புதன், 14 செப்டம்பர், 2022

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 17 - லால்பாக் மற்றும் மலர் கண்காட்சி - 1


லால்பாக் என்றாலே எல்லோருக்கும் தெரிந்துவிடும். பெங்களூருவில் உள்ள லால்பாக் என்று. லால்பாக் - லால் என்றால் சிவப்பு. பாக் என்றால் தோட்டம். ஹிந்தி மற்றும் உருது கலந்த மொழியான ஹிந்துஸ்தானி-பாரசீக மொழியில் சிவப்புத் தோட்டம் மற்றும் மனதிற்கினிய தோட்டம் என்று பொருள்.  தாவரவியல் கலைப்படைப்பு மற்றும் தாவரங்களைப் பாதுகாப்பதற்கான மையமாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற, Incredible India ல் இடம் பெற்ற, ஆசியாவிலேயே மிகப் பெரிய தாவரவியல் பூங்கா. 

240 ஏக்கர் பரந்து விரிந்திருக்கும் இப்பூங்காவைச் சுற்றிட ஒரு நாளில் இயலாது. 

வருடந்தோறும் இப்பூங்காவில் மலர்க்கண்காட்சி நடக்கும். கோவிட் சமயத்தில் கண்காட்சி நடை பெறாததால் இந்த வருடம் மலர் கண்காட்சி நடைபெற்றது.  

என் வாழ்நாளில் முதன் முறையாக நான் பார்த்த மலர் கண்காட்சி. பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த மலர்கள் அனைத்தும் மனதைக் கவர்ந்தாலும், வழக்கம் போல் ஏதோ எதிர்பார்த்துச் சென்ற காரணத்தினாலோ என்னவோ, கண்காட்சியின் அமைப்பும் நடைபெற்ற விதமும் மனதைக் கவரவில்லை. 

ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஓர் அடையாளச் சின்னம் அல்லது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் விதத்தில் மலர் கண்காட்சி பூங்காவின் புகழ்பெற்ற கண்ணாடி மாளிகையில் நடைபெற்று வருவதுண்டாம். 

அப்படி இம்முறை மறைந்த நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது மறைந்த மகன் நடிகர் புனித் ராஜ்குமார் இவ்விருவரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் வகையில் மலர் கண்காட்சி நடைபெற்றது. அவர்களது வீடுகளைப் போன்று 3 1/2 லட்சம் மலர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்ததாம். 

கண்ணாடி மாளிகைக்குள் செல்ல பெரிய வரிசை மற்றும் கூட்டம் தள்ளு முள்ளு என்பதாலும் இப்படியான மலர் கண்காட்சிகளைக் காணும் மனம் இல்லை என்பதாலும்  நான் உள்ளே செல்லவில்லை.

பூங்காவிற்குள் சென்று சிறு பகுதியைப் பார்த்துக் கொஞ்சம் சுற்றிவிட்டு,  மரத்தில் செதுக்கப்பட்டிருந்த அழகான வடிவங்கள் கண்ணில் பட்டவற்றை க்ளிக்கிக் கொண்டு, மலர் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பூக்களைக் கண்டு சில க்ளிக்ஸ் எடுத்துவிட்டு, பூங்காவில் பூச்செடிகளில் அழகாக வடிவமைத்திருந்த சில வடிவங்களையும் அடாது மழை பெய்தாலும் விடாது க்ளிக்குவோம்னு க்ளிக்கிவிட்டு வெளியில் வந்தாச்சு. 

அவற்றில் சில இப்பதிவிலும் மிச்சத்தை அப்புறம் சில பதிவுகளாகவும் போடுகிறேன்.

லால்பாக் மெட்ரோ நிலையத்தில் இருந்து இறங்கி நடந்தால் அப்பகுதியில் உள்ள நுழைவுவாயில் வழியாக உள்ளே சென்ற போது அங்கிருக்கும் விளக்குக் கம்பத்தில் ஒன்று
அப்பகுதியில் நுழைந்து கொஞ்சம் நடந்ததும் உள்ள ஆழகான பாறையும் அதன் மேல் இருக்கும் மண்டபமும் மண்டபம் முழுவதும் எடுக்க முடியவில்லை மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால். இதுவுமே நான் எடுத்த போது ஃப்ரேமிற்குள் டக்கென்று அமுல் ஐஸ் வண்டி நுழைந்துவிட்டது!

பாறையின் மடிப்புகள் என்ன அழகு!! இல்லையா? இப்படி தானாக உருவாகிய வடிவம்தானோ?  நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். நிறைய எடுக்க ஆசை ஆனால் மக்கள் அதிகம் ஃப்ரேம் சரியாக வைக்க முடியவில்லை.
புறாக்களுக்கான வீடு கொஞ்சம் கிட்டப் பார்வையில் - எபி யில் தூரத்துப் பார்வையில் எடுத்தது போட்டிருந்த நினைவு
புறாக்களின் வீட்டைக் கடந்து உள்ளே நடந்த போது.... தூண்
ஏரியை நோக்கி நடந்த போது......கையையும் விரல்களையும் விரித்து நடன வடிவத்தில் போஸ் கொடுப்பது போன்று!!!
இதுவும் சிகை அலங்காரத்துடன் இப்படித் தலையைத் தாழ்த்தி நிமிர்த்தி ஆடும், ஒரு குழு நடனம் போல என் மனதில் தோன்றியது
இந்த மரங்கள் கொஞ்சம் தூரத்திலிருந்து ஒரு கோணத்தில்...
அதே மரங்கள்தான்... நேரே கோணத்தில். இரு புறமும் ஏரி. நடுவில் பாலமும் அதைத் தொடர்ந்து இந்த மரங்களின் அணிவகுப்பின் இடையில் பாதை. மக்கள் அதிகம் நடந்து கொண்டிருந்ததால் அவர்கள் வராமல் எடுத்த படம்
கொஞ்சம் கூட்டம் குறைந்து அடுத்து மக்கள் வருவதற்குள் இன்னும் கேமராவை சற்று தழைத்து டக்கென்று ஒரு க்ளிக். மழை மேகம் மழை பொழியத் தயாராக...

இதுவரை உள்ள படங்கள் பூங்காவில் எடுக்கப்பட்டவை. இனி காட்சியில் வைக்கப்பட்டிருந்த பூக்கள், மற்றும் வேறு படங்கள் அப்புறம் வரும் பதிவுகளில். மலர் கண்காட்சின்னு சொல்லிவிட்டு ஒரு பூப் படம் கூடப் போடவில்லை என்றால்? அதனால ஒன்று இப்போது.

Bromelia - ப்ரோமெலியா வகை

மலர் கண்காட்சி என்பதைவிட சாப்பாட்டுக் கடைகள்தான் அதிகம் இருந்தன. மலர்களுக்குத் தேனீக்களும் வண்டுகளும் வரவில்லை.  ஆனால் சாப்பாட்டுக் கடைகளை மக்கள் கூட்டம் மொய்த்தது.

மக்களுக்கு அறிவில்லை என்றால் பூக்காட்சியை நிறுவியவர்களுக்கும் அறிவு வேணாம்? மலர் கண்காட்சிக்குப் பிறகு பூங்கா முழுவதும் சாப்பாட்டுக் குப்பைகளும், கடைகள் நடத்தியவர்கள் போட்ட குப்பைகளும் என்று பூங்கா குப்பைக் கிடங்காக மாறி இருந்த படங்களைப் பார்த்த போது இந்த மலர் கண்காட்சி எல்லாம் தேவையா என்று தோன்றியது. 

கீழுள்ள இந்த மூன்று படங்களும் கூகுள்-இணையம்-ஹிந்து நாளிதழிலும் மற்றொரு செய்தித் தளத்திலிருந்தும் எடுக்கப்பட்டவை - நன்றி


(துளசியின் பதிவுகள் வந்திருக்க வேண்டும். 3, 4 சொல்லியிருந்தார். ஆனால், ஞாயிறிலிருந்து அவரைத் தொடர்பு கொள்ள இயலாத நிலை, யாரையுமே தொடர்பு கொள்ள இயலாத நிலை (விட்டு வந்த மொபைல் இன்றுதான் வரும் என்று நினைக்கிறேன்) என்பதால் என்னிடம் இப்பதிவு ஏற்கனவே கொஞ்சம் தயாராக இருந்ததால் சட்டென்று இன்று போடுகிறேன். பதிவு புதியதாய் எழுதவும் நேரமின்மையும் காரணம். மொபைல் இல்லாததால் என் மின்னஞ்சலுக்கும் செல்ல முடியவில்லை. ஆனால் ப்ளாகருக்குள் செல்ல முடிந்ததால் பதிவு, கருத்துகள் என்று..) 

 

----கீதா

 

41 கருத்துகள்:

  1. அழகிய படக்காட்சிகள். அருமையாக இருக்கிறது.

    எவ்வளவோ இடங்களில் குப்பைக்கூடைகள் இருந்தன. ஒவ்வொரு கடையின் அருகிலும் இருந்தன. இருந்தாலும் மக்கள்தாம் ஒழுங்குமுறையைப் பின்பற்றவேண்டும்.

    பெங்களூரே மலைப்பகுதி, பாறைகளினால் ஆனது என்பதை இங்குள்ள ரோடுகளைப் பார்த்தே சொல்லிவிடலாம். சில பகுதிகள் அதலபாதாளத்திலும் சில வீடுகள் மேட்டிலும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை குப்பைக் கூடைகள் இருந்தனதான். மக்கள் ஒழுங்கு முறையைப் பின்பற்ற வேண்டும்தான் அதே மக்கள்தான் கடை நடத்தியவர்களும் அவர்களும் பின்பற்றவில்லை. எனக்கு என்ன தோன்றியது என்றால், பூங்காவில் இப்படிக் கடை அமைத்து வியாபாரிகளுக்கு உதவும் எண்ணம் இருப்பது நல்லதுதான் ஆனால் அதே சமயம் அவர்கள் கடை அமைக்க அனுமதி கோரும் போது, சொல்லிவிட வேண்டும், யார் குப்பை போட்டாலும் எல்லாக் கடையாளர்களிடமும் அபராதத் தொகை விதிக்கப்படும் என்று. அப்ப பாருங்க அவங்களே சுத்தம் பண்ணிவிட்டுப் போவார்கள் அலல்து மக்களை ஒழுங்கு படுத்துவார்கள். மக்களிடம் டிக்கெட் பணம் வசூலித்ததாலும் மற்றபடி அவர்கள் யார் குப்பை போட்டார்கள் என்றும் கணக்கிட முடியாதே...அதனால் இப்படி எனக்குத் தோன்றியது.

      ஆமாம் பெங்களூர் மலைப்பகுதிதான் 3000 ஆயிரம் அடி கடல்மட்டத்திலிருந்து உயரம். ஆமாம் சில பள்ளத்திலும் சில மேட்டிலும் இருக்கின்றனதான். இங்கு எங்கள் பகுதியில் சாலை சில இடங்களில் மேலே ஏறும்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. விற்பனையாளர்களும் இதுக்கு ரெஸ்பான்ஸிபிள். அவங்கதானே குப்பை போடும்படியான உணவை விற்கிறாங்க (தட்டு, குச்சி போன்று). இருந்தாலும், 75 ரூபாய் நுழைவுச்சீட்டு ரொம்ப அதிகம்தான். அதனால பூங்கா ஆட்களே சுத்தம் பண்ணிக்கட்டும். என்ன சொல்றீங்க?

      நீக்கு
    3. ஆமாம் விற்பனையாளர்களும் காரணம்தான். 75 ரூ அதிகம்தான். ஹாஹாஹா அதானே பூங்கா ஆட்களே சுத்தம் பண்ணிக்கட்டும்னு சொல்லலாம்தான்...நெல்லை ஆனா நம்ம மக்களுக்கு இன்னும் கூடிவிடுமே பொறுப்பு அதான் குப்பை போடும் பொறுப்பு!!!!!....ஆட்கள் இருக்காங்களே அவங்க பாத்துப்பாங்கன்னு...

      பல வீடுகளில் சொல்வதுண்டே...பைசா கொடுக்கறோமே வேலை செய்பவருக்கு அவங்க வந்து செய்யட்டும்னு ஸ்பூன் கூடக் கழுவாமல் போடுவதுண்டு. இது பொதுவாக ஒரு சார்ந்திருக்கும் தன்மையை வளர்த்துவிடுகிறதோ? வேலை செய்பவர் ஒரு நாள் வரவில்லை என்றாலும் வீட்டில் ஸ்பூன் கூடக் கழுவாமல் வீட்டில் உள்ள பாத்திரங்கள் அனைத்தும் சிங்கிலும் அருகிலும் இருக்குமே அப்படி?

      கீதா

      நீக்கு
    4. //வேலை செய்பவருக்கு அவங்க வந்து செய்யட்டும்னு ஸ்பூன் கூடக் கழுவாமல் போடுவதுண்டு. // - எனக்கு இப்படி இருப்பது பிடிக்காது. தேவையில்லாத வேலைகளெல்லாம் வேலை செய்பவருக்குக் கொடுக்கக்கூடாது. அதுவும் தவிர, நமக்குன்னு ஒரு டிஸிப்ளின் வேண்டும் இல்லையா?

      நீக்கு
    5. ஹைஃபைவ் நெல்லை!! இதே கருத்துதான் எனக்கும். கண்டிப்பாக நமக்குன்னு ஒரு டிசிப்ளின் வேண்டும்.

      நான் பல வீடுகளில் பார்க்கிறேன். நெல்லை. எனக்கு ஆச்சரியமாக இருக்கும்...

      கீதா

      நீக்கு
  2. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    பூங்காவில் இவ்வளவு குப்பைகளா ? டிஜிட்டல் இந்தியாவில் இப்படி இருக்கலாமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி கில்லர்ஜி.

      ஹாஹாஹா கில்லர்ஜி டிஜிட்டல் னா குப்பை இருக்கக் கூடாதா? எந்த இந்தியாவா இருந்தா என்ன குப்பை போடக் கூடாதுதானே...

      கீதா

      நீக்கு
  3. லால்பாக் பேர் விளக்கம், படங்கள் எல்லாம் அழகு. மழை மேகம் சூழ்ந்து இருக்கும் படங்கள் அருமை. பறையின் மடிப்புகள் அழகு.
    புறா வீடு அழகு. மயில் தோகையுடன் இருக்கும் விள்க்கு கம்பம், விளக்கு தூண் எல்லாம் அழகு

    கடைசி மூன்று படங்களை பார்க்கும் போது "ஏன் இப்படி" என்று என்ன தோன்றுகிறது. கடையை காலி செய்பவர்கள் குப்பைகளை சுத்தம் செய்து இருக்கலாம். மக்கள் குப்பை கூடைகளில் குப்பைகளை போட்டு இருக்கலாம்.

    கடை நடத்துபவர்கள் சுத்தம் செய்யவில்லை என்றால் அடுத்த முறை கடை நடத்த அனுமதிக்க கூடாது. மக்கள் குப்பை போடுவதை பார்த்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களையும், விளக்கத்தையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி கோமதிக்கா...முதன் முதலில் லால்பாக் பார்த்த போது அறிந்து கொண்டதுதான் அந்த விளக்கம்

      ஆமாம் கடையைக் காலி செய்தவர்கள் குப்பைகளை அகற்றியிருக்க வேண்டும்.

      நீங்கள் சொல்லியிருப்பது போல் அபராதம் விதித்தால்தான் மக்கள் திருந்துவார்கள். சிங்கப்பூரில் எல்லாம் இல்லையா? அது போல

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. முதல் படமே மனதை மிகவும் கவர்ந்தது. கோபுர படம், பாறைகளின் மடிப்பு, விசிறி வாழை அனைத்தும் ரம்யம். இது போன்ற படங்களை நாங்கள் சென்ற தருணத்தில் எடுத்த (எங்கள் குழந்தைகளின் கைப்பேசியில்தான்) நினைவுகள் லேசாக வருகிறது. அவை ஹார்ட் டிஸ்க்கில் மாட்டிக் கொண்டு இருக்கிறதா போயிற்றா என்பதே தெரியவில்லை. அதற்கு இங்கு மெனக்கிட குழந்தைகளுக்கு நேரமும் இல்லை.

    நீங்கள் படங்களை பல வித கோணங்களில் துல்லியமாய் அழகாக எடுத்துள்ளீர்கள். ஒவ்வொன்றும் பார்த்து ரசித்தேன். படங்கள் ஒவ்வொன்றிற்கும் தங்களது விளக்கங்கள்தான் படிக்க மனதுக்கு எவ்வளவு நிறைவாக உள்ளது தெரியுமா? சிறந்த எழுத்தாளி என்ற பட்டத்தை நான் உங்களுக்கு தருகிறேன். 👍.மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி.

    இந்த ஊரின் மேடு பள்ளங்கள் ஒவ்வொரு இடத்திற்கும் நடக்கும் போதே தெரிந்து விடும். அதனால்தான் ஒரு வீட்டுக்கு பத்து வாகனங்கள் என தினமும் இங்கு ஏற்படும் டிராபிக் ஜாம்கள். இது தவிர்க்க முடியாத நிலைகள். என்ன செய்வது? ஒரு ஊரின் பசுமையை நாம்தான் கெடுக்கிறோமோ என்ற எண்ணமும் எனக்கு ஏற்படும். ஆனாலும் சுயநலமில்லாத மக்களை இனி சந்திப்பது கடினந்தான். புலம்ப ஆரம்பித்தால் என் புலம்பல்கள் ஒரு தொடர்கதையாகி விடும்.

    மேலும் தங்களின் அழகான படங்களையும், அருமையான எழுத்தையும் பார்க்க, படிக்க ஆவலாக உள்ளேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களையும் பதிவையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி கமலாக்கா..

      அது விசிறி வாழை இல்லை. பனை மர வகை.

      அக்கா எனக்கும் இப்படித்தான் எடுத்த படங்கள் நிறைய எல்லாம் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் உள்ளன. அதற்கு எப்போது மனம் இருக்கிறதோ அப்போதுதான் விரித்துக் காட்டும் இல்லை என்றால் எதையும் காட்டாது...நீ எங்கிட்ட கொடுக்கவே இல்லை என்று சொல்லிவிடும்!!!

      ஆஅ! அக்கா நான் கொடுத்த விளக்கங்களைப் பற்றியா!! பாராட்டு! பட்டம் எல்லாம்?!! ஓ மை! இங்க பல திறமைசாலிகள் இருக்காங்க கமலாக்கா...நீங்கள் உட்பட! நன்றி ஆனால் மிகுந்த வெட்கத்துடன்!

      பங்களூர் போக்குவரத்து பற்றி சில்லு சில்லாய் என் எண்ணங்களில் கொஞ்சம் எழுதி வைத்திருக்கிறேன். உங்கள் புலம்பல்கள்தான் பலருக்கும். அதனால் தொடர்கதைதான் அவை.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. ஆமாம். இது விசிறி வாழை வகை இல்லை. பனைமரத்தின் வகை. படத்தை பெரிதாக்கிப் பார்க்காமல் கமெண்ட் இட்டு விட்டேன்.

      லால்பாக் என்பதின் விளக்கமும் அருமை. இதையும் சொல்ல நினைத்து விட்டு விட்டது.நன்றி சகோதரி.

      நீக்கு
    3. அதனால் என்ன கமலாக்கா. மிக்க நன்றி கமலாக்கா...மீண்டும் வந்து கருத்து பதிந்தமைக்கு

      கீதா

      நீக்கு
  5. மிக அழகான புகைப்படங்கள்! மயில்கள் இருக்கும் விளக்குக்கம்பம் அலாதியான அழகு! குப்பைகளை பார்த்ததும் மிகவும் வருத்தமாக இருந்தது! பூங்கா நிர்வாகம் சரியாக வேலை செய்யவிலை என்று புரிகிறது. ஆனாலும் வெளிநாட்டினரும் வரும் இடம் என்கிற போது சற்று அவமானமாகவும் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி மனோ அக்கா.

      எனக்கும் தோன்றியது பூங்கா நிர்வாகம் கொஞ்சம் வேலை செய்திருக்கலாம் என்று. ஆமாம் வெளிநாட்டவர் வரும் இடம் வேறு இப்படி இருந்தால் எப்படி என்று பாருங்கள் செய்திகளில் வந்ததால் எல்லோரும் பார்த்திருப்பார்கள்தான்.

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  6. ப்ளாகருக்கும், மெயிலுக்கும் ஒரே ஐடி தானே? அல்லது நீங்க தனித்தனியா வைச்சிருக்கீங்களோ? புரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா வாங்க....உங்க கமென்ட்ஸ் எல்லாமே போட்டாச்சு...ஸ்பாமில் இருந்தவையும் சேர்த்து!!!

      அக்கா, ப்ளாகர் ஐடி துளசியின் ஐடி. அதுதான் அவருக்கான பெர்சனல் ஐடியும் கூட. என் ஐடி வேறு. அதனால் என் ஃபோன் நம்பர் செக்யூரிட்டி கேட்குமே அதன் வழியாக சைன் செய்ய வேண்டும் என்பதால் முடியவில்லை. இன்னும் கூரியர் வந்து சேரவில்லை.

      துளசியின் ஐடிதான் ப்ளாகர் ஐடி ப்ளாகர் போகக் கஷ்டமில்லை. அவர் மொபைல் வழிதானே. கணினி இல்லை. அவர் ஐடி மொபைல் வழி என்பதால் அது அவர் செட் செய்து வைத்திருப்பதால் அவருக்கும் மொபைலில் அங்கு பார்க்க முடியும்.

      ப்ளாகருக்குள் நுழையும் போது கூகுள் ஃபோன் செக்யூரிட்டி கேட்பதில்லை.

      மிக்க நன்றி கீதாக்கா

      ஹப்பா எல்லாப் பதிவுகளும் பார்த்திருக்கீங்க போல!!

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  7. ஹிஹிஹி கருத்து காக்கா ஊஷ்! ப்ளாகருக்கும் மெயிலுக்கும் ஒரே ஐடிதானேனு கேட்டிருந்தேன். மெயில் பாக்சுக்கும் அது வரலை! இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்துருச்சே!! ஸ்பாமில் இருந்தது போட்டாச்சே!!

      கீதா

      நீக்கு
  8. மாடரேஷனில் இருக்கோ? மலர்க்கண்காட்சிப் படங்கள் ஆரம்பமே நன்றாக இருக்கு. ஆனாலும் ஊட்டி மலர்க்கண்காட்சியைப் பார்த்துட்டு இதெல்லாம் ஜுஜுபினு எனக்குத் தோணும். மயில் அழகாய்ப் போஸ் கொடுத்திருக்கு. குப்பை கூளங்களைப் பார்த்து மனம் நொந்து போகிறது. இந்தியர்கள் இதில் எல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா இந்த மலர்காட்சி என்னையும் ஈர்க்கவில்லை. ஊட்டி ரொம்ப நன்றாக இருக்கும்.....ஒரு முறை பாத்திருக்கேனோ....ஆமாம் என்று நினைக்கிறேன். அப்ப இது இரண்டாவது முறையாக இருக்கும் நான் பார்த்தது. ஊட்டிக்கு ஒரு முறை துளசியின் குடும்பத்தோடு சென்றிருந்த போது மலர் கண்காட்சி என்று சொன்னார்கள்....அது மறந்தே போய்விட்டது, படங்கள் இருக்கா என்று பார்க்க வேண்டும். இருந்தால் எடுத்துப் போட வேண்டும்

      குப்பைக் கூளங்கள் அதை ஏன் கேக்கறீங்க...நீங்க சொல்வது போல் திருந்த வாய்ப்பே இல்லை. இதில் பான் போட்டுத் துப்பவும் செய்யறாங்களே என்னத்த சொல்ல?

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
    2. ஆமாம் கீதாக்கா மாடரேஷன் வைத்திருக்கிறேன். துளசியும் கருத்துகள் பார்க்க வேண்டும் என்பதற்காக. இல்லைனா மெயில் பாக்ஸிற்கு வரமாட்டேங்குதுன்னு அவர் சொல்லியதால்

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  9. மலர்க்கண்காட்சியில் எனக்கு அவ்வளவு சுவாரஸ்யமில்லை.  சில வருடங்களுக்குமுன் ஊட்டியில் மலர்க்கண்காட்சி பார்க்க வாய்ப்பு வந்தது.  பள்ளியிறுதி வகுப்பு அடித்துக் கொண்டிருந்தேன்.  அப்போதே சட்டென பார்த்து விட்டு வந்த நினைவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ உங்களுக்கும் அத்தனை சுவாரசியமில்லையா?!!! எனக்கும் கண்காட்சியில் சுவாரசியமில்லை. பூக்களை மட்டும் பார்த்து ரசித்துவிட்டு வந்தேன் பூங்காவையும் தான்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  10. படங்கள் அழகு.  விளக்குக்கம்பம், அந்த கோபுரம் எல்லாமே அழகு.  பாறை மடிப்புகள் கவரவில்லை.  அவை ஒரு வெறுமையைச் சொல்கின்றன என்று தோன்றியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அழகு. விளக்குக்கம்பம், அந்த கோபுரம் எல்லாமே அழகு.//

      மிக்க நன்றி ஸ்ரீராம் ரசித்தமைக்கு

      பாறை மடிப்புகள் கவரவில்லை. அவை ஒரு வெறுமையைச் சொல்கின்றன என்று தோன்றியது!//

      ஓஹோ!!! அந்த வெறுமையை ஒரு கவிதையாக்கி இருக்கலாமோ?!! சரி பரவால்ல இப்ப இல்லாட்டாலும் ஒரு வியாழனுக்கு கவிதையாக்கிடுங்க!

      மிக்க நன்றி ஸ்ரீராம், கவிதைக்கு அட்வான்ஸ் நன்றி!!!

      கீதா

      நீக்கு
  11. புறா வீடும், மரங்களின் அணிவகுப்பும் தூள்.   வெவ்வேறு திசைகளிலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் பாடங்கள் அருமை.  குப்படி..  இந்தியர்களின் தேசீய உரிமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்

      குப்பை இந்தியர்களின் தேசீய உரிமை//

      ஹாஹாஹா ..சிரித்துவிட்டேன். தேசியப் பறவை தேசிய கீதம் இருப்பது போல் தேசிய அடையாளம் என்று ஆக்கிவிடலாமா!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  12. புறா வீடும், மரங்களின் அணிவகுப்பும் தூள்.   வெவ்வேறு திசைகளிலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் பாடங்கள் அருமை.  குப்பை..  இந்தியர்களின் தேசீய உரிமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகளைக் களவாடுவதற்கு ப்ளாகர் கொடுக்கும் கமிஷன்?!!!!!

      கீதா

      நீக்கு
  13. படங்கள் அனைத்தும் அழகு...

    முடிவில் மூன்று படங்களும் வருத்தம் தருகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி,

      ஆமாம் மூன்று படங்களும் வருத்தம் தருபவை

      கீதா

      நீக்கு
  14. படங்கள் அழகு.குப்பைகள்தான் மனதை வருத்துகின்றன

    பதிலளிநீக்கு
  15. தாமதமாக வருகிறேன். லால்பாக் என்ற கோவிட் பெங்களூரில் பரவுகிறது போல் தோன்றுகிறது. கவுதமன் சார் தொடங்கி வைக்க நெல்லை பின்மொழிய தற்போது கீதா ரெங்கன். 

    படங்கள் பிரமாதம் என்றில்லாவிட்டாலும் தரமானவையாக இருக்கின்றன. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமாக வந்தால் என்ன ஜெகேசி அண்ணா பரவால்ல.

      ஹாஹாஹா //லால்பாக் என்ற கோவிட்!!!!!!//

      //படங்கள் பிரமாதம் என்றில்லாவிட்டாலும் தரமானவையாக இருக்கின்றன. //

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  16. அந்த சிறிய பனைமரம்தான் (Mexican Blue Palm) அழகோ அழகு.... அடுத்து இயற்கை பாறை மடிப்பும், செயற்கை புறா வீடும் மகிழ்வை தந்தன... நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெக்சிக்கன் ப்ளூ பனை என்பதைச் சொல்லவும் விட்டுப் போச்சு. அது அழகு அதனால்தான் எடுத்தேன். இங்கு அழகுக்காக வைக்கிறார்கள்.

      மிக்க நன்றி நாஞ்சில் சிவா, ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு