சனி, 17 அக்டோபர், 2015

தலைமைச் செயலகத்தைச் சற்றுக் கவனியுங்கள்...

இந்தப் பதிவு பிறக்கக் காரணமான, தற்கொலை செய்து கொண்டு இம்மண்ணை விட்டுப் பிரிந்து காற்றோடு காற்றாகக் கலந்த அந்த இளம் பெண்ணிற்கு எனது இரங்கல்கள். இந்தப் பதிவு ஆலோசனைகளோ, அறிவுரைகளோ வழங்கும் பதிவு அல்ல. 

எனது அனுபவங்களினாலும், உளவியல் பார்வையினாலும் எனது இந்தச் சிறிய தலைமைச் செயலகத்தில் பதிந்த சில கேள்விகளால் உருவான எனது எண்ணம்: எல்லாவற்றிற்கும் காரணம் நம் தலைமைச் செயலகம்தான் என்பதைச் சொன்னால், இதை வாசிக்க நேரும் அறிவியலாளர்கள், இந்தச் செயலகத்தின் வேலைப்பாடுகள் சீரிய நிலையில் நடக்க ஏதேனும் வழிமுறைகள் உண்டெனில், உரைத்தால், அந்தக் குறிப்புகள், குறிப்பாக இளையவர்களுக்கு, தற்கொலை எண்ணம் எப்பொழுதாவது மனதில் எட்டிப் பார்த்துச் சென்று சலனத்தை ஏற்படுத்தியிருந்தால், அவர்களுக்கு அந்தக் குறிப்புகள் உதவியாக இருக்குமே என்ற ஒரு நல்ல எண்ணத்தில்தான். 

எனது மகன் வட அமெரிக்க கால்நடை மருத்துவ உரிமம் பெறுவதற்காக, கானடா சென்றிருந்த போது மகனின் இடத்தில் மருத்துவப் பணிக்குச் சேர்ந்தவள் அந்த இளம் பெண். ஆர்வமுடன் தான் அவள் சேர்ந்திருந்திருக்கின்றாள்.

கால்நடை மருத்துவத்தை மிகவும் நேர்மையாக, ஆத்மார்த்தமாகச் செய்யும் அந்த இரு கால்நடை மருத்துவகங்களும் ஏறக்குறைய வெளிநாட்டு கால்நடை மருத்துவகங்களுக்கு நிகரான சிகிச்சை அளித்து வருவதால், நாலுகால் செல்லங்களின் வரவும், அறுவை சிகிச்சைகளும் சற்று அதிகம். மருத்துவகத்தில் வேலை சற்றுக் கூடுதல்தான். இரு முதன்மை மருத்துவர்களும் இந்த மருத்துவகங்களை இந்த அளவிற்குக் கொண்டு வர, ஆரம்பக் காலகட்டத்தில் உறக்கம் தொலைத்து உழைத்தவர்கள்.

மகன் செய்துவந்த பணியை அப்பெண் செய்து வந்திருந்திருக்கின்றாள். இரவு நேரப் பணிகளும், அறுவை சிகிச்சைகளும், போதிய தூக்கமின்மையும்.  ஆனால், ஒரு நல்ல மருத்துவராக உருவாக வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால், ஆரம்ப நிலையில், இது போன்றச் சூழ்நிலைகளைத் தவிர்க்க இயலாது. ஆனால், நம் ஊரில், பெண் கால்நடை மருத்துவர்கள் – க்ளினிஷியன்ஸ்- குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யும் பெண் கால்நடைமருத்துவர்கள் மிக மிக மிகக் குறைவு.

மீண்டும் மகன் இங்கு வந்து அதே கிளினிக்கில் சேர்ந்ததும், முதன்மை மருத்துவர் என் மகனிடம் அவள் கொஞ்சம் கஷ்டப்படுவதாகவும், அவளை வழிநடத்தவும் சொல்லியிருக்கிறார்.

மகன், ஒரு நாள் அப்பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தினான். நல்ல உயரமாக, மெலிந்து பார்ப்பதற்குச் சக்தியற்றவளாக இருந்தாலும், அவள் உடலை விட, அவளது கண்கள் ஏதோ ஒரு வருத்தத்தையும், சோர்வையும் வெளிப்படுத்தியது தெரிந்தது. சில சமயங்களில் இரவுப் பணி, பகல் நேரப் பணி என்று தொடரும் என்பதினால் இருக்கலாம் என்று நினைத்தேன். நான் மகனிடம் கேட்டதற்கு அவன் சொன்ன பதில் இதுதான். “அவள் சற்றே கஷ்டப்படுகின்றாள்”. அவளை நான் பலமுறை சந்தித்திருந்தும், அவளைப் பற்றிய பேச்சுகள் எங்களிடையே எழுந்ததில்லை.

மகனுக்கு நார்த் கரோலினா பல்கலைக்கழக கால்நடை கல்லூரியில் எக்ஸ்டேர்ன்ஷிப் கிடைக்கவே அவன் சென்ற வெள்ளியன்று புறப்பட்டான். செவ்வாயன்று, நமது நேரம் மாலை 4.00 மணி அளவில், மகன் கல்லூரிக்குப் புறப்படும் முன் என்னை ஸ்கைப்பில் அழைத்து, “அந்தப் பெண் தற்கொலைசெய்து கொண்டுவிட்டாள்” என சொல்லவும் அதிர்ச்சியடைந்தேன்.

மகனுக்கு அமெரிக்க திங்கள் இரவு அதாவது, நமக்கு, செவ்வாயன்று காலை மின் அஞ்சல் கொடுத்திருக்கின்றாள் “ஆல் தெ பெஸ்ட்” சொல்லி. மகன் அவர்கள் நேரப்படி செவ்வாய் அதிகாலை அவள் அஞ்சல் பார்த்து பதில் கொடுக்கும் முன்  இந்தச் செய்தி உதவியாளரிடமிருந்து வந்திருக்கின்றது.

“இது ஒரு ஸ்டுப்பிட் டெசிஷன். எனக்கு ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் செம கோபம்தான்.  ம்ம்ம்ம்... எனிவே த ப்ரெய்ன் கெமிஸ்ட்ரி டாமினேட்ஸ் எவ்ரிதிங்க். நோ சொல்யூஷன்ஸ்.  கான்ட் ஸே எநிதிங்க் மோர்” - மகன்

உதவியாளரிடமிருந்து நான் அறிந்தது: அவள் செவ்வாய் காலை வழக்கம் போல் மருத்துவகத்திற்கு வந்து வேலைகளைக் கவனித்து, இரண்டு மணி நேரம் கணினி முன் அமர்ந்து ஏதோ வேலை செய்துவிட்டு, 11 மணியளவில் வீட்டிற்குச் சென்று உடன் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றவள் அடுத்த ஒரு மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுவிட்டாள் என்ற செய்தி அவளது பெற்றோரிடமிருந்து உதவியாளருக்கு வந்திருக்கின்றது. அதுவும் மருத்துவகத்திலிருந்து மயக்க மருந்து எடுத்துச் சென்று அதைத் தனக்கே செலுத்திக் கொண்டு....

அப்படி என்றால் அந்த இரண்டு மணி நேரம் அவள் கணினியில் என்ன செய்தாள் என்பது, அவள் அந்தக் கணினியின் ஹிஸ்டரியை அழிக்காமல் இருந்திருந்தாள் என்றால், அதைப் பார்த்தால் தெரிந்து விடலாம். அந்தச் சமயத்தில்தான் அவள் மகனுக்கு அஞ்சல் கொடுத்திருந்திருக்க வேண்டும். ஒருவேளை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மயக்க மருந்து, அதன் அளவு பற்றித் தேடியிருக்கலாமோ என்றும் தோன்றியது.

என் மகனிடம் இருந்தும், புதன் அன்று அவளது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட போது அவளது தந்தையிடம் இருந்தும் நான் அறிந்தது:

ஒரே மகள் பெற்றோருக்கு. பெற்றோர் அவளுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். ஆனால், அவள் சொல்லிவந்தது தான் தகுதியற்றவள். தனக்கு எதையுமே கற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னால் எதையுமே நன்றாக, சரியாகச் செய்ய முடியவில்லை என்று. ஒரே குழந்தை என்றால், உடன் பிறந்தோர் இல்லாததால், நட்புகள் இல்லை என்றால் மன அழுத்தத்திற்கு/சிதைவுக்கு ஆளாகும் என்பதெல்லாம் சொல்லப்பட்டாலும், விவாதத்திற்குரியதே.

அவள் மன அழுத்தத்தில் இருந்திருக்கின்றாள். முதன்மை மருத்துவரும், மகனும் அவளிடம் ஆறுதலாகவும், ஊக்குவிக்கும் வகையிலும் பேசியிருந்திருக்கின்றார்கள். முதன்மை மருத்துவர் அவளைச் சிறப்புப் பயிற்ச்சிக்கும் அனுப்பியிருந்திருக்கின்றார். அவளைச் சில காலம் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறும் சொல்லியிருந்திருக்கின்றார்கள்.

என் மகனும் அவளுக்குத்ட் தொடர்ந்து  ஆலோசனைகள் கொடுத்து, அவளை ஊக்குவித்து, அவளைச் சுய பரிசோதனை செய்துபார்த்துக் கொள்ளவும் சொல்லியிருந்திருக்கின்றான். அதாவது, அவளது திறமைகளை அவளே கண்டறிந்து – மெடிசினா, அறுவைசிகிச்சையா - எது நன்றாக வருகின்றது, எது அவளுக்கு ஏதுவாக இருக்கின்றது என்பதை அறிந்து, அதை மேம்படுத்திக் கொள்ளுமாறு.

முதன்மை மருத்துவரும் அவளை இந்த மருத்துவக வேலை கடினமாக இருந்தால், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளாத வேறு மருத்துவகத்தில், மருத்துவராகவும் வேலை செய்யலாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.  ஆனால், அப்பெண்ணோ இந்த வேலைதான் பிடித்திருக்கின்றது என்றும் சொல்லியிருக்கின்றாள். மருத்துவருக்கு அவளை வேலையை விட்டு நீக்கவும் தயக்கம். ஒருவேளை அதுவே அவளுக்கு இன்னும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி, மன அழுத்தம் விளைவித்துவிடுமோ என்று.

பிடித்துச் செய்யும் வேலையென்றாலும் அவளது மன அழுத்தத்தை அவளால் சரியாக நிர்வகிக்க முடியாததால், அவள் மீண்டும் மீண்டும் தான் தகுதியற்றவள் என்று சொல்லி வந்ததால், அவளை நல்ல மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெறச் சொல்லியிருந்திருக்கின்றார் முதன்மை மருத்துவர். அவளும் ஒரு சில மாதங்களாக மனஅழுத்தத்திற்கான மருந்தும், மனநல ஆலோசகரிடம் ஆலோசனைகளும் எடுத்துக் கொண்டிருந்திருக்கின்றாள்.

என் மகன் அவளுக்கு மிகவும் ஆறுதலாகவும், ஆதரவாகவும், நல்ல வழிகாட்டியாகவும், இருந்து வந்ததாக அவளது தந்தை பாராட்டிச் சொன்னார்.

இந்த நிகழ்வுகளை எல்லாம் கோர்வையாக்கி காட்சிகள் மனத்திரையில் விரிந்த போதுதான் எனக்குப் பளிச்சிட்டது. 9 ஆம் தேதி அதிகாலை மகன் புறப்படல்.  அதன் பின் முதன்மை மருத்துவரும் அவரது தாயின் உடல்நிலை சரியில்லாததால் வெளியூர் பயணம். மருத்துவகம் அவளது பொறுப்பில். உதவியாளர் இருந்தாலும் அவளால் ஈடுகொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டிருக்க வேண்டும். தனிமை. மன அழுத்தம் கூடியிருந்திருக்கலாம். அதனால்தான் இந்த முடிவோ என்றும் தோன்றியது.

அவளாள் மருத்துவகத்தின் பரபரப்பிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதை விட அவளுக்குள் ஏற்பட்ட அந்தத் தாழ்வுமனப்பான்மைதான் அவளை இந்த முடிவிற்குத் தள்ளியிருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு.

      இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு வண்டியில் வந்து கொண்டிருக்கும் போது, மன அழுத்தம், தற்கொலை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்து கணினியின் முன் அமர்ந்தால், சீனுவின் ஒரு பதிவு http://www.seenuguru.com/2015/10/ITmentalcare.html   வாசித்தால் “அட! கிட்டத்தட்ட நாம் தொட நினைக்கும் சப்ஜெக்ட்”!

Image result for tension in brain

      தற்கொலைக்குக் காரணங்கள் என்று சூழ்நிலைகள் பல சொல்லப்பட்டாலும், அடித்தளம் தலைமைச் செயலகத்தில் நடக்கும் ரசாயனமாற்றங்களினால் நிகழும் மன அழுத்தம் தான். ஆனால், மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள் எல்லோரும் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. நேர்மறை எண்ணங்கள் இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை. அதுவே எதிர்மறை எண்ணங்களானால் பிரச்சினையே. இங்குதான் நான் மூளையைப் பற்றி என் சிற்றறிவிற்கு எட்டியதைச் சொல்ல விழைகின்றேன்.

      வருமுன் காப்போம் என்று ஒரு சில நோய்களுக்கு கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள், தீர்வுகள் சொல்லப்படுவது போல், மன அழுத்தம் வராமல் இருக்க பல வழிமுறைகள், தீர்வுகள் சொல்லப்படுகின்றனதான். சரியா என்று கேட்டால் ஆம் என்று பலர் சொல்லுவர் ஆனால் என் மூளை இல்லை என்று தான் சொல்லுகின்றது.

      நம் உடல் முழுவதையும் தன் கீழ் வைத்திருப்பது தனிக்காட்டு ராஜா நம் தலைமைச் செயலகம். “மனம்” என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு, நாம் சொல்லுவது மனம் நம் கீழ் என்று. ஆனால் அந்த மனமே அந்த மூளைதானே!

ஒரு புதிரை விடுவிக்க மூளை இருக்கின்றதா என்று கேட்கும் நமது மூளையே ஒரு புதிர்தான். மூளையின் அமைப்பில் பல முடிச்சுகள் இருக்கின்றனவோ இல்லையோ ஆனால் மூளையைப் பற்றிய அந்த முடிச்சுகளை இன்னும் எந்த அறிவியலாளரும் முழுமையாக அவிழ்க்கவில்லை. அவிழ்க்கவும் இயலவில்லை என்பதுதான் உண்மை.

      மனிதனின் ரகசியங்களைச் சேமித்து வைக்கும் அந்தப் பெட்டகத்தின் ரகசியங்களை இன்னும் அம்பலப்படுத்த முடியவில்லை. ஆழ் மனம், மனம் கடலைப் போன்றது, மனதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை என்று சொல்லுவதை விட அந்த மனதை உள்ளடக்கிய மூளையைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்லுவதுதான் சரி எனப்படுகின்றது.

      மனம் என்பதும் மூளையின் ஒரு பகுதியாக இருப்பதால்தான் தற்கொலைக்குக் காரணம் நம் மனது என்று நாம் சொல்லுவதைத்தான் அறிவியலாளர்கள், மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் என்கின்றனர். மனம் சம்பந்தப்பட்ட நோய்கள் என்று நாம் சொல்லுவது, அந்த மனமும் மூளைதானே என்று பார்க்கும் போது நம் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள்தான் என்பதுதான் சரி. இந்த மாற்றம் எப்போது, எப்படி நிகழும் என்பது யாருக்கும் புரியாத புதிர்!

      பொதுவாக, மன அழுத்தம் என்றவுடன், மனதை அலட்டிக் கொள்ளக் கூடாது.  ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும். நண்பர்கள் வேண்டும். விளையாட்டு நல்லது. பிடித்த வேலை செய்தல். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, தியானம், மனவளப்பயிற்சி என்று ஒரு பெரிய பட்டியலே இடப்படும். ஆனால், இந்தப் பட்டியலை நிறைவேற்றவும் அந்த மூளை ஒத்துழைக்க வேண்டுமே! சொல்வது எளிது! அந்த மூளைதானே இவை நடக்கவும் காரணம்! இப்படி இருப்பவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றார்களே!

      சிறிய வயதிலிருந்தே நல்ல சூழ்நிலை, நல்ல வளர்ப்பு முறை, வாழ்க்கையைப் பற்றி, உலகைப் பற்றிய புரிதல் என்று குழந்தைகள் வளர்க்கப்பட்டால் அவர்கள் மனச் சிதைவுக்கு உள்ளாகமாட்டார்கள் என்று சொல்லுவதும் ஓரளவுதான் சரி. இதுவும் ஆய்விற்குரியதே.

அதே போன்று, புறச் சூழல்கள்தான் ஒருவரது மன நிலை பிறழக் காரணம் என்று சொல்லுவதும் முழுவதும் சரியல்ல.  எல்லாமே நம் தலைமைச் செயலகம் எப்படிப் பணி புரிகின்றதோ அதன் அடிப்படையில்தான்.

நான் சந்தித்த பல மன நோயாளிகளிடம் இருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பதாகவும் ஆனால், பல சமயங்களில் அது முடிவதில்லை, ஏதோ தடுக்கின்றது என்று.

      தன் உடலில் தானே மயக்க மருந்தைச் செலுத்தி தற்கொலை செய்யத் துணிச்சல் இருந்திருக்கிறது என்றால், அந்தப் பெண்ணிற்குத் தனது இயலாமையை வென்று, வாழ்க்கையை எதிர்கொண்டு வாழும் துணிச்சல் ஏன் இல்லாமல் போனது என்பது வேதனை. ஆச்சரியம். இது எல்லா வகைத் தற்கொலையாளர்களுக்கும் பொருந்தும்.

இங்குதான் நான் அறிந்ததிலிருந்து சொல்ல வருவது, சில சமயங்களில் மூளையின் ரசாயன மாற்றம், அதன் ஒரு பகுதியாகிய மனம் என்று சொல்லப்படும் பகுதியைப் புறம் தள்ளி விஞ்சி விடுகின்றது, மருந்துகள் உட்கொண்டாலும் சரி, கவுன்சலிங்க் பெற்றாலும் சரி, இல்லை வேறு சில மனப் பயிற்சிகள், நேர்மறை எண்ணங்கள் பயிற்சி செய்தாலும் சரி.

      இந்த உலகில் பிறந்த எல்லோருமே மன அழுத்தத்திற்கு ஆளாபவர்கள்தான். மனநோயாளிகள்தான். ஆனால், மூளையில் ஏற்படும் ரசாயன நிகழ்வுகளின் தாக்கத்திலும், தாக்கத்தின் விகுதியிலும் தான் நார்மல் மனிதர்கள், மன நோயாளிகள் என்ற பிரிவு உண்டாகின்றது. நார்மலாக இன்று இருப்பவர்கள் நாளை மனஅழுத்தத்திற்கு உண்டாகலாம்.

மன அழுத்தம் ஏற்படலாம்.  அது  இயல்பானதே.  ஆனால் அது நம் நடைமுறை, யதார்த்த வாழ்க்கையைப் பாதிக்கும் நிலைக்கு உந்தப்பட்டால், ஏதேனும் உங்களுக்கு ஏதுவான வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் தலைமைச் செயலகத்தை வெற்றி கொள்ள முனையுங்கள். முடியவில்லை என்றால், உடன் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகிவிடுங்கள்! அது ஒன்றும் தாழ்வில்லை.

நார்மலாக இருப்பவர்களுக்கும்,  மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு ஏதேனும் ஒரு வகை சிகிச்சை எடுத்துக் கொண்டு நார்மல் வாழ்க்கை நடத்துபவர்களுக்கும், அவர்களது மனம் எனும், தலைமைச் செயலகத்தின் துறை நேர்மறையாக ஆட்சி புரிந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளே! தலைமைச் செயலகத்தின் மனம் எனும் துறை வீழ்ந்துவிட்டால், தலைமைச் செயலகம் கோரத்தாண்டவம் ஆடிவிடும்.  சீனு சொல்லியிருப்பது போல், இன்றைய நிலைமை, தலமைச் செயலகத்தின் நலம் கவனிக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உறுதியாக, அறுதியிட்டுச் சொல்கின்றது.

http://thaenmaduratamil.blogspot.com/2015/07/1.html தலைமைச் செயலகத்தைப் பற்றி தோழி க்ரேஸ் அவர்களின் பதிவு. தமிழில் எளிதில் புரிந்து கொள்ளும் அளவில் அருமையான தொடர் பதிவுகள்.

(பின் குறிப்பு: இங்கு மன அழுத்தம் என்பது பற்றி மட்டுமே அதுவும் பொதுவாகத்தான் சொல்லியிருக்கின்றேன். இதில் பல வகைகள் உண்டு. மாபெரும்கடல். அதில் நான் நிபுணரும் அல்ல என்பதால் அதைப்பற்றி எல்லாம் பேசவில்லை.)

(ஸ்பா....ரொம்ப சீரியசான பதிவோ...சரி மதுரைத் தமிழா கொஞ்சம் கலகலக்க வைச்சு எங்களை ரிலாக்ஸ் ப்ளீஸ்...)

படங்கள்: நன்றி இணையம்.
தலைப்பிற்கு சுஜாதா மன்னிப்பாராக!  சுஜாதா அவர்களுக்கு நன்றிகள் பல மானசீக அஞ்சலில் விண்ணிற்கு அனுப்பிவிட்டேன்.

-கீதா


42 கருத்துகள்:

  1. ரொம்ப தேவையான பதிவு..கொஞ்சம் அனைவருமே யோசிக்க வேண்டிய விஷயம். பிள்ளைகளையோ கணவரையோ கூட தான் விரும்பும் போஸ்டில் இடம்பெற வலுக்கட்டாயப்படுத்துபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! சகோ! தேனு முதலாவதாக வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி....கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி...

      நீக்கு
  2. இவ்வளவு நீளமா எழுத நீங்க எத்தன மணி நேரம் சிந்திச்சி செய்திகளை திரட்டி கோர்வையாக்கி அதனை மறுபடி திருத்தி அப்பப்பா இந்த அளவு நிதானம் சொல்ல வந்ததா கோர்வையாக சொல்வது இதெல்லாம் நிச்சயம் ஒரு திறமை தான்.
    இந்தப்பதிவைப்பற்றி என்ன சொல்ல ஆனாலும் எப்போதும் தனிமையை தவிர்ப்பது நல்லது. நம்மால் முடியாது என்ற அந்த நோயை நம்மிடம் நெருங்கவிடாதிருப்பது (சமீபத்தில் கலாம் பதிவில் செந்தில் சகோ பதிந்தது) இவை கைகொடுக்கும் என்பது என் கருத்து. விரிவான அலசல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சசி நீங்க வேற இதை எழுதும் போது, நாங்கள் சொல்ல வந்த கருத்துகள் அனைத்தும் அதில் உட்பெற வேண்டும்..ஆனால் பெரிதாகிவிடுகின்றது என்பதும் ஒரு குறை உண்டுதான்...இரு பதிவுகளாக எழுத முடியவில்லை இது போன்ற பதிவுகளை..அதன் உட்கருத்து விடுபட்டு விடுமோ என்ற எண்ணம்தான்....பதிந்து விடுகின்றேன்/றோம்...கருத்துகளைக் கூட எதிர்ப்பார்ப்பதில்லை..வாசிக்கப்பட்ரு உள்வாங்கப்பட்டால் போதும் என்ற எண்ணமே.

      ஆனால் இதற்கு உதவும் வகையில் நல்ல கருத்துகள் வந்தால் மிகவும் மகிழ்வாக இருக்கும். எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையுமே என்று.

      நன்றி சசி...

      நீக்கு
  3. இதை பொருமையாக படித்துக்கொண்டு வரும் பொழுதே நினைத்தேன் அதற்க்கு தாழ்வு மனப்பான்மையும் ஒரு ஆணிவேரான காரணம் அதையே தாங்களும் சொல்லியுள்ளீர்கள்
    தனிமையும் கொடுமையானதே...

    அந்தப்பெண்ணின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் பொறுமையாகப் படித்ததற்கு மிக்க நன்றி! கில்லர் ஜி!

      தாழ்வு மனப்பான்மை, தனிமை எல்லாம் சொல்லப்பட்டாலும், அதனால் ஏற்படும் மன அழுத்தம்...அது பல சமயங்களில் என்ன தீர்வுகள் சொல்லப்பட்டாலும். செய்யப்பட்டாலும் ஒரு சிலரால் மட்டுமே எதிர்மறையான முடிவுகள் எடுக்காமல் செல்ல முடிகின்றது. சிலர் தீர்வுகளையும் மீறி செய்வது தான் மூளையின் ரசாயன மாற்றம் அதை இன்னும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையே சொல்ல விழைந்துள்ளேன். எல்லாமே அந்தத் தலைமைச் செயலகம்தான் என்று...

      நீக்கு
  4. அனைவரும் யோசிக்க வேண்டிய பதிவு.

    வாழ்க்கையில் எந்த வித சோதனைகள் வந்தாலும் கலங்காது இருக்க வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். சிறு சிறு தடங்கல்களுக்கே தடுமாற்றம் கொள்பவர்களை பார்க்கும் போது மனதுக்கு சங்கடமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி! ஆமாம் ஜி!!

      //சிறு சிறு தடங்கல்களுக்கே தடுமாற்றம் கொள்பவர்களை// ஆமாம் ஜி நமக்கு அவஸ்தையாக இருக்கும் ஆனால், அவர்களையும் ஒன்றும் சொல்ல முடியாது. அதுதான் அவர்களது மூளையில் நடக்கும் வேதியல் மாற்றங்கள்....இன்னும் புரிபடாமல் இருக்கவும் அதுதான் காரணம் எனத் தோன்றுகின்றது..

      மிக்க நன்றி வெங்கட் ஜி!

      நீக்கு
  5. சகோதரி கீதா அவர்களுக்கு : எங்க ஆதங்கத்தையும் நிறைவேறினா சரி...

    பதிலளிநீக்கு
  6. படித்தவர்களே இப்படி தற்கொலை செய்து கொள்வது வருத்தம் அளிக்கிறது .படிப்பு என்பது வாழச் சொல்லி தர வேண்டாமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜீ வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  7. அன்பின் கீதா நீங்கள் பதிவர் ஜீவியின் தளத்தில் பதிவாகி வரும் மனம் மூளை உடல் எனும் பதிவுகளைப் பார்க்க வேண்டுகிறேன் ஒரு ஆராய்ச்சிப் பதிவுகள் உடன் பார்க்க கீழே சுட்டி
    http://jeeveesblog.blogspot.in/2015/10/blog-post.html உங்கள் அலசல் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் வருகைக்கும் கருத்திற்கும்

      பார்க்கின்றோம் சார்

      நீக்கு
  8. எதோ ஒரு வழக்கமான செய்தி பற்றி ஆழமாக யோசிக்க வைத்த பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ அபயா அருணா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  9. ஒரு நொடியில் எடுக்கப் படும் முடிவுகளே இதுபோன்ற தற்கொலைகளுக்குக் காரணம்
    மனம் விட்டுப் பேசினாலே, பிரச்சினைகள் விலகிவிடும்,
    தற்பொழுது மனம் விட்டுப் பேசவே தயங்குகிறார்கள், உதட்டளவிலான நட்டே இன்று பெரும்பாலானர்களுக்கு சாத்தியமாகி இருக்கிறது
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ கரந்தையாரே தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  10. அருமையாண கட்டுரை மேடம்.
    பொருமையாக/மெதுவாக மீண்டும் நான் படிக்க வேண்டிய பதிவு.



    தனிமை, மன அழுத்தம் மிகவும் கொடுமையான ஒன்று.

    இங்குதான் நான் அறிந்ததிலிருந்து சொல்ல வருவது, சில சமயங்களில் மூளையின் ரசாயன மாற்றம், அதன் ஒரு பகுதியாகிய மனம் என்று சொல்லப்படும் பகுதியைப் புறம் தள்ளி
    விஞ்சி விடுகின்றது, மருந்துகள் உட்கொண்டாலும் சரி, கவுன்சலிங்க் பெற்றாலும் சரி, இல்லை வேறு சில மனப் பயிற்சிகள், நேர்மறை எண்ணங்கள் பயிற்சி செய்தாலும் சரி.//

    ஆம். நான் நினைப்பதும் அதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ மகேஷ் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  11. மனதுக்கு வருத்தமா இருக்கு கீதா :(
    ...வாழ்க்கை என்பது படிப்பு வேலை பணம் மட்டுமில்லை அதற்கும் அப்பால் ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்று ..உயிர் போனா திரும்ப வருமா :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சலின் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  12. வருத்தமான செய்தி. பல பேர் - குறிப்பாக இன்றைய இளைய சமுதாயம் - பல விஷயங்களை குறிப்பாக சொந்த விஷயங்கள் -வெளிப்படையாக விவாதிக்காமல் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  13. பதிவு மனதை மிகவும் பாதித்தது நீண்ட பதிவு எத்தகை ஆய்வு! அருமை! வேறென்ன சொல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  14. மன அழுத்தத்திற்கு யார் பொருப்பு....???சமூகமா...தனிநபரா...??ஃ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ வலிப்போக்கன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். அவரவரேதான் புற நிகழ்வுகள் காரணம் அல்ல

      நீக்கு
  15. பதிவின் ஒவ்வொரு பத்தியும் சும்மா தெளிய வைத்துத் தெளிய வைத்து அடிக்கின்றன! :-)

    விளையாட்டுக்குச் சொன்னேன். மிகவும் வருத்தமாக எழுதியிருந்தீர்கள் இல்லையா அதற்காக.

    அந்தப் பெண்ணை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அதுவும் அந்தப் பெண்ணை மன அழுத்தத்திலிருந்து மீட்க இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்ட பின்னும் அவர் தற்கொலை செய்து கொண்டதை நினைத்து உங்கள் மகன் எவ்வளவு வேதனையடைவார், அவர் சீற்றம் எந்தளவு நியாயமானது என்பனவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    என் மிக நெருங்கிய உறவினர் கூட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் எப்படி அதிலிருந்து படிப்படியாய் மீண்டு வந்தார் என்பதை நான் அருலிருந்து பார்த்திருக்கிறேன். அப்படி நான் பார்த்த வரை, மன அழுத்தத்துக்கு அலோபதியில் மிக அருமையான மருந்துகள் உள்ளன. ஒருவேளை அந்தப் பெண் மன அழுத்தத்தின் காரணமாய் மருந்துகளைக் கூடச் சரியாய்ச் சாப்பிடவில்லையோ என்னவோ! ஆனால், சிலருக்கு மருந்துகளையும் மீறி மன அழுத்தம் வெளிப்படுகிறது என்று நீங்கள் கூறியிருப்பது வியப்பளிக்கிறது!

    பொதுவாக, படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதில்லை. எதைப் பற்றியும் பரந்துபட்ட மனப்பான்மையும் பார்வையும் மனிதருக்கு வேண்டும். நல்ல நூல்களும், இதழ்களும் அதை நமக்கு அளிக்கின்றன. தான், தனது, தன் சூழல், தன் பிரச்சினைகள் என உலகத்தையே தன் கண்ணோட்டத்தில் அணுகுவதுதான் இத்தகைய மன அழுத்தங்களுக்குக் காரணம் என்பது என் நம்பிக்கை. மாறாக, உலகிலுள்ள மற்றவர்களைப் பார்க்கத் தொடங்கினால், தனக்குக் கீழும் மேலும் அருகிலும் உள்ளவர்களின் பிரச்சினைகளைப் பார்க்கத் தொடங்கினால், உலகம் முழுவதையும் தன் உறவாக நட்பாக தானாகப் பார்க்கத் தலைப்பட்டால் மனம் இலகுவாகும். ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் அத்தகைய மனப்பான்மையைப் போகிற போக்கில் நம்மிடம் ஏற்படுத்தி விடுகின்றன.

    உலகம் முழுக்க இன்றும் முப்பது கோடிப் பேர் இரவு உண்ணாமல் பட்டினியோடு படுக்கிறார்கள் என்பதை வெறும் செய்தியாகக் கடந்து போகாமல் அதற்காகக் கவலைப்படுகிற மனம் இருந்தால் மனைவி சமையல் சரியில்லை என்று எவனும் சண்டை போட்டுக் கொண்டிருக்க மாட்டான்.

    தான் பயன்படுத்தும் உதட்டுச் சாயத்துக்காகவும், முகக் களிம்புக்காகவும் எத்தனை ஆயிரம் விலங்கினங்கள் உயிரோடு கொளுத்தப்படுகின்றன என்பதை அறிந்தால் எந்தப் பெண்ணும் தன் மேனி அழகுக்காகவும் நிறத்துக்காகவும் கவலைப்பட்டு மன அழுத்தத்துக்கு ஆளாக மாட்டாள்.

    சுருங்கச் சொன்னால், உனக்காக வாழாமல் உலகத்துக்காக வாழு! பிறகு, உன் பிரச்சினைகளுக்காகக் கவலைப்பட்டு மன அழுத்தத்துக்கு ஆளாகும் அளவுக்கு உனக்கு நேரம் இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே! நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் அனைத்தும் சரிதான். அந்தப் பெண் ச்ரியாகத்தான் மருந்து எடுத்துக் கொண்டிருக்கின்றாள். நீங்கள் சொல்லுவது போல் அதுவும் அந்த இறுதி வரிகளையும் நான் ஒத்துக் கொள்கின்றேன்.

      நான் நிறைய பேரை அருகிலிருந்து கவனித்துக் கொண்ட அனுபவமும் உண்டு.

      நீங்கள் சொல்லுவது போல் அலோபதியில் நல்ல மருந்துகள் இருக்கின்றன. அதையும் மீறி ஷாக் ட்ரீட்மென்ட் - மின் அதிர்வு சிகிச்சை ??? சரியா??- கொடுக்கப்பட்டு, படுக்கையில் கொண்டு இடப்பட்டதும் அந்த உடல் துள்ளியதை 10 நாடகள் தினமும் பார்த்த அனுபவமும் உண்டு. அந்நியன் வகை கூட பார்த்திருக்கின்றேன். ஆனால் அது வெறும் பேச்சு, நடை உடல்மொழி வகையில் மட்டுமே. படத்தில் காட்டுவது போன்று அல்ல. அப்படிச் சிகிச்சை எடுத்துக் கொண்டு நல்ல கவனிப்பில் இருப்பவரும் கூட திடீரென்று மாறுவதுண்டு. அதிர்வலைசிகிச்சைக் கொடுத்த மருத்துவம் மிகவும் பிரபலமானவர்தான். நல்ல மருத்துவர். அவரிடம் நான் கேட்ட போது அவர் சொன்னது. 100% உத்தரவாதம் இல்லை. மூளையின் ரசாயன மாற்றம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். ஏன் உங்களுக்கே கூட மாறலாம். "இட்ஸ் அ மில்லியன் டாலர் க்வெஷ்சன்" என்றார். அதனால் தான் நாம் நம்மால் இயன்றவரை நமது மனம் எனப்படும் அந்த மூளைப்பகுதியை ஆட்சியில் வைக்க முனைய வேண்டும். சில சமயம் அதையும் மீறி மூளை ஆட்சியைப் பிடிக்கின்றது நண்பரே! அதையும் சில ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தப் பிறகுதான் எழுதினேன். உங்களுக்குத் தெரியாதது அல்ல. இதில் பல பிரிவுகள் உண்டு.
      நான் இதைப் பற்றி இதில் பட்டம் வாங்கவில்லை என்றாலும் நிறைய வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால்...

      ஓசிடி, ஓசிபிடி, பைபோலார், ஹிஸ்டீரியா, சிசோஃப்ரினியா,.....இன்னபிற இதில் ஒரு சிலரால் மட்டுமே மருந்து எடுத்துக் கொள்ளும் போது மனம் எனும் மூளைப் பகுதி மற்றதை அடக்கி முன்னேறுகின்றது. ஒரு சிலரில் அது சில சமயங்களில் மற்ற பகுதியை விஞ்ச விட்டுவிடுகின்றது..ஒத்துழைக்க மறுக்கின்றது. இதையும் நான் சேகரித்த புள்ளியியல் சொல்லுகின்றது. ரசாயன மாற்றம் அப்படி..இன்னும் புதிர்தான் நண்பரே! நமது ரகசியங்களைத் தன் பெட்டகத்துள் அது அழகாக சேமித்து வைத்து உதவுகின்றது. ஆனால் அதன் ரகசியத்தை அவிழ்க்க முடியவில்லை...இன்னும்...நம்மால் முடிந்தவரை ,மூளையின் மனப்பகுதியைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வோம். ..

      மிக்க நன்றி சகோ! உங்கள் அழகான விரிவான அர்த்தமுள்ள பின்னூட்டத்திற்கு....

      நீக்கு
    2. ஓ! இதில் உங்களுக்கு இவ்வளவு அனுபவம் இருக்கிறதா!! உங்கள் விளக்கத்துக்கு நன்றி!

      கீச்சுலக அன்பர் ஒருவர் அழகாய்ச் சொன்னார், "மூளை தன்னைத் தானே புரிந்து கொண்டது" என்று. விரைவில் அது தன்னை முழுமையாகப் புரிந்து கொள்ளும் நாளும் வரும். அல்லது, பழைய சித்த மருத்துவ மர்மங்களை முழுமையாக வெளிக்கொண்டு வருவதன் மூலமும் நாம் பலவற்றைச் சரி செய்யலாம். பார்ப்போம்! காலம் கனியும்!

      நீக்கு
    3. ஆம் நண்பரே! அப்படி நடந்தால் மிகவும் மகிழ்வுதான். காத்திருப்போம்...மிக்க நன்றி தங்களின் பதிலிற்கு.

      நீக்கு
  16. விளக்கமாக்ச் சிறப்பாக பிரச்சினையை அலசியிருக்கிறீர்கள்
    மிக நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சென்னைப்பித்தன் சார் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  17. சகோ,

    மிகத்தாமதமாக வருவதற்கு முதலில் எனது வருத்தங்கள்.

    இந்தப் பதிவை இன்னும் சில முறைகள் படிக்க வேண்டும்.

    பொதுவாக இதுபோல் மீள வாசித்தல் அரிதுதான்.

    தற்கொலை செய்துகொள்பவர்கள், பிரச்சனையில் இருந்து அவர்கள் விடுபட, அதிக வலிதரும் தண்டனையை அவர்களைச் சார்ந்தவர்களுக்கு அளித்து விட்டுத் தப்பித்துக் கொள்கிறார்கள்.

    மனம் இன்னும் தீர்க்கப்படாத புதிர்தான்.

    இதுபோன்ற தருணங்களில் நம் நலம் நாடுபவர்களிடத்தில் நிகழ்த்தும் திறந்த பகிர்வுகள் பல நேரங்களில் இந்தத் தற்கொலை எண்ணத்தை மாற்றும் என நினைக்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ அவர்களைச் சார்ந்தவர்களுக்கு அளித்துவிட்டுத் தப்பித்துக் கொள்கிறார்கள் என்று சொல்லியிருக்கின்றீர்கள் பாருங்கள் அது மிக மிக உண்மை.

      மனம் இன்னும் புதிர்தான்

      சில தருணங்களில் மனம் திறந்த பகிர்வுகள் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே அந்த எண்ணத்தை மாற்றுகின்றது....எல்லோருக்கும் அல்ல...அதற்கு இங்கே சொல்லியிருக்கும் அந்தப் பெண் உதாரணமாகிப் போனாள். அதனால் தான் சொல்ல விழைந்தது மனம் எனும் மூளைப்பகுதி இன்னும் புதிராகவே இருக்கின்றது....ரசாயன மாற்றத்தின் நிகழ்வில்...

      மிக்க நன்றி சகோ..நாங்களும் தாமதமாகப் பதில் கொடுப்பதற்கு..

      நீக்கு
  18. மிகச் சிறப்பான பகிர்வு சார்...
    விளக்கமாய்ச் சொல்லியிருக்கீங்க...
    ஒரு நொடி தடுமாற்றமே தவறான முடிவுகளுக்கு காரணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  19. மனம் என்பதும் மூளையின் ஒரு பகுதியாக இருப்பது என்பதை விட மூளை இயங்கும் செயலை மனம் என்று கூறலாம்.

    மனப் போராட்டத்தின் உச்சம் தற்கொலைக்கு இட்டுச் செல்லலாம். அதாவது, சூழலுக்கு முகம் கொடுக்க அஞ்சி சிலர் தற்கொலையை நாடுகின்றனர்.

    தேன் மதுரத் தமிழ் அவர்களது மூளையின் கதை தொடரை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் ஜீவலிங்கம்....ஆம் அப்படியும் சொல்லலாம்தான். ...மனசாட்சி எனப்படும் மூளைப்பகுதிக்கும், மனம் எனும் மூளைப்பகுதிக்கும் இடையில் நடைபெறும் போராட்டம் (இரண்டுமே மூளையின் செயல்பாடுகள்தான்...) அதில் எது வெல்கின்றது என்பதைப் பொறுத்தே நமது பயணம்...

      நீக்கு
  20. இன்றைய இளைஞர்கள் எதையுமே தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள்/அல்லது மிகவும் உல்லாசமாகவே இருக்க நினைக்கிறார்கள். அவர்களால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனோபாவம் இருப்பதில்லை. பிரச்னைகள் தொடர்ந்தால் உடனடியாக பயம்! அவற்றிலிருந்து வெளியேற முடியாமல் தற்கொலையை நாடுகின்றனர்! :( ரொம்பவே மனதை வருந்த வைத்த பதிவு. :( கணினி பிரச்னை, நவராத்திரி வேலைகள், அடிக்கடி வெளியே போவது என்பதால் உடனே வர முடிவதில்லை. அநேகமாக இன்னும் சில மாதங்கள் இப்படித் தான் இருக்கும் என எண்ணுகிறேன். இன்னும் பயணங்கள் காத்திருக்கின்றன. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி...தங்கள் வேலைப்பளுவிற்கிடையில் வந்து வாசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. வாருங்கள் நிதானமாக... பயணங்களுக்கு வாழ்த்துகள். பதிவுகள் வருமே...

      நீக்கு