கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது
உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான்
என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால்,
யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
=============================================================================
முந்தைய பதிவு <=======
இவை கூட்டமாக நீந்தும் என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தது நினைவில் இருக்கலாம். படமும் பகிர்ந்திருந்தேன். என்றாலும், இனப்பெருக்கக் காலத்தில் பொதுவாகச் ஜோடியாக நீந்தும். (மற்ற சமயங்களில் கூட்டமாக நீந்தும்) கூடுகட்டும் அழகைப் பார்க்கணும் ரொம்ப சுவாரசியமாக இருக்கும். கொஞ்சம் கஷ்டப்படும். (காணொளியில் குச்சி பொறுக்கிக் கொண்டு போவது இருக்கும்)
இனப்பெருக்க காலம் பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை என்றாலும் நாம் நாட்டில் இரு பருவமழைக்காலங்களில் நீர் நிரம்பும் போது இனப்பெருக்கம் பெருகும். தாவரங்கள் அடர்த்தியா இருக்கற இடத்துல கூடு கட்டும் என்றாலும் தோதா இடம் கிடைக்கலைனா கொஞ்சம் அடர்த்தி இல்லாத இடங்களிலும் இவை தங்களின் இனப்பெருக்கத்தைத் தொடங்குவதைப் பார்க்க முடிந்தது. பாவம், அதுக்கான இடம் குறைந்து வருகிறது.
நாமக்கோழிகள் தங்களின் கூடுகளை, நீரிலேயே அமைப்பதில் வல்லவை என்று தெரிகிறது. நீர்நிலைகளின் ஓரங்களில் காய்ந்த தாழை, நாணல் புற்கள், நீர்ச்செடிகள், கிளைகள் மற்றும் இலைகளைக் கொண்டு தண்ணீரின் மேல் பெரிய மேடை போன்ற கூட்டைக் கட்டுகின்றன. இந்தக் கூடு பொதுவாக நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கும் அல்லது நீருக்குள் இருக்கும் வலுவான செடிகளின் மேல் தாங்கி நிற்கும். நீர் மட்டம் உயர்ந்தால், கூடு மூழ்கிவிடாமல் இருக்கவும் முட்டைகள் விழுந்துவிடாமால் இருக்கவும், இவை கூட்டின் உயரத்தை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் திறமை வாய்ந்தவை.
ஆண் மற்றும் பெண் நாமக்கோழிகள் இரண்டுமே மாறி மாறி முட்டைகளை அடைகாக்கும். சுமார் 21 முதல் 24 நாட்கள் வரை இந்த அடைகாத்தல் நீடிக்கும்.
ஒரு பெண் நாமக்கோழி பொதுவாக ஒரு முறையில்
6 முதல் 10 முட்டைகள்வரை இடுமாம். இந்த முட்டைகள் லேசான பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில்,
கரும்புள்ளிகளுடன் காணப்படும். ஆனால் என்னால் பார்க்க முடியாததால் படங்கள் எடுக்க முடியவில்லை.
காவல்
முட்டையிட்ட பிறகு இந்தத் தம்பதிகள்! தங்களின் கூட்டைச் சுற்றியுள்ள பகுதியை தீவிரமாகப் பாதுகாக்கும். அந்த எல்லைக்குள் எந்தப் பறவையோ அல்லது எதிரியோ வந்தால் ஆக்ரோஷமாகத் தாக்கி விரட்டும்.
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர சுமார் 21 முதல் 26 நாட்கள் ஆகும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் பார்ப்பதற்குப் பெரிய பறவைகளைப் போலக் கறுப்பாக இருக்காது. கறுத்த சிறகுகளுடனும், அவற்றின் தலைப் பகுதியில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு கலந்த மென்மையான முடிகளுடனும் (Fluff) பிறக்கின்றன. அவற்றின் அலகு (மூக்கு) நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். (இதைக் காணொளியில் காணலாம் ஆனால், கூடியவரை என் கேமராவின் திறனுக்கேற்ப எடுத்திருக்கிறேன்)
முட்டையிலிருந்து வெளிவந்த சில நாட்களிலேயே (பொதுவாக சில மணி நேரங்களிலேயே) குஞ்சுகள் தண்ணீரில் நீந்தத் தொடங்கிவிடும். எனினும், ஆரம்ப நாட்களில் அவை உணவிற்காகத் தாய்-தந்தையைத்தான் நம்பியிருக்கும்.
சுமார் 30-60 நாட்களில் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கி தாங்களாகவே முழுமையாக உணவு தேடப்பழகி, சுதந்திரமாக வாழத் தொடங்கிவிடுகின்றன. இறகுகள் முளைத்து, தோராயமாக 55 முதல் 60 நாட்களில் அவற்றால் பறக்க முடியும். Fledgling துள்ளும் பருவம்.
இளம் பருவம் (Juvenile), முட்டையிலிருந்து வெளிவந்ததில் இருந்து தோராயமாக 3 முதல் 4 மாதங்கள் முன் வரை. இப்பருவத்தில் அவற்றின் கழுத்து மற்றும் மார்புப் பகுதி வரை சாம்பல் கலந்து வெள்ளை நிறத்தில் இருக்கும்.
3 முதல் 4 மாதங்களில் மங்கலான இளம் பருவ இறகுகள், முதிர்ந்த பறவைகளின் அடர் சாம்பல் அல்லது கருப்பு நிற இறகுகளாக மாறத் தொடங்குகின்றன. (Plumage)
இதற்கே உரிய தனித்துவமான வெள்ளை நிற அலகு மற்றும் நெற்றிக் கவசம் (Facial Shield - நாமம்), சுமார் ஒரு வயதாகும் வரை முழுமையாக வளர்ச்சியடைவதில்லை. அவை வளர்ந்து முதிர்ச்சியடையும் போதுதான் மெல்லத் தோன்றத் தொடங்குகிறது. அது முழுமையான அளவையும், நல்ல பளபளப்பான வெள்ளை நிறத்தையும் எட்டுவதற்குச் சரியாக ஒரு முழு வருடம் ஆகுமாம்.
Brood Reduction - குஞ்சு எண்ணிக்கைக் குறைப்பு என்பது நாமக்கோழிகளின் இனப்பெருக்கத்தில் பரவலாகக் காணப்படும் கடுமையான இயற்கை நியதி. குஞ்சுகள் பிறந்த பிறகு, பெற்றோர் இரண்டுமே அவற்றுக்கு உணவளிக்க மிகவும் சிரமப்படும். உணவுப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், தங்களுக்குக் கட்டுப்படும் மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும் குஞ்சுகளுக்கு மட்டுமே பெற்றோர் உணவளிக்கும். சோம்பலாக இருக்கும் அல்லது பலவீனமான குஞ்சுகளைப் பெற்றோர் சில சமயம் கொத்திக் தள்ளிவிடும். இதன் மூலம் ஆரோக்கியமான குஞ்சுகள் மட்டும் பிழைப்பதை அவை உறுதி செய்கின்றன.
பல சவால்களை எதிர்கொண்டுதான் தங்கள் வாழ்க்கையை நீந்திக் கடக்கின்றன!
நாமக்கோழியைப் பற்றி தெரிந்து கொண்டோம் இல்லையா....இனி அடுத்ததாகச் சில நாட்களில் வேறு ஒரு பறவையைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
இக்காணொளியில் அவை கூடு கட்டுவதையும் அடை காப்பதையும் குஞ்சுகளையும் பார்க்கலாம். முடிந்தால், விருப்பமிருந்தால் பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக