செவ்வாய், 16 ஜூன், 2026

அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 4

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும். 

============================================================================

பீமநகரி - 2  பண்டைய காலத்தில் வீமனசேரி - வழக்கில் பீமனேரி

சென்ற பதிவில்அதோ தெரிகிறதா ஊர்? அதுதாங்க பீமநகரி கிராமம். இங்க சுத்தி இயற்கையைப் பார்த்துக் கொண்டே ஆசுவாசப்படுத்திக்குவோம். அப்புறம் ஊருக்குள்ளாற போவோம்...என்று படத்தோடு சொல்லியிருந்தேன் இல்லையா...இப்போது நாம் நடக்கத் தொடங்குவோம் சரியா... 

இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், நீண்ட நெல் வயல்களும் தென்னந்தோப்புகளும் நிறைந்த சூழலில் அமைந்துள்ளதால், இந்த ஊர், இந்த ஊர் மட்டுமல்ல சுற்றி இருக்கும் அத்தனை ஊர்களும் (ஏகப்பட்ட ஊர்கள் இருக்கின்றன. அத்தனை ஊர்களுக்கும் சென்று படம் பிடித்து இங்கு சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். வெள்ளம் வந்ததால் போகமுடியாமல் ஆனது.) எப்போதும் பசுமையாகவும், கண்ணிற்குக் குளுமையாகவும் இருக்கும். நாஞ்சில் பகுதி. சுற்றி ரசித்துக் கொண்டே செல்வேன். சென்றேன்.

கிராமத்திற்குள் நுழையும் முன் பாருங்கள் இடப்புறம் கிராமத்தின் வெளியில் வயலில் வீடுகள் வரத் தொடங்கிவிட்டன! 

இப்படம் கிராமத்தின் தெருவிற்குள் நுழையும் முன் இதற்கு அடுத்தாப்ல இருக்கும் படத்தில் இடப்புறம் உள்ள வயலின் மூலையில் இருந்து எடுத்தேன்...பச்சையையும் மலைகளையும் காட்ட!

பீமநகரி கிராமத்திற்குள் நுழைந்தாயிற்று....இடப்புறம் தங்க வர்ணம் பூசப்பட்ட தூண்கள் தெரிகின்றன இல்லையா...அதுதான் இக்கிராமத்தின் அடையாளமாகத் திகழும் கோவில். படங்கள் கீழே...

பாலபரமேஸ்வரி அம்மன் கோவில் 

நான் சென்றிருந்த போது கோவிலுக்குள் யாரும் இல்லாததால் அனுமதி கேட்காமல் படம் எடுக்க மனம் ஒப்பவில்லை. அம்மனைச் சுற்றியிருந்த கிரில் கம்பிக் கதவும் மூடியிருந்தது. பீமநகரிப் பகுதி பற்றி எழுதத் தொடங்கியதில் இருந்தே சக்தி ரூபமான வடிவத்தின் படம் இல்லையே மக்களுக்குக் காட்டிட என்று, மனதில் ஆழமாகத் தோன்றிக் கொண்டே இருந்தது அந்த வடிவம். 


பாலபரமேஸ்வரி அம்மன்  -  சுப்பு அக்காவிற்கு நன்றி

இப்பதிவை நேற்று எழுதிக் கொண்டிருந்த போது, எங்கள் ஊரைச் சேர்ந்த இக்கிராமத்தில் இருந்து பின் திருமணத்திற்குப் பின் அங்கிருந்து புலம் பெயர்ந்து சென்னையில் பல வருடங்களாக இருக்கும் சுப்பு அக்காவிடம் (இவருடைய அப்பா சுப்பையா வாத்தியார் அம்பாளை பூஜித்து வந்தவர்) நான் போன போது எடுக்க முடியவில்லை என்பதைச் சொல்லி "அக்கா, பீமநகரி அம்மன் படம் எடுக்க அனுமதி உண்டா? நீங்க எடுத்திருக்கீங்களா? படம் இருக்கா? இருந்தால் அனுப்புங்களேன்" என்ற செய்திக்கு

"கீதா இன்னிக்கு நான் பீமனேரி கோவில் பூஜைக்கு வந்திருக்கேன்." என்ற செய்தியுடன் மேலே உள்ள பால மரமேஸ்வரி அம்மன் படமும் வர - "என்னை ஊர் உலகம் அறியட்டும்" என்ற ரீதியில்??!!!..- என் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை! 

உடனே அக்காவை அழைத்துப் பேச, அவரும் சொன்னார் "ரொம்பவே ஆச்சரியமா இருக்கு கீதா" என்று! இத்தனைக்கும் அவர் அங்கு சென்றிருப்பார் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் பயணம் பற்றியும் தெரியாது எனக்கு. எனக்கு ஆல்ஃபா மன தியானத்தில் நம்பிக்கை உண்டு!

பீமநகரியின் அடையாளமாகத் திகழ்வது இங்குள்ள பாலபரமேஸ்வரி அம்மன் கோவில். இது மிகவும் சக்திவாய்ந்த கோவிலாகச் சொல்லப்படும். கிராமத்து மக்களால் ஆராதிக்கப்படும் கிராமத்துக் கோவில். (அரசின் கீழ் அல்ல) நாங்கள் சின்ன வயதில் விடுமுறை நாட்களில் கிராமத்திலிருந்து கூட்டுச் சேர்ந்து ஒரு குழுவாகச் செல்வதுண்டு.  

குறிப்பாக பௌர்ணமி நாட்களில் ஆடி, தை மாதங்களில், இங்கு சிறப்பு பூஜைகள்,  வழிபாடுகள் விமரிசையாக நடைபெறும். நாங்கள் சென்றால் அங்கு கோயிலில் பிரசாதமாக மதியச் சாப்பாடு எல்லாம் சாப்பிட்டுவிட்டுதான் வீட்டுக்கு வருவோம். போவதே அதுக்குத்தானே!

கூட்டத்தோடு கோவிந்தாவாக ஆளுக்கொரு ஸ்ருதியில் அயிகிரி நந்தினியைப் பாடிவிட்டு, அதன் பின் record player album போன்று என்னுடைய standard பாடல்களான, நானொரு விளையாட்டு பொம்மையா, ஸ்ரீ சக்கர ராஜ சிம்ஹாச, அம்பா நீ இரங்காயெனில், அருள வேண்டும் தாயே பாடிவிட்டுதான் கிளம்புவேன்! பின்ன அம்பாள் கொடுக்கும் பிரசாதத்திற்கு நியாயம் செய்யணுமில்லையா! 

அம்பாள் வாய்ஸ் - புளிச்சுப் போச்சு திரும்பத் திரும்பக் கேட்டு. வேற பாட்டு பாடேன்! 

என் வாய்ஸ் - சட்டில இருந்தாதானே!

சுற்றுவட்டார மக்கள் மட்டுமின்றி, அந்த ஊரைச் சேர்ந்த ஆனால் தற்போது வெளியூர்களில் வசிப்பவர்களுக்கு இது ஒரு முக்கிய 'குலதெய்வ' வழிபாட்டுக் கோயில். 

தெருவில் நுழைந்து கோயிலை அடைவதற்கு முன் வலப்பக்கம் கோயில் குளம். எதிரில் ஒரு கோயில் தெரிகிறது இல்லையா...அந்தச் சாலை வழியாகத்தான் சுற்றி பார்த்துக் கொண்டே நம்ம வீட்டுக்குப் போய்விடலாம். 

 அழகான விவசாய பாசனத்திற்கான பம்ப் செட் கிணறு. மழை வெள்ளத்தில்  நிறைந்திருக்கிறது. 
கிராமத்திற்குள் சென்ற சாலை வழியாகவே வெளியில் வரும் போது இடப்புறம் உள்ள தென்னந்தோப்பில், கொட்டிய மழையில் தேங்காய்கள் விழுந்து கிடக்க அதை ஒருவர் எடுத்து வெளிப்புறச் சாலையில் அங்கு போட்டுக் கொண்டிருந்தார். இச்சாலை வழி நெடுஞ்சாலைக்கும் செல்லலாம். திருப்பதிசாரம் கிராமத்திற்கும்...

தோப்பின் இப்பக்கம் சாலை...தேங்காய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இச்சாலை வழியாகத்தான் நடை...

அப்போது மிக மிகச் சிறிய கிராமமாக 10-12 வீடுகள் மட்டுமே கிராமம் இப்போது  பீமநகரி ஊராட்சியாக வளர்ந்துள்ளது. Extension என்றெல்லாம். அதை இச்சாலை வழியே போகும் போது பார்க்கலாம். 

சாலையின் வலப்புறம் வயல்வெளிகள்...

சில அடி தூரத்தில் வித்தியாசமான பெயருடன் ஒரு விநாயகர் கோயில் உண்டு. பதிவு பெரிதாகிவிட்டதால், அதை அடுத்த பகுதியில் பார்ப்போமா?


-------கீதா 

16 கருத்துகள்:

  1. நாஞ்சில் என்கிற வார்த்தைக்கு ஏதும் விசேஷ பொருள் உண்டா கீதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், ஏர்க்கலப்பை என்பதுதான் அதன் பொருள். எங்கள் ஊர்ப்பகுதி முழுவதும் வயல்கள் பார்த்தீங்கல்லியா. நீரோடைகளும்...நீர்வளமும்...எனவே விவசாயம் மேலோங்கிய பகுதி. அதனால் தான் அங்கு விவசாய கல்லூரியின் சில துறைகளும் இயங்குகின்றன. அது பற்றியும் வரும். அவை வீட்டருகில் தான், ஸ்ரீராம்.

      நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  2. வயலில் வீடுகள்...  இப்போதைக்கு ஆறேழு வீடுகள் கண்ணில் படுகின்றன.  வரும் காலங்களில் இவை இன்னும் பெருகும்!!  முதலில் ஒருவர் வழி காட்டுவார்.  பிள்ளையார் சுழி போடுவார்.  மற்றவர்கள் பின்பற்றுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் அப்பகுதியும் வரும் பாருங்க...இனிதானே இங்கிருந்து நடக்கப் போகிறோம்...இந்த வயல் வீடுகளின் பின்பக்கம் காலனியே இருக்கிறது...அந்தப் புதிதாக உருவான எக்ஸ்டென்ஷன் மற்றும் சாலையின் படம் வரும்....

      கீதா

      நீக்கு
  3. சாதாரண நிலையில் படம் எடுத்தாலே இது மாதிரியான மலைகள் படத்தில் பார்க்கும்போது மேகங்களோ என்று எண்ணமயக்கம் காட்டும்.  பனி மூட்டம் நடுவில் இருந்தால் இன்னும் சுத்தம்.  இங்கு நன்கு தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று வானமும் கொஞ்சம் பளிச். அதற்கு முந்தைய தினம் வரை மலைகள் எதுவுமே தெரியவில்லை ஸ்ரீராம் மேகம் கவிழ்ந்து மழை பொழிந்து கொண்டிருந்ததே! காலநிலை பளிச் என்றானதும்தான் சுற்றி வந்தேன்.

      கீதா

      நீக்கு
  4. சாலைகள் மிகக் குறுகல்.  பெரிய வண்டி எதுவும் உள்ளே வரமுடியாது போல!  கோவிலும் ஏதோ வீடு போல இருக்கிறது.  அத்தனூண்டு தெருவில் கோவிலுக்கு எதிரே ஒரு வீடு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ட்ரக், ட்ராக்டர் வர முடியும் ஸ்ரீராம். வெளியூர்களில் இருந்து காரில் செல்பவர்கள் நுழைந்து அங்குதானே நிறுத்துகிறார்கள். கொஞ்சம் பெரிய வண்டி போகும் லாரி போகுமா என்றால் சந்தேகம்தான்.

      கோவில் வீடு போன்றதுதான் ஸ்ரீராம். அது கிராமத்து மக்களின் குடும்பங்கள் நடத்தும் கோயில் இல்லையா...சாதாரண நாட்களில் கொஞ்ச நேரம் தான் திறந்திருக்கும். காலை 7.30 - 9.30 வரை...மாலை 6-7.30 வரை. நான் சென்ற போது மணி 9.30 யைக் கடந்து விட்டது. அதனால்தான் அங்கு யாரும் இருக்கவில்லை...அம்பாளைச் சுற்றியிருந்த க்ரில் கதவும் மூடியிருந்தது. ஆமாம் கோயிலுக்கு எதிரில் வீடு.. இக்கோயில் கிராமத்தார் நடத்தும் கோயில்...

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. சுப்பு அக்கா சம்பவம் ஆச்சர்யம்.  என்ன ஒரு இணைநிகழ்வு!  அம்மன் அருள் அகிலமெல்லாம் விளங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்....நேற்று நடந்தது. எனக்கு இன்னமும் அந்த ஒரு ஆச்சரியமும் ஒரு உணர்வும் இருக்கிறது. பதிவில் இன்று என்று எழுதியிருந்தேன்...அதன் பின் பதிவு வெளியாகும் போது நேற்று ஆகிவிடும் இல்லையா அதனால் அப்படி மாற்றினேன்.

      கீதா

      நீக்கு
  6. அம்பா நீ இறங்காய்?  அம்பா நீ இரங்கால் எனில் புகலேது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பா நீ இரங்காயெனில் புகலேது - நான் கரெக்ஷன் செய்து கொண்டு வந்த போது இரவு கரன்ட் போய்விட்டது...சேமிப்பாகியிருக்கவில்லை. நான் படுத்துவிட்டேன்....ஷெட்யூல் செய்திருந்தேன் கரெக்ஷன் பார்த்த போது...காலையில் 5 மணிக்குப் பிறகுதான் நினைவு வந்தது ஓ பதிவு வெளியாச்சோ என்று ஓப்பன் செய்தால் அப்படியே இருந்தது...ஆனால் வெளியாகியிருந்தது. சரி என்று கரெக்ஷன் செய்தேன்...அப்டேட் ஆகிவிட்டது....அதன் பின் உங்கள் கமென்ட்ஸ் பார்த்தேன்...பப்ளிஷ் பண்ணும் முன் மீண்டும் கரன்ட் போய் லோ வோல்டேஜ்...

      கையில் கட்டைவிரல் band போட்டுக் கொண்டு தட்டச்சுவதும் சிரமமாக இருக்கிறது...அந்த band எசகு பிசகாக கீஸை தட்டிவிடுகிறது!!!

      இப்ப கொஞ்சம் முன்னர்தான் மீண்டும் கரன்ட் போய் சரியாக வந்திருந்ததா உடனே பப்ளிஷ் பண்ணி பதில் கொடுத்துவிடுவோம் மீண்டும் கரன்ட் போய்விட்டதுனா என்று...

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. அம்பாள் வாய்ஸ் - புளிச்சுப் போச்சு திரும்பத் திரும்பக் கேட்டு. வேற பாட்டு பாடேன்!

    என் வாய்ஸ்  :  சொல்லிக்கொடேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா!!! அட உங்கள் வாய்ஸ் சூப்பர் எனக்குத் தோணலை பாருங்க...ரசித்தேன் ஸ்ரீராம்.....நல்ல பதில் வாய்ஸ்!

      கீதா

      நீக்கு
  8. அருமை.  படங்கள் எல்லாம் இயற்கை எழில் கொஞ்சுகிறது.  எந்து ஒரு இடம்தன்னே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே!!! எந்து ஒரு இடம் அல்லே!!!

      மலையாளம் வெப் சீரிஸ் பார்த்து மலையாளம் பழகிடுச்சு போல!!!!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு