செவ்வாய், 24 ஜனவரி, 2017

ரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு!!

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்தில், குறிப்பாக இணையத்தில் ஹிந்து.காம் மற்றும் மற்றொரு தமிழ் நாளிதழில், உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது என்று வெளியாகியது. ஆனால், எளிதில் நெருங்க முடியவும் இல்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இக்குழுவைப் பற்றி நீங்கள் வாட்சப்பிலோ, மேற்சொன்ன ஊடகத்திலோ வாசித்திருக்கலாம்.

இந்தக் குழுவில் அனைவரும் தொழில்நுட்பத் துறை, வேறு துறைகளில் பணியாற்றும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது. இக்குழுவில் அல்லாமல், சுய ஆர்வத்துடன் பலரும், வயது வேறுபாடின்றி பெண்களும் இக்குழுவுடன் இணைந்து பணியாற்றியதாகவும் ஊடகம் சொல்லுகிறது. அரசியல் மற்றும் சினிமா சார்பில்லாத இளைஞர் குழு! அதை அவர்கள் சுத்தமாக விரும்பவில்லை. எதிர்காலத்திலும் நுழையவிடாமல் உறுதியாக இருக்க வேண்டும்.

யாருடைய முகமோ அடையாளமோ வெளியில் தெரியாது. அதை அவர்கள் வெளியிட விரும்பவும் இல்லை. இவர்களுக்குத் தலைமை கிடையாது. தங்களில் யாரையும் தலைவர் என்று சொல்லுவதும் இல்லை. இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவதாகத் தெரிகிறது. தங்கள் அடையாளத்தை வெளியிடாமல் ஓரிரு வரிகளில் ஓரிருவர் மட்டுமே பேட்டியும் அளித்திருப்பதால்தான் தகவலாக வெளி வந்திருக்கிறது. இவர்கள் 12 குழுக்களாகவும், ஒவ்வொரு குழுவிலும் 200 பேர் இருப்பதாகவும் ஊடகம் சொல்லுகிறது.

இவர்கள்தான் ராணுவக் கட்டுப்பாட்டுடன் மெரினாவில் இயங்கியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஊடகம் சொல்லும் தகவலைப் பார்த்தால், இவர்கள் ரமணா பாணியில் ஆனால் கத்தியின்றி, ரத்தமின்றி, பொறுப்பாக வன்முறையில்லாமல் நாளைய சமுதாயத்தைப் படைக்க விழைவது போல் தெரிகிறது. அதைத் தங்கள் பணி எதுவும் பாதிப்படையாமல் செய்வதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இது தொடக்கமே.

மட்டுமல்ல, அக்குழு உறுப்பினர்கள் பலரும் விவசாயப் பிண்ணனியில் இருந்து வந்திருப்பது போல் தெரிகிறது. அவர்கள் விவசாயத் துறையில் என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் முதலில் கையிலெடுத்திருப்பதாகவும் தெரிகிறது. அதில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அதைச் செயல்படுத்த போராடவும் செய்வார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தக் குழுவில் உறுப்பினரான விவசாயத் துறை மாணவரான ஒருவர், எதிர்காலத்தில் ஒரு வேளை இவர்கள் தேர்தலில் போட்டியும் இடலாம் என்றும் சொல்லியிருக்கிறார்.

நல்லது நடப்பதற்கு அடையாளம் தெரிய வேண்டாம். நல்லது செய்வோருக்கு முக அடையாளம் வேண்டாம்தான்! அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே! அவர்களை வழிநடத்த எதிர்காலத்தில் தலைமை ஒன்று உருவாகலாம், அல்லது அவர்கள் இதே போன்று ஒற்றுமையுடன் பணியாற்றலாம். அவர்கள் எப்போது வெளியில் தங்கள் அடையாளத்துடன் வர விழைகிறார்களோ அப்போது வரட்டும்! அதை விட்டுவிடுவோம்.

"உங்களுக்குத் தலைமை வேண்டாமாக இருக்கலாம் ஆனால், இளரத்தம் ஓடும் மாணவர்களுக்கு நல் வழிகாட்டுங்கள்! நாளைய நம் நாட்டை ஊழலில்லா நாடாக மாற்ற வேண்டும் என்பதுதான் உங்கள் முந்தைய தலைமுறையாகிய எங்கள் விருப்பமும்." 

இவர்கள், 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மக்களைக் காப்பாற்றி மீட்டெடுத்து உதவும் பணியில், சமூகவலைத்தளத்தில் ஒரு குழு அமைத்து அதன் மூலம், இளைஞர்கள் பலரையும் அச்சேவையில் ஈடுபட வைத்து பணியாற்றியிருக்கிறார்கள். அதன் பின் ஒத்த சிந்தனையால் இக்குழு உருவாகியிருக்கிறது. எனவே இவர்கள் முகநூலிலும், பிற சமூக வலைத்தளங்களிலும் இருப்பதாகத் தெரிகிறது.

அதனால், அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள், பதிவுகள் எல்லாவற்றையும் கூர்ந்து நோக்கிக் கொண்டுதான் இருப்பார்கள். எனவே, நாம் நல்ல கருத்துக்களைப் பகிர்வோம். எதிர்காலத் தமிழகம், மற்றும் நம் நாடு எப்படி அமைய நாம் கனவு காண்கின்றோமோ அதனை நாம் எழுதும் பதிவுகளில் பொறுப்புடன் முன் வைப்போம். நாளைய இளைஞர் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை எந்தவிதத்திலும் எதிர்மறையாகவோ, மறைமுகமாகவோ தூண்டும்படி இல்லாமல் நேர்மறையான ஆலோசனைகளைப் பதிவோம். நம் பதிவுகளும், கருத்துகளும் அவர்களை நல் வழியில் வழி நடத்துவதாக இருக்கட்டும். 

“எங்கள் ப்ளாக்” தளத்தில் வியாழன் தோறும் எங்கள் எல்லோரது கனவுகள், விருப்பங்கள் எல்லாம் ஒரு தொகுப்பாகவே வருகிறது. மீராசெல்வகுமார், இளைஞர் இ.பு.ஞானப்பிரகாசன், கிரேஸ் பிரதிபா, கஸ்தூரிரங்கன், முத்துநிலவன் அண்ணா போன்றவர்கள் மட்டுமின்றி பெரும்பான்மையான எல்லா வலைத்தளங்களிலும் நாளைய தமிழகம், நம் நாடு, நாளைய இளைய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்றுதான் வெவ்வேறு விதங்களில் எழுதிவருகிறார்கள். 

இக்குழு விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளதால் இந்தக் கருத்து. விவசாயப் பொருளாதாரம் - அக்ரிகல்சுரல் எக்கனாமிக்ஸ் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். எனவே, அதில் சுயசார்புப் பொருளாதாரத்தை, இன்றையக் காலக்கட்டத்திற்கு ஏற்ப, குழுவில் தொழில்நுட்பத்தில் இருப்பவர்களும் இருப்பதால், எப்படிக் கொண்டுவரலாம் என்பதையும் நன்கு நுட்பமாக அறிந்து, செயல்படுத்த சிந்திக்கலாம். அடிப்படையான கல்வி, மருத்துவம் இதுவும் எல்லா அடித்தட்டு வர்க மக்களுக்கும் சென்றடையச் சிந்திக்கலாம். இதைப் பற்றி பல வலைத்தள நண்பர்கள் எழுதிக் கொண்டுதான் வருகிறார்கள்.

எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் ஆர்வமும் இருப்பதாகச் சொல்லியுள்ளதால், இவற்றைச் சொல்லியுள்ளோம். அதுவும் நீங்கள் அறவழியில் பயணிக்க இருப்பதால் அரசியல் நுட்பங்களையும் சற்றுக் கற்றுக் கொண்டு அறிவுபூர்வமாகக் கையாண்டால்தான் நம் நாட்டு அரசியலையும் உங்களால் கையாண்டு சமாளிக்க முடியும் என்பதையும் சொல்லிக் கொள்கிறோம்.

"இளைஞர்கள் விழித்துக் கொண்டுவிட்டீர்கள்! ஊழலற்ற நாளைய தமிழகத்தை, இந்தியாவைப் படைக்க இருக்கும் முகமறியா இளைஞர் குழுவே உங்களுக்கு எங்கள் எல்லோரது வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறோம். எங்கள் எல்லோரது கனவும் அதுதான்!"

(ஆனால், இவர்கள் இறுதிவரை இல்லாமல் முதல் நாள் ஏன் விலகினார்கள் என்பதற்குக் காரணங்கள் சொல்லப்படவில்லை)

இப்பதிவை எழுதி முடிக்கும் நேரம், வெங்கட்ஜி அவர்களின் தளத்தில் இக்கதையை வாசிக்க நேர்ந்ததால், இந்தப் பதிவிற்கு ஒத்ததாக இருக்கிறதோ என்ற எண்ணத்தில் அந்தச் சுட்டியையும் இங்கு பகிர்ந்துள்ளேன். நன்றி வெங்கட்ஜி!

-------கீதா25 கருத்துகள்:

 1. நல்லதொரு தொகுப்பு வாழ்த்துகள்

  இளைஞர் குழுவே உங்களுக்கு எமது வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன்.
  த.ம.1

  பதிலளிநீக்கு
 2. நாட்டுக்கு நல்லது நினைப்போர்களை வரவேற்ப்போம்!கலாம் அய்யா கண்ட கனவு நனவானால் மகிழ்ச்சியே !

  பதிலளிநீக்கு
 3. நல்லது நடந்தால் சரி. ஜ.க. போராட்ட முறை பார்த்து நான் கூட இவர்கள் இப்படியே டெவலப் ஆகி ஆட்சிக்கு வரலாம் என்று நினைத்தேன். பின்னர் இரண்டு காரணங்களால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் அப்படித்தான் நினைத்தேன் ஸ்ரீராம். நான் நினைத்தது மாணவர்களை அல்ல அதன் திறைமறைவில் இருப்பவர்களை நினைத்து. ஆனால் என் எண்ணமும் மாறியது. சரி உங்கள் இரண்டு காரணங்கள் என்னவோ? ஆனால் ஒன்று நிச்சயம் நல்ல மாற்றங்கள் வர இருக்கிறது. மக்கள் விழித்துக் கொண்டது போல் தெரிகிறது பார்ப்போம்.

   மிக்க நன்றி

   நீக்கு
 4. ஓ... இப்படி ஒரு செயல்பாடு மறைமுகமாக இருக்கிறதோ...? நல்லது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கிறது டிடி...எனவே மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு. நல்லது நடந்தால் சரி.

   மிக்க நன்றி டிடி.

   நீக்கு
 5. அதிகாரம் என்பது இல்லாதவரை சேவைகள் தொடரும் அதிகாரம் வந்துவிட்டால் ஏதும் சொல்ல முடியாது. இது வாழ்க்கை நடைமுறை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம் ஜிஎம்பி சார். நாம் கொஞ்சம் நல்லதையே நினைப்போமே. நல்லது நடக்கும்...மிக்க நன்றி சார்..

   நீக்கு
 6. பதில்கள்
  1. ஆம் கரந்தை சகோ. ஆனால் கூடவே ஒரு பயமும் வரத்தான் செய்கிறது. தலைமை என்றில்லாவிட்டாலும் நல்ல வழிநடத்தல் வேண்டும் என்றும் தோன்றுகிறது.

   மிக்க நன்றி கரந்தை சகோ..

   நீக்கு
 7. இந்த இளைஞர்கள் குழு பற்றியும் செயல்பாடுகள் குறித்தும் நானும் படித்தேன். இது தொடர்ந்தால் அதுவும் இதே போல் நல்ல முறையில் தொடர்ந்தால் நல்லது தான். பொறுத்திருந்து பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் வேறு எந்த விஷக் கிருமிகளும் உள்ளே நுழைந்து விடாமல், அவர்களும் அதனை நுழையவிடாமல் தொடர்ந்தால் நல்லதே.மிக்க நன்றி கீதாக்கா தங்கள் கருத்திற்கு

   நீக்கு
 8. நல்ல விஷயம். அரசியல் கலக்காது இருக்க வேண்டும் - இவர்களையும் தவறான பாதையில் அழைத்துச் செல்ல பலர் காத்திருக்கக்கூடும்.....

  எனது பதிவினையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் வெங்கட்ஜி உண்மைதான். உங்கள் கருத்து !

   மிக்க நன்றி வெங்கட்ஜி

   நீக்கு
 9. இந்திய மத்திய அரசம்
  தமிழ்நாடு் மாநில அரசும்
  தோல்வியை ஒப்புக்கொண்டதால்
  மாணவர் எழுச்சியை அடக்கினரோ!
  மாணவர் எழுச்சி மறுவடிவம் எடுத்தால்
  இந்திய மத்திய அரசம்
  தமிழ்நாடு் மாநில அரசும்
  என்ன தான் செய்ய முடியும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கு

   நீக்கு
 10. மனதை மிகவும் பாதித்த நிகழ்வுகள்..
  நாட்டு நலன் கருதி கூடியவர்களின் மத்தியில் நயவஞ்சகர்களும் புகுந்ததன் விளைவு இது..

  காவல் பணியில் இருந்தவர்கள் நடத்திய தாக்குதல் கண்ணீரை வரவழைத்தது..

  பாதிக்கப்பட்ட மாணவச் செல்வங்கள் நலமடைய வேண்டுவோம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கு

   நீக்கு
 11. மாணவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ..ஆனால் இப்போ வேறு விதமாக காட்சிகள் மாறிவிட்டன என்று கேள்விப்படுகிறேன் :(

  சில பல காரணங்களால் நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கவில்லை ஆனால் நட்புக்களின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து சில பதிவுகளை ஷேர் செய்தென் ..
  ஆனால் இந்த போராட்டம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை ..நிறைய எழுதலாம் ஆனால் இது தருணமல்ல '' போராடியவர்கள் சுயநலமின்றி முன்னோடியாய் இருந்ததை மனமார பாராட்டுகிறேன் ..
  மாணவச்செல்வங்கள் இளைஞர்கள் அவர்களுக்கு இந்த அரசியவியாதிலாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை ..பரவாயில்லை நடந்த சம்பவங்கள் அவர்களுக்கு ஒரு பாடமாக எடுத்துக்காட்டாக வருங்காலத்துக்கு தங்களை ப்ரிப்பேர் செய்ய உதவட்டும் ..சம்பவங்கள் தழும்புகளாக நிற்க கூடாது என்பதே எனது பிரார்த்தனை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சல் நானும் ஜல்லிக்கட்டிற்கு அப்பாற்பட்ட சிந்தனைகளால்தான் எழுத விழைகிறேன். போராட்டத்தின் ஏற்பட்ட பல விஷயங்களைக் குறித்த ஒரு விழிப்புணர்வு எழுந்ததைப் பாராட்டினாலும் அவர்களுக்குச் சரியான வழிநடத்தல் இல்லையே என்று தோன்றியது ஏனென்றால் அரசியலை எதிர்க்கொள்ள சில பல நுணுக்கங்கள் அவசியம். இறுதிவரியை நானும் வழி மொழிகிறேன்...

   மிக்க நன்றி ஏஞ்சல்

   நீக்கு
 12. வணக்கம் சகோ! இவ்வாண்டில் உங்கள் நட்பு கிடைத்ததில், அகம் மிக மகிழ்கின்றேன்! முகமறியா இளைஞர் குழுவுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். படித்தவர்கள் நடத்தியது என்பதால், பல முன்னுதாரணங்களை ஏற்படுத்திய போராட்டம் இது. அரசியல் சூழ்ச்சி காரணமாக முடிவில் பாதிக்கப்பட்டாலும், இந்த இளைஞர் எழுச்சி தொடர வேண்டும்! கசப்பான அனுபவத்தால் அவர்கள் சோர்ந்து விடாமலிருக்க, இது போன்ற நல்ல பதிவுகள் மூலம், தொடர்ந்த ஆதரவை நல்குவோம்!

  பதிலளிநீக்கு
 13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 14. மன்னிக்கவும் இந்த பதிவுக்கு என்னால் எழுதப்பட்ட பின்னூட்டம் எழுத்துப்பிழை இருந்ததனால் அகற்றி விட்டேன்.

  ஜல்லிக்கட்டுக்கு அப்பாற்பட்ட சிந்தனையோடிந்தாலும் இந்த எழுச்சியை வரவேற்றேன்.கடைசி வரை இந்த குழு பின்னனியில் இருந்ததை வெளிப்படுத்தா விட்டாவிலும் இராணுவ கட்டமைப்புடன் அனைத்தையும் ஒழுங்கு படுத்தினார்கள்.ஆனால் முதல் நாள் இவர்கள் பின் வாங்கினார்கள் என்பது எனக்கும் புதிய தகவலே. இக்குழு முதல் நாளே பின் வாங்கினால்... கடைசி நாளில் அங்கே இருந்தவர்கள் யார்?
  அரசியல் ரிதியான எதிர்கொள்ளுதலுக்கும்,அரசின் தந்திரோபாயங்களுக்கும் முகம் கொடுக்கும் தருணம் அல்லது சூழல் இருக்கவில்லை. எல்லாமே கண் மூடி திறக்கும் நிகழ்வுகளாய் அல்லவோ நடந்தது யாரும் எதற்கும் முன்னேற்பாட்டுடன் இருக்கவில்லை. தகுந்த வழிகாட்டலும் இல்லை.

  இவ்வகையில் பெரியவர்களும்... வானத்தில் வெள்ளைக்காகம் பறந்ததை போல் தங்கள் வாழ்க்கையில் நடககத எழுச்சியில் அதிர்ந்தும் ஆச்சரியப்பட்டும்... இளையோருக்கு எல்லாம் தெரியும், அவர்கள் பார்த்து கொள்வார்கள் எனும் பெருமித விலகலும்..... இணைய தளங்களில் ஆர்ப்பரிப்புமாக எவர் குரலையும் கேட்க முடியாத ஒருவகை எதிர்ப்பும் பிடிவாகுணமும்... தவிர்க்கபப்ட்டிருக்கலாம்.

  முடிவில் அரசின் அத்தனை மௌனமும், ஆதரவும் திசை மாறிப்போனது, அரசே எதிரும் ஆனது. அதாவது எதிரிகளை அல்லது எதிர்ப்புக்களை உருவாக்க நாமே களம் அமைத்தும் கொடுத்தோம்.

  சரி பரவாயில்லை. ஜல்லிக்கட்டெனும் பெயரில் அடக்குமுறைக்கான எழுச்சி வெற்றியே இதில் நிரம்ப பாடங்கள் கற்றோம். தமிழராய் நாம் ஒன்று பட்டோம்.

  நம் கை கொண்டே நம் கண்ணை குத்தும் விந்தையும் கண்டோம். இனியும் உணராமல் போய் விடுவோமா? விடியல்கள் தூரமில்லை.
  பதிலளிநீக்கு