செவ்வாய், 30 ஜனவரி, 2018

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள…..

கடந்த சனியன்று (27-01-18), மாலை 6.45. இடம்: எர்ணாகுளம் பத்மா தியேட்டர் சந்திப்பு. நண்பரின் வீட்டுக் கல்யாண வரவேற்பில் பங்கெடுக்க மகள் விஷ்ணுப்ரியாவுடன் வேகமாக நடந்து கொண்டிருந்தார் ரஞ்சனி. மகளைக் கையில் பிடித்தபடி, வளைந்தும், நெளிந்தும் மனிதர்களுக்கிடையே கிடைத்த இடைவெளிகளில் பாய்ந்து செல்லும் அவரது குறிக்கோள் அடுத்துள்ள மெட்ரோ ஸ்டெஷன்தான். திடீரென ஒரு நல்ல இடைவெளி தென்படவே, “ஹப்பாடா” என்று அதில் நான்கு அடி எடுத்து வைத்ததும், வழியில், தலையிலிருந்து ரத்தம் வழிந்திடக் கிடக்கும் ஒரு மனிதர்!

இந்தக் காணொளியில் அந்த மனிதர் விழுவதிலிருந்து முழு நிகழ்வும் இருக்கிறது!!!

“அய்யோ” என்று பதறி மகளைப் பிடித்திருந்த கையை உதறி இரு புறமும் திரும்பிப் பார்த்த அவருக்குத் தன் கண்களை நம்பவே முடியவில்லை! இருபதுக்கும் மேற்பட்ட மனிதர்கள் சுற்றி நின்று பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டும், அடுத்து நிற்பவர்களிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டும் இருந்தனரே ஒழிய ஒருவரும் அம்மனிதரின் அருகே சென்று அவரைத் தொடவோ, தூக்கவோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவோ முயலவில்லை.

“ரத்தம் கையில் படும்!....ஆடைகளிலும் ரத்தம் படும்! ஏன் வம்பு. யாராவது வந்து தூக்குவார்கள்” என்ற எதிர்பார்ப்பில் எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள். பைக்கில் போகிறவர்கள் பைக்கை நிறுத்தி பைக்கில் உட்கார்ந்தபடி வருத்தத்துடன் பார்த்து, பின்னால் வருவோருக்கும் காண வசதி செய்து கொடுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். கொச்சி உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞரான ரஞ்சனிக்கு ஏனோ அவர்களைப் போல் ஒருவராக மாறி விஷ்ணுப்ரியாவின் கைகளைப் பற்றி மெட்ரோ ரயிலைப் பிடித்து கல்யாண வரவேற்பிற்குப் போகத் தோன்றவில்லை.

Image result for man who fell from third floor in kochi

“யாராவது வாங்களேன்! பிடிங்க, ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போவோம்” என்றபடி உட்கார்ந்து செத்துக் கொண்டிருந்த அந்த மனிதரை தன் கைகளால் பிடித்துத் தூக்கினார். கூடி நின்றவர்களில் செய்தவதறியாது திகைத்து நின்ற சிலருக்கு ரஞ்சனியின் அந்த மனிதநேயத் துணிச்சல் தொற்றிக் கொண்டதாலோ என்னவோ, ஓடி வந்து அம்மனிதரைப் பிடித்து ஒரு ஆட்டோவில் ஏற்ற ரஞ்சனியின் முயற்சிக்கு உதவினார்கள். ஆட்டோவில் வளைந்தபடி ஏறி உட்கார மட்டுமே முடியும் என்பதால், படுகாயமடைந்த அவரை ஏற்ற முடியவில்லை.

எப்படியோ ஒரு காரில் வந்தவர், தன் கார் இருக்கைகளில் ரத்தமானாலும் பரவாயில்லை, இம்மனிதனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், காயமடைந்தவரைத் தன் காரில் ஏற்றி, அங்குக் கூடியிருந்த நூற்றுக்கணக்கானவர்களில் இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் மட்டுமல்ல, நானும் மனிதன் தான் என்று நிரூபித்து அடுத்துள்ள மருத்துவமனைக்குப் பறந்தார்.

காரில் ஏற இடமில்லாததால், ஒரு ஆட்டோ பிடித்து ரஞ்சனியும் விஷ்ணுப்ரியாவும் மருத்துவமனைக்குச் சென்று அவருக்குத் தாமதியாமல் அவசரச் சிகிச்சை கிடைக்கத் தேவையானவற்றை எல்லாம் செய்தார்.

விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து தலை சுற்றி விழுந்த திருச்சூர் ஆவினிச்சேரியைச் சேர்ந்த கல்லுவெட்டுக் குழியில் சஜி மாலை 6.40 முதல் 6.55 வரை 15 நிமிடங்கள், ரஞ்சனியும் விஷ்ணுப்ரியாவும் வந்து உதவும் வரை விழுந்த இடத்திலேயே கிடந்திருக்கிறார். நூற்றுக் கணக்கான மனிதர்கள் போல் வேடமிட்டவர்கள் அங்கிருந்தாலும் அவர்களில் யாரும் சஜிக்கு உதவிக்கரம் நீட்டவே இல்லை.

“..........ஒரு மேதை, பகல் வேளை, கையில் விளக்குடன்
சென்றாராம்……….மனிதனெங்கே காணவில்லை தேடுகிறேன் நான்
என்றாராம்."

Image result for woman who saved the man who fell down from third floor in kochi
Ranjini pleading for help from passers-by to save the life of the man, who fell down from the third floor of a lodge

ஆம்! இப்போதெல்லாம் மனிதர்களை மனிதர்கள் போல் உள்ளவர்களிடையே தேடத்தான் வேண்டியிருக்கிறது. எப்படியோ தாய்மை குடி கொண்டிருக்கும் பெண்மை, இங்கு மனிதர்கள் போல் உள்ளவர்களிடையே நான்குபேரை மனிதர்களாக மாற்றுவதில் வெற்றி கண்டுவிட்டது. “இப்படித்தான் இருக்க வேண்டும் பெண்கள்!” என்று நிரூபித்த ரஞ்சனியையும் விஷ்ணுப்ரியாவையும் வாழ்த்துவோம்! போற்றுவோம்! வணங்குவோம்!

படங்களும், காணொளியும் இணையத்திலிருந்து. நன்றி கூகுள்
------துளசிதரன்



செவ்வாய், 23 ஜனவரி, 2018

பர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 2

முதல் பகுதியின் சுட்டி https://thillaiakathuchronicles.blogspot.com/2018/01/Parvathamalai-Trekking-1.html

மலை ஏறத் தயாராக இருக்கச் சொல்லி இதற்கு முந்தைய பகுதியை முடித்திருந்தேன். அதற்கு முன் நாங்கள் புறப்பட்டதையும் மலையடிவாரத்தைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன்.

சனி, 13 ஜனவரி, 2018

கேரள பள்ளி கலைவிழா 2017- 2018 (கேரள ஸ்கூல் கலோல்சவம்)

Image result for 58th kerala youth festival final 2017-2018
நம்மை வியக்கவும், அதிசயப்படவும் வைக்கும் ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னும் சுயநலமில்லா பொது நலம் பேணும் சில நல்ல மனிதர்களின் கடின உழைப்பும் வியர்வையும் ஒளிந்திருக்கும் தான். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைப் பற்றித்தான் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சனி, 6 ஜனவரி, 2018

உங்களிடம் சில வார்த்தைகள்........கேட்டால் கேளுங்கள்

உங்களிடம் சில வார்த்தைகள்…..கேட்டால்கேளுங்கள் இது தான் மதுரை சகோவின் தலைப்பு. இத்தலைப்பை கொஞ்சம் மாற்றிக் கொள்கிறேன் மதுரை உங்கள் அனுமதியுடன்…மதுரைத் தமிழனின் தொடர் பதிவு அழைப்பு ஏஞ்சல் வழி வந்தடைந்தது. 

அனுபவம் எனும் எனது மிகப் பெரிய ஆசிரியர்

Image result for அனுபவம் தத்துவம்
நன்றி தமிழ்கவிதைகள்.காம்

மதுரைத் தமிழனின் பதிவை வாசித்ததுமே ஏஞ்சல் அல்லது அதிரா விடமிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்ததுதான். எனவே மனம் யோசிக்கத் தொடங்கியது. எதை எழுத என்று. ஒன்றா ரெண்டா? அடித்துப் போட்டவை அத்தனை அனுபவங்கள் சிறுவயது முதல் இன்று வரை…..இந்த நிமிடம் வரை….

புடம் போட்ட பொன் என்று சொல்வது எனக்கு மிகவும் பொருந்தும். இன்னும் இன்னும் என்று ஒவ்வொரு அனுபவமும் என்னைப் புடம் போட்டுக் கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் அவரவர் அனுபவமே அதுவே மிகப் பெரிய ஆசிரியராக, வழிகாட்டியாக இருக்கும். எனக்குச் சிறுவயது முதல் அப்படியே! எனது ஒவ்வொரு அனுபவமும் கற்றுக் கொடுத்த பாடத்திற்கு. கொடுத்த விலை அதிகம் தான் ஆனால், விலைமதிக்க முடியாத பாடம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆற்றின் நீரில் பாறைத் துண்டுகள் எப்படி நீரோடு உருண்டு, உருண்டு, முட்டி மோதி பண்பட்டு அழகான கூழாங்கற்களாய் நம் கைகளில்  கிடைக்கிறதோ அப்படி நான் இன்னும் வாழ்க்கை நதியில் முட்டி மோதி உருண்டு கொண்டிருக்கிறேன். பண்படுவதற்கு இன்னும் நிறைய தூரம் உருள வேண்டும்.  

குறிப்பிட்ட புத்தகவரிகளோ, பொன்மொழிகளோ, அறிவுரைகளோ என்னை மாற்றுகிறது என்று சொல்வதை விட. எல்லாமே கலந்து கட்டி என்னைச் சுழற்றி அடித்த அனுபவங்கள்தான் என்னைச் சிந்திக்க வைத்துப் புடம் போட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் நான் கற்ற பாடம் நாம் பிறரை மாற்றுவதை விட நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுடன் நம் அணுகும் முறையையும் மாற்றிக் கொள்ளலாம் என்பதே. அத்துடன் கூடியவரை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அன் கண்டிஷனல் லவ். கொஞ்சம் கஷ்டம்தான். மனிதர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதும். எனது எம் ஏ வகுப்பில் பாடம் எடுத்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடிச் சொல்லியது, “டோன்ட் டாக் ஃபிலாசஃபி டு எ பெக்கர்” என் மனதில் ஆழப் பதிந்த ஒன்று அனுபவத்தினால்.

என்னைச் சுற்றியிருந்த, சுற்றியிருக்கும் ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் பல பாடங்களைக் கற்கிறேன். அது யாசிப்பவராகக் கூட இருக்கலாம். ஒரு சிலரிடமிருந்து நாம் எப்படி இருக்கக் கூடாது என்று ஒரு சிலரிடமிருந்தும் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சிலரிடமிருந்தும் வீட்டனுபவமும், வெளியுலக அனுபவமும் கற்றுக் கொடுத்தது. 

நான் விளையாடிய பாம்புக்கட்டத்தைக் கூட நல்ல படிப்பினையாகப் பார்த்தேன். வாழ்க்கை என்பது அவ்வளவுதான் என்ற மிக உயரிய பாடம். ஏணி ஏற்றிவிட்டாலும், பாம்பின் வாயில் அகப்பட்டால் கீழே மட்டுமில்லை, நடுத்தெருவிற்குக் கூட வரலாம் என்ற பாடம். பிஸினஸ்/ட்ரேட் விளையாட்டிலிருந்தும்! தாயக்கட்டம் மற்றும் ஆடு புலி ஆட்டம் இவற்றிலிருந்தும் கற்றுக் கொண்ட பாடம் வாழ்வில் தோல்விகள் வரலாம் ஆனால் மனம் தளர்ந்திடாமல் நேர்மறையாகக் கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். தோல்விகளும் சரி வெற்றிகளும் சரி நிரந்தரமானவை அல்ல. தற்காலிகமானவையே என்ற பாடம். அது இன்றும் கை கொடுக்கிறது. கற்றதை அப்படியே என் மகனுடன் இவற்றை விளையாடும் போது அவனுக்கும் விளையாட்டாய்க் கடத்தினேன்..

சிறு வயதில் மிகவும் ஏழ்மையில், நெருங்கிய உறவினர்களைச் சார்ந்து அவர்களுடன் ஒரே கூரையின் கீழ் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததாலோ என்னவோ ஏற்பட்ட அனுபவங்கள் அப்போதிருந்தே வாழ்க்கையை மிகவும் எளிமையாக, பொருட்களின் மீது பற்றில்லாமல், ஆனால் மனதை மட்டும் எந்தச் சூழலிலும் மகிழ்வாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுத்தது.

சில வருடங்களுக்கு முன் உறவினர் ஒருவர் “நீங்கள் இருப்பது உங்கள் சொந்த ஃப்ளாட் தானே?” என்று கேட்டதும், :”எங்களுடையது என்று சொல்லுவதற்கில்லை. இன்று எங்களிடம். நாளை யாரிடமோ” என்றுதான் என் மனதிலிருந்து பதில் வந்தது. எனது என்று சொந்தம் கொண்டாட இவ்வுலகில் எதுவும் இல்லை என்ற பாடத்தையும் நான் என் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டாலும் இன்னும் மனம் பண்பட வேண்டும். 

சிறு வயதில் நம் மனதில் ஒரு சில நல்ல விஷயங்கள் மிக மிக ஆழமாக பசுமரத்தாணி போன்று பதிந்துவிடும். அவை நம் இறப்பு வரை கூட வரும். என் வீட்டுச் சூழலினால் இழந்த நட்புகள் அதிகம் என்பதால் சாதி, மதம், ஏழ்மை, பணக்காரர் பார்க்கக் கூடாது உண்மையான அன்பை, நட்பை மட்டுமே பார்க்க வேண்டும் என்ற உயரிய பாடத்தையும் கற்றேன்.

நான் பிறந்ததிலிருந்தே என்னைத் தன் மகளாக வளர்த்த என் இரு அத்தைகளிலும் பெரிய அத்தை தனது 27 வது வயதில் மரணம் அடைந்த போது மரணம் என்றால் என்ன என்று தெரியாத வயதில் நிகழ்ந்த அந்த நிகழ்வு மனதில் ஆழப் பதிந்ததால் வளர்ந்த பின் மரணங்கள் கற்பித்த பாடம், குறிப்பாக யாருடைய மனதையும் வேதனைப்படுத்தக் கூடாது. ஒரு வேளை வேதனைப் படுத்தியிருந்தால் உடனே மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் இல்லையேல் சில சமயம் அவர்களிடம் மன்னிப்பு கேட்கக் கூடமுடியாமல் அதன் முன்னரே அவர்கள் மரணம் அடைந்திடவும் நேரிடலாம் என்ற பாடம். 

என் கல்லூரிக் காலத்தில் இரண்டாவது அத்தை தன் இளம் வயதிலேயே கணவரை இழந்த போது நடத்தப்பட்ட சில சடங்குகளும் அதன் பின் அத்தை எந்த நிகழ்விலும் பங்கு கொள்ளாமல் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டதும் என் மனதை நொறுக்கியது. நான் என் கல்யாணத்தில் முதலில் ஆசி வாங்கியது அவரிடமும் என் தாத்தாவை இழந்திருந்த என் பாட்டியிடமும்தான். அப்படியான பெண்களிடம் அவர்களை ஒதுக்காமல் முன்னிலைப்படுத்துவது இப்போதும் அது என்னிடம் தொடர்ந்து வருகிறது.

திருமணத்திற்கு முன்னான வாழ்க்கை தந்த பாடமான எந்தவித எதிர்பார்ப்புமின்றி வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன தைரியம் திருமணத்திற்குப் பின்னும் ஏற்பட்ட அனுபவங்களையும் எதிர்கொள்ள உதவியது மட்டுமின்றி பாடங்களும் கற்பிக்கிறது. அந்த நேரத்தில் திருவனந்தபுரத்தில் நான் சந்திக்க நேர்ந்த ஒரு சிறந்த மனிதரின் வாழ்க்கை முறை ஏற்கனவே மனதில் பதிந்த எளிய வாழ்க்கையை  மேலும் அழுத்தமாகப் பதிய உதவியது. அவரது வாழ்க்கை முறைகள் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம் என்றாலும் அவரிடம் கற்ற “இருப்பது போதும். மகிழ்ச்சி” இப்போதும் கை கொடுக்கிறது. 

பயணங்கள் தந்த பாடங்கள் ஒருபுறம். விதண்டாவாதம், வாக்குவாதம் செய்யக் கூடாது, ஒரு சில நேரங்களில் வார்த்தைகளை விட மௌனமே சிறந்த தீர்வு என்று இன்னும் நிறைய சொல்லலாம். சில என் கதைகளில் வரலாம்.

ஆனால் ஒன்று……..என்னதான் அனுபவங்களும், பொன்மொழிகளும், அறிவுரைகளும் நமக்குக் கிடைத்தாலும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நம் மனம் நினைத்து உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே நம்மை அவை மாற்றும் அல்லது திருத்தும். இல்லையேல் விழலுக்கு இரைத்த நீர்தான். இதுவும் எனக்கு அனுபவப் பாடம்! இன்னும் கற்றுக் கொண்டே  இருக்கிறேன். எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. பொறுமையாக நம் அனுபவப்பாடத்தினைக் கூர்ந்து நோக்கிக் கற்றால்.....வாய்ப்பு தந்த ஏஞ்சல் மற்றும் மதுரைத்தமிழனுக்கு மிக்க நன்றி.

இத்தொடர் பதிவுக்கு...




இவர்களை அன்புடன் அழைக்கிறேன்.

--------கீதா...

(துளசி அரையாண்டுத் தேர்வு விடைகளைத் திருத்தல், கேரளா யூத்ஃபெஸ்டிவல் என்று கொஞ்சம் நேரப் பளுவினால் எழுத இயலவில்லை என்பதைத் தெரிவிக்கச் சொன்னார்.)

வியாழன், 4 ஜனவரி, 2018

பர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 1

புத்தாண்டுப் பதிவில் சொல்லியிருந்தது போல் பதிவு ஒன்று (2016ல் சென்றது) என்று சொல்லியிருந்ததைத்தான் முதலில் எழுத நினைத்தேன். ஆனால் கீதாக்காவின் பின்னூட்டக் கருத்தை மனதில் கொண்டு மூன்றாவது என்று சொல்லியிருந்ததை முதலில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.