புதன், 27 ஜூன், 2018

காலம் செய்த கோலமடி - கருத்துரை - திரு கோவைஆவி - திரு கார்த்திக் சரவணன்


எனது புதினம் காலம் செய்த கோலமடி பற்றி கோவை ஆவியின் கருத்து



முதல்ல நான் துளசிதரன் சாருடன் ஆன அறிமுகம் குடந்தை ஆர் வி சரவணன் சார் மூலம் ஏற்பட்டது. குடந்தை சார் தான் ஒரு ஷார்ட் ஃபில்ம்ல நடிக்க போறேன் என்று சொல்லி என்னையும் அழைக்க நான் செல்ல அந்த ஷார்ட் ஃபில்மான பரோட்டா கார்த்திக்கில் துளசி ஸார் என்னையும் ஒரு சின்ன ரோலில் நடிக்கச் சொல்ல நானும் நடித்தேன். அப்படி இன்ட்ரோ ஆனேன். அதில் ஒரு சிறிய காட்சி, சிறிய வசனம். அதன் பின் குடந்தை சாரின் ஷார்ட் ஃபில்மில் துளசிசார் நடிக்க அதில் நானும் நடிக்க சந்திப்பு. அப்புறம் எனது படமான காதல் போயின் காதல் படத்தில் துளசி சார் நடிக்க அப்புறம் ஒவ்வொரு வருடமும் துளசி சார் ஒரு ஷார்ட் ஃபில்ம் எடுக்க நான் பாலக்காடு செல்ல, செல்ல கைரளி ஹோட்டலில் தங்க, இரு நாட்கள் மாத்தூர் சுற்றி படப்பிடிப்பில் கலந்துகொள்வது என்று ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடக்கும் அஜென்டா என்று ஆனது.

என்னைப் பொருத்தவரைக்கும் எனது நடிப்பு கிராஃபை பொறுத்த வரைக்கும் ஒரு பெரிய இன்க்ளைன்டா இருந்தது. முதல்ல மிகச் சிறிய ரோல் அப்புறம் வில்லன் கேரக்டர் அதாவது வில்லனின் தம்பி கதாபாத்திரம். அப்புறம் ஹீரோ ரோல். அதுவும் விவேகானந்தர் ரோல். என்னையும் எனது தொப்பையுடன் என்னை விவேகானந்தராரக உருவகப்படுத்தி எனக்குக் கொடுத்ததற்கு துளசி சாருக்கு ரொம்ப தாங்க்ஸ்.

அவர் படம் எடுக்கும் போது விஷ்வுஅலா பார்த்திருக்கேன். கமாண்டிங்கா மத்தவங்களுக்குச் சொல்லுவது அப்புறம் டப்பிங்கில் டயலாக் டெலிவரி மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கறது, எல்லாம் பார்த்திருக்கேன். அப்பதான் சேச்சிதான் ஃபர்ஸ்ட் சொன்னாங்க அவர் ஒரு கதை எழுதியிருக்காரு. அதை ரிவைவ் பண்ணப் போறாரு அப்படினு. இன்னும் முடிக்கலைனும் சொன்னாங்க. அவர் ஸ்க்ரிப்ட் நல்லா எழுதுவாரு. ஆனா இவர் கதை எப்படி எழுதிருப்பாரு? ஏன்னா இவரது ஒவ்வொரு ஷார்ட் ஃபில்மும் எபிக் ரிலேட்டேட், ஸ்கூல் பிள்ளைங்களுக்காக என்று இன்னும் சொல்லப் போனா ஒவ்வொரு கதையும் கொஞ்சம் சமுதாய முரண் கருத்து கொண்டதாக….உதாரணமாக சிம்பிளா சொல்லணும்னா இன்னும் வெளிவராத ஸ்ராவன் த க்ரேட் ல ராவணன் தான் முக்கிய கதாபாத்திரமாக..….கிட்டத்தட்ட காலா  கதைதான் அதை துளசி சார் காலாக்கு முன்னாடியே எடுத்துட்டார்.

அப்படியான கதைகள் எனும் போது இவர் கதை எப்படி இருக்கும் என்று யோசித்த போது சேச்சி சொன்னாங்க இது கொஞ்சம் ரொமாண்டிக் கதைதானு சொன்னாங்க. பரவாயில்லையே அப்ப கதை கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் போலனு நினைச்சேன். அப்புறம் சேச்சி புக் கொடுத்தாங்க. அட்டைல சிவக்குமார், சுமலதா எல்லாம் பார்த்தப்ப ஐயையோ............பத்தாக் குறைக்கு அவர் காலேஜ் முடித்த சமயத்துல எழுதினதுனு சொன்னதும் ஆஹா பழைய கதையா இருக்குமோனு தோணிச்சு. ஏன்னா எனக்கு விறு விறுனு இருக்கணும் கதை.

ஸோ எப்படி இருக்குமோனு நினைச்சு வாசிச்சப்ப ஃபர்ஸ்ட் சாப்டர்லருந்தே எனக்கு ரொம்பப் பிடிச்சுச்சு. கதை சொல்ற விதமும், நேரட்டிவ் ஸ்டைல் வேகமும், அப்படியே ஸ்க்ரீன் ப்ளே போல அப்படியே காட்சிகள் விரிவது போல அப்படியே வாக் த்ரூ பண்ண முடியுது. அந்த ஃபீல் வந்துச்சு உண்மையிலேயே. பழைய கதைனு ஃபீல் பண்ண வைக்கலை. விறு விறுனுதான் போகுது. இப்ப முதல்ல 3 சாப்டர்தான் வாசிச்சுருக்கேன். ஒவ்வொருவருடைய பாயின்ட் ஆஃப் வியூவிலயும் சம்பவம் விவரிப்பது அப்படியே பார்க்க முடியுது. இப்ப இவங்க முழுசும் வாசிச்சதுனால இவங்க சொன்ன குறைகளைப் பார்க்க முடியலை. முழுவதும் வாசித்தால்தான் தெரியும். இப்ப வரைக்கும் எனக்கு எதுவும் தெரியலை. எனக்கும் ஒன்னு தோணிச்சு. ஏன் சிவக்குமார், ஏன் அஜித் அப்படினு. ஆனா எனக்கு கதையை முழுசும் வாசிச்சாத்தான் அவர் ஏன் கொண்டுவந்தார்னு சொல்ல முடியும்னு தோணுது. துளசி சாரோட இந்த முயற்சிக்கு ஹேட்ஸ் ஆஃப். இவ்வளவு பெரிய புக் எழுதறது என்பது ரொம்பப் பெரிய விஷயம். ஒரு கதை ஒரு பக்கம் எழுதவே எவ்வளவு மூச்சுத் திணறுது எனும் போது இப்படியான ஒரு புத்தகம் கொண்டு வந்ததுக்கு துளசி சாருக்கு வாழ்த்துகள்.

திரு கார்த்திக் சரவணனின் கருத்து



வணக்கம். எனக்கும் துளசி சாருடைய அறிமுகம் கிட்டத்தட்ட ஆவியைப் போலத்தான். ஆனா, நான் பாலக்காடு போனதில்லை. இங்கு ஆவியின் குறும்படம் காதல் போயின் காதல் எடுத்த போது முதல் அறிமுகம். அப்புறம் குடந்தை சாரின் அகம் புறம் குறும்படம் எடுத்த போது துளசி சாருடன் நெருக்கமான பழக்கம். நிறைய தெரிந்து கொண்டேன். கற்றும் கொண்டேன். இந்த புக்கைப் பொருத்தவரை மன்னிக்கணும். எனக்கு புக் நீங்க ஆவியிடம் கொடுத்ததுமே கிடைத்துவிட்டது. வாசிக்கவும் தொடங்கினேன். மூன்று சாப்டர் படித்தும் விட்டேன். ஆதுக்கு அப்புறம் உடல்நலம் சரியில்லாமல் போனதால் தொடர்ந்து வாசிக்க முடியலை. வாசித்த வரை எனக்குப் பிடித்தது. கதா பாத்திரங்கள் தாங்களே பேசுவது போல வருவது நல்லாருக்கு. முதல் அத்தியாயத்துல, துரைராஜ் சாப்டர் கொஞ்சம் சின்னதாகவும் அடுத்த இரு சாப்டர்களும் கொஞ்சம் ரொம்பப் பெரிசாவும் இருக்குது போல இருக்கு நான் வாசித்தது கம்மிதான். கண்டிப்பா முழுவதும் வாசித்துவிட்டு என் ப்ளாகில் கருத்து எழுதுகிறேன். துளசி சாருக்கு வாழ்த்துகள்.

புத்தகத்தைப் பெற விரும்புபவர்கள் தோழி கீதாவை இந்த நம்பரில் தொடர்பு கொள்ளலாம். (Those who wish to buy a copy of this book may contact Ms Geetha) 9940094630 அல்லது எனது மின் அஞ்சல் thulasithillaiakathu@gmail.com 



ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்
32/1, கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி, சென்னை26

புத்தகத்தின் விலை ரூ 200/ ஆனால் தரப்படுவது ரூ 150 க்கு. புத்தகத்தின் பக்கங்கள் 303


--------துளசிதரன்


செவ்வாய், 26 ஜூன், 2018

காலம் செய்த கோலமடி - கருத்துரை - திரு பாரத் - திரு பாலகணேஷ்


முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் மகன் திரு ஜ பாரத் அவர்களின் உரை.



வணக்கம். நான் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் மகன் பாரத். ரெண்டு நாட்களுக்கு முன்னர் அப்பா என்னை அழைத்து சென்னையில் நண்பர் ஒருவரது புத்தக வெளியீடு இருக்கிறது என்னால் வர இயலவில்லை. போய் கலந்து கொண்டு வந்துவிடு என்று சொல்லி அப்பா எழுதியிருந்த அணிந்துரையையும், கதையின் சுருக்கத்தையும் அனுப்பியிருந்தார். அதை நான் நேற்று இரவு வாசித்தேன். வாசித்ததும் கல்கியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. அவர் ஒரு கதையின் க்ளைமேக்ஸை எழுதியதும்தான் பன்னிரண்டு வருட பாரத்தை இறக்கி வைத்த உணர்வு வந்ததுனு சொல்லியிருந்த அந்த வரிகள் துளசி ஐயாவின் கதை 85 ல் எழுதத் தொடங்கப்பட்டு இதோ இப்போது 2018ல் வெளிவருவதைப் பார்த்ததும் தோன்றியது.
இத்தனை வருடங்கள் கழித்து வெளிவரும் போது துளசி ஐயாவின் முகத்தில் தோன்றும் அந்த உணர்வுகளைப் பார்க்க ஆவலுடன் வந்தேன் ஆனால் அவர் ஊரிலிருந்து வர இயலவில்லை என்பதை அறிந்தேன். என்னால் அதைப் புரிந்து கொள்ள  முடிகிறது. க்ளைமேக்ஸ் எழுதி 12 வருட பாரத்தை இறக்கிய போது கல்கிக்குத் தோன்றிய உணர்வுகள், துளசி ஐயாவுக்கும் இந்த நாவலை முடிக்கும் போது எந்தவிதத்தில் தோன்றியிருக்கும் என்பதை நாவலை வாசித்தால்தான் அறிய முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் கதை வெளிவந்த கதையை அறிந்த போது கல்கியின் வரிகள் தான் டக்கென்று தோன்றியது. இப்படி இந்த வயதிலும் முடிக்கப்படாமல் பரணில் இருந்த நாவலை எடுத்து முடித்து வெளியிடும் முயற்சிகே அவருக்கு ஹேட்ஸ் ஆஃப். என்னைப் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த ஊக்கம் என்றே நினைக்கிறேன். ஐயாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! கூடிய சீக்கிரம் நாவலை வாசித்துவிட்டுக் கருத்து பதிகிறேன். மிக்க நன்றி.

புதினத்தைப் பற்றி நண்பர் பாலகணேஷின் கருத்து.



ஒரு வடிவமைப்பாளன் தன்னிடம் வடிவமைக்க வரும் எல்லா புத்தகங்களையும் ஆழ்ந்து படிக்க வாய்ப்பில்லை. வடிவமைப்புடன் பிழை நீக்கமும் கவனிக்கும் பட்சத்தில் மிகவும் ஆழ்ந்து பொறுமையாகப் படித்தாக வேண்டும். அதனாலேயே ஆழ்ந்து படித்தேன். இல்லை என்றாலும் துளசியின் புத்தகம் என்பதால் படித்திருப்பேன் என்பது வேறு விஷயம். இதில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய சில விஷயங்களை முதலில் சொல்லிவிடுகிறேன். இவங்க சொன்னது போல் இடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்பது ஒரு சிக்கலான ஆட்டிட்யூட் உள்ள விஷயம். நாவல்கள் இதைப் பற்றி 87, 90 களில் அப்புறம் வந்திருக்கிறது. அதுக்கு முந்தின பீரியட்லேயே ஆரம்பிச்சுருக்கான்றது க்ரேட். பெரிய விஷயம். பட் கொஞ்சம் மிஸ் பண்ணினாலும் விரசம் என்று சொல்லக்கூடிய ஒரு கருவை கூடியமட்டிலும் விரசம் இல்லாம அழகா சொல்லிருக்கிறார் என்ற வகைல பெரிய சவாலை எதிர்கொண்டு இதில் துளசி ஜெயிச்சிருக்கிறார். அதை ரசிக்கும் விதமா சொல்லிருக்கிறார். மூன்று பேர் முக்கியக் கதாபாத்திரங்கள். ஒவ்வொரு ஆங்கிளிலும் கதை சொல்லுவது என்பது.. சில வருஷங்கள் முன்னால், 70-80- களில் நாகன் அப்படின்ற எழுத்தாளர் ராணியிலும், தினத்தந்தியிலும் தொடர்கதைகள் எழுதிக் கொண்டிருந்தார். அவரது ஃபேவரைட் இது. மூன்று கேரக்டர் இருந்தா மூன்று கேரக்டரும் அவரே கதை சொல்லுவார்.. அந்த பாணியை அதுக்கப்புறம் யாருமே கையிலெடுக்கலை. ரொம்ப வருடங்களுக்குப் பிறகு இப்ப துளசி கையிலெடுத்துப் பார்க்கிறேன். ஒரு வேளை துளசி அப்ப ஆரம்பித்து இப்ப முடிச்சதால அந்த ஸ்டைல் அப்ப இருந்து இப்ப வந்துருக்கிறதோ என்று தெரியலை. பட் ரொம்ப ரெஃப்ரெஷிங்காக இருந்தது. அழகாகவும் இருந்தது.

புத்தகத்துல சில குறிப்பிட வேண்டிய விஷயங்கள்னு நான் நினைப்பது என்னவென்றால் 27 அத்தியாயம் வரைக்கும் ஒவ்வொருத்தரும் மாறி மாறி ஒவ்வொருவர் கோணத்திலும் தெளிவா கதை சொல்லப்படுகிறது. அவன் வந்து சேருவது. ப்ரொஃபசரின் வைஃப் மேல் சபலப்படுவது, ப்ரொஃபஸருக்கு உண்மை தெரியவருவது, அவளைப் ப்ரிவது இந்த சமாச்சாரங்கள் எல்லாம் விரிவாககச் சொல்லிட்டு, அதற்கு அப்புறம் முப்பது வருஷம் கழித்து சந்திச்சு சேருகிறார்கள் என்பதை ஒரே சாப்டரில் வந்தாங்க, சந்திச்சாங்க, பார்த்தாங்க சேருறாங்கனு அவசர கோலமா முடிச்சது போல இருக்கிறது. சேட்டைக்கார அண்ணா சொன்னது போல முன் சம்பவங்களைக் கொஞ்சம் ஷார்ட் பண்ணிட்டு பின் சம்பவங்களைக் கொஞ்சம் விரிவாக்கியிருந்தா ரொம்ப அளவானதாக இருந்திருக்கும். இதுல கொஞ்சம் நிதானம் காட்டியிருக்கணும் என்று தோன்றியது. இது ஒரு குறையா எனக்குத் தோன்றியது.

மற்றொரு உறுத்தல். எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலை. ஆனால் துளசியின் விருப்பத்திற்காகச் செஞ்சது. திரைப்பட நடிகர்களின் முதத்தை கேரக்டர்களில் கொண்டு வந்தது. அது மிகப் மோசமான உதாரணம். படிக்கறவங்களோட ஈடுபாட்டைக் குறைச்சுடும். அது எனக்குப் பிடிக்கலை. அந்தக் கதாப்பத்திரத்தை ஓவியமாக வரைஞ்சு படிக்கும் போது திங்க் பண்ணுவது என்பது வேற. இந்த நடிகர் மாதிரி இருப்பார் என்று சொன்னால் நாம திங்க் பன்றது எல்லாம் அந்த நடிகருக்குத்தான் போகும் அப்ப நாம கதையை ஆழ்ந்து படிக்க முடியாது என்பது ஒரு மைனஸ் பாயின்ட். இந்தச் சமாச்சாரத்தை அவர் ஏன் செஞ்சார்னு தெரியலை. அவரைப் பார்க்கும் போது கேட்டுக்கலாம்.

மொத்தத்துல படிக்கும் போது ஆரம்பத்துலருந்து கடைசி வரை ஒரு அழகான ஃப்ளோவும், விறு விறுப்பும் இருந்தது. அந்த வகையில செய்ததுல மிக மனதிருப்தி கொடுத்த புத்தகம். அனைவரும் படிக்கக் கூடிய புத்தகம். மிக்க மகிழ்ச்சி. நன்றி.





ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்
32/1, கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி, சென்னை26

புத்தகத்தின் விலை ரூ 200/ ஆனால் தரப்படுவது ரூ 150 க்கு. புத்தகத்தின் பக்கங்கள் 303


---துளசிதரன்

திங்கள், 25 ஜூன், 2018

காலம் செய்த கோலமடி - கருத்துரை - சேட்டைக்காரன் திரு வேணுகோபாலன்



2018 ஜூன் 17 ஆம் தேதி ஞாயிறு என் வாழ்வில் மிக மிக முக்கியமான தினம். தருணம். எனது முதல் புதினமான காலம் செய்த கோலமடி யின் அறிமுக தினம். மதிப்புரை எழுதித் தந்தது மட்டுமின்றி, முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் எனக்கு அளித்த ஊக்கத்தை சொல்லிட வார்த்தைகள் இல்லை. புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் பெற எந்த நாளிதழ்களுக்கு அனுப்பலாம் என்பதிலிருந்து இன்றைய நிகழ்வில் இடம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது வரை அவ்வப்போது அழைத்து வழிநடத்திக் கொண்டே இருந்தார். அதுமட்டுமின்றி தன்னால் வர இயலாத நிலை என்பதையும் தெரிவித்து, தன் மூத்தமகன் சென்னையில் இருப்பதாகவும் அவர் தனக்குப் பதில் வருவார் என்றும் அழைத்துச் சொன்னார். அது போலவே அவரது மகன் திரு பாரத் அவர்களும் தந்தை சொல் தட்டாமல் கலந்து கொண்டு சிறப்பித்தார். முனைவர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. மிக்க மிக்க நன்றி முனைவர் அவர்களின் மகன் திரு பாரத்.

என்னால் வர இயலாத நிலையில், என் சார்பில் தோழி கீதா நிகழ்விற்கான ஏற்பாடுகளை நண்பர்களின் உதவியுடன் செய்திட அன்றைய தினம் பெரிய அளவிலான அறிமுகமாக இல்லை என்றாலும், புத்தகத்தைப் பற்றிய நண்பர்களின் கருத்துப் பரிமாற்றத்தில், இனிய சந்திப்பாக நடந்தேறியதை அறிந்தேன். திரு பாலகணேஷ் அவர்கள் புத்தகத்தை அறிமுகப்படுத்த முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் மகன் பாரத் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். 

உரையும் ஆற்றினார். அடுத்து, நண்பர் சேட்டைக்காரன் திரு வேணுகோபாலன், திரு பாலகணேஷ், திரு கோவை ஆவி, திரு கார்த்திக் சரவணன் எல்லோரும் புத்தகத்தைப் பற்றிய கருத்தை, தெரிவித்ததை கீதா தன் மொபைலில் ரெக்கார்ட் செய்து அதை வேர்ட் டாக்குமென்டாக எனக்கு அனுப்பி வைத்திட இதோ இங்கே அதனைப் பதிகிறேன். ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன். 

புதினத்திற்கு அணிந்துரை, மதிப்புரைகள் எழுதி கௌரவித்த சகோதரி, திருமதி தேனம்மை லக்ஷ்மணன் மற்றும் திரு ராயசெல்லப்பா சார் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த எனக்கு, உறுதுணையாய் நின்று அக்கதாபாத்திரங்களுக்கெல்லாம் உருவம் கொடுத்து அவர்களை நம்மிடையே வாழ வைத்திருக்கும் திருமிகு தமிழ்செல்வனுக்கும் (தமிழுக்கு) எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது.

நூலழகு செய்து, நிகழ்வில் புதினத்தைப் பற்றி கருத்துரையும் வழங்கியிருக்கும் திரு பாலகணேஷிற்கும் என் நன்றி.

புதினத்தை வெளியிட்டு உதவிய ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸிற்கும் எனது மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திப்பு, ஸ்வீட், காரம், காபி என முடிந்திருக்கிறது.

பதிவு பெரிதாவதால் முதலில் சேட்டைக்காரன் திரு வேணுகோபாலன் அவர்களின் கருத்தை பதிகிறேன். அடுத்து திரு பாரத், திரு பாலகணேஷ், திரு ஆவி மற்றும் திரு கார்த்திக் சரவணன் அவர்களின் கருத்தைப் பதிகிறேன்.

                                         

புதினத்தைப் பற்றி சேட்டைக்காரன் திரு வேணுகோபாலன் அவர்களின் கருத்து

இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னன்னா ரொம்ப அளவான கதாபாத்திரங்கள். வள வளனு 10, 15 கதாபாத்திரங்கள வைச்சு அந்தக் கதாபாத்திரங்களுக்காக சம்பவங்களைக் கொண்டு வந்து பண்ணனும் அப்படின்ற முயற்சி இல்லாம ஒரு 4 கதாபாத்திரங்களை வைச்சு அவங்களுடைய பாயின்ட் ஆஃப் வ்யூல கதை போகுது. இது ரொம்பக் கஷ்டமான விஷயம். ஒருத்தருடைய பாயின்ட் ஆஃப் வியூல கதை சொல்றது ரொம்பக் கஷ்டம். ஒரு உதாரணத்துக்கு சொல்றதுனா இந்தக் கதையிலேயே வர சம்பவம்.

முதல் சாப்டர்ல கணவன் கல்லூரி ஃபங்க்க்ஷன் முடிச்சு வராரு. லதா வெளில போய்ட்டு வருகிறாள். நைட்டிக்கு மாறும் போது லதாவோட எக்ஸ்ப்ரெஷன். அவளுடைய எதிர்பார்ப்பு என்ன அப்படின்ற எக்ஸ்ப்ரெஷன். புருஷன் மட்டுமே பார்க்கக் கூடியது. அந்த இடத்துல பார்த்தீங்கனா லதாவுடைய அந்த ஃபீலிங்க மட்டும் தான் எக்ஸ்ப்ரெஸ் பண்ண முடியும். இதுவே வந்து படர்க்கைல அதாவது தேர்ட் பெர்சன்ல எழுதியிருந்தார்னா, கணவன் முன்னர் மனைவி உடை மாற்றும் போது கணவனுக்கு ஏற்படும் அந்த இயல்பான உணர்வை அதையும் வெளிப்படுத்தியிருக்கலாம். இதையும் வெளிப்படுத்தியிருக்கலாம். ஸோ அது வந்து ஒரு ஹேண்டிகேப். அந்த ஹேண்டிகேப்பையும் மீறி அந்தக் காட்சியை மிகவும் அழகா சொல்லிருப்பாரு.

நான் இவருடைய முன்னுரையிலிருந்தே ஆரம்பிக்கலாம். அதுல ஒரு விஷயம் எழுதியிருந்தார். அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஒவ்வொருவருக்கும் அவர் மட்டுமே எழுதக் கூடியமாதிரி ஒரு கதை இருக்கும். அதுதான் ஃபேக்ட். இப்ப சில விஷயங்களை அதை அனுபவிச்சவங்க எழுதும் போது அது டோட்டலி டிஃப்ரெண்டா இருக்கும். இப்ப சொல்லணும்னா ஒரு நோயாளி தன் நோயைப் பத்தி எழுதறான்னா, அவன் என்ன அனுபவிக்கிறான், மருந்து எல்லாம் சொல்லும் போது அவன் நோயாளியா இருந்தா அதுல ஒரு ஆத்தெண்டிசிட்டி இருக்கும். ஒரு டாக்டர் சொல்றார்னா அதுல ஒரு ஆத்தெண்டிசிட்டி இருக்கும். ரொம்ப ஆரோக்கியமா இருக்கறவன் ஒரு நோயாளியைப் பத்தி எழுதினா அதுல ஒரு அட்டாச்மென்ட் வரது ரொம்பக் கஷ்டம். அதை அவன் வலிய திணிக்கறவன். இதுல எதுவுமே திணிக்காம அது பாட்டுக்குப் போகுது. அது போல நிறைய இடங்கள்ல ஆசிரியர் மிக சுலபமா போயிடறாரு. கிராமப்புறத்துக்கு ஒருத்தன் அங்கிருக்கற ஒதுக்கப்பட்ட பெண்களுடன் எல்லாம் உல்லாசமா இருக்கான். அதை எல்லாம் தேவைப்பட்டா கொஞ்சம் விஸ்தரிச்சு எரோட்டிக்கா கொண்டு போயிருக்கலாம். ஆனா அப்படிக் கொண்டு போகாம டக் டக்குனு ஒரு பாராவுல முடிச்சுக் கொண்டு போயிடறாரு. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சேர்ந்த கூட்டாளி சரியில்லைனு சொல்ல முடியலை.

எப்பவோ படிச்ச பாலகுமாரன் கதையில் வரும் சம்பவம் ஞாபத்துக்கு வருது. அதுல எப்படினா புருஷன் வீட்டுக்கு வராரு. மனவி ஒரு விடலைப் பையனோடு இருக்கா. கதவைத் திறக்கறான் பார்த்த  உடனே அந்தப் பையன் எழுந்திருந்து போறான். அவனுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு பாலகுமாரனுடைய ரியாக்ஷனை அந்த இடத்துல பார்க்கறேன். அடப்பாவி இப்படித் தப்பு பண்ணிட்டியேடா உன் வாழ்க்கை போச்சேடா. இதுலருந்து எப்படி மீளப் போறனு அப்படினு அந்தக் கதாபாத்திரம் யோசிக்கற மாதிரி. அதுக்குப் பெயர்தான் லேட்டரல் திங்கிங்க். இத இந்தக் கதைல நான் நிறைய பார்க்கிறேன்.

சில விஷயங்கள், எனக்கு ஏற்புடையாதாக இல்லாத சில விஷயங்கள் இதுல இருக்கு. உதாரணத்திற்கு அந்த சினிமா தியேட்டர்ல நடக்கற சம்பவத்தை இந்த அளவு பெரிசு படுத்த வேண்டாம். என்னன்னா அதையும் கற்பையும் சம்பந்தமே படுத்தக் கூடாது. அது எனக்கு ரெண்டு எக்ஸ்ட்ரீமா பட்டுச்சு சினிமா தியேட்டர்ல ஒருத்தன் சில்மிஷம் பன்றதையும், கற்பையும் தொடர்புப் படுத்தக் கூடாது. இதுதான் கற்பா அப்படினா இல்லை. அப்படிப் பார்த்தா பொதுவெளில பெரிய சிட்டிஸ்ல ட்ரெயின்ல ஆணும் பெண்ணும் அருகருகில் உட்கார்வது சகஜம். இந்த ஃபிசிக்கல் விஷயங்களைக் கற்புடன் சம்பந்தப் படுத்தக் கூடாது என்பது என் எண்ணம். சேஸ்டிட்டி இஸ் நாட் அன் இஷ்யு அபௌட் டிஷ்ஷு. இது சம்திங்க் சைக்கலாஜிக்கல். இதை நாம ஃபிசிக்கல் ஆஸ்பெக்ட்டோடப் பார்க்கவே கூடாது என்பது என் தனிப்பட்டக் கருத்து.

ரீடருடைய கம்ஃப்ர்ட் என்பது முக்கியம். இப்ப சுஜாதா, பாலகுமாரன் பத்தி ஏன் பேசுறோம்னா அவங்க ரீடார்ஸுடைய கம்ஃப்ர்ட்ட அப்படியே மெயிண்டைன் பண்ணிட்டுப் போயிட்டுருப்பாங்க. எப்பவாதுதான் சுருக்குனு ஊசி குத்தறமாதிரி…ஏதாவது இருக்கும்.

அடுத்தது நான் குறைனு சொல்ல வருவது ஒரே விஷயம் வந்து ரிப்பீட் ஆகுது. பாயின்ட் ஆஃப் வியூல சொல்லும் போது ஒரே விஷயத்தை ஒரே ஆள் வந்து ரெண்டு இடத்துல சொல்லும் போது கொஞ்சம் இர்க்சம்மா இருந்துச்சு. அதையே ரெண்டு பேரா சொல்லிருந்தா…நல்லாருந்துருக்குமோனு தோணிச்சு. விருமாண்டி ஸ்டைல்ல.

மத்தபடி 85 ல இப்படி ஒரு நாவலை அவர் துணிச்சலா எழுதியிருக்கார்னா ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம். அந்தக் காலகட்டத்துல சுஜாதாவே கொஞ்சம் எல்லை மீறிப் போனார்னா அவரை ஓரங்கட்டறதுக்கு ஆட்கள் ரெடியாக இருந்தாங்க. அந்தக் காலகட்டத்துல எல்லாம் இடிபஸ் காம்ப்ளெக்ஸ் எல்லாம் யோசிக்க முடியாது. ஹிந்தில கூட ஒரு படம் வந்திருக்கு. இப்ப எல்லாம் இது பரவலாக இருக்கும் ஒரு விஷயம் பெர்வெர்ஷன் இல்லை. ஸ்டேட் ஆஃப் மைன்ட்.. ஸோ அந்தக் காலகட்டத்துல யோசிச்சு எழுதறது என்பது பெரிய விஷயம். அப்ப இதை எழுதியிருக்கார்னா மைன்ட் ப்ளோயிங்க்.

அந்த விதத்துல  இது ஒரு அழகான மெண்டலைசேஷன், எப்படி ஒரு டெலிக்கேட்டான ஹ்யூமன் ரிலேஷன்ஷிப்…ஒரு சின்ன வார்த்தை, ஒரு சின்ன சம்பவம், ஓவர் நைட்ல ஒருத்தருடைய வாழ்க்கையே மாத்திருது என்பது ப்யூட்டிஃபுல். என்னைப் பொருத்தவரைக்கும் அத்தியாயங்களுடைய அளவைக் கொஞ்சம் குறைச்சிருந்தா புத்தகத்தின் அளவும் கொஞ்சம் குறைஞ்சிருக்கும். இன்னும் கொஞ்சம் நறுக்குனு வந்திருக்கும். பட் ஸ்டில் வொர்த் ரீடிங்க் நாவல். வெரி குட் அட்டெம்ப்ட். ரொம்ப நல்லா பண்ணிருக்காரு. மேபி அதே ஸ்பீட்ல அப்பவே முடிச்சுருந்தார்னா இன்னும் கொஞ்சம் நல்லாருந்துருக்கும். ஸ்டில் ஐ வுட் கிவ் இட் A+.

புத்தகங்கள் கீதாவிடம் இருக்கின்றன. வேண்டுவோர் அவரைத் தொடர்பு கொள்ளலாம். மின் அஞ்சலுக்கும் தொடர்பு கொள்ளலாம். thulasithillaiakathu@gmail.com



ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்
32/1, கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி, சென்னை26


புத்தகத்தின் விலை ரூ 200/ ஆனால் தரப்படுவது ரூ 150 க்கு. புத்தகத்தின் பக்கங்கள் 303

-------துளசிதரன்


ஞாயிறு, 24 ஜூன், 2018

உயிரா? மானமா? - 3


“எனக்கு இனி இவ்வுலகில் காண ஒன்றுமில்லை. சாவின் மடியில் தஞ்சமடையப் போகிறேன். என் சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. இப்படிக்கு டினு அலெக்ஸ்.”

கோட்டயம் அயற்குன்னம் ஆறுமானூர் கொற்றத்தில் அலெக்சாண்டர், தன் முப்பது வயது மகன் டினுவின் படுக்கை அறை மேசையிலிருந்து கிடைத்த இக்கடிதத்தை வாசித்ததும் அதிர்ந்தே போனார்.

இந்த அதிர்ச்சி, அப்பாவின் குடிப்பழக்கத்தால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷ் நல்லசிவம் எழுதி வைத்திருந்த கடிதத்தை வாசித்த அந்த அப்பாவுக்கு ஏற்பட்டது போன்றதல்ல. தந்தையின் குடிப்பழத்தை நிறுத்த அச்சிறுவன் தன் உயிரையே மாய்த்தது நம் எல்லோரது மனதிலும் ஏற்படுத்திய வேதனை .மிகப் பெரிது. அதற்குக் காரணம் அப்பாவின் உடல் நலத்தைப் பற்றிய எண்ணமும் குடிகாரனின் மகனாய் வாழ்வதிலுள்ள அவமானமுமாகத்தான் இருக்கும். சொந்தக் காலில் நிற்கவோ, அப்பாவை திருத்தவோ இயலாத அச்சிறுவனின் பக்குவப்படாத மனதில் தோன்றிய எண்ணங்கள் அவனது உயிரைப் பறித்தேவிட்டது.

ஆனால் பிஎஸ்ஸி படித்த, கோட்டயத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், அரசு வேலைக்கான நேர்முகத்தேர்வை எதிர் நோக்கியிருக்கும் 30 வயதான டினு, இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுக்கக் காரணமும் ஒரு தன்மானப் பிரச்சனைதான். அர்ஜெண்டினாதான் ஜெயிக்கும் என்று நண்பர்களிடம் வீம்பு பேசிய அவர் க்ரோஷியாவிடம் தோற்றதால் இனி எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பது? முடியாது! வேறு வழியில்லை! செத்துத்தான் போக வேண்டும்! என்ற முடிவெடுத்து இக்கடிதத்தை எழுதி வைத்து வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்.

தன் தவறால் பிறந்த முதல் கோலுக்குக் காரணமான அர்ஜெண்டினாவின் கோலி வில்ஃப்ரெடோ காபெல்லோரோ தற்கொலை செய்து கொள்ளவில்லை. தவறான பல தீர்மானங்கள் எடுத்த நான் தான் தோல்விக்குப் பொறுப்பு கோலியல்ல என்று கதறியழும் யோர்க்கே சம்பவோலியும் தற்கொலை செய்யவில்லை. ஆனால் நம் டினு தற்கொலை செய்தே தீர வேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டார். கடிதத்தை எழுதும் போதும் மேசை மீது வைத்து விட்டு வெளியேரும் போதும் கண்டிப்பாக அந்த அறையில் தூங்கும் பெற்றொரைப் பற்றி நினைத்திருப்பார். பின் இரவு 1.30க்கு எழுந்த அப்பா, “விளையாட்டு முடியவில்லையா? நாளை ஆஃபீஸ் போக வேண்டும்தானே? தூங்கு டினு” என்று சொல்லிச் சென்ற அப்பாவை நினைக்காமல் இருந்திருக்க முடியாது.

இதுதான் இன்றைய தலைமுறை. தன்மானம் எனும் பிரச்சனையைத் தலையில் ஏற்றித் தாண்டவமாட அனுமதிக்கும் தலைமுறை. தன் மகள் சந்திரா வேறு சாதியான பஜீஷுடன் வாழப் போகிறாள் என்பதைச் சகிக்க முடியாமல் மகளைக் குத்திக் கொன்ற அரிக்கோடு கீழுப்பரம்பில் ராஜனுக்கும் இதே தன்மானப் பிரச்சனைதான். தன் மகளின் காதலனான கெவினை கொன்ற சாக்கோவுக்கும் அவரது மகனுக்கும் இதே தன்மானப் பிரச்சனைதான்.

இப்படி தன்னுயிரைவிட, தனக்குப் பிடித்தமானவர்களின் உயிரைவிட, தன்மானப் பிரச்சனை இப்போதெல்லாம் சாதாரண மனிதர்களை மட்டும் ஏன் வேட்டையாடுகிறது என்று நினைக்கும் போது காரணம் விளங்குவதே இல்லை. ஆனால் இது போன்ற தன்மானப் பிரச்சனைகள் கோடிகளை அபகரித்து வெளிநாடு செல்லும் மல்லையாக்களுக்கும், அவர்களுக்கு உதவிசெய்து கோடிகளை விழுங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏனோ ஏற்படுவதில்லை. பாலியல் பலாத்காரம் செய்யும் பசுத்தோல் போர்த்திய புலிகளுக்கும் ஏனோ ஏற்படுவதில்லை. அவர்களெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கு முன்னால் வந்து நிற்பதே இல்லை என்பதும் அப்படி நின்றாலும் கேட்க வேண்டியவர்கள் கேட்கத் துணியமாட்டார்கள் என்பதும் தான் உண்மை.

ராஜனிடமும், சாக்கோவிடமும் கேள்வி கேட்பவர்கள் கேள்வி கேட்கப் பயப்படவே மாட்டார்கள். கேட்கட்டும். கேட்டால், “அதற்கு நான் என்ன செய்வது? நடந்துவிட்டது. அவர்கள் அன்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் விருப்பம் நிறைவேறட்டும். இனி வேறு ஒன்றும் செய்வதற்கில்லை” என்று சொல்ல மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளலாம். இப்படித் தன்மானம் என்ற பெயரில் குத்திக் கொலை செய்வது அக்குடும்பத்திற்கு எவ்வளவு பாதிப்புகளைக் கொண்டு வருகிறது?
டினுவின் செயல், ஓர் அற்ப பந்தயத்தில், தான் தோற்றுவிட்டேன் என்பதற்காகத் தன்மானம் என்ற பெயரில் தற்கொலை! இது போல் உயிரை மாய்த்துக் கொண்டு அவரை நம்பி வாழ்பவர்களை வேதனையில் ஆழ்த்திவிட்டுச் செல்வது என்பது எவ்வளவு கொடூரமானது! இப்படித் தன்மானப் பிரச்சனை மேலோங்கும் போது, ஒரு நொடிப் பொழுதில் புத்தி பிரண்டு எதிர்மறை உணர்ச்சிகள் மேலோங்கி மனம் முந்திக் கொண்டுவிடுகிறது!

பிகு: டினுவின் வீட்டிலிருந்து புறப்பட்ட போலீஸ் நாய் மோப்பம் பிடித்து ஆற்றங்கரை வரை சென்றது. டினு உயிருடன் திரும்புவாரா? உயிரற்ற சடலமாய் திரும்புவாரா? தெரியவில்லை. அரெஜெண்டினாவின் தோல்வியை எல்லோரும் மறந்து பழைய வாழ்க்கை வாழத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு காரணத்திற்கு உயிரை மாய்க்கப் புறப்பட்ட டினுவின் தந்தை அலெக்சாண்டர், அவரது மரணம் வரை மகனை நினைத்து கண்ணீர் சிந்துவார் என்பதை நினைக்கையில் மனது வேதனை அடைகிறது.

--------துளசிதரன்