பாலக்காட்டில், நான் ஆசிரியராகப் பணியாற்றிய மாத்தூர் CFDVHS பள்ளியில் 2000-2002 ல் வணிகவியல் படித்த மாணவ மாணவியர் ஒரு சந்திப்பு நிகழ்வை, 2025, ஃபெப்ருவரி மாதம் 2 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தார்கள். தற்போது பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அந்த Batch ல் படித்த மாணவியான ராதிகா என்னைத் தொடர்பு கொண்டு பங்கெடுக்க வேண்டும் என்று சொன்னார்.
முந்தைய சில சந்திப்புகளுக்குச் செல்ல முடியவில்லை என்பதால் இந்தச் சந்திப்பை ஒட்டி, குடும்பத்துடன் இரு நாட்கள் பயணத்தைத் தீர்மானித்தேன். கோவையில் படிக்கின்ற என் மனைவியின் தங்கையின் மகன் விவேக் படிக்கும் கல்லூரிக்கு இதுவரை செல்ல முடியவில்லை. அங்கும் சென்று அப்படியே மருதமலை முருகனையும் தரிசித்து முருகனின் அருள் பெற்று வரலாம் என்று முடிவு செய்தேன்.