தமிழர்களுக்கு எப்படி பொங்கல் திருநாளோ அப்படி கேரளத்தவர்களுக்கு ஓணப் பண்டிகை. பொங்கல் வாழ்த்துக்கள் என்று சொல்வது போல ஓணாஷம்சகள் என்று சொல்லுவார்கள். அதாவது ஓணம் வாழ்த்துகள்.
தமிழர் திருநாள் என்பது போல் மலையாளிகளுக்கு ஓணத் திருநாள் என்று சொல்லலாம். உலகத்தின் எந்த இடத்தில் வசித்தாலும் சரி இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதுண்டு.
இந்துவாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை எந்த மத்த்தைச் சார்ந்தவர்களும், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லோருமே இப்பண்டிகையைக் கொண்டாடுவதுண்டு.
இப்பண்டிகையின் பின்னிலுள்ள ஐதீகம், இப்படி எல்லா மதத்தவரும் கொண்டாட முக்கியமான காரணம் மாவேலி எனும் மன்னன் ஆண்டு கொண்டிருந்த சமயத்திலே எல்லா மக்களையும் ஒரு போலக் கண்டிருந்த ஒரு மன்னன் என்பதால்.
கள்ளங்கள் சதியில்லா என்று சொல்லும் போது, களவோ, சதிகளோ இல்லாமல் இருந்த காலம். அப்படிப்பட்ட மகாபலிக்கு ஒரு சோதனை வந்தது. அரிச்சந்திரனுக்கு வந்த சோதனை போன்றது என்று சொல்லலாம். வாமனன் என்று சொல்லக் கூடிய பிராமண முனி ஒருவர் வந்து இவரிடம் தானம் கேட்கிறார்.
மஹாபலி மகிழ்வுடன் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்று சொல்லவும், வாமனன், தனக்கு மூன்று அடி மண் போதும் என்று சொல்கிறார்.
மூன்று அடி மண்தானே எடுத்துக் கொள்ளுங்கள் என்று உடனே சொல்கிறார் மகாபலி.
வாமனர், ஒரு காலை பூமியில் ஊன்றிக் கொண்டு மறு காலை அப்படியே தூக்கி விடுகிறார். ஆகாயத்தை நோக்கி வைத்துவிட்டு, இரண்டு அடி வைத்தாயிற்று, பூமியும் ஆகாயமும் எனக்குச் சொந்தம் இப்போது மூன்றாவது அடியை நான் எங்கு வைப்பது என்று கேட்கிறார் வாமனன். உடனே மகாபலி வேறு இடம் இல்லாததால்,
தன் தலையின் மீது வைக்கச் சொல்லவும், வாமனன் மகாபலியின் தலை மீது வைத்து அவரை அப்படியே மிதித்துப் பூமிக்குள் பாதாளத்திற்குள் தள்ளியதாக ஒரு ஐதீகம்.
அப்போது மகாபலி ஒரு வேண்டுதல் கேட்கிறார். தான் ஒவ்வொரு வருடமும் தன் மக்களைக் காண இதே நாளில் வர வேண்டும் என்றிட, வாமனரும் அனுமதிக்கிறார். அப்போது மகாபலி மக்களிடம் சொல்கிறார். மீண்டும் வரும் போது, அவர் ஆட்சி செய்த போது மக்கள் எப்படி ஒற்றுமையாக இருந்தார்களோ அதே போன்று இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
அதனால்தான் பிற்காலத்தில் எல்லா மதத்தவரும் இப்பண்டிகையைக் கொண்டாடுவதற்கு முக்கியமான காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஐதீகத்தில் நிறைய குழப்பங்கள் வருவதற்கு ஏற்ப இடைவெளிகள் இருக்கின்றன. மஹாபலி, பிரஹலாதனின் பேரன் என்று சொல்கிறார்கள்,
சிலர் பிரகலாதனின் தாத்தா என்று சொல்கிறார்கள்.
வாமனன் என்று சொல்லப்படும் முனி மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்று சொல்லப்படுவதில் ஒன்றாகக் கருதப்படுகிறார்.
அசுரனான மாவேலி இந்திரனுக்குப் போட்டியாக வந்துவிடுவாரோ என்ற எண்ணத்தில் மஹாபலியை இப்படி சோதனைக்குள்ளாக்கி பாதாளத்திற்குள் தள்ளினார் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி அசுரனை பாதாளத்திற்குத் தள்ளிய வாமனனைக் கொண்டாடும் விதத்தில் வாமன ஜயந்தி என்றும் சொல்லப்படுகிறது.
ஓணப்பண்டிகை என்பது ஓணத்தப்பன் வருவார் எனும் போது வாமனன் வருவார் என்று சிலரும், இல்லை மஹாபலிதான் வருவார் என்று சிலரும் சொல்கிறார்கள். இப்படி ஏராளமான குழப்பங்களும் கதைகளும் உள்ளன.
இருந்தாலும், ஒரு பழைய பாடலை வைத்துப் பார்க்கும் போது இப்படி வைணவம், சைவம் என்று வரும் போது வரும் ஒரு சச்சரவாகக் கூட இருக்கலாம். அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு நாம் இதில் பார்க்க வேண்டியது, மக்களின் மனம் கவர்ந்த மன்னன் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தன் நாட்டைத் துறந்து துறவறமோ ஏதோ ஏற்க வேண்டிய ஒரு சூழல். அப்போது, ‘நான் வருடத்திற்கு ஒரு முறை வருவேன் அப்போது என் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக,
ஒற்றுமையாக இருப்பதைப் பார்க்க வேண்டும்’ என்று சொல்கிறார்.
அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக அன்றைய மக்கள் மட்டுமல்ல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூட இப்போதும் கேரள மக்கள், மலை நாட்டு மக்கள் அவருக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதுதான். அந்த ஒரு எண்ணத்தில்தான் எல்லா மதத்தவர்களும் கொண்டாடுகிறார்கள். இதிலும் சிலர் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், பெரும்பான்மையோர் அந்த மன்ன்னுக்குப் பெருமையை வழங்கும் விதத்தில் இதைக் கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்வான விஷயம்.
[ஆனால் இங்கு ஒரு வேதனையான விஷயத்தையும் பதிய விரும்புகிறேன். நல்ல மனம் கொண்ட வீரனாக இருந்த மாவேலியை இங்கு ஏதோ ஒரு நகைச்சுவை கதாபாத்திரம் போன்று படைக்கப்பட்டு வாழ்த்து அட்டைகளிலும்,
படங்களிலும் காட்டுவதும், ஏதேனும் கொஞ்சம் மக்களிடையே அறியப்படுபவர் வேடமிட்டு வருவதும் வேதனையான விஷயம். இப்போதைய குழந்தைகளில்டம் மாவேலி யார் என்று கேட்டால் அவர்கள் சொல்வது காமெடி கிங்க் என்று. இது மாற வேண்டும்.]
இப்படியான ஓணம் திருநாள், ஒரு நாள் என்றில்லாமல்,
10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில், 27 நட்சத்திரங்களில் ஒன்றான அத்தம் நாளில் தொடங்கும். நம் தமிழ்நாட்டில் மாக்கோலம் போடுவது போல் இங்கு அந்த நாளில் எல்லா மக்களும் பூக்களால் கோலம் போடுவார்கள். இதனை அத்தப் பூக்களம் என்று சொல்வார்கள். இந்த அத்த நட்சத்திரத்திலிருந்து தொடங்கி, அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்,
திருவோணம் – அத்தம் தொட்டுப் பத்தாம் நாளாகிய திருவோணம் அன்றுதான் ஓணம்.
திருவோணம் என்று சொல்லப்படுவது முதல் ஓணம். அவிட்டம் நாள் சதயம் நாள் உத்ரட்டாதி நாள் என்று 4 நாட்கள். இந்த உத்ரட்டாதி நாளில்தான் வள்ளம் களி எனப்படும் படகுப் போட்டிகள், காயல், ஆறுகளில் குறிப்பாகக் குட்டநாட்டுப் பகுதிகளில் நடத்தப்படும். ஓணத்தோடு சேர்ந்து பல விளையாட்டுகளும் இருக்கின்றன. எல்லோரும் ஒன்று கூடி ‘சத்யா’-விருந்து உண்டு மகிழ்வதுண்டு.
இந்தப் பத்து நாட்களுமே ஓணப் பண்டிகையோடு தொடர்புடையது. திருவிழாதான். எனவே காலாண்டுத் தேர்வு விடுமுறை போன்று இங்கு இந்த 10 நாட்களும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் பெரும்பாலும் பள்ளி கல்லூரிகள் அத்தத்தன்று தொடங்கும் ஓணப் பண்டிகையை பள்ளி கல்லூரிகளில் ஒரே நாளில் கொண்டாடுவதுண்டு.
அப்படி நான் கற்பிக்கும் எஸ்விபிகே ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் செப்டம்பர் 1 ஆம் தேதியை நாங்கள் தேர்ந்தெடுத்து ஓண விழா கொண்டாட்டம் நடத்தினோம்.
அத்தப்பூ என்று சொல்லக் கூடிய பூக்கோலம். இதற்கு கிலோ கணக்கில்-80 கிலோ கணக்கில் பூக்கள் வாங்க வேண்டும். அதற்கு 20,000 ரூ ஒதுக்கிக் கொண்டோம். அதன் பிறகு ஓண சத்யா. அதற்கே 4 மணி நேரம் ஆகிவிடும். நிறைய பிள்ளைகள் படிக்கும் இடம். முதல் வருடம் பிள்ளைகள் வரவில்லை. எனவே பாயாசம் செய்தோம்.
அதன் பின் திருவாதிரை களி அதாவது ஒரு விளக்கு ஏற்றி வைத்து அதைச் சுற்றி பாட்டு பாடி நடனம் ஆடுவது. இப்படி மூன்று நிகழ்வுகளுடன்,
சில விளையாட்டுகள்,
நம் தமிழ்நாட்டில் பொங்கலுக்கு விளையாட்டுகள் பல விளையாடுவது போல, வடம் வலி-கயிற்றை இழுத்தல், ஸ்பூனில் எலுமிச்சையை வைத்துக் கொண்டு ஓடுவது இப்படி பல நடந்தன.
இங்கு சொன்னதைத்தான் பேச்சு வழக்கில் காணொளியில் சொல்லியிருக்கிறேன். வாசிக்க முடியாதவர்கள் கேட்டுக் கொள்ளலாம்.
அடுத்த பதிவில் கல்லூரியில் நடந்த நிகழ்வுகளை அதெல்லாம் எப்படி நடந்தன என்பதைப் பற்றியும் சொல்கிறேன். நிகழ்வுகளைக் காணொளிகளாகவும் என்னால் இயன்றவரை எடுத்து அவற்றையும் பகிர்ந்து சொல்லியிருக்கிறேன். அவை எல்லாம் செப்டம்பர் 8 - ஓணத்தன்று வரும். நீங்களும் அந்தக் காணொளிகளைக் கண்டு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
சில நிகழ்வுகள் உங்களுக்குப் புதுமையாக இருக்கலாம். ஓணத்தன்று வரும் பதிவில் காண்போம்.
இனிய ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
நீக்குதுளசிதரன்
ஓணத்திருநாள் நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஓணத்தின் பின்னணி விளக்கம் நன்று.
பதிலளிநீக்குதங்களுக்கும் எமது இனிய ஓணாஷம்சகள்.
உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி
நீக்குதுளசிதரன்
இரண்டு ஆண்டுகளாக மட்டுப் பட்டிருந்த ஓணம் ஆகோசம் இவ்வருடம் பொங்கி வருகிறது. அந்த உற்சாகம் உங்களுக்கு வந்ததில் வியப்பில்லை.திருவனந்தபுரத்து காரனாகிய எனக்கு உங்கள் கட்டுரையில் உள்ள செய்திகள் புதிதில்லை. கட்டுரை மற்றவர்களுக்கு ஓணச்சிறப்பை விளக்கும்.
பதிலளிநீக்குகாணொளி பார்க்கவில்லை.]
Jayakumar
ஆமாம் இந்த வருடம் உற்சாகத்தோடு கொண்டாட்டங்கள். உங்களுக்குப் புதிதாக இருக்காதுதான். பலருக்குமே தான்.
நீக்குகருத்திற்க்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.
துளசிதரன்
அருமை... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டிடி
நீக்குதுளசிதரன்
ஒரு விளக்கு ஏற்றி வைத்து அதைச் சுற்றி பாட்டு பாடி நடனம் ஆடுவது. //
பதிலளிநீக்குநான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் பள்ளியில் ஆடி இருக்கிறோம்.
இந்த திருவாதிரை களி நடனம். மகாபலி சக்கரவர்த்தியின் வருகைக்கு மகிழ்ந்து பாடும் பாடல் அது. அந்த பாடல் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. அவர் பெருமைகளை கூறி ஆண்டு தோறும் அவர் வரும் நாளை கொண்டாடி மகிழும் பாடல்.
பெரிய வகுப்பு பெண்கள் வெளி வட்டத்தில், சின்ன வகுப்பு பெண்கள் உள் வட்டத்தில் என்று வட்டமாக விளக்கு வைத்து கொண்டு ஆடி இருக்கிறோம்.
(கோவையில் படிக்கும் போது) பள்ளிக்கூடத்தில் ஒரு விழாவிற்கு மீண்டும் ஆடினோம். நடுவில் வைத்து இருந்த பெரிய குத்து விளக்கிற்கு காகித பூமாலை போட்டு இருந்தார்கள்.
சின்ன குழந்தைகள் ஆடி கொண்டே விளக்குகளை பெரியவிளக்கை சுற்றி வைக்க வேண்டும், அப்படி வைத்த போது காற்றில் விளக்கில் பட்டு எரிய ஆரம்பித்து விட்டது. டீச்சர் பதட்டபடாமல் ஆடி கொண்டே மேடையை விட்டு கீழே இறங்க சொன்னார்கள்.எங்களுக்கு பாராட்டு கிடைத்தது. அதை மறக்கவே முடியாது.
திருவனந்த புரத்தில் மாமாவீட்டில் மலர் கோலம் வருடா வருடம் போடுவார்கள்.நண்பர்கள், உறவுகளுக்கு விருந்து உண்டு மாமாவீட்டில்.
காணொளி நன்றாக இருக்கிறது.
நீங்களும் திருவாதிரை களி ஆடியிருப்பது அறிந்து மிக சந்தோஷம். உங்கள் அனுபவங்களை மகிழ்ச்சியையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. மாமா வீட்டு ஓண அனுபவங்களும் சிறப்பு. உங்களுக்கும் ஓணத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டு சந்தோஷம்.
நீக்குகருத்திற்கும் அனுபவப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு
துளசிதரன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஓணப்பண்டிகை உண்டான விபரம் நன்றாக சொல்லியுள்ளீர்கள். மாபலி சக்கரவர்த்தி மன்னர்களில் சிறந்தவராக காட்டும் ஒரு சமயம் அவரை அரக்கராகவும், விஷ்ணுபகவான் அவரை அவரின் இணக்கத்துடன் சம்ஹரிக்கும் ஒரு புராணமாகவும் காட்டுமிடம் எனக்கும் சிறிது குழப்பமே.... ஏதோ வாமன அவதாரத்திற்கு ஒரு அடையாளம். அவரின் (மாபலி சக்கரவர்த்தி) விருப்பம் வருடந்தோறும் இவ்விதமாக இனிதாக நிறைவேற மஹாவிஷ்ணு அருள் பாலித்திருப்பதும் ஒரு சிறப்பு என எண்ண வைக்கிறது. .
உங்களுக்கும் ஓணத்திருநாள் நல்வாழ்த்துகள். கல்லூரியின் மலர் கோலங்கள் அருமை. அத்தப்பூ கோலம் அருமையாக உள்ளது. அலங்கரித்த கல்லூரியின் அத்தனை குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள்.
காணொளி அருமையாக உள்ளது. பார்த்து ரசித்தேன். இனி வரும் ஓணத்திருநாள் பதிவையும் காணொளிகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்தக் குழப்பம் சிலருக்கு ஏற்படுகிறதுதான்.
நீக்குகாணொளியை பதிவை ரசித்ததற்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்
துளசிதரன்
ஓணத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி. உங்களுக்கும் ஓணத்திருநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரி கோமதி அரசு.
நீக்குதுளசிதரன்
ரசித்த பதிவு, ஆனால் இன்றுதான் பார்த்தேன்
பதிலளிநீக்குஎப்போது பார்த்தாலும் பரவாயில்லை நெல்லைத் தமிழன். வந்து பதிவை வாசிது ரசித்ததற்கு மிக்க நன்றி
நீக்குதுளசிதரன்
ஓணத்திருநாள் நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநண்பர் நாஞ்சில் சிவா உங்களுக்கும் என் இனிய ஓணத்திருநாள் வாழ்த்துகள்
நீக்குஉங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
துளசிதரன்
விளக்கங்கள் நன்று. எப்படியானால் என்ன? மக்களின் ஒற்றுமை தான் முக்கியம். அது அங்கே சிறப்பாகக் கௌரவிக்கப்படுகிறது அல்லவா? ஓணத்திருநாள் கொண்டாடியதற்கும் அதைக்குறித்த பதிவுகளுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆமாம் எல்லோரும் ஒற்றுமையாகக் கொண்டாடினார்கள்...நீங்கள் சொல்லியிருப்பது போல் ஒற்றுமைதான் முக்கியம். நல்லபடியாக எல்லாம் நடந்தேறியது.
நீக்குமிக்க நன்றி சகோதரி கீதா சாம்பவம் தங்கள் கருத்திற்கு
துளசிதரன்