அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 அக்டோபர், 2021

மகன்தாய்க்கு ஆற்றும் உதவி – சியமளா மாமியின் கதை; மாமியார் மெச்சிய மருமகள்

 

மகன்தாய்க்கு ஆற்றும் உதவி……

முதியவர். முதுமையை எளிதாகக் கடப்பது என்பது எளிதல்ல. அதுவும் 90 வயதைக் கடந்தவரை, சுய நினைவுடன் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட அவரது உடல்நலத்தைப் பேணிக் கவனித்துக் கொளல் என்பது சாதாரண காரியமல்ல. 96 வயதான அம்மாவை எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும், அதுவும் இந்தக் கோவிட் சமயத்தில் என்பதற்கு அரிதான முன்னுதாரணமானவர்களில் ஒருவர்.

தன் தேவைகளைச் சுருக்கி, வயதான அம்மாவின் கோணத்திலிருந்து ஒவ்வொன்றையும் சிந்தித்து அதை ஒட்டியே தன் பணிகளை மேற்கொண்டு அம்மாவின் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப அம்மாவின் சௌகரியத்திற்கேற்ப, அம்மாவின் செயல்களை, நித்தியக் கடமைகளை எளிதாக்கிக் கொடுத்தும், உதவியும் பார்த்துக் கொண்டார் அந்த அம்மாவின் கடைசி மகன் தன் முதுகுவடத்தின் வால் பகுதிப் பிரச்சனையினால் ஏற்பட்ட இடுப்பு, முதுகுவலியினிடையில். அம்மாவிற்கு எப்படிச் செய்தால் அவருக்குப் பாதிப்பு இருக்காது, சௌகரியமாக இருக்கும் என்ற கோணத்தில் ஆராய்ந்து அதற்கேற்ப பல விஷயங்களையும் பார்த்துப்  பார்த்துச் செய்தார். 

அம்மாவின் வயதிற்கான சிறிய பயிற்சிகள், கூடியவரை தன்னைத்தானே பார்த்துக் கொள்வதற்கான உதவி மற்றும் பயிற்சி, நினைவுத்திறன் அதிகம் மங்கிவிடாமல் இருக்க சில பயிற்சிகள் (வாசிக்க வைத்தல், அவ்வப்போது கேள்விகள் கேட்டல், உறவினர் பெயர்கள் கேட்டல், அன்று அவர் சாப்பிட்ட உணவு, டிவி நிகழ்ச்சி பற்றி என்று), உணவைக் கூடத் தன் விருப்பம் பார்க்காமல் அம்மாவுக்கு ஏற்ற உணவு செய்தது உட்பட.

வயதான காரணத்தினால் அம்மா இயற்கை உபாதை கழிக்கச் சிரமப்பட்ட போது அருவருப்பு பாராமல், அம்மா கிரமப்படாமல் இயற்கை உபாதை கழிக்க உதவியது; வாக்கர் அல்லது சக்கரநாற்காலி உதவியுடன் வீட்டில் கைத்தாங்கலாய் வளைய வர வைத்தது; அம்மாவின் செவித்திறனுக்கேற்ப எழுதிக் காட்டி, அருகில் இருந்து ஒவ்வொரு தேவையையும், சிறு சிறு தேவையையும் கூடக் கவனித்து மிகவும் பொறுமையுடன் பதிலளித்து, அன்புடன் கவனித்துக் கொண்டது; எல்லாம் மிகையல்ல. இப்படிச் செய்பவர்கள் அரிதானவர்கள்! அந்த அரிதானவர்களில் ஒருவராய்...

எனது கடைசி மைத்துனர்!

மகன்தாய்க்கு ஆற்றும் உதவி இவன்தாய்

என்நோற்றாள் கொல்எனும் சொல்.

 *****************************************************************************************

சியமளா மாமி எழுதிய கதை: மாமியார் மெச்சிய மருமகள்

மாமியைப் பற்றி: மாமியும் அவரது  குடும்பமும் எங்களுக்குத் திருவனந்தபுரத்திலிருந்த போது மலர்ந்த நட்பு. நாங்கள் தாமசமிருந்த வீட்டின் கீழ்ப் பகுதியில் நாங்கள். மாடியில் மாமியின் குடும்பம். கணவர், இரு மகன்கள், ஒரு பெண். பெரிய மகன் அப்போது மருத்துவப் படிப்பில் ஹவுஸ் சர்ஜனாக இருந்தார். இரண்டாவது மகன் பொறியியல் படிப்பிலும், மகள் வேளாண்மைக் கல்லூரியிலும் படித்து வந்தனர்.

என் மகன் அப்போது ஒன்றே கால் வயதிற்குள்தான். இவர்கள் அனைவருக்கும் செல்லப் பிள்ளை. 

தற்போது மாமியின் பெரிய மகன் திருவனந்தபுரத்தில், அரசுமருத்துவமனையில் ஆர்த்தோ சர்ஜன். இரண்டாவது மகன் அமெரிக்காவில். மகள் இங்கு இருக்கிறார். மாமா தற்போது மகளுடன். அனைவருமே எங்கள் நலம்விரும்பிகள்.  

மாமி இறைவனடி சேர்ந்து 1 ½ வருடங்கள் ஆகிறது. மாமி கற்பனை வளம் உள்ளவர். தன் ஆத்ம திருப்திக்கு அவ்வப்போது எழுதுவதை என்னிடம் சொல்லிக் காட்டுவார். தற்போது அவரது மகள் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவரிடம் இருந்த சில கதைகளைக் கொண்டுவந்தேன். மீதி சென்னையில் இருக்கிறது.

மாமி, எழுத்தாளர் தேவனின் விசிறி. சாம்பு கேரக்டரை மிக மிக ரசித்தவர் என்பது அவர் கதைகளில் தெரிகிறது. அதையொத்த கதைகள் சிறிய சிறிய கதைகளாகச் சில எழுதியிருக்கிறார்.  அவற்றில் ஒன்று இங்கு. மற்றவை பிறிதொரு சமயம்.

மாமியார் மெச்சிய மருமகள்

போலீஸ் ஸ்டேஷனில் இருந்த இன்ஸ்பெக்டர் சந்தானத்தை நோக்கி ஒடி வந்தார், ஊரே மூக்கில் விரல் வைக்கும் கிரிமினல் வக்கீல் வரதராஜன்.

“உட்காருமய்யா. என்ன மூச்சிறைக்க ஒடி வருகிறீர்”

“ஸார், நான் என் வீட்டிலேயே ட்ராயரில் வைத்திருந்த 4 லட்சம் ரூபா எங்க போச்சு, எப்படிப் போச்சுன்னு தெரியலையே! அதான் கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்.”

“உமக்கே தெரியலையா!? யாரெல்லாம் வந்தா உங்களைப் பார்க்க”

“மதுரையிலருந்து சாம்பமூர்த்தி, ஒரு கேஸ் விஷயமா வந்திருந்தார். அப்புறம்…அதுதான்…எதிர்க்கட்சி அம்மா அடிதடி விஷயமா கேஸ் எடுத்துண்டு வந்தா. இப்படி 5,6 பேர் வந்தா. யார் மேல எப்படிக் குற்றம் சாட்டறது? புரியலை. அதான் உங்ககிட்ட கேஸ் கொடுத்துட்டுப் போகலாம்னு….”

இன்ஸ்பெக்டர் சந்தானம் ஆட்களை விட்டு வக்கீல் சொன்ன ஆட்களைச் சல்லடை போட்டு விசாரித்துக் குழம்பி நின்றார். அவர்களுக்கு எப்போதும்  ஆபத்பாந்தவன் விச்சு தானே! உடனே அவரைப் பார்க்கக் கிளம்பினார்.

விபரத்தைக் விச்சுவிடம் சொன்னார். விச்சு எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.

“என்ன ஓய் விச்சு! உமக்கு இந்த கேஸ்ல ஏதாவது பிடி கிடைத்ததா” என்றார் சந்தானம்.

அப்போது ரேடியோவில் ‘மாமியார் மெச்சிய மருமகள்’ படத்திலிருந்து பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. விச்சு உள்ளே பார்த்து,

“சச்சு, அந்த ‘மாமியார் மெச்சிய மருமகளை’ உரக்க வை” என்றார்.

உடனே சந்தானம், “என்ன விச்சு? நேரடியாய் சொல்ல மாட்டீரோ? இப்போதே வரதராஜன் வீட்டிற்குப் போய் விசாரிக்கிறேன்” எனப் புறப்பட்டார்.

வரதராஜன் வீட்டில் அவர் மனைவியையும், அம்மாவையும் தனித்தனியாக விசாரித்தார்.

“இத்தனைப் பேர் வந்து போற இடத்துல 4 லட்ச ரூபாயை ட்ராயர்ல பூட்டாம வைச்சுட்டுப் போனவரைக் கண்டிக்கணும்னு நான்தான் அதை எடுத்து என் மாமியார்கிட்ட கொடுத்தேன்.” – மருமகள்.

மாமியாரும் மருமகளை மெச்சி லாக்கரில் வைத்திருக்கிறாள். இதை அறியாத அந்த வக்கீல் பதறிப் போய் கேஸ் கொடுத்திருக்கிறார்.

‘விச்சுவுக்கு இதெல்லாம் எப்படிச் சட்டென உதித்ததோ’ இன்ஸ்பெக்டர் சந்தானத்துக்கு ஆச்சரியம்.  விச்சுவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனார் இன்ஸ்பெக்டர் சந்தானம்.

‘எதற்கு இந்த இன்ஸ்பெக்டர் நன்றி சொல்கிறார்?’ எனத் தெரியாமல் முழி முழின்னு முழித்துக் கொண்டிருந்தார் விச்சு! - ஷியாமளா (13-6-2010)

 

------கீதா

ஞாயிறு, 14 ஜூன், 2020

கேரளத்தில் தேர்வுகள் - அனுபவத் தத்துவம் - செபியின் விளையாட்டு

பகிர நினைத்த செய்தி

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைந்திடட்டும். 

கேரளத்தில், மார்ச்சில் நடை பெறத் தொடங்கிய 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடந்துகொண்டிருந்த சமயத்திலே எதிர்பாராத  ஊரடங்கினால்  தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் மே மாதம் 26 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு மே 26 முதல் மே 31 வரை நடந்திருக்கின்றன. தொற்று பாதிப்பு இல்லாத பகுதிகளில், பரீட்சை எழுதும் மையங்கள் மாற்றப்பட்டு, மாற்றப்பட்ட மையம், தேதி, தேர்வு விவரங்கள் என்று எல்லா மாணவ மாணவியர்க்கும் தெறிவிக்கப்பட்டு, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கும், மாணாக்கர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு நடந்திருக்கிறது.

திங்கள், 6 பிப்ரவரி, 2017

அகக்கண் வழியே!

“உலகம் ஜன்னல் வழியாகத்தான் எனக்கு அறிமுகமானது” இதுதான், எழுத்தாளர் எஸ் ரா – எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் புத்தகமான “தேசாந்திரி” யில் முதல் வாக்கியம்.  நம் எல்லோருக்குமே அப்படித்தான் என்றாலும் அதன் வழி நாம் எதைப் பார்த்தோம் என்பது வேறு!! நமது பார்வையிலிருந்து எதைக் கற்றோம் என்பதும் வேறு!

சில மாதங்களுக்கு முன் இரு நபர்களிடம் பேச நேர்ந்தது. இருவரிடமும் ஒரே கேள்விதான் கேட்டேன்.

“தீபாவளி எல்லாம் நல்லாக் கொண்டாடினீங்களா? நல்லபடியாகப் போச்சா?”

ஒருவர், “அதை ஏன் கேக்கறீங்க மேடம், என்னத்த சொல்லறது? நான் எல்லாம் எங்கேங்க தீபாவளி கொண்டாடறது?” என்று மிகவும் சோகத்துடன் பதிலளித்தார்.

மற்றொருவர், “சூப்பரா போச்சு மேடம். நல்லா எஞ்சாய் பண்ணினேன் மேடம்” என்று நிகழ்வைப் பற்றி விவரித்தார். இருவரின் பதில்களிலும் எவ்வளவு வேறுபாடு!

இரண்டாமவர் மிக மிக நேர்மறை எண்ணம் கொண்டவர். எப்போதும் மகிழ்வாக இருப்பவர். தன்னை மகிழ்வாக வைத்துக் கொள்பவரும் கூட. தான் பார்த்த படங்கள், தொலைக்காட்சியில் பார்த்ததானாலும் சரி, திரையரங்கில் பார்த்ததானாலும் சரி அதைக் குறித்து விவரிப்பார். குறும்படம் பற்றி பேசுவார். நீங்கள் இந்தப் படம் பார்த்தீர்களா என்று என்னிடம் கேட்பார்.

நான் மேற்சொன்ன இருவருமே பார்வையற்றவர்கள். ஆனால், இரண்டாமவரின் பதிலைப் பார்த்தீர்கள் அல்லவா??!! அவர், தான் பார்வையற்றவர் என்பதை மறைக்க கண்ணாடி கூட அணிவதில்லை என்பது அவர் தானும் எல்லோரையும் போலத்தான் என்ற அவரது தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு!

இரண்டமவரை நாம் எல்லோரும் அறிவோம். வலைப்பதிவர். அவருக்கு. என் மகனின் வயதுதான் ஆகிறது.

அவர் என்னிடம், தான் படத்தில் ரசித்த காட்சிகள், பயணத்தில் ரசித்த இயற்கைக் காட்சிகள், நிகழ்வுகள் என்று அனைத்தையும் விவரிப்பார். அவரது பயணக் குறிப்புகளை வாசித்தீர்கள் என்றால் ஏதோ அவர் நேரில் கண்டது போலவே இருக்கும். அவர் பார்வையற்றவர் என்பது எனக்கு முதலில் தெரியாது. எனவே எனக்குச் சிறிது கூட ஐயம் ஏற்படவேயில்லை.

அவர் பார்வையற்றவர் என்பதை அறிய நேர்ந்த போது நான் வியப்பின் எல்லைக்கே போய்விட்டேன். அலைபேசியில் பேசிக் கொண்டும், அவரது எழுத்துகளை வாசித்துக் கொண்டும் இருந்த நாங்கள் அவரை முதன் முதலாக விசு அவர்களின் புத்தக வெளியீட்டின் போது வேலூரில் நேரில் சந்திக்க நேர்ந்தது.
துளசிக்கு அடுத்து அமர்ந்திருப்பவர்தான் மகேஷ் அடுத்திருப்பவர் அவரது தம்பி, முத்துநிலவன் அண்ணா
அவர் வேறு யாருமல்ல திருப்பதி மகேஷ். அவர் தனது பெற்றோருடன் திருப்பதியில்தான் வசிக்கிறார். தாய்மொழி தெலுங்கு என்றாலும் பள்ளிப்படிப்பை அவர் சென்னையில், அடையாரில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் படித்ததால் தமிழ் நன்றாகவே பேசுவார், எழுதுவார். தமிழில் ஆர்வம் உள்ளவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். அவரது வலைத்தளம் http://tirupatimahesh.blogspot.com

நேரில் சந்தித்த பின்னர் எங்களது நட்பு இன்னும் விரிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் இருவரும் அலைபேசியில், ஸ்கைப்பில் அளவளாவது உண்டு. அப்படி ஒரு முறை அவரை அழைத்த போது,

“மேடம் ஒரு மணி நேரம் கழித்து பேசட்டுமா? வேற ஒன்னுமில்லை, டிவில ஒரு படம் பார்த்துட்டுருக்கேன், ரொம்ப நல்ல சீன் போய்ட்டுருக்கு என்பார் இல்லையென்றால் டிவியில் மகாபாரதம் பார்த்துட்டுருக்கேன். பார்த்துட்டு வரேன் மேடம்” என்பார். எனக்கு வியப்பு ஏற்பட்டதில்லை. அதுதான் மகேஷின் பார்வை!!!

வலைத்தளங்கள், புத்தகங்கள் வாசிப்பார். அதை விமர்சிப்பார். கணினி தொழில் நுட்பம் குறித்து அவரிடம் தெரிந்து கொள்ளலாம். அத்தனையும் விவரிப்பார். பயணம் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர். தான் கேரளாவைப் பார்க்க ஆசைப்படுவதாக என்னிடம் சொல்லி அதற்கான ரயில்கள் அவரது ஊரிலிருந்து என்னென்ன இருக்கின்றன, என்று அனைத்து விவரங்களையும் அட்டவணையைப் பார்க்கவே வேண்டாத அளவிற்கு விரல் நுனியில் வைத்திருந்தார்.

பயணம் மேற்கொண்டு அதனைப் பதிவாகவும் எழுதினார். என்னிடம் அவர் இயற்கைக் காட்சியை விவரித்த போது அசந்து போனேன். அவர் வலை எழுத்தை வாசித்தால் அவர் பார்வையற்றவர் என்பதை அவர் சொல்லவில்லை என்றால் அறியவே முடியாது!

புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பிற்கு அவர் திருப்பதியிலிருந்து வேலூர் வந்து, வேலூரில் இருக்கும் நம் மற்றொரு வலைப்பதிவர், சிவசக்தி-அன்பேசிவத்தின் துணையுடன் வந்தார். அன்பேசிவம் அவரை அழைத்து வந்தார் என்பதைவிட அன்பேசிவத்தை மகேஷ்தான் அழைத்து வந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. திருச்சியில் இறங்கியதும் எந்த நடைமேடைக்குச் சென்று புதுக்கோட்டை ரயிலைப் பிடிக்க வேண்டும் என்ற விவரங்கள் முதல் நிகழ்வு நடக்கும் இடம், முகவரி என்று விவரித்து அழைத்து வந்தது மற்றும் ரயிலில் அவர் பேசிக் கொண்டே வந்த விசயங்களை நாம் கூட அறிந்திருக்க மாட்டோம் அந்த அளவிற்கு அவர் பல விசயங்களை மிகவும் யதார்த்த ரீதியில் பேசிக் கொண்டே வந்தார் என்றும் அன்பேசிவம் என்னிடம் சொல்லிச் சொல்லி வியந்து போனார். நானும் அதை வழிமொழிவேன்.

மகேஷிடம் என்ன துறை பற்றி வேண்டுமானாலும் உரையாடலாம். அவர் அறிந்தும் வைத்திருக்கிறார். அறிந்திராதவற்றை நம்மிடம் கேட்டும் தெரிந்து கொண்டு அடுத்த முறை பேசும் போது கூடுதல் தகவல்கள் தருவார். நமக்கு வியப்பு மேலிடும். புள்ளி விவரக் கில்லாடி அவர்!

நான் அவரிடம் பேசும் போது, “மகேஷ், நீங்கள் இந்தப் படம் பாத்தீங்களா? அந்த இடத்துல இதைப் பாத்தீங்களா?” என்று எல்லோரிடமும் பேசுவதைப் போலத்தான் படங்கள், இடங்கள், புத்தகங்கள் பற்றி எல்லாம் பேசுவேன். மேலும் படியுங்கள் என்று உற்சாகப்படுத்தினால் அவர் அதற்கு மேலும் தன்னை மேம்படுத்திக் கொள்வது குறித்துப் பேசுவார். அவரிடமிருந்து இது வரை எந்த எதிர்மறையான எண்ணமும் வெளிப்பட்டதில்லை. தான் பார்வையற்றவர் என்பதை ஒரு போதும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. அசாத்தியத் தன்னம்பிக்கையுடைய இளைஞர்.

தற்போது ஸ்டேட் பேங்கில் வேலை கிடைத்து, பயிற்சியும் முடிந்து, சென்னை வட்டம் என்பதால் திருத்தணி கிளையில் கிடைத்து வேலை செய்கிறார். திருப்பதியிலிருந்து தினமும் காலை 2 மணி நேரப் பயணம், மாலை 2 மணி நேரப்பயணம்.  தனது புது வேலை பற்றி அடுத்த முயற்சி எல்லாமும் அவர் பேசினார். என்னை வியக்க வைக்கும் ஓர் இளைஞர்.

சமீபத்தில் நம் கரந்தை சகோ தன் வலைத்தளத்தில் மகேஷ் போன்ற ஒருவரான வெற்றிவேல் முருகன் என்பவரைப் பற்றி அவரது தன்னம்பிக்கையையும், நேர்மறை எண்ணங்களையும் தொடராக எழுதியதை அறிந்து வியந்தோம். ஹெலன் கெல்லரைப் பற்றி நாம் அறிவோம். இன்னும் பல பார்வையற்ற ஆனால் நேர்மறை எண்ணங்களுடன், தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தவர்கள் மற்றும் வாழ்ந்து வரும் அனைவருமே இவ்வுலகைத் தங்கள் அகக்கண் எனும் ஜன்னலின் வழியாக நோக்கியதால்/நோக்குவதால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றுச் சாதித்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றனர்/பெறுகின்றனர். அப்பட்டியலில் நம் மகேஷும் இடம் பெறுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை!

எல்லாப் புலன்களும் இருந்தும் பல மனக்குறைகளுடன் வாழ்ந்து வரும் நாம், இவரையும், இவர் போன்று வாழ்பவர்களையும் பார்த்து நாம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது. மகேஷ் போன்றோரைக் கண்டு உற்சாகமடைந்து, நம்மை நாமே ஊக்குவித்துக் கொண்டு, நேர்மறை எண்ணங்களுடன், தன்னம்பிக்கையுடன் நாமும் ஜன்னல் வழி இவ்வுலகைப் பார்த்தாலும், நம் அகக்கண் வழியாகப் பார்ப்போம்.

Kindness is the language which the deaf can hear and the blind can see - Mark Twain

The only thing worse than being blind is having sight but no vision - Helen Keller


----கீதா



வியாழன், 29 டிசம்பர், 2016

வாட்சப்பில் தமிழ்ப் பதிவர்களுக்குத் திரட்டி!!!!

Image result for tamil language pictures
படம் இணையத்திலிருந்து

நாம் ஒவ்வொருவருக்கும் நம் எழுத்துகள் ஏதேனும் மாத இதழிலோ, வார இதழிலோ வெளிவராதா என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. நம் பதிவர் நண்பர்கள் பலரும் அதனைத் தீவிரமாக முயற்சி செய்து வெற்றியும் கண்டுள்ளனர். என்றாலும் அப்படி முயற்சி செய்யாமலும், முயற்சி செய்து, வெளிவராமலும் ஏக்கத்துடன் இருப்பவர்களுக்கு, நாமே அரசன், நாமே மந்திரி என்று உதவும் வகையில் வலைத்தளம்/வலைப்பூ இருக்கிறது. அதுவும் இலவசமாகத் தொடங்கி எழுதலாம் என்றால் மகிழ்ச்சிதானே! அப்படித்தான் நாம் அனைவரும் நமது அனுபவங்களையும், நாம் கற்றவற்றையும், உணர்ந்தவைகளையும், தேடல்களையும், கற்பனைகளையும், புனைவுகளையும், சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தும், நல்லது நடந்தால் பாராட்டியும் எழுதி வருகிறோம்.

அதுவும் நம் வலைப்பதிவர்கள் ஒருவருக்கொருவர் அவரவர் திறமையை வெளிப்படுத்தியும், நட்புடனும், அன்புடனும், எதிர்மறைக் கருத்தானாலும் சரி, நேர்மறைக் கருத்தானாலும் சரி அதனை வெளிப்படுத்திக் கொண்டும் வருகிறோம். கருத்துப் பரிமாற்றங்களினால் நாம் பல கற்க முடிகின்றது. பிறர் அனுபவங்களையும் அறிய முடிகிறது. அதிலிருந்து பாடங்களும் கற்று வருகிறோம் என்றால் மிகையல்ல.

அப்படி நாம் எழுதுவது இவ்வுலகம் முழுவதும் இருக்கும் தமிழன்பர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்றால் அதற்கு ஒரு திரட்டி இன்றியமையாததுதானே! பல திரட்டிகள் இருந்தன என்றாலும் அனைத்தும் வெகு சில நாட்களில், மாதங்களில் செயலற்றுப் போயின என்பது மிகவும் வருந்தத் தக்கதே. திரட்டிகளில் தமிழ்மணம்தான் சிறப்பான திரட்டியாக இருந்து வந்தது என்றாலும், அதில் தரம் என்பது குறைந்து வரத் தொடங்கியது. அதன் செயல்பாடு பல சமயங்களில் புரியாமல்தான் இருந்து வந்தது. நல்ல திரட்டியாக இருந்து வந்த தமிழ்மணம் திரட்டி சமீபகாலமாகச் சரியாகச் செயல்படவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏனோ அதில் பல சிக்கல்கள் இருந்து வருகின்றன. அதனைப் பற்றி தெரியாததால் இங்கு குறிப்பிடவில்லை. நமக்குக் கவலையில்லை.

ஏன் கவலையில்லை? இதோ நம் தமிழ் வலையுலகிற்கான, தமிழ் எழுத்தாளர்களுக்கான, நமக்கே நமக்கான ஒரு திரட்டி உருவாகி வருகிறது. அதற்காக நமது புதுக்கோட்டை வலையுலக அரசர்களான முத்துநிலவன் ஐயா/அண்ணா, மற்றும் செல்வா அவர்களும் வலைச் சித்தர், சுறு சுறுப்புத் தேனீ என்று செல்லமாகப் பெயர் சூட்டபெற்ற டிடி அவர்களும் இணைந்து தமிழ்வலையுலக பதிவர்கள் அனைவரையும் ஒரே குடும்பமாக்கிடவும், நம் பதிவுகளை அதில் இணைக்கும் திரட்டியாகவும், அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் படியுமாக காண்செவிக் குழுவில் தமிழ் வலைப்பதிவகம் என்ற திரட்டி ஒன்றை முன்னோட்டமாகத் தொடங்கிட இதோ வெற்றி நடை போட்டு வருகிறது.

நிர்வாகக் குழுவினர் அனைவரது உழைப்பிற்கும், அதனைச் செயல்வடிவமாக்கியதற்கும் பதிவர்கள் அனைவரும் சிரம் தாழ்த்தி வணக்கம் கூறுகிறோம். எங்கள் அனைவரது பாராட்டுகளும், வாழ்த்துக்களும்!

இப்போது இது வரை அறிந்திராத பல வலைப்பதிவர்களையும், புதிய வலைப்பதிவர்களையும் இதில் காண முடிகிறது. பலரது படைப்புகளும் பலரையும் சென்றடையும் என்பதும் உறுதி. அதற்கு உதவும் காண்செவி தொழில் நுட்பத்தையும் பாராட்டுவோம்! நம் எல்லோரையும் இணைக்கும் இணையத் தொழில்நுட்பத்தையும் பாராட்டுவோம்! என்னே ஓர் அருமையான வாய்ப்பு!

அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை அளித்த நம் அன்பர்கள், நிர்வாகக் குழுவினருடன் நாம் விதிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்தானே! எனவே நாம் அனைவரும், அதில் தேவையற்ற செய்திகளைப் பரப்பாமல், பகிராமல், நாம் எழுதும் இணைப்புகளை மட்டுமே அதில் இணைத்துப் பகிர்ந்து, பிற பதிவர்கள் எழுதும் பதிவுகளையும் முடிந்தவரை, நேரம் உள்ள போது வாசித்துக் கருத்திட முடிந்தால் கருத்திட்டு, இல்லை என்றால் வாசித்து அவர்களை ஊக்கப்படுத்தாலாமே! தமிழ்வலையுலக ஒற்றுமை தழைத்தோங்கிடுமே!

இணையாத வலைப்பதிவர்கள் இணையுங்கள். தங்கள் திறமையை, எழுத்தாற்றலை வெளிப்படுத்துங்கள். புதிதாய் எழுத வருவோருக்கும் இது பொருந்தும்! தமிழ் எழுத்தாளர்கள் பெருக வேண்டும். மேன்மேலும் சிறப்படைய வேண்டும். தமிழ் மொழி! தமிழ் எழுத்துக்கள் இவ்வுலகம் முழுவதும் சென்றடைந்து சிறக்கட்டும்! தழைக்கட்டும்! தமிழின் மணத்தைப் பரப்புவோம்.

தயவான வேண்டுகோள்! நம் பதிவர் நண்பர்கள் அதில் தங்கள் படைப்புகளை மட்டுமே இணைத்துப் பயன் பெறுங்கள். தங்கள் பெயர், ஊர், தளத்தின் பெயர், மற்றும் அலைபேசி எண் அல்லது மின் அஞ்சல் முகவரி கொடுத்து அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். வேறு செய்திகள், தகவல்கள் வேண்டாமே! அவற்றைப் பகிர பல குழுக்கள், நம் நண்பர்களின் தனிப்பட்ட காண்செவி எண் உள்ளதே! அதில் பகிர்ந்து கொள்ளலாம் இல்லையா! தேவையற்றவை வரும் போது நாம் இணைக்கும் பதிவுகளின் இணைப்புகள் எங்கோ காணாமல் நம் கண்களில் படாமல் போகும் வாய்ப்பும் உண்டுதானே!

எனவே நாம் அனைவரும் நிர்வாகக் குழுவுடன் ஒத்துழைப்போம், மேலும் சிறக்கச் செய்வோம்! முத்தாய்ப்பாக, நம் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய புகழ்பெற்ற வலைப்பதிவர் தேனம்மை அவர்கள் தன் தளத்தில் இட்டிருக்கும் வார்த்தைகளுடன்

வலைப்பதிவர்  ஒற்றுமை  ஓங்கட்டும்.!
என்றும்  நம்முள்  வலிமை  பெருகட்டும்.!

துளசிதரன்,  கீதா




வெள்ளி, 8 ஏப்ரல், 2016

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு

நாம் மேற்கொள்ளும் பயணங்கள் பலவாக இருந்தாலும், சுற்றுலாப் பயணம்தான் சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனுபவித்துக் களிப்பது. சுற்றுலா நம் வழமையான பரபரப்பான வாழ்வியலுக்குச் சற்று ஓய்வு கொடுத்து, மனதிற்கும், உடலிற்கும் புத்துணர்வு ஊட்டி, மீண்டும் வழமையான வாழ்வியலுக்கு மீட்டெடுக்கும் திறனுடையது.

உலகிலேயே மிகப்பெரிய துறை என்றால் சுற்றுலாத் துறையே. அனுபவங்களும், கலாச்சாரப் பரிமாறல்களும், படிப்பினையும் மட்டுமின்றி ஒரு நாட்டின் மிகப் பெரிய வருவாய்த் துறையாக அமைந்திருப்பதும் சுற்றுலாத் துறை என்றால் அது மிகையல்ல.

அண்டை நாடுகளாகிய, இலங்கை, பர்மா, மற்றும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளின் மிகப் பெரிய வருவாய் இத்துறையிலிருந்துதான்.

நாம் நாட்டின் வருவாய்க்கும் சுற்றுலாத் துறையின் பங்கு அளப்பரியது. ஆயினும், ஒரு சில இடங்களைத் தவிர பல இடங்களில் அடிப்படை வசதிகளையும், இருக்கும் வசதிகளையும் பயணிகளுக்கு ஏற்றாற் போல் மகிழ்வுதரும் வகையில் சுற்றுலாத் துறை மேம்படுத்தினால் வெளிநாட்டுப் ப்யணிகளையும் ஈர்த்து சுற்றுலா வருவாய் மேலும் பெருகிடும்.

நம் அண்டை மாநிலமான கேரளா சுற்றுலாத்துறையை மிக அழகாகக் கையாண்டு வருவாய் பெருக்கி வருகின்றார்கள். தமிழ்நாட்டில் திருமிகு இறையன்பு அவர்கள் சுற்றுலாத்துறைச் செயலராக இருந்த போது அதை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டார். இப்போதும் அவர் தனது உரைகளில் அதை வலியுறுத்தியும் வருகின்றார். வருவாய் பெருகினால் அந்தத் துறையே இன்னும் வளமாகி, பயணிகளை ஈருக்கும் அல்லவா? அதற்கு உதவும் வகையில் ஹாலிடே நியூஸ்...

இணையத்திலிருந்து

துளசி: “கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாடக் கண்டு பிடிச்சுக் கொண்டா ஒரு தீவு...”

கீதா: ஹேய்! என்னாச்சு துளசி? பாட்டெல்லாம் பாடுகிறாய்?

துளசி: யப்பா உன் பேச்சை நிறுத்த வேறு வழி தெரியவில்லை..... சரி அதை விடு. பிள்ளைகளுக்கு லீவு விட்டாயிற்று. எங்கேனும் செல்ல வேண்டும் என்று ஒரே நச்சரிப்பு. எங்கு செல்லலாம் என்று தலைமுடியைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றேன்.

கீதா: “சனி ஞாயிறு..... காதில் சொன்னது என்னது”

துளசி : சனி ஞாயிறு காதில் சொல்லியதா? என்னது அது?

கீதா: அது என் காதில் என்ன சொல்லியது என்றால்.... சுற்றுலாவுக்கு உதவும் வகையில் மக்களாகிய உங்களை நம்பி ஹாலிடே நியூஸ்  என்று அழகான, வண்ண மயமான, வழவழவென்ற தாள்களுடன், மனதையும், கண்ணையும் கொள்ளை கொள்ளும் படங்களுடன், தகவல்களுடன் சுற்றுலாவுக்கென்றே ஒரு பத்திரிகை வெளியாகும் போது?” என்று சொல்லியது. “தீவு தானே கேட்கின்றாய் இதோ பார்” என்று அந்த இதழ் காட்டுவதைப் பார்..
நண்பர் வெங்கட்ஜியின் தளத்திலிருந்து

துளசி : ஆஹா! அழகாக இருக்கிறதே! அதுவும் தமிழிலா? சுற்றுலாவைப் பற்றி பத்திரிகையா? ட்ராவலாக் என்று ஆங்கிலத்தில் பல வாசித்ததுண்டு. மேலே சொல்லு.

கீதா: உன்னைப் போன்றோர்க்கும் உபயோகமாக இருக்கும்தான்.  வெங்கட்ஜி, என்னைப் போன்று சுற்றுலாவை ரசிப்பவர்களுக்கும் ரொம்பவே உபயோகமாக இருக்கும். சுற்றப்பிடிக்கும் என்பதால்...

துளசி : சரி இப்ப நீ சுற்றிவளைக்காதே. விஷயத்திற்கு வா.

சகோ செந்தில் எனக்கு அளித்த இதழ்.

கீதா: இதை வெளியிடுபவர்கள் மதுரையைச் சேர்ந்த வளர்தமிழ் பப்ளிகேஷன்ஸ். நம் நண்பர் கூட்டாஞ்சோறு செந்தில்குமார் இருக்கிறார் இல்லையா, அவர்தான் இந்தப் பத்திரிகையின் இணையாசிரியர். இந்த இதழ் முன்பே அதாவது அக்டோபர் 2012லிருந்து வெளிவந்ததுதான்.  நான் அவரைச் சந்தித்த போது எனக்கு அவர் முன்பு வெளியான இதழ் ஒன்றைக் கொடுத்தார். அதன்பின் சில மாதங்களுக்கு முன் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், மீண்டும் வெளிவர இருக்கிறதாகவும் அப்போது தெரிவித்தார்.  இதோ மீண்டும் புத்துணர்வுடன் இந்த மாதம் முதல் வெளிவரத் தொடங்கிவிட்டது.

துளசி: சுற்றுலா இதழுக்கும் நெருக்கடியா? ஆச்சரியம்தான்..

கீதா: அதை ஏன் கேட்கின்றாய்...மூன்று வருடங்களாக வெளிவந்து கொண்டிருந்த இதழ் போட்டியில், பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்குவதில்லையா அது போல விழுங்கப்பட்டது. ஏஜண்டுகளும் ஏமாற்ற பல இன்னல்களுக்கு உட்பட நிறுத்த வேண்டிய சூழல்.

துளசி: வேதனைதான். இப்படிப்பட்ட நல்ல இதழ்களுக்கு ஏற்படும் நிலைமையைப் பார்..

கீதா: நம் வலைப்பதிவர் “கடல் பயணங்கள்” சுரேஷ் தெரியுமல்லவா? உன்னுடன் ஓரிரு முறை கூடப் பேசியிருக்கிறார்.  ஆவியின் நண்பர். அவரும் இந்த இதழில் பயணக் கட்டுரைகள் எழுதிவருகிறார். "ஆஸ்திரேலியா சின்னப் பெங்குயின்களின் செல்ல நடை”. 


பார் இந்தப் படத்தை! அந்தச் சின்ன அழகு ராணிகள், ராஜாக்கள் என்ன அழகாக நடை போடுகிறார்கள். உடனே போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றதல்லவா?



நம் வெங்கட்ஜியின் பதிவு வாசித்தோம் இல்லையா “முதுகுச் சுமையோடு ஒரு பயணம்” ஏப்ரல் மாத இதழில் வெளியாகியிருக்கிறது. – பக்கம் 54-55. படம் வெங்கட்ஜி தளம்.   

துளசி: அட! நம் பதிவர்களும் கலக்குகின்றார்கள் என்று சொல்லு....

இணையத்திலிருந்து

கீதா: ஆம்! இது மட்டுமல்ல. பாபம் போக்கும் தலங்கள் – பாபநாசம், நம் தளத்தின் பெயருக்குக் காரணமான தங்க நகரம் சிதம்பரத்தையும், வடக்கே உள்ள பொற்கோயில் பற்றியும், கலைக்கோயில்கள் பற்றியும் ஒரு புறம் ஆன்மீகத் தலங்கள் என்றால், காதலர் சுற்றுலா என்று மறுபுறம், தெற்கேகொல்லிமலை, வடக்கே குலு மணாலி என்றும், நம் வெங்கட்ஜி வடகிழக்கு மாநிலப்பயணத் தொடர் எழுதுவது போல்

நன்றி  - செந்தில் குமார் சகோ

நம் செந்தில் சகோவும் நார்த் ஈஸ்ட் சலிக்காத இயற்கைப் பயணம் என்று தொடர் எழுத, இயற்கை விரும்பிகளுக்கும் தீனி போடுகின்றது இந்த இதழ். உள்நாடு முதல் வெளிநாட்டில் உள்ள இடங்கள் பற்றியும் நம் மனதைக் கட்டிப் போடும் வகையில்...

 நம்மூரிலுள்ள வட்டக்கோட்டையும் வந்திருக்கிறது - படம் இணையம்.

துளசி: அருமையாக உள்ளதே. இப்படி ஒரு நல்ல இதழ் தமிழில் வெளிவருவது எவ்வளவு பெருமை! இப்படிப்பட்ட நல்ல இதழ்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்றால் நாமெல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் இல்லையா?! உடனே செந்தில் சகோக்கு ஒரு மின் அஞ்சல் தட்டு. நாமும் சந்தா செலுத்திப் பெற்றுவிடுவோம்.

கீதா: அதற்குத் தேவையே இல்லை.  இங்கு சென்னையில் ஹிக்கின்ஸ்பாதம் புத்தக கடைகளில் கிடைக்கும். சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையுள்ள எல்லா ரயில் நிலைய புத்தக கடைகளிலும் கிடைக்கும். இதுபோக மேலும் 20 இடங்களில் கிடைக்கிறதாம். அதைப் பற்றி அடுத்த இதழில் வெளியிட இருக்கிறார்கள்.  ஆங்க் அப்புறம் ஒன்று இந்த இதழ் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி வெளிவருமாம்.  மாத இதழ் ரூ 50 மட்டுமே.

துளசி: கீதா என்ன பண்ணனும், என்பதையும், பிற விபரங்களையும் எல்லோருக்கும் சொல்லு..

கீதா: நம் வைகோ சார், முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, சுபாஷினி டெர்மல் ஆகியோரும் பங்களிக்க உள்ளனராம்.  விரும்புவோர், நீங்களும் உங்கள் பயணக் கட்டுரைகளை senthil.msp@gmail.com மின் அஞ்சலுக்கு அனுப்பிக் கொடுக்கலாம். 

நன்றி செந்தில்குமார் சகோ

எழுதத் தெரியவில்லை என்றோ, தயக்கமோ இருந்தால் நீங்கள் சென்றுவந்த இடங்களின் நல்ல, தெளிவான புகைப்படங்கள் இருந்தால் அதையும், மேலே காண்பது போல் myholidayphoto@gmail.com அனுப்பலாம். அவர்களுக்கென்று ஒரு பக்கம் இருக்கிறதாம். இதழை உங்கள் அகத்திற்குப் பெற விழைபவர்கள் 9443571391 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

துளசி: மேலும் விபரங்கள் தெரிய வேண்டும் என்றால் நண்பர் செந்தில்குமார் அவர்களின் தளத்தில் இந்தச் சுட்டியைச் சொடுக்குங்கள். http://senthilmsp.blogspot.com/2016/03/blog-post_25.html

http://venkatnagaraj.blogspot.com/2016/04/blog-post_6.html  - வெங்கட்ஜியின் தளத்தில் ஹாலிடே நியூஸ் பற்றிய பதிவின் சுட்டி


---கீதா






ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

"வளரும் கவிதை" தளத்தில் தவழும் தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸ் - 2

இணைய  எழுத்தாளர் என்ன சொல்கிறார்?–

http://valarumkavithai.blogspot.com/2016/03/2.html

(2) “தில்லைஅகத்து” - துளசி-கீதா 

 (4)  இணையத்தமிழ் வலைப்பக்கங்கள் தமிழ்ச்சமூக வளர்ச்சிக்கு உதவுகின்றனவா?

சமீபத்தில் யுனெஸ்கோ, அழிந்து வரும் மொழிகள் என 25 மொழிகளைப் பட்டியலிட்டு அதில் தமிழ் 8 வது இடம் என்று சொல்லியிருப்பதைப் பார்த்த போதும், நகரங்களில், சிறு நகரங்களில் கூட இரண்டாவது மொழிப்பாடமாக இந்தியையோ, சமஸ்க்ருதத்தையோ எடுத்துப் படிக்கும் மாணவ மாணவிகளைப் பார்க்கும் போதும், தமிழ் மொழி அழிந்தால் தமிழ்ச்சமூகமும் அழிந்துவிடாதோ? யுனெஸ்கோவின் புள்ளியியல் பலித்துவிடுமோ? என்ற அச்சம் ஒரு பக்கம் எழுந்தாலும்...

ஒரு சமூகத்தின் வளர்ச்சியே அதன் மொழியைச் சார்ந்ததுதான். எனவே, தமிழ்ச்சமூக வளர்ச்சி என்பது தமிழ் மொழியைச் சார்ந்தது இல்லையா. அப்படிப் பார்த்தால், இணையத்தமிழ் வலைப்பக்கங்கள் வழியாக, தமிழ் மொழி வளர்கின்றது என்றே நாங்கள் நினைக்கின்றோம்.  மொழி வளர்வதைக் காணும் போது, தமிழ்ச்சமூகமும் வளர்ந்து வருவதாகவே நாங்கள் எண்ணுகின்றோம்.

எங்களையே நீங்கள் எடுத்துக் கொண்டால், நாங்கள் பல வருடங்களுக்குப் பிறகுத் தமிழில் எழுத ஆரம்பித்த போது, பல தமிழ்ச் சொற்களை மறந்திருக்கின்றோமே என்று வருந்தினோம்.  இணையத்தில் பல தமிழ் அறிஞர்களின் பதிவுகளை வாசிக்க வாசிக்கப் பல தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொண்டோம் என்றால் அது மிகையல்ல.  மட்டுமல்ல புதிய புதிய தமிழ் சொற்களையும் கற்று வருகின்றோம்.

இப்போது பொது வெளியில் கூட முன்பு போல அல்லாமல் தமிழில் வார்த்தைகளைக் காண முடிகின்றது. அடுமனை, இனிப்பகம், கணினி, வங்கி, அலுவலக மேலாளர் போன்ற வார்த்தைகளைக் காண முடிகின்றது.

இப்போது, தமிழில் வட மொழிச் சொற்களைக் கூடக் கலக்காமல் தமிழ்ச் சொற்களை உபயோகிக்க வேண்டும் என்றும் அதற்கானச் சொல் அட்டவணை கூட ஒரு சில வலைத்தளங்களில் (நாங்கள் சமீபத்தில் கண்ட்து யாழ்பாவாணன் அவர்களின் தளத்தில்) காண நேர்கின்றது. பலரும் நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் எழுதியும் வருகின்றனர். எத்தனை வலைத்தளங்கள் தமிழில் இயங்குகின்றன.

புதிய இளைஞர்களும் தமிழில் எழுதி வருகின்றார்கள். உதாரணத்திற்கு, கே ஆர் எஸ் கல்லூரி மாணவியரை இங்குக் குறிப்பிடலாம்.  நம் வலைப்பதிவர்களின் குழந்தைகளும் தளங்கள் ஆரம்பித்து எழுதுகின்றனர். இதை எல்லாம் பார்க்கும் போது நம்பிக்கைத் துளிர்க்கின்றதுதான். இன்னும் பலரும் எழுத வேண்டும் என்பதே எங்கள் அவா. தமிழ் அழிகின்றது என்ற கூக்குரல்கள் எழுகின்றனதான்.  ஆனால், தமிழும் அழியாது, தமிழ்ச்சமூகமும் அழியாது. அழியக் கூடாது. அதைக் கட்டிக்காக்கும் பொறுப்பு நம் கையில் இருக்கின்றது என்பதையும், யுனெஸ்கோவின் ஆய்வைப் பொய்யாக்கிட வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும். எனவே இணையத் தமிழ் பலரையும் அடைய, இன்னும் பலரும் நல்ல ஆக்கப்பூர்வமானப் படைப்புகளைப் படைத்திட வேண்டும் என்பதையும் இங்குச் சொல்லிக் கொள்கின்றோம்.

(5)   குறும்படங்கள் எடுத்த அனுபவங்கள் உங்களுக்கு உண்டு, மாற்றுத்திரைப்பட இயக்கமாக இதை மாற்ற உங்கள் ஆலோசனை என்ன?

பலரும் குறும்படங்கள் எடுப்பதே,  திரைப்பட உலகில் நுழைவதற்கான ஒரு அடையாள அட்டையாகப் பயன்படுத்தத்தான். எங்களுக்கு அப்படிப்பட்டக் கனவுகள் எதுவும் இல்லை. செயல்திட்டமும் இல்லை. ஆனால், குறும்படங்கள் எடுப்பதை நிச்சயமாக ஒரு நல்ல மாற்றுத் திரைப்பட இயக்கமாகக் கொள்ளலாம். பெரிய திரைப்படங்கள் 2 ½ மணி நேரத்தில் சொல்ல முடியாதச் செய்திகளைக் கூட மிகவும் அழகியலோடு ஒரு சில நிமிடங்களில் பல விளம்பரங்களே சொல்லிச் செல்லும் போது, குறும்படங்கள் நிச்சயமாக இந்தச் சமூகத்திற்குப் பல நல்ல செய்திகளை அழகியலோடும், அக்கறையோடும், தர முடியும்.

பொருளாதார ரீதியாக திரைப்படத் தளத்தில் நுழைய முடியாதோர் பல இளைஞர்கள் குறும்படங்கள் எடுத்துத் தங்கள் கலை ஆர்வத்தைத் தணித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். குறும்பட இயக்குநர்கள் ஒரு இயக்கமாகச் செயல்பட்டால், ஒன்று சேர்ந்து, திரையரங்குகளில் பல குறும்படங்களைத் திரையிடலாம். திரைப்பட விழா நடப்பதில்லையா அது போல...நல்ல குறும்படங்களை அதன் நேரத்தைக் கணக்கிட்டு, வரிசைப்படுத்தி, ஒரு பெரிய திரைப்படம் வெளியிடும் நேரத்தில்-உதாரணமாக 2 ½ மணி நேரத்தில் – எத்தனைப் படங்கள் வெளியிட முடியுமோ அத்தனைப் படங்களை வெளியிடலாம். பெரிய திரைப்படத்திற்கு வசூலிப்பது போல வசூலிக்கலாம்.  அதனால், குறும்பட இயக்குநர்களுக்கும் வருமானம் கிடைக்கும் இல்லையா. பெரிய திரைப்படங்களை இயக்கிக் கைகளைச் சுட்டுக் கொள்வதற்குப் பதில் இது நல்ல இயக்கம்தானே என்று தோன்றியதுண்டு.

பெரியப் படங்களைப் போல தினமும் முடியாதுதான். வாரத்தில் ஏதேனும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, சிறிய திரையரங்குகளும் மனது வைத்தால் இதனைச் செயல்படுத்தலாம். பல நல்ல குறும்படங்கள் வெளிவர வாய்ப்புண்டு. சமூகத்திற்கு இதன் மூலம் நல்ல செய்திகளைச் சொல்லி விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம். இது எங்கள் மனதில் அடிக்கடி தோன்றும் ஒன்று. ஆனால், எவ்வளவு தூரம் இதைச் செயலாக்கப்படுத்த முடியும் என்று தெரியவில்லை ஏனென்றால் பெரிய திட்டம் இது. நிறையப் பேசலாம். கனவு காண்பது, சொல்வது என்பது எளிது ஆனால் நடைமுறைப்படுத்தல் என்பதில்தான் இருக்கிறது சிக்கல்.

இதனை வாசிப்போர் திரைப்படம், குறும்படம் எடுப்போராயின் யோசிக்கலாம், கருத்துகள் சொல்லலாம்.

 (6)  குப்பைகளும், ஆபாசங்களும் மிகுந்திருக்கும் இன்றைய இணையத் தமிழ்ச்சூழலில் இளைஞர்களின் பயன்பாடு எப்படி இருக்கிறது?

குப்பைகளும், ஆபாசங்களும் நிறையவே மலிந்திருக்கின்றன. இதைத் தடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் தொழில்நுட்பம் அந்த அளவிற்கு வளர்ந்துள்ளது, வளர்ந்தும் வருகின்றது. தடை கொண்டுவந்தால், அந்தத் தடையை உடைக்க ஒரு தொழிநுட்பத்தைக் கண்டுப்பிடிக்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். நேர்மறை இருந்தால் எதிர்மறையும் இருப்பது போல்..  தவறான வழியில் பயன்படுத்தும் இளைஞர்கள் இருந்தாலும். இளைஞர்கள் மட்டுமல்ல, நடுத்தர வயதினரும் ஏன் வயதானவர்களிலும் இதைத் தவறாகப் பயன்படுத்துவோர் உள்ளனர். எனவே, இளைய சமூதாயத்தை மட்டும் குற்றப்படுத்த முடியாது. 

சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது பல இளைஞர்கள் உதவிட இந்த இணையம் தான் உதவியது. எங்கேனும் ஒரு விபத்து என்றால், இரத்தம் தேவைப்பட்டால், சமூக வலைத்தளங்களில் பதிந்துவிட்டால் போதும் உடனடியாக உதவிகள் பெறலாம். ஏழை மாணவ, மாணவியரின் கல்வி தொடர்வதற்குக் கூட இணையம் உதவுகிறது. ஏழைகளுக்கு அறுவைச் சிகிச்சையா? இணையத்தில் பதிந்தால் போதும் உடன் உதவிகள் குவிகின்றன.

கல்வித்துறைக்கு இணையம் மிகவும் உபயோகமாகத்தான் இருக்கின்றது. மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதவும், செயல் திட்டங்கள் செய்யவும் இணையம் உதவுகின்றது என்றால் மிகையல்ல. எதிலுமே நன்மையும் உண்டு, தீமையும் உண்டுதானே. எனவே, அன்னப்பறவை பாலைத் தண்ணீரிலிருந்து பிரிக்கும் என்று சொல்வது போல, இளைஞர்கள் தரம் பிரித்து அணுகினால் நன்மைகளே. இன்னும் எதிர்காலத்தில் நிச்சயமாக இணையம் நல்ல வழியில் செல்லும் இளைஞர்கள் நல்ல வழியில் அதை நடத்திச் சென்றால். அந்த நம்பிக்கை உள்ளது என்றாலும்...

அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் (பெண்களும் அடக்கம்) முகம் காட்டாமல் சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வளர்த்துக் காதல் கொலைகள் கூட நடக்கின்றன. மதத்தின் பெயரில் தங்கள் மதத்திற்கு ஆதரவாகவும், பிற மதங்களின் மீது காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதும், சாதிகளின் பெயரில் ஆதரவும், சாடல்களும் நடப்பதும், ஏன் சமீபத்திய உடுமலைப்பேட்டைக் கௌரவ கொலையைக் கூட ஆதரித்துக் குரல்கள் எழுந்ததைப் பார்த்த போதும், கேட்ட போதும் மனம் மிகவும் வேதனையுற்றது. இணையம் நம் நம்பிக்கையைப் பொய்யாக்கிவிடுமோ என்ற அச்சம். எனவே நாணயத்தின் இருபக்கம் போலத்தான் இணையமும் இளைஞர்கள் கைகளில் சிக்கி இருக்கின்றது. இது இணையம் இளைஞர்களைப் பார்த்து, “நான் நல்லவர்களுக்கு நல்லவன். கெட்டவர்களுக்குக் கெட்டவன்” என்று சொல்லுவது போல் இருக்கிறது.

(7)  தமிழ்மணத் தரவரிசையில் முன்னணியில் உள்ளீர்கள். விரைந்த உங்கள் வளர்ச்சி ரகசியம் என்ன?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்மணத் தரம் எல்லாம் பார்ப்பதில்லை. வலையுலகில் பல பெரிய எழுத்தாளர்கள், தமிழ்ச்சான்றோர்கள் இருக்க நாங்கள் இந்தத் தரத்திற்கு வந்திருக்கின்றோம் என்றாலே உங்களுக்குத் தெரியவில்லையா ஐயா/அண்ணா, தமிழ்மணம் எப்படி இயங்குகிறது என்று. அதில் பதிவுகளின் தரம் எல்லாம் யாரும் பார்ப்பதில்லை. கணினி, நம் தளங்களின் பார்வையாளர்கள், வாசிப்போரைக் கணக்கிட்டு ஏதோ ஒரு எண்ணைக் கொடுக்கின்றது அவ்வளவே. தமிழ்மணம் தரத்திற்கும், பதிவின் தரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனவே தமிழ்மணத்தை நாங்கள் திரட்டியாக, பலரும் பார்வையிட உதவுவதாகத்தான் எண்ணுகின்றோமே அல்லாமல் தரத்தைப் பற்றி எண்ணியது இல்லை. அதனால்தான் நாங்கள் எங்கள் தளத்தில் அதை இணைக்கவும் இல்லை.

(8)  தமிழ் வலைத்திரட்டிகளால் பயனுண்டா? வலைப்பக்க எழுத்தால் வருமானத்திற்கு வழி உண்டா?

தமிழ் வலைத்திரட்டிகளால் நிச்சயமாகப் பயனுண்டு. எங்கள் பதிவுகளுக்கானப் பார்வையாளர்களும், பின்னூட்டங்களும் தமிழ்மணம் திரட்டியில் இணைத்த பிறகுதான் அதிகமாகத் தொடங்கியது. இங்கு நாங்கள் நன்றியை நம் பதிவர் பகவான் ஜி அவர்களுக்குச் சொல்லிக் கொள்கின்றோம். அவர்தான் எங்கள் பதிவிற்கு முதல் வருகையாளர். வந்து தமிழ்மணத்தில் இணைக்கவும் சொல்லி வலைச்சித்தர் டிடி அவர்களையும் தொடர்பு கொள்ளச் சொன்னார். இணைத்துக் கொடுத்த டிடி அவர்களுக்கும் நன்றியை இங்குச் சொல்லிக் கொள்கின்றோம். இப்போது பல திரட்டிகள் வேலை செய்யவில்லை என்பது வருத்தமே.

வருமானத்திற்கு வழி செய்யலாம். நல்லதுதான்.  ஆனால் கூகுள் தேவதையின் பார்வை தமிழ்வலைப்பக்கம் விழ வேண்டுமே!

(9)  உங்கள் குடும்பம், பிறதுறை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்



துளசி : என் மனைவி உஷா குமாரி ஆங்கில ஆசிரியையாகப் பணி புரிகிறார். மூன்று குழந்தைகள்.  மூத்த மகனின் பெயர் அருண் தில்லைஅகத்து. 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதியுள்ளான். இரண்டாவது மகன் சரவண விநாயக் தில்லைஅகத்து. 10 வகுப்புப் பொதுத் தேர்வு எழுதியுள்ளான்.  மூன்றாவது மகள். பெயர் அபிராமி தில்லைஅகத்து.  இந்த வருடம் 9 ஆம் வகுப்பு முடித்திருக்கிறாள்.

எனது ஆசிரியப் பணியில் பல நிகழ்வுகள் நடந்ததுண்டு. அந்நிகழ்வுகளை நான் அவ்வப்போது எங்கள் வலைத்தளத்தில் பதிவதுண்டு. நான் ஆசிரியராய் இருப்பதில் மிகவும் மகிழ்வடைகிறேன். மாணவ மாணவிகளும் எனது குழந்தைகளைப் போலத்தான். அவர்கள் எல்லோரும் எத்தனை வருடங்கள் ஆனாலும் என்னொடு தொடர்பில் இருப்பதும், அன்பு காட்டுவதும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தரும் நினைவுகளாகும். 

குறிப்பாக ஒரு நிகழ்வை இங்கு சொல்லலாம். சென்ற வருடம், நான் +2 பொதுத்தேர்வு ஆய்வாளராக வேறு ஒரு பள்ளிக்குச் சென்றிருந்த போது, அன்று தேர்விற்கு வர வேண்டிய ஒரு பெண் வரவில்லை. அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியை பதட்டப்பட்டார்.  நான் அவர்களைச் சமாதானப்படுத்தி, ½ மணி நேரம் கொடுக்கப்படும் இல்லையா அதுவரை பார்ப்போம் என்று சொன்னேன்.  ஆனால், அதன் பின்னும் அப்பெண் வரவில்லை. ஆசிரியை ஒருவர் அவரது வீட்டிற்கு அழைத்துக் கேட்டார். அப்பெண்ணின் தந்தை அவளைப் பள்ளியில் விட்டுவிட்டுச் சென்றதாகச் சொன்னார்.  பதட்டம் கூடியது. பின்னர் அவளது தோழியைக் கேட்ட போது, அவள் பள்ளிவாசலில் இறங்கிவிட்டுத் தோழியிடம் பின்னால் வருவதாகச் சொல்லித் தோழியைப் பள்ளிக்குள் செல்லச் சொல்லியிருக்கிறாள். என்ன செய்ய என்று யோசித்து, அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் சொல்ல பின்னர் தெரிந்தது, அவள் காதலன் என்று சொல்லப்பட்ட ஒரு பையனுடன் சென்றுவிட்டதாக. அந்தப் பெற்றோரை நினைத்தும், அப்பெண்ணை நினைத்தும் ஒரு பக்கம் கோபமும், மறுபக்கம் வருத்தமும் மேலிட்டது. குழந்தைகளை நண்பர்களாகப் பாவித்து, குறிப்பாகப் பருவ வயதுப் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகளைப் பெற்றோர் மிகவும் அன்புடனும், கருத்துடனும், நண்பர்களைப் போல பழகி வளர்க்க வேண்டும் என்பதை ஒரு ஆசிரியனாக இங்குச் சொல்லிக் கொள்கின்றேன். 

கீதா : கணவர் பொறியியல் துறையில் பேராசிரியர். ஒரே மகன், இரு பெண்கள்.  மகன் கால்நடை மருத்துவர்.  பெண் குழந்தைகள், 7 வயது நிறைவடைந்த, நாலுகால் செல்லங்கள்  கண்ணழகி, ப்ரௌனி.  இவர்களும் எங்கள் குடும்பத்து நபர்கள் என்பதால் இவர்களையும் சொல்கின்றேன்.

(10)     புதிதாக வலைப்பக்கம் தொடங்குவோர்க்கு உங்கள் வழிகாட்டு உரை என்ன?

ஐயா/அண்ணா, எங்களிடம் இந்தக் கேள்வியா!!? நாங்கள் வலையுலகில் அடி எடுத்து வைத்து 2 ½ வருடங்களும், 3 மாதங்களுமே நிறைவடைந்துள்ளது. நாங்களே தவழ்ந்து கொண்டுதான் இருக்கின்றோம். நாங்கள் என்ன அனுபவ உரை, வழிகாட்டு உரை சொல்ல முடியும் என்று தெரியவில்லை. ம்ம்ம் நாங்கள் எழுத நினைத்தக் காலத்தில் எழுத இயலவில்லை. எங்களைப் போல பலரும் எழுத நினைத்து எழுத இயலாமல் போயிருக்கலாம். எல்லோராலும் பத்திரிகைகளுக்கு எழுதிட முடியாது.  நாங்களும் அனுப்பி அது வெளிவராமல், மீண்டும் திரும்பப் பெற்ற அனுபவங்களும், காலங்களும் உண்டு எங்கள் இருவருக்குமே.

அப்படியிருக்க, இன்று வலைப்பூவில் நமது எண்ணங்களை, கதைகளை, கட்டுரைகளைப் பதிந்து, சிறிய வட்டம் என்றில்லாமல், இந்த உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களைப் பார்வையிட வைக்கும் அளவிற்கு வலைத்தளம் உதவுகிறது.  அதுவும் எந்தவிதச் செலவும் செய்யாமல். வலைத்தளங்களில் பல பெரிய எழுத்தாளர்களும் இருக்கின்றார்கள். வலைத்தளத்தில் எழுதிப் பெரிய எழுத்தாளர்கள் ஆனவர்களும் இருக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல. நமக்கு நாமே ராஜா. நம் இதழ். எனவே எழுதுவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் நல்ல ஆக்கப்பூர்வமானப் படைப்புகளைப் படைக்கலாம். பலரைச் சென்றடையும். அரியதொரு வாய்ப்பு. எழுத்தார்வம், வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருமே இந்த அரிய வாய்ப்பை மிகவும் பயனுள்ளதாகப் பயன்படுத்தித் தமிழ் மொழியும், தமிழ்சமூகமும் வளர ஆவன செய்யலாம். எனவே, இளைஞர்களே வாருங்கள் என வரவேற்கின்றோம். 

எங்களுக்கு இந்த வாய்ப்பினை அளித்த திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல.