ஜெயகுமார் சந்திரசேகரன் சாரின் மறைவு குறித்துக் கேட்டதும், அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எனக்கு அவரை அவரது கருத்துகளின் மூலம் தான் அறிமுகம் ஏற்பட்டது. அவருடைய முதல் கருத்தே பாராட்டியும் அதே சமயம் சர்காஸ்டிக்காகவும் வந்ததும், "யாருடா இவர்? இப்படி ஒரு கருத்தைக் கொடுத்திருக்காரு?" என்று கீதாவிடம் கேட்டேன். பலர் கொடுக்கும் கருத்துகளில் இருந்து வித்தியாசமாக, கொஞ்சம் Strange ஆக இருக்கும் அவருடைய கருத்து. கூடவே ஒரு மூத்த சேட்டன் போன்று சஜஷன்ஸும் கொடுப்பார். முதலில் கோபமும் எரிச்சலும் வந்தாலும், பின்னர் அதை யோசித்துப் பார்த்த போது அதை எடுத்துக் கொள்ளலாமே என்றும் தோன்றி மாற்றி திருத்திக் கொண்டதும் உண்டு. நெல்லிக்கனி போன்று என்றே தோன்றியது.
எங்கள் பதிவுகளில் அவர் பாராட்டிச் சொன்ன கருத்துகளும் உண்டு என்பதையும் குறிப்பிட வேண்டும். கொஞ்சம் வித்தியாசமான மனிதர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் ஏதோ ஒரு வகையில் அவர் கருத்தைக் காணவில்லையே என்று கேட்க வைத்ததும் உண்டு. மரணம் என்பது எல்லோருக்கும் ஒரு நாள் நிகழத்தான் போகிறது என்றாலும் இவர் மறைந்த செய்தி கேட்டதும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். அவர் குடும்பத்தார் அவர் மறைவிலிருந்து மீண்டு வந்திட இறைவனிடம் பிரார்த்திப்போம்.
--------துளசிதரன் வே தில்லைஅகத்து
தொடர்ந்து சில வருடங்களாக எபியில் சனிக்கிழமைப் பதிவுகளின் ஒரு பகுதியைப் பெரும்பாலும் தன் வசம் வைத்துக் கொண்டிருந்த ஜெ கே அண்ணாவின் "நான் படிச்ச கதை" இல்லாத சனிக்கிழமைகள்தான் இனி. ஒரே வாரத்தில் தான் எத்தனை மாற்றங்கள்!
ஜெ கே
அண்ணா, திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் செண்டரில் தான் பணிபுரிந்தார் என்பது
வலைத்தளத்தில் அவர் கருத்துகளில் தெரிந்தது. என் கணவரும் அங்குதான் 8 வருடங்கள் பணிபுரிந்தார்.
அதனால்...
2021ல்,
நான் திருவனந்தபுரத்திலுள்ள என் தங்கை வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்குதானே ஜெ
கே அண்ணா இருக்கிறார் என்று ஸ்ரீராமிடம் மெயில் ஐடி வாங்கிக் கொண்டு அண்ணாவைத் தொடர்பு
கொண்ட போது தனக்குக் காது கேட்காது எனவே மொபைலில் பேசுவது சிரமம், தன் மனைவிதான் எடுப்பார்
பேசுவார் என்று சொல்லி தன் மொபைல் எண், தன் மனைவியின் மொபைல் எண், கொடுத்திருந்தார்.
அக்கா (அவர் மனைவி. நான் அக்கா என்று அழைப்பது வழக்கம்) அப்புறம் அண்ணாவிற்குச் சைகையாலும்,
எழுதியும் காட்டி விவரங்களைச் சொல்வார்.
அப்போது
அண்ணாவும் அவர் மனைவியும் என்னைப் பார்க்க என் தங்கை வீட்டிற்கு வருவதாகச் சொல்லியிருந்தார்.
ஆனால் அவர் மனைவிக்கு அப்போதுதான் புற்றுநோய் சிகிச்சை முடிந்து சில நாட்களே ஆகியிருந்ததால்,
அக்கா தயங்கியதால் அண்ணா தன்னால் வர இயலவில்லை என்றார். சரி நான் சென்று பார்க்கலாம்
என்று நினைத்தும் நடக்கவில்லை, என் தங்கைக்கு உதவிக்கு நான் சென்றிருந்ததால்.
அதன்
பின், ஸ்ரீராமிற்கு ஜெ கே அண்ணா அனுப்பிய "நான் படிச்ச கதை"களை ப்ளாகரில்
போடுவதில் ஃபான்ட், ஃபார்மாட் என்ற பிரயத்தனங்கள் இருந்தன. ஜெ கே அண்ணாவும் அதை எனக்கு
மெயிலில் குறிப்பிட்டிருந்தார். நான் அவரிடம் கதையை எனக்கும் அனுப்பினால் நான் ஹெச்
டி எம் எல் போட்டு ஸ்ரீராமிற்கு அனுப்பிவிடுவேன் என்றிட அப்படித் தொடங்கியது எங்கள்
மெயில் போக்குவரத்து.
அப்படிப்
பேசிய போது என் கணவரும் VSSC யில் எட்டு வருடங்கள் பணியாற்றினார் என்றதும், அவர் பார்த்திருந்தாலும்
பரிச்சயமில்லை என்றார். அண்ணா, தன்னைப் பற்றியும், தன் குடும்பம் பற்றியும் VSSC பற்றியும்,
அதில் பணியாற்றியவர்கள் பற்றியும் மெயிலில் அவ்வப்போது சொல்லிக் கேட்பார், விஷயங்களும்
சொல்வார். கீதாக்காவின் உறவினர் கூட அங்குதான் என்றும், அவர் இருந்த இடம் பற்றியும்
அண்ணா சொல்லியதுண்டு.
தன்
உடல் உபாதைகள், மனைவியின் உடல் உபாதைகள் குறித்தும் சொல்லியதுண்டு. அவர் வீட்டில் செய்யும்
சமையல் முதல், உலகச் செய்திகள் இந்தியச் செய்திகள் என்றும் அவ்வப்போது மெயிலில் பகிர்வார்.
கூடவே அவர் வாசித்த நல்ல கட்டுரைகள், கதைகள், புத்தகங்களின் பிடிஎஃப் என்றும் அனுப்பியதுண்டு.
வலைத்தளங்களில் அவ்வப்போது அவர் கருத்துகள் பல சமயங்களில் சிலர் மனதையும் உறுத்தியதுண்டு. எனக்கும் ஆரம்பகாலத்தில் தோன்றியதுண்டு.
பொதுவாக அவரைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். காரணம் அவர் பெரும்பான்மையினரின் எண்ண ஓட்டங்களில் இருந்து வித்தியாசமாகப் பேசுபவர். எதிலும் ஒரு குறை இருக்கிறதா என்று தேடிப் பார்த்தவர்! அவரே அதை வெளிப்படையாகத் தன்னைப் பற்றி கருத்துகளில் சொல்லியிருக்கிறார்.
அப்படி weird ஆகக் கருத்துகள் கொடுத்தாலும் எப்படி அவரது தக்கம் என்னில் என்று யோசித்தால், ஒரு வேளை நம் வீட்டிலும் இப்படியான கதாபாத்திரம் உண்டே அதனால் இருக்குமோ என்றும் நானே ஆச்சரியப்பட்டதுண்டு. ஆச்சரியக் குறியுடன் கேள்விக் குறியும் முற்றுப்புள்ளியும் வைத்துக் கொண்டேன்!
நாட்பட நாட்பட, அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது, உளவியல் ரீதியாக. அவர் அப்படிக் கருத்துகள் சொன்னாலும்
highly
authentic! அப்படியானவர்களைப் புரிந்து கொள்வது என்பது
மிகவும் கடினம். ஆனால் He was not a hypocrite! என்பதை அவர் கருத்துகளிலும், தனிப்பட்ட முறையில்
மெயிலிலும் உரையாடியதால் நான் அவரைப் பற்றித் தெரிந்து கொண்டவற்றுள் அதுவும் ஒன்று என்பதை இங்கு பதிய விரும்புகிறேன்.
இது என்னை மிகவும் கவர்ந்தது என்று சொல்லலாம். அவர் கருத்துகள் அப்படி இப்படி இருந்தாலும்,
மனதளவில் கொஞ்சம் கூட வன்மம் இல்லாதவர். சொல்லப் போனால், கல்லுக்குள் ஈரம் என்று சொல்வது
போல் அவர் மனம்.
ஏதோ ஒரு படத்தில் தனுஷ் ஒரு வசனம் சொல்வாரே..."என்ன ஆரம்பத்துல யாருக்கும் பிடிக்காது... ஆனா, பழகப் பழகப் பிடிக்கும்!" என்று அப்படித்தான் என் அனுபவமும்.
எனக்கும்
சரி, மற்றவர்களுக்கும் சரி, அவர் கொடுத்த கருத்துகளை வலைத்தளத்தில் பார்த்துவிட்டு, உங்கள்
கருத்தில் உடன்பாடில்லை என்றோ, அல்லது இப்படிக் கொடுக்காமல் வேறு விதமாக நீங்கள் கொடுத்திருக்கலாம்
என்று உளவியல்படி நான் மெயிலில் அவருக்குத் தனியாகச் சொல்லியிருக்கிறேன். சில சமயம்,
கருத்தை எடுத்துவிடவா என்றும் கூட அவர் கேட்டதுண்டு. அப்படியான புரிதல் உள்ளவர், தவறாக எடுத்துக் கொள்ளாதவர், அது உன் கருத்து இது என் கருத்து என்று அசால்டாகக் கடந்து விடுவார் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
அவரைக்
கலாய்த்ததுண்டு, பாராட்டியதுண்டு, ஏன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவர் சொல்வது
சரியாக இல்லை என்றால் அதைச் சுட்டிக் காட்டி, நேரடியாகவே கூடச் சொன்னதுண்டு மெயிலில்.
ஆனால்
எதையுமே தவறாக எடுத்துக் கொண்டதில்லை. பாசத்தைக் காட்டினால் அவர் டபுள் மடங்கு பாசத்தைக்
காட்டினார் என்பதையும், நினைவுகூர்கிறேன்.
சென்ற
05-09-2026 சனிக்கிழமைக்கான அவர் பதிவை எனக்கு அனுப்பியதை நான் வாசித்து ஃபார்மாட் செய்து ஹெச் டி எம் எல் ஆக ஸ்ரீராமிற்கு அனுப்பிய பின், அக்கதை பற்றி, சுஜாதா அவர்களின்
முதல் கதையும் இதே கருவை ஒத்ததுதான் என்றும் ஸ்ரீராமும் கூட இதே கருவில் எழுதியிருக்கிறார்
என்றும் நான் அவருக்குக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து சில உரையாடல்கள் போக்குவரத்திற்குப் பிறகு, அவர்
எனக்கு அனுப்பிய கடைசி மெயில் செப்டம்பர் 1
ஆம் தேதி.
//நன்று. ஆனால் எ பி வாசகர்களுக்குப் பிடிக்காது (அவர் சொல்லியிருந்தது சென்ற வார நான் படிச்ச கதை பற்றி). அப்பா எப்படி இருக்கிறார். எனக்கு நாலு நாளா வயிற்றுப்போக்கு. மருந்து சரியாகவில்லை. லங்கனம் பரம அவுஷதம் என்று தோன்றுகிறது.//
நான் அதற்கு அவருக்குச் சில யோசனைகள்
சொல்லி அனுப்பியிருந்தேன் ஆனால் பதில் இல்லை. அதுவே அவரது கடைசி மெயிலாக இருக்கும்
என்று நான் சத்தியமாக இம்மி அளவு கூட நினைக்கவில்லை.
செப்டம்பர் 5 ஆம் தேதி கோமதி அக்காதான்
என்னிடம். கௌ அண்ணா எபியில் கருத்தினிடையில் இப்படி ஒரு செய்தி சொல்லிப் போட்டிருக்கிறார்,
"உங்களுக்குத் தெரியுமா" என்று.
எனக்கு உண்மையிலேயே டக்கென்று புரியவும்
இல்லை அதிச்சியாகவும் இருந்தது. நான் உடனே
ஸ்ரீராமிற்கு வாய்ஸ் மெசேஜ் விட்டிருந்தேன். ஸ்ரீராமிற்குத் தெரிந்திருந்தால்
எனக்கு உடனே சொல்லியிருப்பாரே என்று. ஸ்ரீராமிற்குமே தெரிந்திருக்கவில்லை. அதன் பின்
தான் அவரும் முகநூலில், அண்ணாவின் மகன் போட்டிருந்ததை எனக்கும் அனுப்பியிருந்தார்.
நான் உடனேயே, அண்ணாவின் மனைவியை
அழைத்துப் பேசி, மெதுவாகச் சொல்லிக் கேட்டேன். "ஆமாம் சரிதான் உண்மைதான்."
என்று விவரங்கள் சொன்னார்.
அதற்கு முன்னான ஒரு
வாரமாகவே அவர் சரியாக இல்லையாம். "இதயத்தில் Stent இருக்கு, ஆனா டாக்டர் கொடுத்த மருந்துகளைச் சாப்பிடாம தானாகவே
ஏதோ எடுத்துக்குவாரு. நாம சொல்றத கேக்கமாட்டாரு" என்றார். வாயுத் தொல்லையாக இருக்கும் என்று கஷாயம் எல்லாம்
கொடுத்ததாகவும் தூங்குவதற்கு இரவு 1 மணி ஆகிவிடும் என்றும், ஆனால் தான் 6 மணிக்கு எழுந்து
சமைக்க வேண்டும் அண்ணாவிற்குச் சரியாக நேரத்திற்குச் சாப்பாடு வேண்டும் என்றெல்லாம்
சொன்னார்.
அந்த இரவுதான் அண்ணா அழுதிருக்கிறார்,
"என்னை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிடு" என்று. மகன்களுக்குச் சொன்னதும்
மறுநாள் அவரது மூத்த மகன் வந்ததும், ஜெ கே
அண்ணா மகனைக் கட்டிக் கொண்டு முத்தமழை பொழிந்தாராம். அத்தனை சந்தோஷப்பட்டார் என்று
சொன்னார்.
மகன்களைப் பற்றிய மகிழ்ச்சியும்,
அவர்கள் மீதான பாசத்தையும் மெயிலில் பகிர்ந்ததுண்டு.
கூடவே மருத்துவவமனைக்குச் சென்று
எமர்ஜன்சியிலிருந்து ஐசியுவிற்கு வந்ததும், தனக்குள்ளாகவே, இந்தக் கதை சரிவராது வேறு
கதை பார்க்க வேண்டும் என்றெல்லாம் அதாவது இந்தச் சனிக்கிழமைக்கான கதை பற்றி போலும்,
பேசியதை, அக்காவோ, அவருக்கு ஏதோ சித்தம் கலங்கிவிட்டதோ என்றும் கூட நினைத்தாராம்.
லாப்டாப்பை கொண்டுவரச் சொல்லியும்
கூட கேட்டாராம்! தன்னைக் காணவில்லை என்று நாம் தேடுவோமே என்று சொல்வதற்காக. "ஐசியுவிலும்
கூட ப்ளாக், உங்க எல்லாரைப் பற்றியும்தான் நினைப்பு" என்றார் அக்கா.
மருத்துவர்கள், நிறைய அடைப்புகள் இருக்கின்றன, ஆஞ்சியோ பண்ணலாம் ஆனால் ரிஸ்க் கூடுதல் என்று சொல்லி குடும்பத்தினரை முடிவு செய்யச் சொன்னார்களாம்.
அக்காதான், கடவுள் விட்ட வழி, ஆஞ்சியோ செய்து பார்த்துவிடலாம் ஒரு வேளை சரியாகி வந்துவிட சான்ஸ் இருக்கே என்று செய்யச் சொல்லிட, அந்த ப்ரொசீஜரில் அண்ணாவின் கடைசி மூச்சு.
"அப்புறம் என்ன ஆச்சு?" எபியில் அவர் பதிவு நினைவிருக்கும் உங்கள் எல்லோருக்கும்.
என்ன ஆச்சு? இப்போது அவர் நம்மிடையே இல்லை.
அக்கா, அவர் ஏதோ மயக்கத்தில் இருக்கிறார்
என்றே நினைத்தாராம். மகன்கள் உடனே சொல்லவில்லையாம். தாமதமாகத்தான் சொல்லியிருக்கின்றனர்.
ஆங் ஒன்று விட்டுப் போய்விட்டதே,
ஜீவி அண்ணா, கீதா அக்கா (அவருக்கு மாமி), நெல்லைத்தமிழன் குறிப்பாக சனி ஞாயிறு பதிவுகள், பாவே மேடம்,
கோமதிக்கா, கமலாக்கா, வெங்கட் - பயணப் பதிவுகள், துளசிதரன், துளசி அக்கா - பயணப் பதிவுகள்
என்று என்னிடம் ரொம்ப பாசிட்டிவாகப் பேசியதுண்டு. குறிப்பாக, சனிக்கிழமைக்கு ஜீவி அண்ணாவை அவர் ரொம்ப எதிர்பார்ப்பார். அதை என்னிடம் மெயிலிலும் தெரிவித்ததுண்டு. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பதும் எனக்குத் தெரியும். அவர் மனைவியிடமும் நம்மைப் பற்றி
எல்லாம் சொல்லுவாராம். "எப்போதும் லாப்டாப், ப்ளாக், உங்க எல்லாரும் பத்திதான்"
என்று சொன்னார் அக்கா.
என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இந்த வாரம் கூட, "என்ன இந்த அண்ணா இன்னும் "நான் படிச்ச கதை" அனுப்பலையே" என்றுதான் டக்கென்று தோன்றியது. ஸ்ரீராமிற்கு அனுப்ப வேண்டுமே என்று. இன்னும் மெயிலில் அவர் பதில் வருமோ என்று எதிர்பார்க்கும் அளவு மனம் இன்னும் நிதர்சனத்தை ஏற்கவில்லை.
வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை.
யட்சன், தர்மர் உரையாடல்தான் நினைவுக்கு வந்தது.
கேள்வி: உலகிலேயே மிகப் பெரிய ஆச்சரியம் (உண்மை) எது?
தர்மரின் பதில்: "ஒவ்வொரு நாளும் எண்ணற்ற உயிர்கள் மரணமடைந்து எமலோகம்
செல்வதை மனிதர்கள் தங்கள் கண்களால் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்த பிறகும், பூமியில்
மீதமிருக்கும் மனிதர்கள் தாங்கள் மட்டும் எப்போதும் அழியாமல் நிலையாக வாழப்போவதாக நினைத்துக்
கொள்கிறார்களே, இதைவிடப் பெரிய ஆச்சரியம் உலகில் வேறு எதுவுமில்லை!"
---கீதா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக