சனி, 31 அக்டோபர், 2015

வருமுன் காவாத அரசு

நமது அரசுகள், மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி படு சுறு சுறுப்பு, எள் என்றால் எண்ணையாக நிற்பார்கள், அதுவும் மக்களின் நலன் என்றால், என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன!?

இப்போது இங்கு வடகிழக்குப் பருவமழை பெய்யும் காலம் என்பது அரசிற்குத் தெரியாதா என்ன? ஒரு வேளை ஆட்சியாளர்கள் பூகோளப் பாடம் சரியாகப் படிக்கவில்லை போலும்.  சரி போனால் போகிறது. நமது வானிலை மையம் சொல்லும் வானிலை அறிக்கை கூடவா தெரியாமல் போகும்? அரசிற்கே வானிலை மையத்தின் அறிக்கையின் மீது நம்பிக்கை இல்லையோ?  மக்கள் கிண்டலடிப்பது போல்! 

சரி, அதான் இந்த முறை வானிலை அறிக்கை பலித்துவிட்டதே. பருவமழை பெய்து கொண்டிருக்கின்றதே என்று நீங்கள் சொல்லுவது கேட்காமல் இல்லை. மழையல்ல பிரச்சனை.  தோண்டப்படும் குழிகள் தான் பிரச்சனை. சென்னைவாசிகள் என்றில்லை, தமிழ்நாட்டில் உள்ள பெருநகர் மக்களுக்கு ஏற்படும் சங்கடங்கள்தான் இது. இதோ கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.மழை பெய்யும் காலங்களில் பெருங்காற்று அடித்தால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட வேண்டும். ஆனால், பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்படாமல், மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தோ அல்லது தென்னை ஓலைகள் விழுந்தோ கம்பிகள் அறுந்து கீழே விழுந்து கிடக்கும். தேங்கியிருக்கும் தண்ணீரில், அந்தக் கம்பியில், அறியாமல் கால் வைப்பவர்கள், அதுவும் இரவு நேரங்களில், பலியாவதும், நாலுகால் செல்லங்களும் அதற்குப் பலியாகி தீனக் குரல் எழுப்பி மனதை நோகடிப்பதும் நிகழத்தான் செய்கின்றது.

அப்படித்தான், இரு தினம் முன்பு மேலே செல்லும் மின் கம்பி அறுந்து விழுந்து, மழைத் தண்ணீரில் கிடக்க, நாலுகால் செல்லம் அதில் நடந்து இறக்க நேரிட்டது. வீடுகளில் வோல்டேஜ் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. பொதுமக்கள் விழிப்படைந்து மின்சாரவாரிய அலுவலகத்தை அழைத்துச் சொல்ல, இதோ நல்ல மழையில், எங்கள் தெருவில், எலெக்ட்ரிக் கேபிள் போடுவதற்கு, எங்கள் வீடுகளின் முன்பு நீளமாகப் பெரிய குழி தோண்டி இருக்கின்றார்கள். நல்ல விஷயம்தான். ஏம்பா உங்களுக்கு இந்தப் பருவம் தான் கிடைச்சுச்சா? இது வருடா வருடம் நடக்கறதுதானே. அழகாய் திட்டமிட்டுச் செய்யலாமே. இப்பணி எல்லாம் வெயில் காலத்தில் மின்வெட்டு இருக்கும் நேரங்களில் செய்யப்பட வேண்டியவை.  அப்போது அரசிற்கும் நட்டம் ஏற்படாது.  இப்போது இப்பணிக்காக மின்வெட்டு செய்து பொதுமக்களுக்கும் இடையூறு, அரசிற்கும் நட்டம்.

தார் ரோடில் நோண்டி இருக்கின்றார்கள். மீண்டும் தார் உடனடியாகப் போடமாட்டார்கள். தாமதிப்பார்கள். மண்ணால் மூடிவிடுவார்கள். மழைக்காலம். மண் அரிப்பெடுத்துக் குழிகளாகும். வண்டிகளை வெளியில் எடுப்பதும் சிரமமாகும்.  

முன்பெல்லாம் 300, 400 வாட்ஸ் உபயோகமே ஒரு வீட்டிற்கு சராசரியாக. ஆனால் தேவைகள் பெருகப் பெருக இப்போது 1000 வாட்ஸிற்கும் மேலாக ஒரு வீட்டிற்குத் தேவைப்படும் போது, அப்பகுதியில் எத்தனை வீடுகள் இருக்கின்றன, அவர்கள் எவ்வளவு மின் சக்தி உபயோகிக்கின்றனர், எதிர்காலத்தில் இன்னும் எவ்வளவு தேவைப்படலாம் என்றும், அந்தப் பகுதியில் இருக்கும் ட்ரான்ஸ்ஃபார்மர் எவ்வளவு மின் இணைப்புகளைத்தாங்கும் என்றும் கணக்கிட்டு, மின் இணைப்புகளைப் பாதுகாப்பாக ஏன் கொடுப்பதில்லை? சரி அப்படித்தான் செய்யவில்லை.  போகட்டும். இதை எல்லாம் மழை பெய்யாத காலத்தில், முன் கூட்டியே செய்திருக்கலாமே. 

காலம் காலமாய் நடந்து வருவது மட்டுமல்ல, சில பல உயிரிழப்புகளும், பின்னர் குழிகள் மூடப்படாமல் அப்படியே விடப்படுவதும், தண்ணீர் தேங்குவதும், யாரேனும் அதில் விழுவதும், நடக்கும் ஒன்றே. அனுபவம் என்பது நல்ல பாடம் என்பார்கள். ஆனால் நமது அரசுகளுக்கு இந்த அனுபவங்கள் எதுவுமே எந்தப் பாடமும் புகட்டுவதாகத் தெரியவில்லை. சொந்த அனுபவம் இல்லாததாலோ?

படம் - நன்றி - இணையம்

பலரையும் தாக்கி வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்காக, சமீபத்தில் அம்மாவின் படம் தாங்கிய அறிவிப்பு “உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்”, என்ற அறிவிப்புப் பலகை ஒன்றை அன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பார்த்த போது எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 

பின்னே என்னங்க, அம்மா தனது அறிவிப்புப் பலகையின் கீழ், குப்பையுடன் குட்டையாகத் தேங்கியிருந்த மழைத் தண்ணீரில், கொசு முட்டைகள் குமிழிகளாக மிதந்திட, கொசுவை வளர்த்துக் கொண்டிருக்கின்றார் என்றால் சிரிக்காமல் என்ன செய்வது? சரி நாங்கள் வீட்டையும், சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம்.

ஆனால், பொது இடங்களில் உள்ள குப்பைக் கூளங்கள் நீக்கப்படாமல் அப்படியே இருந்தால், அதுவும் மழை பெய்யும் காலத்தில் கொசுக்கள் தங்கள் இனத்தை வளர்க்காமல் என்ன செய்யும்.  ஹும் இந்தச் சுத்தம் பற்றிய அறிக்கை டெங்கு வரும் போது மட்டும்தான். அதுவும் ஊர் சுத்தம், பொதுநல சுகாதாரம் பற்றி அக்கறை இல்லாத அரசு. அரசு எவ்வழி அவ்வழி மக்கள் என்பது போல் மக்களும் பொதுசுகாதாரத்தைப் பேண ஒத்துழைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் சிங்கப்பூரைப் போல அபராதம் விதித்தால்தான் பொறுப்புணர்வார்கள் போலும். 4.30 மணிநேரப் பயணத்தில் இருக்கும் அந்த அண்டை நாட்டினைப் பார்த்து அரசும், மக்களும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

டெங்கு பரவுவதையும், அதன் தீவிரத்தையும் தடுக்க, அம்மா உணவகத்தில் நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச் சாறு இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்கெட்டபின் சூரியநமஸ்காரம் என்பதைப் போல். பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவது போல் என்றும் சொல்லலாமோ?

நம் அரசிடம், வரும் முன் காக்கும் எந்தத் திட்டமும், செயலும் ஏன் இல்லை? என்பது மிகவும் வேதனைக்குரியது. வரும் முன் காப்பதுதானே ஒரு அரசின் வேலை.  வந்த பின் உயிர் போனபின் என்ன செய்ய முடியும்? ஒப்பாரி வைத்து, அரசை நாலு கெட்ட வார்த்தைகள் போட்டு, இரண்டு நாட்கள் திட்டிவிட்டு மீண்டும் மக்களாகிய நாம் எதுவுமே நடக்காதது போல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதுதான் நடந்து வருகின்றது. அரசிற்குச் சாதகம்தான்.

தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குறுதிகள் பேசி, குடிசைகள் பக்கம் சென்று, பின்னர் மறக்கும் அலட்சியப் போக்கு.  மக்கள் நாம் முட்டாள்கள் மட்டுமல்ல பொறுப்பற்றவர்களும் கூட. அரசு பேருந்துகளிலும், அரசு அலுவகங்களிலும் திருக்குறள் பதியத் தெரிந்த அரசிற்கு “வருமுன் காவாதார் வாழ்க்கை” எனும் திருக்குறள் தெரியாமல் போனது ஏனோ?!  

பதிவர் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.  இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் நம் வலைச்சித்தர் டிடி அவர்களின் வலைத்தளத்திற்குச் சென்று வேண்டுகோளை நிறைவேற்ற முயற்சி செய்யலாமே...http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/World-Tamil-Bloggers-Guide-Book.html

--கீதா


வெள்ளி, 30 அக்டோபர், 2015

70 ஆம் வயதில் முதன் முதலாய் ஓட்டுப்போடப் போகும் கவியூர் பொன் “அம்மா”


     மலையாளத் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக ஏறக்குறைய 400 திரைப்படங்களில் அன்பில், பாசத்தில் மொத்த உருவமான அம்மாவாக மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம், ஸ்ரீனிவாசன், முகேஷ், திலீப் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த, பல திரைப்பட விருதுகள் பெற்ற கவியூர் பொன்னம்மா அண்மையில் தனது 70 வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.


1960களில் கதாநாயகியாக நடித்த அவர், 1980களிலிருந்து அம்மாவாக நடிக்கத் தொடங்கித் தனக்கே உரித்தான சிறந்த நடிப்பாற்றலாலும், பாசம் ததும்பும் குரலாலும், சிரிப்பாலும் அம்மா என்றால் அது கவியூர் பொன்”அம்மா” தான் என்று எல்லோரும் சொல்லும்படி செய்துவிட்டவர்.

இதை எழுதும் போது என் மனதில், அவர் மம்முட்டியுடன் நடித்து 25 வருடங்களுக்கு முன் வெளிவந்த “தனியாவர்த்தனம்” எனும் மலையாளத் திரைப்படம் பளிச்சிடுகிறது.  மம்மூட்டி எனும் ஒரு மகா நடிகரின் நடிப்பைக் கண்டு நான் வியந்த படம் அது. இதோ காணொளி.  நீங்களும் பார்த்து ரசிப்பீர்கள் என்று பகிர்ந்துள்ளேன். 

க்ளைமாக்ஸ் காட்சி - தனியாவர்த்தனம்-மிக அருமையான காட்சி

இறுதிக் காட்சியில் சமூகத்தால் மனநோயாளியாக முத்திரைக் குத்தப்பட்டு வீட்டுக்குள் சங்கிலியால் கட்டப்பட்டுக் கிடக்கும் மகனுக்குத் தாய் விஷம் கலந்த சோற்றைக் கொடுத்துத் தானும் உண்ணும் அந்தக் காட்சியில் தாயாக நடித்த கவியூர் பொன்னம்மாவின் நடிப்பு மம்மூட்டியின் நடிப்பிற்கு இணையாக அமைந்து, அப்படமும் அக்காட்சியும் என் நினைவிலிருந்து ஒரு போதும் நீங்காத இடத்தைப் பெற்ற ஒன்று.

40 வயதுள்ள அம்மாக்கள் உலா வரும் இக்காலத்திலும் மம்மூட்டி, மோகன்லால் போன்றோருக்கு கவியூர் பொன்னம்மா அம்மாவாக வரும் போது, ரசிகர்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.

      ஆனால் அப்படிப்பட்ட அந்த 70 வயதாகும் அம்மா இதுவரை நடந்த ஒரு தேர்தலிலும் ஓட்டே போட்டதில்லையாம்!  தேர்தல் நேரத்தில் வழக்கம் போல் கேட்கும் வித்தியாசமான சம்பவங்களில் எல்லோருக்கும் வியப்பளித்த செய்தி அது.

கேரளத்தைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் எல்லோருமே பெரும்பாலும் வாழ்வது சென்னையில்தான். அதனால், படப்பிடிப்பு யாத்திரை என்று அலையும் அவர்கள், வாக்காளர் பட்டியல் தயாராகும் போது அவர்களது பெயர்கள் அதில் சேர்க்கப்படாமல் போவது இயல்பு. 

ஆனால், அரசியல் ஈடுபாடுள்ள நடிகர் நடிகைகள் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தங்களது வாக்கை தேர்தலின் போது, அவர்கள் ஆதரவளிக்கும்  கட்சியின் வேட்பாளர்களுக்கு அளிக்க மறக்கவே மாட்டார்கள். நடிகர் நடிகைகள் பலரும் வேட்பாளரும் ஆகியிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அமைச்சர்களும் ஆகியிருக்கிறார்கள்.

      வட இந்தியாவில் சுனில்தத், ராஜேஷ் கன்னா, சத்ருகன் சின்ஹா, வைஜெயந்திமாலா, ஹேமாமாலினி போன்றோர், இருந்தாலும் தென்னிந்தியாவில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மற்றும் என்டிஆருக்குக் கிடைத்த முதல்வராகும் வாய்ப்பு வட இந்தியர்களுக்குக் கிடைக்கவில்லைதான்.

ஏன் அவர்களுக்குப் பின் தென்னிந்தியாவிலும் அவர்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கை விஜய்காந்த், சிரஞ்சீவி பெற முடியவில்லைதானே. இருந்தாலும் திரைபடக் கலைஞர்களுக்கு அரசியலில் நுழைவது எளிதுதான்.  அதுதான் சினிமா நடிகர் நடிகைகளுக்கும், அரசியலுக்கும் உள்ள உறவு. 

அப்படிப்பட்ட ஆழமான, அழுத்தமான உறவு திரைப்படக் கலைஞர்களுக்கும் அரசியலுக்கும் உள்ள நம் நாட்டில்தான் பாவம் தனது 70 ஆம் வயதில் முதன் முதலாகத் தனது வாக்கை வேட்பாளர்களுக்கு வழங்க மலையாளத் திரையுலகின் அம்மாவான கவியூர் பொன்னம்மா அவர்கள் செல்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்க நேரிட்டதும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்பதால் பகிர்ந்து கொள்கின்றேன். 


கடந்த 12 வருடங்களாக கருமாளூரில்,  தான் கட்டிய வீட்டில் வசித்துவரும் அவரது பெயர் தேர்தல் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவருக்குத் தேர்தல் அடையாள அட்டையும் கடந்த மாதம் தான் கிடைத்திருக்கிறது. கவியூர் பொன்னம்மா அவர்கள் அன்புமிகு அம்மாவாக நடிப்பதுடன், ஒரு இந்தியக் குடிமகனா(ளா)கத் தனது ஓட்டளிக்கும் உரிமையைக் காப்பாற்றிக் கொண்டு பொறுப்புடன் இனி வரவிருக்கும் தேர்தல்களில் பொன்னம்மா தன் பொன்னான வாக்குகளை அளிப்பாராக!

படங்கள், காணொளிகள் - இணையத்திலிருந்து

நேற்று இதை இங்கு பதிய கூகுளார் ஏனோ மறுத்துவிட்டார். ரொம்பவே அடம் பிடித்தார் அதனால் விடுபட்டது. இன்று முயற்சி. நண்பர் குடந்தை ஆர் வி சரவணன் அவர்களின் குறும்படம் அகம் புறம் இதோ.அதன் காணொளியின் சுட்டி.  பார்த்துவிட்டுத் தங்கள் மேலான நிறை குறை கருத்துகளை யூட்யூபிலும் பதியலாம். 

https://www.youtube.com/watch?v=4OFO4SwfNn0

செவ்வாய், 20 அக்டோபர், 2015

வேட்டக்கொருமகன்

நம் பதிவர் நண்பர் வெங்கட்ஜி அவர்கள் தனது ஃப்ருட் சாலட் பகுதியில், கேரளாவில் பட்டாம்பி அருகில் பன்னிரண்டாயிரம் தேங்காய்கள் உடைப்பது பற்றிய காணொளி பகிர்ந்து ஒரு வேண்டுகோளும் வைத்திருந்தார். முழுவிவரங்களை துளசிதரன் ஜி முடிந்தால் பதிவிடலாமே! http://venkatnagaraj.blogspot.com/2015/09/145-12000.html

மிக்க நன்றி வெங்கட்ஜி.

கேரளாவின் வடக்குப் பகுதி, குறிப்பாக மலபார் பகுதியில் இறைவன் வேட்டக்கொருமகன் மிகவும் பிரபலம். இவ்விறைவனைப் பற்றிச் சில கதைகள் சொல்லப்படுகின்றது.  குறிப்பாக

காஞ்சிபுரம் சிவவேடன் - அருச்சுனன் மோதல் சிற்பம்

மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது, அருச்சுனன், சிவபெருமானின் பாசுபத அஸ்திரத்தைப் பெற வேண்டி, இமயமலைக்குச் சென்று சிவபெருமானை வேண்டித் தவமிருந்தான். பலவருடங்களாக அவன் செய்த தவத்தில் மகிழ்வுற்ற சிவபெருமான், அருச்சுனனின் வீரத்தையும், பக்தியையும் பரிசோதிக்க வேண்டி கிராதன் – வேட்டுவனாக அவன் முன் தோன்றினார். பார்வதியும் அவருடன் கிராதியாகத் தோன்றினார்.

Image result for kirathamoorthy

சிவன் அருச்சுனனின் தவத்தைக் கலைக்க வேண்டி ஒரு அசுரனைக் காட்டுப் பன்றியாகச் செய்கிறார்.  அருச்சுனன் அந்தப் பன்றியைக் கொல்வதற்கு அம்பு எய்கிறான்.  கிராதனும் எய்கிறான்.  பன்றி இறக்கவும், அருச்சுனனுக்கும், கிராதனுக்கும் விவாதம் எழுகின்றது.  யாருடைய அம்பு பன்றியை முதலில் குத்திக் கொன்றது என்று. விவாதம் சண்டையில் முடிகின்றது.  அருச்சுனனின் அம்புகள் கிராதனின் அம்புகளால் வீழ்த்தப்படுகின்றன. அருச்சுனனின் எல்லா ஆயுதங்களும் வீழ்ந்திட, நிராயுதபாணியான அருச்சுனன் சிவலிங்கத்தை நோக்கிப் பிரார்த்தித்து, மலர்களால் அருச்சிக்கின்றான்.  அவன் இடும் மலர்கள் எல்லாம் கிராத மூர்த்தியின் பாதங்களில் வீழவும், அருச்சுனன் ஆச்சரியம் அடைய, உணர்கின்றான், அந்தக் கிராதன் வேறுயாருமல்ல சிவபெருமான் என்று.

சிவனும், பார்வதியும் அருச்சுனன் முன் தோன்றி, சிவன் பாசுபத அஸ்திரத்தை அருச்சுனனுக்கு அருளுகின்றார். பின்னர் சிவனும், பார்வதியும் வேட்டுவராகவே காடுகளில் சிறிது காலம் இருந்ததாகவும், அப்படி வாழ்ந்த போது ஒரு குழந்தையை பெற்றதாகவும் சொல்லப்படுகின்றது. அவர்கள் அந்தக் குழந்தையை அப்படியே காட்டில் விட்டுச் சென்றதாகவும், வேடர்களின் தலைவனின் பராமரிப்பில் சிறந்த போர்வீரனாக அந்தக் குழந்தை வளர்ந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

அந்தக் குழந்தை தனது அம்பு எய்தும் திறமையாலும், குறும்பினாலும் அசுரர்களுக்கு மட்டுமல்லாமல், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தொந்தரவு கொடுத்துவந்தான். அதனால் தேவர்களும், ரிஷிகளும் பிரம்மாவிடம் முறையிட, அவர் சிவபெருமானை நோக்கிக் கைகாட்ட, அவரோ, அவன் சிறுவன். அப்படித்தான் விளையாட்டாக இருப்பான். வளர்ந்ததும் சரியாகிவிடுவான் என்றிட, அடுத்து இருக்கவே இருக்கிறார் விஷ்ணு அவரிடம் சென்று முறையிட்டிருக்கின்றார்கள்.
 
விஷ்ணு, அச்சிறுவன் முன் தோன்றி தங்கநிறத்தில் உள்ள உடைவாளைக் காட்ட அதற்கு அந்தச் சிறுவன் மயங்கி அதை வேண்ட, விஷ்ணு, இனி எவரையும் தன் குறும்புகளால் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்குப் பணிந்தால் அதைத் தருவதாக அச்சிறுவனிடம் சொல்லவும், அச்சிறுவன் கீழ்படிந்து அதைப் பெற்றுக் கொள்ள, சிவபெருமான் இனி அச்சிறுவன் அங்கிருந்தால் சரிவராது என்று நினைத்து, கேரளத்திற்குச் சென்று அந்த நிலத்தைக் காக்கச் சொல்லவும், சிறுவன் வெகுதூரம் கடந்து வந்து, அப்படிக் கேரளத்தை வந்தடையும் போது வட கேரளத்தில், முதலில் வந்தடைந்த பகுதிதான் பாலுச்ஸேரி. பின்னர் மற்றப் பகுதிகளுக்குச் சென்றதாகவும் கதை செல்கின்றது. அவர்தான் வேட்டக்கொருமகன் என்று அறியப்பட்டார்.

பரகுன்னத்து வேட்டக்கொருமகன்-  வேட்டக்கொரு மகன் கோட்டயம்

வேட்டக்கொருமகன் கோயில் - நிலம்பூர்

கேரளத்தில் பல இடங்களில் வேட்டக்கொருமகன் கோயில்கள் இருந்தாலும், பாலுச்ஸேரியில் உள்ள வேட்டக்கொருமகன் கோயில்தான் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். இந்த இறைவனை மகிழ்விக்கக் கொண்டாடப்படும் ஒரு சடங்குதான் வேட்டக்கொருமகன் பாட்டு. இந்தப் பாட்டு ஒலிக்கும் போது பந்தீராயிரம் தேங்காயெறு விழா (பன்னிரண்டாயிரம் தேங்காய்கள் அந்தப்பாட்டின் ரிதத்திற்கு ஏற்ப ஒரே நேரத்தில் உடைக்கப்படும் விழா)

பந்தீராயிரம் தேங்காயெறு விழா

ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் கேரளாவிலுள்ள நம்பூதிரி குடும்பங்கள் இந்த விழாவை நடத்த ஆயத்தமாகின்றனர். இந்த விழா மிகவும் பிரசித்தி பெற்றது மட்டுமல்ல மிகவும் சவாலானதும் கூட. ஏனென்றால் கோயிலின் முதன்மை பூசாரிதான் ஒரே நேரத்தில் 12,000 தேங்காய்களை இருகைகளாலும் மாற்றி மாற்றி, வேட்டகொருமகன் ஜண்டை, தாள வாத்தியங்களில் வாசிக்கப்படும் பாட்டின் ரிதத்திற்கு ஏற்ப உடைக்க வேண்டும்.

இந்தப் பந்தீராயிரம் விழாவை நடத்தும் நம்பூதிரிகளில் மிகத் திறமை மிக்கவர், வடகேரளத்தைச் சேர்ந்த, 38 வயதுள்ள, நம்பூதிரி மனோஜ் குமார் கண்டமங்கலம் என்பவர். இவர் பல கோயில்களிலும், புகழ்வாய்ந்த நம்பூதிரி, அரசக் குடும்பங்களுக்காகவும் இந்த வேட்டக்கொருமகன் பாட்டு, பந்தீராயிரம் தேங்காயெறு நிகழ்வை நிகழ்த்தியுள்ளார். இவரது முதல் பந்தீராயிரம் தேங்காயெறு விழா, பாலுஸ்சேரியிலுள்ள, மிகவும் புகழ்பெற்ற நம்பூதிரி குடும்பமாகிய ராமல்லூர் தெஞ்சீரி இல்லத்தில் 1996 ஆம் ஆண்டு நடந்துள்ளது.  அப்போது இவ்விழாவை நடத்த 4 மணி நேரம் 10நிமிடம் எடுத்துக் கொண்டதாகவும், பின்னர் அனுபவத்தில் இன்னும் வேகமாகச் செய்ய முடிந்ததாகவும் கூறுகின்றார்.


வேட்டக்கொருமகன், கேரளத்தில் உள்ள சிரக்கல், நீலேஸ்வரம், கோட்டக்கல் அரச குடும்பங்களின் தேவதையாக வழிபடப்படுகின்றார்.  அப்படி, புகழ்பெற்ற கோட்டக்கல் கோயிலம் அரசக் குடும்பத்திற்காக பந்தீராயிரம் தேங்காயெறு விழாவை நம்பூதிரி மனோஜ் நடத்தினார்.  அவ்விழாவில் 12000 தேங்காய்களை உடைக்க 2 மணி நேரம் 13 நிமிடம் எடுத்துக் கொண்டதாகவும் அது லிம்கா புத்தகத்தில் பதியப்பட்டதாகவும், அதுவே இதுவரை தான் நிகழ்த்திய விழாவில் சிறந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.  அதன் பிறகு நடத்திய விழாவும் 21/2 மணி நேரத்தைத் தாண்டியதில்லையாம். தனது 18 வருட அனுபவத்தில் இது வரை 75 பந்தீராயிரம் நடத்தியிருக்கின்றார்.

இவ்விழா கேரளத்தில் வேட்டைக்கொருமகன் இறைவனுக்கும், மற்ற தென்னிந்திய மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில் ஐயப்பனுக்கும் கொண்டாடப்படுவதாகச் சொல்லுகின்றார். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் (எங்கள் பகுதிக்கு வெகு அருகில்) வேட்டக்கொருமகன் கோயில் உள்ளது, தனியாரின் வசம். தமிழ்நாட்டில் பந்தீராயிரம் கொண்டாடப்படுகின்றது என்று நம்பூதிர் மனோஜ் சொன்னாலும், நான் பிறந்து வளர்ந்த தேனீ மாவட்டப்பகுதிகளில் வேட்டைக்காரன் கோயில்கள் இருந்தாலும், பந்தீராயிரம் பற்றி, இதுவரை கேள்விப்பட்டதில்லை.

வேட்டைக்கொருமகன் ஷத்திரியர்களின் இறைவனாக வணங்கப்பட்டதாகவும், பின்னர் வட கேரளத்தில் உள்ள நம்பூதிரிகள் மிகவும் நலிவடைந்த போது வேட்டக்கொருமகன் இறைவனை வழிபடத் தொடங்கினார்கள். அவ்வழக்கம் தொடர்ந்து, இப்பொதும் நம்பூதிரிகள் வழிபட்டுவருகின்றார்கள்.  

படங்கள், காணொளிகள்: நன்றி கூகுள்.

(பின் குறிப்பு. அடுத்த 4,5 நாட்களுக்கு இருவரும் இணையம் பக்கம் வர இயலாத் நிலை. மீண்டும் திங்கள் அன்று சந்திப்போம் )

சனி, 17 அக்டோபர், 2015

தலைமைச் செயலகத்தைச் சற்றுக் கவனியுங்கள்...

இந்தப் பதிவு பிறக்கக் காரணமான, தற்கொலை செய்து கொண்டு இம்மண்ணை விட்டுப் பிரிந்து காற்றோடு காற்றாகக் கலந்த அந்த இளம் பெண்ணிற்கு எனது இரங்கல்கள். இந்தப் பதிவு ஆலோசனைகளோ, அறிவுரைகளோ வழங்கும் பதிவு அல்ல. 

எனது அனுபவங்களினாலும், உளவியல் பார்வையினாலும் எனது இந்தச் சிறிய தலைமைச் செயலகத்தில் பதிந்த சில கேள்விகளால் உருவான எனது எண்ணம்: எல்லாவற்றிற்கும் காரணம் நம் தலைமைச் செயலகம்தான் என்பதைச் சொன்னால், இதை வாசிக்க நேரும் அறிவியலாளர்கள், இந்தச் செயலகத்தின் வேலைப்பாடுகள் சீரிய நிலையில் நடக்க ஏதேனும் வழிமுறைகள் உண்டெனில், உரைத்தால், அந்தக் குறிப்புகள், குறிப்பாக இளையவர்களுக்கு, தற்கொலை எண்ணம் எப்பொழுதாவது மனதில் எட்டிப் பார்த்துச் சென்று சலனத்தை ஏற்படுத்தியிருந்தால், அவர்களுக்கு அந்தக் குறிப்புகள் உதவியாக இருக்குமே என்ற ஒரு நல்ல எண்ணத்தில்தான். 

எனது மகன் வட அமெரிக்க கால்நடை மருத்துவ உரிமம் பெறுவதற்காக, கானடா சென்றிருந்த போது மகனின் இடத்தில் மருத்துவப் பணிக்குச் சேர்ந்தவள் அந்த இளம் பெண். ஆர்வமுடன் தான் அவள் சேர்ந்திருந்திருக்கின்றாள்.

கால்நடை மருத்துவத்தை மிகவும் நேர்மையாக, ஆத்மார்த்தமாகச் செய்யும் அந்த இரு கால்நடை மருத்துவகங்களும் ஏறக்குறைய வெளிநாட்டு கால்நடை மருத்துவகங்களுக்கு நிகரான சிகிச்சை அளித்து வருவதால், நாலுகால் செல்லங்களின் வரவும், அறுவை சிகிச்சைகளும் சற்று அதிகம். மருத்துவகத்தில் வேலை சற்றுக் கூடுதல்தான். இரு முதன்மை மருத்துவர்களும் இந்த மருத்துவகங்களை இந்த அளவிற்குக் கொண்டு வர, ஆரம்பக் காலகட்டத்தில் உறக்கம் தொலைத்து உழைத்தவர்கள்.

மகன் செய்துவந்த பணியை அப்பெண் செய்து வந்திருந்திருக்கின்றாள். இரவு நேரப் பணிகளும், அறுவை சிகிச்சைகளும், போதிய தூக்கமின்மையும்.  ஆனால், ஒரு நல்ல மருத்துவராக உருவாக வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால், ஆரம்ப நிலையில், இது போன்றச் சூழ்நிலைகளைத் தவிர்க்க இயலாது. ஆனால், நம் ஊரில், பெண் கால்நடை மருத்துவர்கள் – க்ளினிஷியன்ஸ்- குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யும் பெண் கால்நடைமருத்துவர்கள் மிக மிக மிகக் குறைவு.

மீண்டும் மகன் இங்கு வந்து அதே கிளினிக்கில் சேர்ந்ததும், முதன்மை மருத்துவர் என் மகனிடம் அவள் கொஞ்சம் கஷ்டப்படுவதாகவும், அவளை வழிநடத்தவும் சொல்லியிருக்கிறார்.

மகன், ஒரு நாள் அப்பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தினான். நல்ல உயரமாக, மெலிந்து பார்ப்பதற்குச் சக்தியற்றவளாக இருந்தாலும், அவள் உடலை விட, அவளது கண்கள் ஏதோ ஒரு வருத்தத்தையும், சோர்வையும் வெளிப்படுத்தியது தெரிந்தது. சில சமயங்களில் இரவுப் பணி, பகல் நேரப் பணி என்று தொடரும் என்பதினால் இருக்கலாம் என்று நினைத்தேன். நான் மகனிடம் கேட்டதற்கு அவன் சொன்ன பதில் இதுதான். “அவள் சற்றே கஷ்டப்படுகின்றாள்”. அவளை நான் பலமுறை சந்தித்திருந்தும், அவளைப் பற்றிய பேச்சுகள் எங்களிடையே எழுந்ததில்லை.

மகனுக்கு நார்த் கரோலினா பல்கலைக்கழக கால்நடை கல்லூரியில் எக்ஸ்டேர்ன்ஷிப் கிடைக்கவே அவன் சென்ற வெள்ளியன்று புறப்பட்டான். செவ்வாயன்று, நமது நேரம் மாலை 4.00 மணி அளவில், மகன் கல்லூரிக்குப் புறப்படும் முன் என்னை ஸ்கைப்பில் அழைத்து, “அந்தப் பெண் தற்கொலைசெய்து கொண்டுவிட்டாள்” என சொல்லவும் அதிர்ச்சியடைந்தேன்.

மகனுக்கு அமெரிக்க திங்கள் இரவு அதாவது, நமக்கு, செவ்வாயன்று காலை மின் அஞ்சல் கொடுத்திருக்கின்றாள் “ஆல் தெ பெஸ்ட்” சொல்லி. மகன் அவர்கள் நேரப்படி செவ்வாய் அதிகாலை அவள் அஞ்சல் பார்த்து பதில் கொடுக்கும் முன்  இந்தச் செய்தி உதவியாளரிடமிருந்து வந்திருக்கின்றது.

“இது ஒரு ஸ்டுப்பிட் டெசிஷன். எனக்கு ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் செம கோபம்தான்.  ம்ம்ம்ம்... எனிவே த ப்ரெய்ன் கெமிஸ்ட்ரி டாமினேட்ஸ் எவ்ரிதிங்க். நோ சொல்யூஷன்ஸ்.  கான்ட் ஸே எநிதிங்க் மோர்” - மகன்

உதவியாளரிடமிருந்து நான் அறிந்தது: அவள் செவ்வாய் காலை வழக்கம் போல் மருத்துவகத்திற்கு வந்து வேலைகளைக் கவனித்து, இரண்டு மணி நேரம் கணினி முன் அமர்ந்து ஏதோ வேலை செய்துவிட்டு, 11 மணியளவில் வீட்டிற்குச் சென்று உடன் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றவள் அடுத்த ஒரு மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுவிட்டாள் என்ற செய்தி அவளது பெற்றோரிடமிருந்து உதவியாளருக்கு வந்திருக்கின்றது. அதுவும் மருத்துவகத்திலிருந்து மயக்க மருந்து எடுத்துச் சென்று அதைத் தனக்கே செலுத்திக் கொண்டு....

அப்படி என்றால் அந்த இரண்டு மணி நேரம் அவள் கணினியில் என்ன செய்தாள் என்பது, அவள் அந்தக் கணினியின் ஹிஸ்டரியை அழிக்காமல் இருந்திருந்தாள் என்றால், அதைப் பார்த்தால் தெரிந்து விடலாம். அந்தச் சமயத்தில்தான் அவள் மகனுக்கு அஞ்சல் கொடுத்திருந்திருக்க வேண்டும். ஒருவேளை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மயக்க மருந்து, அதன் அளவு பற்றித் தேடியிருக்கலாமோ என்றும் தோன்றியது.

என் மகனிடம் இருந்தும், புதன் அன்று அவளது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட போது அவளது தந்தையிடம் இருந்தும் நான் அறிந்தது:

ஒரே மகள் பெற்றோருக்கு. பெற்றோர் அவளுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். ஆனால், அவள் சொல்லிவந்தது தான் தகுதியற்றவள். தனக்கு எதையுமே கற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னால் எதையுமே நன்றாக, சரியாகச் செய்ய முடியவில்லை என்று. ஒரே குழந்தை என்றால், உடன் பிறந்தோர் இல்லாததால், நட்புகள் இல்லை என்றால் மன அழுத்தத்திற்கு/சிதைவுக்கு ஆளாகும் என்பதெல்லாம் சொல்லப்பட்டாலும், விவாதத்திற்குரியதே.

அவள் மன அழுத்தத்தில் இருந்திருக்கின்றாள். முதன்மை மருத்துவரும், மகனும் அவளிடம் ஆறுதலாகவும், ஊக்குவிக்கும் வகையிலும் பேசியிருந்திருக்கின்றார்கள். முதன்மை மருத்துவர் அவளைச் சிறப்புப் பயிற்ச்சிக்கும் அனுப்பியிருந்திருக்கின்றார். அவளைச் சில காலம் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறும் சொல்லியிருந்திருக்கின்றார்கள்.

என் மகனும் அவளுக்குத்ட் தொடர்ந்து  ஆலோசனைகள் கொடுத்து, அவளை ஊக்குவித்து, அவளைச் சுய பரிசோதனை செய்துபார்த்துக் கொள்ளவும் சொல்லியிருந்திருக்கின்றான். அதாவது, அவளது திறமைகளை அவளே கண்டறிந்து – மெடிசினா, அறுவைசிகிச்சையா - எது நன்றாக வருகின்றது, எது அவளுக்கு ஏதுவாக இருக்கின்றது என்பதை அறிந்து, அதை மேம்படுத்திக் கொள்ளுமாறு.

முதன்மை மருத்துவரும் அவளை இந்த மருத்துவக வேலை கடினமாக இருந்தால், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளாத வேறு மருத்துவகத்தில், மருத்துவராகவும் வேலை செய்யலாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.  ஆனால், அப்பெண்ணோ இந்த வேலைதான் பிடித்திருக்கின்றது என்றும் சொல்லியிருக்கின்றாள். மருத்துவருக்கு அவளை வேலையை விட்டு நீக்கவும் தயக்கம். ஒருவேளை அதுவே அவளுக்கு இன்னும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி, மன அழுத்தம் விளைவித்துவிடுமோ என்று.

பிடித்துச் செய்யும் வேலையென்றாலும் அவளது மன அழுத்தத்தை அவளால் சரியாக நிர்வகிக்க முடியாததால், அவள் மீண்டும் மீண்டும் தான் தகுதியற்றவள் என்று சொல்லி வந்ததால், அவளை நல்ல மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெறச் சொல்லியிருந்திருக்கின்றார் முதன்மை மருத்துவர். அவளும் ஒரு சில மாதங்களாக மனஅழுத்தத்திற்கான மருந்தும், மனநல ஆலோசகரிடம் ஆலோசனைகளும் எடுத்துக் கொண்டிருந்திருக்கின்றாள்.

என் மகன் அவளுக்கு மிகவும் ஆறுதலாகவும், ஆதரவாகவும், நல்ல வழிகாட்டியாகவும், இருந்து வந்ததாக அவளது தந்தை பாராட்டிச் சொன்னார்.

இந்த நிகழ்வுகளை எல்லாம் கோர்வையாக்கி காட்சிகள் மனத்திரையில் விரிந்த போதுதான் எனக்குப் பளிச்சிட்டது. 9 ஆம் தேதி அதிகாலை மகன் புறப்படல்.  அதன் பின் முதன்மை மருத்துவரும் அவரது தாயின் உடல்நிலை சரியில்லாததால் வெளியூர் பயணம். மருத்துவகம் அவளது பொறுப்பில். உதவியாளர் இருந்தாலும் அவளால் ஈடுகொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டிருக்க வேண்டும். தனிமை. மன அழுத்தம் கூடியிருந்திருக்கலாம். அதனால்தான் இந்த முடிவோ என்றும் தோன்றியது.

அவளாள் மருத்துவகத்தின் பரபரப்பிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதை விட அவளுக்குள் ஏற்பட்ட அந்தத் தாழ்வுமனப்பான்மைதான் அவளை இந்த முடிவிற்குத் தள்ளியிருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு.

      இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு வண்டியில் வந்து கொண்டிருக்கும் போது, மன அழுத்தம், தற்கொலை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்து கணினியின் முன் அமர்ந்தால், சீனுவின் ஒரு பதிவு http://www.seenuguru.com/2015/10/ITmentalcare.html   வாசித்தால் “அட! கிட்டத்தட்ட நாம் தொட நினைக்கும் சப்ஜெக்ட்”!

Image result for tension in brain

      தற்கொலைக்குக் காரணங்கள் என்று சூழ்நிலைகள் பல சொல்லப்பட்டாலும், அடித்தளம் தலைமைச் செயலகத்தில் நடக்கும் ரசாயனமாற்றங்களினால் நிகழும் மன அழுத்தம் தான். ஆனால், மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள் எல்லோரும் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. நேர்மறை எண்ணங்கள் இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை. அதுவே எதிர்மறை எண்ணங்களானால் பிரச்சினையே. இங்குதான் நான் மூளையைப் பற்றி என் சிற்றறிவிற்கு எட்டியதைச் சொல்ல விழைகின்றேன்.

      வருமுன் காப்போம் என்று ஒரு சில நோய்களுக்கு கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள், தீர்வுகள் சொல்லப்படுவது போல், மன அழுத்தம் வராமல் இருக்க பல வழிமுறைகள், தீர்வுகள் சொல்லப்படுகின்றனதான். சரியா என்று கேட்டால் ஆம் என்று பலர் சொல்லுவர் ஆனால் என் மூளை இல்லை என்று தான் சொல்லுகின்றது.

      நம் உடல் முழுவதையும் தன் கீழ் வைத்திருப்பது தனிக்காட்டு ராஜா நம் தலைமைச் செயலகம். “மனம்” என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு, நாம் சொல்லுவது மனம் நம் கீழ் என்று. ஆனால் அந்த மனமே அந்த மூளைதானே!

ஒரு புதிரை விடுவிக்க மூளை இருக்கின்றதா என்று கேட்கும் நமது மூளையே ஒரு புதிர்தான். மூளையின் அமைப்பில் பல முடிச்சுகள் இருக்கின்றனவோ இல்லையோ ஆனால் மூளையைப் பற்றிய அந்த முடிச்சுகளை இன்னும் எந்த அறிவியலாளரும் முழுமையாக அவிழ்க்கவில்லை. அவிழ்க்கவும் இயலவில்லை என்பதுதான் உண்மை.

      மனிதனின் ரகசியங்களைச் சேமித்து வைக்கும் அந்தப் பெட்டகத்தின் ரகசியங்களை இன்னும் அம்பலப்படுத்த முடியவில்லை. ஆழ் மனம், மனம் கடலைப் போன்றது, மனதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை என்று சொல்லுவதை விட அந்த மனதை உள்ளடக்கிய மூளையைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்லுவதுதான் சரி எனப்படுகின்றது.

      மனம் என்பதும் மூளையின் ஒரு பகுதியாக இருப்பதால்தான் தற்கொலைக்குக் காரணம் நம் மனது என்று நாம் சொல்லுவதைத்தான் அறிவியலாளர்கள், மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் என்கின்றனர். மனம் சம்பந்தப்பட்ட நோய்கள் என்று நாம் சொல்லுவது, அந்த மனமும் மூளைதானே என்று பார்க்கும் போது நம் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள்தான் என்பதுதான் சரி. இந்த மாற்றம் எப்போது, எப்படி நிகழும் என்பது யாருக்கும் புரியாத புதிர்!

      பொதுவாக, மன அழுத்தம் என்றவுடன், மனதை அலட்டிக் கொள்ளக் கூடாது.  ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும். நண்பர்கள் வேண்டும். விளையாட்டு நல்லது. பிடித்த வேலை செய்தல். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, தியானம், மனவளப்பயிற்சி என்று ஒரு பெரிய பட்டியலே இடப்படும். ஆனால், இந்தப் பட்டியலை நிறைவேற்றவும் அந்த மூளை ஒத்துழைக்க வேண்டுமே! சொல்வது எளிது! அந்த மூளைதானே இவை நடக்கவும் காரணம்! இப்படி இருப்பவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றார்களே!

      சிறிய வயதிலிருந்தே நல்ல சூழ்நிலை, நல்ல வளர்ப்பு முறை, வாழ்க்கையைப் பற்றி, உலகைப் பற்றிய புரிதல் என்று குழந்தைகள் வளர்க்கப்பட்டால் அவர்கள் மனச் சிதைவுக்கு உள்ளாகமாட்டார்கள் என்று சொல்லுவதும் ஓரளவுதான் சரி. இதுவும் ஆய்விற்குரியதே.

அதே போன்று, புறச் சூழல்கள்தான் ஒருவரது மன நிலை பிறழக் காரணம் என்று சொல்லுவதும் முழுவதும் சரியல்ல.  எல்லாமே நம் தலைமைச் செயலகம் எப்படிப் பணி புரிகின்றதோ அதன் அடிப்படையில்தான்.

நான் சந்தித்த பல மன நோயாளிகளிடம் இருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பதாகவும் ஆனால், பல சமயங்களில் அது முடிவதில்லை, ஏதோ தடுக்கின்றது என்று.

      தன் உடலில் தானே மயக்க மருந்தைச் செலுத்தி தற்கொலை செய்யத் துணிச்சல் இருந்திருக்கிறது என்றால், அந்தப் பெண்ணிற்குத் தனது இயலாமையை வென்று, வாழ்க்கையை எதிர்கொண்டு வாழும் துணிச்சல் ஏன் இல்லாமல் போனது என்பது வேதனை. ஆச்சரியம். இது எல்லா வகைத் தற்கொலையாளர்களுக்கும் பொருந்தும்.

இங்குதான் நான் அறிந்ததிலிருந்து சொல்ல வருவது, சில சமயங்களில் மூளையின் ரசாயன மாற்றம், அதன் ஒரு பகுதியாகிய மனம் என்று சொல்லப்படும் பகுதியைப் புறம் தள்ளி விஞ்சி விடுகின்றது, மருந்துகள் உட்கொண்டாலும் சரி, கவுன்சலிங்க் பெற்றாலும் சரி, இல்லை வேறு சில மனப் பயிற்சிகள், நேர்மறை எண்ணங்கள் பயிற்சி செய்தாலும் சரி.

      இந்த உலகில் பிறந்த எல்லோருமே மன அழுத்தத்திற்கு ஆளாபவர்கள்தான். மனநோயாளிகள்தான். ஆனால், மூளையில் ஏற்படும் ரசாயன நிகழ்வுகளின் தாக்கத்திலும், தாக்கத்தின் விகுதியிலும் தான் நார்மல் மனிதர்கள், மன நோயாளிகள் என்ற பிரிவு உண்டாகின்றது. நார்மலாக இன்று இருப்பவர்கள் நாளை மனஅழுத்தத்திற்கு உண்டாகலாம்.

மன அழுத்தம் ஏற்படலாம்.  அது  இயல்பானதே.  ஆனால் அது நம் நடைமுறை, யதார்த்த வாழ்க்கையைப் பாதிக்கும் நிலைக்கு உந்தப்பட்டால், ஏதேனும் உங்களுக்கு ஏதுவான வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் தலைமைச் செயலகத்தை வெற்றி கொள்ள முனையுங்கள். முடியவில்லை என்றால், உடன் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகிவிடுங்கள்! அது ஒன்றும் தாழ்வில்லை.

நார்மலாக இருப்பவர்களுக்கும்,  மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு ஏதேனும் ஒரு வகை சிகிச்சை எடுத்துக் கொண்டு நார்மல் வாழ்க்கை நடத்துபவர்களுக்கும், அவர்களது மனம் எனும், தலைமைச் செயலகத்தின் துறை நேர்மறையாக ஆட்சி புரிந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளே! தலைமைச் செயலகத்தின் மனம் எனும் துறை வீழ்ந்துவிட்டால், தலைமைச் செயலகம் கோரத்தாண்டவம் ஆடிவிடும்.  சீனு சொல்லியிருப்பது போல், இன்றைய நிலைமை, தலமைச் செயலகத்தின் நலம் கவனிக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உறுதியாக, அறுதியிட்டுச் சொல்கின்றது.

http://thaenmaduratamil.blogspot.com/2015/07/1.html தலைமைச் செயலகத்தைப் பற்றி தோழி க்ரேஸ் அவர்களின் பதிவு. தமிழில் எளிதில் புரிந்து கொள்ளும் அளவில் அருமையான தொடர் பதிவுகள்.

(பின் குறிப்பு: இங்கு மன அழுத்தம் என்பது பற்றி மட்டுமே அதுவும் பொதுவாகத்தான் சொல்லியிருக்கின்றேன். இதில் பல வகைகள் உண்டு. மாபெரும்கடல். அதில் நான் நிபுணரும் அல்ல என்பதால் அதைப்பற்றி எல்லாம் பேசவில்லை.)

(ஸ்பா....ரொம்ப சீரியசான பதிவோ...சரி மதுரைத் தமிழா கொஞ்சம் கலகலக்க வைச்சு எங்களை ரிலாக்ஸ் ப்ளீஸ்...)

படங்கள்: நன்றி இணையம்.
தலைப்பிற்கு சுஜாதா மன்னிப்பாராக!  சுஜாதா அவர்களுக்கு நன்றிகள் பல மானசீக அஞ்சலில் விண்ணிற்கு அனுப்பிவிட்டேன்.

-கீதா