4ஜி - இந்தா உன்னைத்தான், அந்த
தங்கச்சி உன்னை அழுத்தி அழுத்தி கூப்பிடுது பாரு.
5ஜி - என்னது? என்னையா? நல்லாருக்கே! ம்ஹூக்கும். காலைலருந்து....6 மணி இருக்குமா...ஹான் அப்ப தொடங்கி இவ்வளவு நேரம் 6 நிமிஷ வீடியோ 7 மணி நேரம் ஆச்சு. தங்கச்சி ஏத்திவிட்ட அவங்க வீட்டாளு வீடியோவை சொமக்க முடியாம சொமந்து மூச்சு திணறி சுத்தி சுத்தி, முக்கி முக்கி அந்த யுட்யூப் பொட்டில போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கறேன். நீ இவ்வளவு நேரம் சும்மாதானே இருந்த போயேன்.
4ஜி - சோலிய பாரு. என்னால முடியாது.
அந்த தங்கச்சி இடைல பாக்கற ஒன்னுத்துக்கும் உதவாத வீடியோக்ளுக்கு நான் போய் உழைச்சு
சுத்தணுமாக்கும். உனக்குத்தான் பவரு கூடுதலு. 5ஜி! நீ போ.
5ஜி - அது திங்கற நேரம் இப்ப.
நான் கொஞ்சம் தலைசாய்ச்சாதான், அது அப்பால இன்னும் வீடியோஸ ஏத்தி விடும் அதை சுமக்கணும்.
நீ போய் சும்மானாலும் சுத்து. வேலை பண்ணாத. சும்மா பம்மாத்து காமி.
4ஜி - சுத்தறதுக்குக் கூட முடில.
உனக்குத் தெரியாதா அது திங்கற நேரத்துல கூட வீடியோவை ஏத்திட்டு ஹாயா போய்டும். நான்
போக மாட்டேன்.
5ஜி - அப்ப நாம ரெண்டு பேரும்
அப்பீட்டு. அந்த தங்கச்சி உடனே நம்ம பாஸ்கிட்ட கம்ப்ளெயின்ட் கொடுக்கும். இதே ரோதனையா
போச்சு.
4ஜி -
5ஜி - ஓ அதான் எங்கிட்ட கொண்டு
போடச் சொல்லுதா? நிறைய படங்களை வேற எங்கிட்ட ஏத்திவிட்டு ஒரு பொட்டிக்குள்ள போடச் சொல்லிருக்கு.
நான் போடலையே இன்னும்!
4ஜி - உங்கிட்ட மட்டுமா? நீ மாட்டேன்னு
சொன்னா உடனே என்னைய புடிச்சிக்கும். தங்கச்சி எத்தனை படங்களை, வீடியோவை நம்ம மேல லோட்
ஏத்துது? யம்மாடியோவ். எனக்கு முடில...வயசாகிப் போச்சுன்னுதான் உன்னைய போட்டாங்க. உனக்கும்
வயசாகிடுச்சு போல..
5ஜி - ஆமா...வயசாகுது. இப்ப பாரு
3, 4 மணிக்கு டீ குடிச்சு நொறுக்குத் தீனிக்குக் கூட போகாம, நொறுக்குத் தீனி வேற சாப்பிடாதாம்,
என்னைய அமுக்கு அமுக்குன்னு அமுக்குது.
4-ஜி - என்னையும்தான் அமுக்குது....தினம்
இதே தான் சோலி.
5-ஜி - அது நம்ம பாஸுங்ககிட்ட
கம்ப்ளெயின்ட் கொடுத்தாலும் அவனுங்க நம்மள கவனிக்கறதும் இல்ல. நம்மள இட்டாறதுக்கு ஒரு
நல்ல வழி கொடுக்கணும்ல அது கொடுத்தாதானே நாம வேகமா மூச்சுத் திணறாம ஓட முடியும்? எங்க?
ம்ஹூம் அதுவும் இல்ல. இதுல இந்த தங்கச்சி அடிக்கற கூத்துல மாட்டிக்கிட்டு முளிக்கணுமா
இருக்கு. யம்மாடியோவ்! எம்புட்டு வீடியோ பாக்குது, வாசிக்குது. ஏதோ Reference ஆம்,
சங்கீதமாம்.....இடைல வம்பு ஒன்னுக்கும் உதவாத வீடியோ வேற...
4ஜி - ரெண்டு பேரையும் மாத்தி
மாத்தி உலுக்கி எடுக்குது அது. ஒண்ணு பண்ணுவோம் ரெண்டு பேரும் சும்மா சுத்தி பாவ்லா
காட்டி மக்கர் பண்ணிடுவோம். என்ன சொல்ற?
-------------
ஹேய்! என்ன சத்தத்தையே காணும்....ஓ அதுக்குள்ள
நீ படுத்திட்டியா....ஸ்பாஆஆஆஆஆவ்...நானும்...
------------
கீதா: ரெண்டுபேரும் இப்படி அலப்பறை பண்ணீங்கனா நான் எப்படி எழுதறதாம்? இன்னும் ரெண்டு பேரும் நான் கொடுத்த படங்களை ப்ளாகர்ல
கொண்டு சேர்க்கவே இல்லை.
சரி ஒரு சின்ன பதிவு, எழுத்து
மட்டும்தான் அதையாச்சும் போட உதவுவீங்களா? ப்ளீஸ்?
4ஜி - 5 ஜி - எழுத்து மட்டும்தானே?
படங்கள் எதுவும் இல்லைதானே? இல்லைனு சொல்லிட்டு ஏத்தினன்னு வை, சுத்தமா வேலை செய்ய
மாட்டோம்.
கீதா: இல்லை எழுத்து மட்டும்தான்.
4ஜி - 5ஜி - போனா போவுது. சரி கொண்டா போடு.
கீதா: ரொம்ப நன்றி ஜிக்களே! சரி....சரி...ம்ம்ம்ம்.
அடுத்த ஒரு பதிவுக்கு ஒரே அடியா ரொம்ப சுமை கொடுக்காம ரெண்டு ரெண்டு படங்களா ஏத்திவிடறேன்,
கொஞ்சம் உதவுவீங்களாப்பா?
4ஜி-5ஜி - பாத்தியா! கொஞ்சம் இரக்கப்பட்டதும்
மடத்தைப் பிடுங்கற! ரெண்டு ரெண்டானா அதுவும் நிறைய தடவை சுமக்கணும்ல? இதுல நீங்க மூணு
பேரு எங்களை யூஸ் பண்ணறீங்க. நீ இருக்கறது தரைத்தளத்துல. உங்க வீட்டாண்ட சுத்தி இண்டு
இடுக்கு இல்லாம உசரமா கட்டுமானம். உங்க வீட்டாளுகிட்ட சொல்லி எங்க பாஸ்கிட்ட சண்டை
போட்டு ஒழுங்கா லைன் போடச் சொல்லு.
கீதா: சொல்றேன். இப்ப உதவி பண்ணறீங்களா?
ப்ளீஸ்
4ஜி 5 ஜி - ம்ம்ம்ம். கொடு. ஆனா
நாங்க எங்க இஷ்டத்துக்கு நேரத்துலதான் போடுவோம்.
கீதா: சரிங்க ஜி'ஸ்! ரொம்ப நன்றி.
------------------
எங்கள் வீட்டில் வைஃபை மட்டுமில்ல,
சாதாரண தொலை தொடர்பே கிடைத்து அறுபடாமல் பேசுவது ரொம்பக் கடினமாக இருக்கிறது. இந்த வீட்டிற்கு வந்த இந்த 3 1/2
வருடங்களில் சமீபமாகத்தான் அதாவது 7, 8 மாதங்களாகத்தான் இப்பிரச்சனை. காரணம் வீட்டின் பின்னால் முன்பு இருந்த மாடியில்லா
தனி வீட்டை இடித்து இப்ப 5 மாடிகள் அடுக்கு மாடிக் குடியிருப்பாகக் கட்டியிருக்கிறார்கள் அதுவும் நம் வீட்டிலிருந்து
கை நீட்டி சாமான் பரிமாறிக் கொள்ளும் தூரமே. அது போலத்தான் வலப்பக்கம், இடப்பக்கமும் வீடுகள். அதனால் வீட்டில் எந்த நெட்வொர்க்கும் எடுப்பதில்லை.
ஸ்ரீராம், நெல்லை, துளசிக்கு இது நல்லாவே தெரியும்.
நான் அடிக்கடி சொல்வது,
"இருங்க நான் கேட் பக்கம் வந்து பேசறேன். விஷயம் ஊருக்கே தெரிய வேண்டாமா?!!!!!
இதாவது பொது விஷயங்கள்தான். ஆனால் உறவுகளோடு பேசுவது வீட்டு விஷயங்கள் எல்லாம் இப்படிப்
பேச முடியுமா சொல்லுங்க? வெளியில் வந்தால் சாதாரண நெட்வொர்க் நன்றாகக் கிடைக்கும்.
ஸ்ரீராம் சஜஷன்ஸ் கொடுத்தார். நம்மவரிடமும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
ஒன்று வீடு மாறுவோம், இல்லை நெட்வொர்க் சரிசெய்ய வேண்டும் என்று. பார்ப்போம். நல்லது
நடக்குமென்று.
அடுத்து ஒரு பயணப் பதிவுக்குப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறேன். இரண்டு ஜி க்களின் கருணையில் தான் இருக்கிறது பதிவு வருவது.
------கீதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக