் வர இயலாது. மீண்டும் திங்களில் இருந்துதான்)

-----கீதா 

திங்கள், 5 டிசம்பர், 2022

இந்திய கடற்படையின் கிழக்குக் கரையோரத் தலைமையக நகரத்தில் பயணம் - 9 - அரக்கு பள்ளத்தாக்கு


விசாகப்பட்டினத்தில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணத்தில் இரண்டாவது நாளில் மாலையில் சென்ற ருஷிகொண்டா கடற்கரை பற்றி சென்ற பதிவில் சொல்லி படங்களும் பகிர்ந்திருந்தேன் இல்லையா.

இப்போது கடைசி நாளான மூன்றாவது நாள். ஒரே நாள் பயணமாக, கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில், விசாகப்பட்டினத்திலிருந்து ஏகதேசம் 116-120 கிமீ தொலைவில் ஒடிஸா மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் அரக்கு பள்ளத்தாக்கு சென்று பார்த்துவிட்டு அங்கிருக்கும் போரா குகைகளையும் பார்த்துவிட்டு வரலாம் என்று திட்டம்.