வியாழன், 2 ஜூலை, 2015

தலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா

     

     நான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாசிட்டிவ் மேன் நண்பர் ஸ்ரீராம் சொன்னதை ரசித்தேன்!) பயணித்த போது, ஆவி சொன்னார், “சேச்சி ஜூலை ஒண்ணாம் தேதிலருந்து ஹெல்மெட் போடணும், பின்னால உக்காந்துருக்கறவங்களும்”, என்றவுடன் தான் “அட ஆமாம்...முன்னாடி வாங்கின ஹெல்மெட்டை எவனோ ஆட்டையைப் போட்டுட்டான்...இப்ப 2 வாங்கணும்ல....ம்ம்ம் பார்ப்போம்..” என்றபடி யோசித்து அப்போதே அடுத்த இரண்டு நிமிடங்களில் அதை மறந்தும் விட்டேன்.

      இன்று காலை விழித்தவுடன், மூளை கணக்கிட்டது, இன்று நான் செய்ய வேண்டியவை என்னென்ன?  வெளியில் போகும் வேலை உண்டா? அதுவும் என்னவோ பெரிய அன்றாடம் காய்ச்சி போல (எல்லோரும் பிரதம மந்திரினு தானே சொல்லுவாங்க....என்னைப் பொருத்தவரை பிரதம மந்திரியை விட நேரம் இல்லாமல் எப்போதும் உழைப்பவர்கள் அன்றாடங் காய்ச்சிகள் தான்..) நினைப்புடன் அப்படியே தேதியைப் பார்த்தா “அடடா...ஜூலை 1.  ஹெல்மெட் வாங்கவே இல்லையே...ஆவி வேற நாங்க சந்திப்பதைப் பற்றி....இன்னைக்குச் சொல்லுவேன்னு சொல்லிருந்தாரே, ம்ம்ம் சரி நம்ம மயில் வாகனம் இல்லைனா என்ன, இருக்கவே இருக்கு மாநகரப் பேருந்து” என்று மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டு இந்த இனிய நாளைத் தொடங்கினேன். 

      “அம்மா, இன்னிக்கு உனக்கு ஆப்பு டே......வண்டில போக முடியாது..” என்று மகன் என் வயிற்றெரிச்சலைக் கிளப்ப... “சரி அப்படினா நீ வரும் போது எனக்கு ஒரு ஹெல்மெட் வாங்கிட்டு வந்துரு....நீ வைச்சுருக்கறா மாதிரி....” 

      மகன் வாங்கி வரட்டும்.  அதற்கு நிறைய நேரம் இருக்கிறது.  அதற்குள் 4 நாட்களாக எனது மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் இந்த தலைக்கவசம் விவகாரத்தில் தோன்றிய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்வதின் மூலம் காவல்துறைக்கும் (??), அரசிற்கும் (??) சொல்லலாமே என்று அவசரகதியில் அள்ளித் தெளிக்கின்றேன்.

      தலைக்கவசம் உயிர்கவசம் என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.  நல்ல விடயமே. ஆனால், அதற்கு முன் சில விடயங்களை நாம் மட்டுமல்ல, நமது காவல் துறையும், அரசும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டு கோள்.

தலைக்கவசம் அணிவதால் மட்டும் விபத்தைத் தவிர்க்க முடியுமா? விபத்திலிருந்து பாதுகாக்குமா? ஏற்படும் விபத்து சிறிய விபத்தாக இருந்தால் தலைக்கவசம் உயிர்கவசமாகலாம்.  ஆனால், விபத்து பெரிய விபத்தாக இருந்தால், ஒரு பெரிய லாரியோ, பெரிய பூதாகாரமான தண்ணிர் லாரியோ (சென்னையும் தண்ணீர் லாரி பூதங்களும் பூர்வ ஜென்ம பந்தங்கள் உடையவை.)  இடித்து விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகன ஓட்டுனர் லாரியின் அடியில் சிக்க நேர்ந்தால் இந்தத் தலைக்கவசம் உயிர்கவசமாக இருக்குமா?  சரி, ஓட்டுபவரும், பின்னால் அமர்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றால், குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது குழந்தைகளுக்கு? கணவர் ஓட்ட, பின்னால் மனைவி கைக்குழந்தையுடன் பயணிப்பதும் அன்றாடம் நிகழும் ஒன்றுதானே? அந்தக் கைக்குழந்தை? நெரிசலான போக்குவரத்திற்கிடையிலும் சைக்கிளில் செல்பவர்கள்? எவ்வளவு ஒதுங்கி நடந்தாலும் பெரிய வண்டிகள் சில சமயம் தள்ளிவிட்டுச் செல்லுகின்ற பாதசாரிகள்? இவர்களுக்கெல்லாம் உயிர் வரமா? காரில் பயணிப்பவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு இருக்கின்றதா என்ன? அவர்களுக்கு விபத்து நேர்வதில்லையா? அதுவும் நம்மூர் சாலை விதிகள் கடைப்பிடிக்காத சாலைகளில்.......இல்லை என்பதுதானே உண்மை.
 
சில வருடங்களுக்கு முன் என்னை நிலை குலைய வைத்த, நானே நேரில் கண்ட ஒரு விபத்தில், மேம் பாலத்திலிருந்து இறங்கும் மாநகரப் பேருந்து ஒரு இளைஞனை மோதியதில், தலைக்கவசம் அணிந்திருந்த அந்த இளைஞன் தூக்கி எறியப்பட்டு, தலைக்கவசம் அப்படியே தலையில் இருந்தும், சின்னா பின்னமாகி உயிர் நீத்த காட்சி இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.

      தலைக்கவசத்தைக் கட்டாயப் படுத்தும் முன் நமது காவல் துறையும், அரசும், மக்களின் உயிர் நலனைப் பற்றி யோசித்ததாகத் தெரியவில்லை. அப்படி அரசு/ஆட்சியாளர்கள், காவல் துறை யோசித்திருந்தால் முதலில் அவர்கள் விபத்துகளை எப்படித் தவிர்க்க வேண்டும் என்று யோசித்திருப்பார்கள். அப்படி யோசிக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது.  அவர்கள் யோசித்திருக்க வேண்டியது விபத்துக்ளை எவ்வாறு தவிர்ப்பது என்பதைப் பற்றி மிகவும் தீவிரமாக யோசித்து செயல்படுத்தியிருக்க வேண்டும். சாலை விதிகளையும், சட்டத்தையும் அமலாக்குவது என்றால் இந்திய அமலாக்கம் அல்ல. கடுமையாக அமலாக்குவது பற்றி தீர்மானங்கள் எடுத்திருக்க வேண்டும்.  இந்தத் தீர்மானங்கள் தொடங்க வேண்டிய இடம் ஓட்டுனர் உரிமம் வழங்கும் இடத்திலிருந்து. இன்று உரிமம் வைத்திருக்கும் எத்தனை பேருக்குச் சாலை விதிகள் தெரியும்? ஓட்டுநர் உரிமம் வழங்கும் அலுவலகத்தில் சாலை விதிகளை எழுதி, படம் போட்டு, விளக்கங்களுடன் வைத்திருக்கத்தான் செய்கின்றார்கள்.  ஆனால், அவை எல்லாம் யார் கண்ணிலும் படுவதில்லை, குறிப்பாக உரிமம் வழங்கும் அதிகாரியே இதை எல்லாம், உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களிடம் சோதித்து உரிமம் வழங்குவதில்லை என்பது அரசின் கண்களுக்கு ஏனோ தெரிவதில்லை.

      தலையைக் காட்டாமலேயே கூட உரிமம் வழங்கப்படுகின்றது. நான் இருக்கும் பகுதியில் உள்ள அலுவலத்தில், முதலில் எல் எல் ஆர் வாங்குவதற்கு கணினியில் சாலைவிதிகள் பற்றிய சில கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதில் டிக் செய்ய வேண்டும் என்ற முறை சில வருடங்களுக்கு முன் இருந்தது.  அப்பொழுது கூட நீங்கள் அதை வாசித்து டிக் செய்ய வேண்டாம் அவர்களே டிக் செய்துவிட்டு அனுப்பி விடுவார்கள். எல் எல் ஆர் வந்துவிடும். பின்னர் ஓட்டிக் காட்டும் சோதனை பல சமயங்களில் நடத்தப்படாமலேயே உரிமம் வழங்கப்படுகின்றது.  சமீபத்தில் எனது உரிமம் காலாவதியானது.  அப்போது எல் எல் ஆர் எனும் கண் துடைப்புத் தேர்வு கூட நடத்தப்படவில்லை.  பின்னர் ஓட்டிக் காட்டும் தேர்வு.  அது கடற்கரையை ஒட்டிய சாலை.  ஆள் நடமாட்டமோ, வண்டிகளோ வராத இடம், அதில் மிகச் சிறிய தூரம் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை சும்மா உப்புக்குச் சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை வகையில் ஓட்டிக் காட்டினால் உரிமம் வழங்கப்படுகிறது. பிறந்த குழந்தை கூட இதைச் செய்துவிடும்.  கண் பார்வை சோதனைகள் கூட நடத்தப்படுவதில்லை. பெரும்பாலும் ஓட்டுநர் பள்ளிகள் மூலம் தானே நம்மூரில் உரிமம் வழங்கப்படுகிறது!

      இங்கு நான் எனது ஒரு அனுபவத்தைப் பகிர விழைகின்றேன். 14 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் ஒரு வருடம் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அங்கு ஓட்டுநர் உரிமம் பெற முயற்சி செய்த போது,. முதலில் டிப்பார்ட்மென்ட் ஆஃப் மோட்டார் வெஹிக்கிள்ஸ் வெளியிட்டிருக்கும் சாலை விதிகள் புத்தகத்தை நாம் நன்றாகப் படித்து உள் வாங்கி அந்த விதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித் தனி உரிமம் பெற வேண்டும்.  ஏனென்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் தட்ப வெட்ப நிலைகளுக்கு ஏற்ப சாலை விதிகள். நெடுஞ்சாலைகளின் விதிகள் உட்பட. முதலில் எழுத்துத் தேர்வு. அதில் 7 தவறுகளுக்குள் இருந்தால் மட்டுமே நாம் தேர்ச்சி பெற முடியும். இல்லை என்றால் ஃபெயில்.  தேர்ச்சி பெற்றால் எல் எல் ஆர் வழங்கப்படும்.

பின்னர் ஓட்டிக் காட்டும் சோதனை.  நமது காரில் பக்கத்து இருக்கையில் பரிசோதகர் அமர்ந்திருப்பார். டிஎம்வி அலுவலத்திலிருந்து நாம் நமது காரை எடுத்துக் கொண்டு போக்குவரத்துச் சாலைகளில் ஓட்ட வேண்டும்.  அவர் வலது பக்கம் திரும்பு, லேன் மாற்ற்று, இடது பக்கம் திரும்பு, இந்த இடத்தில் பாதை ஓரம் இருக்கும் நடை பாதையை ஒட்டி நிறுத்து (பாரெலெல் பார்க்கிங்க் அங்கு மிகவும் முக்கியமாகச் சோதிக்கப்படுகிறது) என்று சொல்லிக் கொண்டு வருவார், நாம் உடனுக்குடன் செய்ய வேண்டும் அதே சமயம் நாம் சைட் மிரர், ரியர் வியூ மிரர், பின் பக்கம் பார்த்தல் போன்றவற்றைச் செய்கின்றோமா என்பதை அவர் கூர்ந்து நமக்குத் தெரியாமலேயே கவனித்து நாம் செய்யும் சிறு தவறுகளைக் குறித்துக் கொண்டே வருவார்.  இப்படி ½ மணி நேரம் ஓட்டி பின்னர் அவர் பாதை சொல்லச் சொல்ல மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர வேண்டும்.  இவ்வாறு ஓட்டும் போது பெரிய தவறு ஏதேனும் செய்தால் உடனேயே அவர், “சாரி யு ஆர் ஃபெயில்ட்” என்று சொல்லி அவர் வைத்திருக்கும் அட்டையில் குறித்தும் விடுவார் எதனால் என்று. குறிப்பிடப்பட்டச் சிறு தவறுகளுக்குள் நமது ஓட்டுதல் இருந்தால் என்றால் மட்டுமே நாம் தேர்ச்சி பெற்று உரிமம் வாங்க முடியும். இப்படி மூன்று முறை தேர்வாகவில்லை என்றால் மீண்டும் எழுத்துத் தேர்விலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதாவது எல் எல் ஆரிலிருந்து.  தேர்ச்சிப் பெற்றதும் கண் பார்வை டெஸ்ட் செய்வார்கள்.  நமது உடல் நலக் கோளாறுகள் எல்லாம் பதிவு செய்யப்படும். நான் முதல் முறையே பாஸாகி உரிமம் பெற்றேன். நான் பிரமித்துப் போனேன் எவ்வளவு பாதுகாப்பு நியதிகள், உயிருக்கு மதிப்பு என்று! இதோ மீண்டும் இங்கு நமது ஊருக்கு வருகின்றேன்...

      நம் நாட்டில் இப்படிச், சாலை விதிகள் தெரியாமல், கடைப்பிடிக்காமல் ஓட்டி வாங்கிவிட்டு உரிமம் பெற்றால், நெரிசலான சாலைகளிலும், போக்குவரத்து மிகுந்த சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் எப்படி அவர்கள் விதிகளைக் கடைப்பிடித்து ஓட்டுவார்கள்? மனதில் மெத்தனம் தானே ஒட்டிக் கொள்ளும்.  பிடிபட்டாலும், நோட்டை நீட்டிவிட்டு தப்பித்து விடுவதும் நடக்கும் இந்த நாட்டில் எப்படிச் சாலை விபத்துகளைத் தடுக்க முடியும்? சாலையில் வண்டிகள் பெருகி இன்னும் அதிகமான விபத்துகள்தான் தான் நடக்கும்.

இதே போன்று தலைக்கவசம் அணிய வேண்டும் என்று முன்பும் பல முறை சட்டம் கொண்டு வரப்பட்டு, எல்லோரும் அடித்துப் பிடித்து வாங்கி, கடைகளில் கூட்டம் பெருகி, பின்னர் தலைக்கவசம் கிடைக்காமல் போய், ஒரு வாரத்தில் அந்தச் சட்டமே நீர்த்துப் போனதே.  பின்னர் இப்போது மீண்டும் ஒரு சுபயோக தினத்தில் கொண்டு வந்திருக்கின்றனர்.  கடைகளில் கூட்டம் அலை மோதுகின்றது.  சப்ளை இல்லை என்கின்றனர். பின்னால் அமர்பவரும் அணிய வேண்டும் என்பதால் டிமான்ட். யானை விலை, குதிரை விலை வேறு. இந்தச் சட்டம் தலைக்கவசத்தினால் நன்றாகப் பணம் ஈட்டிய பின் அடங்கிவிடும் என்றே தோன்றுகின்றது. இப்படி நினைத்த போது கொண்டு வந்து, பின்னர் நீர்த்துப் போவது என்பதில் பணம் தான் விளையாடுகின்றதே அல்லாமல் பொது மக்களின் பாதுகாப்பு கருதி அல்ல. அப்படி இருந்தால் நமது அரசும், போக்குவரத்துக் காவல் துறையும் முதலில் மூலத்தில் இருக்கும் தவறுகளையும், ஊழல்களையும் களைந்தால்தான், தலைக்கவசம் அணிந்தாலும் அது உயிர்கவசமாக அமையும். அரசும், போக்குவரத்துக் காவல் துறையும் இதைக் கவனிப்பார்களா?

---கீதா

பின் குறிப்பு : நண்பர் தமிழ் இளங்கோ அவர்களின் இந்தப் பதிவை http://tthamizhelango.blogspot.com/2015/06/blog-post_92.html  சொடுக்கிப் பாருங்கள்.  தலைக்கவசம் பற்றிய யதார்த்தமான கருத்துகள். இது பதிவு இடும் போது வேர்டிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யும் போது விடுபட்டு போனது..அவசரகதியில் அள்ளித் தெளித்தால்??!!!!....)
 படம் - கூகுள்

52 கருத்துகள்:

  1. சகோ துளசி & கீதா,

    தலைக்கவசம் போடச்சொல்லி சட்டம் வந்திருக்கிறதே என சந்தோஷப்பட்ட நேரத்தில் ஏற்கனவே சட்டம் போட்டு நீர்த்துப்போனதை அறிந்ததும் கடுப்பாகத்தான் இருக்கிறது.

    ஓட்டுனர் உரிமம் பெறுவதில் உள்ள தேர்வு முறைகளைக் கடுமையாகப் பின்பற்றினாலே விபத்துக்கள் பாதியாகக் குறைய வாய்ப்புண்டு.

    முடிவைச் சொல்லவே இல்லையே, அப்புறம் பாஸ்பண்ணி லைசன்ஸ் வாங்கினீங்களா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு..உண்மைதான்...

      ஹஹஹ் உங்கள் கருத்தைப் பார்த்தவுடன் எனது முடிவையும் சொல்லி விட்டேன்.....பாருங்கள். முதலில் அதைச் சேர்க்க விருப்பம் இல்லைதான்...நம்ம சுயதம்பட்டம் போல் ஆகிவிடும் என்பதால்...

      நீக்கு
    2. சகோ துளசி & கீதா,,

      சுயதம்பட்டம்தான், என்ன செய்வது? இப்படி குறுக்கால கேக்குறவங்க இருக்காங்களே :) நானும் இதையே என்னுடைய ப்ளாக்ல ஏற்கனவே அடிச்சு வச்சிட்டேன். நேரமிருக்கும்போது வந்து பாருங்க.

      நீக்கு
  2. நான் நினைத்தை அப்படியே கடைசி பாராவில் எழுதி இருக்கீங்க...பாராட்டுக்கள் இந்தியாவில் இருந்து கொண்டே என் மைண்டை ரீட் பண்ணுறீங்களே நீங்க பெரிய ஆள்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழா....இது எல்லா இந்தியர்களின் ....அதாவது நம்மளைப் போல சாதாரண மக்களின் மனதில் உள்ளதுதான் இல்லையா....அதனால நீங்கள் அங்கு இருந்தால் என்ன எங்கிருந்தாலும் அதே சாதாரண இந்தியக் குடிமகனின் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்கள் தானே...அதனால் ஈசியோ?! அதனால பெரிய ஆள் லாம் இல்லப்பா...

      சரி சரி அப்படியே நன்றி உங்கள் பாராட்டிற்கு....!!

      நீக்கு
  3. வணக்கம்
    அண்ணா
    விரிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்... இனித்தான் முக மூடித்திருடர்கள் அதிகம் வர வாய்ப்பு... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி...தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  4. //நடை பாடை//
    ??? ஹிஹிஹி! (பாதை ஓரம் இருக்கும் நடை பாடையை ஒட்டி நிறுத்து)
    தலைக்கவசம் பாதுகாப்பானதுதான். ஆனால் அது அவரவர்கள் விருப்பத்தில் இருக்க வேண்டும். சிகரெட் ஸ்மோகிங் இஸ் இஞ்சூரியச் டு ஹெல்த் என்று சிகரெட் பாக்கெட்டில் சின்ன எழுத்தில் கண்ணுக்குத் தெரியாமல் எழுதி இருப்பது போல சாலைகளில் எழுதி வைக்கலாம். மது குடித்தல் உடல் நலத்திற்குத் தீங்கானது என்று விளம்பரம் செய்வது போலச் செய்யலாம்.
    சாலையின் தரம் முதல், காவலர்கள், ஆட்சியாளர்கள், ஏன் பொதுமக்களின் பொறுப்பு வரை, பேச நிறைய விஷயங்கள் இருக்கு சேச்சி நம் நாட்டில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! திருத்தி விட்டேன். என்ன செய்ய அவசரம்....இப்படித்தான் கவனிக்காம பாதை "பாடை" ஆகிறது...எழுத்துல மட்டும் இல்ல சாலையிலும்.....

      இந்த பாடை அமெரிக்காவுக்குப் பொருத்தமல்ல நம்ம ஊருக்குத்தான்...(அது சரி நடை பாதை என்ற ஒன்று இருக்கிறதா??!!!) அதுவும் அமெரிக்காவைப் பற்றிய பத்தியில் வந்துவிட்டது...திருத்தி விட்டேன்..ஹஹ

      அதே அதே உங்கள் கருத்து அத்தனையும் சரியே....இங்கு தலைக்கவசம் சாலை விதிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது...ஏனென்றால் ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் -அப்பலாம் நம்ம ப்ளாகுக்கு யாரும் விசிட் பண்ண மாட்டாங்க -அப்படிப்பட்டஒரு வேளையில், இந்திய சுதந்திரத்தைப் பற்றி எழுதியதில் எழுதியிருந்தோம்.....அதனால் பல "கட்" இங்கே...

      டாஸ்மாக் பிரியர்களுக்கு தலைக்கவசம் மிக மிக அவசியம்??!!! அவர்களுக்கு நடை பாதை நிச்சயமாகப் நடைபாடைதான்....அவர்களுக்கு

      நீக்கு
  5. பல சிரமங்கள்... ஒரு ஹெல்மெட் மட்டுமல்ல... இரண்டு ஹெல்மெட்டோடு வேறு அலைய வேண்டியிருக்கு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க நாம் இப்ப ரெண்டு வாங்கி வச்சுக்கணும்...அஹஹ என்னத்த சொல்ல

      நீக்கு
  6. அங்கு கிடைக்கிறதா...? இங்கு ம்ஹீம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ டிடி அதை ஏன் கேக்கறீங்க....நேத்து நாங்க அவசர அவசரமா(இந்தப் பதிவைப் போல ....) கவசத்தை வாங்கப் போனா கூட்டம்...அப்புறம் இல்லை என்றார்கள்...இதில் கத்தரிக்காய் வெண்டைக்காய் வியாபாரம் போல் முன்னமேயே விற்காமல் இருக்கும் தலைக்கவசம் முன்னல் இருக்கும் முகம் மறைக்க்கும் கண்ணாடி போன்ற அந்த பாகம் டேமேஜ் ஆக இருந்ததால் அதை எடுத்துவிட்டு 450 ரூபாய் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள்.....சேல்ஸ் ஆஃபர்.......இது எப்புடி?! ம்ம்ம் சரி இதில் நடந்த இன்னுரு விஷயத்தை இங்கு சொல்ல முடியாது....ஹஹஹ உங்களுக்கு அது என்ன என்று புரிந்திருக்கும்.....

      நீக்கு
  7. கமான் சென்ஸ் இல்லாத தறுதலைகள் உள்ளவரை தலைகவசம் இருந்தாலும் தலை தப்பிக்காது. நல்ல பதிவு. நன்றி,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே! இதுதான் உண்மை ஆனால் பலரும் இதைப் புரிந்து கொள்வதில்லை....

      நீக்கு

  8. இந்த பதிவினில் நீங்கள் சுட்டிக் காட்டிய அனைத்தும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டிய விஷயங்கள். உங்களுக்கு மட்டுமல்ல இங்கும் ஹெல்மெட் கிடைக்கவில்லை. ஊரில் இல்லாத ஹெல்மெட்டை வாங்கச் சொல்லி கட்டாயப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

    // தலைக்கவசம் அணிவதால் மட்டும் விபத்தைத் தவிர்க்க முடியுமா? விபத்திலிருந்து பாதுகாக்குமா? ஏற்படும் விபத்து சிறிய விபத்தாக இருந்தால் தலைக்கவசம் உயிர்கவசமாகலாம். ஆனால், விபத்து பெரிய விபத்தாக இருந்தால், ஒரு பெரிய லாரியோ, பெரிய பூதாகாரமான தண்ணிர் லாரியோ (சென்னையும் தண்ணீர் லாரி பூதங்களும் பூர்வ ஜென்ம பந்தங்கள் உடையவை.) இடித்து விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகன ஓட்டுனர் லாரியின் அடியில் சிக்க நேர்ந்தால் இந்தத் தலைக்கவசம் உயிர்கவசமாக இருக்குமா? //

    நீங்கள் சொன்னது சரியாகப் போயிற்று. இன்றைய நாளிதழ்களில், ஹெல்மெட் அணிந்தும் விபத்தால் இறந்த இருவர் பற்றிய செய்திகளைப் படிக்க நேர்ந்தது.
    உங்கள் மேலைநாட்டு அனுபவத்தை படித்தவுடன், இந்தியாவிலும் இப்படி எப்போது நடக்கும் என்ற ஆர்வமே வந்தது. பார்ப்போம்.

    எங்கு பார்த்தாலும் ஹெல்மெட் கொள்ளை விலைதான். தேர்தல் நடக்கும் காலங்களில் ஐம்பாதாயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றாலே ஓடஓட பிடிக்கும் அதிகாரிகள், அநியாய விலைக்கு ஹெல்மெட் விற்பனை நடந்ததைக் கண்டு கொள்ளவே இல்லை.

    (காலையிலேயே உங்கள் பதிவை படித்து விட்டேன். இரண்டாம் முறையாக இப்போது படிக்கும் போதுதான், எனது பதிவினை நீங்கள் இப்போது சுட்டிக் காட்டியிருப்பது தெரிந்தது. மிக்க நன்றி. நான் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் எழுதினேன்)

    த.ம. 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! ஆமாம் ஐயா இங்கும் சில விபத்துகள் நடந்தன...மரணமும்...மேலை நாட்டில் உள்ளது போல் இங்கு வந்தால் மிகவும் நல்லது...
      ஹெல்மெட் கொள்ளை விலை. இப்போது இங்கு பலர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றார்கள்....ஒரு சிலர்தான் பிடிபடுகின்றார்கள். எனது மொபைலிற்கும் போலீஸ் செய்தி வந்தது. ஹெல்மெட் போடவில்லை என்றால் சட்டத்திற்குள்ளாக வேண்டியிருக்கும் என்று...

      மிக்க நன்றி!

      க்

      நீக்கு
  9. ரோடு ஒழுக்கத்தை பாலோ பண்ணினாத்தான்...இல்லைனா...ஒன்னும் பிரயோசனம் இல்லை...

    பதிலளிநீக்கு
  10. லைசென்ஸ் கொடுப்பதில் உள்ள தில்லுமுல்லுகள் குறைந்தாலே பாதிவிபத்துக்கள் குறைந்துவிடும்தான். இங்கு எங்கள் பகுதியில் பாதிக்கும் மேலானவர்கள் இன்னும் தலைக்கவசம் இல்லாமல்தான் வாகனம் ஓட்டிச்செல்கின்றனர். யாரும் பிடித்ததாக தெரியவில்லை! நல்லதொரு பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சரியே! எங்கு தொடங்குகின்றதோ அங்கிருந்து களைய வேண்டாமோ....

      மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..

      நீக்கு
  11. நீங்கள் கூறி உள்ளகுறைகள் களையப் பட வேண்டியதுதான் அதெல்லாம் தீரும் வரை தலைக்கவசம் அணியச் சொல்லக் கூடாது என்பது போல் இருக்கிறதே. நீர்வற்றி சமுத்திரஸ்நானம் என்பது போல் இருக்கிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை சார் அப்படி இல்லை....தலைக்கவசத்திற்கு எதிரான வாதம் அல்ல...அதற்கு முன் செய்ய வேண்டியவை பற்றிச் சொன்னோமம்...மிக்க நன்றி ஸார்!

      நீக்கு
  12. தலைக்கவசம் அணிவதனால் மட்டும்....!?
    என்னவோ... செய்கின்றார்கள்!..
    அவசரத்தில் அவித்த இடியாப்பம் மாதிரி இருக்கின்றது!..

    பதிலளிநீக்கு
  13. தலைகவசம், உயிர்கவசமா? நல்ல கேள்வி. தலைக்கவசம் அணிந்தவர்கள் இறக்கவில்லையா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் நிறைய பேர் சொல்லக் கூடும்.
    ஆனால், ஒரு மனிதனாக, ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நாம் அல்லவா சாலை விதிகளை மதித்துச் செல்ல வேண்டும். நாம் எல்லோருமே போலீஸ்காரர் இல்லாவிடில் ஒருவழிப் பாதையில் செல்பவர்கள்தானே?
    நாம் எல்லோரும் நமத உயிரை, பிறரது உயிரை மதிக்கிறோம் என்று நினைப்பவர்கள் என்றால் சாலை விதிகளை கடைப்பிடிப்போம். அலுவலகத்திற்கு சற்று சீக்கிரம் கிளம்புவோம். அலைபேசியில் பேசாமல் செல்வோம். ட்ராபிக் விளக்கு வருமுன் வண்டியை ஓட்டிச் செல்லாமல் இருப்போம்.
    அரசு எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம் ஏன் நம் கடமையைச் சரிவரச் செய்ய மறுக்கிறோம்?
    உரிமம் கொடுப்பதில் ஏற்படும் தில்லுமுல்லுகளுக்கும் நாம் தானே காரணம்?
    நாம் நம் தவறுகளைத் திருத்திக் கொள்வோம். பிறகு அரசைக் குறை சொல்லலாம், சரிதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி தங்கள் கருத்து மிக மிகச் சரியே! ஆனால் விதிகளை நாம் மீறுவதால் தான், நமது அறிவை உபயோகிக்காததினால்தான், கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று சொல்லுவது. னாம் எத்தனை முறை எழுதினாலும் பேசினாலும், யாருமே அதனைப் பின்பற்றுவதில்லை. மட்டுமல்ல மக்களே விதிகளைக் கடியப்பிடிக்கும் மேலை நாடுகளில் கூட சட்டங்கள் கடுமையாகத்தான் இருக்கின்றன. சாலை விதிகள் உட்பட....சிங்கப்பூரில் வெளியில் குப்பை போட்டல் அபராதம் என்பதால் கொட்டதவர் இங்கு நம் கஸ்டம்சை ச் தாண்டியதும் குப்பையை எறிபவர்களும், துப்புபவர்களும் நம்மவர்கள்...அப்போ அபராதம் என்றால் எறியமாட்டர்கள்தானே அதற்குத்தான் சட்டம் வேண்டும் எனப்து சகோதரி....நாம் எப்போதுமே எதற்குமே அடிமைகளாகவே இருந்து பழகிவிட்டோம்...

      மிக்க நன்றி சகோதரி! தங்களின் விரிவான அழகான கருத்திற்கு...

      நீக்கு
  14. வணக்கம் அய்யா,
    நமக்கு நல்லது என்று நாம் சரியாக செய்வோம், எல்லாம் சரியாகும்,
    தங்கள் பதிவு அருமை,
    அப்புறம் உரிமம் வாங்கினீர்களா?
    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. இந்த தொல்லைக்குதான் நான் வண்டியும் வாங்கல , ஹெல்மட்டும் வாங்கல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ நல்லதொரு விஷயம்தான் நணப்ரெ! மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..

      நீக்கு
  16. Too late ,இரண்டு நாள் முன்னால் இந்த பதிவைப் போடாமல் போனீர்களே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா ஜி! ஹஹஹ் அப்படியானால் இந்தப் பதிலும் டூ லேட்தானோ??!!!

      அதற்கு முன்னரே போட நினைத்தேன் ஆனால் எழுதி முடிக்காமல் அவசர அவசரமாக போட வேண்டியதானது....

      நீக்கு
  17. சூழலுக்கு பொருத்தமான பதிவு!
    அமெரிக்காவில் உரிமம் பெறுவதை பற்றி எழுதியது ஆச்சர்யத்தை தந்தது. அங்கு நான்கு சக்கர வாகனத்தை விட இரு சக்கர வாகனத்திற்கு உரிமம் பெறுவது மிகக் கடினம் என்று கேள்விப்பட்டேன். அதற்கு காரணம் அசுர வேக பைக்குகள் இருப்பதே காரணம் என்றார்கள். இப்போது அத்தகைய பைக்குகள் இங்கேயும் வந்துவிட்டன. ஆனால், நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை.
    நல்ல பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி!
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே தங்களின் கருத்திற்கு! ஆம் உரிமம் பெறுவது கடினம் தான்...அமெரிக்காவில். இங்கு பைக் ரேஸே நடத்துகின்றார்கள் சாலைகளில். அடையாரிலிருந்து மெரினா பீச்சிற்கு 7 நிமிடத்தில் செல்ல வேண்டும் அதிலும் பைக்கைத் ஏதோ செய்து கொண்டு ...எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை..ஆனால் ட்ராஃபிக்கில் விர்விர் என்று பறப்பார்கள் . தடுத்துவிட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது கூட நான் நேரில் பார்த்தேன்.....என்னவொ போங்க....

      நீக்கு
  18. ஆசானே,

    வேறொரு பதிவிலும் நான் சொன்னதுதான்.

    ஒருவரின் உயிருக்குக் கேடு என்னும் போது அதைப் பொறுக்க முடியாமல் கங்கணம் கட்டிக் களமிறங்கும் நீதியரசர்கள், “ நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு” என்று சொல்லியே விற்கப்படுமொன்றைத் தடைசெய்யாமல் ஏன் மௌனம் காக்கிறார்கள்.

    அங்குத் தங்களின் அதிகாரம் செல்லாது என்பதாலா..!


    அருமையான அனுபவம் இழையோடும் பதிவு.



    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கேள்வி....நாங்களும் இதைத்தான் சொல்ல வந்தோம் ...நீங்களே சொல்லி விட்டீர்கள் மிக நல்ல கருத்து ஆசானே! மிக்க நன்றி ஆசானே!

      நீக்கு
  19. மற்றக்காரணங்களைக் காட்டித் தலைக்கவசத்தின் அவசியத்தை புறந்தள்ள முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்! தங்களின் கருத்திற்கு. தலைக்கவசத்தின் அவசியத்தை புறந்தள்ள முடியாது...ஆனால் அதற்கு முன் சாலை விதிகளையும் கட்டாயப்படுத்த வேண்டும்.

      நீக்கு
  20. தலைக்கவசம் உயிர்க்கவசம்..
    விரிவான கட்டுரை..
    அருமை.

    பதிலளிநீக்கு
  21. நானும் எழுதினேன் கவிதை ஒன்று!

    பதிலளிநீக்கு
  22. நமது அரசும், போக்குவரத்துக் காவல் துறையும் முதலில் மூலத்தில் இருக்கும் தவறுகளையும், ஊழல்களையும் களைந்தால்தான், தலைக்கவசம் அணிந்தாலும் அது உயிர்கவசமாக அமையும்.

    நன்று சொன்னீர் சகோதரியாரே
    தம 11

    பதிலளிநீக்கு
  23. நல்ல பகிர்வு. மாற/மாற்ற வேண்டிய விஷயங்கள் நிறையவே உண்டு இங்கே... நல்ல மாற்றம் வந்தால் சரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட் ஜி! தங்களின் கருத்திற்கு!!!

      நீக்கு
  24. தலைப்பே சிந்திக்க வைத்தது. அதனைச் சார்ந்து சொல்லிச்சென்ற செய்திகளும் நம் நாட்டின் காவல் துறையும் அரசும் செய்யும் ஒழுங்கீனச் செயல்களை சிந்திக்க வைக்கத்தவறவில்லை. போக்குவரத்தில் எத்தனை விலைமதிப்பில்லா உயிர்கள் பலியாவதை கருத்தில் வைத்தால் இப்படி லஞ்சம் பெற்று லைசன்ஸ் தருவார்களா? கடுமையான சட்டத்தால் மட்டும் நல்லதொரு மாற்றம் வரும்.

    பதிலளிநீக்கு