ஞாயிறு, 24 ஜூன், 2018

உயிரா? மானமா? - 3


“எனக்கு இனி இவ்வுலகில் காண ஒன்றுமில்லை. சாவின் மடியில் தஞ்சமடையப் போகிறேன். என் சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. இப்படிக்கு டினு அலெக்ஸ்.”

கோட்டயம் அயற்குன்னம் ஆறுமானூர் கொற்றத்தில் அலெக்சாண்டர், தன் முப்பது வயது மகன் டினுவின் படுக்கை அறை மேசையிலிருந்து கிடைத்த இக்கடிதத்தை வாசித்ததும் அதிர்ந்தே போனார்.

இந்த அதிர்ச்சி, அப்பாவின் குடிப்பழக்கத்தால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷ் நல்லசிவம் எழுதி வைத்திருந்த கடிதத்தை வாசித்த அந்த அப்பாவுக்கு ஏற்பட்டது போன்றதல்ல. தந்தையின் குடிப்பழத்தை நிறுத்த அச்சிறுவன் தன் உயிரையே மாய்த்தது நம் எல்லோரது மனதிலும் ஏற்படுத்திய வேதனை .மிகப் பெரிது. அதற்குக் காரணம் அப்பாவின் உடல் நலத்தைப் பற்றிய எண்ணமும் குடிகாரனின் மகனாய் வாழ்வதிலுள்ள அவமானமுமாகத்தான் இருக்கும். சொந்தக் காலில் நிற்கவோ, அப்பாவை திருத்தவோ இயலாத அச்சிறுவனின் பக்குவப்படாத மனதில் தோன்றிய எண்ணங்கள் அவனது உயிரைப் பறித்தேவிட்டது.

ஆனால் பிஎஸ்ஸி படித்த, கோட்டயத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், அரசு வேலைக்கான நேர்முகத்தேர்வை எதிர் நோக்கியிருக்கும் 30 வயதான டினு, இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுக்கக் காரணமும் ஒரு தன்மானப் பிரச்சனைதான். அர்ஜெண்டினாதான் ஜெயிக்கும் என்று நண்பர்களிடம் வீம்பு பேசிய அவர் க்ரோஷியாவிடம் தோற்றதால் இனி எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பது? முடியாது! வேறு வழியில்லை! செத்துத்தான் போக வேண்டும்! என்ற முடிவெடுத்து இக்கடிதத்தை எழுதி வைத்து வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்.

தன் தவறால் பிறந்த முதல் கோலுக்குக் காரணமான அர்ஜெண்டினாவின் கோலி வில்ஃப்ரெடோ காபெல்லோரோ தற்கொலை செய்து கொள்ளவில்லை. தவறான பல தீர்மானங்கள் எடுத்த நான் தான் தோல்விக்குப் பொறுப்பு கோலியல்ல என்று கதறியழும் யோர்க்கே சம்பவோலியும் தற்கொலை செய்யவில்லை. ஆனால் நம் டினு தற்கொலை செய்தே தீர வேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டார். கடிதத்தை எழுதும் போதும் மேசை மீது வைத்து விட்டு வெளியேரும் போதும் கண்டிப்பாக அந்த அறையில் தூங்கும் பெற்றொரைப் பற்றி நினைத்திருப்பார். பின் இரவு 1.30க்கு எழுந்த அப்பா, “விளையாட்டு முடியவில்லையா? நாளை ஆஃபீஸ் போக வேண்டும்தானே? தூங்கு டினு” என்று சொல்லிச் சென்ற அப்பாவை நினைக்காமல் இருந்திருக்க முடியாது.

இதுதான் இன்றைய தலைமுறை. தன்மானம் எனும் பிரச்சனையைத் தலையில் ஏற்றித் தாண்டவமாட அனுமதிக்கும் தலைமுறை. தன் மகள் சந்திரா வேறு சாதியான பஜீஷுடன் வாழப் போகிறாள் என்பதைச் சகிக்க முடியாமல் மகளைக் குத்திக் கொன்ற அரிக்கோடு கீழுப்பரம்பில் ராஜனுக்கும் இதே தன்மானப் பிரச்சனைதான். தன் மகளின் காதலனான கெவினை கொன்ற சாக்கோவுக்கும் அவரது மகனுக்கும் இதே தன்மானப் பிரச்சனைதான்.

இப்படி தன்னுயிரைவிட, தனக்குப் பிடித்தமானவர்களின் உயிரைவிட, தன்மானப் பிரச்சனை இப்போதெல்லாம் சாதாரண மனிதர்களை மட்டும் ஏன் வேட்டையாடுகிறது என்று நினைக்கும் போது காரணம் விளங்குவதே இல்லை. ஆனால் இது போன்ற தன்மானப் பிரச்சனைகள் கோடிகளை அபகரித்து வெளிநாடு செல்லும் மல்லையாக்களுக்கும், அவர்களுக்கு உதவிசெய்து கோடிகளை விழுங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏனோ ஏற்படுவதில்லை. பாலியல் பலாத்காரம் செய்யும் பசுத்தோல் போர்த்திய புலிகளுக்கும் ஏனோ ஏற்படுவதில்லை. அவர்களெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கு முன்னால் வந்து நிற்பதே இல்லை என்பதும் அப்படி நின்றாலும் கேட்க வேண்டியவர்கள் கேட்கத் துணியமாட்டார்கள் என்பதும் தான் உண்மை.

ராஜனிடமும், சாக்கோவிடமும் கேள்வி கேட்பவர்கள் கேள்வி கேட்கப் பயப்படவே மாட்டார்கள். கேட்கட்டும். கேட்டால், “அதற்கு நான் என்ன செய்வது? நடந்துவிட்டது. அவர்கள் அன்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் விருப்பம் நிறைவேறட்டும். இனி வேறு ஒன்றும் செய்வதற்கில்லை” என்று சொல்ல மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளலாம். இப்படித் தன்மானம் என்ற பெயரில் குத்திக் கொலை செய்வது அக்குடும்பத்திற்கு எவ்வளவு பாதிப்புகளைக் கொண்டு வருகிறது?
டினுவின் செயல், ஓர் அற்ப பந்தயத்தில், தான் தோற்றுவிட்டேன் என்பதற்காகத் தன்மானம் என்ற பெயரில் தற்கொலை! இது போல் உயிரை மாய்த்துக் கொண்டு அவரை நம்பி வாழ்பவர்களை வேதனையில் ஆழ்த்திவிட்டுச் செல்வது என்பது எவ்வளவு கொடூரமானது! இப்படித் தன்மானப் பிரச்சனை மேலோங்கும் போது, ஒரு நொடிப் பொழுதில் புத்தி பிரண்டு எதிர்மறை உணர்ச்சிகள் மேலோங்கி மனம் முந்திக் கொண்டுவிடுகிறது!

பிகு: டினுவின் வீட்டிலிருந்து புறப்பட்ட போலீஸ் நாய் மோப்பம் பிடித்து ஆற்றங்கரை வரை சென்றது. டினு உயிருடன் திரும்புவாரா? உயிரற்ற சடலமாய் திரும்புவாரா? தெரியவில்லை. அரெஜெண்டினாவின் தோல்வியை எல்லோரும் மறந்து பழைய வாழ்க்கை வாழத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு காரணத்திற்கு உயிரை மாய்க்கப் புறப்பட்ட டினுவின் தந்தை அலெக்சாண்டர், அவரது மரணம் வரை மகனை நினைத்து கண்ணீர் சிந்துவார் என்பதை நினைக்கையில் மனது வேதனை அடைகிறது.

--------துளசிதரன்

38 கருத்துகள்:

  1. புத்தக வெளியீட்டுப் படங்களை இன்னும் வெளியிடலயே துளசிதரன் சார்.....

    பிறகு இடுகைக்கு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தக வெளியீடு என்று பெரிய நிகழ்வு இல்லை. நானும் வர முடியவில்லை. சிறிய கருத்துப் பறிமாற்றமாகவே நிகழ்ந்துள்ளதை ஆடியோவில் பதிந்து அதை டாக்குமென்ட் செய்து அனுப்பியிருந்தார். அவற்றைப் புகைப்படங்களுடன் முகநூலில் பகிர்ந்து கொண்டேன். வலைத்தளத்தில் கீதா பதிய வேண்டும் சென்னை தலைமையகத்திலிருந்து. பெரும்பாலும் இன்று இரவு அல்லது நாளை வெளியிடுவார். 4 பகுதிகளாக வெளிவரலாம் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி நெல்லைத் தமிழன்

      நீக்கு
  2. தங்களின் புத்தகத்தினைப் படிக்க ஆவலாய் காத்திருக்கின்றேன் நண்பரே
    புத்தகம் பெறுவதற்கான வழியினைக் கூறுங்கள்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா தங்களைத் தொடர்பு கொண்டதாக செய்தி அனுப்பியிருந்தார். அவர் தங்களுக்கு அனுப்பித் தருவார்.

      மிக்க நன்றி நண்பர் கரந்தையார்

      நீக்கு
  3. இப்படி அவசியமின்றி தற்கொலை செய்து கொள்வது சாதாரண விடயமாகி விட்டது.

    வருத்தமான விடயமே... பெற்றோர்களின் அனுகுமுறை சரியில்லாததும் ஒரு காரணமே...

    பதிலளிநீக்கு
  4. அருமையான கருத்துகளுடன்கூடிய இடுகை. பாராட்டுகள் துளசிதரன் சார்.

    எனக்கும் ஸ்போர்ட்சில் நான் நினைக்கும், ஆதரிக்கும் அணி வெற்றிபெற்றால் சந்தோஷமும், தோல்வியுற்றால் நானே தோல்வியடைந்த மாதிரி வருத்தமும் ஏற்படும். விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்கும்போது இப்மடியெல்லாம் எண்ணத் தோன்றாது.

    தற்கொலை என்பது தன்னைச் சூழ்ந்துள்ளவர்களுக்குத் தீரா வருத்தத்தையும், தன் கோழைத்தனத்தை எல்லோருக்கும் உரக்கச் சொல்லும் என்பதையும், கிடைத்த வாழ்க்கை எனும் வாய்ப்பை வீணாக்கியவன் என்ற அவப்பெயரையும் தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைத் தமிழன் விரிவான கருத்திற்கு.

      //தற்கொலை என்பது தன்னைச் சூழ்ந்துள்ளவர்களுக்குத் தீரா வருத்தத்தையும், தன் கோழைத்தனத்தை எல்லோருக்கும் உரக்கச் சொல்லும் என்பதையும், கிடைத்த வாழ்க்கை எனும் வாய்ப்பை வீணாக்கியவன் என்ற அவப்பெயரையும் தரும்.//

      ஆமாம் மிக மிகச் சரியே.

      மிக்க நன்றி நெல்லை தமிழன்.

      நீக்கு
  5. நம்முடைய வாழ்க்கை நம்முடைய கையில்...
    வாழ்வாங்கு வாழ்ந்து விட்டுச் செல்வோம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்து துரை செல்வராஜு ஐயா. ஆனால் இப்படியானவர்களுக்கு அது புரிவதில்லையே.

      மிக்க நன்றி ஐயா கருத்திற்கு

      நீக்கு

  6. //“எனக்கு இனி இவ்வுலகில் காண ஒன்றுமில்லை. சாவின் மடியில் தஞ்சமடையப் போகிறேன். என் சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. இப்படிக்கு டினு அலெக்ஸ்.”//


    30 வயது வரை வளர்த்த தாய், தந்தையரை நினைக்கவில்லை. தான் நண்பர்களிடம் வீம்பு பேசிய நினைவு மட்டும் இருக்கிறது.

    தொலைக்காட்சியில் கேட்ட போதே மனது கஷ்டமாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி எல்லாம் தோன்றுகிறது பாருங்கள் சிலருக்கு.
      மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  7. இந்தச் செய்தி எனக்குப் புதிது. என்றாலும் இம்மாதிரிச் செய்திகளை நிறையக் கேட்டும், பார்த்தும் வருகிறேன். ரொம்பவே மோசமான முன்னுதாரணம்! இதெல்லாம் பிள்ளைகளை மனோபலத்துடன் பெற்றோர் வளர்க்காத காரணத்தால் தான் என நினைக்கிறேன். பாவம் அந்தத் தந்தை. வயதான காலத்தில் பிள்ளையை இழந்து! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மனோபலம் மிக மிக முக்கியம். மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
    2. புத்தக வெளியீடு பற்றி எதுவும் சொல்லவில்லையே! சிறப்பாக நடைபெற்றிருக்கும் என நம்புகிறேன். முகநூலில் பார்த்தேன்.

      நீக்கு
  8. குழந்தைகளை அடித்து வளர்க்கும் பழக்கம் இருந்த அந்த நாட்களில், குழந்தைகளுக்குத் தோல்வியைத் தாங்கும் மன வலிமையை அந்த அடி பெற்றுத்தந்தது. இன்று குழந்தைகளைப் பொத்திப்பொத்தி வளர்ப்பதால் வரும் வினை, அவர்களின் மனவலிமையும் முதுகெலும்பும் இளமையிலேயே வலிமை குன்றிப் போகிறது. அதன் விளைவுதான் இந்தத் தற்கொலைகள்.

    'வாழ்க்கையில் நீ எதிர்பார்க்கும் எல்லாமும் உனக்குக் கிடைத்து விடாது' என்ற உண்மையை அடிக்கடிச் சொல்லி வளர்க்கவேண்டும். 'நீ தோற்றாலும் என் மகன்தான். அதனால் எனக்கு எந்த அவமானமும் இல்லை' என்று பெற்றோர்கள் அவனிடம் தெளிவு படுத்தவேண்டும். பெற்றோர்கள் தங்களின் நிறைவேறாத ஆசைகளைக் குழந்தைகள் மேல திணிப்பது அறவே கூடாது. அவர்களை இயற்கையாக வளரவிடவேண்டும்.

    -இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'வாழ்க்கையில் நீ எதிர்பார்க்கும் எல்லாமும் உனக்குக் கிடைத்து விடாது' என்ற உண்மையை அடிக்கடிச் சொல்லி வளர்க்கவேண்டும். 'நீ தோற்றாலும் என் மகன்தான். அதனால் எனக்கு எந்த அவமானமும் இல்லை' என்று பெற்றோர்கள் அவனிடம் தெளிவு படுத்தவேண்டும். பெற்றோர்கள் தங்களின் நிறைவேறாத ஆசைகளைக் குழந்தைகள் மேல திணிப்பது அறவே கூடாது. அவர்களை இயற்கையாக வளரவிடவேண்டும்.//

      மிக மிக அருமையான கருத்து செல்லப்பா சார். மிக்க நன்றி அழகான நல்ல கருத்திற்கு

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இந்த விஷயம் நான கேள்விப்படவில்லை.
    ஆனாலும் இப்படி ஒரு விளையாட்டுக்காக
    பெற்றோர்களை வருத்தும் அளவிற்கு முடிவு எடுத்தது வீபரீதமான செயல். முப்பது வருடங்கள் எவ்வளவு கனவுடன் அவர்கள் வளர்த்திருப்பார்கள்.. அத்தனையும் அந்த மகனின் ஒரு நொடி முடிவு தகர்த்தெறிந்து போனதென்றால், அவர்களின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்... அந்த முடிவின் கொடுமையை அடுத்து ஒரு நொடி அந்த பையன் சிந்தித்திருக்க கூடாதா என மனம் பதறுகிறது. மனம் வருந்தும் விஷயம்.. வேறென்ன சொல்வது?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோதரி கமலா ஹரிஹரன். மாய்த்துக் கொள்ள எப்படித்தான் தோன்றுகிறதோ?

      மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  10. நொடிப் பொழுதில் தோன்றும் மடத்தனம்.

    பதிலளிநீக்கு
  11. நானும் இந்தச் செய்தியைப் படித்து நொந்துதான் போனேன். எங்கே செல்கிறது இந்த இளைய உலகம்.. மனத்தென்பு, மனத்துணிவு, மனமுதிர்ச்சி எல்லாம் ஏன் இல்லாமல் போகிறது இவர்களிடம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஸ்ரீராம்ஜி எப்படி அப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது என்று வியப்பாகவும் இருக்கிறது. மனத்துணிவு பக்குவம் இல்லாத மனது. வளர்ப்பும் சொல்லலாம் என்றே தோன்றுகிறது.

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  12. எனக்கென்னவோ 30 வயதானவர், அரசு வேலையை எதிர்நோக்கியுள்ளனர், படித்தவர் இப்படி முடிவெடுத்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. வேறு ஏதோ காரணம் இருக்கிறது. அவர் சாகவே போகவில்லை என்றும் தோன்றுகிறது. காலம்தான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது உடலை ஆற்றில் கண்டெடுத்துவிட்டார்கள் ஸ்ரீராம்ஜி. இது லேட்டஸ்ட் செய்தி. அவர் தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணம் இந்த விளையாட்டாக இருக்குமா என்ற சந்தேகம் தோன்றியது வேறு காரணம் இருக்கலாம் என்றும் தோன்றியது. எப்படியோ உயிர் போய்விட்டது. அதுதான் வேதனை. மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி கருத்திற்கு

      நீக்கு
  13. டினுவின் தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் மனக்காயம் ஆற நீண்ட நாட்களாகும். சரியாக வளர்க்கவில்லை என்று தன்னைத்தானே நொந்து கொள்வாரோ.. பெற்றவர்களையும் உற்றவர்களையும் விட கோடிகள் பார்க்கும் ஒரு வியாபார விளையாட்டு முக்கியமாகிப் போனதில் வேதனையும் வெறுப்பும்தான் மிஞ்சும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்ஜி. ஆனால் இப்படியான விஷயங்கள் கூட உயிரை மாய்த்துக் கொள்ள வைக்கிறதை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது. தந்தைக்கு நீங்கள் சொல்லுவது போன்ற எண்ணமும் வரலாம் அது இன்னும் அவரை வேதனைப்படுத்தலாம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி கருத்திற்கு

      நீக்கு
  14. வேதனை தரும் விஷயங்கள் .மனிதர்களுக்கு தன் உயிரைவிட தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரைவிட எதோ ஒரு நாடும் அதன் தோல்வியும் முக்கியமாகிப்போனதே :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பெற்றோரை விட ஏதோ ஒரு நாடு தோல்வி முக்கியமாகிப் போனது அதைவிட இவர் வீம்பு பண்ணியது முக்கியமாகிப் போனது. என்ன சொல்ல?

      மிக்க நன்றி ஏஞ்சல் சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. தன்மானம் எளியவர்களுக்கு மிக பெரிதாக இருக்கிறது அதற்கு இழுக்கு வரும் போது அவர்கள் மரணத்தை நோக்கி செல்கிறார்கள் பெரிய தலைவர்களுக்கு செலிபிரட்டிகள் அந்த் தன் மானத்தை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு சந்தோஷமாக வலம் வருகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மதுரை தமிழன். ஆமாம் உண்மைதான் ஆனால் விளையாட்டிற்காக தன் உயிரை மாய்த்ததுதான் மிகவும் வேதனை.

      மிக்க நன்றி மதுரை தமிழன் கருத்திற்கு

      நீக்கு
  17. வாழ்க்கையில் தோல்வியை சந்திக்கும் திராணி இல்லாதவர்கள். சில நாட்களுக்குப் பெற்றோர்களுக்கு இழப்பு தெரியும் கால ஓட்டத்தில் அதுவும் காணாமல் போகும் யாரையும் குறை கூற விரும்பவில்லை இம்மாதிரியானவர்கள் இருந்து என்னசாதிக்கப் போகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார். உங்கள் கருத்து கூட யோசிக்க வைக்கிறது இம்மாதிரியானவர்கள் இருந்து என்ன சாதிக்கப் போகிறார்கள் என்பது...

      மிக்க நன்றி சார் கருத்திற்கு

      நீக்கு