வியாழன், 26 ஜூன், 2014

சட்டம் செய்யாததை சமூகம் செய்யக் கூடாதா?!
 


        
 

      நாம் எந்த நூற்றாண்டில் வசித்துக் கொண்டிருக்கின்றோம் என்ற சந்தேகம் அடிக்கடி வருகின்றது! 21ஆம் நூற்றாண்டில்தானே? எந்த யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்?  விஞ்ஞான யுகம்தானே?  அப்படித்தானே சொல்லிக் கொண்டிருக்கின்றோம்? சந்திரனுக்கு "சந்திராயன்" ஏவும் நம் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது, நாம் உண்மையாகவே ராக்கெட் யுகத்தில் தான் இருக்கின்றோமா?  இல்லை இன்னும் சிக்கி முக்கி கற்களை உரசும், மனித மனம் முதிர்வடையாத, பண்படாத கற்காலத்தில் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் வருகின்றது!

      ஏன் இப்படிக் கேள்விகள்?  என்று நீங்கள் கேட்பது தெரிகின்றது!  இதோ இந்த நிகழ்வுகளை வாசியுங்கள்.  அப்போது புரியும் எங்கள் கேள்விகளின் அர்த்தம்.  நீங்களும் அதை ஆமோதிப்பீர்கள்!

நிகழ்வு 1. கர்நாடகத்தில், பெல்லாரியில், ஒரு ஊரில் தலித்துகளுக்கு சலூனில் முடி வெட்டக் கூடாதாம்!  ஆதிக்கச் சாதியினரின் கொக்கரிப்பு!  அதை மீறி முடித் திருத்தம் செய்த சலூன் கடைக்காரர்கள் 5 பேரை ஆதிக்கச் சாதியினர் தாக்கி, கடைகளைச் சேதப்படுத்தியிருக்கின்றனர்!  இந்த "So called"  ஆதிக்கச் சாதியினர், "தலித்துகள் முடிவெட்டிக் கொண்ட சலூனில் முடி வெட்டிக் கொள்ள மாட்டோம்" என்று தங்களுடைய சாதி சங்கங்களில் தீர்மானமும் எடுத்தார்களாம்! 
     ஏன் தலித்துகளும் மனிதர்கள்தானே? அவர்கள் வயலில் இறங்கி, விளைவிக்கும் தானியங்களைத்தானே நீங்கள் தின்கின்றீர்கள்?  கூலி வேலைகளுக்கு மட்டும் ஆதிக்கச் சாதியினர் இவர்களைப் பயன்படுத்திவிட்டு, உரிமைகள் என்று வரும் போது தள்ளி வைப்பது, "Use and Throw" இல்லையா?!  இந்தக் காலகட்டத்திலும் இப்படி சாதி பார்க்கும் கூட்டம் இருக்கும் போது இந்தியா சந்திராயன் விட்டால் என்ன? விண்வெளியில் மனிதர் பறந்து மிதந்தால் என்ன?  மனிதர்க்கு மனிதர் சம உரிமை இல்லாத நாட்டில், சாதி பேசும் நாட்டில், வளர்ச்சி, முன்னேற்றம், வல்லரசு என்றுக் கூறிக் கொள்ள வெட்கித் தலை குனிய வேண்டும்! 

      சமூக நலத்துறை எடுத்த முயற்சியால் கர்நாடக அரசு சலூன்காரர்களுக்கு  ரூ 50,000 வழங்கி, தொடர்ந்து தலித்துகளுக்கு முடி வெட்ட வேண்டும் என்றும் சொல்லி இருக்கின்றது!  சரி... கேள்வி இதுதான் ..நஷ்ட ஈடு கடை சேதமானதற்கும், தாக்கப்பட்டதற்கும்......முடி வெட்ட வேண்டும் என்றும் அரசு சொல்லியிருக்கின்றது......உயிர் சேதம் ஏற்பட்டால் என்ன நஷ்ட ஈடு வழங்கும் அரசு? எதைச் சரி செய்ய வேண்டுமோ அதைச் சரி செய்ய முயலாத, இயலாத அரசு, அது மத்திய அரசானாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி...இப்படித் தவறுவதால்தான் இன்னும் நம் நாட்டில் சாதி ஒழியவில்லை!  ஒரு வேளை கற்காலத்தில் இருந்திருந்தால் இந்த சாதிப் பிரச்சினைகள் இருந்திருக்காதோ?

 நிகழ்வு 2 : இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் முஸ்லிம் பெண்களுக்குத் தலைக் கவசம் அணிவது கஷ்டமாக இருப்பதால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டி கோரிக்கை, தலைநகரில்!  டெல்லியில் சீக்கியப் பெண்களுக்கு விதி விலக்கு அளிக்க அரசு உத்தேசித்து வருகிறதாம்.  அதனால், முஸ்லிம் அமைப்புகள், பெண்கள் பர்தாவும் அணிந்து, தலைக்கவசமும் அணிவது கஷ்டமாக இருப்பதைக் காரணமாகச் சொல்லி இந்தக் கோரிக்கை!  அரசும் உத்தேசிக்கின்றதாம்.  விபத்து நேரங்களில் உயிர் சேதம் அடையாமல் இருக்க வேண்டி அணிய வேண்டிய தலைக் கவசத்தைப் பெண்கள் அணிவதற்கு மத வழக்கம் தடையாக இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது! தலைக்கவசம் பாதுகாப்பிற்காகத்தானே அணிய வலியுறுத்தப்படுகின்றது! பர்தா அணிந்து தலைக்கவசமும் உபயோகிப்பது கஷ்டம் என்றால் எதை விடுப்பது நல்லது?  இரண்டையுமே விலக்காமல் சமயோசிதமாக சிந்திக்கலாமே!  வீட்டிலிருந்து இறங்கும் சமயம், பர்தாவை மட்டும் விலக்கி விட்டு தலைக்கவசம் அணிந்து வண்டி ஓட்டி, இறங்கும் சமயம் தலைக்கவசத்தை எடுத்துவிட்டு மீண்டும் பர்தாவை இட்டு முகத்தை மூடிக்கொள்ளலாமே! பர்தாவும் அப்படித்தானே தைக்கப்பட்டிருக்கும்!  இதை ஏன், முஸ்லிம் அமைப்புகள் சிந்திக்கவில்லை
நிகழ்வு 3: கல்வி என்பது எல்லோருக்கும் பொதுதானே! அது நிராகரிக்கப்படலாமா? கூடாது இல்லையா? இலங்கை அகதிகள் ஈரோடு முகாமைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவிக்கு ஏற்பட்ட நிலை மிகவும் வருத்தமான ஒன்று! ஏற்கனவே, தாயகம் விட்டு அகதியாக வேறொரு தேசத்தில் வாழும் நிலைமை. அவரது தந்தை, இலங்கை வட மாகாணத்தில், ஜாஃப்னாவைச் சேர்ந்தவர். இலங்கையில் ஈழத்துப் பிரச்சினை ஆரம்பித்து, போர் ஆரம்பித்த 1990 ஆம் வருடம் ஈரோடு அகதி முகாமில் வாழத் தொடங்கியவர். நந்தினி இங்குதான் பிறந்திருக்கின்றார்.  இங்கு தமிழ் நாட்டில்தான் ஆரம்பப் பள்ளியிலிருந்து படித்திருக்கின்றார். 
  
    அகதியாக வாழும் ஒரு சூழ்நிலையிலும் +2 தேர்வில் 1170 மதிப்பெண்கள் எடுத்து, (தமிழ்-187, ஆங்கிலம்-192, இயற்பியல்-198, வேதியியல்-198, கணிதம்-198, உயிரியல் -197) மருத்துவம் படிக்க விரும்பும் இந்த மாணவியை, மருத்துவப்படிப்பிற்கான கட் ஆஃப் மதிப்பெண்  197.50 இருந்தும், நம் மருத்துவப் பல்கலைக் கழகம் சேர அனுமதிக்காமல் கைவிரித்துவிட்டது!  காரணம், இந்தியக் குடியுரிமை இல்லையாம்!  ஆனால், பொறியியல் கல்வியில் சேரலாமாம்!  அதெப்படி? குடியுரிமை இல்லாமல் பொறியியல் கல்வியில் சேரலாம் என்றால், ஏன் மருத்துவப் படிப்பிற்கு அனுமதி இல்லை?  இரண்டு பல்கலைக் கழகங்களும் இதே நாட்டில்தானே இருக்கின்றன குடியுரிமை இல்லை என்றால் அகதி என்ற பெயரிலாவது கல்வி வழங்கலாமே!  இல்லை என்றால் நம் நாடு ஈழத்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதைப் பற்றிச் சிந்தித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.ஏன் இந்த பாராபட்சம்? நந்தினியின் நிலை என்ன?  

    மருத்துவம் சேர்வதற்கான மதிப்பெண்கள் இருந்தும் சேர முடியாத நிலை! பாவம், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் அந்தப் பெண்ணிற்கு நம் தமிழகம் வழி செய்யுமா?  முதல்வரிடம் கோரிக்கை மனு வைக்கப் போவதாகச் சொல்லி இருக்கின்றார்.  முதல்வர் இதற்கு கண்டிப்பாக ஒரு நல்ல முடிவு எடுத்து நந்தினிக்கு மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்!  இது போன்று எந்த நாட்டுக் குடியுரிமையும் இல்லாமல் அவதியுறும் ஈழத்துக் குழந்தைகளை நினைத்தால் மனம் வெம்புகின்றது.  நாம் எந்த நூற்றாண்டில் வசிக்கின்றோம்?!

படங்கள்: இணையம்

செவ்வாய், 24 ஜூன், 2014

நாட்டையும், மக்களையும் காக்கும் ராணுவ வீரர்கள் எங்கிருந்தாலும் பிறர் உயிர் காப்பார்கள்தான்!!

நாட்டை எதிரிகளிடமிருந்துக் காப்பாற்றும் வீரர்களின் மனது எப்பொதும், காப்பாற்றப்பட வேண்டியவர்களுக்குக் கை கொடுத்து, அவர்களைக் காப்பாற்றத் தவறாது என்பதை நினைவூட்டும் ஒரு சம்பவம், கடந்த வாரம், கேரளா, திருச்சூர் அருகே வடக்கான்சேரி புகைவண்டி நிலையத்தில் நடந்தது.


      சென்னையிலுள்ள, CRPF ன், DIG அலுவலகத்தில் கான்ஸ்டபிளான, பாஞ்ஞாலைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (32) நோய்வாய்பட்டிருக்கும் தன் தந்தையைப் பார்த்துவிட்டு அவருடன் 10 நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் சென்னைக்குத் திரும்ப, ஆலப்புழா-சென்னை புகைவண்டிக்காக வடக்கான்சேரி புகைவண்டி நிலையத்தில் காத்திருந்திருக்கிறார். பங்களூரு SBI மண்டல அலுவலகத்தில் மேலதிகாரியாகவும், முதன்மை ஆய்வாளருமான, மும்பையைச் சேர்ந்த பிரமோத் பிரவாஸ்கர் (56), ஷொர்ணூரில் இறங்கி வேறு புகைவண்டியில் ஏறி மும்பை செல்ல, ஆலப்புழா-கண்ணூர் எக்சிக்யூட்டிவ் எக்ஸ்பிரஸ்ஸில் அதே நடை மேடையிலிருந்து தன் பிரயாணப் பெட்டிகளை ஏற்றியபின் அவர் ஏறும் முன் வண்டி நகரத் தொடங்க, ஓடிச் சென்று படிக்கட்டில் ஏற முயல, கால் தவறி புகைவண்டிக்கும், நடைமேடைக்கும் இடையே விழுந்து விட்டார்.  இதைப் பார்த்த சந்தோஷ் குமார், ஓடிச் சென்று நடைமேடையில் படுத்து, தன் ஒரு கையை நடைமேடைக்கும், புகைவண்டிக்கும் இடையில் கீழே நீட்டி பிரமோத்தை நடைமேடையோடுச் சேர்த்து இழுத்துப் பிடித்து அவரைக் காப்பாற்றிவிட்டார்.  இப்படிச் செய்கையில் சந்தோஷின் கைகள் ஒடும் புகைவண்டியின் படிகளில் தட்டி அவரும் உள்ளே இழுக்கப்படவும், அவரது உயிருக்கு ஆபத்து நேரவும் வாய்ப்புண்டு என்பதை அறியாதவர் அல்ல.  எனினும், சந்தோஷ் குமார் ஓருயிரைக் காக்க இராணுவம் மற்றும் காவல் துறையினர் செய்யத் துணியும் துணிச்சலான செயலைச் செய்து, தான் ஒரு உண்மையான ராணுவ வீரன் என்பதை நிரூபித்துவிட்டார்! 

      உயிர் தப்பிய பிரமோத் தன் பிரயாணப் பெட்டிகளை அந்த புகைவண்டியிலிருந்து மீட்க ஒரு ஆட்டோ பிடித்து ஷொர்ணூர் சென்று, அங்கு, செய்தியறிந்து அவரது பெட்டிகளைப் பாதுகாப்பாக எடுத்து வைத்திருந்த மேலதிகாரிகளிடமிருந்துப் பெற்று மும்பைக்கு ரயிலேறியிருக்கின்றார்!  இதற்கு முந்தைய வாரம்தான், இதே வடக்கான்சேரி புகைவண்டி நிலையத்தில் ஒரு பெண்மணி இப்படி ஏறும் போது விழுந்து உயிரிழந்திருக்கிறார்.  இப்படிப்பட்ட மரணங்கள் இந்தியாவிலுள்ள பல புகைவண்டி நிலையங்களில் நடப்பதாகத் தெரிகின்றது. இதைத் தவிர்க்க ரயில்வே, ஏன் புகைவண்டியிலோ, நடைமேடையிலோ பயணிகள் ஆபத்தில்லாமல், இது போன்று புகைவண்டிக்கும், நடைமேடைக்கும் இடையில் விழாமல் புகைவண்டியில் ஏறுவதற்கு ஆவன செய்யக் கூடாது? ரயில் பெட்டிகளிலோ, நடைமேடையிலோ ஏதேனும் மாற்றங்கள் செய்து, புகைவண்டியிலிருந்து தவறி விழுபவர்கள் புகைவண்டிக்கு அடியில் விழாமல் செய்யக் கூடாது? (நடைமேடையின் விளிம்பைக் கொஞ்சம் நீட்டிக் கட்டுதல் போன்ற மாற்றம்).

மனித உயிருக்கு மதிப்பு நம் நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லையே!  ரயில் கட்டணத்தை மட்டும் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலிலும் உயர்த்துபவர்கள், இது போன்ற ஆபத்துகள் நிகழாமல் இருக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சிந்தித்து மேற்கொள்வார்களா?  நம்புவோம்! 

படங்கள் - இணையதளம்


சனி, 21 ஜூன், 2014

வாசித்ததில் ரசித்தது! இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

நமது பதிவர், சகோதரி திருமதி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள் தன் வலைத் தளத்தில் 10 கேள்விகள் கொடுத்து அதற்கு பதில் அளிக்குமாறு எங்களையும் கேட்டுக் கொண்டதால், இதோ கொடுத்திருக்கின்றோம் எங்கள் பதில்களை.  மிகவும் ரசித்தோம் கேள்விகளை!  பதில்கள் எங்கள் சிற்றறிவிற்கு எட்டியபடி கொடுத்திருக்கின்றோம்!  மிக்க நன்றி சகோதரி! சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்கின்றோம்!

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

100 வயதா?! தாங்காதுப்பா......இருக்கும் வரை ஆரோக்கியமாக இருந்து விட்டு, நம்முடன் இருப்பவர்களைச் சாராது, அவர்களுக்கு எந்த விதக் கஷ்டமும் கொடுக்காமல் அன்புடன் வாழ்ந்தாலே போதும்!  100 வது பிறந்த நாள் எல்லாம் கொண்டாடும் உத்தேசமே இல்லையப்பா!

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

கற்றது கைவிரல் (கை அளவு கூடப் பெரிசுங்க) நக அளவு...கல்லாதது உலக அளவு இருக்கும் போது........இருந்தாலும்......நம்மால் முடியாத விஷயத்திற்கு "NO" சொல்லவும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி அன்பு செய்யவும், நாங்கள் நாங்களாகவே இருக்கவும் கற்றுக் கொள்ள விரும்புகின்றோம்!

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவரின் வழிப்படி இருக்கும் போது "கடைசி" என்ற வார்த்தைக்கு இடமே இல்லை!

4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

ஆஹா! ஒரு நாளாவது இயற்கையோடு ஒன்றி வாழக் கிடைத்ததே என்று சந்தோஷப்படுவோம்! குழந்தைகளுடன், குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்க கிடைக்கும் போது மனம் கசக்கவா செய்யும்?! (நாங்கள் தொலைக் காட்சி பார்க்கா விட்டாலும், நம்முடன் இருப்பவர்களுக்கு, மற்றவர்களுக்கு இப்படி , ஹொலைக்காட்சி இல்லாமல், கணினி இல்லாமல் நேரம் கிடைத்தால்தானே உண்டு!)

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

மணவாழ்க்கை அர்த்த நாரீஸ்வரர் போன்று அதாவது மனைவி பாதி, கணவன் பாதி .....சக்தியில்லையேல் சிவம் இல்லை...சிவம் இல்லையேல் சக்தி இல்லை...., அன்பில்லாத இல்வாழ்க்கையில்லை!   இல்வாழ்க்கையைப் பற்றி வள்ளுவர் சொல்லாததா?  அதைச் சொல்வோம் மகனிடமும், மகளிடமும்.....

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

யதார்த்தமாகச் சிந்தித்தால் தனி ஒருவரால் உலகப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது!  என்றாலும்  தீர்க்க விரும்புவது....தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்.  கொடியது கொடியது வறுமை கொடியது.  உலகில் நடக்கும் பல துன்பங்களுக்கும், வன்முறைக்கும் காரணம் வறுமைதான்.  எனவே....

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

அனுபவங்கள் கற்றுக் கொடுத்த/கொடுக்கும் பாடங்களும், இறை நம்பிக்கையும் சுயமாகச் சிந்தித்து முடிவு எடுக்க உதவும் போது......

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

போங்கடா வெண்ணை....எங்களுக்கு அதற்கெல்லாம் நேரமில்லைங்க.......ஓ அப்ப நம்ம ஊர்ல வேலை வெட்டி இல்லாம நிறைய பேரு இருக்காங்க?!

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

மரணம் என்பதுதான் இந்த உலகிலேயே உண்மையான ஒன்று! அதை ஏற்று உன் குழந்தைகளுக்கு (அவர்கள் சிறியவராக இருந்தாலும் சரி...பெரியவர்களாக இருந்தாலும் சரி!) ஒரு தாயாகவும் இருக்கும் பாக்கியம் கிடைத்ததே என்று சந்தோஷமாக இனிமையாக அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்! 

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

தனிமையிலே இனிமை காண முடியுமா?!  இனிமை காண முடியுமே! நமக்கான நேரம் என்று மனதுக்குப் பிடித்தவற்றைச்(நல்ல விஷயங்களைத்தான்) செய்து மனதை நேர்மறை எண்ணங்களுடன் உற்சாகப் படுத்தி, வலுவுடனும், சக்தியுடனும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்வது! 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க....

  • நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

  • அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள் (Loose talks)

  • எந்தப் பிரச்சினையையும், விஷயத்தையும் நாசுக்காகக் கையாளுங்கள். (Diplomacy). விட்டுக் கொடுக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். (compromise)

  • சில நேரங்களில், சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள். (tolerance)

  • எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும், அவர்களுக்குச் சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

  • உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொண்டு மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்கவும், ஆராயவும் கற்றுக் கொள்ளுங்கள். (Flexibility)

  • மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும்.  இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy)

  • புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

  • பிரச்சினைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்/பதிவுலகம்......என்று நாங்கள்  வாசித்து ரசித்த நல்ல விஷயங்களைக் கொடுத்துள்ளோம்!  என்ன ரசித்தீர்களா...?  நண்பர்களே?!!

வியாழன், 19 ஜூன், 2014

யூட்யூப் வழியாக மஹாராஷ்ட்ரா கோலாப்பூரிலிருந்து பங்களூரு பன்னேர்கட்டாவுக்குத் தப்பிய யானை!      

    யூட்யூப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களால் சமூகத்திற்கு நன்மையா?  பாதிப்பா என்று பட்டிமன்றம் நடத்தினால் நன்மை, தீமைகளின் பட்டியல்கள் ரயில் தண்டவாளம் போல் ஒன்றுக்கொன்று இணையாக, விடை காணா புதிராக நீண்டு கொண்டே போகத்தான் செய்யும்!

குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல்

எனும் வள்ளுவன் வாக்குக்கு இவை இரண்டும் ஒரு வேளை பொருந்தாமல் போகலாம்!  அந்த அளவுக்கு இவை இரண்டும் வேண்டியதையும், வேண்டாததையும், அவசியமானதையும், அவசியமில்லாததையும் வாரி இறைத்து சமூகத்தை உடும்புப் பிடியாக பிடித்தேவிட்டது!

      முகநூலில் எவரும் எதைப் பற்றி வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களைப் பயமின்றி பறைசாற்ற முடியும் என்பதற்காக எதையும் சொல்லலாம் என்று எண்ணக் கூடாது.  சொல்ல நினைப்பதைச் சொல்வதால் பிரச்சினை வராது என்று உறுதிப்படுத்திய பின்தான் சொல்ல வேண்டும்.  சில மாதங்களுக்கு முன், மும்பையைச் சேர்ந்த மொஹ்சீன் ஹெய்க் என்பவர் தன் முகநூலில் சத்ரபதி சிவாஜி, மற்றும் பால்தாக்கரேயை இழிவுபடுத்தினார் என்று சொல்லி அவரைக் கொலையெ செய்துவிட்டார்கள். அதேபோல் யூட்யூபில், தான் தற்கொலை செய்வது போன்ற சம்பவத்தை படம்பிடிக்க முயன்ற கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கயிறு இறுகி உயிரிழக்கவும் செய்தார்.  இப்படி உயிருக்கே உலை வைக்கும் முகநூலும், யூட்யூபும், உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் எத்தனையோ பேர்களின் சிச்சைக்காக உதவி புரிந்து உயிர்களைக் காப்பாற்றியும் இருக்கின்றன!  அப்படிப்பட்ட யூட்யூபின் நல்ல பக்கங்களின் ஒரு பக்கம்தான்  இனி நீங்கள் இங்கு வாசிக்கப் போவது!


      மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள, கோலாப்பூர் அருகிலுள்ள வார்ணா எனும் இடத்தில் சுந்தர் எனும் ஒரு கோயில் யானையை அதன் பாகன் எப்பொதும் அடிப்பதுண்டு.  அடியும், சூடும் பட்டதால் ஏற்பட்டத் தழும்புகள் சுந்தரின் உடம்பில் ஏராளம்.  கோவிலுக்குச் செல்வோர்கள் பெரும்பான்மையோர் இக்கொடுமையைக் கண்டு மனம் நொந்து இறைவனிடம் முறையிட்டிருக்க வேண்டும்.. (சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு பயனில்லாததால்).  யானைப் பாகன் சுந்தரிடம் காட்டிய இந்தக் கொடுமை, யானையின் விளையாட்டைக் கண்டு களித்த ஒரு யூட்யூப் ப்ரியர் கண்களில் பட, அதைத் தன் மொபைலில் படம் பிடித்து யூட்யூபில் பதிவேற்றம் செய்திருக்கிறார்..  வழக்கம் போல் அதைப் பார்த்து ஐயோ பாவம் என்ரு நம்மவர்கள் சொல்லி வருந்திக் கொண்டிருக்க, அமெரிக்காவில் PETA (PEOPLE FOR ETHICAL TREATMENT FOR ANIMALS) எனும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், மும்பையிலுள்ள அவர்கலது இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடம், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சொல்ல, அவர்கள் மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக், நீதிமன்றம் Animal Welfare Board டிடம் இதப் பற்றி விசாரிக்க உத்தரவிட்டது. பரிசோதித்தவர்கள் யானை துன்புறுத்தப்படுகிறது என்ரு கூற நீதிமன்றம் யானையைப் பாதுகாக்க உத்தரவிட்டது.


 
சுந்தரை மீட்ட மருத்துவர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி

இதற்கு எதிராக கோயில் ட்ரஸ்ட் உச்சநீதி மன்றத்தை  அணுக, உச்சநீதி மன்றமோ, யானையை மீட்டுக் காப்பாற்றி பாதுகாக்க உத்தரவிட, மஹாராஷ்டிரா வனத்துறை கேரளத்திலுள்ள எலிஃபண்ட் ஸ்குவாட் ன் உதவியுடன் அந்த யானையை மயக்கமடையச் செய்து அதற்கான பிரத்தியேகமான வாகனத்தில் ஏற்றி பங்களூரு பன்னேர்கட்டாவிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு, ஓரிரவும், ஒரு பகலும் பிரயாணம் செய்துக் கொண்டுவந்து விட்டது.  இப்பொது சுந்தர் விலங்குகள் ஏதுமின்றி சுதந்திரமாக மற்ற யானைகளுடன் திரிகின்றது!  இப்படி யூடூயூப் வழியாக நல்லவர்களின் கண்களில் பட்டு, யானைப் பாகனிடமிருந்துத் தப்பிய சுந்தரால் யூட்யூபிற்கு நன்றி சொல்ல முடியாத நிலையில் நம்மைப் போன்றவர்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்!

பின் குறிப்பு: எங்களுக்குத் தேவையான இசை மற்றும் படக் காட்சிகளை யூட்யூப் அவ்வப்போது எங்கள் குறும்படத்தில் சேர்க்க உதவியிருக்கிறது)
                                                                                 

     

வெள்ளி, 13 ஜூன், 2014

கண்ணுக்குத் தெரியாத கடவுளை அறிய, உணர, கட .....(உன்).....உள்ளே!!!


      

      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு.

மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே, வாழ்வில் தேடல்கள் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்டத் தேடல்களில் மிகவும் முக்கியமாக, இன்றளவும் இருந்து வருவதுதான், இறைவன் இருக்கிறாரா? அவர் எங்கிருக்கின்றார்? எந்த வடிவத்தில் இருக்கின்றார் என்பது! 
சூரியன் எனும் நட்சத்திரம்.  அதைக்  கடவுள், இறைவன், நட்சத்திரம், ஒளி, இப்படி எந்தப் பெயரில் வேண்டுமானாலும் நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள். அந்தச் சூரியன் இல்லை என்றால் நாம் இப்பூவுலகில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா? பண்டைய காலத்தில் சூரிய வழிபாடுதான் பல நாடுகளில் இருந்து வந்திருக்கிறது! சூரியனுக்கு மதம் இல்லை, சாதி இல்லை, மொழி இல்லை, நாடு இல்லை. அவன் எல்லோருக்கும் பொதுவானவன். சூரிய வழிபாடு பற்றி எச்.ஜி வெல்ஸ், உலக வரலாறு பற்றிய தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். சூரியனை வெவ்வேறு பெயர்களில், மக்கள் வழிபட்டனர். திராவிடர்கள் வாழ்ந்த பகுதியில், சூரியன் சிவம் என்றும் வழங்கப்பட்டதாக வரலாறு சொல்கின்றது.  சூரியன் சிவந்த நிறத்தவன் என்ற அர்த்தத்தில் சிவம் என்று வழிபட்டனர்.  அப்படியென்றால் இந்தச் சூரியன் தான் இறைவனா?!  இல்லை! சூரியனுக்கும் அப்பாற்பட்ட, சூரியனையும் தோற்றுவித்த சக்தி பிரபஞ்ச சக்தி! சூரியன் அதன் ஒரு துளியே!


இந்தச் சூரிய சக்தியால் இயங்கும், பழந்தமிழர்களின் வேதாந்தக் கருவாகிய, ஐம்பூதங்களாகிய நீர், நெருப்பு, வாயு, பூமி, வானம்  (இங்கு வானம் என்பது வளி மண்டலம் மட்டுமே, பிரபஞ்சம் இல்லை.)) என்ற இயற்கையின் சக்தி நம் மனித சக்திக்கு அப்பாற்பட்டதுதானே! இவற்றைத்தான் நம் மூதாதையர் இறைவன் என்ற பெயரில் வணங்கிவந்தனர். அக்காலகட்டத்தில் கடவுளர்களுக்கு உருவம் கொடுக்காமல், கல் தூண்கள்தான் கடவுளாகப் பாவிக்கப்பட்டு, சாதி, மத, இன பேதம் எதுவும் இல்லாமல், உயர்வு, தாழ்வு பாராமல், ஒரே மதமாகவும், ஒரே கடவுள் கொள்கையுமாக ஒருங்கிணைந்து வணங்கி வந்தனர். மொழி எப்படி ஒவ்வொரு நிலப்பகுதிக்கும், நதி சார்ந்த நாகரிகத்திற்கும் ஏற்ப மாறுபட்டதோ அது போன்று சூரியனின் பெயரும், கடவுளர்களின் பெயரும் மாறுபட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும், அறிவியல் வளர்ச்சி, நிலம், நதி சார்ந்த நாகரிக வளர்ச்சி, வரலாற்றில் ஏற்பட்ட மாறுதல்கள் போன்றவற்றால், கடவுள் கொள்கையும் பல மாறுதல்களுக்கு உள்ளாகியது.

இப்படித் தோன்றிய நாகரீகங்களின் ஒவ்வொரு குழுமமும், பல மதங்கள் எழக் காரணமாகின. ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு காலகட்டத்தில், பல்வேறு தத்துவ ஞானிகளும், மத குருமார்களும் தோன்றினர். அவர்கள் தாங்கள் புரிந்து கொண்ட இறைத் தத்துவத்திற்கிணங்க சித்தாந்தங்களையும், கோட்பாடுகளையும் வகுக்க, அந்த வேதாந்த சித்தாந்தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், பல மதங்கள், சமயங்கள், சாதிகள் உருவாகின. பிரிந்த குழுமங்கள், தங்களுக்கென்று ஒரு தத்துவத்தை, சித்தாந்தத்தை, கோட்பாடுகளை, ஒரு நோக்கத்தை வகுத்துக் கொண்டு, அதை நிறைவேற்றத் தனிப்பட்ட விதிமுறைகளை அமைத்துக் கொண்டதால், பல கடவுள்கள் உருவாவாக்கப்பட்டனர். “கடவுள் ஒருவர் இல்லாவிட்டால் என்ன? நாமே அதை நம்பிக்கை என்ற பெயரில் உருவாக்கலாமே என்று மேலை நாட்டு அறிஞர்கள் சொல்லியது போல் தோன்றியவைதான் இவை எல்லாம்.

ஒவ்வொரு கடவுளுக்கும், வழிபாட்டு முறைகள், பூஜைகள், மூட நம்பிக்கைகள் என்று வளர்ந்து, சாஸ்திரம் என்ற பெயரில் ஒரு சமூகத்திற்குப் பொதுவானதாக இல்லாத விஷயங்களாகிப் போயின. இப்படி மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்களும், சமயங்களும், சாதிகளும் அதனால் ஏற்படும், கடவுள் சண்டை, மதச் சண்டை, சாதிச்சண்டை யாவும் மனிதனைப் பிரிக்கும் பகை சக்திகளாகவும் விளங்கியதால்தான், கடவுள் மறுப்பு என்ற கொள்கை கொண்டவர்களாக, பகுத்தறியத் தெரிந்தவர்கள் உருவானார்கள். கடவுளுக்கும், இது போன்ற வழிபாட்டு முறைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும், சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! என்பதுதான் உண்மை  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!      இந்த இடத்தில் நாம் கொஞ்சம் பிரபஞ்சவியலைப் பற்றிய இயற்பியல் விஞ்ஞானம் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்!  Big Bang theory பற்றி அதாவது இந்த பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதைப் பற்றி அறிய வேண்டும்! ஆனால் இங்கு அதைப் பற்றி மிகவும் விரிவாகச் சொல்ல முடியாது! இடுகை இன்னும் நீள்வது மட்டுமல்ல, நாங்கள் இயற்பியலிலோ, அறிவியல் அறிவிலோ விற்பன்னர்கள் அல்ல!  ஏதோ எங்கள் சிற்றறிவிற்கு எட்டிய, நாங்கள் புரிந்து கொண்ட, அதாவது விஞ்ஞானமும், மெய்ஞானமும் எப்படி அர்த்தம் கொள்ளப்பட்டு இணைகின்றன என்பதைச் சொல்லுகின்றோம்! இதை, கிறித்தவம், இஸ்லாம், இந்து மதம், எல்லா மதங்களுமே பேசுகின்றன! Moshe Carmeli தனது ஆய்வுக் கட்டுரையில் மிகவும் விரிவாக பைபிளில் இருந்துச் சுட்டிக் காட்டி, இரண்டு ஞானத்தையும் கலந்து கட்டி எழுதி உள்ளார்!இந்தப் பிரபஞ்சத்தில் Dark Matterஇருண்ட விஷயமும், Dark Energyஇருண்ட சக்தியும் உள்ளதாக விஞ்ஞானம் சொல்லுகின்றது! இந்த dark matter  பொடென்ஷியல் எனர்ஜிDark energy  கைனெடிக் எனர்ஜிDark matter பொட்டென்ஷியல் எனர்ஜி என்பது முழு ஆற்றல்அதைப் பார்க்க முடியாது!  அதைப் பார்க்க முடிவது எப்போது என்றால் அந்த Dark energy - கைனெடிக் எனர்ஜி-இயக்க ஆற்றல் மூலம்தான்இந்த டார்க் எனர்ஜியால்தான் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போகின்றது! அதாவது இந்த கைனெடிக் எனர்ஜி அந்த பொடென்ஷியல் எனர்ஜியை இயக்குவதால். இப்படி டார்க் எனர்ஜி – சக்தியால் விரிவடைந்துகொண்டு போகும் பிரபஞ்சம், பிரபஞ்சம் முழுவதும் “மேட்டர் (பருப் பொருள்?) நிரம்பி இருப்பதாலும், புவிக்கு வெளியே உள்ள ஈர்ப்பு சக்தி இந்த மேட்டரை எல்லாம் ஈர்த்து ஒன்று சேர்ப்பதாலும், ஒரு காலகட்டத்திற்கு மேல் வெடித்து புதியதாய் ஒன்று உருவாகும் என்று சொல்லப்பட்டது! இதைத்தான் பிரளயம் என்று எல்லா மதங்களின் மெய்ஞானங்களும் சொல்லுகின்றனவோ?!

ஆனால், நவீன அறிவியல் ஆராய்சிகள், நோவா, சூப்பர் நோவா போன்றவற்றைக் கண்டு, இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டேதான் போகின்றது என்று சொன்னாலும், அதற்கான காரணங்களை இன்னும் முழுமையாக விளக்க முடியாமல் தான் இருக்கின்றன. என்றாலும் அதன் காரணகர்த்தாவாகிய அந்த எனர்ஜியின் பெயரை டார்க் எனர்ஜி என்று சொல்லி முடிக்கின்றார்கள்! நாம் சக்தி என்று சொல்லுவதைத்தான்! இந்த “ஆகாச தத்துவம் என்பதுதான் “சிதம்பர ரகசியம் என்று சொல்லப்படுகின்றது!

இதைத்தான், அந்த டார்க் மேட்டரையே – பொடென்ஷியல் எனர்ஜியை - சிவம் என்றும், டார்க் எனர்ஜியை - கைனெடிக் எனர்ஜியை - சக்தி என்றும் மெய்ஞானம் சொல்லி, சிவமும் சக்தியும் இணைந்துதான் ஒளிப்பிழம்பாகி, ஓம்காரமாகி, (ஒளியும், ஒலியும் கலந்து. ஓம்காரம் என்பது இங்கு சப்தத்தைக் குறிக்கின்றது) நோவா, சூப்பர் நோவா, காலக்சிஸ் எல்லாம் உருவாகி இந்த உலகில் உயிர் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததாகச் சொல்லப்படுகின்றது!  திருமூலர் சொல்லுவதும் இதைத்தான்!

“எங்கும் திருமேனி, எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம், எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய், இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள், தன்விளை யாட்டிதே

வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி இருப்பவனே அவன்!  மோன நிலையிலிருக்கும் சிவமுள் உள்ள சக்தி சதா சுழன்று பிண்டம் பிய்த்துப் போட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படி உண்டாகிக் கொண்டிருக்கும்  நட்சத்திரங்களில் ஒன்றே சூரியன்.  அச்சூரியனைச் சிவம் என்கின்றார், திருமூலர். சூரிய குடும்பத்தில் யாவும் நடத்தும் சூரியன் ஆதாரமாகவும், அந்த சூரியனுக்கு அவன் உள்ளிட்ட கோடானு கோடி சூரிய குடும்பங்களுக்கும் அண்டம் ஆதாரமாகவும், கோடானு கோடி அண்டங்களுக்கு ஆதாரமாக அகிலாண்டமும், கோடானு கோடி அகிலாண்டங்களுக்கு ஆதாரமான அந்த அகிலாண்டேஸ்வரனான ஜோதி சொரூபனான சிவசக்தி ஆதாரமாக இருக்கையில் அந்த சிவசக்தியைக் காண்பது என்பது இயலாத ஒன்று!

 அர்த்தனாரீஸ்வரர் தத்துவமும் உருவானது இப்படித்தான்! சக்தி இல்லையேல் சிவம் இல்லை!  சிவம் இல்லையேல் சக்தி இல்லை!  இந்த சிவம் அசைந்தால் தான் இந்த உலகமே இயங்கும்! ஏனென்றால் அந்த சிவம் மிகுந்த ஆற்றல் கொண்ட ஒன்று! அந்த ஆற்றலை இயங்க வைக்க சக்தி தேவை! ஆனால், சிவம் அந்த சக்தியை வெளிப்படுத்தும் நேரத்தில் வெளிப்படுத்திவிட்டு பின்னர் அதை அப்படியே தன்னுள் இழுத்து வைத்துக் கொண்டுவிடும். இரண்டறக் கலந்ததே அது!

அவன் ஒருவனே! அவனன்றி மற்றொருவர் இல்லை'
அவனைப் படைத்தவர் யாரும் இல்லை. அவனுக்கு அழிவும் இல்லை'
அவன் உருவத்தைப் பார்க்க முடியாது.

உருவம் இருந்தால்தானே! அது மிகுந்த ஒளி மயமானது! அது சக்தி வடிவில் இருப்பதால் அதைப் பார்க்கும் சக்தி யாருக்கும் இல்லை!

     இந்தப் பிரபஞ்சமே அந்த சக்தியாக இருக்கும் போது இந்த சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உண்டா என்றால், இல்லை எனலாம். அந்தப் பிரபஞ்ச சக்திக்கு உட்பட்டுத்தான் இந்த உலகமே இயங்குகின்றது!  “திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் “பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலில் “நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற வரி இதைத்தான் குறிப்பிடுகின்றதோ! அந்த சக்தியைத்தான் பரம்பொருள் என்றும், அது உண்மையாதலால் அதை மெய்பொருள் அல்லது உண்மைப்பொருள் என்றும் சொல்லுகின்றோம்! உண்மைப் பொருள் யாவருக்கும் ஒன்றே! 

சித்து செய்வதோ, அதிசயங்கள், அற்புதங்கள் நிகழ்த்துவதோ ஆன்மீகம் அல்ல! பூஜைகள், சடங்குகள் உள்ளடக்கியதும் ஆன்மீகம் அல்ல! இறைவனைத் தொழுபவர்களும், ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் கூட குற்றங்கள் செய்கின்றனர், கொலையும் செய்கின்றனர். ஏன் கோயிலே கட்டுகின்றார்கள்! அதிலிருந்தும் கொள்ளை அடிக்கின்றார்கள்! இவை யாவும் இறை உணர்வே அல்ல! ஆன்மீகமும் அல்ல!  ஆன்மீகம் என்பது நம் யதார்த்த வாழ்க்கையில் பல நேர்மறை எண்ணங்களையும், நன்மைகளையும் விளைவிக்கும் ஒரு மாபெரும் சக்தியாகும்! இறைவனிடம் அன்பு கொள்வது மட்டுமே ஆன்மீகம்! இறை நம்பிக்கை!

இங்குதான் மக்கள் குழம்பித் தவறுகின்றனர்! இறைவனைத் தண்டனை தருபவராகவும், பயம் தரும் ஒருவராகவும் உருவகப்படுத்தி “சாமி கண்ணைக் குத்தும்“சாமிக் குத்தம் என்று சொல்லி தம் சந்ததியினரை வளர்க்கின்றனர்! பயத்தினால் வரும் இறை உணர்வு, இறை உணர்வோ, ஆன்மீகமோ அல்ல! அதனால், மூட நம்பிக்கைகள் பெருகி, இளைய தலைமுறையினர் பல கேள்விகள் கேட்கும் போது, நம்மால் அவர்கள் அறிவுக் கேள்விகளுக்குத் தகுந்த அறிவு பூர்வமான விஞ்ஞான, மெய்ஞான விளக்கங்கள் தர முடியாமல், “இவை எல்லாம் நம் மூதாதையர் சொன்னது. நாங்கள் கேள்வி கேட்டதில்லை. அப்படியே பின்பற்றுகின்றோம். நீங்களும் கேள்விகள் கேட்கக் கூடாது. சொல்வதைச் செய்ய வேண்டும் என்று சொல்லி, கண்மூடித்தனமாகப் பின்பற்றும் சடங்குகளையும், பழக்கவழக்கங்களையும் புகுத்தி, இந்த அறிவியல் யுகத்தில், அவர்களையும் பின்பற்றச் சொல்லும் போது, அவர்கள் இறை நம்பிக்கை இல்லாமல் வளரும் நிலைமை ஏற்படுகின்றது!

இராமகிருஷ்ணர் சொல்லுவது “ஓ! மனிதா பகலிலும் நட்சத்திரங்கள் வானில்தான் உள்ளன.  சூரியனின் பிரகாசமான ஒளியால் அவை கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதால் பகலில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லமுடியாது இல்லையா அது போலத்தான், உனது அறியாமை உன் மனக்கண்ணை மறைப்பதால் கடவுள் இல்லை என்று சொல்லாதே 

இறைவனை நம்புவது என்பது இறைவனைக் காண்பதல்ல.  ஆத்திகனாக இருந்தாலும் இறைவனைக் காண்பது என்பது இயலாத ஒன்று!  “தூங்கிக் (தவம், தியானம்) கண்டார் சிவ யோகமும், சிவ லோகமும், சிவ போகமும் தம் உள்ளே”.  கண்களுக்குப் புலப்படாத சிறியவை, பெரியவை உண்டு! நம் செவிக்குக் கேட்க இயலாத அலைவரிசை உள்ள சப்தங்கள் உண்டு!  அது போல மனித மனதுக்குப் புலப்படாத, ஆத்மாவால்/ஆழ் மனதினால் மட்டுமே உணர முடிகின்ற ஒன்றுதான் இறைவன்!  இறைவன் எங்கோ இல்லை! நம்முள், நம் ஆத்மாவில்/ஆழ்மனதில் இருக்கின்றார்! தித்திக்கும் தேனின் சுவை அறிய, தேனைச் சுவைத்தால்தான் அறிய முடியும்! தொட்டுப் பார்த்தோ, முகர்ந்து பார்த்தோ அறிய முடியாது! காற்றினைப் பார்க்க முடியாது. அதைக் காண ஒரு ஆதாரம் தேவை! அந்த மறைமுக ஆதாரம்தான் மரங்கள் அசைவது! நுண்ணுயிரிகளைக் கண்ணால் பார்க்க முடியாது! ஆதாரம்? அவற்றினால் ஏற்படும் நோய்களிலிருந்து, அவை எந்த வகை என அறிந்து கொள்ளலாம்!

இந்த நுண்ணுயிரிகள் இருக்கும் எனர்ஜி லெவல் வேறு – சக்தி நிலை என்று சொல்லலாமா? – நம் எனர்ஜி லெவல் வேறு.  நாம் அவற்றைக் கண்ணால் காண வேண்டும் என்றால், அவற்றின் எனர்ஜி லெவலுக்கு நம்மை உயர்த்திக் கொண்டு செல்ல வேண்டும்! அதைப் போலத்தான், காண முடியாத மெய் பொருளாகிய பரம் பொருள் இருக்கும் எனர்ஜி லெவல் மிகப் பெரியது!  அந்த எனர்ஜி லெவலுக்குச் சென்றால், அதாவது, நாம் ஈக்குவிலிபிரியம் நிலை – Equilibrium State - சமனிலை அடையும் போது, அந்த மெய்பொருளை நமது அகக் கண்ணால் கண்டு, உணர்ந்து மகிழ முடியும்! அந்த எனர்ஜி லெவலை அடைய உதவும் பாதை மிகவும் கடினமான  பாதை!

இதைத்தான் நமது மெய்ஞானம், ஐம்புலன்களை அடக்கினால் மட்டும், ஆத்மாவினால்/ஆழ்மனதினால் மட்டும் காணவோ, கேட்கவோ, புரிந்து கொள்ளவோ முடியாத, ஆனால், உணர, ஆனந்தம் அடைய மட்டுமே முடிகின்ற ஒன்றுதான் இறைவன் என்கின்றது! நம் ஆத்மாவையே உணராது இருக்கும் இப்புவி வாழ்வில், காண்பதைக் காணாமலும், கேட்பதைக் கேட்காமலும், உணர்வதை உணராமலும் இருக்கின்றோம்! முதலில் நாம் நம்  ஆத்மாவை/ஆழ்மனதை அறிய வேண்டும். அந்த ஆத்மா நமக்கு நம் அகக் கண்ணில் எங்கும் நிறைந்திருக்கும் சிவசக்தியைக் காட்டும், எங்கும் எதிலும் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் சிவநடனத்தின் (பிரபஞ்சத்தில் எழும் ஒலி) ஓசையைக் கேட்கச் செய்யும். சமனிலை அடைந்த நம் ஆத்மா/ஆழ்மனமும் அவ்விசையில், அந்நடனத்தின் பாகமாகிவிடுவதால் அதோடு ஒன்றிவிடும்! அப்படி ஒன்றிவிடும் அந்நிலைதான் பேரின்பம்!  அப்பேரின்பத்தை அடைந்தவர்தான் முற்றும் துறந்தவர்.  அரண்மனை வாழ்வைத் துறந்த புத்தருக்கும் அப்பேரின்பம் கிடைத்திருக்கின்றது!அதைத்தான் தத்துவ ஞானிகள் சொல்லுவார்கள். பிரபஞ்ச சக்தி இந்த உலகில் இருக்கும் எல்லா உயிர்களிடத்தும் உள்ளது! அந்தச் சக்தி நம்முள்ளும் குடி கொண்டு (இதைத்தான் குண்டலினி சக்தி என்று சொல்லுவது உண்டு) பொட்டென்ஷியல் எனர்ஜியாக, நிலையாக தூங்கிக் கிடக்கின்றது! அதை, கைனெட்டிக் எனர்ஜியாக முடுக்கித், தட்டி எழுப்பி இயங்கச் செய்தால், நம் ஆத்மா/ஆழ்மனம் அந்தச் சமனிலை அடைந்து, சக்தியை உணரத் தொடங்கும்! பேரானந்தம் அடையும்! தெளிவடையும்! சலனமற்றதாகும்! மனிதன் பேராற்றல் மிக்கவனாக மாறுவான்!

இப்படிப்பட்டப் பேரின்ப நிலை அடைந்த அதிர்ஷ்டசாலிகள் லட்சங்களில் ஓரிருவர்தான்!  அப்படி என்றால், சாதாரண மனிதர்களாகிய நாம் எப்படி இறைவனைக் காண்பது? அவன் அருள் கிடைக்கப் பெறுவது? அதற்கான வழிதான் என்ன? சாதாரண மனிதர்களுக்கும் இருக்கின்றது வழி! அவ்விறையருள் எல்லோருக்கும் கிடைக்கும்! எப்படி? இறைவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கை!   நம்பிக்கை என்பது ஒரு ஒளி! அந்த ஒளி இல்லை என்றால் மனிதன் கண்கட்டி விட்டது போல் இருளில் அல்லாடுவான்! அப்துல் கலாம் ஐயா சொல்லுவது போல், அந்த நம்பிக்கையால்தான் இந்த உலகமே இயங்குகின்றது!   இந்த நம்பிக்கைதான் தனிமனித ஒழுக்கத்தையும், சமுதாய ஒழுக்கத்தையும் உருவாக்கியதில் பெரும் பங்கு வகிக்கின்றது!

 “தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
 மனக்கவலை மாற்றல் அறிது

அடிமேல் அடியாகப் பிரச்சினைகள் வரும் போது மனிதன் எங்கு செல்கின்றான் என்றால், நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கின்றது என்ற உலகியல் உண்மையை நோக்கித்தான்! மனம் உணர்வுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது தெளிவாகச் சிந்தித்து தீர்வுகள் காண இயலாத நிலையில் இருக்கும்! மட்டுமல்ல உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்களோ, முடிவுகளோ நமக்கு இன்பம் தருபவையாக அமைவதில்லை என்பதுதான் உண்மை! நம்மைவிட ஒரு பெரிய சக்தி உள்ளது எனும் போது நம்பிக்கை பிறக்கின்றது! நமது பிரச்சினைகளை அந்த சக்தியிடம் முறையிட்டு, அதைத் தீர்க்க வேண்டும் போது, நம் மனம் அமைதி அடைகின்றது! இறைவன் அதைத் தீர்க்க வழி காட்டுவது மட்டுமல்ல அதைத் தீர்த்தும் வைப்பான்! ஆம்!  நம் மனது உணர்சிப் பிழம்பிலிருந்து விடுபட்டு அமைதி அடையும் போது, தெளிவாகச் சிந்திக்கவும் தொடங்கும்!  தீர்வுகளும் கிடைக்கும்! 

அந்த மெய்பொருளின் மீது ஆணவமற்ற நம்பிக்கை வைத்து வணங்கும் இந்த இறை நம்பிக்கை என்பது நேர்மறை எண்ணமே!  நல்ல வாழ்வினை, மிகவும் உன்னதமான சக்தியுடன் கூடிய ஒரு வாழ்வியலாக மாற்றும் விதத்தில் நல்ல எண்ணங்களை விதைக்கும் ஓர் எண்ணமே! இறையுணர்வு, ஆன்மீகம் என்பதே அன்புணர்வுதான் என்பதால், உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும், மனித நேயத்துடன் தன்னலமற்ற அன்பு செலுத்தி தொண்டு செய்தால் அதுவே இறைவனுக்குச் செய்யும் தொண்டும் ஆகும்! அன்பு இருக்கும் இடத்தில்தான் அருள் இருக்கும்! “அன்பே சிவம் என்பதும் இதன் அடிப்படையில்தான்!

சாதாரண மக்களாகிய நாம், தன்னலமற்ற அன்புடன், நம்மால் இயன்றதை, இயன்ற விதத்தில், நேர்மையுடன் உதவ வேண்டும்! அப்படி உதவுவதன் மூலம், நம்முள் உறைந்திருக்கும் இறைவனுக்கும் ஆனந்தம்! அந்த இறைவன், நம் வாழ்வில் நலன் பல பெற நமக்கு உதவுவான்! நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும், அதன் பன்மடங்காக நமக்கு நன்மை பயக்க இறைவன் அருள்வான்! நம் கைகள் எப்போதும் அழுபவரின் கண்ணீரைத் துடைக்க, பசித்தவர்க்கு உணவளிக்க, வீழ்ந்தவரைப் பிடித்து உயர்த்த,  வீழப் போவாரை வீழாது தாங்கிப் பிடிக்க உதவும் ஒன்றாக இருந்தால், இவ்வுலக வாழ்வில் நம் உள் உறைந்திருக்கும் இறைவனை நாம் உணர்ந்து பேரின்பம் பெற்று வாழ்ந்து, மரணம் வருகையில் அந்தப் பிரபஞ்ச சக்தியாகிய மெய் பொருளுடன்/இறைவனுடன் இரண்டறக் கலந்து இப்பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கலாம்! ஆனால், நன்மை பயக்கும் என்றோ, புண்ணியம் என்றோ எதிர்பார்த்து செய்வது இதில் அடங்காது! 

எனவே,  மற்றவர்கள் மேல் தங்களது நம்பிக்கையைப் புகுத்தாமல், அவரவர் தங்கள் நம்பிக்கைக்கு இணங்க, மத, சமய, சாதி, கடவுள் சண்டைகள் இல்லாமல், இவ்வுல்கிற்கே பொதுவான அந்த மெய்பொருளின் மீது நம்பிக்கை வைத்து, மனித நேயத்துடன், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, “அன்பே சிவமாக இந்த உலகை நேசித்து வாழ்ந்தாலே, அதுவே ஆன்மீகம்தான்! இறையுணர்வுதான்!

கண்டவர் விண்டிலர்!  விண்டவர் கண்டிலர்!