பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஜூன், 2015

உத்ரா! குட்டிப் பெண்ணே! உன் குரலால் மயக்கிவிட்டாயடிக் கண்ணே!

Image result for uthra unnikrishnan

     இந்தப் பதிவை நான் சைவம் படப் பாடல்களைக் கேட்டதும், உத்ரா பாடியிருக்கும் பாடல் காட்சியைப் பார்த்ததும் எழுதத் தொடங்கி, அதற்குக் கண்டிப்பாக அவளுக்கு அவார்ட் கிடைக்கும் என்பதையும் எழுதி, பிசாசு படம் பார்த்ததும் மீண்டும் எழுதி, முடிக்காமல், இப்போது மூன்றுமணி எனும் மலையாள சீரியலின் டைட்டில் பாடலாக இந்தக் குழந்தையின் பாட்டு வருவதைக் கேட்டதும், எப்படியேனும் முடித்து, இந்தக் குழந்தையைப் பாராட்டியே ஆக வேண்டும் என்ற ஒரு உத்வேகத்திலும், நான் அப்போது சொன்ன அவார்ட் அவளுக்குக் கிடைத்தது குறித்த மகிழ்விலும், காதில் ஹெட் செட் வைத்துக் கொண்டு இந்தச் சிறு குழந்தையின் இனிமையான குரலில், உணர்வுகளோடு, அனுபவித்துப் பாடிய அந்தத் தேன் குரல் பாடல்களைக் கேட்டுக் கொண்டே எழுதி முடித்தேன்.

     உத்ரா உன்னிக் கிருஷ்ணன்! பிரபல கர்நாடக சங்கீதப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆன திரு உன்னிக் கிருஷ்ணன் அவர்களின் செல்லப் புதல்வி! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!  புலி எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும்!  ஆம்!  16 அடி அல்ல இந்தக் குட்டிப் பெண் பல உயரங்கள் பாய்ந்துவிட்டாள், தந்தையை விட, இந்த மிகச் சிறிய வயதில்! என்ன தவம் செய்தனை உன்னிக் கிருஷ்ணா!  என்று பாட வேண்டும் போல் உள்ளது.  அந்த அளவிற்குத் தன் குரலால் மயக்கிக் கட்டிப் போட்டுவிட்டாள். 
Image result for uthra unnikrishnan 
 பல வருடங்கள், பல கர்நாடக இசைப் பாடகர்கள் எனது மானசீக குருவாக இருந்தார்கள், நான் ஏகலைவியாக. அதில் திரு உன்னிக் கிருஷ்ணனும் உண்டு.   சில நாட்களுக்கு முன், திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் என்னைக் கவர்ந்த “கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்” பாடலை, அதனைப் பாடியவர்களை என் மானசீக குருவாக வைத்துக் கொண்டு நான் ஏகலைவியாகக் கற்றுக் கொண்டேன்.  அதனைப் பாடி பதிவும் செய்தேன். தற்போது எனது மானசீக குருவாகிப் போனாள் இந்தக் குட்டிப் பெண் உத்தரா உன்னிக் கிருஷ்ணன். தந்தையும் எனது மானசீகக் குரு, அவரது பெண்ணும் இப்போது! அவளது பாடல்களைக் கேட்டுக் கற்றுக் கொண்டிருக்கின்றேன்!
சைவம் படத்தில் அழகு பாடல்

இந்தப் பாடல் எப்படி உருவாகிய விதம் தந்தையிடம் கற்று மெருகூட்டல் காணொளி
     குட்டிப் பெண் பாடிய சைவம் படப் பாடல் “அழகு” அழகு! நா முத்துக்குமார் அவர்களின் வரிகளில், மெய் சிலிர்க்க வைத்த பாடல். (சுப்புத் தாத்தாவின் ஃபேவரிட் ராகத்தில் அமைந்த பாடல்-கானடா ராகத்தில்...கொஞ்சம் காபியின் சுவை எட்டிப் பார்க்கிறதோ!!?) அவள் சுவரங்களும், ஜதியும் எப்படிப் பாடுகின்றாள் அந்தப் பாடலில்!  அந்தப் பாடலுக்குத் தேசீய விருதும் வாங்கிவிட்டாள் இந்தக் குட்டி சங்கீத தேவதை! அவள் அளித்த பேட்டியில் குழந்தை மனசு வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது.  தேசீய விருது பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லுவது உட்பட!  அது அறிவிக்கப்பட்ட போது அதை அவளது தாத்தா சொல்லிய போது உத்ரா கணினியில் விளையாடிக் கொண்டிருந்தாளாம்.  உன்னிக் கிருஷ்ணன் அவர்களும் ஊரில் இல்லையாம்.  தந்தை உன்னிக் கிருஷ்ணன் குருவல்ல.  டாக்டர் சுதா ராஜா தான் இவளது குரு! உத்ரா!  குட்டிப் பெண்ணே! உன்னால் உனது பெற்றோர்களுக்குப் பெருமை!
பிசாசு படத்தில் "போகும் பாதை"
      பிசாசு படத்தில் உத்ரா பாடிய பாடல் “போகும் பாதை தூரமில்லை”.  ஆம்!  குட்டிப் பெண்ணே! நீ போகும் பாதை வெகு தூரமில்லை இன்னும் பல உயரங்களைத் தொட! தமிழச்சியின் வரிகள் அருமை.  உத்ராவின் குரல் அதனை அப்படியே பிரதிபலித்து மனதை உருக்கி, நெகிழச் செய்துவிட்டது! கீரவாணி ராகத்தில் அமைந்த பாடல். அந்த வயலின் நோட்ஸ் ஆஹா! மனதை என்னமோ செய்கின்றது.  முன்பே ராஜா போட்டதுதான் என்றாலும்....


   தற்போது இப்போது மூணுமணி எனும் மலையாள தொடரில் மிக ரம்யமான ஒரு டைட்டில் பாடல் பாடியுள்ளாள். மன நிலை குன்றிய பெண் கதாபாத்திரத்திற்கு. காபி ராகத்தில் அமைந்த பாடல்...

   இந்த 50 வயது இளம்?! கிழவிக்கு மானசீக குருவாகிப் போனாயடிப் பெண்ணே! இளம் கிழவியின் ராயல் சல்யூட்!! தேசீய விருது வாங்கியதற்கும், இன்னும் நீ பல உயரங்களைத் தொடவும், விருதுகளைப் பெறவும், எங்களை எல்லாம் உனது இனிய குரலால், நல்ல பாடல்களால் மகிழ்விக்கவும், கர்நாடக இசை மேடைகளில் பாடி மிளிரவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! வலையுலக சார்பில்! வாழ்க நீ பல்லாண்டு குட்டி சங்கீத தேவதையே!

பின் குறிப்பு:  இதை எழுதி வைத்தும் விடுபட்டு விட்டது பதிவில் பதிய.  நண்பர் ஜோதிஜியின் பின்னூட்டம் அதை நினைவு படுத்த இதோ விடுபட்ட வரிகள்....
இன்னும் இது போன்ற பின்புலம் இல்லாத திறமை மிக்க குழந்தைகள் பலர் உள்ளனர். அவர்களும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். குழந்தைகளின் திறமை ஆச்சரியம் அளிக்கின்றதுதான். பண்டும் இருந்தார்கள் ஆனால் அப்போது இது போன்று வெளிச்சம் போட்டுக் காட்ட ஊடகங்கள் இல்லையே. இப்போதும் கூட ஊடகங்கள் இருந்தாலும். திறமை மிக்க குழந்தைகள் பலர் வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளதால் வெளி வர முடியாமல் இருக்கின்றனர் தான் என்பதையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும்......

----கீதா

படங்கள் : கூகுளில் இருந்து






வியாழன், 26 மார்ச், 2015

எங்கள் வீட்டிற்கு வந்த "MADE FOR EACH OTHER" தம்பதிகள்!!!

             “வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு? இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்?”

அவன் அசடு வழியத் தலையைச் சொறிந்தான். அவன் மட்டும்தான் வந்திருக்கின்றான் என்று நினைத்தால், பின்னாலேயே,

“ராணி!  நீயும் வந்திருக்கியா! வாம்மா வா! அட! மடில கைக் குழந்தை வேற! எப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க? சொல்லவே இல்ல! ம்ம்ம் வாங்க வாங்க உக்காருங்க....”   ராணியும் அசடு வழியத் தலையைச் சொறிந்தாள்!

எங்கள் வீட்டிற்கு இன்று இந்தக் காதல் ஜோடியின் வருகை. அதுவும் ஒரு வருடத்திற்குப் பிறகு. சென்ற வருடத்தின் முதல் பகுதியில் செம டூயட்தான்.  மரத்தைச் சுத்தி, சுத்தி. விருந்தினர் எங்களுக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரர்கள்தான். பையனின் பெயர் ராஜா.  நல்ல கொழுக் மொழுக் என்று இருப்பான். பெண்ணின் பெயர் ராணி. அவளுக்கென்ன குறைச்சல். அவளும் கொழுக் மொழுக் அழகி!

from yutube - This song is dedicated to our Made For Each Other  guests
இனி இவர்கள் காதல் ஜோடி அல்ல...காதல் தம்பதியர்! அதனால் தான் சென்ற ஒருவருடமாக ஆட்களைக் காணவில்லை போலும். இப்போது கைக்குழந்தை வேறு.  உட்கார்ந்தவர்கள் அங்குமிங்குமாகப் பார்த்தார்கள். 


“என்ன தேடுகின்றீர்கள்?  ஓ! ஸாரி! வெயில் என்னமா அடிக்குது. வெயில்ல வந்தவங்களுக்கு முதல்ல தண்ணி கூடக் கொடுக்காம நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்கேன்ல?!  இந்தாங்க, ரெண்டு பேரும் தண்ணி குடிங்க முதல்ல”


வந்த விருந்தினர்களுக்கு சாப்பிட என்ன கொடுக்கலாம் என்று சமையலறைக்குள் சென்று தேடினேன்.  சின்னஞ்ச் சிறுசுங்க! நொறுக்ஸ், கொறிக்ஸ் கொடுக்கலாமே என்று பார்த்தால் எதுவுமே இல்லை. நம்ம வீட்டுல எல்லாமே டயட் ஆச்சே!  என்ன இருக்கும் சொல்லுங்க!  பார்த்தால் காரட், வெள்ளரிக்காய், கோஸ், முள்ளங்கி, வெங்காயம், வெந்த வேர்க்கடலை, பொரி என்று பீச் சுண்டலுக்கு ரெடியாக இருந்தது. பார்த்தேன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கலந்து எடுத்துக் கொண்டு சிறுசுகளுக்குக் கொடுக்கச் சென்றால்...காணக் கண்கொள்ளாக் காட்சி. ம்ம்ம் காதல் ஜோடிகளுக்கு ஒரு வருடம் தானே ஆகின்றது..ஒரே கொஞ்சல்ஸ். இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் கொஞ்சிக் கொண்டதும், குழந்தையையும் கொஞ்சியதும் பார்க்க சந்தோஷமாக இருந்தது. நான் கொடுத்த சாலட் கூட அவர்களின் கண்ணில் படவில்லை.  அத்தனை அன்பில் அவர்கள் ஆழ்ந்திருந்தார்கள். அவர்கள் அவர்களது உலகத்தில் இருக்கட்டும், அவர்களை எதற்கு இடையில் நுழைந்து....என்று எண்ணி, சற்று விலகி கிளிக்கத் தொடங்கினேன்.


காணொளி சுவாரஸ்யமாக எடுத்தேன். சுவாரஸ்யத்தில், அதுவும் காணொளி எடுப்பதில் கவனமாக இருந்து ஃப்ரேம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதில் கவனம் செலுத்தியதால் அவர்கள் கொஞ்சம் அத்துமீறியதைக் கவனிக்கத் தவறிவிட்டேன்.  அத்துமீறுதல் என்றால் ஓவராக எல்லாம் போய்விடவில்லை. அவள் மடியில் குழந்தை வேறு! அதனால், கொஞ்சம் அப்படியும் இப்படியுமாக இருந்தார்கள் குழந்தைகள்! காணொளி எடுத்துவிட்டுப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. எடிட் பண்ண முடியவில்லை நேரம் இல்லாததால்.  இயற்கைதான். இருந்தாலும் சென்சார்! எனவே புகைப்படங்கள் மட்டுமே! எங்கள் விருந்தினர்களை நீங்களும் பாருங்களேன்!


 என்ன எங்கள் விருந்தினர்கள் “Made For Each Other” காதல் தம்பதியினர் தானே?!!! கொஞ்சம் பாத்துச் சொல்லிட்டுத்தான் போங்களேன்! முகநூலில் மட்டும்தான் லைக் போடுவீங்களோ?!  இங்கேயும் தான் ஒரு லைக் போட்டுட்டுப் போங்களேன்.  ஜோடிங்க சந்தோஷமா இருக்குமில்லையா நம்மளையும் லைக் பண்ணறாங்களே மனுஷங்க அப்படின்னு!!!

- கீதா

வெள்ளி, 9 ஜனவரி, 2015

பாடல்கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம் - 2

                                                         
 இங்கு நாங்கள் பகிர்ந்துள்ள பாடல்கள்  எங்கள் கல்லூரிக் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கியவை.  மிகவும் அருமையான பாடல்கள்.  கல்லூரிகளில் நடந்த பல விழாக்களிலும் இந்தப் பாடல்கள் ஒலிக்காமல் இருந்ததில்லை.   எவர் க்ரீன் என்று சொல்லலாம் இவற்றை. இங்கு பகிர்ந்துள்ள பாடல்கள் இரண்டுமே தமிழிலும், மலையாளத்திலும் அதே மெட்டுடன் வந்தவை. 

 மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் மலையாளப் படமான ஓளங்கள்  படத்தில்  இளையராஜா இசையமைத்த பாடலான தும்பி வா தும்பக் குடத்தின் மிகவும் பிரபலமாகி பலருக்கும் பிடித்துப் போக அந்த மெட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் போடப்பட்டது.  பாலுமகேந்திரா விற்கு இந்த மெட்டு மிகவும் பிடித்துப் போனதால அதே மெட்டை ஔர் ஏக் ப்ரேம் கஹானி திரைப்படத்திலும் உபயோகித்துக் கொண்டார்.  இந்த மெட்டு 2009 ல் வெளிவந்த ஹிந்திப் படமான "பா" வில் போடப்பட்டது.  பாடல் கும் கும் கும்...

ஓளங்கள் எனும் மலையாளப் படத்தில் வரும் தும்பிவா தும்பக்குடத்தின் - 1982


தும்பிவா தமிழில் ஆட்டோராஜா எனும் படத்தில் - 1982


"பா" எனும் ஹிந்தி படத்தில் வரும் அதே மெட்டு. கும் கும் கும்


 அடுத்ததாக கேரள இசையமைப்பாளர் ரவீந்திரன் - ரவீந்திரன் மாஸ்டர், மிகவும் அருமையான ஒரு இசையமைப்பாளர்.  அவரது பாடல்கள் எல்லாமே மெலடியாகவும், கர்நாடக சங்கீதம் அடிப்படையிலும் இருக்கும்.  அவரது மலையாளப் படப் பாடல்களைத் தனியாக ஒரு இடுகையாக அடுத்து வரும் இந்தப் பதிவு தொடரில் தருகின்றோம்.  இங்கு நாங்கள் பகிர்ந்துள்ள பாடல் அவர் இசையமைத்த சிரியோ சிரி படத்தில் வரும் ஏழு ஸ்வரங்களும் எனும் பாடல், தமிழில் வெளியான ரசிகன் ஒரு ரசிகை எனும் படத்தில் ஏழிசைக் கீதமே என்று வெளிவந்து மிகவும் பிரபலமானது.  இவரது மூன்று மகன் களில், நவீன் மாதவ் தமிழில் பின்னணிப்பாடகராக இருக்கின்றார்.  ராஜன் மாதவ் திரைப்பட இயக்குனராகவும், (முரண் படம் இவர் இயக்கியது), சஜன் மாதவ் இசை இயக்குனராகவும் உள்ளனர். இப்பாடலை  பாடியதோ  இன்று  தன் 75 வயது  பிறந்த நாளை  கொல்லூர்  மூகாம்பிகையின்முன்  தன்  குடும்பத்துடன்  சங்கீத அர்ச்சனை நடத்தி  புனிதப்படுதிக்கொண்டிருக்கும்  நம் 'Gana  Gandharvan ' k  .J . ஜேசுதாஸ் .இந்நன்நாளில்  அவர் இன்று போல் என்றும் வாழ  வும் ,இன்றுபோல் என்றும் பாடி நம் செவியில் தேன் மழை பொழியும் மேகமாக திகழவும்   வாழ்த்துவோம் . அதற்காக  எல்லாம் வல்ல இறைவனை  வேண்டிக்கொள்வோம் .

சிரியோ சிரி -1982 - மலையாளம். ஏழு ஸ்வரங்களும் தழுகி - இசை-ரவீந்திரன் மாஸ்டர்


ரசிகன் ஒரு ரசிகை - 1986 ஏழிசை கீதமே - ஏசுதாஸ் - இசை - ரவீந்திரன் மாஸ்டர்

நாங்கள் ரசித்தது போல் நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைத்துப் பகிர்ந்துள்ளோம்.

திங்கள், 1 டிசம்பர், 2014

பாடல்கள் பலவிதம்.......!! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!


 “என்னடா இது ஒரே மாதிரியான, கனமான பதிவுகளாகப் போகின்றதே என்று எண்ணி, இன்னும் ஒரு பதிவு கல்வி பற்றியும், உளவியல் சார்ந்த ஒரு பதிவும், கொஞ்சம் கனமான, தீவிரமான பதிவுகளாகக் காத்திருக்க, ஒரு சிறிய விளம்பர இடைவெளி கொடுப்பது போல், அந்த இரு கனமான பதிவுகள் கொடுப்பதற்கு முன்,  அதுவும் இதுவரை கொடுக்காத ஒரு தலைப்பில் கொடுக்கலாமே என்றுதான் இந்தப் பதிவு. மட்டுமல்ல, நண்பர் ஸ்ரீராம், தொடர்ச்சியாகக் கல்வி பற்றிய பதிவுகளாக இருக்கின்றதே என்று பின்னூட்டத்தில்  சொல்லவும், பற்றிக் கொண்டுவிட்டது கனல். இதோ, கொஞ்சம் ரசியுங்களேன் நீங்களும் எங்களுடன்.

மறந்து போன பாடல்கள். அவ்வளவாக இப்போதும் பேசப்படாத பழைய பாடல்கள்.  ஆனால், இந்த இரு பாடல்களையும், ஜாம்பவான் எம் எஸ் வி அவர்களின் (அது சரி எதனால் ஜாம்பவான் என்று சொல்கின்றோம். யாராவது விளக்கம் ப்ளீஸ்) அருமையான பாடல்கள் பட்டியலில் கோர்க்கலாம்.  ஒரு சிலருக்கு இதில் கருத்து வேறுபாடு இருக்கலாம்.  ஆனால், எங்களைப் பொருத்தவரை மேலே சொல்லப்பட்ட இரண்டாவது வரி. 

இந்தப் பாடல்.  எம் எஸ் வி அவர்களுக்கு என்ன ஒரு மேற்கத்திய சங்கீத ஞானம்! என்று  வியக்க வைத்தது. அந்தக் காலத்திலேயே! ஆங்கில வரிகளை எழுதியவர் ராண்டார் கை.  தமிழ் வரிகளை எழுதியவர் கண்ணதாசன்.  படம் தவபுதல்வன்.  அருமையான பாடல். பெண் குரல்  எல் ஆர் ஈஸ்வரி. ஆண் குரல் பாடகர் அபிஜித் சிங்கா,  என்று சரியாகத் தெரியவில்லை.


இந்தப் பாடல் “அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ” பாடியவரையும் பலருக்குத் தெரியாது. தெரிந்திருந்தாலும் மறந்திருப்பார்கள். ஏனென்றால் அவர் அவ்வளவாகப் பிரபலமில்லை. ஆனால், மிகவும் அருமையான பாடகர்.  ஒரு சின்ன க்ளூ தருகின்றோம். இந்தப் பாடகர் மிகவும் பிரபலமாக இருந்த நகைச்சுவை நடிகர் பாலையா அவர்களின் மகன்.  இவர் எம் எஸ் வி அவர்களின் இசைக் குழுவில் கிட்டார் வாசித்தவர்.  நன்றாக மிமிக்ரியும் செய்வார். என்ன அருமையாகப் பாடியுள்ளார். அதற்கு நாகேஷின் அருமையான நகைச்சுவையான நடிப்பும் இந்தப் பாடலுக்கு அழகு சேர்த்து நல்ல ஒரு காட்சியாக விரிகின்றது.  இந்தப் பாடல் இடம்பெற்ற படம் “வீட்டுக்கு வீடு”. பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். 1970



மிதுனம்.  மலையாளப் படம் அல்ல.  இது 2012ல் வெளிவந்தத் தெலுங்குப் படம். மிதுனம் என்றால் ஜோடி என்று தெலுங்கில் அர்த்தமாம். ஸ்ரீ ரமணா என்பவர் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமாம். அருமையான படம். குழந்தைகள் எல்லோரும் அயல் நாட்டில் இருக்க, வயதான காலத்தில் பாதுகாப்பற்றத் தனிமையை நினைத்து நொந்து கொள்ளாமல், வாழ்க்கையை ரசித்து, நுகர்ந்து, ஒவ்வொரு நொடியையும் அனுபவித்துக் காதலுடன் வாழ்க்கையை வாழும் ஒரு வயதான ஜோடியைப் பற்றிய படம். அதிலிருந்து இந்தப் பாடலைப் பாருங்கள்.  நாங்கள் மிகவும் ரசித்தப் பாடல், காட்சி. ப்ருந்தாவனமும் நந்தக் குமாரனும் என்ற பாடலின் மெட்டில் அப்படியே அமைந்துள்ள பாடல். நீங்களும் இதைப் பார்த்து ரசிப்பீர்கள் என்று நினைக்கின்றோம். இந்தப் பாடலைப் பார்த்த போது, நண்பர் ஸ்ரீராம் நினைவுக்கு வந்ததை மறுக்க முடியாது. திங்கட் கிழமை தோறும் சமையல் குறிப்பு ஒன்றை அனுபவித்து எழுதுகின்றார்., சிறுவயதில் அம்மாவிற்கு சமையலில் உதவி பல புரிந்து, தானும் செய்து களித்திருக்கின்றார். தோசைப் புராணம் தொடர் பதிவு எழுதியதை மறுக்க முடியுமா?! எனவே நண்பர் ஸ்ரீராம் இந்தப் பாடலைக் கண்டிப்பாக ரசிப்பார் என்ற நம்பிக்கையில் இந்தப் பாடலை அவருக்காகத் தருகின்றோம். உங்களுக்காகவும்தான்.  ரசியுங்களேன்.  அந்த வயதான தம்பதிகளின் காதல் கெமிஸ்ட்ரியையும்!


இந்தப் பதிவில் இந்த மூன்று பாடல்களுடன் நிறுத்திக் கொள்கின்றோம். மீண்டும் இது போன்ற பதிவுகளுடன் வருகின்றோம் அவ்வப்போது, விளம்பர இடைவேளை போன்று.

பாடல்கள் : யூட்யூப்