வெள்ளி, 2 செப்டம்பர், 2022

ஆக்சிஜன் ஜார் - விலங்கன் குன்று

 

சென்ற பதிவைப் பார்த்த, வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றியுடன், சமீபத்தில் குடும்ப நிகழ்வு ஒன்றிற்குக் குடும்பத்தோடு பயணம் செய்த போது வீட்டிலிருந்து கொண்டு சென்றிருந்த உணவைச் சாப்பிட, வழியில் நல்ல இடம் தேடிய போது அப்படிக் காணக் கிடைத்த அழகான ஓர் இடத்தைப் பற்றி உங்களுடன் பகிரலாமே என்று இந்தப் பதிவு.


குருவாயூர் செல்பவர்கள், குருவாயூர் சென்றுவிட்டு வரும் போதோ, போகும் போதோ, வழியில் முக்கியச் சாலையிலிருந்து திரும்பி 2 - 2 1/2 கிமீ தூரத்தில் அமைந்துள்ள மிகவும் அழகான, அருமையான இந்த விலங்கன் குன்றைக் கண்டு களிக்கலாம். விலங்கன். விலங்கன் என்றாலுமே குன்று என்றுதான் பொருள். 1970 வரைக்குமே கூட விலங்கன் என்றுதான் சொல்லப்பட்டு வந்தது. அதன் பின் தான் விலங்கன் ஹில்ஸ்-விலங்கன் குன்னு/குன்று என்று சொல்லப்பட்டுவருகிறது.

குருவாயூரிலிருந்து 21 கிமீ தூரம். திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 9-10 கிமீ தூரம்தான். அருகில் அமலா மருத்துவமனை-மருத்துவக் கல்லூரி இருக்கிறது. சோபா சிட்டி மால் என்று ஒரு மால் இருக்கிறது. இவற்றிற்கு இடையில் இருப்பதுதான் இந்தக் குன்று. அதன் பின் லுலு கன்வென்ஷனல் மையத்திற்கு மிக அருகில்-இரண்டரை கிமீ தூரத்தில் இருக்கிறது.

திருச்சூரிலிருந்து குருவாயூருக்கு காரில் செல்கிறீர்கள் என்றால் சோபா சிட்டி ஜங்க்ஷன் தாண்டியதும் 1 கிமீ செல்லும் போதே இடது பக்கம் ஒரு சாலையில் ஒரு நுழைவு வாயில் இருக்கிறது. அதனுள் 2 ½  கிமீ தூரம் வளைந்து செல்லும் மலைப்பாதையில் சென்றால் இந்த விலங்கன் குன்று இடத்தை அடையலாம். அருமையான இடம்.

தடுப்புக் கம்பிகள் உள்ள நடை பாதை

260 அடி உயரத்துக்கு நாம் வண்டியை ஓட்டிச் செல்ல வேண்டும். சாலை அவ்வளவு நல்ல சாலை என்று சொல்ல முடியாது. இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் இல்லாததால் சமாளித்து மேலே குன்றினுக்குச் சென்றுவிடலாம். மேலே சென்றதும் வலப்புறம் திரும்பி வண்டியை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்திவிட்டு அப்படியே சுற்றி நடந்தால் நல்ல பாதுகாப்பான இரும்பு வேலி போன்ற தடுப்புக் கம்பிகள் உள்ள நடை பாதை (காணொளியில் பார்த்தால் தெரியும்) இருப்பதால் அதில் நடக்கும் போது பாருங்கள் அருமையான நல்ல பசுமையான காட்சிகளைப் பார்த்துக் கொண்டே நடக்கலாம்.
கீழே உள்ள வாச் டவர்

இது திருச்சூரின் ஆக்சிஜன் ஜார்பிராணவாயு ஜாடிஎன்று சொல்லப்படுகிறது. அதாவது நல்ல சுத்தமான ஆக்சிஜன்-பிராணவாயு கிடைக்கும் இடம். சுற்றிலும் காட்சிகள் காணும் கோபுரம் (வாச் டவர்) ஒன்று இருக்கிறது. இதன் கீழும் சுற்றிலும் காட்சிகள் காண்பதற்கான இடம் உள்ளது. கீழிருக்கும் வாச் டவரிலிருந்து தூரத்தில் தெரியும் திரிச்சூர் நகரத்தைக் காணலாம். ரொம்பத் தெளிவாகப் பார்க்க இயலாதுதான் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருப்பதால் இருந்தாலும் கீழே இருக்கும் பகுதியில் ரப்பர் தோட்டங்கள், மரங்கள் மற்றும் கொஞ்சம் அப்புறத்தில் பார்த்தால் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலங்கள் தெரியும்

கோல் நிலங்கள்

அந்த நிலங்கள் கோல் நிலங்கள் என்று சொல்லப்படும். கோல் பாடங்கள்/கோல் நிலங்கள் (மலையாளத்தில் கோல் பாடங்கள். தமிழில் என்னவென்று தெரியவில்லை.) என்றால் மழைக்காலத்தில் நிறைய தண்ணீர் தேங்கி நிற்கும் அதே சமயம் வேனிற் காலத்தில் வேளாண்மை செய்யலாம். இப்படி வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே இந்த வகை நிலங்களை விளைச்சலுக்குப் பயன்படுத்த முடியும்.

அப்படியே நடந்து வரும் போது நம் இடப்பக்கம் பார்த்தால் பூங்கா, விலங்கன் குன்று என்று சொல்லக் கூடிய குன்று. வலப்பக்கம் பார்த்தால் இறக்கம், மரங்கள், தாழ்வான பிரதேசங்கள். இந்த இயற்கையைப் பார்த்துக் கொண்டே சுத்தமான காற்றை சுவாசித்துக் கொண்டே நடந்து வந்து விலங்கன் குன்றின் உச்சியைச் சுற்றி வந்துவிடலாம். இந்த இடத்தில் சாப்பிடுவதற்கான இடம், கொறிப்பதற்கான பதார்த்தங்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. இதுவரை சொல்லப்பவை  மேலே உள்ள பகுதி

உழவர் சிலை

கீழே உள்ள பகுதிக்கு நாம் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டுதான் உள்ளே செல்லமுடியும். நுழைவு வாயில் கதவுகள் உண்டு. பாதுகாப்பாளர் உண்டு. மேலேதான் இதன் அலுவலகம். இதன் திறப்புவிழா நடத்திய போது அதன் தகவல்களுடனான கல்வெட்டுகள் உள்ளன. (காணொளியில் பார்க்கலாம்) அப்படியே நடந்து சென்றால் மேலே வலப்புறம் பார்க்கிங்க் இடத்தை ஒட்டி திறந்தவெளி மைதானம் இருக்கிறது. நிகழ்ச்சிகள் நடத்தும் அளவிற்குப் பெரியதாக இருக்கிறது. அப்படியே பார்த்துக் கொண்டு நடந்தால், உழவரும் அவர் குடும்பமும் இருப்பது போன்ற அழகான சிலை உள்ளது.

மேலே உள்ள வாச் டவர்

சுற்றிலும் உள்ள காட்சிகளைக் காணும் கோபுரம் பற்றி மேலே சொல்லிய பகுதியில் மேலே ஒன்றும் சற்றுக் கீழே ஒன்றும் இருப்பதாகச் சொல்லியிருக்கிறேன் இல்லையா,  மேலே உள்ள இந்த வாச் டவருக்குச் செல்லும் வழியில் வலப்புறத்தில் குழந்தைகளுக்கான ஒரு பூங்கா உள்ளது.

ஊரின் வீடுகள், தேவாலயம்

இந்த வாச் டவரிலிருந்து பார்த்தால் மேலே சொன்ன அதே காட்சிகள்தான், கோல் நிலங்கள், ஆறா குளமா என்று தோன்றக் கூடிய அளவு நீர் நிறைந்து இருக்கும் நிலங்கள், சற்று இடப் பக்கம் பார்த்தால் ஒரு தேவாலயம், ஊரின் வீடுகள் எல்லாம் தெரியும். வலப்பக்கம் பார்த்தால் அடர்த்தியான மரங்கள். இந்த மரங்களுக்கு அப்பால் உள்ள இடங்களான சோபா சிட்டி மால் போன்றவையும் இன்னும் பிற காட்சிகளையும் வளர்ந்திருக்கும் மரக்கிளைகளைக் கொஞ்சம் வெட்டினால் பார்க்க முடியுமாக இருக்கலாம்.

சின்ன வாச் டவர் படிகளுடன்
நுழைவுக் கட்டணம் தேவையில்லாத பூங்கா

அந்த திறந்த வெளி மைதானத்தைக் கடந்து எதிர்ப்புறம் வந்தால் மற்றொரு சின்ன வாச் டவர் படிகளுடன் உள்ளது. படிகளில் ஏறி மேலே சென்றால் இந்தக் குன்றின் மறு பகுதியில் உள்ள இடங்களைப் பார்க்கலாம். ஆனால் அங்கும் மரங்கள் வளர்ந்து காடுகள் உள்ளன. இதை அடுத்து இருக்கும் மிக அருமையான குழந்தைகள் பூங்காவிற்கு நுழைவுக் கட்டணம் தேவை இல்லை. இதில் சறுக்கு மரங்கள், ஊஞ்சல்கள் என்று குழந்தைகளை மகிழ்விப்பவை எல்லாம் உள்ளன. மிக அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள். இப்போது கோவிட் வந்த காரணத்தால் அதிகம் ஆட்கள் வர முடியாமல் போய்விட்டது இல்லை என்றால் நல்ல கூட்டம் வரும் ஒரு பகுதி என்று சொல்லலாம்.


நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டிய குழந்தைகள் பூங்கா

நுழைவுக் கட்டணம் செலுத்திச் செல்லும் குழந்தைகள் பூங்கா ஒன்றும் ஒரு பகுதியில் உள்ளது. அதில் ஹார்ர் ஹவுஸ் போன்றவை உள்ளன. ஒவ்வொன்றிற்கும் தனியாகக் கட்டணம் செலுத்திச் செல்ல வேண்டிய குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள் இதில் இருக்கின்றன. சிறிய உணவகமும் உள்ளது

இப்படிப் பெரியவர்களும், குழந்தைகளும் பார்த்து அனுபவித்து மகிழும் இடமாக இந்த விலங்கன் குன்று எனும் இடம் உள்ளது.

முழு காணொளியும் இதோ கீழே என் குரலுடன் உள்ளது யுட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன்.

https://youtu.be/tCpRzdAMPO8


 -----துளசிதரன்


23 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான இடம்.  அழகிய படங்கள், காணொளி.   சுலபமாக இங்கே ஒரு நாள் பொழுதை  கழிக்கலாம் போல...  சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கிறது என்பது கூடுதல் கவர்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ரீராம்ஜி, நல்ல இடம் ஒரு நாள் பொழுதைக் கழிக்க உதவும். சுற்றிலும் மரங்கள் என்பதால் நல்ல காற்று.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
    2. காணொளியும் பார்த்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  2. அழகான படங்கள் விவரிப்பு அருமை காணொளியும் கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை ரசித்ததற்கும், காணொளி கண்டதற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  3. இந்த சுற்றுலாத் தளம் பற்றி இப்போது தான் அறிகிறேன். காணும் போது இந்த தளத்திற்கு செல்ல சொந்த கார் அவசியம் என்று தோன்றுகிறது. டாக்ஸி வாடகை கட்டுபடியாகாது. பொது போக்குவரத்து வசதிகள் குறைவு என்று தோன்றுகிறது.

    புகைப்படங்கள் நன்று. காணொளி டிரைபாட் போட்டு எடுக்காததால் ஆட்டம் கண்டு விட்டது. காமெரா விழுந்து விடுமோ என்ற பயத்துடன் எடுக்கப்பட்டதாக தோன்றுகிறது. என்றாலும் காணொளி பார்க்கத் தக்கதாக உள்ளது. நீளம் கச்சிதம். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜெயகுமார் சந்திரசேகரன் சார், இந்த இடத்திற்குச் செல்ல வண்டி அவசியம். திரும்பும் இடம் வரைக்கும் கூட சென்றுவிடலாம். அதன் பின் உள்ளே 2 1/2 கிமீ செல்வதற்கு வண்டி அவசியம் தான். விரைவில் அதுவும் வந்துவிடலாமாக இருக்கும். பொதுப் போக்குவரத்தும் வண்டிகளும் அதிகமானால் ஆக்சிஜன் ஜார் எனும் பெயரை அது இழக்கவும் கூடும்.

      ட்ரைபாட் போட்டு சுழற்றி எடுக்க முடியாதே இது நான் திட்டமிட்டுச் சென்ற இடமும் இல்லை. வழியில் சாப்பிட ஏற்ற இடம் பார்த்த போது அப்படிக் கண்ட இடம். நடந்து கொண்டே மொபைலில் சுற்றி எடுத்தேன். அதனால் அப்படி வந்திருக்கிறது. கேமரா இல்லை. மொபைலில் எடுத்ததுதான்.

      உங்கள் விரிவான கருத்திற்கு மிக்க நன்றி சார்

      துளசிதரன்

      நீக்கு
  4. படங்களும், காணொளியும் நன்றாக இருக்கிறது. உங்கள் குரலில் விவரிப்பு அருமை.
    சுத்தமான காற்றை சுவாசிக்க அமைதியாக குடும்பத்தினருடன் நடந்து இயற்கையை ரசிக்க ஏற்ற இடம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் குடும்பத்தோடு சென்று அனுபவித்துவிட்டு வரலாம். பதிவையும் படங்களையும் காணொளியையும் ரசித்ததற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

      துளசிதரன்

      நீக்கு
  5. நல்ல இடம். படங்களும் அருமை. காலையிலேயே படித்தாலும் கருத்திடவில்லை. நெல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல இடம். படங்களும் அருமை.//

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      எப்போது முடிகிறதோ அப்போது கருத்து இடலாம். என்னாலும் கருத்துகள், பதில்கள் அனுப்ப இயலவில்லை அல்லது மிகவும் தாமதமாகத்தான் அனுப்ப முடிகிறது. சமீபத்தில் பல பிராயணங்கள், கல்லூரிப் பணி, வீட்டு பொறுப்புகள் என்று நேரம் சரியாக இருக்கிறது. இப்போதும் கூட மகள் பங்கெடுக்கும் மகளின் கல்லூரி நிகழ்விற்காகக் குடும்பத்தோடு சென்றிருக்கிறேன்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  6. நுழைவுக் கட்டணம், அவற்றை உடைத்துவிடாமல், பெரியவர்களும் உபயோகிக்காமல் கண்காணிக்க ஆட்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பயன்படுமல்லவா? குழந்தைகளுக்கான ஊஞ்சல் என்று இருந்தால் பெரியவர்களும் ஆடிச் சேதப்படுத்துஙது நம் வழக்கமல்லவா? நெல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நுழைவுக் கட்டணம், அவற்றை உடைத்துவிடாமல், பெரியவர்களும் உபயோகிக்காமல் கண்காணிக்க ஆட்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பயன்படுமல்லவா?//

      ஆமாம். பதிவில் சொல்லியிருப்பது போல் இருவகைப் பூங்காக்கள் உள்ளன. நுழைவுக்கட்டணம் தேவையாக உள்ளதில் நிறைய அம்சங்கள் உள்ளன. இரண்டு வகையும் இருக்கின்றன என்ற தகவல் சொல்லியிருக்கிறேன்,

      இந்தக் குன்றிலே கூட கீழே உள்ள பகுதிக்கு நுழைவுக் கட்டணம் உண்டு. நீங்கள் சொல்லியிருப்பது போல் சேதப்படுத்திவிடுவார்கள்தான் நம் மக்கள். பொதுமக்களுக்கு அனுமதிக்கும் போது பரமாரிப்பு அவசியம்தானே.

      உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      துளசிதரன்

      நீக்கு
  7. அருமையான இடம்... விலங்கன் குன்று அவசியம் செல்ல வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி. வாய்ப்பு கிடைத்தால் வந்து பாருங்கள் நல்ல இடம்

      துளசிதரன்

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகிய இடத்தைப் பற்றிய படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. படங்களின் அழகு மனதை கவர்கிறது. நல்ல விபரமாகவும் அந்த இடத்திற்கு செல்லும் மார்க்கம் குறித்தும் தெளிவாகவும் பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். குருவாயூருக்கு முன்பு ஓரிரு முறை சென்றிருக்கிறோம் இனி செல்லும் சந்தர்ப்பம் அமைந்தால் தங்கள் பதிவின் வாயிலாக இந்த இடத்திற்கும் சென்று கண்டு களிக்கலாம். அங்கு குழந்தைகளுக்கு உற்சாகம் தரும் பூங்காவைப் பற்றி நன்றாக கூறியுள்ளீர்கள். இந்த இடத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் எங்கள் வீட்டு சிறு குழந்தைகளுக்கும் மிகவும் உற்சாகமாக இருக்கும்.

    அங்குள்ள பசுமை கண்களை கவர்கிறது. காணொளியும் பார்த்து, கேட்டு மகிழ்ந்தேன். இந்தப்பதிவுக்கு உடனடியாக வர இயலவில்லை. உங்களின் முந்தைய பதிவுகளுக்கும் வர இயலவில்லை. வருந்துகிறேன். காரணம் என் கைபேசிக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக உடல் நலமில்லாமல் போய் விட்டது. அதனால் வலையுலகிற்கே வர இயலாத நிலை ஏற்பட்டது பகிர்வுக்கும மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான இடம். குருவாயூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் இங்கு செல்வதையும் குறித்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் மிகவும் உற்சாகமாக ரசிப்பார்கள் .

      ஆம் உங்கள் கைப்பேசி சரியில்லாமல் ஆகி நீங்கள் புது கைப்பேசி வாங்கியது எல்லாம் உங்கள் பதிவை வாசித்து தெரிந்து கொண்டேன் கருத்தும் அனுப்பினேன். தாமதமாக. அங்கு கீதாவால் பதிய முடியவில்லை என்று நினைக்கிறேன். வேறு பதிவுகளுக்கும் நான் அனுப்பியதைப் போடவில்லை என்று தெரிகிறது. என் பதிவுகளின் வேலையே அவருக்குச் சரியாக இருக்கும். வீடியோ ஆடியோ சேர்த்தல் எடிட் செய்தல், பதிவு டைப் செய்தல் என்று.

      //உங்களின் முந்தைய பதிவுகளுக்கும் வர இயலவில்லை. வருந்துகிறேன்//

      அதனாலென்ன, பரவாயில்லை. எல்லோருக்கும் அப்படி நிகழ்வதுண்டுதானே. முடிந்த போது வாசியுங்கள் சகோதரி

      விரிவான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்

      துளசிதரன்

      நீக்கு
  9. படங்கள், காணொலி மற்றும் பதிவு கண்டு மகிழ்ந்தேன். அவசியம் ஒருமுறையேனும் சென்று வர வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டு ரசித்ததற்கு கரந்தையா அவர்களுக்கு மிக்க நன்றி. வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வாருங்கள்

      துளசிதரன்

      நீக்கு
  10. பதில்கள்
    1. கருத்திற்கு மிக்க நன்றி நண்பர் நாகேந்திர பாரதி

      துளசிதரன்

      நீக்கு
  11. அழகான இடம் அண்ணா. உங்கள் குரலில் காணொளி சிறப்பு. subscribed to your youtube channel too.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கிரேஸ் பதிவை ரசித்ததற்கும். சானலை சப்ஸ்க்ரைப் பண்ணியதற்கும்

      துளசிதரன்

      நீக்கு