தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா
வந்தாய்! திரண்டாய்! கத்தியின்றி,
ரத்தமின்றி யுத்தம் செய்தாய்! வென்றாய்! வாழ்த்துகிறோம்! சல்லிக்கட்டைப் பற்றிப்
பேசப் போவதில்லை. அறப்போராட்டம் வெல்லும் என்பதை உறுதிசெய்துவிட்டீர்கள்! இனி நம்
நாடு இளைஞர்கள் கையில் ஒளிர்ந்திடும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது! இளைஞர்கள்
கையில் ஒப்படைக்கலாம்! ஏனென்றால் அவர்கள் அரசியல்வாதிகளையும், ஜிகினாக்களையும்
புறம்தள்ளி வெற்றி கண்டுள்ளார்கள்!
இது முடிவல்ல! இதுதான் தொடக்கம்!
நாம் இனி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர வேண்டும். ஏறு தழுவுதல் போராட்டம் என்பதை
விட அதன் திரைமறைவில் இருக்கும் நல்ல காரணங்கள், மற்றும் அரசியல் பற்றி முந்தைய
பதிவில் கோடிட்டுச் சொன்னதாலும், பொதுவெளியில் பேசப்படுவதாலும் இங்கு நான் சொல்லப்
போவதில்லை. அதற்குக் காண்செவிக் குழு இருக்கிறது!
இந்தியா விவசாய நாடு என்றும்,
கிராமங்கள் சார்ந்த நாடு என்பதும் நாம் எல்லோரும் அறிந்ததே. முன்பெல்லாம் வயல்களை
வைத்திருந்தோர் வீட்டில் கண்டிப்பாக மாடுகள், காளைகள் இருந்துவந்தன. விவசாயம்,
கால்நடை வளம், மீன் வளம், நீர் வளம், மனித வளம் எல்லாம் பின்னிப் பிணைந்த ஒன்று
என்பது நாம் எல்லோரும் அறிந்ததே!
போராடிய இளைஞர்கள் பலரும் விவசாயக்
குடும்பங்களில் இருந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அல்லாதவர்களும்
போராடினார்கள், ஆதரவு அளித்தார்கள். சமூக வலைத்தளங்களும்,. பிற மாநிலத்தவர்களும்,
வெளிநாட்டுத் தமிழர்களும், ஆதரவு
அளித்தார்கள். உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!
பால் உற்பத்தியில் நடக்கும்
ஊழல்கள் அதனால் உடல்நலத்திற்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்பதெல்லாம் ஒரு சில
வருடங்களுக்கு முன்னரே பொதுவெளியில் பேசப்பட்டாலும் தீவிரமாகப் பேசப்படாததற்குக்
காரணம் அரசியல்! நம் நாட்டில் எதில்தான் அரசியல் இல்லை? இப்போதேனும் அந்த அரசியல் இல்லாமல்
போராட்டம் முன்வைக்கப்பட்டதற்குப் பெருமைதான்!
1970களுக்குப் பிறகுதான் நம்
நாட்டின் அரசே நம் நாட்டிற்குள் அந்நிய மாடுகளை உள்ளே இறக்கினார்கள். அதன் பின் தொடங்கியது
கால்நடைத் துறையில் ஒரு பெரிய எதிர்மறை மாற்றம். அதை எல்லாம் நீங்கள் கூகுள் தேவனை
கேட்டால் அள்ளித் தருவார்.
நம் நாட்டுக் காளைகளால் ஏற்படும்
இனப்பெருக்க நன்மைகள், நாட்டுமாட்டின் பால் நன்மைகள் என்று எல்லாம் பேசி, காளைகளுக்காகவும், மாடுகளுக்காகவும், உழவர்களுக்காகவும், கலாச்சாரத்திற்காகவும்
போராடியது நன்மைக்கே என்றாலும் அதற்கும் அப்பால் நாம் சிந்திக்க வேண்டிய விசயங்கள்
பல உள்ளன. இதோ நான் சொல்லப் போவதை, இப்போராட்டத்தினால் மக்களிடையே விழிப்புணர்வு
ஏற்பட்டிருக்கும் காரணத்தினால், அதன் பாகமாக ஒரு வேண்டுகோளாக எடுத்துக்
கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் முன்வைக்கிறேன்.
நம் நாட்டின் முதுகெலும்பான
விவசாயத்தின் நிலைமை இன்று நலிவடைந்ததற்குக் காரணங்களை நான் இங்குச் சொல்லத்
தேவையில்லை. அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை எல்லோருமே அறிவோம். உலகமயமாக்கலும்,
நம் நாட்டின் ஆட்சியாளர்கள் தாங்கள் சார்ந்துள்ள பெருமுதலைகளுக்காக,
சுயநலத்திற்காக, நம் நாட்டிற்குள் அடிப்படைத் தேவைகளான உணவு, விவசாயம், மருத்துவம்
போன்றவற்றில் தேவையில்லாமல் பன்னாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய அனுமதித்ததே
முதற்காரணம்.
பல விவசாய நிலங்கள் விற்கப்பட்டு
இன்று பல மாடிக் கட்டிடங்கள் எழுந்து நிற்கின்றன. இப்போது கிராமங்களில் விவசாயம்
செய்யும் தலைமுறையினருக்கு அப்புறம் விவசாயம், கால்நடையின் எதிர்காலம் என்ன? அடுத்த
தலைமுறை எல்லாம் பெரு நகரங்களிலும், சிறு நகரங்களிலும், வெளிநாட்டிலும் வயிற்றுப்
பிழைப்புக்காக இருக்கிறீர்கள். நகரங்களும் நகரத் தொடங்கி கிராமங்களை எட்டும்
நிலையில் இருக்கின்றன.
விவசாயக் குடும்பத்தில்
உள்ளவர்களும் சரி, அல்லாதவர்களும் சரி உங்கள் வாழ்க்கைப் பாதையே மாறியிருக்கிறது
இல்லையா? மீண்டும் கிராமம் சென்று விவசாயம் செய்து காளைகள் வளர்க்க முடியுமா? யோசிக்க
வேண்டிய விசயம் இல்லையா? முடியாது என்ற நிலையில் இப்போது இருக்கும் விவசாயிகளுக்கு
உதவலாம், எதிர்கால உழவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
குரல் கொடுத்து ஜல்லிக்கட்டிற்கு
ஆதரவு பெற்றதோடு நிறுத்திவிடாமல், அடுத்தக் கட்டமாக கிராமத்து வளம், கிராமத்து
மனிதவளம் பெருகிடவும், குடிசைத் தொழில்கள் தழைத்திடவும் நாம் உதவலாம்தானே! மாணவ இளைஞர்கள் ஆற்றல் இப்போது இவ்வளவு திரண்டிருக்கும் போது, நீங்கள் நினைத்தால்
அதையும் சாதிக்க முடியும்தானே? இப்போது எப்படி அரசியலையும், ஜிகினாக்களையும் உள்ளே
வரவிடாமல் போராடினீர்களோ அப்படி நீங்கள் நினைத்தால் செய்ய முடியாதா என்ன!
யோசியுங்கள் இளைய சமுதாயமே! உங்களால் முடியும்!
காந்தியப் பொருளாதாரம் பற்றி எத்தனை
பேர் அறிந்துள்ளீர்கள் என்று தெரியவில்லை. பொருளாதாரம் கற்ற மாணவர்கள் கண்டிப்பாக
காந்தியப் பொருளாதாரம் பற்றி அறிந்திருப்பார்கள். காந்தியப் பொருளாதாரம் என்பது
சுயசார்புப் பொருளாதாரம். கிராமங்கள், குடிசைத் தொழில்கள், உழவுத் தொழிலுக்கும் மற்றும் தங்கள்
பொருட்களைத் தாங்களே விளைவிக்கும், தொழிலாளியின் உழைப்பிற்கு மரியாதை செலுத்தும்,
முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதாரம். அப்பொருளாதாரம் இயந்திரத்திற்கு எதிரி
அல்ல. இயந்திரம் மனிதனை ஆளத் தொடங்கிவிட்டால், தற்சார்பை இழந்து விடும் அபாயம்,
மற்றும் மனித நேயம் எல்லாம் மறைந்துவிடும் என்றுதான் எச்சரிக்கிறது.
அந்தப் பொருளாதாரத்தை நாம்
கடைப்பிடித்திருந்தால், சிறிதளவேனும் கடைப்பிடித்திருந்தால், இன்று நாம் பால்
அரசியல் பேச வேண்டி வந்திருக்காது என்பது உறுதி. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள
வேண்டி வந்திராது. நீங்கள் போராடியிருக்க வேண்டிய அவசியே இருந்திருக்காது. நமது
முதல் பிரதமருக்குக் காந்தியப் பொருளாதாரத்தில் காந்தியுடன் கருத்து வேறுபாடு இருந்தது.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நமது அடிப்படைத் துறையான விவசாயத்திற்கு
முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், தொழில்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
தவறில்லை. ஆனால் அதன் பின் ஒவ்வொரு திட்டத்திலும் தொழில்துறைககன முக்கியத்துவம்
அதிகரித்து, வேளாண்மை பேசப்பட்டாலும் நடைமுறையில் அதன் முக்கியத்துவம்
செயலாக்கத்தில் இல்லாமல் போனது.
இன்று நாம் தொழில்நுட்பத்தில் பல
எல்லைகளைத் தொட்டுவிட்டோம். தொழில் நுட்பத்தில் வல்லவர்களாகிய இளைய சமுதாயமே நீங்கள் தொழில்நுட்பத்தை அளவோடு காந்தியப் பொருளாதாரத்தில் உட்படுத்தி, மறைந்த இயற்கை
விஞ்ஞானி நம்மாழ்வாரின் இயற்கை விவசாய நுட்பங்களை உட்படுத்தி, நீர்வள மேம்பாட்டை
உட்படுத்தி, கால்நடை நிபுணர் திரு சிவசேனாபதி அவர்களின் வழிநடத்தலில் கிராமங்களைத் தற்சார்பு உடையதாக மாற்ற
முனையலாம். நீங்கள் நினைத்தால் செய்து காட்ட முடியும்.
காந்தியப் பொருளாதாரம் பற்றி நான் இங்கு ஆழமாகப் பேசவில்லை. ஏனென்றால் 60 வருடங்களுக்கும் மேலாகச் சீரழிக்கப்பட்ட நம் தமிழகத்தையும், நாட்டையும் ஒரே நாளில் சீரமைத்திட முடியாது! பல வருடங்கள் ஆகும்! இப்போது விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில் அதையும் தொடங்கலாமே என்ற ஒரு ஆதங்கம்.
இப்போது நம் அரசியல்வாதிகளுக்கு இளைஞர்களின் மற்றும் மக்களின் ஆற்றல் நன்கு தெரிந்துவிட்டது. இனி அவர்கள் தவறு செய்தால் போராடிய மாபெரும் இயக்கமே இருக்கிறது என்று அறிந்துவிட்டார்கள். இந்த அறப்போராட்டம் அவர்களைச் சற்றுப் பயம் கொள்ள வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.
எனவே, தமிழகம், சல்லிக்கட்டுடன் நின்றிடாமல்
கிராமங்களும் இயற்கை உழவும், கால்நடையும், மீன்வளமும், இயற்கையும், மனித வளமும்
தழைத்து, கிராமங்கள் தற்சார்பு உடையதாக மாறினால், தமிழகமே மாறிவிடும் என்பதால்,
மாற்றிடவும், தமிழகம் நாட்டிற்கே முன்னோடியாக அமைந்து, நாட்டையும் மாற்றிடவும், அரசின் உதவியைக் கோரியோ, போராடியோ வாங்குங்கள், ஆனால் அரசியலை நுழைத்துவிடாமல், அடுத்தக்
கட்டத்திற்குப் பயணிப்பீர்! புதியதோர் பாதை வகுத்திடுவீர்! இளைஞர்களே! நாங்களும் பயணிப்போம்!
(போராட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சங்கள் பல இருந்தும், “Most remarkable thing about the jallikattu protests is the young women staying at the beach with no fear of harassment. Delhi should learn” என்று என்டிடிவி எடிட்டோரியல் டைரக்டர் சோனியாசிங்க் ட்வீட்டியதாக வாட்சப்பில் வந்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது! பாராட்டுகள் இளைஞர்களே!
-------கீதா
படம் இணையத்திலிருந்து.