திங்கள், 27 மார்ச், 2017

80 வயதை நெருங்கும் ஹனிமூன் ஜோடி!!

பெண் அன்றி நான் அல்ல பொம்மை என்ற என் குறுநாவலை மிகவும் ஒன்றி வாசித்து, ஆதரவு கொடுத்து, ஊக்கமளித்து, பரிந்துரைகள் வழங்கி, கருத்திட்ட அனைத்து வலையுலக உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்!  அடுத்து சில மாதங்களில் உங்களது அன்பையும், ஆதரவையும் எதிர்பார்த்து வருவதற்குக் காத்திருக்கும், கோடிக்கணக்கான மாந்தர்களுள், காலம் செய்த கோலத்தில் சிக்கலானப் புள்ளிக் கோலங்களாய் வாழும் கதாபாத்திரங்களான  துரைராசு, லதா, கோபால் என்பவர்களை வெளிக் கொணர இருக்கிறேன். நீங்கள் அவர்களையும் கைவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். சரி ...கீதா நீ ஒரு அழகான ஆதர்ச ஜோடியைப் பற்றிச் சொல்லணும்னு சொன்னியே..தொடங்கிக்க....நானும் அங்க நம்ம வலை உறவுகளோடு சேர்ந்துக்கறேன்...
ஓகே துளசி நான் தொடருகிறேன்..என் பதிவை

சனி, 25 மார்ச், 2017

பெண் அன்றி நான் அல்ல பொம்மை...5

சென்ற இரு பகுதிகளின் சுட்டி

இப்படி இருக்க, காலச் சக்கரத்தின் சுழற்சியில் வருடங்களுப் பிறகு முரளி இந்தியாவுக்குத் திரும்பி, தாய் மற்றும் சகோதரனின் மரணத்திற்குப் பிறகு, மனைவி மற்றும் குழதைகளுடன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினாலும், ஒருவேளை, மனதில் எங்கேயோ ஒரு மூலையில் குற்ற உணர்வு உறங்காமல் விழித்திருந்திருக்க வேண்டும்! அதனால்தானோ என்னவோ, அதிலிருந்து மீள, அவர் ஆன்மீகத்தை நாடியிருக்க வேண்டும்! அதுதானே, பெரும்பான்மையான மக்களின் இயல்பும், மன நிலையும்!  “ஷீரடி சாய்பாபா சேவா சங்கத்தில்இணைந்து, தியானப் பயிற்சி கற்று, பல சமூகச் சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

காலமும், வாழ்க்கை அனுபவங்களும் அவனது குற்ற உணர்வை நீக்கி இருக்கலாம்! அவனது பழி வாங்கும் உணர்வில், பழி வாங்குகிறேன் பேர்வழி என்று அவன் செய்த பல செயல்களும், மாதவிக்கும், குழந்தைக்கும் இழைத்தக் கொடுமைகளும், அவனுடைய மனதில் முள்ளாய் குத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதுவும் அவனது மன மாற்றத்திற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். மனைவியும், மகளும் மாத ஊதியம் பெற்று பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழ்வதும் ஒரு காரணமாக இருக்குமோ, என்ற எண்ணமும் என்னுள் தோன்றத்தான் செய்தது.

அவர்களைக் காண வேண்டும், அவர்களுடன் வாழ வேண்டும் என்றும் விரும்பிய அவன், அவர்களுடன் பல முறை ஃபோன் மூலம் தொடர்பு கொண்டிருந்திருக்கிறான். இரண்டு நாட்கள் முன்பு அவன் மாதவியைத் தொடர்பு கொள்ள முயல, மாதவி தொடர்பைத் துண்டித்து விட, மீண்டும் அவன் முயற்சி செய்ய இந்து ஃபோனை எடுத்ததும், அதுவரை நேரில் கண்டிராத  அப்பாவின் குரலை, முதன்முதலாக கேட்டதும் பாவம் இந்து நிலைகுலைந்து போனாள்எப்படியோ சமாளித்து, அதிலிருந்து மீண்டதும், இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள், காற்றடைத்த குளிர்பானக் குப்பியைத் திறந்தால் பொங்கும் நுரை போல், மேலெழுந்து இந்துவைப் பேச வைத்தது!

நீங்க யாருங்கஇந்த மாதிரி அடிக்கடிக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்றீங்க! .........! மிஸ்டர் அப்பா!.....என்னது? நீங்க என்னோட அப்பாவா?...ஹாஹாஹா......நல்ல காமெடி! எனக்கு அப்பாவே கிடையாதே! அவரு  எங்க மனசுலருந்து செத்து பல வருஷங்கள் ஆகிடுச்சே! நீங்க அப்பான்றீங்க!? ஆனா நான் உங்களப் பாத்தது கூட இல்லியே! என்னை உங்க மடியல வைச்சுக் கொஞ்சியிருக்கீங்களா? என்னோட முதல் பிறந்த நாளைக்கு எங்கூட இருந்தீங்களா? என்னை ஸ்கூல்ல சேக்கும் போது என் கூட வந்து, “தந்தையின் பெயர்அப்படின்னு கேட்டுருந்த இடத்துல உங்க பெயரை எழுதி கைஎழுத்துப் போட்டீங்களா? ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் பல போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசு வாங்கும் போது, என் ஃப்ரென்ட்ஸ்க்கு எல்லாம் அவங்க அப்பா வந்தபோது, எனக்கு மட்டும், இருந்தும் வராத உங்கள நான் எப்படி அப்பானு இப்ப அடையாளம் காட்ட முடியும்? என் அம்மா அன்னிக்குப் பட்ட அவமானம் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?”  என்று பேசிக் கொண்டிருந்த போது, அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாதவிக்குக் குமுறல் இருந்தாலும், அதை அடக்கிக் கொண்டு,

இந்து, அதெல்லாம் ஏன் இப்ப பேசற? பிரயோசனம் இல்ல! காலம் கடந்து தலைக்கு மேல வெள்ளம் போயாச்சுஇனி சாண் போனா என்ன முழம் போனா என்ன? அதிகமா பேசாம கட் பண்ணுடிஎன்றதற்கு,

அம்மா, நீ பேசாம இரும்மா. நீ இப்படி பேசாம இருந்ததுனாலயும், இருக்கறதுனாலயும்தான், அந்த ஆளு நம்மள ஏமாத்தினாரு! இப்ப தொந்தரவு பண்ணறாரு! நான் அந்த ஆள்கிட்ட நறுக்குன்னு கேள்வி கேப்பேன்! அப்பதான் என் மனசு ஆறும்! இது என் போராட்டம்! நீ இதுல தலையிடாதம்மா”....

ம்ம் சொல்லுங்க...மிஸ்டர் அப்பா! நாங்க பேசினது உங்க காதுல விழுந்திருக்குமே!!! எனக்கு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சீங்களா? என் குழந்தைங்க பிறந்தப்ப, அதுங்களக் கையில எடுத்துக் கொஞ்சி, தாத்தானு கூட இருந்தீங்களா? என் கணவர் உயிரோட இருக்காரா, இல்லையானாவது உங்களுக்குத் தெரியுமா? என்ன பொறுப்பு சுமந்தீங்க? கணவனா, அப்பாவா, தாத்தாவா? என் தாத்தா பண்ணின தப்புக்கு, நானும் என் அம்மாவும்தான் பலி ஆடுகளா? தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லைனு படிச்சப்ப எனக்கு சிரிப்புதான் வந்துச்சு!...என் அம்மா, அப்பா எல்லாமே என் அம்மா மாதவிதான்! ஹும்! வெக்கமா இல்ல உங்களுக்கு? இவ்வளவு நாள் எங்க கூட வாழாம, இப்ப எங்கேருந்தோ வந்துட்டுஅப்பான்றீங்க!! ஸாரி! மிஸ்டர் அப்பா, இது ராங்க் நம்பர்! ராங்க் அட்ரஸ்! நீங்க தேடுற இடம் இது இல்ல!”

மாதவி வாய் அடைத்து, இந்துவின் கோபத்தைக் கண்டு, என்ன பேசுவதென்று தெரியாமல், ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும், திக்பிரமை பிடித்தது போல இருந்தாள்! இந்துவுக்கு இது போன்ற ஒரு அப்பா இனி அவசியமில்லைதான்! அப்பா என்பதற்கான கடைமைகளில் ஒன்று கூட செய்திராத அவரை நிராகரித்த இந்துவை  குற்றம் சொல்ல முடியமா என்ன?!

மாதவியின் வாழ்கைச் சம்பவங்களை இப்படி நான் அசை போட்டு மீண்ட போது, மாதவி சொன்னஅந்த ஆள்தான்”, என்பது முரளிதான் என்பதும், மாதவிக்கு வந்த அழைப்புகள் அந்த முரளியிடமிருந்துதான் என்றும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது!

மாடிப்படிகளில் யாரோ ஏறி வரும் சத்தம் கேட்க நான் திரும்பினேன். மாதவிதான் ஃபோன் ரிங்க் சத்தம் கேட்க அதைப் பார்த்துக் கொண்டே வந்தாள்.

“ஓ நீங்க இங்க இருக்கீங்களா? என்ன, அட்டப்பாடி செம்மன்னூர் மல்லீஸ்வரமுடி தரிசனமோ

“ம்ம்ம்..கீழ போரடிச்சுது. அதான் இங்க வந்தேன்..இங்க வரும் போதெல்லாம், நான் மொட்டைமாடிக்கு வந்து, தூரத்தில தெளிவா தெரியற அட்டப்பாடி மல்லீஸ்வரன் முடியை ரசிச்சுப் பாத்து, கொஞ்ச நேரம் நிற்கறதுண்டு இல்லியா. அப்படி, அட்டப்பாடி ஆதிவாசிகளோட ஆதிபகவானான மல்லீஸ்வரமுடியைக் கண்டு ரசிச்சுக்கிட்டிருந்தேன்… இங்கிருந்து நல்ல வ்யூ! இங்கருந்து பாக்கற மாதிரி இந்த நல்ல வ்யூ எங்கருந்து பார்த்தாலும் கிடைக்கறதில்ல

மாதவியின் மனம், இனம் புரியாத உணர்வுகளில் தவித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

அந்த ஆள்…..முரளிதானே! கூப்பிட்டது முரளின்னா, நீங்க தப்பா நினைக்கலனா, நான் ஓண்ணு சொல்லறேன்! இப்படி பதில் கொடுக்காம இருந்தா, அது அவருக்கு ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கும். உங்களுக்கு டென்ஷனையும் கொடுக்கும். பதில் சொல்லிடுங்க..........”  என் பேச்சு முடியும் முன்னரே, யாரோ மாதவியைக் கூப்பிட அவர் உள்ளே சென்றார்.

 அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஆகிய சொற்கள் வெறும் பசப்பு
இச்சைக் கிளியாய் போகப் பொருளாய் இருப்பது தானா பெண் பொறுப்பு?
எத்தனை உரிமைகள் ஆணுக்கு! அதில் ஏதுமில்லே இங்கு பெண்ணுக்கு!
ஆயிரம் வஞ்சனை பெண்ணுக்கு அது தெரிவதில்லை நம்கண்ணுக்கு...........”

என்று எங்கேயோ, எப்போதோ வாசித்த, கவிஞரும், நாடகவியலாளருமான பிரளயனின் வரிகள் நினைவில் ஓடியது! மீண்டும் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்கத் திரும்பினேன். மாதவிதான்! ண்டும் அவரது ஃபோன் அலறியது! அவர் ஸ்க்ரீனைப் பார்த்து அலுத்துக் கொண்டதும், அது முரளியாகத்தான் இருக்கும் என்று நான் ஊகித்ததால்,

அது முரளியாக இருந்தால் கட் பண்ணாம, உங்களுக்கு என்ன சொல்லணும்னு தோணுதோ, இவ்வளவு வருஷம் நீங்க அடக்கி வைச்சுருந்த உங்க உணர்வுகள், அது கோபமோ, ஆற்றாமையோ, வருத்தமோஎதுவா இருந்தாலும் பளிச்சுனு சொல்லிடுங்க. இந்து, வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுன்னு பளிச்சுன்னு சொன்னது மாதிரி உங்களால ஒருவேளை சொல்ல முடியலனாலும், உங்க முடிவு என்ன அப்படின்றத தெளிவாச் சொல்லிடுங்க! அது எதுவா இருந்தாலும்! அது அவருக்குக் கேக்க விரும்பாத பதிலாகவே கூட இருக்கட்டும்இப்படிக் கட் பண்ணினா, இது தொடருமே தவிர, ஒரு தீர்வு கிடைக்காதுஎன்றேன்.

மாதவி பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

நீங்க சொல்றதும் சரிதான்! இதுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கணும்என்று சொல்லி, ஒரு தீர்மானத்துடன், ஃபோனின் பச்சை பட்டனை அமர்த்தினார்.

முரளி என்ன சொன்னான் என்று தெரியவில்லை. சிறிது நேரம் மௌனம் நிலவியது. எதிர்முனையில் முரளி ஏதோ சொல்லுவது தெரிந்தது…

                "ஸ்டாப்! நானும் ஒரு பொண்ணுதான்! எனக்கும் எல்லா உணர்ச்சிகளும், உணர்வுகளும் இருக்கு! ஒண்ணா, ரெண்டா, 37 வருஷமா தனியா வாழ்ந்துகிட்டுருக்கேன்! அதுல எத்தனையோ வருஷங்கள் உங்கள மாதிரி ஒரு பித்தலாட்டப் பேர்வழிய கனவு கண்டு மனசுல சுமந்துகிட்டு வாழ்ந்திட்டுருந்தேன்! அந்த நேரத்துல எல்லாம் நீங்க வேற ஒரு பொண்ணோட சுகமா வாழ்ந்துருக்கீங்க! அப்படி 10 வருஷம், கண்ணு இருந்தும் குருடியா வாழ்ந்தேன்! அதுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிஞ்சுச்சு, நீங்க அப்பாவைப் பழிவாங்கத்தான் என்னைக் கருவியா உபயோகிச்சிருக்கீங்கனுஅதக் கேட்டப்ப, நான் எவ்வளவு துடிச்சேன் தெரியுமா? உண்மையான அன்போடயும், காதலோடயும் என்னை நீங்கத் தொட்டதே இல்லங்கறத நினைச்சு நான் கூசிக், கூனிக் குறுகிப் போய்ட்டேன் தெரியுமா?

கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ண இந்த சமூகம் எப்படியெல்லாம் ஏளனம் செய்யும், வேதனைப்படுத்தும், சித்திரவதைச் செய்யும்னு உங்களுக்குத் தெரியாது! என்னை அம்மாவா, அக்காவா, தங்கச்சியா, மகளா நினைக்க வேண்டியவன் எல்லாம் அப்படி நினைக்காம, சின்னக் குழந்தைங்க பொம்மைய கைல வைச்சுக் கிள்ளி, அமுக்கி, நசுக்கித் தொந்தரவு பண்ணுறா மாதிரி, தொந்தரவு பண்றது! எத்தனை பேரை கை நீட்டி அடிச்சுருக்கேன் தெரியுமா?

அது ஆபீஸோ, வீடோ, பஸ்ஸோ, ட்ரெயினோ, அது எந்த இடமானாலும், எங்கிட்ட முறைதவறி நடக்க முயற்சிக்க முக்கியமானக் காரணம், நான் புருஷனை விட்டுப் பிரிஞ்சு வாழறதுதானாம்! அது சரி, நானா பிரிஞ்சேன்? நீங்கதானே பிரிஞ்சீங்க! ஏன்? என் அப்பாவைப் பழிவாங்க! ஆனா, தண்டனை எனக்கு! என்னை ஒரு குழந்தைக்குத் தாயாக்கினது அதுவும் உங்க பழிவாங்கும் படலத்துல ஒரு பாகம்தான், இருந்தாலும், அது எனக்கு வாழணும்னு ஒரு வைராக்கியத்த கொடுத்துச்சு! 37 வருஷத்துக்குப் பிறகு, என்னைத் தேடிவந்த உங்கள, நீங்க செஞ்ச துரோகத்த எல்லாம் மறந்து, உங்கள, ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னுஏத்துக்கத் தயாரா இல்லைகண்கெட்ட பிறகு எதுக்கு சூரிய நமஸ்காரம்

புருஷன விட்டுப் பிரிஞ்சு வாழற பெண்கள் எல்லாம் ஏதோ ஆணுக்கு ஏங்கி வாழறா மாதிரி, இந்த சமூகம் கீழ்தரமா நினைக்குது! ஒரு ஆண் எவ்வளவு மன்மதனா இருந்தாலும், உண்மையான அன்பு அந்த ஆணுக்குத் தன்மேல இல்லைனா, பெண் தன்னைத் தொட அனுமதிக்க மாட்டா! அதேபோல, பெண், தான் காதலிக்கற, அன்பு செலுத்தற ஆண மட்டும்தான் தன்னைத் தொட அனுமதிப்பா!

உங்களுக்கு என் மேல உண்மையான அன்பு இருந்துருந்தா, முதல்ல என்னை விட்டுட்டுப் போயிருந்துருக்க மாட்டீங்க! இப்ப வந்ததுக்கு முக்கியக் காரணம், ஒண்ணு, செய்த பாவத்துக்குப் பிராயச்தித்தம் தேட வந்திருக்கலாம்இல்லைனா, என் பணத்துக்காக இருக்கலாம்! எந்தக் காரணமா இருந்தாலும் சரி, உங்கள ரெண்டு கையையும் நீட்டி வரவேற்க நான் தயாரா இல்லை! என் மகளும் உங்கள அப்பாவா ஏத்துக்கத் தயாரா இல்லை! இப்ப உங்களுக்கு என் கணவனாகவோ, என் மகளுக்கு அப்பாவாகவோ செய்ய வேண்டிய ரோல் எதுவுமே இல்ல! ஒரு கணவனா இருந்து நீங்க செய்ய வேண்டியக் கடைமைகளை, இப்ப உங்களோடு வாழற மனைவிக்குச் செய்யுங்க! நல்ல ஒரு அப்பாவா பையன்களுக்கு ஒரு வழியக் காட்டுங்கஎன் வீட்டுக்கு வரவோ, என்னோடு பேசவோ முயற்சி செய்ய வேண்டாம்அது உங்க மனைவிக்குச் செய்யற துரோகமும் கூடஅதனால, என்ன இப்படிப் ஃபோன் பண்ணித் தொந்தரவு செய்யாதீங்க

என்னைப் பொருத்தவரை என் அம்மா படுத்த படுக்கையா இருந்தப்ப, மணி வாத்தியார் காட்டுன உங்க லெட்டரை வாசிச்சப்பவே, என் புருஷன் செத்துப் போய்ட்டார்னு முடிவு பண்ணிட்டேன்அதனால, பட்ட மரம் இனி துளிர்க்காதுஇனியும் நீங்க தொந்தரவு பண்ணினா நான் போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ண வேண்டியிருக்கும்! நானும் ஒரு பெண்தான்! பொம்மை  இல்ல! தோணும் போது கையிலெடுத்து வைச்சுக் கொஞ்சவும், வேண்டாத போது வீசி எறியவும்! குட் பை!” என்று ஆணித்தரமாகச் சொல்லி, ஃபோனை  கட் செய்தார் மாதவி!

 மாதவியின் இந்த மன அழுத்தத்தின் வெளிப்பாடைக் கேட்டதும், “ஒரு தென்றல் புயலாகி வருமே! ஒரு தெய்வம் படி தாண்டி வருமே! கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே!” என்ற, கவிஞர் வைர முத்துவின் அழகிய வரிகள் என் நினைவிற்கு வந்ததைத் தவிர்க்கமுடியவில்லை!

இன்று, மார்ச் 8!  பெண்கள் தினம்! மாதவியை நினைக்கையில் மிகவும் பெருமையாக இருந்தது! தூரத்தில் உயர்ந்து நிற்கும் மல்லீஸ்வரமுடியிலுள்ள மல்லீஸ்வரனிடம், இம் மல்லீஸ்வரியின் மனதில் சக்தியாய், நம்பிக்கையாய், என்றென்றும் தங்கி அவரைக் காத்தருள வேண்டும் என மனதார வேண்டினேன்மாதவி முறுவலித்துக் கொண்டே,

உங்க உதவிக்கு ரொம்ப நன்றி! இப்ப, மனசுல இருந்த பாரம் எல்லாம் போச்சுஇனி டென்ஷன் இல்லாம கல்யாண வேலையை, பழைய மாதவியா, கவனிக்கலாம்என்று சொல்லிக் கொண்டே கீழே இறங்கினார்நானும்,

காலம் காலமாய் அடிமையாய் கணவன் சொல்வதே வேதமாய்
புதைந்து கிடந்தது பெண்குரல் புயலாய் எழுகுது புதுக்குரல்

என்ற பிரளயனின் வரிகளை அசை போட்டுக் கொண்டே, அந்தப் புயல் பழையபடி தென்றலானதை நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டு, அவரைத் தொடர்ந்தேன்!

முற்றும்

-----துளசிதரன்