செவ்வாய், 13 அக்டோபர், 2015

பசுமை மாறா நினைவுகளைத் தந்த புதுக்கோட்டை பதிவர் விழா - 2015



ஹெலன் கெல்லரைப் பற்றி நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கின்றோம்.  கண் தெரியாத, காது கேட்காத, பேச முடியாதிருந்த அவரது சாதனை போற்றுதற்குரியது. அவரும் ஒரு நல்ல புதினம் எழுதி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.  அது போல் இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரது வாழ்வும் வித்தியாசமான நிகழ்வுகளைக் கொண்டது.  எல்லோரும் முயன்றால் அவர்களால் மட்டும் எழுத முடிகின்ற ஒரு கதை அல்லது புதினத்தை எழுத முடியும் என்பது உலகறிந்த உண்மை. முன்பெல்லாம் எழுதுவது என்பது எல்லோருக்கும் இயலாத ஒன்று.  மிகக் குறைவான மாத, வார நாளிதழ்கள் இருந்த காலம்.  அதிலெல்லாம் அச்சடித்து வர அதிர்ஷ்டம் வேண்டும். ஆனால், இன்றோ எழுத மனமும், நேரமும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எழுதக் கூடிய சூழல். நாம் எழுதுவதை பதிவிட நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பதிவகம்! நாம் விரும்பும் போதெல்லாம் நம் விரல் தொடும் தூரத்தில் நாம் விரும்பும் பதிவுகள்.  அவற்றை வாகிக்கின்றோம்.  நம் பதிவுகளும் வாசிக்கப்படுகிறது. உலகெங்கும் உள்ள ஒத்துப் போகும் கருத்துக்களை உடைய நாம் எல்லோரும் நம் பதிவுகளை வெளியிட்டும், சக பதிவர்களின் பதிவுகளை வாசித்தும், அவற்றிற்குப் பின்னூட்டம் இட்டும் தமிழ் தரும் இன்பத்தை ஒரு சொட்டு விடாமல் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

பதிவுகள் எழுதாதவர்களும், வாசிக்காதவர்களும், “பதிவர்கள் பாராட்டு பெறுவதற்காக மட்டுமே ஒருவரை ஒருவர் பாராட்டிப் பாராட்டுப் பெறுபவர்கள்” என்றெல்லாம் சொல்லலாம்.  அதை எல்லாம் செவிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. தமிழை நேசிப்பவர்கள் நாம்.  மனிதம் போற்றுபவர்கள் நாம்.  எல்லோரும் துன்பமின்றி வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் நாம். முன் தலைமுறையினரிடம் நன்றிக் கடன் பட்டதை மறவாமலும், வரும் தலைமுறைக்கு, நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை மறக்காமலும் இருந்து நம் படைப்புகளின் வாயிலாக எப்போதும் அவற்றை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பவர்கள். ஆண்டு தோறும் விழாவெடுத்து ஆலமரமாய் வளர்ந்து வரும் பதிவர் மரத்தின் விழுதுகளையும், வேர்களையும் நம் தமிழ் மண்ணில் ஆழ்ந்திறங்கச் செய்து கொண்டிருப்பவர்கள்.
 
      அப்படி நாம் புதுக்கோட்டையில் நடத்திய நான்காம் வலைப்பதிவர் விழா மிகவும் சீரும், சிறப்புடனும், (ஆமாங்க ஒரு கல்யாண வீடு போன்று, சீர்கள் என்றால் இங்கு விருதுகள் தான்!!) நம் புதுக்கோட்டை நண்பர்கள் அனைவரின் முகம் மலர்ந்த, தமிழருக்கே உரிய விருந்தோம்பல் பண்பாட்டு உபசரிப்புடனும் இனிதே நடைபெற்று முடிவடைந்தது. அவர்கள் எல்லோரையும் மிகச் சிறந்த தலைமைப் பண்புடன், அன்புடன் வழிநடத்தி இந்த விழாவை வெற்றிகரமாக நடத்திச் சென்ற திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு பதிவர்கள் அனைவரது நன்றிகள்!  பாராட்டுகள்!  வாழ்த்துகள்!
      நம் புதுக்கோட்டை நண்பர்களின் உழைப்பு, ஒற்றுமை, ஒருங்கிணைந்து செயல்பட்ட விதம் அனைத்தும் போற்றுதற்குரியது என்றால் அது மிகையல்ல. அனைவருமே நாம் என்ன கேட்டாலும் சரி, கேட்ட உதவிகளுக்கும் சரி, முக மலர்ச்சியுடன், புன்சிரிப்புடன் அயராது பதில் அளித்து உதவியமை நல்லதொரு எடுத்துக்காட்டு.  மட்டுமல்ல நம்மிடமும் அவ்வப்போது வந்து எல்லாம் சரியாக இருக்கின்றதா, ஏதேனும் குறைகள் இருந்தால் சொல்லவும், சாப்பாடு நன்றாக இருக்கின்றதா என்று கேட்டுக் கேட்டுச் செய்த விருந்தோம்பல் பாராட்டிற்குரியது.

எத்தனை முறை அலைபேசியில் அழைத்தாலும், நடுநிசியில் கூட அழைத்தாலும் குறிப்பாக நாங்கள் தொடர்பு கொண்டவர் சகோதரி கீதா அவர்கள் சிரித்துக் கொண்டே வணக்கம் என்று ஆரம்பித்து, மகிழ்வுடன், அயராது பதில் அளித்தது மட்டுமல்ல, மீண்டும் எங்களை அழைத்து எங்களை விசாரித்து தகவல்கள் கொடுத்து என்று பல முறை எங்களை நன்றிக்கடனுக்குள்ளாக்கி விட்டார்!!! உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் விழாக்குழுவினர் நண்பர்கள் கஸ்தூரி, பாண்டியன், சகோதரிகள் மைதிலி, மாலதி, ஜெயா உள்ளிட்ட அனைவருமே அப்படித்தான் இருந்தார்கள்! விழாக் குழுவினர் அனைவருக்கும் எங்கள் அனைவரது நன்றிகள்! (கொசுறு: சகோதரி மைதிலி குட்டிப் பெண்ணாக வலம் வந்து கொண்டிருந்தார் என்றால் கஸ்தூரி நகைச்சுவையுடன் பேசி, பதில் அளித்துக் கொண்டு, இளைஞராக, இளைஞர்களுடனும் ஓடியாடிக் கொண்டிருந்தார்!!! இவர்கள் இருவரையும் விட 16 அடி பாய்ந்தார் அவர்களது செல்ல மகள் நிறை!!!! அவர் வரைந்து, காட்டிய படங்கள், அவர் எதிர்காலத்தில் நல்ல ஒரு ஓவியராக வருவார் என்று அடையாளப்படுத்தின! எங்களுக்குக் தோழியாகிவிட்டார்!!)

ஓவிய வடிவாக்கப்பட்டப் பதிவர்களின் கவிதை வரிகள் மிக அழகாக அந்த அரங்கின் இரு புறமும் அழகுற மிளிர்ந்தது. இது பதிவர் விழாவிற்கு ஒரு பொன் தூவல், தோரணம் போல் இப்போதும் மனக்கண்ணில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. பதிவர்களை நாம் அறிவோம்.  ஆனால், அழகிற்கு அழகு சேர்த்த ஓவியர்களை மேடைக்கு அழைத்துப் பாராட்டியது இவ்விழாவை வித்தியாசப்படுத்தி மேலும் சிறப்பித்தது. இடையிடையே தமிழ்பாடல்களை மிகவும் இனிமையான குரலில் பாடி செவிக்கு விருந்து படைத்த குயில்களுக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர், முனைவர் திருமிகு சோ. சுப்பையா அவர்கள் பேசுகையில், அழகியலான “சின்னவள் சிரிக்கிறாள்” புதுக்கவிதையை வாசித்து, வலைப்பதிவர்கள் எவ்வளவு அருமையான கவிதைகளைப் படைக்கின்றார்கள் என்று அதிசயப்பட்டார். அப்போது திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்கள் அந்தக் கவிதைக்குத்தான் முதல் பரிசு கிடைத்தது என்று சொன்ன போது, நடுவர்கள் தேந்தெடுத்தக் கவிதைக்கு மீண்டும் ஒரு பரிசு கிடைத்தது போல் ஆனது.  திருமிகு மீரா செல்வகுமார் அவர்களுக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள்!

மூத்தப் பதிவர்களை மேடைக்கு அழைத்துக் கௌரவப்படுத்தியது மனதிற்கு இதமாக இருந்தது.

விக்கிப் பீடியா திட்ட இயக்குநரும், வலைப்பதிவருமான திருமிகு ரவிசங்கர் விக்கிப்பீடியாவிற்கு அனுப்பப்பட வேண்டிய கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
திருமிகு எஸ் ரா அவர்கள் பேசுகையில் நமது நண்பர் பதியர் முனைவர் திருமிகு ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் வரலாற்றுச் சேவைகளைப் பாராட்டிப் பேசிய போது மிகவும் பெருமையாக இருந்தது.

இடையிடையே பதிவர்களின் சுய அறிமுகம், பாயாசத்தில் இடையிடையே சுவைக்கக் கிடைக்கும் முந்திருப்பருப்பு, உலர் திராட்சை போல் சுவையாக இருந்தது.

தமிழ் இணையக் கல்விக் கழகம் பரிசுத் தொகைக்கான நிதி உதவி அளித்தது நம் பதிவர் விழாவிற்குக் கிடைத்த அங்கீகாரம் என்றே கருதலாம். புதுக்கோட்டைக் கணினித் தமிழ் சங்கத்தின் உதவி நம் வலைச் சித்தர் டிடியின் திறமையும் சேர்ந்த போது விழா அண்ணாந்து பார்க்கும் உயரத்தையே எட்டிவிட்டது.

ஆச்சி மனோரம்மாவிற்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, பதிவுலகம், கலை உலகில் கொடிகட்டி வாழ்ந்த பத்மஸ்ரீ மனோரமா அவர்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தியது.

வர இயலாத பதிவர்கள் காண்பதற்காக நேரடி ஒளிபரப்பை உலகெங்கிலும் உள்ள 20 நாடுகளில் உள்ள பதிவர்கள் கண்டு களிக்க முடிந்தது.  விழா நடந்து கொண்டிருந்த போது கில்லர்ஜி அழைத்து எங்களிடம் பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். தம்பி ரூபனும் அழைத்துப் பேசினார். விசு அவர்களும் சொன்னார்கள் முழுமையாகக் காண முடிந்தது என்று.

காலை இடைவேளையில் மிக மிக அருமையான சுவையுடன் கூடிய  காய்கறி சாறு/ரசம்??(சூப்) வழங்கப்பட்டது. மதிய உணவும் சுவையாக இருந்தது.

புத்தக வெளியீட்டில் நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் புத்தகம் “வித்தகர்கள்”, மற்றும் மலேசியா தவரூபன் எழுதிய “ஜன்னல் ஓரத்து நிலா” வும் வெளியிடப்பட்டன.

பதிவர்கள் கையேடு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.  மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.  அதில் சில சிறிய குறைகள் இருக்கலாம். ஆனாலும், அதைப் பெரிது படுத்தாமல் இந்த முதல் முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும்.

புத்தக விற்பனைக்குப் பல புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டது.

மூத்த பதிவர்களான, புலவர் இராமானுசம், பழனி கந்தசாமி ஐயா, திருமிகு ஜிஎம்பி,(வழக்கம் போல் குடும்பத்துடன் வருகை தந்திருந்தார்), சீனு ஐயா, திருமிகு இராய செல்லப்பா, திருமிகு ரமணி அவர்கள், முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, திருமிகு கரந்தை ஜெயக்குமார், திருமிகு கர்நல் கணேசன் அவர்கள், தமிழ் இளங்கோ ஐயா, திருமிகு முரளிதரன், திருமிகு கவியாழி கண்ணதாசன், வாத்தியார் பாலகணேஷ், திருமிகு ஜோதிஜி, சேட்டைக்காரன் திருமிகு வேணுகோபாலன்,  கூட்டாஞ்சோறு செந்தில், மணவை திருமிகு ஜேம்ஸ், ஆவி, சீனு, அரசன், குடந்தையார், திருமிகு முனைவர் ஹரணி, தருமி அவர்கள், விதைக்கலாம் குழுவினர், சோலச்சி, வைகறை, அன்பேசிவம் சக்தி, திருப்பதி மகேஷ், திருமிகு பகவான் ஜி, திருமிகு தமிழ்வாசி, திருமிகு ஏகாந்தன், அன்பே ஆண்டவன் எஸ் ஆனந்தக் கிருஷ்ணன், வெல்லூர் திருமிகு இராமன், திருமிகு ஜக்கி சேகர், திருமிகு மதுமதி, ஆரூர்மூனா, சகோதரிகள் உமையாள் காயத்திரி, தென்றல் சசிகலா, பாட்டி சொல்லும் கதைகள்” திருமதி ருக்மணி சேஷசாயி அம்மாள், கலைஅரசி போன்றவர்களுடன் மிகக் குறைந்த நேரத்தில் பேசினாலும், பேசியவை எல்லாம் மனத்திரையில் கல்வெட்டுகளாய் காலமெல்லாம் வாழும்.  சந்தேகமே இல்லை.

ஆனாலும், வரவியலாத பல பதிவர் நண்பர்களில் சுப்புத்தாத்தா, எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், கார்த்திக் சரவணன், தலைநகர் வெங்கட்ஜி, மலர்வண்ணன், கவிப்ரியன், சகோதரர் விஜு ஜோசஃப், நண்பர் தளிர் சுரேஷ், திவான், மேலையூர் ராஜா, கிங்க் ராஜ்,  திருமிகு சென்னைப்பித்தன், நண்பர் வலிப்போக்கன், சகோதரிகள் தேனம்மை, கீதா சாம்பசிவம், மஹேஸ்வரி பாலசந்திரன், அனு ப்ரேம், ராஜேஸ்வரி, போன்ற, கண்டு பேசக் காத்திருந்த பதிவர்கள் பலரும் வராதது கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்தது.

நண்பர்கள் கில்லர்ஜி, ரூபன், தஞ்சையம்பதி திருமிகு துரைசெல்வராஜு, பரிவை சே குமார், தனிமரம் நேசன், கோயில் பிள்ளை, யாழ்பாவாணன், சொக்கலிங்கம், கவிஞர் பாரதிதாசன், யாதவன் நம்பி, நம்பள்கி, வருண் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை, மேற்குக் கடற்கரை நண்பர்கள் மதுரைத் தமிழன், விசு, (இருவரையும் சந்தித்திருந்தாலும், மீண்டும் மீண்டும் கண்டு பேச ஆவல்தான்) நண்பர் கோ...கோ அல்லவா இவரை நாம்தான் சென்று சந்திக்க வேண்டும்...!!! சகோதரிகள், க்ரேஸ், அம்பாள் அடியாள், இனியா, இளமதி, ஏஞ்சலின், துளசிகோபால், அருணாசெல்வம், சித்ரா சுந்தர், கோமதி அரசு போன்றவர்களை எப்போது பார்ப்போம் என்ற எண்ணமும் பெரிதாகிறது செய்கின்றது.  காத்திருப்போம் நம்பிக்கையோடு.  காலம் கனியும். 

நம் நண்பர்கள் பலரும் விழா பற்றி, நிகழ்வுகளைப் பற்றிப் புகைப்படங்களுடன் எழுதுவார்கள் என்பதால் நாங்கள் இப்படி எழுதி முடித்துக் கொள்ளுகின்றோம்.

குறை இருந்தால் சொல்லுங்கள், சொல்லுங்கள் என்றுக் கேட்டுக் கொண்டே இருந்த விழாக் குழுவினருக்கு, நண்பர் அன்பே சிவம்/சக்தி அவர்கள், பதிவர் அறிமுகத்திற்காக மேடை ஏறிய போது சொல்லியதையே இங்கு வழி மொழிகின்றோம். “ஏதேனும் ஒருகுறை கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் சொல்லுகின்றேன் என்று சொல்லி ஒரு குறையும் சொல்ல முடியவில்லை என்பதுதான் குறையே”.

(விடுபட்ட பின் குறிப்பு:  மதுரைத் தமிழன் மாறுவேடத்தில் வந்திருந்தாரா என்பது யாருக்கேனும் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்...எங்களுக்குத் தெரிந்தவரை வரவில்லை...) 


84 கருத்துகள்:

  1. விரிவான பதிவிற்கு நன்றி அண்ணா. நானும் நேரலையில் பார்த்தேன்..உணவு கிடைக்கவில்லை ஹாஹஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ மிக்க நன்றி க்ரேஸ் சகோ/தோழி, உணவை வெர்ச்சுவல் ஆக்கிவிடலாமா??!!!!!உங்களை எல்லாம் இனி எப்போது சந்திக்க முடியும் என்று தெரியவில்லை....ம்ம்ம்

      நீக்கு
    2. ஆம் நண்பர்களே! நமது கிரேஸ் உட்பட, வெளிநாட்டுப் பதிவர்கள் வரும்போது அவரவர் ஊர் அருகில் ஒரு மினி பதிவர் சந்திப்புக்கு நாள் ஒதுக்கிக்கொண்டுதான் வரவேண்டும் என்று அன்புக்கட்டளை இடுகிறேன். வேறுவழியில்லை. (நம் வலை உ றவின் வலிமை அ்ப்படி!)

      நீக்கு
    3. ஆமாம்! அண்ணா/ஐயா அப்படியும் செய்யலாமே!

      நீக்கு
  2. வணக்கம்
    அண்ணா

    நிகழ்வை சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்... தங்களைப்போலதான் எனக்கும் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் கவலை வேண்டாம் நி்சயம் அடுத்த வருடமாவது வரலாம் பதிவர் சந்திப்புக்கு... அதுவரை காத்திருப்போம் அண்ணா. த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. பதிவர் விழா சிறப்பாக அமைந்தமையிட்டு சந்தோஸம்! விழா குழுவுக்கு என் வாழ்த்துக்களும்.அருமையாக கொஞ்சம் சுறுக்கமாக மேடையில் நேரதை குறைத்தால் பரிசு என்பது போல நீங்களும் பதிவை சுருக்கிவிட்டீர்கள்!ஹீ பாண்டியன் தளத்தில் ஒருசில காட்சி பார்க்கும் வசதிகிடைத்தது ஆனாலும் இணையம் சதி செய்துவிட்டது வேலைத்தளத்தில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! தனிமரம். விழாவைப் பற்றி பலரும் எழுதுவார்களே என்றுதான்...மட்டுமல்ல நாங்கள் புகைப்படம் எடுக்க முடியாமல் போனது. இந்தப் புகைப்படங்கள் முத்துநிலவன் அண்ணா அவர்கள் சொல்ல அவரது தளத்திலிருந்தும், ப்ளாகர் மீட் தளத்திலிருந்தும் எடுக்கப்பட்டவை....

      மிக்க நன்றி தனிமரம்...

      நீக்கு
  4. என்றாவது ஒரு நாள் நிச்சயம் பாலக்காட்டில் சந்திப்போம் இந்தியா வரும் போது !

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அய்யா,

    புதுகையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு விழாவை மீண்டும் மனக்கண்ணால் பார்க்கச் செய்த கண்ணாளருக்கு நன்றிகள். தங்களையும் சகோதரி கீதா அவர்களையும் சந்தித்தது உரையாடிக் கொண்டிருந்தது ஒரு பசுமையான நிகழ்வு. பசுமை நிறைந்த நினைவுகளை அருமையாக படம் பிடித்துக் காட்டினீர்கள். இணையம் இணைத்து வைத்த இந்த சொந்தம் பிரித்தாலும் பிரியாதது... தொய்வின்றித் தொடரட்டும்...தொடர்வோம்! மகிழ்ச்சி.

    நன்றி.
    த.ம. 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்! கண்ணாளர்! நல்லா இருக்கே? நன்றி அய்யா

      நீக்கு
    2. மிக்க நன்றி மணவையாரே! அட ஆமாம் கண்ணாளர்!! அருமை..தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி நண்பரே!

      நீக்கு
  6. சந்தோஷ அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அவ்வப்போது நேரலையில் நானும் கொஞ்ச நேரம் இணையம் அனுமதித்த அளவில் பார்த்தேன். விழாவை சிறப்பாக நடத்திய புதுகை நண்பர்களுக்கு வாழ்த்துகள். செவிக்குக் கிடைப்பதில் இடைவெளி கிடைத்த பொழுதில் அங்கு கிடைத்த வயிற்றுக்கு உணவின் சிறப்பைப் பற்றி பழனி கந்தசாமி ஸார் பதிவில்தான் வாசிக்க முடியும் என்று காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ரீராம்! ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வலைபூவில் இங்கு வருபவர்களை எல்லாம் நேரில் கண்டது....ஆனால் என்ன அதிகம் பேச முடியவில்லை. பதிவர்களுடன்..ஹஹ்ஹ சாப்ப்படு பற்றி..நாங்கள் அதில் தேர்ந்தவர்கள் அல்லர்தான்....மிக்க நன்றி...

      நீக்கு
  7. அற்புதமாக விழா குறித்து
    அனைவர் மனதிலும் உள்ள உணர்வினை
    மிகச் சரியாக பதிவு செய்துள்ளீர்கள்
    தங்களை நேரடியாகச் சந்திக்க கிடைத்த
    வாய்ப்பு ஒரு பாக்கியமே
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார்! தங்களைச் சந்தித்ததிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம் சார்! பாக்கியமே!

      நீக்கு
  8. தங்களையும் சகோதரி கீதா அவர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நண்பரே
    நீண்ட நேரம் தங்களுடன் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தேன், ஆனால் யாருக்குமே நேரம் கிடைக்காமல் போய்விட்டது
    வாய்ப்பு கிடைக்கும் பொழுது மீண்டும் சந்திப்போம் நண்பரே
    நன்றி
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையார் நண்பரே! எங்களுக்கும் தங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி!

      நீக்கு
  9. உங்கள் இருவரையும் புதுக்கோட்டையில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மேடையில் நீங்கள் (துளசிதரன்) சுருக்கமாக சொன்ன வரிகளை இங்கு விரிவுபடுத்தி எழுதியமைக்கு நன்றி. எல்லாம் இன்ப மயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறியது போல்முன் ஜென்மத்து பந்தம் போல்.....தங்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி இளங்கோ ஐயா...

      நீக்கு
  10. பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி
      சந்தித்ததில் மகிழ்ச்சிதான் ஆனால் யாருடனும் அளவளாவ முடியாமல் போனது நேரம் இல்லாததால்....

      நீக்கு
  11. சிறப்பான பதிவுமா உங்களுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை...மேலும் பலரிடம் பேசவே முடியவில்லை....இருந்தாலும் குறையின்றி முடித்துள்ளோம் என்ற மகிழ்வு உள்ளது.உங்களது பதிவால்..நன்றிமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் விழாவில் அத்தனை வேலைப்பளுவுடன் இருந்த போது எப்படி பேச முடியும்...பரவாயில்லை மீண்டும் சந்திக்கும் தருணம் வரும் என்று காத்திருப்போம் எல்லோரும்...மிக்க நன்றி கீதா சகோ!

      நீக்கு
  12. வராத லிஸ்டில் வந்த தாத்தா

    சுப்பு தாத்தா.



    நேர் ஒளிபரப்பை பார்த்துக்கொண்டே

    இருந்தாராக்கும்.



    உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.

    வர இயலவில்லை.

    தஞ்சை நண்பர்களைச் சந்திக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

    குறிப்பாக, கரந்தை நண்பர் ஜெயகுமார்,



    திருச்சி வலை நண்பர்கள் திருவரங்கம் நண்பர்கள்



    இனி சந்திக்கும் நேரம்

    என்றோ?



    நீங்கள் சென்னைக்கு வந்தால் எங்கள் வீட்டுக்கு வரவும்.



    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திப்போம் தாத்தா. நிச்சயமாக வீடு வருவோம் தங்களைக் காண....மிக்க நன்றி தாத்தா...

      நீக்கு
  13. தங்களுக்குத் தெரியாததில்லை, என்னுடைய இப்போதைய நிலை. வர இயலவில்லை. முடியும் தருவாயில் எஸ்.ரா. மற்றும் நீச்சல்காரன் ஆகியோர் பேசியதை இணையம் வழியே காணமுடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! சரவணன்! இருந்தாலும் நண்பர்கள் பட்டியலில் தாங்களும் அடக்கம் இல்லையா...அதான்....நாங்கள் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகததால் சீக்கிரம் புறப்பட வேண்டியதாகிவிட்டது அதனால் நீச்சல்காரன் விடுபட்டுவிட்டது இனிதான் காணொளி காண வேண்டும்...நன்றி சரவணன் கருத்திற்கு...

      நீக்கு
  14. அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  15. நண்பர்கள் துளசி, கீதா இருவருக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
    எங்கோ இருந்து கொண்டு, விழாக்குழுவுக்கு அவ்வப்போது பேசி உற்சாகமூட்டியது மட்டுமல்ல தேவையான சில உதவிகளையும் செய்ததோடு, விழாவுக்கும் வந்துசிறப்பித்து அருமையான பதிவுகளையும் இட்டு ... ஆமா.. ஒரு படம்கூடவா கிடைக்கல.. இல்ல தஇ அய்யா மாதிரி கேமரா ஏதும் சிக்கல் பண்ணிருச்சா? எனினும் அழகான உணர்வுப்பூர்வமான பதிவுக்கு நன்றி நண்பர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா/அண்ணா. என்ன ஐயா தாங்கள் நன்றி சொல்லுகின்றீர்கள் நாங்கள் அல்லவா அதற்குக் கடமைப் பட்டுள்ளோம். படம் போட்டுவிட்டோமே தாங்கள் கேட்டுக் கொண்டபடி தங்கள் பதிவிலிருந்தும் ப்ளாகர்மீட் தளத்திலிருந்தும் எடுத்துப் போட்டுவிட்டோமே ....
      மிக்க மிக்க நன்றி ஐயா/அண்ணா...

      நீக்கு
  16. நேரில் தேடிவந்து உரையாடிய தங்கள் அன்பிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்களைச் சந்தித்ததில். கீதா தங்களைச் சந்தித்துள்ளார். துளசி இதுதான் முதல் தடவை தங்களைச் சந்தித்தது...இனியும் காலம் கனிந்தால் சந்திப்போம்...ஐயா...

      நீக்கு
  17. ஆஹா என்னையும் நினைத்தீர்களா? சகோ,
    நான் தான் வரமுடியல,,,, தங்கள் அன்பிற்கு நன்றி. பார்ப்போம்,,, தங்களைப் பற்றி நண்பர் கோ அவர்கள் தங்கள் பதிவில் குறிப்பிட்டு இருந்தது இப்போ புரிகிறது. நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ! ம்ம்ம் நிச்சயமாக சந்திப்போம்....கோ எங்கள் நல்ல நண்பர்! தங்களையும் அழகாய் சொல்லியிருந்தாரே! மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  18. மிகவும் ஆவலாக இருந்தும் மூன்று நாள் தொடர்ந்து கோயில் பணி குறுக்கிட்டதால் மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை! சனியன்று, சனிக்கிழமை புரட்டாசி சனிக்கிழமை நான்காவது வாரம் உற்சவம், சனிப்பிரதோஷம் என்று நிறைய இருந்தமையால் மாற்று ஏற்பாடு செய்யமுடியவில்லை! ஞாயிறன்றும் தாத்தாவின் சிரார்த்தம் நேரலையில் கூட என்னால் விழா நிகழ்வுகளை காண முடியாத நிலை. மிகவும் வருத்தமாக இருந்தேன். மிகுந்த ஆவல் இருந்தும் சூழல் கட்டிப் போட்டுவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவோம் சுரேஷ். தங்கள் பணி குறித்து. தங்களின் வருத்தத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சென்னை வரும் போது சந்திப்போம். மிக்க நன்றி சுரேஷ்!

      நீக்கு
  19. துளசியை மீண்டும் கீதாவை முதன் முறையாகவும் சந்தித்ததில் மகிழ்ச்சி. சுமார் மூன்று மணி அளவில் கிளம்பி விட்டொம் மதிய நிகழ்ச்சிகளை தனபாலன் பதிவில் கண்டேன் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார்! கீதாவிற்கும் தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! நாங்களும் விழா முடிவதற்குச் சற்று முன்னதாகவே புறப்பட வேண்டிய சூழல்...டிக்கெட் உறுதியாகததால்....

      நீக்கு
  20. தங்கள் இருவரையும் விழாவில் சந்தித்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது. அதிகமாக பேசமுடியவில்லை என்ற ஒரு குறையைத் தவிர!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில்குமார்! தங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி! ஆம் நீங்கள் சொல்லுவது போல் அதிகமாகப் பேச முடியவில்லை....அது எல்லோராலுமே உணரப்பட்டது.

      நீக்கு
  21. திருமிகு. வில்லங்கத்தார் அவர்களுக்கு விழாவை நேரில் காண்பதுபோல் வர்ணித்து அழகாக தொகுத்து தந்து இருக்கின்றீர்கள் வாழ்த்துகள்
    என்னையும் கூட குறிப்பிட்டமைக்கு நன்றி
    தமிழ் மணம் 10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி! அஹஹ அது என்ன வில்லங்கத்தாருக்குக் கூட திருமிகு!!!!

      நீக்கு
  22. என்னது மதுரைத்தமிழனை நீங்கள் பார்த்து பேசி இருக்கிறீர்களா?நீங்கள் சந்தித்து பேசியவர்தான் ஒரிஜனல் மதுரைத்தமிழன் என்பத்ற்கு ஆதாரம் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா, மற்றும் அங்கு வந்திருந்தவர்கள் காலை உணவு முருகன் இட்லி உணவகத்தில் சாப்பிடும் போது உங்கள் உண்மையான பெயர் என்ன என்று கேட்டவுடன் அதற்கு தங்கள் பெயரைச் சொன்னீர்கள். அப்புறம் ஆனால் நான் முகநூலில் தீஜ்துரை என்று போட்டு எழுதுகின்றேன் என்றும் சொல்லியதாக கல்வெட்டில் கூட பொரித்தாகிவிட்டது. அதாவது வரலாற்றில் வந்துவிட்டது!!!!! வரலாறு எல்லாம் இடைச் செருகல் அப்படினு எல்லாம் சொல்லி உடான்ஸ் விடக்கூடாது தமிழா ...

      நீக்கு
  23. நம்து நட்புக்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகுதான் மேடை ஏறுவோம் என்று சபதம் எடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அதனால் உங்கள் அனைவரையுமே காணொளி மூலம் பார்க்க இயலவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹ்....தமிழா நீங்கள் இப்படிச் சொல்லுகின்றீர்கள்....விசு அவர்கள் பார்த்ததாகச் சொன்னாரே! அப்போ மதுரைத் தமிழன் மாறுவேடத்திலும் வரவில்லை என்பது உறுதியாகின்றது!!!! ஹஹஹ்

      நீக்கு

  24. இந்த விழாவில் குறைகளே இல்லை என்று சொல்லமுடியாது எதிலும் நிறைகளும் குறைகளும் நிச்சயம் இருக்கும். ஆனால் நமது நட்புக்கள் நடத்துவதால் குறைகள் நம் கண்ணிற்கு தெரியாது அல்லது தெரிந்தாலும் சொல்லமாட்டோம். காரணம் இப்படி இழுத்துப் போட்டு விழா நடத்துவது மிக எளிது அல்ல அப்படி அதை அவர்கள் செய்யும் போது அவர்களை பாராட்டி உற்சாகமூட்டத்தான் செய்யவேண்டுமே தவிர குறைகள் கூறி அவர்களின் உற்சாகத்தை குறைத்து அவர்களை முடக்கி போட்டுவிடக் கூடாது என்பதுதான் என் கருத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக மதுரைத் தமிழா! எல்லாவற்றிலும் நிறைகளும் உண்டு குறைகளும் உண்டுதான். எதுவுமே 100 % பெர்ஃபெக்டாக இருக்க முடியாதே! நட்புகள் என்றாலும், குறைகள் என்பதற்குப் பதில் அவற்றை அடுத்த சந்திப்பில் தவிர்க்கலாமே என்று கீதா சில குறிப்பிட்டு ஆலோசனைகள் எழுதியிருந்தார். ஆனால் துளசி அதை இப்போது சொல்ல வேண்டாம் பின்னர் சமயம் வரும்போது ஆலோசனைகளைப் பதியலாமே என்று சொன்னதால் எடுக்கப்பட்டது. மட்டுமல்ல பதிவும் நீண்டுவிட்டதே!

      நீங்கள் சொல்லி இருக்கும் கருத்தைத்தான் துளசி சொல்லி அந்த ஆலோ சனைகளை காத்திருக்கும் பட்டியலுக்கு ஒத்தி வைத்தது. உங்கள் கருத்தை வழி மொழிகின்றோம் தமிழா. அழகான கருத்து...

      நீக்கு
  25. எனக்கென்னமோ இந்தக் கட்டுரையின் விவரிப்பைப் பார்க்கும் போது கீதா அவர்கள் எழுதியது போல தெரிகின்றதா? சரியா? ரொம்ப ரொம்ப அழகா வந்துருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் இல்லை ஜோதிஜி! இருவரும் சேர்ந்து. முதல் தொடக்கம் எல்லாம் முகவுரை எல்லாம் துளசி. அதன் பின் கொஞ்சம் கீதா...பின்னர் விழா குறிப்புகள் துளசி...என்று கலந்த கலவை. மிக்க நன்றி ஜோதிஜி அழகாக வந்துருக்கு என்று சொன்னதற்கு.

      நீக்கு
    2. தங்களைச் சந்தித்ததில் மிக்க மிக்கமகிழ்ச்கி ஜோதிஜி!

      நீக்கு
  26. நேற்று தரவிறக்கி வைத்திருந்த பதிவர் விழா விழியத்தின் முதல் பாகத்தை இப்பொழுதுதான் பார்த்து முடித்துவிட்டு வருகிறேன். வந்தவுடன் உங்களுடைய இப்பதிவு.

    விழியத்தை விட நீங்கள் இங்கு பதிந்திருக்கும் புகைப்படங்கள் மிகத் துல்லியமாகவும் அழகான கோணங்களிலும் இருக்கின்றன. அதற்காக முதலில் நன்றி!

    விழாவுக்கு வராத பதிவர்களின் பட்டியலில் நீங்கள் என்னைக் குறிப்பிடவில்லை. ஆனால், அதற்காக நான் வருத்தப்படவும் முடியாது. காரணம், "கண்டு பேசக் காத்திருந்த பதிவர்கள் பலரும் வராதது கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்தது" என்றுதான் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான்தான் வரவில்லை என்பதை முன்கூட்டியே நாளிதழில் அறிவிக்காத குறையாக எல்லோரிடமும் தெரிவித்து விட்டேனே! ஆதலால், நீங்கள் எனக்காகக் காத்திருந்து ஏமாற வாய்ப்பில்லைதான். :-)

    கெலன் கெல்லரை எடுத்துக்காட்டி நீங்கள் அங்கு ஆற்றிய சிற்றுரையைக் கண்டு சில நிமிடங்கள் கூட ஆகவில்லை. அதையே தொடக்கவுரையாக வைத்து நீங்கள் இந்தப் பதிவை இன்னும் வலுவூட்டப்பட்ட குறிப்புகளுடன் (points) எழுதியிருந்தது மிகவும் ஊக்கமூட்டுவதாயிருந்தது. விழியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது நீங்கள் பேசியதை அடுத்து கீதா அவர்களும் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஏமாற்றம்! பொது விழாக்களிலும் சரி, இந்தப் பதிவின் தற்படத்திலும் (profile picture) சரி, எங்குமே கீதா அவர்களின் முகமே காட்டப்படாமல் மறைக்கப்படுவதைப் பார்த்தால், துளசி, கீதா ஆகிய இரு பெயர்களிலும் எழுதுபவர் நீங்கள் ஒருவரேதானோ எனும் ஐயம் எழுகிறது. ஒருவேளை, ஆண்டாள் எனும் புனைபெயரில் நம்மாழ்வர் எழுதியது போல துளசியாகிய நீங்களும் அவ்வப்பொழுது கீதா எனும் புனைபெயரில் பெண்கள் சார்பாக எழுதுகிறீர்களோ? அட, மடையா! அன்று உன்னிடம் பேசியில் தொடர்பு கொண்டபொழுது கீதாவின் பெண் குரலை நீ கவனிக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஒருவேளை, உங்களுக்கு அளவக்கலை (mimicry) தெரிந்திருந்தால்...?

    தீபாவளி வேறு நெருங்குகிறது. சும்மா கொளுத்திப் போடுவோமே என ஒரு முயற்சி! வேறொன்றுமில்லை. ;-)

    நல்ல பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ இபுஞா செம கலக்கல் பின்னூட்டம்!!!!!! கருத்து!! ரொம்ப ரொம்ப ரொம்பவே ரசித்தோம்....

      இந்தத் தீபாவளியின் மிக மிக அருமையான 10000 வாலா!!!! இதுதான் சர வெடி!!! கீதாவின் குரலைக் கேட்ட பிறகும் இந்த சந்தேகமா...ஹஹஹஹ் அட! துளசிக்கு அளவக் கலை தெரியும் என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது?!!!!!

      ஆண்டா எனும் புனை பெயரில் நம்மாழ்வார் ??!!! ஆச்சரியமாக இருக்கின்றதே! புதிய தகவல்! நம்மாழ்வாரின் அன்னை பிறந்த தலம் தானே கீதா வளர்ந்த ஊர்!!!

      மிக்க நன்றி இபுஞா அவர்களே!

      நீக்கு
    2. மிக்க மகிழ்ச்சி! இது தொடர்பாகச் சற்று முன் என்னிடம் பேசிச் சிரித்த கீதா அவர்கள் விழா நடந்த விதம் பற்றியும் விழா தொடர்பான மற்றும் பல தகவல்களையும் மிகுந்த ஆர்வத்துடனும் அன்புடனும் பகிர்ந்து கொண்டார். அவருக்கு என் நட்பார்ந்த நன்றிகள் பற்பல!!

      //ஆண்டா எனும் புனை பெயரில் நம்மாழ்வார் ??!!! ஆச்சரியமாக இருக்கின்றதே! புதிய தகவல்!// - அதாவது, ஆண்டாளின் பிறப்பு, மறைவு ஆகியவை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டிருப்பதால், உண்மையில் அப்படி ஒருவர் இல்லை என்றும் அவர் பாடியதாகக் கருதப்படும் 'திருப்பாவை' கூட, நம்மாழ்வார் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக் கண்ணன் மீது கொண்ட காதலால் பாடியவை என்றும் ஒரு கருத்து உண்டு. அதைத்தான் குறிப்பிட்டேன்.

      நீக்கு
  27. நிகழ்ச்சி நேரலையில் பார்த்தேன் .ரொம்ப அருமையாக இருந்தது .இப்படிப்பட்ட சந்தோஷ தருணங்களில் கூட உடனே வர பங்குபெற இயலாத நிலை எங்கள் வெளிநாட்டு வாழ்க்கை . .
    ஆமாம் கீதா and thulasi annaa கண்டிப்பாக சந்திப்போம் .வரும்போது சொல்கிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்ப்பாகச் சந்திப்போம் சகோ/தோழி! மிக்க நன்றி ஏஞ்சலின் சகோ தங்களின் கருத்திற்கும் ஆர்வத்திற்கும்...

      நீக்கு
  28. பதில்கள்
    1. மிக்க ந்னறி சென்னைப்பித்தன் சார்! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  29. போட்டோ வந்ததால் என் கருத்து காணாமல் போயிடுச்சா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹஹ் அப்படியா??!!!!! இப்ப வந்துருச்சே!!!! மிக்க நன்றி பகவான் ஜி!!! தங்கலைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!

      நீக்கு
  30. புதுக்கோட்டை நிகழ்வின் அனைத்து அம்சங்களையும் நீங்களே எழுதிவிட்டபடியால், நான், என்னுடைய பதிவில் எழுதுவதற்கு விஷயமே இல்லாமல் போய்விட்டது .....! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயையோ என்ன சார்! நாங்கள் முழுவதும் ஒன்றும் கவர் செய்யவில்லைசார்..அதுவும் உங்கள் எழுத்தைப் போல் ஆகுமா சார்!

      நீக்கு
  31. புதுக்கோட்டை சந்திப்பினை அழகாக அருமையாக விவரித்தது - விழாவினைக் காண்பது போன்ற சூழலை உருவாக்கியது.. என்னையும் சந்திக்க விரும்பியது கண்டு மனம் நெகிழ்கின்றது.. அந்த இனிய நாளை - காலம் உருவாக்க்த் தரட்டும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! காலம் கனியும் என்று காத்திருப்போம்...மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  32. விழா நிகழ்ச்சியின் வர்ணனையுடன் ஆஹா என்று இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் முஹம்மது நிஜாமுதீன்.....தங்களையும் காண ஆவலாகத்தான் இருக்கின்றது..தங்கள் முகம் காணா அன்பு எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது நண்பரே!

      நீக்கு
    2. தங்கள் ஆவல்!
      எனக்கும் பேராவல்!
      இறை நாட்டம் இருக்கும்பட்சத்தில் விரைவில் சந்திப்போம்!
      மகிழ்வுடன் கலந்துரையாடுவோம்!!

      நீக்கு
  33. ஆமாம், அடுத்த பதிவர் விழா எந்த ஊரில் என்று முடிவாகவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லையே ஸ்ரீராம். நாங்கள் எஸ் ரா பேசி முடிவதற்குச் சற்று முன்னரேயே புறப்பட வேண்டியதாகிவிட்டது. துளசி குடும்பத்தாரின் ரயில் டிக்கெட் உறுதியாகாமல் இருந்ததால். எனவே தெரியவில்லை. வேறு யாரேனும் அதைப்பற்றிச் சொல்லி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

      கீதா

      நீக்கு
  34. விழா பற்றிய தகவல்கள் நன்று. சிறப்பான முறையில் இங்கே பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள். வர இயலாமல் போனதில் எனக்கும் வருத்தம் உண்டு. கூடுதல் வருத்தம் தந்தது - நேரலையிலும் பார்க்க முடியாமல் அன்றும் அலுவலகம் செல்ல வேண்டியதாகிவிட்டது! காணொளிகளை இனிமேல் தான் பார்க்க வேண்டும்...

    அடுத்த பதிவர் சந்திப்பு - எங்கே நடக்கிறது என்பது முடிவாகட்டும். அங்கே நிச்சயம் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி! உங்கள் வருத்தம் புரிகின்றது...அடுத்த சந்திப்பில் சந்திப்போம் ..

      நீக்கு
  35. தமிழ் பதிவர்கள் விழாவுக்கு வந்திருந்தவர்கள்...வராமல்இருந்தவர்கள் என எவரையும் மறக்காமல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது ஆச் சச்சரியமாகவும் வியப்பாகவும்.. பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.. பதிவர் விழாவில் கலந்து கொள்வதற்கு பதிவு செய்திருந்தும் வராமல் இருந்தது. மனதுக்கு வருத்தமாகவும்.. இருக்கிறது... இத்துனுண்டு மனசுக்குள் எவ்வளவு வருத்தமிருக்கிறது என்பதும் மலைப்பாகவும்... இருக்கிறது.. அடுத்த விழாவில் கலந்து கொண்டால்தான் இந்த வருத்தமும் நீங்கும் போல் இருக்கிறது.. அனைதது பதிவர்களயும் நிணைவில் நிறுத்திய தங்களுக்கு என்னென்றும் நன்றியும் வணக்கமும்.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன். மனம் இத்துனூண்டு இல்லையே. அது கடலை விட பெரியது ஆழம் தெரியாது....எவ்வளவு பெரியது என்பதும் தெரியாது...அது ஒவ்வொருவரைப் பொருத்தது...!!

      மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு

      நீக்கு
  36. சந்திக்காமலா போய்விடுவோம் !!

    நினைவுகள் இனிமையானவை, அதைப் பகிர்ந்த விதமும் இனிமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சித்ரா சகோ..தங்களின் கருத்திற்கு...சந்திப்போம்

      நீக்கு
  37. மிக்க மகிழ்ச்சி.....நானும் அணிலானேன்...
    உங்கள் எழுத்தால் உயிரானேன்....

    பதிலளிநீக்கு
  38. "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...

    இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

    நன்றி...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  39. விரிவான பதிவுக்கு நன்றி. டிடியோட பதிவுகள், திரு ஜிஎம்பி அவர்களின் பதிவுகள் மற்றும் கலந்து கொண்ட சில நண்பர்களின் பதிவுகள் பார்க்க நேர்ந்தது. எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை. உடல் நலம் காரணமாகப் புதுக்கோட்டைச் சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. :(

    பதிலளிநீக்கு