ஞாயிறு, 15 ஜனவரி, 2017

பொங்கலும் மாடுகளின் திருநாளும்


என்ன நண்பர்களே, சகோதர, சகோதரிகளே எல்லோர் வீட்டிலும் பால் பொங்கியதா! (தினமும் பொங்கத்தானே செய்கிறது என்ற குரலும் கேட்கிறது!) இன்று பொங்கலோ பொங்கல் ஆயிற்றே! இனிய பொங்கல் தினமாயிற்றே! இந்த இனிமை எல்லோருக்கும் என்றும் நிறைந்திருக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! நான் வாட்சப்பில், கோலம் போட்டு, பானை வைத்து, பொங்கல் பொங்கிக் கொண்டாடியாயிற்று!!

கிராமத்தில் இருந்தவரை எங்கள் வீட்டில் பொங்கலன்று புதியதாய் விளைந்து வந்த நெல்லை  நடுக் கூடத்தில்  குவித்து வைத்திருப்பார்கள். நெற்கதிரை உத்திரத்தில் தொங்க விடுவார்கள். புது அரிசியில்தான் பொங்கல் செய்வார்கள். நாங்களும் வயலில் வேலை செய்ததுண்டு.  வயல்கள் எல்லாம் வீட்டின் ஒவ்வொரு நிகழ்விற்காக விற்ற பிறகு பொங்கல் நகரத்துப் பொங்கலாகிப் போனது.

இனிமையானவர்களுக்கு, இனிய பொங்கல் என்பதால் அவர்களுக்கான இனிய இயற்கை இன்சுலின் ..

எங்கள் வீட்டில் இனியவள் நான் இருப்பதால் இந்த இனிய இயற்கை இன்சுலின்

பொங்கலுக்கு என் தோழியின் கைவண்ணம்…



இன்று வயல்களில் உழைக்கும் நாலுகால் செல்லங்களின் திருநாள்!

Image result for மாடுகள்
படம் இணையத்திலிருந்து
எங்களை எல்லோரும் வாழ்த்துங்கள்!!!

“எங்களை வைத்து நன்றாக காமெடி/அரசியல் செய்து சுய ஆதாயம் அடைகிறார்கள்! உங்கள் அரசியலுக்கு வேறு விசயம் இல்லாததால் நாங்கள் தான் கிடைத்தோமா”! என்று இந்தச் செல்லங்கள், அவர்களும் போராட்டம் நடத்துகிறார்களாம். அவர்களுக்கு ஆதரவாக எல்லா நாலுகால் செல்லங்களும் சேர்ந்து கொண்டனவாம்.

“எங்களுக்காக வருடம் ஒரு முறைதான் குரல் கொடுப்பீர்கள் போலும். நாங்கள் வருடம் முழுவதும் உங்களுக்காக வயலிலும், வண்டி இழுத்தும் உழைக்கிறோம். அதிகமாகப் பால் கறப்பதற்கு ஊசி, சினை அடைய ஊசி என்று எங்களுக்கும் எவ்வளவோ துன்பங்கள் இழைக்கப்படுகின்றன. அதற்காக யாரும் குரல் கொடுப்பதில்லை. உங்களைப் போல் எங்களால் குரல் கொடுக்க முடியாதே? வாயிருந்தும் பேச முடியாத அப்பாவிகளாயிற்றே நாங்கள்.

எங்கள் எசமானர்கள் எங்களுக்கு வேண்டிய அளவு தீனி தராமல் எங்களை சாலையில், வெயிலில் மேய விட்டு விடுகிறார்கள். மேய விடுவதில் தவறில்லை. ஆனால், சாலையில் நாங்கள் உங்கள் வாகனங்களில் அடிபட்டு உயிர் விடுபவர்கள் எத்தனை பேர் தெரியுமா? உயிர்விடுவது ஒரு புறம் என்றால் அடிபட்டுத் துன்பப்படுவது மறுபுறம். எங்களைக் கம்பால் அடித்து துரத்தியும் விடுவார்கள். இதற்காக யாரேனும் போராடியிருக்கிறீர்களா?

நீங்கள் எல்லோரும் உங்கள் சுயநலத்திற்காக நாங்கள் திரிந்த நிலங்களை எல்லாம் கட்டிடங்களாக்கி விட்டதால் மேய்ச்சலுக்கான நிலங்களும் அருகி, நீங்கள் எறியும் குப்பைகளையும் கண்டதையும் தான் நாங்கள் உண்டு வாழ வேண்டிய நிலை. இப்படி வெயிலில் மேய்வதால் தாகம் எடுக்கும் போது அருந்துவதற்கு நீர் நிலைகள் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. எல்லாம் குப்பைக் கிடங்காக இருக்கின்றது. சாக்கடை நீர்தான் இருக்கிறது.

என் மொபைலில் எடுத்தது - என் வீட்டின் அடுத்துள்ள தொட்டியில் மாடு தண்ணீர் குடிக்கும் காணொளி

எனவே, நாங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் நீர்த்தொட்டிகளின் குழாயை உங்களைப் போல் திறக்கக் கற்றுக் கொண்டுவிட்டோம். ஏதோ ஒரு பொன்மொழி சொல்லுவீர்களே! தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்று! அப்படித்தான் நாங்களே குழாயைத் திறந்து நீர் அருந்துகிறோம் ஆனால் மூடத் தெரியவில்லை. எனவே தண்ணீர் வீணாகிப் போவதோடு, எங்களை நீங்கள் விரட்டவும் செய்கிறீர்கள். இது என்ன நீதி? இப்போது ஆள்பவர்கள் என்ன மனு நீதிச் சோழனைப் போன்றவர்களா என்ன?


எங்கள் வேண்டுகோள் இதுவே! உங்களுக்கு உணவளிக்கும் வயல்வெளிகளைக் கூறு போடாதீர்கள். வானம் பொய்த்த பூமியில் பாளங்கள் ஏற்பட்டு எங்களை மேய்க்கும் உழவர்களின் வாழ்விலும் பாளங்கள். நாங்கள் சார்ந்திருக்கும் உழவையும் உழவைச் சார்ந்திருக்கும் எங்களையும் போற்றிப் பாதுகாக்க வேண்டுகிறோம். எங்களை நம்பியிருக்கும் உழவர்களைக் காப்பாற்றி வாழ்வு கொடுங்கள்! உங்கள் சுயலாபத்திற்காகப் பசுமையான புல்வெளிகளையும், வயல்களையும், மேய்ச்சல் நிலங்களையும் கூறுபோடாமல், நீர்நிலைகளைப் பாழாக்காமல், எங்கள் பகுதிகளில் நஞ்சைக் கலக்காமல்  பாதுகாப்பீர்கள் என்றால் உங்களுக்கு வளம். இல்லையேல் அழிவுதான்! இயற்கையைக் கூர்ந்து நோக்கி இயற்கையுடன் ஒன்றி வாழக் கற்றுக் கொள்ளுங்கள். 


இயற்கை அன்னையைச் சார்ந்துதான் நாம் எல்லோருமே வாழ்கின்றோம் என்பதால் இயற்கையையும் மதித்துப் போற்றிக் காப்பாற்றுங்கள்! வருடத்தில் ஒரு தினம் மட்டும் எங்களை அலங்கரித்துப் பூசித்துவிட்டு பின்னர் எங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்காமல் எங்களையும் சற்றுக் கவனியுங்கள். எங்களை செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வது சிறந்தது என்று அதீதமாகச் செய்து துன்புறுத்தாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எங்களுக்கு நோய் வந்தால் அதைத் தீர்க்க இறுதி வரை முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்யாமல், உடனே எங்களை வெட்டும் இடத்திற்கு அனுப்பிவிடாதீர்கள். இறுதிவரை முயன்றும் தீர்க்க முடியவில்லை என்றால் வெட்டும் இடத்திற்கு அனுப்புங்கள். எப்படி இருந்தாலும் எங்களை வளர்ப்பவர்களில் பலரும் எங்களை அங்கு தான் அனுப்புவீர்கள் என்று தெரியும். 

நாங்களும் உங்களுடன், உங்களில் ஒருவராக, உங்களுக்காகவே, உங்களைச் சார்ந்து வாழ்பவர்கள்தான்! எங்களுக்கும் மனம் உண்டு, உயிர் உண்டு. உங்களைப் போல் எங்களுக்குப் புலம்பவோ பகிரவோ முடியாது! தயவாய் இயற்கையையும், இயற்கை சார்ந்த எங்களையும் எங்கள் இயல்புகளுடன், எங்கள் இயல்புகளை மாற்றாமல் உங்கள் குழந்தைகளைப் போல் அன்பு செலுத்திப் பராமரியுங்கள். இதுவே இந்த வருடத்து எங்கள் நாளில் உங்களுக்கு வைக்கும் வேண்டுகோள்.”


கீழே இருப்பவை குழந்தைகளுக்காக. உழவுத் தொழில் பாடல்! உழவுத் தொழில் பற்றி அறிந்திராத குழந்தைகளுக்கு ஒரு காணொளி. மற்றொன்று ஒரு பசுவின் கதை மற்றும் தோட்டத்தில் வெள்ளைப் பசு பாடல் காணொளியாக. நானும் ரசித்தேன். ஏன் நீங்களும் ரசிப்பீர்கள். அமெரிக்காவில் இருக்கும் எனது தங்கை மகளுக்கு, அவள் குழந்தைக்காக இது போன்ற காணொளிகளை அனுப்புவதுண்டு. 



மூன்று காணொளிகளும் இணையத்திலிருந்து



எல்லோருக்கும் இனிய மாடுகளின் திருநாள் வாழ்த்துக்கள்!

------கீதா



54 கருத்துகள்:

  1. நேற்று சூரியப் பொங்கல். இன்று மாட்டுப் பொங்கல். விழாக்கால மகிழ்ச்சி வாழ்த்துகள்.

    இயற்கை இனிசுலின் பற்றிய விவரம் எனக்குத் தெரியவில்லை. இந்த செடியைப் பற்றியும், இந்த செடி உங்கள் வீட்டிற்கு வந்தது பற்றியும், தமிழில் இந்த செடியின் பெயர் பற்றியும் ஒரு பதிவு எழுதவும். விவரம் தெரிந்து கொள்ள ஆசை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இச்செடி நம்மூரில் அவ்வளவு பிரபலமடையவில்லை. அதாவது மருத்துவ உலகில். வலையுலகில் பல மருத்துவர்கள் அவர்களே இதைப்பற்றிப் பதிவிடாத போது மருத்துவர் அல்லாதனான் பதிவிடலாமோ என்ற தயக்கமும் காரணம். மருத்துவர் நம்பள்கியும் எங்கள் பதிவு ஒன்றில் இப்படிப் பதிவது குறித்து கருத்து இட்டிருந்தார். அதாவது ஆதாரம் இல்லாமல் பதிவது சரியல்ல என்பதால் தானும் மருத்துவராக இருந்தாலும் பலவற்றைப் பதிய முடியாது. அதுவும் பொதுவாகப் பதிய முடியாது ஒவ்வொரு நோயாளியின் உடல்கூறும் வேறு வேறு அவர்களைத் தனிப்பட்ட முறையில் பார்க்காமல் பதிய முடியாது என்பதால் என்றும் அவர் சொல்லியிருந்த நினைவு. அதுவும் சரிதான் இல்லையா. அதனால் பதிவிட தயக்கம். இன்று அச்செடியை மட்டும் பகிர்ந்தேன். ஆனால் செந்தில் சகோ தளத்தில் மருத்துவர் பரிந்துரையும் அந்த மருத்துவர் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். அதன் பின் பதிவிட நினைத்து விட்டுப் போனது சகோ..
      நன்றி

      நீக்கு
  2. தொட்டியில் மாடு தண்ணீர் குடிக்கும் காணொளி வேலை செய்யவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ நான் அந்தக் காணொளியை எனது மொபைலிலிருந்து அப்படியே இணைத்தேன். இப்போது அதனை யுட்யூபில் ஏற்றிவிட்டு இங்கு இணைத்துவிட்டேன். இப்போது வேலை செய்கிறது. நேற்று தூங்கிவிட்டதால் கவனிக்க முடியவில்லை. மிக்க நன்றி இங்கு சொல்லியதற்கு. அதனால்தானே சரி செய்ய முடிந்தது! மீண்டும் நன்றி சகோ.

      நீக்கு
  3. நான்கு கால் செல்லங்களுக்கு
    நான்கு கால் செல்வங்களுக்கு
    நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
    பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
    பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ தங்களின் அழகிய மொழி நடையில் வாழ்த்தியமைக்கு! தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

      நீக்கு
  4. மிக்க நன்றி சகோதரரே! முதலில் அந்து கருத்திட்டமைக்கு. இந்த இன்சுலின் செடி எங்கள் வீட்டில் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. பதிவு எழுத நினைத்து பாதியில் (நிறைய பதிவுகள் அப்படித்தான் இருக்கின்றன) விட்டுவிட்டேன். சகோ கூட்டாஞ்சோறு செந்தில் அவர்கள் இச்செடியைப் பற்றி அவரது தளத்தில் எழுதியிருந்தார். அப்போதும் நான் அங்கு பின்னூட்டத்தில் சொல்லி பதிவு முடித்து வெளியிட நினைத்து மீண்டும் விட்டுவிட்டேன். நிச்சயமாக விவரங்கள் தருகிறேன். எளிதாக வளரும் செடி இது. நீங்கள் கேட்டுக் கொண்டதால் பதிவை முடித்து இன்று இரவு வெளியிடுகிறேன் சகோதரரே. மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்

    பதிலளிநீக்கு
  5. எங்கள் ஆசிரியர் ஒருவர் வீட்டிலும் இன்சுலின் செடி இருக்கிறது. மாடு குழாயிலிருந்து தண்ணீர் அடித்துக் குடிக்கும் வேறு சில காணொளிகளும் உண்டு, பார்த்திருக்கிறேன். தைத் திருநாள் வாழ்த்துகள்.

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். ஆமாம் நானும் பார்த்திருக்கிறேன். இது நாம சுட்டதாச்சே!! வாழ்த்திற்கும் நன்றி

      நீக்கு
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.....

    ஒரு நாள் போதுமா... இன்றொரு நாள் போதுமா? ஆமாம் கீதாஜி. ஒரு நாள் மட்டும் போதாது.

    மனிதனோ, விலங்குகளோ அனைத்தையும் நேசிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதனோ விலங்குகளோ அனைத்தையும் நேசிப்போம்// உண்மைதான் ஜி அனைத்தையும் நேசிப்போம்...கருத்திற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி

      நீக்கு
  7. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் - ஆகா...!

    இயற்கை இன்சுலின் பற்றி இன்னும் கொஞ்சம் தகவல் சொல்லி இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு போட்டாச்சு டிடி மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  9. பதில்கள்
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ நகேந்திர பாரதி

      நீக்கு
  10. அருமை பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. பொங்கல் வாழ்த்துக்கள். நாலு கால் பிராணிகளின் சார்பாக நீங்கள் எழுதியுள்ளவைகளை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்திற்கு நன்றி நெல்லைத் தமிழன்....கருத்திற்கும்

      நீக்கு
  12. நீங்களே மாடாகிச் சொல்வது போல் பதிவு ரசிக்க வைத்தது பண்டிகைகள் அவற்றின் சாங்டிடியியை இழந்து எத்தனையோ காலங்கள் ஆகிறது இப்போதெல்லாம் பண்டிகை நாட்களில் வாயால் வாழ்த்தும் நல்ல சுவையான உணவுடன் டிவி பெட்டி முன்னால் உட்காருவதும் என்றே ஆகிவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். உண்மைதான் இப்போது டிவி முன்பு என்றாகிவிட்டது!

      நீக்கு
  13. வித்தியாசமான வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான்ஜி கருத்திற்கும் வருகைக்கும்! மாடு ம்மாஅ என்று வாழ்த்தியிருக்கும் என்று நினைத்தீர்களோ!!??

      நீக்கு
  14. ஜல்லிக்கட்டு அரசியல் வேதனையானது! அந்த கால பொங்கல் கொண்டாட்டங்கள் போல இன்று வராதுதான்! என்னுடைய குரோம் பிரவுசரில் ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டது. நேற்று வந்து படித்து கருத்திட்டும் காண்பிக்கவில்லை! இன்று மீண்டும் கருத்திடுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சுரேஷ் வாழ்த்திற்கு மிக்க நன்றி கருத்திற்கும். ஓ! நேரம் இருக்கும் போது வாருங்கள் சுரேஷ்..

      நீக்கு
  15. இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள் அண்ணா/கீதா.

    வாயில்லா ஜீவன்களின் வாய்மொழியாக அவைகளின் துன்பங்களைச் சொல்லிவிட்டீர்கள். நல்ல மாற்றம் வரட்டும்.

    இன்சுலின் செடி பற்றி அறிந்திருக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்ரி கிரேஸ் வாழ்த்திற்கும் கருத்திற்கும்

      நீக்கு
  16. உங்களின் கட்டுரையை விடவும் காணொளிகளை என் பேரன் மிகவும் ரசித்தான். காரணம் அவனுக்கு வயது ஐந்துதான்! ...இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செல்லப்பா சார்! மிக்க மகிழ்ச்சி உங்கள் பேரன் ரசித்தமைக்கு!அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்!

      நீக்கு
  17. அருமை...மழையும் பொய்த்து..கர்ர்நாடாகவும் ஏமாற்றி..விளைச்சலும் இல்லாமல் நெஞ்சு வெடி்த்து இறந்த விவசாயிகளுக்காக...எங்கள் வீட்டில் பொங்கல் கொண்டாடவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வலிப்போக்கன் கருத்திற்கு. ஆம் பலரும் கொண்டாடவில்லை என்றே தெரிகிறது.

      நீக்கு
  18. காணொளிகள் சூப்பர் மேடம் . Sweet Lady க்கானSweet செடி.. ரசித்தேன்
    ஆம் இயற்கையை நாம் போற்றவேண்டிய தருணம் இது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அருணா வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  19. நாலுகால் ஜீவன்களின் சார்பில் அழகான புகைப்படங்களுடன் சிந்திக்க வைக்கும் பதிவு.

    வாய்க்கால் குளிக்கவும் துவைக்கவும் பயன் படுத்தும் படி இன்னும் நீர் சுத்தமாக இருக்கின்றதா?

    இனிய பொங்கல் கால விடுமுறை நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது எடுத்த படம் நிஷா! இந்த வாய்க்கால் இருக்குமிடம் ஆந்திரா. தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகில் இருக்கும் இடம்.
      வாழ்த்திற்கு மிக்க நன்றி நிஷா

      நீக்கு
  20. இன்சுலின் செடியில் தாவரவியல் பெயர் என்ன? இந்த செடியின் பயன்கள் என்ன என எயுதுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு போட்டாச்சு நிஷா இதன் அடுத்த பதிவு. அதில் விவரங்கள் இருக்கின்றன தவிர கூட்டஞ்சோறு செந்தில் சகாவும் இதைப் பற்றி மிகத் தெளிவாக அழகாக எழுதியுள்ளார் அதையும் பாருங்கள்

      மிக்க நன்றி நிஷா

      நீக்கு
  21. சிந்திக்க வேண்டிய செய்திகள்...

    தோழியின் கைவண்ணம் ..அழகு

    பதிலளிநீக்கு
  22. இன்சுலின் செடி ஊட்டியில் (அரவங்காட்டில்) நாங்கள் இருந்த குடியிருப்புப் பகுதியில் நிறைய முளைத்திருந்தன. அப்போல்லாம் எங்கள் உடலில் காரம் மட்டுமே இருந்தது! :) உடலில் சர்க்கரை எல்லாம் 2010 க்குப்பின்னர் தான்! எனக்குக் கடந்த ஒரு வருஷமாகத் தான். இந்தச் செடி கிடைத்தால் வளர்க்கணும். இந்தியா வந்ததும் பார்ப்போம். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ஹஹ் இது நல்ல செடிதான் எளிதாகக் கிடைக்கிறது. வேண்டுமென்றால் சொல்லுங்கள். சென்னை வழி சென்றால் எங்கள் வீட்டிலிருந்து கொண்டு தருகிறேன்.

      மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்கு

      நீக்கு
  23. நாலுகால் பிராணிகளின் குரலை நன்கு உள்வாங்கிக் கொண்டு சொல்லி இருக்கிறீர்கள். முன்னெல்லாம் என் புக்ககத்தில் தினமும் பருத்திக்கொட்டை ஊற வைத்து அரைத்து மாடுகளுக்குப் போடுவோம். காலையில் மேய்க்கக்கூட்டிப் போனால் மாலை ஐந்து மணி வரை மாடுகள் மேய்ந்துவிட்டுத் திரும்பும். ஒவ்வொரு ஊரிலும் மேய்ச்சல் நிலம் பொதுவாக இருந்து வந்த காலம் ஒன்று உண்டு. இப்போதெல்லாம் மேய்ச்சல் நிலம் என்றாலே என்னனு கேட்கும் காலம். தென் மாவட்டங்களில் அதிலும் தேனி, பெரியகுளம்,சின்னமனூர் பகுதிகளில் இன்னமும் மேய்ச்சல் நிலம் இருக்கிறது என்று எண்ணுகிறேன். பசும்புற்களைத் தின்னும் பசுமாட்டின் பாலின் ருசியே இப்போதைய தலைமுறைக்குத் தெரியாது! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் உணவு கொடுக்கிறார்கள். பருத்திக் கொட்டை அவ்வளவாக இல்லை என்று அருகிலுள்ள மாட்டுப் பண்ணையாளர் சொன்னார். மேய்ச்சல் நிலம் நீங்கள் சொல்லியிருக்கும் இடத்தில் இருக்கிறது..ஆம் கீதாக்கா பசும்புல் தின்னும் பசுமாட்டின் பாலின் ருசியே தனிதான்...எங்கள் கிராமத்தில் இருந்தவரை அதுதான்..மிக்க நன்றி கீதாக்கா கருத்திற்கு

      நீக்கு
  24. முன்னெல்லாம் ஒவ்வொரு தெருவிலும் குடிநீர்த்தொட்டிகள் அகலமாகப் பிராணிகள் குடிக்கும் வகையில் கட்டப்பட்டு இருக்கும். இப்போதெல்லாம் அப்படிப் பார்க்கவே முடியறதில்லை! வீடு வீடாகச் சென்று மாடுகளுக்காகக் கழுநீர் சேகரித்த காலம் ஒன்று உண்டு. இப்போதெல்லாம் மாடுகளும் கழுநீர் குடிப்பதே இல்லை போலும்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா எங்கள் கிராமத்திலும் கழுநீர்த்தொட்டி இருக்கும் நாங்கள் வீட்டிலுள்ள கழுநீரை அந்தத்தொட்டியில் கொட்டுவோம். மாடுகள் வைத்திருந்தவர்கள் வீட்டிலும் பெரிய தொட்டி இருக்கும் அதில் கொண்டு கொட்டுவோம். காய்கள், பழத் தொலிகள், அரிசி உளுந்து களைந்த கழுநீர் எல்லாம் சேர்த்துவைத்துக் கொட்டுவோம். இப்போது யாரும் கொடுப்பதே இல்லை. எங்கள் வீட்டிலும் இப்போது இருப்பது இருவர் மூவர் என்பதாலும் அரிசி வடிப்பதே எப்போதோ என்பதாலும் கழுநீர் எல்லாம் சேர்வது இல்லை. பழம் காய் குப்பைகளைக் கொண்டு கொடுப்பேன் அடுத்து இருக்கும் மாடு வளர்ப்பவர் வீட்டில்.

      கருத்திற்கு நன்றி கீதாக்கா

      நீக்கு
  25. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கீதா அன்ட் துளசி அண்ணா ..தோழியின் கைவண்ணம் அழகு !
    மாடுகளுக்கு எல்லார் வீட்டின் முன்னும் பெரிய அகலமான பாத்திரத்தில் தண்ணி வைப்பாங்க ..இங்கே சூப்பர் மார்க்கெட் வெளியே doggies குடிக்க வெயில் காலத்தில் வைக்கிறாங்க ..
    நம்மை அண்டி நம்மோடு வாழும் ஜீவன்கள் அவற்றை விரட்டுவதோ துரத்துவதோ பாவம் :(
    மனிதன் மிருகமாயிட்டே வருகிறான் கொஞ்சம் கொஞ்சமாக :(

    எல்லாவற்றையும் தன வசமாக்கி தானே ஆளும்போது தனக்கு போட்டியா சக மனிதனை துரத்தும் காலம் வெகு விரைவில் வரும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு. ஆம் உங்கள் கருத்துக்களை வழி மொழிகிறேன்...

      நீக்கு
  26. வாயில்லா உயிர்களுக்காகவும் பதிவெழுதிய பதிவுலகச் செம்மலே நீர் வாழ்க! இதே நாலு கால் உயிர்களுக்காகத்தான் இதோ நம் நம் இரண்டு கால் பிள்ளைகள் கடந்த மூன்று நான்கு நாட்களாக வெயிலிலும் பனியிலும் பட்டினியிலும் தாகத்திலும் வதங்கி வாடிப் போராடுகிறார்கள். இந்த ஏதுமறியா உயிரினங்கள் உயிர் வாழத்தான் அவர்கள் செத்துச் சுண்ணாம்பாகிக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்போம், வெல்லப் போவது அதிகார வலிமையா மக்கள் உரிமையா என்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! இபுஞா சகோ! என் மகன் அடிக்கடிச் சொல்லுவது என்னவென்றால் நம் நாட்டு மாடுகளுக்குக் கொடுக்கப்படும் சினை ஊசி பற்றி. இயற்கையாக இணைந்து பெறப்படும் கன்றுக்குட்டியை விட்டு இது போன்று செய்வது மிகவும் அநீதி. ஏன் காளைகளை வளர்ப்பதில்லை? காளை பிறந்தால் விற்று விடுவதை நாங்கள் நேரில் கண்டுள்ளோம் சகோ. வேதனையான விசயம்...என் மகன் எங்களுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த குடும்பத்திற்கு அடிக்கடிச் சொல்லுவது இதுதான் தயவாய் செயற்கை முறையிலான கருத்தரிப்பை ஆதரிக்காதீர்கள். காளையை நீங்களே வளருங்கள். விற்காதீர்கள் என்று. ஆனால் அவர்களோ எங்களுக்குரூபாய் அவசியம் மாட்டிற்குத் தீவனம் வாங்கணும் அது இது என்று சொல்லி காளையை விற்று விடுவார்கள். அதுவும் இரு மாடுகள் இருந்து இரண்டுமே காளைகளை ஈன்று விட்டால் அவ்வளவுதான்...சகோ மாடுவளர்ப்பவர்களின் மனநிலையையும் எனக்கு எழுதவேண்டும் என்று உண்டு. மனிதன் சுயநலவாதி என்பது நிரூபணம் ஆகிறது.

      வெல்லும் இந்தப் போராட்டம் கூடவே காளைகளை வளர்கக்வும் முன்வர வேண்டும்....மிக்க நன்றி சகோ

      நீக்கு