சென்ற பதிவில் வண்டியில் மேலே
ஏறிச் சென்றதாக முடித்திருந்தேன். இரு புறமும் நன்றாகப் பார்க்க முடிந்தது. அப்படிச்
சென்ற போது இதோ இந்தப் பாலம். இதைக் கடந்த
கொஞ்ச நேரத்தில் மீண்டும் பறவைகள் இரு புறமும் தென்படத் தொடங்கின.
வண்டியில் அப்படிச் சென்ற போதும்
படங்கள் எடுத்துக் கொண்டேன். அவை இதோ கீழே. இந்த முதல் படம் வலப்புறம் ஏரி.
இதோ கீழே உள்ள மூன்று படங்களும் இடப்புறம் ஏரியில் இருந்த பறவைகளை எடுத்துக் கொண்டே வந்தேன்.
கொஞ்ச தூரம் தான் அப்படிச் சென்றோம். வண்டி ஆமை வேகத்தில் சென்றால், அப்புறம் இருட்டிவிட்டால் ஒன்றும் பார்க்க முடியாது என்பதால் அடுத்து பறவைகளைக் கண்டதும் இறங்கிவிட்டோம்.
நாங்கள் அடுத்து இறங்கிய இடம் கிட்டத்தட்ட
ஸ்ரீஹரிக்கோட்டா அருகில். அதுதான் இந்தச் சாலையில் பறவைகள் பார்த்த கடைசி இடம். அந்த
இடத்தில் பறவைகளைக் கண்டதும் நாங்களும் இறங்கிவிட்டோம்.
இந்த இடத்தில் பறவைக் கூட்டம் செம அழகு……தண்ணீரின் நிறமும் வித்தியாசமாக இருந்தது.
சூரிய ஒளி இன்னும் குறைந்து கொண்டே வந்ததால். பார்த்து வியந்து ரசித்து அப்புறம் கேமராவுக்குள்
காட்சிகளைப் பதுக்கத் தொடங்கினேன். நிறைய எடுத்தேன்…..இங்கு சிலவற்றைக் கொடுத்துள்ளேன்.
தூரத்தில் தெரியும் பறவைக் கூட்டம் கீழே ஜூம் செய்து எடுத்தவை
நிறைய இருந்தன. ஜூம் செய்ததால் எல்லாம் கவர் ஆகவில்லை என்பதால் ஒவ்வொரு கூட்டமாக எடுத்தேன். மேலே உள்ள நான்கு படங்களும் சாலையின் வலப்புறம் உள்ள ஏரிப்பகுதி.
இது சாலையின் இடப்புறம் உள்ள ஏரியின் பகுதி.
அடுத்து இதோ அடுத்த 15 நிமிடத்தில்
ஸ்ரீஹரிகோட்டா வந்தாயிற்று. இதுதான் நம் இந்தியாவின் ராக்கெட் தளம் அமைந்திருக்கும்
பகுதியின் நுழைவு வாயில். இதோ இங்கு மரத்தின் கீழ் பெஞ்சுகள் இருக்கிறதல்லவா இங்குதான்
நாங்கள் அமர்ந்து கொண்டோம். இல்லை அமர்ந்தார்கள்.
எனக்குத்தான் இது போன்ற இடங்களுக்கு
வந்தால் உட்கார்வது என்றால் பிடிக்காதே!!! உடனே
சுற்றி நடக்கத் தொடங்கினேன். ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்துக் கொண்டே படங்களும்
எடுத்துக் கொண்டேன். இந்த இடம் பொதுவெளி என்பதால் படம் எடுக்க அனுமதி உண்டு. ஆனால்
என் கேமராவில் பவர் குறைந்திருக்கு என்று காட்டியது. எனவே கொஞ்சமேதான் எடுத்துக் கொண்டேன்.
இதுதான் ஷார் சாலையிலிருந்து ஸ்ரீஹரிக்கோட்டா நுழைந்தவுடன் உள்ள பகுதி. இது பொது வெளி. இங்கு செக்யூரிட்டி உண்டு. உள்ளே செல்ல வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும். கீழே உள்ள இரு படங்களும் அங்கு நடுவில் இருந்த ரவுண்டானா. இந்த நுழைவாயில் சென்றதே எனக்கு மிக மிகப் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. நம் இந்தியாவின் பெருமை மிகு ஏவுகணைகள், சாட்டில்லைட்டுகள் பல விண்வெளியில் செல்வதற்குக் காரணமான ஆராய்ச்சி மற்றும் ஏவுகணைத் தளத்தின் நுழைவு வாயில்.
இச்சாலை ஷாரின் உள்ளே செல்லும் சாலை. இதுதான் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட்
தளம், தீவு, அங்கு வேலை செய்வோரின் குடியிருப்பு எல்லாம் இருக்கும் இடத்திற்குச் செல்லும் சாலை. இங்கிருந்து இச்சாலை வழியாகச் சென்றால் மீண்டும் செக்யூரிட்டி அதன் அனுமதியுடன் தான் இன்னும் செல்ல முடியும். பெரிதாக அமைந்திருக்கும் ராக்கெட் தளம் எல்லாம். அங்கு நாம் செல்லவில்லை.
ஸ்ரீஹரிகோட்டா வங்காளவிரிகுடாவுக்கும், புலிக்கட் ஏரிக்கும் இடையே இருக்கும் தீவில்
அமைந்திருக்கிறது. இதோ மேப்
இந்த வரைபடத்தில் சூளூர்பேட்டையிலிருந்து ஷார் வுக்குச் செல்லும் சாலை மெலிதான கோடாகத் தெரிகிறது இல்லையா அச்சாலைதான் நாங்கள் சென்ற சாலை. பறவைகளைக் காணும் பகுதி.
நுழைவாயிலில் கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு இந்த ரவுண்டானாவை ஒரு சுற்று சுற்றி மீண்டும் வந்த வழியே ஷார் சாலையில் வந்து அடுத்த ஒரு 10 நிமிடப் பயணத்தில் இடது புறம் செல்லும் மண் சாலையில் சென்றோம். மழைக்காலத்தில் கடல் போன்று இருக்கும் ஏரியில் தண்ணீர் குறைந்திருந்ததால் நாங்கள் சாலையின் கிழக்குப் பகுதி அதாவது கடல் நோக்கி இருக்கும் பகுதியில் இறங்கி நடந்தோம்.
தூரத்தில் ஏரியின் அக்கரையில்
இருந்த சாலைக்கருகே பறவைக்கூட்டம் ஏதோ அணிவகுப்பு போல அணிவகுத்துக் திரளாக இருந்தது.
நாங்கள் முதலில் அந்தச் சாலையில் ஏதோ வண்டி செல்கிறது என்று நினைத்து பைனாகுலர் வழியாகப்
பார்த்தால் வண்டியல்ல அது அத்தனையும் பறவைக்கூட்டம். ஆச்சரியம், மலைப்பு. பெரிய பெட்டாலியன்
போன்று இருந்தது. ஆனால் கேமராவில் ஜூம் செய்தும் வராத அளவிற்கு இருந்ததால் நான் படங்கள்
எடுக்கவில்லை. கேமராவில் பவரும் குறைந்திருந்தது.
அங்கு எனக்கு சும்மானாலும் இப்படி ஒரு படம் எடுக்கலாமே என்று தோன்ற எல்லோரையும் ரவுண்டாக நிற்க வைத்து எங்கள் கால்களை மட்டும் இப்படிச் சேர்த்து வைக்கச் சொல்லிப் படம் எடுத்தேன் என் மொபைலில். இதில் என் கால் எதுவாக இருக்கும் என்று முடிந்தால் சொல்லுங்கள்.
இந்த இடத்தில் விலங்குகளின் கால்
தடங்கள் தெரிய அது எந்த விலங்கின் பாதமாக இருக்கும் என்று ஆராய்ச்சி எல்லாம் செய்து
நாய், மாடு, ஆடு என்று ஒவ்வொருவரும் சொல்ல இல்லை இது நரியின் தடம் போல் இருக்கு என்று
பீதி கிளப்பினார் நண்பர். ஆமாம் நாம மனுஷங்க தானே அந்தக் குள்ளநரிக்கூட்டம் என்று சொல்லிச்
சிரிக்க கொஞ்ச நேரம் கலாய்த்தல். கேமராவில் பவர் கொஞ்சமே இருந்ததால் அதிகம் படமும்
எடுக்க முடியவில்லை. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க இந்தத் தடங்கள் என்னவா இருக்கும் என்று.
இறுதியாகச் சாலையின் மறுபுறம்
அதாவது மேற்குப் பகுதியில் தெரிந்த சூரியன் மறையும் காட்சியை கேமராவிலும், மொபைலிலும்
படம் பிடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்படும் மனமில்லாமல் ஆனால் இனிய நினைவுகளுடன்
புறப்பட்டோம். புறப்படும் முன் நான் பறவைகளிடம் பை பை சொல்லிவிட்டு அடுத்த முறை நான் வரும்
வாய்ப்புக் கிடைச்சாலோ அல்லது என் நட்புகள் (அதான் நீங்க எலாரும் தான்) இங்க வந்தாலோ எல்லாரும் ஒழுங்கா கிட்ட வந்து போஸ் கொடுக்கனும் என்று சொல்லிவிட்டு
வந்தேன். நீங்க போனீங்கனா நான் ரொம்ப விசாரிச்சதா சொல்லவும்!!!
ஸ்பா ஒரு வழியா ஒரு பதிவை முடிச்சாச்சு!!!!!
அதோ மேடு தெரிகிறது இல்லையா அது தான் ஷார் சாலையில் இருந்து பிரியும் மண் சாலை.
-------கீதா