செவ்வாய், 31 மார்ச், 2015

ஆல் த பெஸ்ட்!! ALL THE BEST!!!

Image result for SUCCESS AND FAILURE IN LIFE

சில நாட்களுக்கு முன் நான் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்த போது என் அலை பேசி கூவியது. தோழி பத்மா.  நேற்றுதானே பேசினோம் என்று நினைத்தவாறே,

“ஹலோ பத்மா வெரி குட் மார்னிங்க்”

“..........(சிறிது நேர அமைதி) ஓ!  கீது! நீயா? ஸாரிப்பா...”

“ஹேய்! என்னாச்சு? என் நம்பர கால் பண்ணிட்டு “கீது நீயான்னா? என்னாச்சுப்பா, உனக்கு?”

“இல்ல கீது, என் சொந்தக்காரப் பொண்ணு பேரும் கீதா தான். அவ இப்ப +2.  ஸோ அவளுக்கு எக்ஸாம் தொடங்கப் போறதுல்ல, “ஆல் தெ பெஸ்ட்” சொல்லலாம்னு பேர போட்டா அது உன் நம்பருக்கு கால் வந்துருச்சு...”

“பரவாயில்லை எனக்கும் அந்த “ஆல் தெ பெஸ்ட்” பொருந்தும்.  சொன்னா தப்பில்லை.”

“விளையாடறியா கீது?!  நீ என்ன பரீட்சை எழுதப்போற?”

“என்னப்பா பரீட்சை எழுதினாத்தான் “ஆல் தெ பெஸ்ட்” சொல்லுவியா?  நான் தினமுமே பரீட்சை எழுதிக்கிட்டுத்தான் இருக்கேன்.  வாழ்க்கைப் பாடம் படிச்சுக்கிட்டுத்தானே இருக்கேன்.  வயசு 50 ஆனாலும், மரணம் வரை இந்த வாழ்க்கைப் பாடம் தொடருமே!  இதுதான் கஷ்டமான பாடம்பா....”

“ஆமாம் ல.....அப்ப .என்னையும் அந்த லிஸ்டுல சேத்துக்க! அப்ப, “ஸேம் டு யூ” னு சொல்லு”

“ஹஹஹ்ஹஹ...சரி, நீ என்ன பண்ணற, அந்த கீதா பொண்ணுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லு.  சரிதான்.  ஆனா அதை விட முக்கியம் அந்தப் பொண்ணு வாழ்க்கைப் பாடத்தக் கத்துக்கிட்டு, அதைக் கடந்து வரதுதான் ரொம்ப முக்கியம். அந்த பொண்ணு மட்டும் இல்ல, இப்ப இருக்கற தலைமுறைக்கு...வாழ்க்கைப் பாடம் ரொம்பவே முக்கியம். அந்தப் பொண்ணுக்குத் தமிழ் தெரியுமா?  தமிழ் தெரிஞ்சா, இல்லல்ல அதை விட அந்தப் பொண்ணோட அப்பா, அம்மாக்குத் தமிழ் தெரியுமானா, அவங்கள் எங்க ப்ளாகர் ஃப்ரென்ட் “முத்து நிலவன் ஐயா” அவரோட புத்தகம் “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே” http://valarumkavithai.blogspot.com/2014/06/blog-post_16.html படிக்கச் சொல்லு.  புரிஞ்சுக்க “வாசிக்க” இல்ல “படிக்க” சொல்லு.

“நிச்சயமா...ஓகேப்பா..அப்புறம் கூப்பிடறேன்.”

      உரையாடல் முடிந்தது.  ஆனால், என் சிந்தனைகள் தொடர்ந்தன.  இந்தப் ப்ளஸ் 2 தேர்வுதான் நம் வாழ்க்கையையே முடிவு செய்வது போல், பல மாணவச் செல்வங்களும், பெற்றோர்களும் முடிவுக்கு வருகின்றனர்.  

    +2 என்பது மிகவும் முக்கியம் தான். ஒரு குழந்தையின் எதிர்காலக் கல்வி, தொழில், சமூக அந்தஸ்து, போன்ற பலவற்றை நிர்ணயிக்க. ஏன் அதன் முடிவுகள் நம் வாழ்க்கையை, எதிர்காலத்தையே கூட மாற்றி அமைக்கலாம். என்றாலும் அதுவே முடிவல்ல. தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை, குறைவான மதிப்பெண்கள் என்றால் தான் விரும்பியத் துறை அல்லது தேவையானத் துறை கிடைக்காமல் போவதனால்  ஏற்படும் விரக்தி என்று. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் எண்ணங்களை மனதில் வாங்காமல், தாங்கள் நினைக்கும் துறையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குழந்தைகளை வற்புறுத்துதல் என்று ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் மன உளைச்சல் ஒரு தொடர்கதையாகி வருகின்றது. 

      மகனுக்கு அவன் நினைத்தது தற்போது நடக்கவில்லை. நான் அவனுக்குச் சில நட்புடனான அறிவுரைகள் சொல்லி, மனதை சமநிலையில் வைத்துக் கொள்ளச் சொன்னேன். 

      “அம்மா, டோன்ட் டாக் ஃபிலாசஃபி டு எ பெக்கர்” இதை நீதான் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றாய். னௌ ஐ யாம் அ பெக்கர்” (Don’t talk philosophy to a beggar.  Now I am a beggar)

      “ஆம்! பசியோடு இருக்கும் ஒருவரிடம்  தத்துவம், அறிவுரைகள் பேசிக் கொண்டிருந்தால், அவரது அறிவிற்கு எட்டாதுதான். (பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கான மணி அடித்த பின்னும் கூட, சில ஆசிரியர்கள் பாடம்/அறிவுரை நடத்திக் கொண்டே போவார்கள், மாணவச் செல்வங்களின் பொறுமையை சோதிக்கும் அளவு. இந்த இடத்தில் வள்ளுவனார்???!!!) அது பல நாட்கள் பட்டினியாக இருப்பவர்க்குத்தான். நீ இப்போது பெக்கர் அல்ல.  உன் அறிவு மழுங்கிவிட்டதா? இல்லையே.  முயற்சி செய். நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றாயோ அதற்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள். அடித்தளம் உறுதியாக இருந்தால், அதனை மேலே உயர்த்துவது எளிது.  நிச்சயமாக நீ விரும்புவது கிடைக்கும். மனதை சமநிலையில் வைத்து யோசித்துப் பார்.  தீர்வுகள் பளிச்சிடும். வாழ்க்கையைக் கடக்க பொறுமை தேவை.  உனக்கு அது நிறையவே இருக்கின்றதே.  இழந்திடாதே”

      நம் வாழ்க்கை கல்வி சார்ந்ததென்றாலும், தொழில் சார்ந்ததானாலும், தனிப்பட்ட வாழ்க்கையானாலும் எல்லாம் கலந்தது தானே வாழ்க்கைப் பாடம்! கொடுக்கப்பட்ட ஆறறிவிற்கு நியாயம் கற்பிக்கும் வகையில், நம்மை முதலில் ஒரு நல்ல மனிதனாக, மனித நேயம் மிக்க மனிதனாக, நல்ல விதத்திலான ஆளுமைத் திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கிக் கொள்ளுவதும், அடுத்தத் தலைமுறையினருக்கும் அதைக் கற்பித்து வழி நடத்துவதும்தானே நமது தலையாய கடமை!

      பெற்றோர்களும், பெரியவர்களும், தங்கள் குழந்தைகளைத் தங்களது வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கும், குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் அறிவு பூர்வமாகச் சிந்தித்து முடிவு எடுக்கவும், வாழ்க்கையை எதிர்கொள்ளவும், அந்தத் திறனை வளர்க்கவும் கற்றுக் கொடுத்திடல் வேண்டும். வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் அறிவையும், எண்ணங்களையும் சொல்லிக் கொடுத்திடல் வேண்டும். ஒரு சிலவற்றைக் கற்றுக் கொடுத்திடலாம்.  சிலவற்றை பெற்றோர்களும், பெரியவர்களும் மாதிரிகளாக இருந்து வழி நடத்த வேண்டி வரும்.  சிலவற்றைப் போதிக்க வேண்டிவரும்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் தான் அமைந்துள்ளது நமது பாடத் திட்டங்கள். குழந்தைகளைப் பாட புத்தகப் புழுக்களாகவும், ஆமையும், முயலும் கதையில் வருவது போன்ற ஓட்டப்பந்தயம் போன்றும், வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் ஒன்றாக மட்டுமே அமைந்துள்ளது. சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்கு உதவுவதாக இல்லை. வாழ்க்கைப் பாடம் என்பது எளிதல்ல. பல சிக்கல்கள் நிறைந்தது.  முள்ளினால் ஆன பாதைகளும் வழியில் உண்டு.  அவற்றை எப்படிக் கடந்திட வேண்டும் என்பதுதான் கற்க வேண்டிய ஒன்று. அனுபவப் பாடம் மிகவும் இன்றியமையாதது. வெற்றி, தோல்விகளுக்கு நாம் அளவிற்கு மீறிய  முக்கியத்துவம் கொடுத்தால், அவை பொறாமை, ஆணவம், கர்வம், கோபம், பழிவாங்கும் உணர்ச்சி போன்ற, ஒரு மனிதனின் நல்ல ஆளுமையை வளரவிடாமல் தடுக்கும் குணங்களுக்கு வழி வகுக்கும்.

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று பலரும் சொல்லுவதைக் கேட்டிருப்போம்.  வாழ்க்கையில் எதை ஜெயிக்க வேண்டும்? யாருடன் போட்டி போடுகின்றோம்? படிப்பு என்றால் முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண், அவளை/அவனை விட அதிக மதிப்பெண் என்று போட்டியாகச் சொல்லலாம்.  பந்தயம் என்றாலும் ஜெயித்தல் என்பது பற்றிப் பேசலாம்.  அலுவலகம் என்றாலும் கூட ஜெயித்தல் என்பது பதவி உயர்வு என்பதன் அடிப்படையில் பேசலாம்.  ஆனால், வாழ்க்கையில்/ தனிப்பட்ட வாழ்க்கையில், எதை?  யரை ஜெயிப்பதற்காக, இல்லை தோற்கடிப்பதற்காக வாழ்கின்றோம்? நம் பெற்றொருடன்? கணவன், மனைவிக்குள் போட்டி? இல்லை குழந்தைகளுடன் போட்டியா? வெற்றி, தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லையே! ஒப்பிட்டுப் பார்த்து வாழ்தல், ஒருவரின் வாழ்க்கையோடு மற்றொருவரின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்து வாழ்தல் என்பது மிகவும் கீழ்தரமான ஒன்று. அதை ஒரு அளவு கோலாக வைத்து வாழ்தல் மிகவும் அறிவிலித்தனமான செயல். எது அளவு கோல்? அதற்கு ஒரு எல்லை இருக்கின்றதா?

கல்வியானாலும், அலுவலகமானாலும், தொழிலானாலும், நாம் மற்றவரை விட உயர்ந்து முன்னே சென்றால், அதனை வெற்றி என்று சொல்லுகின்றோம்.  எதை வைத்து அளக்கின்றோம்? சரி, அந்த வெற்றி நிலையானதா?  எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்? நிரந்தரமாக? இல்லை.  இல்லவே இல்லை.  ஒன்றில் வெற்றி என்று சொல்லப்படலாம்.  வேறொன்றில் அது தோல்வியைத் தழுவலாம். அதாவது சமுதாயத்தின் பார்வையில், அளவு கோலில். வெற்றி என்று சொல்லி பெறுபவர்கள் எல்லோருமே, என்றுமே முதல் நிலையில் இருப்பதில்லை. சறுக்கல்களும் நேரிடுவதுண்டு. எத்தனை பேர் இதனால் மன அழுத்தம் என்பதற்கு ஆளாகி, மன நிலை பிறழ்ந்து  போகின்றனர்!

வெற்றி, தோல்விகள் நிரந்தரமானது அல்ல. அவை காலச்சக்கரத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கும். இவை நமது தலையில் ஏறாமல் கவனமாக இருத்தல் வேண்டும். எனவே நாம் நமது மன நிலையை சம நிலையில் வைத்துக் கொண்டு, நமது வாழ்க்கைக்கான இலட்சியங்கள், கொள்கைகள், என்று நாமே வரையறுத்துக் கொண்டு, அதை நோக்கிப் பயணிக்கும் சமயம், அன்புடனும், மனித்ததுடனும், நேர்மையுடனும் பயணித்து, மனம் தளராமல், சோர்வடையாமல் எதிர்வரும் இடர்களை, முட்டுக்கட்டைகளைத் தைரியமாக எதிர்கொண்டு, தகர்த்து வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு, எந்தச் சூழலிலும் நீந்தி, அனுபவித்து, மகிழ்வுடன் வாழக் கற்போம், அடுத்தத் தலைமுறையினருக்கும் கற்றுக் கொடுப்போம்! வாழ்க்கை வாழ்வதற்கே! ஆல் த பெஸ்ட்! மாணவச் செல்வங்களே!  செல்வங்களுக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் தான்!! ஆம்! வாழ்க்கைப் பாடங்களைக் கற்று வாழத்தான்!

Image result for SUCCESS AND FAILURE IN LIFE
- கீதா

படங்கள் : courtesy -  google images

வியாழன், 26 மார்ச், 2015

எங்கள் வீட்டிற்கு வந்த "MADE FOR EACH OTHER" தம்பதிகள்!!!

             “வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு? இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்?”

அவன் அசடு வழியத் தலையைச் சொறிந்தான். அவன் மட்டும்தான் வந்திருக்கின்றான் என்று நினைத்தால், பின்னாலேயே,

“ராணி!  நீயும் வந்திருக்கியா! வாம்மா வா! அட! மடில கைக் குழந்தை வேற! எப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க? சொல்லவே இல்ல! ம்ம்ம் வாங்க வாங்க உக்காருங்க....”   ராணியும் அசடு வழியத் தலையைச் சொறிந்தாள்!

எங்கள் வீட்டிற்கு இன்று இந்தக் காதல் ஜோடியின் வருகை. அதுவும் ஒரு வருடத்திற்குப் பிறகு. சென்ற வருடத்தின் முதல் பகுதியில் செம டூயட்தான்.  மரத்தைச் சுத்தி, சுத்தி. விருந்தினர் எங்களுக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரர்கள்தான். பையனின் பெயர் ராஜா.  நல்ல கொழுக் மொழுக் என்று இருப்பான். பெண்ணின் பெயர் ராணி. அவளுக்கென்ன குறைச்சல். அவளும் கொழுக் மொழுக் அழகி!

from yutube - This song is dedicated to our Made For Each Other  guests
இனி இவர்கள் காதல் ஜோடி அல்ல...காதல் தம்பதியர்! அதனால் தான் சென்ற ஒருவருடமாக ஆட்களைக் காணவில்லை போலும். இப்போது கைக்குழந்தை வேறு.  உட்கார்ந்தவர்கள் அங்குமிங்குமாகப் பார்த்தார்கள். 


“என்ன தேடுகின்றீர்கள்?  ஓ! ஸாரி! வெயில் என்னமா அடிக்குது. வெயில்ல வந்தவங்களுக்கு முதல்ல தண்ணி கூடக் கொடுக்காம நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்கேன்ல?!  இந்தாங்க, ரெண்டு பேரும் தண்ணி குடிங்க முதல்ல”


வந்த விருந்தினர்களுக்கு சாப்பிட என்ன கொடுக்கலாம் என்று சமையலறைக்குள் சென்று தேடினேன்.  சின்னஞ்ச் சிறுசுங்க! நொறுக்ஸ், கொறிக்ஸ் கொடுக்கலாமே என்று பார்த்தால் எதுவுமே இல்லை. நம்ம வீட்டுல எல்லாமே டயட் ஆச்சே!  என்ன இருக்கும் சொல்லுங்க!  பார்த்தால் காரட், வெள்ளரிக்காய், கோஸ், முள்ளங்கி, வெங்காயம், வெந்த வேர்க்கடலை, பொரி என்று பீச் சுண்டலுக்கு ரெடியாக இருந்தது. பார்த்தேன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கலந்து எடுத்துக் கொண்டு சிறுசுகளுக்குக் கொடுக்கச் சென்றால்...காணக் கண்கொள்ளாக் காட்சி. ம்ம்ம் காதல் ஜோடிகளுக்கு ஒரு வருடம் தானே ஆகின்றது..ஒரே கொஞ்சல்ஸ். இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் கொஞ்சிக் கொண்டதும், குழந்தையையும் கொஞ்சியதும் பார்க்க சந்தோஷமாக இருந்தது. நான் கொடுத்த சாலட் கூட அவர்களின் கண்ணில் படவில்லை.  அத்தனை அன்பில் அவர்கள் ஆழ்ந்திருந்தார்கள். அவர்கள் அவர்களது உலகத்தில் இருக்கட்டும், அவர்களை எதற்கு இடையில் நுழைந்து....என்று எண்ணி, சற்று விலகி கிளிக்கத் தொடங்கினேன்.


காணொளி சுவாரஸ்யமாக எடுத்தேன். சுவாரஸ்யத்தில், அதுவும் காணொளி எடுப்பதில் கவனமாக இருந்து ஃப்ரேம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதில் கவனம் செலுத்தியதால் அவர்கள் கொஞ்சம் அத்துமீறியதைக் கவனிக்கத் தவறிவிட்டேன்.  அத்துமீறுதல் என்றால் ஓவராக எல்லாம் போய்விடவில்லை. அவள் மடியில் குழந்தை வேறு! அதனால், கொஞ்சம் அப்படியும் இப்படியுமாக இருந்தார்கள் குழந்தைகள்! காணொளி எடுத்துவிட்டுப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. எடிட் பண்ண முடியவில்லை நேரம் இல்லாததால்.  இயற்கைதான். இருந்தாலும் சென்சார்! எனவே புகைப்படங்கள் மட்டுமே! எங்கள் விருந்தினர்களை நீங்களும் பாருங்களேன்!


 என்ன எங்கள் விருந்தினர்கள் “Made For Each Other” காதல் தம்பதியினர் தானே?!!! கொஞ்சம் பாத்துச் சொல்லிட்டுத்தான் போங்களேன்! முகநூலில் மட்டும்தான் லைக் போடுவீங்களோ?!  இங்கேயும் தான் ஒரு லைக் போட்டுட்டுப் போங்களேன்.  ஜோடிங்க சந்தோஷமா இருக்குமில்லையா நம்மளையும் லைக் பண்ணறாங்களே மனுஷங்க அப்படின்னு!!!

- கீதா

வெள்ளி, 20 மார்ச், 2015

காதலுக்கு கண் மட்டுமல்ல, மூளையும் இல்லை....


கூகுளிலிருந்து.

                “ரூம் நம்பர் 3 ல் ஒரு மாணவி தேர்வு எழுத வரவில்லை.” உடனே ப்ரின்ஸிபல் நிஷா டீச்சர் “யாரது” என்று விசாரிக்க, தேர்வு எழுதிக் கொண்டிருந்த மற்ற மாணவிகள், “அது ஆத்மபிரபா” என்றார்கள். ஆத்மப்ரபா 9.15 ற்குப் பள்ளிக்கூட வாசலில் கலங்கியக் கண்களுமாய் நின்றிருந்ததாகவும், காரணம் கேட்ட போது, “ஹால் டிக்கெட் எடுக்கவில்லை. அப்பாவிடம் ஃபோன் செய்து சொல்லி இருக்கிறேன்.  அவர் ஹால் டிக்கெட்டுடன் வருகிறார். நீங்கள் போங்கள். நான் வருகிறேன்.” என்று சொல்லியதாகச் சொன்னார்கள்.  உடனே பிரின்ஸிபல் நிஷா, அவளை அழைத்துவர பள்ளிக்கூட வாசலிற்கு ஓடினார்கள்.

      வொக்கேஷனல் ஹையர்செகண்டரி பொதுத் தேர்வு பணிக்காக, பாலக்காடு நெம்மாரா, அரசு மகளிர் வொக்கேஷனல் ஹையர் செகண்டரி பள்ளியில், டெபுடி சீஃப் சூப்பரிண்டென்ட் ஆக நியமிக்கப்பட்ட எனக்கு, 09-03-2015 முதல் எல்லாத் தேர்வுகளுக்கும் எல்லா  மாணவிகளும்  அன்று  வரை  வருகை தந்து இருந்ததால் மகிழ்ந்திருந்த நான், அம்மாணவி சிறிது தாமதித்தாலும் வந்து தேர்வு எழுத வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொண்டேன்.  ஃபோன் செய்தபடி பிரின்சிபல் மட்டும் தனியாக நடந்து வருவதைக் கண்டதும் அருகே ஓடினேன். எல்லாத் தேர்வு அறைகளுக்கும் வினாத் தாள்களைக் கொடுக்க,  அங்குள்ள தேர்வு கண்காணிப்பாளரை ஏற்பித்துவிட்டதால், அதன் பின் நான் இடையிடையே ஒவ்வொரு தேர்வு அறைக்கும் சென்று கண்காணித்தால் போதும் என்பதால், அவர் தொலைபேசியில் பேசுவதைக் கவனமாகக் கேட்டேன்.

 “என்ன? ஹால்டிக்கெட் அவளது பையில் இருந்ததா? அவளது அப்பா, அவளைப் பள்ளிக்கூட வாசலில் கொண்டு விட்டபின் திருச்சூர் சென்று விட்டாரா? பின் ஏன் அவள் அப்படி ஒரு பொய் சொல்லி வெளியில் நிற்க வேண்டும்? தேர்வு தொடங்கி விட்டது.  அவளை வெளியே காணவில்லை”

அப்படியானால், ஹால் டிக்கெட் எடுக்க பதட்டத்துடன் வீட்டிற்கு ஓடிப்போகும் வழியில் ஏதேனும் விபத்து நேர்ந்திருக்குமோ?....யாரேனும் கடத்திச் சென்றிருப்பார்களோ....? இப்படி மனதில் செய்தித் தாள்களிலும், திரைப்படங்களிலும், வாசித்த, கண்ட, மனதை பீதியில் ஆழ்த்தும் சம்பவங்கள் வந்து மறைந்தன.

      “என்ன?...இப்படி ஏதாவதுப் பிரச்சினை என்றால், அவளை என்னிடம் ஏற்பித்து விவரம் சொல்லிச் செல்ல வேண்டாமா?...நான் அவளது தேர்வு முடிந்த பின் அவளை நீங்கள் வரும் வரை ஆஃபீஸில் நிறுத்தி இருப்பேனே?.....இல்லையேல் நீங்கள் யாரேனும் இங்கு தேர்வு முடியும் வரை காத்திருந்துக் கூட்டிச் சென்றிருக்கலாமே? ....அவன் யாரென்று  தெரியுமா?....அது சரி அவனையும் அவர் வீட்டாரையும் தெரியுமா?....அப்படியானால், இனியும் தாமதிக்க வேண்டாம். உடனே போலீசில் புகார் கொடுக்க வேண்டும்.” 

பிரின்சிபாலின் இவ்வார்த்தைகளிலிருந்து, எனக்கு ஓரளவு நடந்த சம்பவங்களை ஊகிக்க முடிந்தது.  17 வயதான ஆத்மபிரபா, அவளது வீடருகே உள்ள ஒரு இளைஞனுடன், பரீட்சை எழுதாமல், வீட்டார்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு எங்கோ சென்று விட்டாள். காதலுக்குக் கண் மட்டுமல்ல, மூளையும் இல்லைதானே. இல்லையேல், இந்த வயதில், தேர்வுக்கிடையில், அந்த ஆத்மப் பிரபாவிற்கு இப்படிச் செய்யத் தோன்றுமா? 

ஆத்மபிரபா வீட்டிற்கு மூத்த மகள்.  அப்பாவுக்குச் செல்ல மகள்.  பள்ளியில் கலை மற்றும் நடனத்தில் தன் திறமையைக் கடந்த ஆறு வருடங்களாக நிலை நாட்டிக் கொண்டிருப்பவள்.  10 ஆம் வகுப்பில், உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவிகளில் ஒருவளாக இருந்தவள். மேல்நிலை வகுப்புக்கு வந்ததும் முதலாண்டில் எல்லா பாடங்களிலும், சிரமப்பட்டுத் தேர்ச்சிப் பெறவே முடிந்தது.  வீட்டார்களின் கவனக் குறைவாக இருக்கலாம்.  இல்லையேல், முந்திரிக் கொட்டை போல் முளைத்தக் காதல் படிப்பிலுள்ள ஆர்வத்தைக் குறைத்து இருக்கலாம்.

சிறிது நேரத்தில் அழுது கொண்டே பள்ளிக்கு வந்த, 40 வயதான அந்தத் தாயைக் கண்டதும் எங்கள் கண்களிலும் நீர் நிறைந்தது.
 
“நாங்கள் அவளை அடித்தும் கெஞ்சியும் எவ்வளவோ சொல்லியும் பயனில்லாமல் போனதே.  தேர்வு கூட எழுத விட வேண்டாம் என்று தீர்மானித்திருந்தோம், இப்படி ஏதேனும் நடக்குமோ என்ற பயத்தில்.  ஆனால், அவள், அழுது மன்றாடி, “என் ஒரு வருடம் வீணாகும்” என்றுசொன்னதால் தான் அவள் அப்பா அவள் வார்த்தைகளை நம்பி பள்ளிக் கூட வாசல் முன் இறக்கிவிட்டுச் சென்றார்.  ஆனால், அவள் இப்படி ஒரு சதி செய்வாள் என்று நாங்கள் சிந்திக்கவே இல்லை. ஒரு நல்லவனுடன் போனாள் என்றால், மனதுக்கு ஒரு சமாதானமாவது உண்டாகும்.  ஆனால், அவன் ஒரு போதை மருந்து உபயோகிப்பவன் என்பதை நினைக்கும் போது தாங்க முடியவில்லை.” என்று சொல்லித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.  உடனே, இனி நேரத்தை வீணாக்காமல், நேராகக் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கச் சொன்னோம்.  தகர்ந்து போன மனதுடனும், தளர்ந்து போன உடலுடனும் நடந்து செல்லும் அவரது உருவம் அவ்வளவு சீக்கிரம் என் மனதை விட்டு அகலப் போவது இல்லை. 

கண்ணை இமை போலும் காக்கும் என் பெற்றோர் எனக்கு ஏற்ற ஒரு வாழ்க்கைத் துணையை  நேரம் வரும் போது தேடித் தருவார்கள் என்று சிந்திக்கக் கூடிய மனப் பக்குவம் அந்தப் பதினேழு வயது ஆத்மபிரபாவுக்கு இல்லாமல் போனதே என்று மனம் பதறுகிறது.

தன் மகளிடம் வந்த சிறிய மாற்றத்தை, அந்தப் பெற்றோர்கள் கவனித்து, அதன் காரணமானக் காதலை அறிந்து அவளை அதிலிருந்து மீட்கத் தவறிவிட்டார்களே அந்தப் பெற்றோர்கள் என்று மனம் பதைக்கிறது.

      இதை எல்லாம் விட விபரீதமாக ஒன்றும் நடக்காமல் எல்லோரது வருத்தத்தையும் போக்கும் வகையில், பிரச்சினை இல்லாமல், ஒரு அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு ஆத்மப் பிரபாவிற்குக் கிடைக்க வேண்டும் என்று மனம் ஏங்குகின்றது. – அப்படிப் பட்ட ஒரு வாழ்வு அவள் நம்பிச் சென்ற அந்த வாலிபனுடன் ஆனாலும் சரி, இல்லையேல் அவனிடமிருந்துத் தப்பி வேறு ஏதேனும் நல்ல இதயமுள்ள மனிதனுடன் ஆனாலும் சரி.  அதற்காக மனம் உருகி இறைவனிடம் வேண்டுகிறேன்.  நீங்களும் வேண்டிக் கொள்ளுங்களேன். 


பின் குறிப்பு :  இது போல்தான் வேறு ஒரு சம்பவம், 10 வருடங்களுக்கு முன் ஒரு கீதாவுக்கு (எங்கள் கீதா இல்லை) நேர்ந்தது.  பெற்றோர் வயிற்றில் தீயை அள்ளிப் போட்டு, ஒரு ஆட்டோ டிரைவருடன், இறுதித் தேர்வு முடிந்த்தும் ஓடிப் போன அவளை, ஒரு மாத்ததிற்குப் பிறகு, பெற்றோர்கள் கண்ணூரிலிருந்துக் கூட்டி வந்து, 3 ஆண்டு படிக்க வைத்து அதன் பின் மணம் முடித்து வைத்து, இப்போது சென்னையில் ஒரு குழந்தையுடன் சுகமாக வாழ்கின்றாள்.  

செவ்வாய், 17 மார்ச், 2015

ஆணுக்குப் பெண் இளைப்பில்லைக் காண் என்றுக் கும்மியடி...?!?

Image result for men and women equal
மார்ச் 8 பெண்கள் தினம். ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவதைப் போன்று இவ்வருடமும், எல்லோரும் வாழ்த்துக்கள் தெரிவித்து, ஊடகங்களாகிய, இதழ்களில் முக்கியமாகப் பெண்கள் இதழ்களில் கட்டுரைகள் எழுதப்பட்டு, தொலைக்காட்சிகளில் விவாதங்கள், பேச்சுக்கள், பெண்கள் தினம் என்பதற்குச் சம்பந்தமே இல்லாமல், ஆனால் பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்று திரைப்படங்களும் ஒளிபரப்பப்பட்டு, வலைகளில் பதிவுகள் பல இடப்பட்டு, விழிப்புணர்வு என்று பேசப்பட்டு, ஒரு வழியாக முடிவடைந்தது. 

நானும் ஒரு பெண்தான் என்றாலும் ஏனோ பெண்கள் தினம் என்றுத் தனியாக ஒரு தினம் அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுவதில் ஒப்புதல் இல்லை. ஏனென்றால் அதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதே எனது தாழ்மையானக் கருத்து. ஏன்? இந்தப் பெண்கள் தினமும், நம் சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் பிற தினங்கள் போன்றுக் கொண்டாடப்பட்டு, சாதாரணமாகக் கடந்து போகின்றது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினம் என்றால், தினமுமே அந்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஏனென்றால், எல்லா தினமுமே பெண்கள் தினம் தான் ஒரு பெண்ணிற்குள், ஆண்மையும், ஆணிற்குள் பெண்மையும் கலந்து தான் இருக்கும். அதை விளக்குவதுதான் அர்த்தநாரீஸ்வரத் தத்துவம். இது மட்டுமல்ல, இந்த உலகில் தினமுமே ஏதோ ஒரு இடத்தில், மூலையில் பெண்கள் மிதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்! இதோ விஷயத்திற்கு வருகின்றேன்.

பெண்கள் தினத்தன்று காலையில் வாசலில் போடப்பட்டிருந்த பால் பாக்கெட்டை எடுக்கச் சென்ற போது, ஒரு முனகல் சத்தம்.  பூனையின் சத்தம் போல இருந்ததால் பூனை என்று திரும்ப யத்தனித்த போது மீண்டும் அந்த சப்தம் என்னை ஏனோ எங்கிருந்து வருகின்றது என்று தேடவைத்தது.  உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு தொடர்ந்த போது, வீட்டின் எதிரில் இருந்தக் குப்பைத் தொட்டிக்கு அருகில் இருந்து வந்தது. சரி ஏதோ பூனை அடிப்பட்டுக் கிடக்கின்றது போலும், எடுத்து வந்துக் காப்பாற்றலாம் என்று நினைத்து உற்றுப் பார்த்தால் அதிர்ச்சி. அது ஒரு பெண் குழந்தை! தொப்புள் கொடி போலும் உதிராத நிலையில். பிறந்து ஓரிரு நாட்களோ, இல்லை சில மணி நேரங்களோதான் ஆகியிருக்க வேண்டும். அருகில் நாய் ஒன்று அதை முகர்ந்து பார்த்து நக்கத் தொடங்கியது.  அதைப் பெற்றவளும் ஒரு பெண் தானே! அந்தப் பெண் வறுமையினால் எறிந்தாளா? மன நிலை சரியில்லாதவளா? இல்லைத் தவறுதலாக, அப்பன் யாரென்று தெரியாமல் பிறந்தக் குழந்தையாக?  இல்லை அப்பன் ஏற்றுக் கொள்ளாமல், இந்தக் கேடு கெட்டச் சமூகத்தை எதிர் கொள்ள சக்தியில்லாமல் அந்தப் பெண் எறிந்திருப்பாளா? இல்லை பெண் குழந்தை என்பதாலா?

விடை கிடைக்காமல் அந்தக் குழந்தையை வீட்டிற்குள் எடுத்து வந்து, எங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண் மருத்துவரைத் தொடர்பு கொண்டு அந்தக் குழந்தைக்கு முதலில் தேவையான முதலுதவியைச் செய்துவிட்டுப் பின்னர், அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்குச் செல்லும் முன், வக்கீலாக இருக்கும் எங்கள் குடும்ப நண்பரைத் தொடர்பு கொண்டேன். என்னைப் பொறுத்தவரை, அந்தக் குழந்தை, சமூகக் கிருமிகளின் கையில் சிக்கி விடக் கூடாது.  அதில் நான் உறுதியாக இருந்தேன்.

இப்படி அனாதையாகக் கிடக்கும் குழந்தைகள் யார் கண்ணிலும் படவில்லை என்றால், சமூகக் கிருமிகள் குழந்தைகளைப் பிச்சை எடுப்பவர்களாக ஆக்கிவிடுவார்கள், அதுவும், கண்ணையோ, கையையோ, காலையோ சிதைத்து, இல்லை என்றால் வளர்த்து, சிவப்பு விளக்கிற்குத் தாரை வார்த்து விடுவார்கள். இல்லையேல் தாங்களே பலாத்காரம். எனவே, நான் அந்தக் குழந்தையை பாதுகாப்பான சிறார் இல்லத்திலோ, இல்லை, கிறித்தவக் காப்பகத்திலோ ஒப்படைத்து, அவர்கள் பின்னர் சட்ட ரீதியான முறைகளைக் கையாளட்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். (ஏன் நீயே எடுத்து வளர்க்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். தற்போதைய நிலைமை, சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லாததால்) வக்கீல் நண்பரும் எனது ஆதங்கத்தைப் புரிந்து கொண்டதால், தான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொல்லிக் குழந்தையை எடுத்துச் சென்றார். குழந்தை இப்போது நல்ல உள்ளங்களின் கையில். மருத்துவப் பராமரிப்பிலும் இருக்கின்றது. சட்ட ரீதியிலான சிக்கல்கள் தீர்ந்ததும் அந்தக் குழந்தை அயல்நாடு சென்றுவிடும். ஒரு சில காரணங்களால், முழுத் தகவல்களையும் இங்கு என்னால் தர இயலவில்லை.

இப்படி, எத்தனை அனாதைக் குழந்தைகளோ? அன்று பிறந்த பெண் குழந்தைகளை வரவேற்க முடியவில்லை.  அவர்களது எதிர்காலம் குறித்த கவலை வரத்தான் செய்கின்றது. பெண்கள் தினம் என்று சொல்லப்படும் தினத்தில் கூட, எத்தனைப் பெண் குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டார்களோ? எத்தனை குழந்தைகள், பெண்கள், மூதாட்டிகள் ஆதரவற்றவர்கள் ஆனார்களோ? இது பெண்களுக்கு மட்டும்தான் என்று நினைக்க வேண்டாம்.  ஆண்களுக்கும் தான்.  ஆனால், அது அவ்வளவாகப் பேசப்படுவதில்லை.

என்ன காரணம்? ஆணும், பெண்ணும் சமம் என்று நமது சமூகத்திலும், வீடுகளிலும் வளர்க்கப்படுவதில்லை.  பார்க்கப்படுவதில்லை.  மதுரைத் தமிழன் சொல்லியிருந்தது போல், பெண்கள் எப்போதுமே நளினம் மிக்கவர்கள், பூப் போன்றவர்கள், மென்மையானவர்கள் என்று சொல்லிச் சொல்லி வீக்கர் செக்ஸ் என்று பதியப்பட்டு வளர்க்கப்படுகின்றார்கள். (இதைப் பற்றி ஒரு நல்ல பதிவு அவர்கள் உண்மைகள்

ஆண் என்றால் விலகி இருக்க வேண்டும், அதிர்ந்து நடக்கக் கூடாது, தலை குனிந்து அடக்க ஒடுக்கமாக நடக்க வேண்டும், பெண்கள் நடனம் தான் கற்றுக் கொள்ள வேண்டும், விளையாட்டுகளில் பங்குபெறக் கூடாது, ஏனென்றால் அவர்களது உடற்கூறு அப்படிப்பட்டது, பொம்பளைப் பிள்ளையா லட்சணமா இருக்கணும், என்று சொல்லப்பட்டே வளர்க்கப்படுகின்றார்கள். பெண் குழந்தைகள் என்றாலே, என்னதான் தற்போது கல்வி கற்று தன் காலில் நிற்கத் தொடங்கியிருந்தாலும், வெகு சீக்கிரமே, சிறு வயதிலேயே கூடக் கல்யாணம் செய்து அனுப்பி விட வேண்டும் என்றும் இன்னும் பல சமூகங்களில், பால்யத் திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

 பெரும்பாலான குடும்பங்களிலும், சமூகத்திலும், ஆண் குழந்தைகள் “நீ ஆம்பளைச் சிங்கம்டா”, ஆண்கள் வீறு கொண்டவர்கள், பல சாலிகள், வெளியில் எந்த நேரத்திலும் செல்லலாம், எங்கும் செல்லலாம் என்ற மனப்பாங்குடன் வளர்க்கப்படுகின்றார்கள்.  (சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று அபத்தமான ஒரு வசனம் வேறு. இந்தச் சிங்கங்கள் என்னவோ கூட்டமாக வந்துதான் பெண்களைச் சின்னா பின்னமாக்குகின்றார்கள்!)  பாவம்!  ஆனால், இயற்கையில் பெண்சிங்கம் தான் வேட்டையாடச் செல்லும். ஆண் சிங்கம் குட்டிகளைப் பார்த்துக் கொள்ளும், பெண் சிங்கம் வரும் வரை. பெண் சிங்கங்கள்தான் ஆண் சிங்கங்களை விட வலிமை வாய்ந்தவை என்று சமூகத்திற்குத் தெரியவில்லை! இரு சிங்கங்களும் சமமாகத்தான் இருக்கின்றன. விலங்குகளில் கூட ஆண் பெண் பேதம் இல்லை. மனித இனத்தில்தான்.

 ஆண் குழந்தைகள் தவறு செய்தால் கண்டிக்காமல், ஆம்பளனா அப்படித்தான் என்றும், பெண் பிள்ளைகள் தவறு செய்யும் போது அவர்களை அளவிற்கு மீறித் தண்டித்தல் இல்லை என்றால் கண்டிக்காமல் இருத்தல், ஆண் குழந்தைக்கும், பெண்குழந்தைக்கும் இடையில் சண்டைகள் வரும் போது, “பொம்பளைப் பிள்ளைல நீ விட்டுக் கொடுக்கணும்” என்றும் சொல்லப்பட்டுச், சொல்லப்பட்டு, ஆண்மை அளவிற்கு மீறி உசுப்பேத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றார்கள். இதில் வளர்க்கப்படும் எந்த அணுகு முறையுமே சரியில்லை. இதற்கு, இப்போது பரபரப்பாகப் பேசப்படும் “இந்தியாவின் மகள்” காணொளியில் பேசிய அந்தக் குற்றவாளியே சாட்சி. பொதுவாக, நம் சமுதாயத்தில் எப்படி ஆண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றார்கள் என்பதற்கு. அவன் கூறியதுதான் சரி என்று சில வக்கீல்களும் சொல்லுவதைக் கேட்கும் போது சிரிப்புதான் வருகின்றது. சரி அப்படியே இருக்கட்டும். அப்படி என்றால் வயதான பெண் அதுவும் கன்னியாஸ்த்ரீ 8 கயவர்களால் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். (சகோதரி தென்றல் கீதா அவர்களும் இதைச் சொல்லியிருக்கின்றார்கள்)இதற்கு என்ன பதில்?  இப்படிப் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் அதே சமயம் நாம் பெண்ணின் மறுபக்கத்தையும் சிறிது ஆராய வேண்டும். அனாதையான அந்தப், பிறந்த பெண் குழந்தை எந்த அபாயச் சூழலிலும் சிக்கிவிடக் கூடாது என்று நினைக்கும் அதே சமயம் பெண்களைப் பற்றிய வேறு சில எண்ணங்களும் பெண்ணாகிய என் மனதில் தோன்றத்தான் செய்கின்றது. மதிக்கத்தகுந்த பெண்களும் இருக்கின்றார்கள்! மதிக்க முடியாத அளவிலும் பெண்கள் இருக்கின்றார்கள்! 

பெண் என்றால் பேயும் இறங்கும் என்ற வசனம் மிகவும் சரிதானோ என்று எண்ண வைக்கின்றது. பெண்கள் இழிவுபடுத்தப்படுவது ஒரு புறம் இருந்தாலும், பெண்கள் என்றால் ஒரு சில விசயங்கள் கண்டும் காணாமலும் கடத்தப்படுகின்றது என்பதையும், சலுகைகள் அத்து மீறியும் வழங்கப்படுகின்றது என்பதையும் இங்குச் சொல்லியே ஆக வேண்டும். சாலையில் ஆண்களும், பெண்களும் சரிசமமாக வண்டிகள் ஓட்டுகின்றனர்தான்.  ஆனால், பெரும்பாலும் ஆண்களைத்தான் காவல் துறையினர் பிடிக்கின்றனர், தலைக் கவசம் போடவில்லை என்றாலும், உரிமம் மற்றும் வண்டியின் ஆவணங்களைச் சரிபார்க்கவும். பெண்கள் பெரும்பாலும் பிடிக்கப்படுவதில்லை. இதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு எத்தனைப் பெண்கள் உரிமம் இல்லாமல் வண்டி ஒட்டுகின்றார்கள் தெரியுமா? இது சாலையில் மட்டுமல்ல. உரிமம் வழங்கப்படும் இடத்திலும் கூட சலுகைகள் உண்டு! இது போன்று பல பொது இடங்களில் வரிசையில் நிற்கும் போதும் சலுகைகள். இந்தச் சலுகைகள் பெண்களைத் தங்களுக்குச் சாதகமாக அந்தச் சூழலை மாற்றவும், பெண் என்றால் எல்லோரும் கனிவு காட்ட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகளும் உருவாகின்றது. இது பொது இடங்களில் பல சமயங்களில் ஆண்களிடையே ஒரு சிறிய சலசலப்பை ஏற்படுத்துகின்றது. பெண்களைத் தரக் குறைவாகக் குறிப்பிடும் அளவிற்கு.  இதற்குக் காரணம் பெண்கள் தங்களுக்கு வழங்கப்படும் மரியாதையைச் சரியான விதத்தில் எடுத்துக் கொண்டு அதைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாததால்.

பெண்களே பெண்களுக்கு எதிரியாவதும் நடக்கின்றதே! பாட்டியாக, தாயாக, மகளாக, மருமகளாக, மனைவியாக, தோழியாக, சகோதரியாக, நாத்தனாராக இப்படிப் பல பொறுப்புகளில் இருக்கும் போது, தாயாக இருக்கும் அதே பெண் மாமியார் எனும் பொறுப்பைப் பெறும் போது அவளது மனம் மாறுகின்றதே!  மகள் என்பவள், மனைவி, மருமகள் என ஆகும் போது அவளது புதிய குடும்பத்தைப் பற்றியக் கண்ணோட்டம், அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்களைப் பற்றிய பார்வை மாறுகின்றதே. சகோதரியாக இருப்பவள் தன் சகோதரனின் மனைவி என்று வரும் பெண்ணின் மீதான பார்வை வேறாகின்றதே! அன்னையும் பெண்தான்.  அதே அன்னை தனது பெண்ணைப் பல சமயங்களில் இழிவு படுத்துகின்றளே! மனைவி தன் கணவனின் தாயோடும், சகோதரியோடும் நல்ல உறவைப் பலப்படுத்திக் கொள்ளாமல், கணவனைப் பிரிக்கும் போதும், கணவனின் பெற்றோரை அனாதை இல்லத்திற்கு அனுப்பும் போதும் அந்த ஆணிற்கு மனைவி என்ற பெண்ணின் மீது எப்படி மரியாதையும், அன்பும் வரும்? தனது அன்னையே, தனது மனைவியைக் கொடுமைப் படுத்தும் போது அந்த ஆணிற்குத் தன் அன்னையின் மீதிருக்கும் அன்பு வற்றிவிடுமே!

சமுதாயத்தை எடுத்துக் கொண்டால், பல ஆண்களின் காமப் பசிக்குப் பலியாக்குவதும், தன் குழந்தைகளை விற்பதும் அன்னை என்ற பெண்தானே!  பல பெண்களை, ஆண்களுக்குக் கூட்டிக் கொடுப்பவர், பெண்களைச் சிவப்பு விளக்கிற்கு விற்பவர் பெண்ணாகவும் இருக்கிறாரே! பெண் சிசுக்களைக் கொல்பவர்களும் பெண்களாக இருக்கின்றார்களே. பெண் குழந்தைகளைக் குப்பைத் தொட்டியிலோ, வீதியிலோ விடுபவர்களும் பெண்களே! 

பெண்ணியம் பேசுவதில் தவறில்லை.  ஆனால், பெண்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும் அதேசமயம், தங்கள் குடும்ப, சமூகப் பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து மனதில் கொள்ள வேண்டும். பெண்களுக்குப் பெண்களே எதிரியாக மாறுவதையும், இருப்பதையும்  நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பெண்களே சற்று யோசியுங்கள்.  மதர் தெரசா, டாக்டர் முத்துலட்சுமி, வேலு நாச்சியார் (சகோதரர் கரந்தையாருக்கு மிக்க நன்றி!) போன்ற, இன்னும் பல ஆளுமை மிக்கப் பெண்களும், தற்போதைய காலத்திலும் கூட பெண்கள் தினம் பற்றி ஒன்றும் தெரியாத, இராஜஸ்தானில் இருக்கும் பேர் கூடக் கேட்டிராத ஒரு சிறிய கிராமத்தில் உள்ள மக்கள் (ஆண்களும் அடக்கம்) “கடந்த எட்டு வருடங்களாக சிசுக்கொலைத் தடுப்பிற்கும், பெண்களின் வளர்ச்சிக்கும், கூடவே இயற்கையைக் காப்பதற்கும் சத்தமில்லாது ஒரு சாதனை செய்து வருகின்ற, கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் 111 மரக்கன்றுகளை நட்டு அதை வளர்க்கின்ற,  குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு மரங்களையும் சேர்த்து வளர்க்கின்ற” மக்களும் வாழ்கின்ற நாட்டில்தான் மேலே சொன்ன பெண்களும் வாழ்கின்றார்கள். (இந்தக் கிராமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இவரது பக்கம் செல்லுங்கள். வெங்கட்நாகராஜ்  (நன்றி வெங்கட் ஜி!) பெண்கள் தினம் என்பதைப் பற்றித் தெரியாமல் இப்படி ஒரு அருமையான மாற்றம், நம் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் சத்தமில்லாமல் நடக்கும் போது இதையே நாம் ஒரு முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளலாமே!


பெற்றோர்களே! உங்கள் பெண் குழந்தைகளை, இந்தச் சமுதாயத்தைத் தைரியமாக எதிர் கொள்ளவும், அநீதிகளுக்கு எதிராகப் போராடும், மன, உடல் வலிமை மிக்கவர்களாகவும், பிறர் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடத், தன் சுயமரியாதயைக் காப்பாற்றிக் கொள்ளக் கற்றுக் கொடுங்கள். ஆண், பெண் பேதம் பார்க்காமல் எல்லோரையும் நீங்களும் மதியுங்கள், குழந்தைகளுக்கும் எல்லோரையும் மதிக்கக் கற்றுக் கொடுங்கள். பெண்கள் இல்லையேல் இந்த உலகமே இல்லையே. அதே போன்று ஆண்கள் இல்லையேலும் இந்த உலகமே இல்லைதானே. இருவரும் சமம்தானே! நல்லவர்கள் ஆண்களிலும் இருக்கின்றார்கள்! கெட்டவர்கள் பெண்களிலும் இருக்கின்றார்கள்! இரு பாலோரையும் சமமாக மதிக்கக் கற்றுக் கொடுத்து, திடங் கொண்ட மனதுடன், அன்புடன் தோழமையுடன் வாழக் கற்று கொடுங்கள்! மலர்தரு அதுவே போதுமானது! ஒரு தினம் என்று கொண்டாடி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம் என்று சொல்லிவிட்டு பின் மறப்பதை விட, தினமுமே எல்லோரையும் மதிக்கும் நல்ல செயலை விதைத்து வேரூன்றி வளரச் செய்திடுவோமே!! 

-கீதா

படங்கல் - நன்றி கூகுள்