ஏற்கனவே ஸ்ரீராமின் பதிவு எழுப்பிய
நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன்.
இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில்
ஒரு பதிவை அல்லது பதிவின் ஒரு பகுதியை வாசிக்கும்
போது அல்லது ஏதேனும் ஒரு வரி போதும், நமக்கு ஏற்பட்ட அதே போன்ற அனுபவங்களை அல்லது அதை
ஒட்டிய அனுபவங்களை நம் மனதில் நினைவுப்பெட்டகத்திலிருந்து எழுப்பிவிடும்.
[எழுத முடியாததற்கு, கோர்வையாக எழுதவராதது உட்பட காரணங்கள் பல.. ஆடத்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம் என்பது போல்!]
எபி யில் புதன் கேள்வி பதில்களில்,
பானுக்கா ஒரு கேள்வி கேட்டிருந்தார். //உங்களிடம் இருக்கும் ஏதோ ஒரு பழக்கத்தை நண்பர்களும்,
உறவினர்களும் கேலி செய்தாலும், விமர்சித்தாலும், நீங்கள் ரசிப்பது உண்டா?//
என் நினைவுகளைத் தூண்டிவிட்ட கேள்வி.
கூட்டுக்குடும்ப வளர்ப்பு. என் தம்பி
தங்கைகள் [என் மாமா அத்தை குழந்தைகளையும் நான் அப்படித்தான் சொல்வது. ஒரே கூரைக்கு
அடியில ஒரு தாய் வயித்துப் பிள்ளைகளா இருந்ததால (வடிவேலு மாடுலேஷன்)] எதிர்த்துக் கலாய்க்கத்
தெரியாத என்னை ரொம்பவே கலாய்ப்பார்கள்.
சிறுவயதில் எனக்குக் கோபம் என்பதை
விட மனம் சுருங்கிவிடும் எனலாம். அதன் பின் மனம் பக்குவம் பெறத் தொடங்கியதும் அவர்களின்
நகைச்சுவைக் கலாய்த்தலை ரசித்தேன். ஆனால் அப்பவும் பதிலுக்குச் சொல்லத் தெரியாது.
ராத்திரி 8.30, 9 மணிக்கெல்லாம்
நான் சாமியாடத் தொடங்கிவிடுவேன். கைல புக் தலைகீழா இருக்கும். பாட்டியும் மெஷின் ராட்டை
ஓட்டிக் கொண்டு முழிச்சுருப்பாங்க யாரெல்லாம் படிக்கறாங்க, கொட்டாவி விடறாங்கன்னு பார்த்துக்கொண்டு.
“பாட்டி, கீதாக்கு நெத்தில முழைச்சுருக்கு”
இப்படி
ஏதாவது ஓரு வாண்டு, தான் படிக்கறோம்னு பாட்டிக்கிட்ட காட்டிக்க என்னைப் போட்டுக் கொடுக்கும்.
நான் சாமி ஆடுவதால் தலை கீழே பட்டு பட்டு நெத்தில அடியாம்! ஹூ கேர்ஸ்!
“கீதா பாத்து. எதுக்கும் முன்பக்கம்
ஒரு தலைகாணி வைச்சுக்க” அப்படின்னு தலைகாணி எடுத்துக் கொடுக்கும் மற்றொரு வாண்டு.
“கீதாவ வரச்சொல்லு, வாசல்ல கோலம்
போடணும்” என்று காலையில் எங்க பெரிய மாமி வந்து கேட்டால்…
“நம்ம கீதா நெத்தி முழைக்க, நிலத்தில
விழுந்து விழுந்து உழைச்சு ரொம்பக் களைப்பா இருக்கா பெரியம்மா” என்று நமுட்டுச் சிரிப்பு
சிரித்துக் கொண்டே ஒரு வாண்டு சொல்லும்.
“டேய் ஏண்டா அப்படிச் சொல்ற கீதாவ?
அவ நல்ல புத்திசாலி தெரியுமோ”
ஹிஹிஹிஹி என்று சிரிப்புச் சத்தம்
பின்னணி இசையாக… ஹூ கேர்ஸ்!
“ஆமாமா நீங்க சொல்றது ரொம்ப சரி
பெரியம்மா. மார்க் எல்லாம் முக்கியமில்ல.. ஏன்னா அவ லேடி ஐன்ஸ்டீன். நோபல் லாரட் ஆக
எப்படி ஆராய்ச்சி எல்லாம் பண்ணுறா தெரியுமா” என்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு
ஒரு வாலு சொல்லும்…
“அப்படியா”?
“ஆமாம் பெரியம்மா முன் நெத்தில முழைச்சா
ஃப்ரன்டல் லோப் வொர்க் ஆகுமா? பின்பக்கம் முழைச்சா மூளைக்கு என்ன ஆகும்? சைடுல பட்டா?
மூளை வொர்க் ஆகுமோ, மெமரி கூடுமோன்னு ப்ராக்ட்டிக்கலா எக்ஸ்பெரிமென்ட். தீஸிஸ் எழுதப்
போறா” என்று சிரிக்காமல் சொல்லும் மற்றொன்று.
“ச்சே என்ன மண் தூசி பாரு” என்று
சொல்லிக் கொண்டே ஒரு வாண்டு பெருக்கினால், மற்றொன்று தொடங்கும் முன் நானே முந்திக்
கொண்டுவிடுவேன்…
“பின்னே நேத்து ராத்திரி நான் எவ்வளவு
நேரம் எக்ஸ்பெரிமென்ட் பண்ணினேன் தெரியுமா?” என்று சிரிக்காமல் சொல்லிவிட்டுப் போவேன்.
மீண்டும் பின்னணி இசை ஒலிக்கும். ஹூ கேர்ஸ்!
வாலுங்க எல்லாம் படிப்பில் கெட்டி.
நான் ரொம்பவே சுமார். ரொம்பவே சுமார்னா வெளில சொல்லமுடியாத அளவுக்குச் சுமார்!! அதுவும்
கணக்கு, அறிவியல். மூச்! அதுக்கு மார்க் வரப்ப,
“நம்ம லேடி ஐன்ஸ்டீன் ஸ்கூல்
ட்ராப் அவுட் ஆயிடுவா சீக்கிரம்….”
ஹூ கேர்ஸ்!
பாடத்திட்டத்தில் இருப்பதைத் திரும்ப
திரும்பப் படிப்பது, எழுதுவது, மனனம் செய்து தேர்வு எழுதுவது என்பது எனக்குக் கடினமாக
இருந்தது. நல்ல மதிப்பெண்கள் பெறுவது என்றால் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் காரணம், கட்டுரை,
இலக்கணம். மனனம் செய்யாமல் எழுதுவதை ஆசிரியர்கள் ஊக்குவித்தார்கள். ஆனால் வாழ்க்கை உருண்ட போது இலக்கணம் மாறிற்றே, இலக்கியம் போனதே, பழைய கீதா என்ன ஆனாள்? எங்கே போனாள் எங்கே போனாள்?
ன்னு ஆகிப் போச்சு!!! போகட்டும்.
ஏதேனும் கதை, கவிதை, கட்டுரை, நாடகம், எழுதுவது பற்றி
யோசிப்பது, எழுதுவது என்று கொஞ்சம் கற்பனை உலகில் சஞ்சரிப்பதுண்டு. அதுவும் ஆழமான கருத்துகள், அனுபவத்தில் கற்றவை, மனித இயல்புகள், தத்துவங்கள் என்று (இப்பவும் உண்டு. அதன் பின்விளைவுகள் ஏராளம்.!!!)
அதனால் படிப்பில் கவனம் குறைவு. அப்படி யோசித்துக் கொண்டிருப்பதையும் கலாய்ப்பார்கள். ஹாஹாஹா. ஹூ கேர்ஸ்!
“அவ தூங்கி விழுந்தாலும், ‘நான்
தூங்கலை, யோசிக்கிறேன்னு’ சமாளிப்பா. தூக்கத்துல நேத்து கூட ஏதோ ஒரு கவிதை இங்கிலிஷ்ல
சொன்னாளே”
“போடா, ஐன்ஸ்டீனுக்கு கவிதை எழுத
வருமா என்ன?”
“அவ எழுதினது இல்லடா ஏதோ ட்ராமா
எழுதறா அதுல தாகூர் போயம் ‘வெயிட்டிங்க்’ னு ஏதோ…”
அப்படி எதுவுமே நடந்திருக்காது ஆனால்
அவர்களுக்கும் பொழுது போக நான் தான். ஹூ கேர்ஸ்!
என் நட்பு வட்டம் பெரிது. சுவாரசியமாகக்
கதை அளப்பேன். நாடகம், பாட்டு, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டி, மூன்று கேம்ஸ் டீமில்
செலக்ஷன் என்று இருந்ததால் சும்மானாலும் ஒரு கூட்டம் இருக்கும். ஆசிரியர்களின் செல்லப்
பிள்ளை.
இலக்கண விதிப்படியும், ஹைக்கூ வடிவிலும்
கவிதை எழுதியதுண்டு!! தமிழ் ஆசிரியை பாராட்டி ஊக்கப்படுத்தியதுண்டு. அது இறந்தகாலம். உங்களால
நம்பமுடியலை இல்லையா!! ஹிஹிஹி!! நிகழ்காலம் அப்படி! என்ன செய்ய? நம்ப முடியாத அளவு அப்படி
இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!!! போனா போகுது விடுங்க!
குடும்பம் மட்டுமல்ல, ஊருக்கே நாட்டாமை எங்கள் பாட்டி. மற்ற பெரியவர்களில் சிலர் ஆசிரியர்கள். வீட்டில் படிப்பு. படிப்பு. படிப்பைத்
தவர வேறொன்றுமில்லை. படிப்பு ஒன்றுதான் சோறு போடும் வேறு எதுவும் சோறு போடாது என்ற
அந்தக்காலத்து மத்தியதரக் குடும்பத்திற்கும் கீழான குடும்பத்து சித்தாந்தம்.
கேக்கணுமா?! வாண்டுங்க எல்லாம் ஸ்கூல்
விட்டதா வீடு வந்தமான்னு இருப்பார்கள். ராத்திரி முழிச்சிருந்து படிப்பாங்க. ரேங்க்
வேற. அதனால் வீட்டில் நல்ல பெயர்.
நாம அப்படியா? பெரும்பாலும், கேம்ஸ்,
அந்தப் போட்டி இந்தப் போட்டின்னு ஊரைச் சுத்திட்டு வீட்டுக்கு 6.40 பஸ்ஸைப் பிடிச்சு
7.15, 7.30 க்கு வந்தா….அப்பவும் பாருங்க நான் ரொம்ப சமத்தாக்கும். எத்தனை பிசியா இருந்தாலும்
6.40 பஸ்ஸை மிஸ் பண்ணாம வந்துருவேனாக்கும்! அப்புறம் நடக்கறது எல்லாம் கிட்டத்தட்ட
வடிவேலு காமெடி ஸ்டைல்.
“நீ போட்டிக்குத்தான் போனேன்னு சொல்ல வேண்டியதுதானே? பெரிசா உதார் விடுவியே தைரியசாலியாட்டம்"
“எவ்வளவு திட்டினாலும், அடிச்சாலும்,
சுரணை இல்லாத எருமை, சட்டம் பேசுற சட்டம்பி” ன்னு பாட்டியும், அம்மாவும் திட்டினப்ப இதுங்க எல்லாம், “கீதா நல்லவ. லேடி ஐன்ஸ்டீன்! அவ ஏதோ போட்டிக்குத்தான் போனா அதான் லேட்டு”ன்னு சப்போர்ட் பண்ணினாங்க" என்று நான்
அப்பாவியாய் சொல்ல…….மீண்டும் சிரிப்பொலி கேட்கும். ஹூ கேர்ஸ்?!
எவ்வளவு வைச்சு வாங்கினாலும்
நான் வழக்கம் போல் சாமியாடிடுவேன். இதற்காகவே, அம்மாவை ஐஸ் வைச்சு, பாட்டிக்குத் தெரியாம கட்டங்காபி வேற குடிச்சு ராத்திரி படிக்கறமோ இல்லையோ சும்மா முழிச்சிருப்போம்னு முயற்சி எல்லாம் கூட செஞ்சேன். ம்ஹூம். சாமியாட்டம்தான்! கலாய்த்தல்தான்.
இப்போதும் கூட அவர்கள் என்னை இரவு
9 மணிக்கு மேல் அழைத்தால் மிஸ்ட் காலாகத்தான் இருக்கும். “சாமியாடிட்டியா? கம்ப்யூட்டர்
பத்திரம்” ன்னு மெசேஜ் வேற. பெரும்பாலும் நானே என்னைக் கலாய்த்து முந்திக் கொண்டுவிடுவேன்!
சீக்கிரம் படுக்கச் சென்று காலையில் 4 மணிக்கு எழும் பழக்கம் அந்தச் சிறுவயதிலேயே வந்துவிட்டது. தொட்டில் பழக்கம்! பாட்டி என்னை 4 மணிக்கு எழுப்பிக் கோயிலில் கோலம் போட அழைத்துச் செல்வார்.
இத்தனை கலாய்த்தாலும் அத்தனைபேரும்
என்னிடம் மிக மிக அன்பு உடையவர்கள். I AM BLESSED! எனக்கு ஏதேனும் ஒன்று என்றால் உடனே
உதவிக் கரம் நீட்டிவிடுவார்கள்.
இன்னும் நிறைய உண்டு. ஆனால் எதுவும் என் தன்னம்பிக்கையைத் தளர்த்தியதில்லை. ரசித்து சிரித்துவிடுவேன். அதே வேளையில் நான் யோசித்தது, எல்லோர் மனதும் கலாய்த்தலை ஏற்கும் அளவு வலுவானதாக இருக்காது.
சிலர் நத்தை போல் ஓட்டிற்குள் சுருங்கி விடுவார்கள். அது மனச்சோர்வு, மனப்பிறழ்விற்கு இட்டுச் செல்லும்
ஆபத்துண்டு. எனவே கலாய்ப்பதிலும், வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதுவே
அப்பாடம். நினைவுகள் தொடரலாம்!!!
(பி.கு. கல்வி, உளவியல் என்று வந்தா கருத்து கண்ணாயி ஆகிடுவோமே!!! (கருத்து கந்தசாமி ஆண்பால்!).
அப்படி, மதுரைத் தமிழனின் சமீபத்தியஅருமையான பதிவு என்னைத் தூண்டியது. மதுரையும் நான் பதிவாகப் போடுவேனோ என்று சொல்லியிருந்தார்.
பதிவாக எழுதலாம் என்று நினைத்து எழுதத் தொடங்கி……கோர்வையாக எழுத வராததால் அதைக் கொஞ்சம்
ஆறப் போட்டிருக்கிறேன். அதனால், அடுத்து எழுத நினைத்தவை இப்போது.)
-----கீதா