ஞாயிறு, 30 டிசம்பர், 2018

மிஸஸ். விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)


புத்தகம் பற்றிய அறிமுகம், விமர்சனம் எழுதி மூன்று வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. அதுவும் குறிப்பாக விமர்சனம் எல்லாம் துளசிதான் எழுதுவார். எனக்கு அவ்வளவாக எழுத வராது. நான் என் கருத்துகளை இடையில் நுழைப்பது வழக்கம். நான் மட்டும் தான் புத்தகம் வாசித்தேன். துளசி இன்னும் வாசிக்கவில்லை. வலையில் பலரும் மிக அழகாக நூல் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் எனக்கு அதை அத்தனைச் சிறப்பாக எழுத வராது. எனவே, மலர் மற்றும் விசு! என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் எழுதியுள்ளேன். பிழையிருப்பின் பொறுக்கவும். இது இங்கு கருத்திடுபவர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது.  மிஸஸ். விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ்
(1983-1920)
மலர்-விசுமலர் (மலர்வண்ணன்)-விசு இருவருமே நம் பதிவர் நண்பர்கள். இருவரும் சேர்ந்து எழுதிய படைப்புதான் மிஸஸ். விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920).

விசுவாசத்தின் சகவாசம் எனும் முதல் புத்தகத்திற்கு அடுத்து விசுவின் இரண்டாவது புத்தகம் இது. (மலர்வண்ணனும் இணைந்து எழுதியிருக்கிறார்)

இந்த இரண்டாவது புத்தகத்தின் கதைக்களம் வேலூரைச் சுற்றியே வருகிறது. குறிப்பாக 80 களில் இருந்த வேலூர் டவுன்ஷிப் மற்றும் அதைச் சுற்றி. வேலூரைச் சுற்றியுள்ள சில இயற்கையான பகுதிகள் சொல்லப்பட்டிருப்பது ரம்மியம்.

கதையில் 1920 துகளில் வரும் பகுதியில் தொடங்கும் விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் பகுதியின் ஒரு அம்சம் கதையின் கடைசி முடிவு வரை தொடர்கிறது. இந்த 1920 பகுதியை மலர்வண்ணன் அழகிய தமிழில் எழுதியிருக்கிறார். மலரின் தமிழ் மிக அழகாகப் பயணிக்கிறது அப்போதைய பாலாறு நதியினைப் போலவே! அபிராமி அந்தாதிப்பாடல், நாட்டுப்புறப்பாடல் என்று அப்பகுதிக் கதையில் இழையோடச் சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது பொருத்தமாகவும். பங்கஜம், கெளுத்தி ட்ராக்கும், அந்தக் கதாபாத்திரங்களைச் சொல்லிய விதமும் அருமை. அதிலும் நிறைய தகவல்கள் ஆன்மீகத் தகவல்கள் + அந்த பீரியட் வரலாற்றை நல்லா கையாண்டிருக்கிறார் மலர். நல்ல தமிழில்!!. மலருக்குப் பாராட்டுகள்!

தந்தையை சிறு வயதில் நாயகன் இழந்திருப்பது போல அவன் வேலூரில் சந்திக்கும் கதையின் நாயகி உமாவும் அம்மாவை இழந்தவள். அம்மாவின் நினைவில் எப்போதும் வாழ்பவள். இவர்களுக்குள் நட்பு மலர்வதில் அப்போதைய ஆனந்தவிகடனில் வெளி வந்த தொடரான சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் ஒரு முக்கிய அம்சம்.

1920 - பங்கஜம் விஸ்வநாதன் ரிச்சர்ட், 83 ல் நாயகன் கிச்சா/விச்சு/ரிச்சி மற்றும் நாயகி உமா, எப்படி லிங்க் ஆகிறது என்பதை கதையை வாசிக்கும் போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். நான் இங்கு அதைப் பற்றிச் சொல்லிவிட்டால் கதையின் ஸ்வாரஸ்யம் போய்விடும் என்பதால் தவிர்க்கிறேன்.

வேலூரில் நாயகனுக்குக் கிடைக்கும் நட்புகள் மூலம், தான் அத்தனை வருடங்கள் ஏங்கிய அன்பு என்பதன் அர்த்தத்தை நாயகன் புரிந்து கொள்ளும் இடங்கள் இடங்கள் நெகிழ்ச்சி என்றால், உமா அண்ட் ரிச்சி/கிச்சா/விச்சு, இவர்களின் நண்பர்கள் ரகு, குரு, விஜய், எலி மாம்ஸ் வரும் பார்ட் எல்லாம் நகைச்சுவை மற்றும் அலப்பறைதான். எழுத்தாளர் விசுவின் ஸ்டைல் பளிச்! நகைச்சுவை கலந்த உரையாடல்கள், வார்த்தைகளை வைத்து விளையாடுவது, குறிப்பிட்ட வசனம்/வரி அவ்வப்போது ரிபீட் ஆவது, அவை எல்லாம் விசுவின் முத்திரை!

துடிப்பான வசனங்கள். ரேஸி ஸ்டைல்! நண்பர்கள் குழு மிக மிக அருமையான குழு. நல்ல புரிதல் உள்ள குழு. வாசிப்பவர்களைக் கண்டிப்பாகப் பொறாமைப்பட வைக்கும் நண்பர் குழு. அது போலவே உமா ப்ளஸ் கிச்சா/விச்சு/ரிச்சி காதல்! ஆனால் கடைசி வரை காதலைச் சொல்லிக்கொள்ளாமலேயே காதலிக்கிறார்கள். அந்தப் புரிதல், அவர்களின் உரையாடல்கள் எல்லாமே நகைச்சுவையுடனும் அதே சமயம் கருத்துடனும், உணர்ச்சிகளுடனும் சொல்லியிருக்கிறார். (இது என்ன கிச்சா.விச்சு/ரிச்சி? இதெல்லாம் நாயகனின் பெயர்கள்தான். அதை வைத்து ஆசிரியர் விசு எப்படி விளையாடியிருப்பார் என்பதைக் கதை வாசிக்கும் போது அறிந்தால்தான் ஸ்வாரஸ்யம்)

நாயகன் கிட்டார் வாசிப்பார் பாடுவார். நண்பர்கள் குழுவும் அப்படியே என்பதால் அருமையான ஆங்கிலப் பாடல்கள் மற்றும் 80களில் கொடிகட்டிப் பறந்த இளையாராஜாவின் பாடல்கள் பல சொல்லப்பட்டு கதையின் இடையில் விரவி வரும்.

காதல், பருவ வயது நட்புகள் அதுவும் ஆண்கள் வட்டம் என்று வரும் போது சில இடங்கள் அந்தப் பருவ வயது ஊர் சுற்றல்கள், கேளிக்கைகள் என்று வருவது யதார்த்தம் தான். இப்படிச் சொல்லும் போது உமா மீண்டும் மனதிற்குள் வருகிறாள்.

பொதுவாகப் பெண்களுக்குத் தன் ஆண் புகைப்பது, எப்போதேனும் குடிப்பது கூடப் பிடிக்காது. அதை ஏற்கும் மனம் கொண்டவர்கள் வெகு வெகு அபூர்வம். அந்த ஆணின் உண்மையான நல்ல மனதை அறிந்து அதில் அப்பட்டமான நம்பிக்கை வைத்திருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அப்படியான உண்மையான அன்பு – இதை நான் இங்கு காதல் என்று சொல்லமாட்டேன் – விச்சுவின் மீது இருந்ததால்தான் அவள் இறுதிவரை அப்படியே அதே வெல்லூர் உமாவாக இருக்கிறாள் என்பது ஒரே ஒரு வரியில் தெரிந்துவிடுகிறது – நம்மை அறியாமல் கண்ணில் நீர் வரவழைக்கும் பகுதி அது. அங்கு நிற்கிறாள் உமா! என்னவோ தெரியவில்லை மனதில் சில வருத்தங்கள் தோன்றாமல் இல்லை. மட்டுமல்ல உமா நாயகனுக்கு அவன் அம்மாவுடனான ஓர் அன்புப் பிணைப்பையும் ஏற்படுத்தும் இடங்கள் எல்லாம் மிக மிக நெகிழ்ச்சியானவை. உமா மனதில் மிக ஆழமாகப் பதிந்து போகிறாள்.

ரகு கேரக்டர் வாவ்! ரியலி எ க்ரேட் பெர்சனாலிட்டி! என்னதான் அவன் பெற்றோர் சீரற்ற பெற்றோர் என்பதால் வாழ்க்கையில் விரக்தியுடன் இருந்தாலும் நட்பிற்காக அவன் செய்வது மிகப் பெரிய தியாகம்! மனதில் உயர்ந்து நிற்கிறான்.

அவன் சட்டத்தில் சிக்கும் போதேனும் கொஞ்சம் அவன் பெற்றோரின் ரியாக்ஷன் ஏதேனும் கொஞ்சமேனும் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றியது. பெற்றோர் சீரற்றவர்கள் என்பதால் வாசகர்களின் யூகத்துக்கு விட்டிருப்பார் கதாசிரியர் என்று நினைக்கிறேன்.

பல இடங்கள் என்னை அறியாமலேயே சிரித்துவிட்டேன். சுகவீனம் கதாபாத்திரம் பேசுபவை, அவரும் மிலிட்டரி கதாபாத்திரமும் பேசுபவை எல்லாம் நகைச்சுவை. விசுவின் ஸ்டைல்!

ரசித்த வர்ணனை: காட்டினுள் கருவறைக்குள் இருக்கும் குழந்தைகள்!!! சூப்பர்ப்!!

பல நல்ல கருத்துகள் ப்ளஸ் தகவல்கள் – பாலாறுதான் ஜீவனே அங்குள்ள மக்களுக்கு, காடுதான் நம்மைக் காக்குது, உமாவின் ஈரமனது ஜெயில் கைதிகளுக்கு சாப்பாடு, விளையாட்டுச்சாமான்கள் கொடுப்பது, சிஎம்சி, நம் ராணுவம் மற்றும் வெல்லூர் புரட்சி பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்.

ஆங்கில உரையாடல்கள் 2013 ல் அமெரிக்க ஆங்கிலம் அதுவும் அமெரிக்காவில் என்று வரும் போது சரியே. அமெரிக்க ஆங்கில உரையாடல்கள் நன்றாக இருந்தாலும், வேலூரில் அந்த பீரியடில் நடக்கும் கதையில் வரும் போது அப்படிப்  பேசப்பட்டிருக்குமா என்று தோன்றியது. 

சில இடங்களில் சுஜாதாவின் வாசம் அடித்தது. அது குறையல்ல.

நாயகன் விச்சுவும் உமாவும் வேலையில் சேர்ந்த பிறகும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை எப்போதும் கசக்கும் என்பதாலோ என்னவோ மனம் அந்த உண்மை கற்பனையாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்தது. லைஃப் இஸ் நாட் ஃபுல் ஆஃப் ரோஸஸ் என்பதில் கூட இடையே முள்ளும் உண்டு என்பதை ஏற்கும் சக்தி மனதிற்குக் கிடையாதே! 

மொத்தத்தில் எழுத்தாளர் மலரின் அழகிய தமிழ் மற்றும் விசுவின் முத்திரையுடனான எழுத்து நடையில் நல்லதொரு கதை. கதையின் ஒவ்வொரு சாப்டருக்குமான தலைப்பும் ஈர்ப்பதோடு அப்பகுதியில் என்ன சொல்லப்பட்டிருக்கு என்பதும் தெரியும்.

காதலர்கள் தங்கள் காதலைச் சொன்னார்களா? இணைந்தார்களா? முடிவு என்ன என்பதை கதையில் தெரிந்து கொள்ளுங்கள். கதைப் பகுதியுள் நான் அதிகம் நுழையவில்லை. நுழைந்தால் கதை முழுவதும் தெரிந்தது போல் ஆகிவிடும் என்பதால் மீதி வெள்ளித்திரையில் என்பது போல் நானும் மீதி புத்தகத்தில் என்று சொல்லிக் கொள்கிறேன்.

புத்தகம் கிடைக்கும் சுட்டி இதோ. அங்கு ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

மிஸஸ். விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ்
(1983-1920)


ஆசிரியர்கள்: மலர்-விசு

பதிப்பகம்: வாசகசாலை பதிப்பகம்

புத்தகத்தின் பக்கங்கள்: 380
விலை: ரூ 380


.........கீதாதிங்கள், 24 டிசம்பர், 2018

சந்தைக்குப் போனேன் நானும்...

சண்டே சந்தை  -- தினசரிச் சந்தை


எந்த ஊருக்கு மாறிச் சென்றாலும் அங்கு இருக்கும் வீட்டின் அருகில் சந்தை இருக்கிறதா என்று பார்ப்பது என் வழக்கம். அப்படித்தான் பங்களூர் மாறிச் செல்லப் போகிறோம் என்று தெரிந்ததும் இருக்கப் போகும் வீட்டருகில் சந்தை இருக்கிறதா என்று கூகுளாரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சந்தை அருகில் இருந்தால் கண்டிப்பாகச் சந்தையில்தான் காய்கறி வாங்குவதும் வழக்கமாகிவிட்டது.

அதென்னவோ தெரியவில்லை எனக்கு இப்பழக்கம் சிறு வயது அனுபவத்தினால் தொற்றிக் கொண்டது என்றும் சொல்லலாம். அவ்வப்போது மேல் உலகத்துக்கு ஒரு அழைப்பு விடுத்து அம்மாவழிப் பாட்டிக்கு நன்றி சொல்வது வழக்கம். என் அப்பாவும் சந்தைக்குப் போய் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அது போல பார்த்து பார்த்து எங்கு பொருட்களின் விலை குறைவு என்று வாங்குவார் அந்தப் பழக்கமும் எனக்கு உண்டு. 

7 ஆம் வகுப்பிலிருந்து அம்மா வழிப்பாட்டி வீட்டில். கூட்டுக் குடும்பம்.  ஞாயிறன்று பாட்டி சந்தைக்குப் போக வேண்டும் என்று அறிவித்துவிடுவார். என் மாமாக்களின் குழந்தைகள் நான் என்று எல்லோரும் கிளம்ப வேண்டும். எல்லோரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள்வோம். தப்பிக்க வழி உண்டா என்றும் பார்ப்பதுண்டு. பின்னே படிப்பதற்கும், எழுதுவதற்கும், வீட்டுப் பாடமும் நிறைய இருக்குமே. அது தவிர வீட்டு வேலைகளும் இருக்கும். ஆனால், சந்தைக்குப் பாட்டியுடன் நாங்களும் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். காய்கள் ஒரு வாரத்திற்குத் தேவையானவற்றை வாங்கி வர வேண்டும். நிறைய இருக்கும்.

ஊரிலிருந்து, வரும் வராது அல்லது தாமதமாக வரும் பேருந்தில், வடசேரிக்குச் சென்று காய்கள் வாங்கிக் கொண்டு ஒழுகினசேரி வரை 1.5 கிமீ நடக்க வேண்டும். வடசேரியில் வரும் வழியில் பே நா கிருஷ்ணண் கடையில் சில சமயம் மளிகை சாமான்கள் சிலதும் வாங்கிக் கொண்டு ஆளுக்கொரு பையாகத் தூக்க முடியாமல் இடுப்பில் குழந்தையை வைத்துக் கொள்வது போல் வைத்துக் கொண்டு நடப்போம். அதுவும் கண்டிப்பாக மத்தன், தடியன் எல்லாம் உண்டு. பாட்டி முழு தடியன்தான் வாங்குவார். பெரிய மிருதங்கம் போல் நீளமாக இருக்கும். இடுப்பில் வைத்துக் கொண்டால் வழுகி வழுகிப் போகும் என்றாலும் அதை கீழே விழாமல் பிடித்துக் கொண்டு தோளும், முழங்கையும் வலிக்க நடப்போம். தூக்குவதில் எங்களுக்குள் பேரம், லஞ்சம் எல்லாம் நடக்கும். அது தனிக்கதை. அப்புறம் சொல்லுகிறேன்.

ஒழுகினசேரியில் பேருந்து நிறுத்தத்தில் எங்கள் ஊர் செல்லும் பேருந்து வருமா வராதா என்று கால்கடுக்க நின்ற நாட்களும் உண்டு. அதுவும் வெயில் காலம் என்றால் கேட்கவே வேண்டாம். கோயிலில் கோலம், வீட்டு எடுபிடி வேலைகள் எல்லாம் முடித்து சந்தைக்குச் சென்று வர அரை நாள் போய்விடும். பேருந்துகள் அடிக்கடி கிடையாதே அப்போது. சில சமயம் ஊருக்குள் செல்லும் பேருந்து வராமல் டிமிக்கி கொடுத்துவிடும். அப்போது திருநெல்வேலி போகும் முக்கியச் சாலையில் ஓட்டாஃபீஸ் என்று சொல்லப்படும் நிறுத்தத்தில் இறங்கி பைகளையும் காய்களையும் சுமந்து கொண்டு முக்கால் மைல் என்று சொல்லப்படும் அந்தச் சாலையில் ஊருக்கு நடப்போம். (முக்கால் மைல் தூரம்)

சாலையின் ஒரு புறம் பெரிய, அகலமான வாய்க்கால். அதை அடுத்து வயல்கள். சாலையின் மறுபுறம் பரந்த வெளியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று வயல்கள். நடுவில் ஓரிரு தென்னந்தோப்புகள். தூரத்தில் பழையாறும், புத்தேரியும் அச்சாலையும் தெரியும். முக்கால்மைல் சாலைக்கும் வயல்களுக்கும் இடைப்பட்ட ஓரத்தில் பூவரசு, வேம்பு, காட்டுச் செடிகள் மரங்கள் என்று பசுமையாக இருக்கும். வழியின் நடுவில் அரசமரத்தின் அடியில் மேடையில் எல்லை தெய்வம் மேலங்கோட்டு அம்மன். இந்த முக்கால்மைல் சாலையில் மேலங்கோட்டு அம்மனைக் கடந்ததும் வண்ணாக்குடி என்ற இடம். அங்கு வயல்களுக்கான சிறிய வாய்க்கால் இப்புறம் உள்ள பெரிய வாய்க்காலில் இருந்து சாலையின் அடி வழியாக ஓடும். பார்க்கவே ரம்மியமாக இருக்கும். பாட்டி சில சமயம் ஒழுகினசேரி பேருந்து நிறுத்தத்தின் எதிரிலேயே இருக்கும் திரையரங்கில் படம் பார்க்கப் போய்விடுவார். அதுவும் (கீதாக்காவுக்கு மிகவும் பிடித்த) ஜிவாஜி படம் என்றால் கண்டிப்பாகப் போய்விடுவார்! அப்படியான நேரங்களில் நான் இந்த வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் அளைந்துவிட்டுச் செல்வது வழக்கம். 

அப்படி சந்தை மிகவும் பிடித்துப் போன ஒன்றாகிய எனக்கு இங்கு பங்களூரில் இரு சந்தைகள் வீட்டருகில் என்றால் கேட்கவா வேண்டும்? 20 நிமிட நடையில் இருக்கும் கோகிலு க்ராஸில் ஞாயிறு தோறும் காலை முதல் இரவு வரை சந்தை. சண்டே சந்தை. மற்றொன்று தினசரிச் சந்தை.

 சண்டே சந்தை

இந்தச் சாலை முழுவதும் ஞாயிறு சந்தை காலையிலிருந்து, இரவு வரை. படத்தில் காலை வேளை என்பதால் கூட்டம் அதிகமாகத் தெரியா விட்டாலும் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகும் அதுவும் மாலையில் ரொம்பவே கூட்டம் இருக்கும். எனவே காலையில் 7.30மணி – 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுவதுண்டுமசாலா சாமான்கள் மற்றும் சமையலுக்குத் தேவையான மற்ற வெஞ்சன சாமான்களும் கிடைக்கிறது. எல்லா ஊர்களில் உள்ள சந்தை போலத்தான்


இது என்னவென்று தெரிகிறதா?!! சொல்லுங்கள். நான் என்னவென்று பதிலில் சொல்லுகிறேன்.

முந்தைய படத்தைக் க்ளிக்கிய போது உரிமையாளர் இந்தத் தாத்தாவை படம் எடுக்கச் சொன்னார். பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன் ஆனால் தொடரமுடியவில்லை. எனவே க்ளிக்கிக் கொண்டு வந்துவிட்டேன். (தாத்தாந்னு சொல்லிருக்கேன் பாருங்க! எதுக்குன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன!!!!!!!!! ஏஞ்சல் வந்தால் புரிந்து கொண்டுவிடுவார் சொல்லி கொஞ்சம் ஓட்டுவார்!!!ஹிஹிஹி இப்ப உங்களுக்கும் புரிஞ்சுருக்குமே!!!!!)

இந்த சைஸ் தேங்காய்களில் ஒன்றின் விலை ரூ 10

இந்த சைஸ் தேங்காய்களில் ஒன்றின் விலை ரூ 15.


 இந்த சைஸ் தேங்காய்களில் ஒன்றின் விலை ரூ 20.

கொத்தமல்லி கட்டுகள் அடுக்கி வைச்சுருக்காங்க பாருங்க. பார்த்ததுமே மனம் வாங்கிடத் துடிக்கும்!

வீட்டிற்கு வந்த மைத்துனர், மற்றொரு மைத்துனர் குடும்பத்தார் எல்லோரும் இரு சந்தைகளையும் பார்த்து காய்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. விலையும் குறைவாக இருக்கிறது அப்படியே அள்ளி வாங்கிக் கொண்டு போய்விடலாம் போல இருக்கு என்று சொல்லிக் கொண்டார்கள்!!!


தினசரிச் சந்தை


இங்கு வந்த புதிதில் சண்டே சந்தைக்குத்தான் முதலில் அறிமுகமானது. அப்புறம் இந்த தினசரிச்சந்தையைப் பார்த்து இங்கு செல்லத் தொடங்கியதும், இங்கு வீட்டில் குளிர்சாதனப்பெட்டி இன்னும் வைத்துக் கொள்ளாததால் இந்த தினசரிச் சந்தைக்கு வாரத்தில் இரு நாட்கள் செல்லத் தொடங்கிவிட்டேன் நடைப்பயிற்சிக்கு நடைப் பயிற்சி. சந்தையில் காய்களும், பழங்களும் வாங்கும் மகிழ்ச்சி. சந்தையின் அருகில் கூட்டமே இல்லாத இரு மிகவும் சிறிய கோயில்கள். வாசலில் இருந்தே சல்யூட் வைக்கலாம்!

வீட்டிலிருந்து 25 நிமிட நடையில் தினசரிச் சந்தை. ஞாயிறு சந்தையிலேயே விலை குறைவாக இருக்கும் என்றால் இந்த தினசரிச் சந்தையில் விலை அதையும் விடக் கொஞ்சம் குறைவுதான். ஒரு கிலோ கோஸ் 10 ரூபாய்தான். எல்லா காய்களுமே கிலோ 10லிருந்து 30க்குள்தான். பீன்ஸ் கிலோ ரூ 30. 25க்குக் கூடத் தருவார்கள். ஆனால் அரைக்கிலோ, கால்கிலோ வாங்கினால் கிலோ 30. இரண்டு பங்களூர் கத்தரிக்காய் ரூ 10 

சொல்ல மறந்துவிட்டேனே. மயங்கிடாதீங்க! விதையில்லா கறுப்பு திராட்சை 4 கிலோ ரூ50 தான்!!!!!! மீதி விஷயங்களை அடுத்த பதிவில் மாத்தலாடுறேன்! 

--------கீதா

திங்கள், 3 டிசம்பர், 2018

சொல்முகூர்த்தம் - 2


நட்சத்திரக் குழந்தைகளுக்கு நாம் “நோ” என்று சொல்லக் கூடாது என்று பயிற்சியில் சொல்லப்படுவதுண்டு. உ.ம். அம்மாவை தொந்தரவு பண்ணக் கூடாது. பண்ணாதே என்று சொல்வதை விட அம்மா முக்கியமான வேலையில் இருக்கிறார். வந்துவிடுவார். கொஞ்சம் பொறு என்று அவர்களுக்குப் புரியும்படி சொல்ல வெண்டும்.

அவர்கள் அதீதமாகச் சாப்பிட்டால், நோ தரமாட்டேன் என்று சொல்வதை விட, இப்ப இதை எடுத்துக் கொள். கொஞ்சம் நேரம் கழித்து – நேரம் சொல்லி விட வேண்டும் – தரேன் மீதியை. ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவர்களுக்குப் புரியும் வகையில் விளக்கிவிடவும் வேண்டும். இப்படி நிறைய பயிற்சிகள் உண்டு.  சிறிய வயதிலேயே இதை எல்லாம் சொல்லி இவர்களைக் கையாள அன்பு, பொறுமை, பொறுமை, பொறுமை அதிகம் வேண்டும் என்றால் அவர்களது பதின்ம வயதில் பெற்றோர் ஞானியாக இருந்தால் மட்டுமே கையாள முடியும். இதைப் பற்றி நான் விரிவாகச் சொல்லவில்லை இங்கு.

இது சாதாரண குழந்தைகளுக்கும் பொருந்துமா என்றால் பெரும்பான்மையான சதவிகிதத்திற்குப் பொருந்தும். சொன்னதைக் கேட்கவில்லை என்றால் சிறிய தண்டனைகள் கொடுக்கலாம். அதை விட்டு பெல்டால் விளாசுவது, கம்பால் அடிப்பது, கைவிரல்கள் பதியும்படி அடிப்பது என்பது குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறத் தூண்டும் செயலாக மாறிவிடும்.

அதே போன்று கோபத்தில் திட்டும் போதும் வார்த்தைகள் நீ லாயக்கில்லை, ஒன்றிற்கும் உதவாக்கரை என்று சொல்வது. குறிப்பாகப் பதின்மவயதுக் குழந்தைகளின் கீறிப்பார்க்கும் சொற்கள். கொல்லும் சொற்கள். ஒரு சிலர் இதை வீம்பாகக் கொண்டு வாழ்வில் முன்னேறிச் செல்வர் ஆனால் எல்லோரும் அப்படி அல்ல. 

இங்கு நான் இருக்கும் தெருவில் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். பல மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆனால் கன்னடம் பேசும் குழந்தைகள், கன்னடம் மட்டுமே பேசும் குழந்தைகள் என்று கலந்து கட்டி. எல்லோரும் எனது நட்புகள். வீடு சில சமயங்களில் ஜே ஜே என்றிருக்கும்.


படிப்பைப் பற்றி மட்டும் பேசாமல் பல கதைகள் சொல்லி, விளையாட்டுகளும் விளையாடி, விளையாட்டுடனேயே சில நல்ல விஷயங்களையும், கதைகளும் சொல்லி அவர்கள் லெவலுக்கு இறங்கி தோழமையுடன் பழகினால் குழந்தைகள் நம்மிடம் கற்க வருவார்கள் என்பது இங்கு கொஞ்சமேனும் நிரூபணம் ஆகிறது. பாடத்தில் சந்தேகம் கேட்கவும், ஆங்கிலம் கற்கவும் வருகிறார்கள்.


என்னிடம் இருக்கும் “எப்படி நினைவுத் திறனை வளர்த்தல்” எனும் ஆங்கிலப் புத்தகத்தில் உள்ள விளையாட்டுகளையும் அவர்களுக்கு விளக்கி விளையாட வைப்பதால் ஆண் குழந்தைகள் நான் சொன்னபடி கேட்கிறார்கள் என்று பெண் குழந்தைகள் (சிலர் ஆண் குழந்தைகளின் சகோதரிகள்) வந்து சொல்கின்றார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. அப்பெண் குழந்தைகள் சொன்னது சும்மா டுபாக்கூர்.

வேறு ஒன்றுமில்லை. தீபாவளிக்கு எல்லாரும் வெடி வெடிக்க வேண்டும் என்றார்கள். பக்கத்து வீட்டு வாசல்களில் வெடிக்கக் கூடாது என்று சொல்லி விரட்டி விட்டனர் போலும். நான் சொன்னது “வெடித்துக் கொள்ளுங்கள். எஞ்சாய் செய்யுங்கள். ஆனால் யார் மீதும் பட்டாசு படாம பார்த்துக்கணும். வீடுகளில் தீப்பொறி படாமல் பார்த்துக்கணும். தெருவில் மற்றும் வீடுகளில் விழும் பட்டாசுக் குப்பைகளை எல்லோரும் பெருக்கி எடுத்துப் போடணும். நான் உங்களுடன் சேர்ந்து வெடிக்கவரமாட்டேன். ஆனால், குப்பைகளைப் பெருக்குவதில் நானும் உதவுகிறேன் என்று சொன்னதும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆளுக்கொரு பொறுப்பையும் கொடுத்தேன். அவ்வளவுதான்.

இரவு வெடித்தார்கள். மறு நாள் காலை எல்லாரும் சேர்ந்து தெருவைப் பெருக்கினோம், வீடுகளில் விழுந்த குப்பையையும் பெருக்கி கவரில் போட்டு வைத்தோம். குப்பை வண்டி வந்ததும் குழந்தைகள் ஓடி வந்து என்னிடம் சொன்னார்கள். இரண்டாவது நாள் வெடித்த குப்பைகளை எல்லாம் அவர்களே பெருக்கி கவரில் போட்டு வைத்து விட்டார்கள். அதே போன்று கரும்புச் சக்கையைத் தெருவில் துப்பக் கூடாது, கடலை சாப்பிட்டு ஓடுகளைத் தெருவில் போடக் கூடாத்து என்பது முதல் பிஸ்கட் கவர்கள், ப்ளாஸ்டிக் எதுவும் தெருவில் போடாமல் குப்பைக் கவரில் போட வேண்டும் என்று சொன்னதையும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். முதலில் நாம் பெரியவர்கள் அதனை அவர்கள் முன் பின்பற்ற வேண்டும் என்பது மிக முக்கியமாச்சே!

இவர்களில் மூன்று சிறு பெண் குழந்தைகளைத் தவிர பதின்ம வயதுக் குழந்தைகள் யாரும் இந்த வருடம் பள்ளிக்குச் செல்லவில்லை. வறுமை ஒரு புறம். என் தொட்டடுத்த வீட்டுப் பையனை அவன் அப்பா அதீதமாக அடித்ததால் பள்ளிக்குச் செல்லாமல் எங்கோ நம் ஊரில் வேலை செய்துவிட்டு இங்கு வந்து ரோட்டில் படுத்துறங்கி என்று இருந்தவன் தற்போது அவன் தங்கைகள் மற்றும் பிற குழந்தைகளுடன் என்னிடம் வந்தான். அவன் புத்திசாலி என்பது தெரிந்தது அவனோடு விளையாடிய போது.

அவன் அம்மாவிடம் சென்று பேசினேன். அவர் இவன் மோசம் அது இது என்று சொன்னதும் நான் இவன் மிக மிக புத்தி சாலி. நல்ல பையன் என்று அவனை வைத்துக் கொண்டே பேசியதும் அவனுக்கு மகிழ்ச்சி. அவன் பள்ளி செல்ல வேண்டும் என்று சொன்னதும் அடுத்த வருடம் பள்ளி செல்லத் துவங்குகிறேன் என்று சொல்லி உறுதி மொழி அளித்துள்ளான். பார்ப்போம். இந்தச் சொல்முகூர்த்தம் பலிக்கிறதா என்று.

அதே போன்று இரு பெண் குழந்தைகள் மற்றும் அவர்கள் சகோதரனை பெற்றோரே இந்த வருடம் பள்ளிக்கு அனுப்பவில்லை. சிறு வயதிலிருந்தே தனியார்ப்பள்ளியில் சேர்த்திருந்ததால் இந்த வருடம் கட்டணம் கட்ட இயலவில்லை என்று அனுப்பவில்லை என்பதை அறிந்ததும் மனம் மிகவும் வருந்தியது. ஏன் அரசுப் பள்ளி இருக்கிறதே சேரலாமே என்றால் அவர்கள் அப்பா அதை விரும்பவில்லையாம். சிறிய வயதிலிருந்தே தனியார்ப்பள்ளியில் படித்ததால். ஐசிஎஸ்ஸி சிலபஸ்ஸாம். கடினமான சிலபஸ். அவர்களின் அப்பா தேநீர்க்கடை வைத்திருக்கிறார்.

நான் வந்து உங்கள் தந்தையிடம் பேசவா என்றேன். தயங்கினார்கள். இப்போதுதான் சரி என்று சொல்லியிருக்கிறார்கள். சொல்முகூர்த்தம் வேண்டி என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வருகிறேன் அவரிடம் எப்படிப் பேசினால் குழந்தைகள் மீண்டும் பள்ளி செல்ல முடியும் என்று. அதற்கு முதலில் இங்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகள் குறித்து ஒரு சிறிய ஆய்வும் நடத்திக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளின் பெற்றோர் மீதும் எனக்கு வருத்தம் இருக்கிறது. இரு பெண் குழந்தைகளுக்கும் நடுவிலான ஆண் குழந்தையின் வளர்ப்பு சரியில்லை. 

நம் காலம் கண்டிப்பு நிறைந்த காலம். யாரும் விளக்கம் சொன்னதும் இல்லை. ஆனால் இப்போதைய குழந்தைகள் அப்படி இல்லை. குழந்தைகளுக்கு நாம் செய்யக் கூடாது என்று சொல்வதை விட இப்படிச் செய்வது நல்லது என்றோ அல்லது எப்படிச் செய்ய வேண்டும் என்றோ நாமும் அவர்களுடன் சேர்ந்து தோழமையுடன் இடையிடையே நல்லொழுக்கக் கதைகள் சொல்லி என்று சொல்லிக் கொடுத்தால் அவர்கள் அதை கொஞ்சம் ஏற்கிறார்கள். அவர்கள் லெவலுக்கு நாமும் இறங்க வேண்டும் என்பது மிக முக்கியம். எனக்கு என் தாத்தா பாட்டியும், என் மகனுக்கு என் அம்மா இருந்தவரை என் அம்மாவும் - என் நினைவுக்கு வருகிறார்கள்.

என் மகனுக்கு சிறு வயதில் பிடிவாதம் உண்டு. “இப்போ” என்று அழுவான் காலை தரையில் உதைத்துக் கொண்டு. கண்ணில் ஒரு சொட்டு தண்ணீர் வராது. அவன் பிடிவாதத்திற்கோ அல்லது தேவையற்ற போருள் கேட்டு அழுதாலோ அதற்கு இடம் கொடுத்தது இல்லை. நோ என்றால் நோ தான். உதாரணமாக அப்போது நாங்கள் இருந்தது திருவனந்தபுரம். எங்கள் வீட்டில் டிவி பெட்டி கிடையாது. ஆனால், எதிர்த்த வீட்டில் டிவியில் தூர்தர்ஷன் தவிர கார்ட்டூன் சானல்கள் எல்லாம் வரும். இவன் டாம் அண்ட் ஜெர்ரி அங்கு சென்று பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பான்.

நான் சொல்வேன் "ஹிப்போ" தானே வா ஜூவுக்கு  போகலாம் என்று சொல்லி அவனை சிரிக்க வைக்க முயல்வேன். அவனுக்கு ஜூ மிகவும் பிடிக்கும். உடனே தன் பிடிவாதத்தை மாற்றிக் கொண்டு விடுவான். அவனை அழைத்துச் சென்று வருவேன். அதையும் மீறி அவன் அழுதால் அவன் பிடிவாதம் சரியல்ல என்று அவன் புரியும்படி சொல்லி விளக்குவேன் கூடியவரை அவனை டைவேர்ட் செய்வேன். இல்லையா நான் கண்டு கொள்ளவே மாட்டேன். 

உடனே கொஞ்ச நேரமானதும் அவனுக்குப் பொறுக்காது. அம்மா சிரி ப்ளீஸ் அம்மா என்னைப் பாத்து சிரி ப்ளீஸ் என்பான். அதை நான் சாதகமாக்கிக் கொண்டுவிடுவேன். இப்படி அவன் 3, 4 வயதில். அதன் பின் நான் சொல்வதை புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டான். கிட்டத்தக்க வேதவாக்கு போல. ஆஹா இதுவும் சரியல்லவே எனது பொறுப்பு இன்னும் கூடியது. என் வார்த்தைகளிலும் செயல்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு. 

மகனுக்குக் கற்றல் குறைபாடு இருந்ததால் பள்ளியில் அவன் பின் பெஞ்சுப் பையன் என்பதால் நண்பர்களும் கிடையாது. ஆசிரியர்களும் கண்டு கொண்டதில்லை. அவனுக்குத் தாழ்வுமனப்பான்மை வந்துவிடக் கூடாது என்றும், அவன் நடத்தை நல்லதாக இருக்க வேண்டும் என்பதிலும், கற்றலில் ஆர்வம் இல்லாது போய்விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்தோம். அதற்கு உதவியது வெல்லும் சொற்கள். அதன் பின் அவன் சுயமாகச் சிந்திக்கத் தொடங்கிய பிறகு எனக்கும் அவன் தன் அனுபவத்தில் கற்பதை சொல்லித் தரத் தொடங்கினான் இப்போதும் தொடர்கிறது.

எந்தக் குழந்தையும் நல்லது செய்யும் போது தட்டிக் கொடுத்து, ஊக்கப்படுத்தி, நல்ல வார்த்தைகள் சொல்லி பாராட்ட வேண்டும். அப்படிச் செய்யும் போதுதான் அவர்கள் தவறு செய்யும் போது நாம் சுட்டிக் காட்டுவதும் புரியத் தொடங்கும். பாராட்டவும் செய்கிறார்கள், தப்பு செய்தால் திருத்தவும் செய்கிறார்கள் என்பது. சும்மானாலும் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக்கும் அது இது என்று ஹிட்லர் போல இருந்தால் குழந்தைகள் நல்லவர்களாக இருந்தாலும், வளர்ந்தாலும் நம்மிடம் இருந்து விலகிப் போக வழிகள் பல. இவை எல்லாம் பொதுவாகச் சொல்லப்படுபவை. யதார்த்தம் மாறுபடலாம்.

கொல்லும் வார்த்தைகள் அவர்களது ஈகோவை அதிகப்படுத்தும். அந்த ஈகோ நல்லவிதமாக, ஓர் எல்லைக்குள் அமைந்துவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அது கெட்ட ஈகோவாக மாறிவிட்டால் எல்லை மீறிவிட்டால் விபரீதம். அதனாலேயே வெல்லும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல் முக்கியம். இது ஒரு பேசும் கலை. கொஞ்சம் கடினமான விஷயம்தான். ஆனால் முயன்று பார்ப்பதில் தவறில்லையே! எனவே, கூடியவரை வெல்லும் வார்த்தைகளப் பயன்படுத்த முயற்சி செய்வோமே. (வெல்லும் வார்த்தைகள், கொல்லும் வார்த்தைகள்– நன்றி ஸ்ரீராம்)

கீதாக்கா குழந்தைகளைக் கையாளுதல் குறித்து அருமையான கருத்துகளைக் கொண்ட பதிவு போட்டிருந்தார்.  http://sivamgss.blogspot.com/2018/11/blog-post_14.html

மேலே சொல்லப்பட்டது ஒரு வகையானது என்றால் மற்றொரு வகை நாம் பேசும் போது நல்ல வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும் – சொல்முகூர்த்தம் - என்று சொல்லப்படுவது எவ்வளவு மகத்துவமானது என்பது நம்மில் பலருக்கும் புரிந்தாலும் பல சமயங்களில் நாம் கொல்லும் வார்த்தைகளை நம்மை அறியாமலேயே பயன்படுத்துகிறோம் நாவில் நரம்பில்லாமல். நெல்லை கூடச் சொல்லியிருந்தார் யாராவது நெகட்டிவாகப் பேசினால் நான் தவிர்ப்பேன் என்று. நானும் நெகட்டிவ் வார்த்தைகள் கேட்க நேரிடும் போது அந்த இடத்தை விட்டு அகன்றிடுவேன். அகல முடியாத சூழல் என்றால் என் மூன்றாவது காதை கழட்டி வைத்துவிடுவேன்!! என்ன தக்கனிக்கி!!! காது கேட்காதது கூட வரம் தான்! சில சமயங்களில். 

இந்த சொல்மூகூர்த்தம் எப்படி எல்லாம் ததாஸ்து சொல்லப்பட்டு பலித்து விளையாடுகிறது என்பதை நான் இரு கதைகளாக எழுத நினைத்துள்ளேன். பார்ப்போம் அதற்கான முகூர்த்தம் எப்படி என்று!


------கீதா


வெள்ளி, 9 நவம்பர், 2018

சொல்முகூர்த்தம்


Image result for bird saying thanks to god

என்னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று பற்றிக் கொண்டுவிட்டது. அவரது தலைப்பு - வெல்லும் வார்த்தையும் கொல்லும் வார்த்தையும் தாக்கம் ஏற்படுத்தியதால் உடனே சூட்டோடு சூடாக இதைப் போட்டுவிடலாம் என்று இப்பதிவு. ஏனென்றால், எனது அனுபவங்கள் அப்படியானவை. ஸ்ரீராமின் பதிவின் தொடர்ச்சி எனவும் கொள்ளலாம் அல்லது கோமதிக்காவின் கருத்திற்கு அதை ஆமோதித்து வந்த எனது கருத்திற்கு அங்கு ஸ்ரீராம் பறவைக் கதை என்ன என்று கேட்டிருந்தற்கு பதில் எனவும் கொள்ளலாம். இப்போதைய எனது அனுபவங்கள் பற்றிய பதிவுகள் காத்திருக்கட்டுமே.

குழந்தைகளிடம் பேசுவது எப்படி? இந்த சொல்முகூர்த்தம் எப்படிப் பயனளிக்கும் என்பதையும் சொல்வதாகச் சொல்லியிருந்தேன். ஸ்ரீராமும் எதிர்பார்க்கிறேன் என்று சொல்லிட இங்கு எங்கள் பகுதியில் வசிக்கும் குழந்தைகளிடம் இந்த சொல்முகூர்த்தம் எப்படி வேலை செய்தது என்பதையும் சொல்கிறேன். ஆனால் அது இனி வரும் பதிவுகளில். எச்சரிக்கை: எனவே ஸ்ரீராமிடம் இருந்து காவிக்கொண்டு வந்த சொல்முகூர்த்தம் மற்றும் வெல்லும் வார்த்தைகள் கொல்லும் வார்த்தைகள் கொஞ்சம் தொடரும்! 

என் இள வயதில் பள்ளியில் எனது காட்மதர் மேரிலீலா மற்றும் ஸ்டெல்லா டீச்சர்கள். (YSM-Young Students Movement) இதில் மேரி லீலா டீச்சர்தான் அதிகமாக என்னை வழிநடத்தியவர். அவர் அடிக்கடி சொல்லியது. பிரார்த்தனையிலும் கூட நல்லதே பேச வேண்டும். நேர்மறை எண்ணங்கள் மிக மிக அவசியம். கடுஞ்சொற்கள் கூடா என்பதுதான். 

எபியில் நேற்று நான் இட்ட ஒரு கருத்து. என் இள வயதில் நான் என் ஆசிரியை மேரிலீலாவிடம் கேட்ட கேள்வி. “இறைவனிடம் பிரார்த்தித்தால் நடக்கும் என்று சொன்னீர்களே ஆனால் எனக்கு நடக்கவில்லையே” என்று. அதற்கு அவர் அளித்த பதில்.

ஒன்று நீ அவசரகதியில், பிரார்த்தித்த நொடியில் நடக்க வேண்டும் என்று நினைக்கிறாய். சில விஷயங்கள் நடக்கும் சில விஷயங்கள் நடக்காது. கடவுள், உனக்கு எப்போது அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போதுதான் அது நடக்கும். ஆனால் அதற்காக மனம் சோர்ந்து பிரார்த்தனையைக் கைவிடக் கூடாது.

நான் சொன்ன பிரார்த்தனை என்பது நன்றி உரைத்தல். அப்பிரார்த்தனை  உனக்கு நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும். பாசிட்டிவாக எண்ண வைக்கும் வலிமை தரும். இறைவனுக்கு நன்றி உரைத்துக் கொண்டே இரு. நீ மன்றாடுவதை விட இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அது உன்னை மேலும் நேர்மறையாக மாற்றும் ஏனென்றால் ..மன்றாடுதல் என்பது உன் கண்ணீரைப் பெருக்கும். நீ நன்றி உரைப்பது சந்தோஷத்தோடு.  இறைவனை தூற்றக் கூடாது.

ஒரு பெரியவர் - நாங்கள் அவரை தாடி ஜோஸ்யர் என்போம். அவர் சொல்லுவார். இறைவனை தொழும் போது மனசு சிதறாம இருக்கணும். அம்மை அப்பனை நினைச்சு சந்தோஷப்பட்டு அழகை ரசிச்சு ஐக்கியமாகி தொழு மக்கா. அப்பத்தான் நம்ம தொழுதலுக்கு அர்த்தம் உண்டு. நல்லது நடக்கும் என்று. இதை அடிக்கடிச் சொல்லுவார்.

அதே போல எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் கோயிலில் இறைவன் முன் அழுவார். அதற்கு இதே பெரியவர் சொல்லுவார். இறைவன் முன்ன எதுக்கு கரையற. உன் கஷ்டம் எல்லாம் அவனுக்குத் தெரியும். நீ சொல்லித்தான் அவனுக்குத் தெரியனும்னு இல்லை. காலைல சாப்டியா, இன்னிக்கு பொழுதுல நல்லாருக்கியா. அப்ப அவனுக்கு நாலு வார்த்தை நல்லது சொல்லி துதிச்சுட்டுப் போ. உன்னால எனக்கு நல்லது நடக்குது நான் நல்லாருக்கேனு சொல்லிட்டுப் போ. அதை வுட்டுப் போட்டு கரைஞ்சு கரைஞ்சு கெட்டத வரவழைச்சுக்குவியா. நல்லத நம்ம மனுசங்க பார்க்கறதேல்லை. கெட்டதைத்தான் அதிகம் நினைச்சுகிடறோம். நல்லத பாரும்மா என்பார்.

சிறு வயது என்பதால் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது இவை. அதாவது நம் பிரார்த்தனையில் மனம் சிதறாமல் அது ஒரு நிமிடமானாலும், இருக்க வேண்டும் என்பதும் மகிழ்ச்சியுடன் நன்றி உரைக்க வேண்டும் என்பதும். இதை ஒட்டியதுதான் அந்தப் பறவையைப் பற்றிய கதை. கதை வாட்சப்பில் வந்ததுதான். பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள் இருந்தாலும் அதை இங்கு தருகிறேன்.

Related image

பாலைவனத்தில் ஒரு பறவை மிகவும் நோய்வாய்ப்பட்டு, சிறகுகளை இழந்த நிலையில் சாப்பாடு, தண்ணீர், வாழுமிடம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் இரவு பகலாக தன் வாழ்வை நினைத்து தன்னைத் தானே சபித்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் வானில் ஒரு புறா பறந்து இப்பறவையைக் கடக்க நேரிடுகையில் இப்பறவை புறாவை நிறுத்தி கேட்டது.

“எங்கு செல்கிறாய்?”

“நான் சொர்க்கத்துக்குச் செல்கிறேன்”

“சொர்கத்துக்கா செல்கிறாய்? அப்படி என்றால், என்னுடைய துன்பங்கள் எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்டுச் சொல்கிறாயா, தயவாய்”

“கண்டிப்பாகக் கேட்டுச் சொல்கிறேன்.”

புறா சொர்கத்திற்குச் சென்றதும் சொர்கத்தின் வாசலில் இருந்த காவல் தேவதையிடம் அப்பறவையின் துன்பங்களை எடுத்துரைத்து அத்துன்பங்கள் எல்லாம் எப்போது தீர்வுக்கு வரும் என்று கேட்டது.

“அதன் வாழ்வில் அடுத்த 7 வருடங்கள்  துன்பங்கள்தான். அந்த 7 வருடங்கள் முடியும் வரை மகிழ்ச்சி என்பதே கிடையாது” என்றதும் புறாவுக்கு வருத்தம். (இதுதான் செவன் பாயின்ட் ஃபைவ்??!!!!)

“அப்பறவை இதைக் கேட்டால் மிகவும் மனம் உடைந்துவிடுவான். இதற்கு ஏதேனும் வழி சொல்ல  முடியுமா?”

“இறைவா எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி! மிக்க நன்றி! - இந்த மந்திரத்தை எப்போதும் தவறாது சொல்லச் சொல்” (ஏழரை சனிக்கான பரிகாரம்!!!!!)

புறா இதை அப்பறவையிடம் தெரிவித்தது.

ஏழு நாட்கள் கழித்து புறா அப்பறவை இருக்கும் இடத்தைக் கடந்து பறந்த போது அப்பாலைவனத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. சின்ன குளம் ஒன்று தோன்றியிருந்தது. பறவைக்கு இறக்கைகள் வளர்ந்திருந்தது. பறவை ஆடிப் பாடிக் களித்துக் கொண்டிருந்தது.

புறா மிகவும் வியந்து போனது. அடுத்த 7 வருடங்கள் இப்பறவைக்கு மகிழ்ச்சி என்பதே கிடையாது என்றல்லவா தேவதை சொன்னது! இது எப்படி இந்த 7 நாட்களில் சாத்தியமானது என்று தேவதையிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சென்றது. தேவதையிடம் கேட்கவும் செய்தது.

“உண்மைதான்! அடுத்த 7 வருடங்களுக்கு அப்பறவைக்கு மகிழ்ச்சி என்பதே கிடையாதுதான். ஆனால், அப்பறவை ஒவ்வொரு கடினமான நிலையிலும் “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே இருந்ததால் அதன் நிலைமை மாறத் தொடங்கியது.

அப்பறவை அனல் தெறிக்கும் மணலில் வீழ்ந்த போது “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று சொன்னது. தாகம் எடுத்த போது தண்ணீரில்லாத போது “இறைவா உனக்கு மிக்க நன்றி” என்று சொன்னது. எப்படியான கடுமையான சூழலிலும் அது திரும்ப திரும்ப “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அதனால், 7 வருடங்கள் என்பது ஏழே நாட்களாகி அதன் துன்பங்கள் ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கின” என்றது.

இக்கதை அறிவுறுத்துவது ஒன்றுதான். நமக்கு என்ன இல்லை என்பதையும், துன்பங்களையும் நினைத்து இறைவனிடம் மன்றாடுவதை விட அவர் நமக்கு அளித்திருக்கும் நல்லதை நினைத்து, நம்மிடம் இருப்பவற்றை நினைத்து மகிழ்ந்து நன்றி உரைப்போம் எனும் ஒரு நல்ல நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்பதையே.

இது சற்றுக் கடினமாகத் தோன்றினாலும் மனதில் பதிந்த ஒன்று. மேரிலீலா டீச்சர் சொன்னதும், அந்தப் பெரியவர் சொன்னதும் இதையேதானே என்றும் நினைவிற்கு வந்தது. எனக்கு பல கடின நிலைகளிலும் கடக்க உதவியது இந்த மந்திரம். முயற்சி செய்து பார்க்கலாமே!

நன்றி ஸ்ரீராம் உங்கள் வார்த்தைகளைக் காவிக்கொண்டேன்!

படங்கள் : நன்றி கூகுள்

--------கீதா


திங்கள், 29 அக்டோபர், 2018

ஆவின் டு நந்தினி


பல மாதங்களாகப் பல முக்கியமான பணிகள் என்று மனமும், உடலும் தொடரி ஓட்டமாய் ஓடியதால் அதுவும் ஹர்டிலிங்க் ஓட்டம், வலைப்பக்கம் வர இயலாத நிலை இருந்து வந்தது. அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நலம் தானே! தற்போது ஆவினிலிருந்து நந்தினிக்கு மாறியாகிவிட்டது. நம்ம எபி ஆசிரியர்களில் பெரும்பாலானோர்(??!!) மற்றும் பிரபல வலைப்பதிவர்கள் வசிக்கும் ஊருக்கு மாற்றம். நிறைய பதிவுகள் வாசிக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும். என் பதிவுகளும் பல வெட்டல், ஒட்டல் வேலைகளுக்குக் கிடப்பில் காத்திருக்கின்றன. அப்படியான ஒன்றில்தான் நம்ம ஏரியாவில் சு டு கு கதை கூட வெட்டல் செய்து தட்டிக் கொட்டாமல் ஸ்ரீராமுக்கு அனுப்பி வெளிவந்தும் விட்டது.

எத்தனையோ ஊர்கள், சிறிய ஊர்கள், அந்த ஊர்களிலும் பல வீடுகள் என்று மாறி, உரல், அம்மி முதல் இண்டக்ஷன் என்று பல அனுபவங்கள் என்றாலும், கடந்த 15 வருடங்கள் சென்னையிலும் வீடுகள் மாறியிருந்தாலும் சமீப வருடங்களில் வீடு மாற்றாமல் இருந்துவிட்டு மீண்டும் ஊர் மாற்றம். மாற்றம் பழகிப் போன ஒன்றானதால் பெரிதாகத் தெரியவில்லை. பொருட்களை எல்லாம் அட்டைப்பெட்டிகளிலும், பைகளிலும் கட்டியதுதான் கொஞ்சம் உளைச்சல் எடுத்தது. ஏனென்றால் சில பொருட்களை சென்னை வீட்டில் ஓர் அறையில் போட்டு விட வேண்டும் என்று சொல்லப்பட்டதால் எதை எடுத்துக் கொள்ள எதை விட என்ற ஒரு குழப்பம். எப்படியோ மூட்டை கட்டி வந்து சேர்ந்து இந்த வீட்டில் பொருட்களை ஒரளவு அடுக்கியாகிவிட்டது. இன்னும் சில பல வேலைகள் இருக்கின்றன. (ஊர் மாற்றம், வீடு மாற்றம் பற்றி கீதாக்காவிடம் நிறையவே அனுபவக் கதைகள் இருக்கும்!!!)

சில நாட்களாக பொருட்கள் எல்லாம் கட்டி வைக்கப்படுவதைப் பார்த்து, சுற்றி சுற்றி வந்து முகர்ந்து பார்த்த கண்ணழகிக்கு நன்றாகவே புரிந்துவிட்டது போலும். இவர்கள் எங்கேயோ போகப் போகின்றார்கள் என்று. ஒன்றரை வயதில் பாண்டிச்சேரியிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணத்தில் சென்னைக்கு வந்தவளுக்கு இப்போது (ஒன்பதரை வயது) இதுவே முதலான மிக நீண்ட தூரப் பயணம். என்றாலும் எந்தவித பயமும் இன்றி மிக மிக நல்ல பெண்ணாக வந்தாள். நன்றாகவே பக்குவப்பட்டுவிட்டாள்.

ஊர் பிடித்திருக்கிறது. ஓ! ஊர் என்று சொல்லக் கூடாதோ! சரி ஊரு. இருப்பது முக்கிய நகரத்திலிருந்து அதாவது ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தள்ளி இருக்கும் சிறு நகரம் (டவுன்) அருகில் ஒரு கிராமம் என்று சொன்னாலும் வளர்ந்திருக்கும் ஊரில். பசுமை அழிந்துதான் வருகிறது. அருகில் சில ஏரிகள் இருப்பதாக கூகுள் சொல்கிறது. ஆனால் படங்கள் சொல்லுவது “எப்படி இருந்த நான் இப்படியானேன்” என்ற வசனத்தைதான். இன்னும் சில வருடங்களில் இந்த ஏரிகள் கூகுள் வரைபடத்தில் காணாமல் போய்விடும் அபாயம் வெட்ட வெளிச்சம். வளர்ச்சி என்ற பாசாங்குப் பெயரில் நாம் கொடுக்கும் மிகப் பெரிய விலை என்றே தோன்றுகிறது. கிராமங்களே இல்லாமல் ஆகிவிடுமோ என்ற அச்சமும் எழுகிறது. நான் முன்பு கண்ட பெங்களூர் அல்ல தற்போதைய பெ(ப)ங்களூரு!

கடைகளில் மக்களுக்குத் தமிழ் புரிகிறது. கொஞ்சம் பேசவும் செய்கிறார்கள். ஹிந்தி நன்றாகவே பேசுகிறார்கள் என்பதால் தமிழ் மற்றும் ஹிந்தி பேசி சமாளிக்க முடிகிறது. என்றாலும் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஐந்து நிமிட நடையில் ஹைவே. இந்த ஐந்து நிமிட நடைக்குள் அன்றாடத் தேவைகளுக்கான கடைகள், மாவு மில், மிக்சி, க்ரைண்டர், கேஸ் அடுப்பு, மொபைல் சரி செய்யும் கடைகள், ரீ சார்ஜ் செய்யும் கடைகள், சாப்பாடு கடைகள் அத்தனையும் இருக்கின்றன.

நந்தினியும் பரவாயில்லை நன்றாகவே இருக்கிறாள். சற்றுக் கொழுப்புடன். சென்னையில் ஆவின் அவ்வப்போது வாங்கினாலும், வீட்டிற்கு அடுத்தாற் போல் கறவைகள் இருந்ததால் பால்  புதியதாகக் கிடைத்தது. இங்கு கறவைகள் அருகில் இருக்கிறார்களா என்று இனிதான் பார்க்க வேண்டும்.

இங்கு காவிரி தண்ணீர் கொஞ்சமேனும் வரும் என்று நினைத்து வந்தால் இங்கும் தண்ணீர்க் கஷ்டம் எங்கள் பகுதியில். பிற பகுதிகள் பற்றி தெரியவில்லை. ஒரு வாரத்தில் இரு நாட்கள்தான் – செவ்வாய் மற்றும் சனி – தண்ணீர் சம்பில் வருமாம். ஆனால் சென்ற வாரத்தில் வரவே இல்லை. ஏற்கனவே டாங்கில் இருந்த தண்ணீரை வைத்துச் சமாளித்துக் கொண்டிருந்த போது வியாழன் மாலையிலிருந்து பிரச்சனை தொடங்கியது. எனவே சனிக்கிழமை தண்ணீர் வருகிறதா என்று மாலை வரை பார்த்துவிட்டு வராததால் அக்கம்பக்கம் விசாரித்து தண்ணீர் லாரிக்குச் சொல்லிட 10 நிமிடத்தில் வரும் என்றார்கள் வந்தும்விட்டது. 4500 லி 300 ரூ. அது போல பவர் ஷட் டவுன். தினமும் ஒரு மணி நேரம் கட் ஆகிறது. அது தவிர அவ்வப்போதும் போய் வருகிறது. 

குப்பைத் தொட்டிகளே இல்லை. பல தெருக்கள் சுற்றிப் பார்த்தாயிற்று. வீட்டிலிருந்து எடுத்துச் செல்ல வண்டி வரும் என்றார்கள் ஆனால் இந்த ஒருவாரத்தில் வரவே இல்லை. எங்கு கொண்டுக் கொட்டுவது என்று தெரியவில்லை. அருகில் இருப்பவர்கள் ஆங்காங்கே காலியாக இருக்கும் மனைகளில் கொட்டிவிடுகிறார்கள். அந்த மனைகளுக்கு அடுத்தாற் போல் இருக்கும் வீடுகளில் கொசுக்கள் வருமே! துர்நாற்றமும் வருமே. நல்லதில்லையே. நமக்கு அப்படிக் கொட்டும் பழக்கம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் பல பைகள் குப்பையுடன் முழித்துக் கொண்டிருக்கின்றன. 

இத்தனை நாள் பி எஸ் என் எல் மட்டுமே பழகியிருந்த என் கணினிக்கு ஏனோ ஏர் டெல் மற்றும் மொபைல் ஜியோ ஹாட்ஸ்பாட்டை ஏற்றுக் கொள்ள மனம் இல்லை போலும். மறுத்தது. அப்புறம் எப்படியோ சமாதானப்படுத்தி ஒரு வழியாய் ஏற்றுக் கொள்ள வைத்தாகிவிட்டது. இதோ மீண்டும் வலைப்பக்கம் எட்டிப் பார்த்துவிட்டேன்.

கூகுள் தேவதைதான் கன்னட ஆசிரியை. இப்பத்தான் சிறிய சிறிய வார்த்தைகள் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். எனவே கில்லர்ஜி கன்னடத்தில் பின்னூட்டம் கொடுத்து பயமுறுத்தாமல் இருக்க புலியூர் பூஸானந்தாவையும், தேவதையையும் வேண்டிக் கொண்டு காவல் தெய்வங்களாகப் போட்டுவிட்டேன்!!!!!!!

அடுத்த பதிவுக்கு மேட்டர் வேண்டுமே! அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். அடுத்த பதிவில் மாட்டனாடறேன்!

-----கீதா