செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

இந்திய கடற்படையின் கிழக்கு கரையோர தலைமையக நகரத்தில் பயணம் - 2

அடுத்த பதிவிலிருந்து இடங்கள் பற்றியும் அனுபவங்களையும்  ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் என்று முடித்திருந்தேன். 

முதல் பகுதி 

இதோ அடுத்த பகுதி. 

நிகழ்வு நடக்கும் இடம் ரயில் நிலையத்திலிருந்து அருகில் என்பதால், ரயில் நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாய் நேஷனல் எனும் தங்கும் விடுதியில் அறைகள் பதிவு செய்திருந்தோம்.

குளிரூட்டப்படாத அறைக்கான ஒரு நாள் வாடகை ரூ 1000 அப்போது. கூடியவரை குளிரூட்டப்பட்ட அறையைத் தவிர்ப்பது வழக்கம். நாங்கள் பயணித்த மாதம் மே மாதம் என்றாலும், காலநிலை பரவாயில்லை. காலையில் இதமாகவே இருந்தது.  பகலில் வெயில் இருந்தாலும் கடினமாக இல்லை.  இரவு இதமாக இருந்தது. மிக அருகில் கடற்கரை என்பதாலோ என்னவோ நல்ல காற்று இருந்தது.

பறந்து வந்தவர்களும், ஆர அமர தூங்கிக் கொண்டு பயணித்தவர்களும் ரயில்நிலையத்தின் முகப்பில் சந்தித்துக் கொள்ளலாம் என்று திட்டம். இதில் 6 பேர்தான் நிகழ்வு முடிந்த மறுநாள் ஊர் சுற்றல் குழுவில்.  கீதா உட்பட என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன!

விமானநிலையத்திலிருந்து ரயில் நிலையம் 13 கிமீ தான். மற்றவர்கள் வந்து சேர்வதற்குக் காத்திருந்த நேரத்தில் ரயில் நிலையத்தின் சுவற்றில் இருந்த சித்திரங்களைக் கிளிக்கிக் கொண்டேன். கீதாவின் கையில் மூன்றாவது விழி இருந்தால் இமைத்துக் கொண்டேதானே இருக்கும்!!!





தங்கும் விடுதி, ரயில் நிலையத்திலிருந்து வளைந்து நேராகச் செல்லும் சாலையில்தான் என்பதையும் பார்த்து தெரிந்து வைத்துக் கொண்டுவிட்டேன்

பறந்து வந்தவர்கள் 7 மணிக்கு வந்து சேர்ந்தார்கள். என் சுமை ஒரு முதுகுப் பை மட்டுமே என்பதாலும் விடுதி மிக அருகில்தான் என்பதாலும் நானும் மற்றொருவரும் நடந்து வந்துவிடுகிறோம் என்று சொல்லி, விடுதிக்கு நடந்து சென்றோம். மற்றவர்கள் ஆட்டோ பிடித்து வருவதற்குள் நாங்கள் விடுதியை நெருங்கிவிட்டோம்!!!!

எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரில் கொஞ்சம் காலாற நடந்து சென்று இடங்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். குறிப்பாக நடக்கும் தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு நடந்து செல்வதும் வழக்கம். அது போல ஊருக்குள் உள்ள இடங்களுக்குப் பேருந்தில் சென்று ஊரைப் பற்றி அறிந்து கொள்ளவும் பிடிக்கும்.

விடுதியில் அறைகள் சுத்தமாக, நன்றாகவே இருந்தன. டிவி, மேசை, நாற்காலி, டீபாய் என்று வசதியாகவும் இருந்தது. குறிப்பாக கழிவறை, குளியலறை சுத்தமாக இருந்தன.

என் கடமைகளை முடித்துக் கொண்டு மற்றவர்கள் கிளம்புவதற்குள் அருகில் உள்ள சாலைகளில் நடந்து வரலாம் என்று கிளம்பிவிட்டேன். விடுதியின் எதிரே மேம்பாலம். மேம்பாலத்தின் தூண்களில் அழகான வரலி சித்திரங்கள்.



அருகில் எங்கு பேருந்து நிறுத்தங்கள், வித்தியாசமான கடைகள் என்னென்ன என்று கண்கள் ஸ்கான் செய்து கொண்டே வந்தனடிப்பிக்கல் நம்மூர் நகரங்களின் சாலைகள் மேடு, பள்ளம், ஓட்டைகளுடன்தான். நடை பாதைக் கோயில்கள், கொஞ்சம் பெரிய அம்மன் கோயில், கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகளிலிருந்து பலசரக்குக் கடைகளும், துணிக்கடைகள், நகைக் கடைகள் (இது இல்லாமலா!!!) சுற்றிலும் எல்லா வசதிகளுடனும், வீடுகள் காலனிகள் என்று இருந்தன

அருகில் மிகவும் புகழ்பெற்ற கராச்சி பேக்கரி இருந்தது என் கண்ணில் படாமல் போகுமா!! ஒரு கிளிக் பண்ணலாம் என்றால் திடீரென்று மூன்றாவது விழி இமைக்காமல் படுத்தியது. கவலை தொற்றிக் கொண்டது. மறுநாள் ஊர் சுற்ற மூன்றாவது விழி வேண்டுமே! சரி வருவது வரட்டும்.

அன்றைய தினம் உணவு நிகழ்வு நடக்கும் இடத்தில் என்பதால் பிரச்சனை இல்லை. அடுத்த நாள் உணவு வெளியில்தானே, சைவ உணவகங்களைப் பார்த்து வைத்துக் கொள்ளலாம் என்றால், அருகில் ஒரே ஒரு மெஸ். மிகவும் சிறிய உணவகம் தவிர வேறு எதுவும் கண்ணில் படவில்லை. ஆனால் சற்றுத் தள்ளி சைவ உணவகம் இருந்தது.

அரை மணி நேரம் சுற்றிவிட்டு அறைக்குச் சென்று எல்லோரும் நிகழ்வுக்குச் சென்றாயிற்று. அருமையான ஆந்திரா வகை உணவுகள் ருசிக்கலாம்னு போனா ஹூம். தமிழ்நாட்டு வகைகள்தான்.  பெயர்தான் வேறு. மின்னப்ப கரேலு என்னடா இது புச்சா இருக்கேன்னு தோணுதா! ஒன்னுமில்லை உளுந்து வடை மெதுவடைதான்!! பாதாம் ஹல்வா, பஜ்ஜி வகைகள், கட்டே பொங்கலி பொங்கல் (சிறிய வித்தியாசம், பச்சை மிளகாய் சேர்த்திருந்தார்கள், கொஞ்சம் நெகிழ்வாக இருக்கும். தாரளமயமாக்கலில் நெய்) இட்லி, பூரி, என்று காலை,

பொப்பட்லு ஹிஹிஹி இது இனிப்பு போளி, என்று பெயர்களில் வித்தியாசத்தைத் தவிர மதியம், வழக்கமான சாப்பாடு. ஆந்திரா லோகோ ஆவாக்காயா, கோங்குரா, பப்புலு பொடி இருந்தன. இரவு, வேற்றுமையிலும் ஒற்றுமையைப் பறைச்சாற்றும் உணவுகள் மற்றும் உலகமயமாக்கல் உணவுகள்! பெரிதாகச் சொல்வதற்கு இல்லை. எனவே மறுநாள் சென்ற இடங்களைப் பற்றித் தொடங்கிவிடுகிறேன்.

மறு நாள், தங்கிய இடத்திலிருந்து அருகில் பார்த்து வைத்திருந்த சிறிய மெஸ் போன்ற உணவகத்தில் எங்கள் காலை உணவை முடித்துக் கொண்டு – ரொம்ப நல்ல மெஸ் என்று எல்லாம் சொல்ல மாட்டேன் - (ஒன்றும் ஸ்பெஷல் இல்லை. தோசை, காரசாரமான தக்காளிச் சட்னி, தேங்காய்ச் சட்னி, ஆந்திரா சாம்பார்) -  3 கிமீ தூரத்தில் இருக்கும், (ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ) ராமகிருஷ்ணா கடற்கரைசெல்லமாக ஆர் கே கடற்கரை நோக்கி இரு ஆட்டோக்களில் சென்றோம். அப்போது ஆட்டோ சார்ஜ் ரூ50-60. 

ராமகிருஷ்ணா கடற்கரை - ஆர் கே கடற்கரை பெயர்க் காரணம் - கடற்கரையில் ராமகிருஷ்ணா மடம் இருப்பதால். பட்டியலில் முதல் இடத்தில் ராமகிருஷ்ணா மடமும், ராமகிருஷ்ணர் வழிபட்ட காளிமாதாவுக்கான கோயிலும், அதே வளாகத்துக்குள் அதை அடுத்து சிவன் கோயிலும் என்பதால் முதல் விசிட். தொடங்கும் போது கோயில் போய்ட்டு சுபமா தொடங்க வேண்டாமா!

(முதல் நாள் இமைக்க மறுத்த மூன்றாவது விழி மறுநாள் அவ்வப்போது அடம் பிடித்தாலும், பாவம் கீதா என்று கொஞ்சம் இமைத்ததால் கொஞ்சம் படங்கள் எடுக்க முடிந்தது.)

காளிமாதா கோயில் - கோயிலும் பின் புறம் அடுக்கு மாடிக் குடியிருப்பு

கடற்கரையை நோக்கி இருக்கும் அழகான காளி கோவில். இக்கோயிலின் வடிவமைப்பு, மிக அழகு என்பதால் கடற்கரைக்கு வருபவர்கள் பலரையும் கவர்கிறது என்று தோன்றுகிறது. முதலில் சிறிய அளவில் மூங்கிலால் வேயப்பட்டு இருந்த கோயில் அதன் பின் 1984 ஆம் வருடம்  காங்கிரீட்டால் அழகு வடிவத்தில் கட்டப்பட்ட கோயில். மட்டுமல்ல வளாகத்தில் அழகான தோட்டமும் என்பது கூடுதல் ஈர்ப்பு. ஏறக்குறைய கொல்கத்தாவில் இருக்கும் காளிகோயிலைப் போன்ற வடிவம். 

உயரமான தூண்கள், வளைவுகள் என்று மிக அழகாகப் பளிச்சென்று இருக்கிறது. சுத்தம் என்றால் சுத்தம். அமைதியோ அமைதி.  எதிரே கடலின் அலைகளின் நாதம்.

கோயில் வளாகத்தினுள்ளேயே கோயில் நிர்வாக அலுவலகம், பூசை செய்பவர்கள் தங்கும் சிறிய வீடு,  சமையலறை என்று இருக்கிறது. அடுத்தாற்போல் சிவபெருமான் கோயில். சிவன் கோயிலின் தனிச்சிறப்பு 10 கிலோ எடையுள்ள ஒற்றைக்கல்லிலால் ஆன ரசலிங்கம்’. 

இந்தக் கோயில் விசாகப்பட்டினத்தின் ஆர்கே  கடற்கரைக்கு அடையாளமாக இருக்கிறது. மட்டுமல்ல கோயிலின் எதிரில் கடற்கரைச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் எல்லாப் பகுதிகளையும் இணைக்கிறது.

 ஆசிரமம் செல்லும் சாலை. தூரத்தில் ஆசிரமம் தெரிகிறது பாருங்க

காளிமாதா கோயிலின் பின் புறம் உள்ள சாலையில் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம் உள்ளது. 1938 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1939 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணா மிஷன் பராமரிப்பில் ஏற்றெடுக்கப்பட்டது. 


ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆசிரமம்

காளிமாதா கோயில் அருகில் உட்பக்கம் செல்லும் சாலையில் 3 நிமிடம் நடந்தால் ஆசிரமம்மிக மிக அழகான அமைதியான ஆசிரமம். உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. எனவே வெளியே இருந்து மட்டும் எடுத்துக் கொண்டேன். அந்தச் சாலையே மிக மிகச் சுத்தமாக அமைதியாக அழகாக, தனி வீடுகள் கொண்ட  பகுதியாக இருக்கிறது. கடற்கரைச் சாலையில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள்!

ஆசிரமத்தின் உள்ளே பெரிய ஹால். நடுவே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் திரு உருவச்சிலை. பெரிய அளவில்.  ஹாலில் நாம் அமர்ந்து தியானம் செய்யலாம்.  நாங்களும் அமைதியாகச் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்ய அமர்ந்தோம். எனக்கு எங்க தியானம்?  கடற்கரைக்குச் செல்ல வேண்டும்.

சிந்துபைரவியில் சிவக்குமார் ஒரு பாறையின் மீது அமர்ந்து பாடுவாரே, அலை வந்து அடிக்குமே அந்த சீன்  விசாகப்பட்டினத்தில் எடுத்ததாகச் சொல்லப்படும் அந்தப் பாறை இந்தக் கடற்கரையில் இருக்குமா? நானும் அந்தப் பாறையின் மீது அமர்ந்து பாடுவது போன்றும், அலைகள் வந்து மோதுவது போன்றும் மனதில் ஒரு சீன் ஓடிட…..என் முதுகில் ஒரு கை பாருங்க நான் மட்டும் ஆழ்ந்த தியானத்தில் இருந்திருக்கிறேன்!!!!!!

அடுத்து ஆசிரமத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று வெளியே வந்து அப்படியே லயித்துவிட்டேன். சுற்றியுள்ள வளாகம் முழுவதும் அழகான பூந்தோட்டம், பாக்குமரம், பல வகை மரங்கள் என்று அழகுப் பச்சை. படங்களைத் தனியாக ஒரு பதிவில் போடுகிறேன். ஒரு சில படங்கள்தான் சரியாக வந்தன.

மடம் முன்னெடுத்துச் செய்யும் சமூகச் சேவைகள் - பிசியோதெரபி, ஹைட்ரோதெரபி, சிறப்புக் கல்வி, பேச்சு சிகிச்சை, பெற்றோருக்கு ஆலோசனை வழங்குதல் போன்ற வசதிகளுடன் கூடிய ஸ்பெஷல் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மையம்; மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் நடமாடும் மருத்துவப் பிரிவு; 19,200 புத்தகங்கள் மற்றும் 60 செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்கள் கொண்ட ஒரு நூலகம் மற்றும் ஒரு வாசிப்பு அறை; சிரமத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள ஒரு ஆங்கில வழி மேல்நிலைப் பள்ளி; ஒரு கணினி பயிற்சி மையம்; ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வித் திட்டங்கள்; தினசரி வழிபாடு; ஆசிரமம் மற்றும் பிற இடங்களில் சமய சொற்பொழிவுகள்; ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் பிற ஆன்மீகக் குருக்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்; ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ உதவி; என்று பல்வேறு தரப்பட்ட சேவைகளைச் செய்து வருகிறது.

வெளியில் வந்து கடற்கரைச் சாலைக்கு வந்தால், எதிரே வா வா என்று அழைக்கும் அழகான கடற்கரை. அலைகளின் சங்கீதத்தைக் கேட்போம்!  கடற்கரை பற்றியும் அனுபவங்களும் அடுத்த பகுதியில். 

காக்கையின் மேடைக்கச்சேரி!


--------கீதா

30 கருத்துகள்:

  1. வரலி சித்திரம் நன்றாக இருக்கிறது.

    ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆசிரமத்தில் தியானம் செய்வதை பற்றி சொன்னதும் , நீங்கள் கற்பனையில் ஆழ்ந்து போனதும் அருமை.
    மடத்தின் சேவைகள் நன்றாக இருக்கும், மதுரையில் முன்பு இருந்த வீட்டுக்கு பக்கத்தில் இருந்தது ராமகிருஷ்ணா ஆசிரமம், வியாழன் தோறும் போவோம்.

    காளி மாதா கோயில் ,ஆர் கே கடற்கரை நன்றாக இருக்கிறது.

    //நானும் அந்தப் பாறையின் மீது அமர்ந்து பாடுவது போன்றும், அலைகள் வந்து மோதுவது போன்றும் மனதில் ஒரு சீன் ஓடிட…..என் முதுகில் ஒரு கை…ஆ பாருங்க நான் மட்டும் ஆழ்ந்த தியானத்தில் இருந்திருக்கிறேன்!!!!!!//

    உங்கள் நினைப்பு அருமை. உங்கள் நினைப்பு போலவே காக்கையாரின் மேடைக்கச்சேரி படம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆசிரமத்தில் தியானம் செய்வதை பற்றி சொன்னதும் , நீங்கள் கற்பனையில் ஆழ்ந்து போனதும் அருமை.//

      ஹாஹாஹா அக்கா இப்படித்தான் தியானம்னு சொல்லி நிறைய கற்பனைகள் அப்பத்தான் முளைத்து விரியும்!!!!!! வசனங்கள் வந்து விழும். ஆனால் அப்புறம் மறந்து போய்விடும்!!!!

      ஆமாம் அக்கா கோயிலும் கடற்கரையும் ரொம்ப அழகாக இருக்கும்.

      காக்கையாரின் மேடைக் கச்சேரி பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன் அக்கா

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  2. ஓவியப்படங்கள் சிறப்பாக இருக்கிறது.

    விபரங்கள் நன்று கடைசி படம் சூப்பர் தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களையும் விபரங்களையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  3. படங்கள் அழகாக உள்ளன. கட்டுரை ஒரு டைரி குறிப்பு போல் உள்ளது. இதயம் பேசுகிறது?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜெசி அண்ணா.

      கட்டுரை ஒரு டைரி குறிப்பு போல் உள்ளது. இதயம் பேசுகிறது?//

      ஹாஹாஹா நான் மணியனின் இதயம் பேசுகிறது வாசித்ததில்லை. எனக்கு கட்டுரைகள் உட்பட. பெயர் தான் தெரியும். என் வாசிப்பு மிக மிகக் குறைவு அதற்கான சூழல் இல்லாததால். இப்போதுதான் இணையத்தில் வாசிக்கிறேன்.

      இது என் இதயம் பேசுகிறது!!!!!

      பெரியவர்கள் பலர் எல்லாமே எழுதிவிட்டுப் போயாச்சு. எனவே இப்போதைய எழுத்துக்களில் யாரேனும் பெரியவர் ஒருவர் தலைகாட்டலாம்தான்.

      மிக்க நன்றி ஜெசி அண்ணா

      கீதா

      நீக்கு
  4. என்னது..  குளிரூட்டப்படாத அறையே ஒரு நாளுக்கு 1000 ரூபாயா...   சொக்கா...   என்ன சோதனை! 1/4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். அது செண்டர் ஏரியான்றதுனாலயா தெரியலை ஆனா எல்லாரும் ரீசனபிள்னு சொல்லிக்கிட்டாங்க. இப்ப 1500 ஆகிடுச்சு போல...சும்மா நெட்ல பார்த்து தெரிந்து கொண்டேன்

      1/4 ஹாஹாஹாஹா கமென்ட் 4 ல 1 இப்பல்லாம் கமென்ட் ஒழுங்கா போக மாட்டேங்குதுனு இந்த நம்பர் குறிப்பா ஹாஹாஹ் நல்ல ஐடியா!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  5. நீங்கள் இரண்டு, மூன்று  கிலோமீட்டர்கள் இருந்தாலே நடக்க அஞ்ச மாட்டீர்கள்..   அதுவம் வேகவேகமாக...!!  அருகில் என்றால் நடக்காமல் இருப்பீர்களா என்ன! 2/4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....நடந்து பழகிடுச்சு ஸ்ரீராம். உடம்புக்கு நல்லதுனு...ஆனா ஊர்ல இருந்தப்பவே நடைதானே பள்ளிக்கும் கல்லூரிக்கும்...அப்படியே பழகிப் போய் தொடர்கிறது. இங்கு பங்களூரில் காலநிலையும் நன்றாக இருப்பதால் நடைதான் பெரும்பாலும்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. ஓ..   ஒருவேளை கராச்சி பேக்கரி என்றதும் உங்கள் கேமிரா தேசபக்தியுடன் புறக்கணித்து விட்டதோ.... 3/4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரித்துவிட்டேன். ஓ அதான் காரணமா இருக்குமோ!!! ஆமாம் பாருங்க அடுத்த நாள் வேலை செஞ்சுதுதான் இடையில் படுத்தினாலும்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. புகைப்படங்கள் அழகு.  எனக்கும் (!) தியானம் என்று அமர்ந்தால் இப்படிதான் தூங்கி விடுவேன்!!!!  ஆசிரமம் செல்லும் சாலை, தூரத்தில், ஆஸ்ரமம் என்று சொல்லி இருக்கும் படத்தில் நான் இன்னொரு வகை படத்தை எதிர்பார்த்தேன்.  பெரிதாகத் தெரியும் அந்தக் கட்டிடத்தை வலது புறம் சற்றே தள்ளி, ஆஸ்ரமம் தூரத்தில் இன்னும் பெரிதாகத் தெரியும்படி இணைத்து அகலமாக ஒரு பாடம்...  இப்படி! 4/4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹைஃபைவ்!!! தியானம் என்றால் எனக்கு மனம் ஒன்றுவது ரொம்ப அபூர்வம். அதுக்கு 2 நிமிஷம் ப்ரேயர் ல ஒன்றி பிரார்த்தனை செய்வதே மேலோன்னு தோணும்.

      //ஆசிரமம் செல்லும் சாலை, தூரத்தில், ஆஸ்ரமம் என்று சொல்லி இருக்கும் படத்தில் நான் இன்னொரு வகை படத்தை எதிர்பார்த்தேன். பெரிதாகத் தெரியும் அந்தக் கட்டிடத்தை வலது புறம் சற்றே தள்ளி, ஆஸ்ரமம் தூரத்தில் இன்னும் பெரிதாகத் தெரியும்படி இணைத்து அகலமாக ஒரு பாடம்..//

      ஸ்ரீராம் எடுத்தேனே....அதுவும் மூணாவது கைல இருந்தா எடுக்காம இருப்பேனா......நீங்கள் சொன்ன விதத்தில், வளைந்து செல்லும் அந்தச் சாலை, ஆசிரமம் இருக்கும் சாலை எல்லாம் எடுத்திருந்தேன் படம் சரியா வரலையே நான் என்ன செய்ய....பல நல்ல ஷாட்ஸ் அப்படி போய்விட்டது ஸ்ரீராம். அது அங்கங்க சொல்றேன்...

      ஆனா பாருங்க ஆர் கே கடற்கரை ரொம்ப பிடிச்சுது போல கேமராக்கு நல்லா வேலை செஞ்சுச்சு....வேறு சில ஆப்ஷன்ஸ் எல்லாம் பயன்படுத்தி எடுத்தேன் வந்தன....அடுத்த பகுதியில் போடுகிறேன்.

      ஆசிரமம் படத்தில் தூரத்தில் தெரிந்தாலும் 3 - 5 நிமிட நடைதான்....

      அதன் பின் அருகில் சென்றதும் கேமரா இமை மூடித் திறந்தது. ஹப்பா மூணு படம் வந்துவிட்டது ஆசிரமம் இங்கு போட்டிருப்பது.

      மிக்க நன்றி ஸ்ரீராம் 4/4 எல்லாம் வந்துவிட்டது!!!

      கீதா


      நீக்கு
  8. ஆர்கே என்றால் ராமகிருஷ்ணாவா! ராஜ்கபூர் கடற்கரை என்று பெயர்வைத்திருப்பார்களோ ..ஏன் இப்படி என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏகாந்தன் அண்ணா. ஆர் கேன்னு செல்லமா...

      //ராஜ்கபூர் கடற்கரை என்று பெயர்வைத்திருப்பார்களோ/

      ஹாஹாஹாஹா

      மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

      கீதா

      நீக்கு
  9. கோவிலைக் குறுக்கிக் காட்டும் மாடிக் கட்டிடம்
    மனிதனின் தலைக்குள் வளர்ந்துவரும் வெற்றிடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், எனக்கும் தோன்றியது கோயிலின் அழகான வடிவமைப்பு அழகு எடுபடாமல் ...நான் வேறு வேறு கோணத்தில் முயற்சி செய்தேன் ஆனால் அங்கு சாலை என்பதால் போக்குவரத்து, மற்றும் சுற்றிலும் கட்டிடங்கள்...

      மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

      கீதா

      நீக்கு
  10. ரொம்ப இடைவெளி விடுவதால் இது எந்தப் பயணம் என்பதே மறந்துவிடுகிறது.

    படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா நெல்லை...கரெக்ட்தான். இது விசாகப்பட்டினம் பயணம் நீங்க அடிக்கடி என்னைச் சொல்லி கலாய்ப்பீங்களே அதுதான்...ஹிஹிஹி

      தொடர்ந்து போட முயற்சி செய்கிறேன் இருந்தாலும் உடனே உடனே போட முடிவதில்லை நெல்லை. நேரம் என்றாலும் மனமும் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. எழுதணுமே....படங்கள் எல்லாம் எது வேணும் வேண்டாம்னு தொகுத்து....ஸ்பாஆஅ

      படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  11. பாறையில் அமர்ந்து பாடுவது போலவும்..... அந்தப் படப்பிடிப்பின்போது அலைகள் மோதி களேபரமானது நினைவில் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அவரை அலை அடித்தது என்று வாசித்த நினைவு.இருக்கு. ...இருந்தாலும் கற்பனைதனே!!! அதிலாவது அப்ப்டி ஒன்னு நினைச்சுப் பார்த்துப்போமேன்னுதான்....

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  12. ஒவ்வொரு அடியும் விளக்கமாக... அருமை... படங்கள் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி. படங்களையும் பதிவையும் ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  13. பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ, தொடர்ந்து வாருங்கள்

      கீதா

      நீக்கு
  14. ஓவியங்கள் அத்தனையும் எழிலோவியங்களாக மிளிர்கின்றன.
    காளிமாதா கோயில் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆசிரமம் பற்றிய தகவலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. காளி மாதா கோவில், கடற்கரை படங்கள் அனைத்தும் அருமை. முதலில் ரயில் நிலையத்தில் எடுத்த புகைப்படங்களும், மேம்பாலத்தில் எடுத்த வரலி ஓவியங்களும் அழகாக உள்ளது.

    நீங்கள் அனைத்தையும் சொன்ன விபரங்களைப் பார்த்து பிரமித்து விட்டேன். எல்லாவற்றையும் அப்படியே நினைவில் வைத்து சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    ஆந்திரா உணவு எப்போதும் காரந்தான். இப்போது மாறியிருக்குமமோ என்னவோ? முன்பு ஆந்திராவில் இருந்து எங்கள் வீட்டுக்கு வரும் எங்கள் சுற்றத்தவர்கள் (நாங்கள் சென்னையிலிருக்கும் போது) ஊறுகாயை சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதை பார்த்து அரண்டு போயிருக்கிறேன். அவ்வளவு காரம் சென்னை வெய்யிலுக்கே தாங்காது. அப்போது மட்டுமில்லை இப்போதும் எனக்கென்றில்லை எங்கள் வீட்டில் மற்ற அனைவருக்குமே காரம் சாப்பிட முடியாது. எங்கள் மாமியார் மைத்துனர்கள் ஓரளவு நல்ல காரம் சேர்த்துக் கொள்வார்கள்.
    நானும் பொங்கல் செய்யும் போது ஓரிரு பச்சை மிளகாயை அதனுடன் சேர்ப்பேன்.

    மேடைக்கச்சேரி செய்யும் காகம் படம் அருமை. தியானத்தின் போது தங்களின் கற்பனை சிறகடித்ததை குறிப்பிட்டு விவரித்ததும் அருமை. அழகான எழுத்துக் கோர்வையை ரசித்தேன்.

    எனக்கும் தியானம் பண்ண அமர்ந்தால் மனதுக்குள் ஏதோ நினைவுகள்தான் சுற்றி வரும். என் மகன் இளையவன் இப்போது "தியானம் செய் அம்மா" என்று எவ்வளவு வறுப்புறுத்தினாலும், முழுமனதாக கண்களை மூடி தியானம் செய்ய முடியவில்லை. அதற்கென பயிற்சி கடுமையாக எடுத்துக் கொண்டால் ஓரளவு சித்தியாகும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

    நல்ல விபரமான எழுத்துக்கு நன்றி சகோதரி. இதன் இறுதிப்பகுதியையும் தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா ஆந்திரா உணவு காரம் தான் ஆனால் அதன் சுவை தனி. இப்போது குறைந்திருக்கிறது காரம். நாங்களும் ஒரு காலத்தில் ஊறுகாயை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டதுண்டு கமலாக்கா...ஆமாம் சென்னை வெயிலுக்கு ஆகாது. ஆனா பாருங்க அவங்க நெய் அல்லது எண்ணை நிறைய விட்டுத்தான் சாப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன் நாங்கள் அப்படித்தான்.

      ஆ ஆ கமலாக்கா என் எழுத்தையே அழகான எழுத்துக் கோர்வைன்னு சொல்றீங்களே....நன்றி கமலாக்கா

      ஹஹாஹா தியானம் செய்ய என்று தனி நேரம் ஒதுக்காமல் பிரார்த்திக்கும் போதே மனதில் இறைவனை நினைத்து அப்படியே ஒரு சில நிமிடங்கள் ஆழ்ந்து போவது நல்லா இருக்கே என்று இப்போது அப்படித்தான் கமலாக்கா.
      மனம் இன்னும் குரங்காகத்தான் இருக்கிறது.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு