வியாழன், 31 ஜூலை, 2014

ஒரு FLASH BACK!


சிவலோகம் – சிவனும் – பார்வதியும் பூலோகத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்இதோ, ஏப்ரல் முடிந்து,  12 ஆம் வகுப்பு பரீட்சை எல்லாம் முடிந்து, ரிசல்டும் வந்து, கவுன்சலிங்கும் ஆரம்பித்துவிட்டது!  பிள்ளைகளுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்று அம்மாக்கள் எல்லாம் அப்ளிகேஷனுக்கு மேல் அப்ளிகேஷன் போட்டு கோயில் கோயிலாகச் சுற்றி, பல கடவுளர்களையும் சுற்றோ சுற்றென்று சுற்றி வரும் சமயம். பல கடவுளர்களும், இந்தச் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக, தேனிலும், பாலிலும், நீரிலும், பன்னீரிலும், பூவிலும் நனைந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்க..... பக்தர்கள் இருக்கும் வரை கவலை இல்லை!

என்ன தேவி!  இப்பொதுதானே +2, 10 வது வகுப்புத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள், கோரிக்கைகள், அப்புறம் கல்லூரிகளுக்கான கோரிக்கைகள் எல்லாம் ஒருவிதமாகப் பார்த்து முடித்து விட்டோமே என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்குள் கொஞ்சம் ஹைபர்னேட் பண்ணிவிட்டு வரலாம் என்று நினைத்தால்…..

ஆம்! பிரபோ!  வெயிட்டிங்க் லிஸ்ட் கோரிக்கைகள்! பிரபோ! அங்கு பாருங்கள்! நம் மகன் வினாயகனுக்கும், என் அண்ணன் விஷ்ணுவின் பக்தன் ஆஞ்சனேயனுக்கும் வந்த மவுசை! 

என்ன தேவி?  பூலோகத்தில் கணினி யுகம் என்பதால் இப்போதெல்லாம் மௌசைக் கூட காணிக்கையாகச் செலுத்துகின்றார்களா என்ன? அப்படியே ஆனாலும் அது விநாயக்கிற்குதானே வர வேண்டும்?  எப்படி ஆஞ்சனேயனுக்கு வரும்? 

 ஐயோ! பிரபோஇது அந்த மௌஸ் அல்லமவுசுஅதாவது செல்வாக்கு!  ஆஞ்சநேயனுக்கு வடைகளும், பழங்களும், நம் விநாயகனுக்கும், தேங்காய்களும், பழங்களும்......குவிந்து கிடக்கின்றன!

ஆமாம் தேவி!  நிறைய அப்ளிகேஷன்ஸ் வந்திருக்கிறதாகத் தெரிகின்றது! அதனால்தான் ஆஞ்சனேயனுக்கு வந்த்தைதெல்லாம் விஷ்ணுவிற்கு டைரக்ட் பண்ணச் சொல்லி ஆஞ்சனேயரிடம் சொல்லி விட்டேன்!  விநாயக்கிற்கு வந்ததை, விநாயக் எனக்கு அனுப்பி உள்ளான்! அது சரி தேவி! கோபித்துக் கொள்ள வேண்டாம்...கல்வி என்று வரும் போது, பிரம்மாவின் தேவியாகிய சரஸ்வதிக்குத்தானே கூட்டம் போக வேண்டும்?.....ஆனால்.....

அதுதான் நாதா!  எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது!!  எல்லோரும் நம் மகன், ஆஞ்சனேயர், இவர்களைத்தான் நாடிச் செல்கின்றார்கள்!

அதுவும் சரிதான்... இல்லையென்றால் தேவியர் உங்கள் மூவருக்கும் இடையில் யார் பெரியவர் யாருக்கு நீ சொல்லுகின்ற அந்த மவுசு அதிகம் என்ற பிரச்சினை வந்து விட்டால்......

உங்கள் மூவருக்கும் எப்போதுமே எங்கள் மூவரையும் இப்படிச் சொல்வதில் என்ன சந்தோஷம் என்று தெரியவில்லை! என் சகோதரர் விஷ்ணுவுக்கும் சற்று பெருமை அதிகம்தான்...பின்ன என்னவாம்? அன்று பெருமைப்பட்டுக் கொண்டார்.....என் அண்ணி லஷ்மிக்குத்தான் பூலோகத்தில் மவுசு அதிகமாம்....அவர்தான் ஃபைனான்சியராம்! மக்கள் எல்லோரும், நிதிக்காக அவரிடம் தான் வருகிறார்களாம்!

ஆஹா! நாரதருக்கு பதில் விஷ்ணுவே கலகத்தை விதைத்து விட்டாரா?!  பூலோகத்தில் யார் காதிலாவது விழுந்து விட்டால், உடனே கிளம்பிவிடுவார்கள்...படம் எடுக்க! ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட சரஸ்வதி சபதத்தை, நவீன சரஸ்வதி சபதம் என்று ரீமேக் செய்து விட்டார்கள்! நல்ல காலம் அது மொஞ்சம் மொக்கையாகிப் போனதால் உங்கள் மூவருக்குள் சண்டை இல்லை.  நாங்கள் தப்பித்தோம். ஆனாலும் பயமாகத்தான் இருக்கின்றது. கல்வியா, செல்வமா, வீரமா என்று படம் எடுக்க கிளம்பிவிட வாய்ப்புண்டு! இப்போதெல்லாம் ஏதாவது ஒரு படத்தின் பாட்டை டைட்டிலாக வைப்பதுதானே ஃபாஷன்!  நாங்கள் மூவரும் உங்கள் மூவரின் சண்டையைத் தாங்க முடியாது! 

நாதா! இப்படிச் சொல்லிக் காட்டியே என்னை எப்போதும் வம்புக்கு இழுக்கின்றீர்கள்.....என்னதான் நீங்கள் எல்லோரும் சொல்லிக் கொண்டாலும் எனக்கு வரும் கூட்டம் என்னவோ குறைவுதான்!

ஏன் தேவி இந்த மனக் குறை!  ஆடிமாதம், தை மாதம் வந்துவிட்டால் உனக்குத்தான் கூட்டம் கூடிவிடுகின்றதே! இதோ இப்போது ஆடி பிறந்துவிட்டது! எல்லா கோயில்களிலும் பாட்டுக்கள் வேறு அலறுகின்றது.....உனக்காக என்று.....அதுவும் சினிமா பாட்டுக்கள்....எல்லோரும் வேப்பிலை கட்டி ஆடத் தொடங்கிவிட்டார்கள். தொலைக்காட்சிகளில் உன்னைப் பற்றிய திரைப்படங்கள்....வெள்ளியன்று......ஒவ்வொரு வெள்ளியன்றும் உனக்கும் மக்கள் வரத்தானே செய்கின்றார்கள்! 

ப்ரபோ தங்களுக்கு எப்போதும் என்னைக் கேலிக்குள்ளாக்குவதே தொழிலாகிவிட்டது!  அப்படிப் பார்த்தால் நானும் தங்களைப் பற்றி நிறையச் சொல்லலாம்.....சரி! சரி! பிரபோ!  நாம் இந்தக் கதையை அப்புறமாக வைத்துக் கொள்வோம்!  நாம் வந்த அப்ளிகேஷன்ஸ் எல்லாம் பார்ப்போம்!

தேவி! கொஞ்சம் எளிதாக உள்ளவற்றைக் கொண்டுவரவும்!  அதாவது, மருத்துவம் போன்ற துறைக்களுக்கானவை......பொறியியல் இப்போது வேண்டாம்.....அவை ஏராளமாகக் குவிந்து இருக்கும் ......அதனால் பின்னர்.....

அப்படியென்றால் பிரபோ!  கால்நடை மருத்துவத்திற்கானவற்றைக் கொண்டுவருகின்றேன்!  அவைதான் சொற்பம்!  இதில் ஒரு சின்ன குழப்பம்.....இதை எப்படி நீங்கள் தீர்க்கப் போகின்றீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை!  இரண்டு வேண்டுகோள்கள்!  ஒன்று மாணவி!  மற்றொன்று மாணவன்!  இருவருக்கும் ஒரே கட் ஆஃப்!  இந்தப் பையன் அதே பையன்.....10 ஆம் வகுப்பில் 92% எடுத்திருந்தும், பள்ளியில் உயிரியல் பிரிவு கொடுக்க மறுக்க.........விநாயக் தங்களிடம் பரிந்துரை செய்ய, தாங்கள் அருளினீர்கள்!  ஏதோ சில கணக்கு வழக்குகள் எல்லாம் ஆராய்ந்து!

தெரியும்!  இந்தப் பையன் தன் 2 ஆம் வகுப்பிலிருந்து கால்நடை மருத்துவம்தான் படிக்கவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருப்பவன்! எனவே அவனுடையதை முதலில் ஆராய்ந்து பார்க்கிறேன்! 

என்ன இருந்தாலும், பிரபோ!  நான் அந்தப் பெண்ணின் பக்கம்தான்!  உங்களுக்குத் தெரியுமா?  பூலோகத்தில் பெண்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவர்கள்! பாராளுமன்றத்தில் 33% ஒதுக்கீடு!  எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்!

பாவம் அந்தப் பையன்! அட்மிஷன் என்று வரும் போது எப்போதுமே அந்தப் பையன் விளிம்பில்தான். கிடைக்குமா, கிடைக்காதா என்றுதான்...அதனால் அவனுக்குத்தான் உதவ வேண்டும் இம்முறையாவது.  ஆனால் அதேசமயம் அந்தப் பெண்ணிற்கும் செய்ய வேண்டும்.  இருவருக்குமே கொடுத்துவிட்டால் என்ன....

பிரபோ அது கொஞ்சம் கஷ்டமானது! என்ன பிரபோ உங்களுக்குப் பூலோகத்தில், இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இருக்கும் அட்மிஷன் விதிகள் மறந்து விட்டதோ? பரவாயில்லை, இப்போது அந்தப் பெண்ணிற்கு கொடுத்து விடுங்கள் உங்கள் வரத்தை!

சரி! தேவியின் சித்தம்! அப்போ அந்தப் பையனுக்கு என்ன செய்ய?  அந்த அம்மா பாவம்! அவரது குழந்தை விரும்புவதைப் பெற வேண்டி எப்படித் தவிக்கின்றார் பார். ஏனென்றால் அவருக்கு நன்றாகத் தெரியும் தன் குழந்தை இப்படிப்பை எப்படிப் புனிதமாக நினைத்து, ஆழ்ந்து படிப்பான் என்று!  அதில் அவன் மிகப் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்பது இருவரது கனவும்! எனவே அவனை ஏமாற்ற முடியாது!

பிரபோ! அந்தப் பையனின் பெற்றோரிடமிருந்து மற்றொரு அப்ப்ளிகேஷன் வந்துள்ளது!  “இறைவா, இதுவரை நடந்த கௌன்சலிங்கில் எங்களுக்கு ஃபேவரபிளாக இல்லை. வெயிட்டிங்க் லிஸ்ட் 1 என்று வந்துள்ளது. பரவாயில்லை, வேறு இடத்திலாவது, பாண்டிச்சேரியிலாவது அவன் என்ட்ரன்ஸ் எழுதிச் சேர அவன் மனதை மாற்றுங்கள்.  அப்பாவுக்குச் செலவு என்று பாண்டிச்சேரி கல்லூரியில் சேர மாட்டேன் என்று சொல்லுகின்றான்”. 

பிரச்சினை தீர்ந்தது!  பார்த்துக் கொண்டே இரு தேவி!  எனது திருவிளையாடலை!

பூலோகத்தில் பையனின் வீட்டில் பெற்றோர் அப்பையனின் மனதை மாற்ற முயற்சி “இங்க பாரு, இங்க வெயிட்டிங்க் லிஸ்ட் 1.  ஆனாலும், யுனிவேர்சிட்டில என்ன சொல்றாங்கன்னா, கிடைக்க வாய்ப்பு கம்மினு. ரிசர்வேஷன்ல போயிடும்னு சொல்றாங்க.  இங்க கதவு மூடினா என்ன, பாண்டிச்சேரி கதவு திறக்கலாம்ல. செலவப் பாக்காத....எங்களுக்கு நீ ஒரே பையன்...இது கூட செய்ய மாட்டமா.....நீ முயற்சி செய்.   கிடைச்சா அப்புறம் பாப்போம்..யோசிப்போம்...

தேவி! உன் அண்ணி லக்ஷ்மியைக் கொஞ்சம் கூப்பிடவும்!  அவர்களிடம் கேள் இந்தப் பையனின் அப்பாவின் நிதி நிலைமையைப் பற்றி.

கேட்டாயிற்று.....பிரமாதம் என்று சொல்வதற்கில்லை என்றாலும், கஷ்டப்பட்டாவது சமாளித்து விடலாமாம்.  அதான் பூலோகத்தில் லோன் எனும் சமாச்சாரம் இருக்கின்றதே!...பிரபோ உங்கள் திருவிளையாடலே திருவிளையாடல்தான்....அவன் மனதை மாற்றி விட்டீர்களே! 

அந்தப் பையனுக்குப் பாண்டிச்சேரி காலேஜில் இடம் கிடைக்க அருளிவிட்டோம்.  அந்தப் பெண்ணிற்குச் சென்னை காலேஜிலேயே கிடைத்துவிடும்! நான் ஒரு கணக்கு வைத்திருக்கின்றேன்.  என்ன..செய்ய.... பூலோகத்து மனிதர்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் நம்மைத் தவறாகப் புரிந்து கொண்டு நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில்லை என்பது போல் பேசிக் கொள்வார்கள். என்ன செய்ய நம் தலையெழுத்து! ஹாஹாஹா...இந்த ஆண்டவன் சொல்றான்.....அங்க அருணாச்சலம் முடித்து வைப்பான்....அருளினோம்.

பிரபோ! என்னதான் நீங்கள் உங்கள் பெயரில் படம் எடுத்திருக்கின்றார்கள் என்று...சூப்பர் ஸ்டாரின் டயலாக் பேசினாலும்...நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகிட முடியாது....உங்களை எல்லாம் நடிப்பதற்கு அழைக்கப் போவதில்லை! சரி சரி!  பிரபோ! அடுத்து எஞ்சினீயரிங்க் அப்ளிகேஷன்சை பார்க்கலாமா?!!

ஓ! கடவுளே! இஞ்சினீயரிங்கா!.....அது மலை போல இருக்குமே! எனக்கு அயற்சியாக உள்ளது!  முடியாது!

என்ன பிரபோ! நீங்கள் கடவுள் என்று அழைக்கின்றீர்கள்?  என்னாயிற்று?  நீங்கள் தானே கடவுள்!

ஓ! ம்ம்ம்.. ஒரு செகண்டில் என்னையே மறந்துவிட்டேன்...பூலோகத்தில் இருக்கும் அந்த கௌன்சலிங்க் ஹாலுக்குச் சென்றுவிட்டேன்....இந்த அப்ளிகேஷன்ஸ் எல்லாம் பார்த்ததும்.....

ஹாஅஹாஹாஹாஆ.....

என்ன தேவி இப்படி விழுந்து விழுந்து சிரிப்பு?!

நீங்கள் அங்கு சென்றிருந்தீர்கள் என்று சொன்னதும்...நினைத்துப் பார்த்தேன்...........ரஜனி உங்களைப் போல் வேடம் அணிந்து ஸ்கூட்டரின் பின் உட்கார்ந்து செல்வாரே ஒரு படத்தில்...அப்போது மக்கள் எல்லோரும்.....எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை.....நினைத்தேன்.....தாங்களும் கழுத்தில் பாம்புடன் நம் குடும்பத்துடன் அங்கு அப்படிச் சென்றால்....”ஓ இது கால்நடை மருத்துவ கௌன்சலிங்க் இல்லையா அதனால் யாரோ மாறு வேஷம் இட்டு பாம்புடன், காளையுடன், மயிலுடன், யானையுடன் வந்திருக்கின்றார்கள் போலும்.....” என்று மக்கள் வேடிக்கைப் பார்த்திருப்பதை நினைத்து.......

61/2 வருடங்களுக்குப் பிறகு........

பிரபோ! தாங்கள் அன்று அருளிய வரம்! இதோ அந்தப் பையன் வெளிநாட்டில் மேற் படிப்பு படிக்க பறந்து கொண்டிருக்கின்றான்...அந்தப் பெண்ணிற்கும் நல்ல வேலை கிடைத்து விட்டது  போலும்! தங்கள் விளையாடலே விளையாடல்தான்!

ஆம் தேவி!  பையனும் தனது கனவை நனவாக்க, இலட்சியத்தை நிறைவேற்றப் பறந்து கொண்டிருக்கின்றான்.  நிறைவேற்றுவான்!
**********************
ஹாஹாஹாஹா.........
பையன் கவுன்சிலிங்க் ஹாலில் சிவன் கழுத்தில் பாம்புடன் தன் படை சூழ, காளையுடனும், மயிலுடனும், யானையுடனும் வருவதைப் போல் அவன் கனவில் வரவும்....எழுந்தது தான் இந்தச் சிரிப்புச் சத்தம். இந்தச் சத்தம் உடன் இருந்த வெள்ளைக்காரரைப் பயமுறுத்திச் சற்றுத் தள்ளி சாய்ந்து இருக்கச் செய்தது! 

All passengers “Ladies and gentlemen, as we start our descent, please make sure your seat backs and tray tables are in their full upright position. Make sure your seat belt is securely fastened and all carry-on luggage is stowed underneath the seat in front of you or in the overhead bins. Please turn off all electronic devices until we are safely parked at the gate. Thank you.”

Ladies and gentlemen, welcome to …. Airport. Local time is …. and the temperature is ….”

சட்டென்று விழித்தான் பையன்.......”ஓ மை காட்! ஃப்ளைட் லாண்ட் ஆகும் சமயம்”. அப்படி என்றால்.....இத்தனை நேரம்? நல்ல தூக்கம். தனது சிறு வயதுக் கனவான, இலட்சியப் படிப்பான கால்நடை மருத்துவப்படிப்பு, தகுதி இருந்தும், ரிசர்வேஷன் அடிப்படையில் கிடைக்காமல் போனதால், பெற்றோர் கஷ்டப்பட்டு பணம் செலவழித்துப் படிக்க வைத்துத் தனது இலட்சியத்தை நிறைவேற்றி மேற்படிப்பும் நல்ல ராங்கில் இருந்தும் அதே அடிப்படையில் கிடைக்காமல் போனதால், 1 1/2 வருடம் வேலை செய்துவிட்டு இதோ மேற்படிப்பிற்காக/க்ளினிக்கல் ட்ரெயினிங்கிற்காக கனடா செல்லும் வாய்ப்புக் கிடைத்து, சாதியில்லா பூமியில் இறங்கப் போவதை நினைத்து சந்தோஷப்பட்டு, தன் அட்மிஷன் அனுபவத்தை அசை போட்டுக் கொண்டே தூங்கிப் போனதில் தூக்கத்தில், தனது நிஜ வாழ்வில் நடந்த சம்பவம் இப்படி சிவனும், பார்வதியும் பேசிக் கொள்வது போலக் கனவாக விரிந்திருந்ததை நினைத்துத் தனக்குத் தானே நகைத்துக் கொண்டான் இறங்குவதற்குத் தயாராகிக் கொண்டே! இந்த முறை சத்தமில்லாமல்!

சம்போ மஹாதேவா!


படம் : இணையம்

திங்கள், 28 ஜூலை, 2014

தென்னகத்தின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபிக்கு ஒரு பேபி



அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
– கவிஞர் கண்ணதாசன்

எந்தப் பெண்ணுமே தன்னை அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை வராதா என்ற ஏக்கம் உடையவளாகவும், தான் தாய்மை அடைவதைப் பெருமையாகவும் எண்ணுபவள். ஒரு பெண் இந்த உலகத்தில் மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சி கொள்ளும் தருணம் என்றால், அது அவள் தாய் எனும் நிலையை அடையும் பொழுதுதான்.  தாய்மை என்பது பெண்களுக்குக் கடவுள்/இயற்கை கொடுத்த ஒரு வரப்பிரசாதம்.  சுமைகளைத் தாங்க சக்தி இல்லாதவர்கள், பலவீனமானவர்கள் என்று சொல்லப்பட்டாலும், ஒரு பெண்தான், ஒரு உயிரையே மிகவும் பாதுகாப்பானத் தனது கருவறைப் பையில், ஒரு மாதமல்ல, 10 மாதங்கள் சுமந்து, வலியையும் பொறுத்து, பட்ட கஷ்டங்கள் எல்லாம் “குவா” (அவள் காதில் மட்டும் அம்மா என்ற சப்தம் தான் கேட்கும்) என்ற சத்தத்துடன் வெளி வரும் அந்த மென்மையான மலர் போன்ற அந்த பிஞ்சின் ஸ்பரிசத்தில் இந்த உலகையும், தன்னையுமே மறப்பவள். 


ஆண்கள் எத்தனைதான் தங்களை உயர்வாகக் கருதிக் கொண்டாலும், ஒரு உயிரை சுமந்து பரிசாகத் தருபவள் பெண்தான். மிகவும் உயர்வான, உயரமான பரிமாணத்திற்குச் உவகையுடன் அழைத்துச் செல்லும் தருணம் அது. அந்தத் தருணத்தை நமது பதிவர் ராஜி அவர்கள் தனது வலைத்தளத்தில், தன் முதல் பெண்ணின் சமீபத்த பிறந்தநாள் அன்று “முதன் முதலாய் அன்னை என்னும் பட்டம் தந்தவளின் பிறந்த நாள்” என்றுத் தலைப்பிட்டு, எப்படி அழகான புதுக்கவிதையாய் வடித்திருக்கின்றார் பாருங்கள்!  தாய்மை பெருமையுடன் மிளிர்கின்றது! “இன்று ன் மகளாய் பிறந்தாய்  முதன் முதலாய் “அம்மா” என்னும் பட்டம் பெற்றேன் உன்னால்...”

கீழே உள்ள சுட்டியைக் கொஞ்சம் சொடுக்கித்தான்  பாருங்களேன்!!

பெண்கள் உலகமே பெருமிதம் கொள்வது
தாய் எனும் பெயரைத் தாங்கும் போதல்லவா?
அன்பே என்கிற அழைப்பை விடவும்
ஒரு பெண் அதிகம் எதிர்பார்ப்பது
அம்மா என்கிற அழைப்பை அல்லவா? - கவிஞர் மு. மேத்தா
            தாய்மை பற்றிய இந்த அழகான வரிகள் கவிஞர் மு. மேத்தாவினுடையது! (சங்க இலக்கியங்களில் “தாய்மை” பாடல்களைச் சுமந்து வந்து அவை என்ன சொல்லுகின்றன என்று சொல்ல, விஜு ஐயா அவர்களும், சகோதரி தேன்மதுரத்தமிழ்க்ரேஸ் அவர்களும், “தாய்மை” கவி சுமந்து வந்து, சகோதரி இளமதியும், ஃப்ரான்ஸ் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் அவர்களும், நம்மைத் தாலாட்டுவார்கள் என்று நம்புகின்றோம்!)

                  "குழந்தை மொழி"யைக் கேட்க சகோதரி அருணா செல்வம் அவர்களின் இந்தச் சுட்டியைச் சொடுக்குங்கள்.  http://arouna-selvame.blogspot.com/2014/07/blog-post_28.html

            இப்படிப் பார் போற்றும் தாய்மையை அடைய முடியாத நிலையில், 24 வருடங்களுக்கு முன்பு, அன்று திருமதி ராமமூர்த்தியும், 45 வயதான வி.ராமமூர்த்தியும், ஆஸ்திரேலியாவிலிருந்து உயர்கல்வி கற்றுத் திரும்பிய டாக்டர் கமலா செல்வராஜை அணுகி குழந்தையில்லாக் குறையைச் சொல்ல, அவர்களைப் பரிசோதித்த டாக்டர், உலகெங்கும், பல இடங்களிலும் வெற்றிகரமாக நடந்து வந்த/ வரும் டெஸ்ட் ட்யூப் பேபிகளைப் பற்றியும், அதன் மூலம்தான் அவர்களுக்குக் குழந்தை கிடைக்க வாய்ப்பு என்றும் சொல்லி இருக்கிறார்.


திருமதி/திரு. ராமமூர்த்தி, தங்களுக்கும் அப்படியேனும் ஒரு குழந்தை வேண்டுமெனச் சொல்ல, தென்னகத்திலேயே முதல் “டெஸ்ட் ட்யூப்” குழந்தை அப்படியாகச் சென்னை ஜி.ஜி. மருத்துவமனையில் பிறந்தது. திருமதி ராமமூர்த்திக்கு அன்றைய மனநிலை எப்படி இருந்திருக்கும்?! அதுவரை, தன்னை அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை இல்லையே என்று, பல வேண்டுதல்களுக்கும், வார்த்தைகளுக்கும், மன வேதனைகளுக்கும் உட்பட்டு இருந்தவருக்கு, மகத்தான மருத்துவ வளர்ச்சியால், தன்னை அம்மா என்றழைக்க ஒரு மழலைச் செல்வம் பிறந்ததே என்று அளவற்றப் பூரிப்படைந்திருப்பார்! ஆனந்தக் கண்ணீர் சொரிந்திருப்பார்! இறுதியில், மகள், மனைவி என்ற ஸ்தானத்திற்கெல்லாம் மேம்பட்ட “அம்மா” என்ற அந்த ஸ்தானத்தை அடைந்த சந்தோஷத்தில் மிதந்திருப்பார்.  அதுவும் பல வருடத் தவத்திற்குப் பின்! இதுவும் தாய்மைப் பேறுதான்!

 திரு. ராமமூர்த்தி, டாக்டரின் உதவியால் கிடைக்கப் பெற்ற அக் குழந்தைக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கும் விதத்தில், டாக்டரின் பெயரையும் சேர்த்து “கமலரத்னா” என்று பெயரும் சூட்டினார்.  அந்தக் கமலரத்னா 24 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மருத்துவமனையில், அதே டாக்டரின் உதவியால் சில தினங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்து தாயாகி இருக்கின்றார். 

தனக்கு மகளைத் தந்த டாக்டர் கமலா செல்வராஜ் கையால், தன் பேரக் குழந்தையை கையில் வாங்கிய அந்தத் தாத்தாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவருக்கு ஒரே ஒரு வருத்தம்.  இவ்வினிய வேளையில் தன் மனைவி தன்னுடன் இல்லையே என்பதுதான்.  டாக்டர் கமலா செல்வராஜ் பிரபலமான ஒரு மருத்துவர் மட்டுமல்ல. பிரபலமான ஒரு திரைப்பட நடிகரின் மகளும் கூட.  “காதல் மன்னன்”  என்று அழைக்கப்பட்ட, எப்போதும் வஞ்சிக்கோட்டை வாலிபனாக வலம் வந்த, மறைந்த நம் நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் தான் அவரது தந்தை.

நீங்களும் இந்தச் செய்தியைத் செய்தித் தாள்களில் படித்திருப்பீர்கள்தான்! தாயும், சேயும், தாத்தாவுடன் நலமாய் வாழ நாமெல்லாம் வாழ்த்துவோம்.  கூடவே இது போன்ற வியக்கத்தக்க மருத்துவச் சேவைகள் செய்து, நீண்ட காலம் ஆயுளும், உடல் நலமும் பெற்று வாழ, டாக்டர் திருமதி கமலா செல்வராஜையும் உளமார வாழ்த்துவோம்!










இந்தப் பதிவை எழுதிவிட்டுக் கோயிலுக்குச் சென்ற போது சில காட்சிகள் கண்களில் பட, இப்படி எழுதத் தோன்றியது.

தாய்மை வேண்டி
தகிக்கும் வெயிலிலும்
அரசமரம் சுற்றுவோர் கண்ணில்
‘அம்மா’ என்றழைக்க
அழைத்திடாரோ எம்மை என
அதே வெயிலில்
அனாதைகளாய் ஏங்கி நிற்கும்
அக்குழந்தைகள் படாதது ஏனோ?!

படங்கள் : இணையத்திலிருந்து.