ஞாயிறு, 29 ஜனவரி, 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 5 - தெய்வத்திண்டெ ஸ்வந்தம் நாட்டினிலே!!

தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும் - ரிதம் படப் பாடல் நதியே நதியே - கவிஞர் வைரமுத்து
வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு - ரிதம் படப் பாடல் நதியே நதியே - கவிஞர் வைரமுத்து
நாங்கள் பிஞ்சில் பழுத்தவர்கள் அல்லர்
 உன்னை மறைத்துக் கொண்டாலும் நாங்கள் கண்டு விடுவோமே
"கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இந்த வேரில் பழுத்த பலா" (பாரதிதாசன்), "வேரோடு பலாக்கனி பழுத்துத் தொங்கும் வெள்ளாடு அதன் மீது முதுகு தேய்க்கும்" (காசி ஆனந்தன்)
பூவே செம்பூவே என் வாசல் உன் பூங்காவனம் - கவிஞர் வாலி

இயற்கை எனும் இந்த இளைய கன்னி இல்லாமல் வாழ்ந்திட இயலுமோ
போகும் பாதை தூரமில்லை - (பாடல் - தமிழச்சி தங்க பாண்டியன்)
மேகம் கருக்குது மழை வர பாக்குது வீசுது தென்றல் காத்து - (பஞ்சு அருணாச்சலம்)
மழை வருது மழை வருது குடை கொண்டுவா - (புலமைப் பித்தன்)
என்னை உண்ணுங்கள் உங்கள் நரம்புகள் வலுவடையும்
என் பெயர்தான் ஜாதிக்காய்...தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய் ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங் குலக்கா யருந்துவர்க்குக் கூறு - பழம் பெரும் பாடல்
நாங்கள் ரெடி! தோட்டத்திற்குச் செல்வதற்கு
நடந்தால் நதி, வீழ்ந்தால் அருவி
என்னுள் மருதாணி வைத்தது யார்!!

பூவ பூவ பூவ பூவ பூவே(கவிஞர் பழனிபாரதி) - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்துக் குலுங்குகிறாய்


வானுயர ...எங்கள் உயரம் உங்கள் கோன் உயர்வாரா?!வெள்ளை ராணிகள்

என்னைப் போல் எல்லோரும் எப்போதும் இருங்கள் - வாடா மல்லியாய்
உன் அழகை வர்ணித்திட முடியுமோ?! வார்த்தைகள் இல்லையே! நான் கவிஞனும் இல்லை
விண்ணிலிருந்து மண்ணிற்கு வரும் லயம் தவறா தாளத்துடன் மழை எனும் இசை
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு...(கவிஞர் வைரமுத்து)

---------கீதா
(கேரளத்தில் பயணித்த போது எடுத்த படங்கள். ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!தொடரும்.. மை க்ளிக்ஸ்)
வியாழன், 26 ஜனவரி, 2017

மக்களால், மக்களுக்காக......!!


நம் நாடு குடியரசு நாடாகி, சனநாயக நாடு என்ற பெருமை பெற்று இன்றோடு 68 வருடங்கள் ஆகிறது. எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்! இப்படிச் சொன்னாலும், மனதினில் பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றது. சுதந்திரம் பெற்று, குடியரசு நாடாகி நாம் என்ன சாதித்தோம்? என்பதை நினைத்துப் பார்த்தால், முதலில் தோன்றுவது எதிர்மறைதான் என்றாலும் நேர்மறை என்று முதலில் தோன்றுவது நாம் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்திருப்பதுதான். அடைந்திருந்தாலும், நாம் இன்றும் வளர்ந்துவரும் நாடுகளின் பட்டியலில்தான் இருக்கின்றோமே அல்லாமல் வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம்பெறவில்லை.

ஆங்கிலேய ஆட்சியை விரட்டியடிக்க சுதந்திரப் போராட்டம் நடத்தப்பட்டது.. சுதந்திரம் பெற்றோம் என்று சொல்லிக் கொண்டோம். நம் நாட்டின் சொத்தை எல்லாம், அரிய பொக்கிஷங்களை எல்லாம் ஆங்கிலேயர்கள் சுரண்டி, களவாடிச் சென்றுவிட்டார்கள் என்று அவ்வப்போது குறைபட்டுக் கொள்கின்றோம். சுதந்திரம் பெற்ற பின் இதையேதானே நம்மை இப்போது ஆள்பவர்களும் செய்கிறார்கள்? அப்போது ஆங்கிலேயக் கொடி பறந்தது. இப்போது நம் இந்தியக் கொடி பறக்கிறது அவ்வளவுதான். வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்போது அந்நியர்கள். இப்போது நம்மவர்களே நம்மைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது நம்மை அடிமைகள் என்று சொல்லிக் கொண்டோம். அதே அடிமைத்தனம்தான் மறைமுகமாக இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அன்று வெள்ளையர் ஆண்ட போது நமது உரிமைக்காகப் போராடினோம், சரி. இப்போது நம்மவர்கள் ஆளும் போதும் நமது அடிப்படைத் தேவைகளைக் கூடப் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. மக்களுக்காக என்று சொல்லிக் கொண்டு ஆட்சி செய்பவர்கள் மக்களைக் கருத்திற் கொண்டிருந்தால் நாம் போராட வேண்டியத் தேவையே இருந்திருக்காதுதான். நம் ஒவ்வொரு நாள் வாழ்வியலிலும் ஊடறக் கலந்துள்ள ஊழலையும், கலப்படத்தையும் கூடக் கேள்வி கேட்காமல், உரிமைக் குரல் எழுப்பாமல் அதையும் கடந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

அப்போது சுதந்திரம் வேண்டும் என்று போராடினோம். அந்நியர்கள் ஓடினார்கள். இப்போது நம்மை ஆள்பவர்களை எங்கு துரத்துவது? என்னெல்லாம் சுரண்டப்படுகிறது, என்னவெல்லாம் நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குக் கறுப்புச் சந்தையில் கைமாறுகின்றது என்பதெல்லாம் நமக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், நாம் கேள்விகள் எழுப்புவதில்லை.

அன்று நேரடியாக ஆங்கிலேயர் ஆண்டார்கள். இன்று பல பன்னாட்டுக் கம்பெனிகள் நமது உணவிலிருந்து, விவசாயம், மருத்துவம் என்று எல்லாத்துறைகளிலும் ஆண்டு கொண்டிருக்கின்றன. அன்று ஆங்கிலேயன் பிரித்தாளும் சதியாகச் சாதியைத் தூண்டினான் என்றோம். இப்போது அது இன்னும் வலுவாகியிருக்கிறது. சுதந்திரம் பெற்று, குடியரசாகி என்ன மாற்றம் நிகழ்ந்தது?

குண்டூசியிலிருந்து நாம் உடுத்தும் ஆடைகள் வரை, கணினி எல்லாமே அந்நியப் பொருட்கள் கலந்தவைதான். குடிக்கும் பால் கலப்பினப்பாலாகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆழமாக ஊடுருவியிருக்கும் இதனை ஒரே நாளில் களைந்திட இயலாது. அதுவும் கலப்பினப் பாலை மீண்டும் நம் நாட்டுப் பாலாக்க வருடங்கள் ஆகலாம். பேசுவது போல் நடைமுறைப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. நம் நாடு அந்தளவிற்குத் தன்நிறைவு அடையவில்லை, ஏனென்றால் நாம் சுயசார்புப் பொருளாதாரத்தைக் கொஞ்சமேனும் கூட நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை.

இப்போது அதன் விழிப்புணர்வு வந்திருக்கிறது. இப்போது அதையும் உட்படுத்தித்தான் மக்கள் முழக்கமிட்டார்கள். முழக்கமிட்ட இளைஞர்களும் சரி, மக்களும் சரி வெளிநாட்டுப் பானங்களை, உணவுப் பொருட்களை புறம்தள்ளுவார்களா என்பது கேள்விக்குறியே! பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுநாள் வரை கேட்கவேண்டும், குரல் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கேட்க முடியாமல் உள்ளத்தில் புதைந்து கிடந்துப் புழுங்கியவைதான் வெடித்துள்ளது. அதன் காரணமாக மக்கள் விழிப்படைந்துள்ளார்கள், இனி ஏமாற மாட்டார்கள், ஊழல்களுக்கு எதிராகக் கேள்விகள், குரல்கள் எழுப்புவார்கள் என்ற நம்பிக்கை துளிர்த்தாலும், இனியும் அனுமதிக்கப்படுமா? இல்லை அதிகாரத்தின் கை ஓங்கியிருக்குமா? மக்களுக்காக என்று சொல்லும் அரசியல்வாதிகள் மக்களின் கொந்தளிப்பையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டால் நல்லது.

நாம் மாற்றம் வர வேண்டும் என்று சொல்லுகின்றோம். நாமும், தனிநபராகத் தினமும் சந்திக்கும் சில ஏமாற்றங்களுக்கோ, அநீதிக்கோ கூட கேள்விகள் கேட்பதில்லை. அப்போது எப்படி மாற்றம் மலரும்? 

இந்தக் குடியரசுதின நாளில் நமது குடியுரிமையை நிலைநாட்ட சிந்திக்கத் தொடங்குவோம்! எல்லோருக்கும் எங்கள் குடியரசு தின வாழ்த்துக்கள்!

(இன்று சாக்லேட்டுகளுக்குப் பதில் நம் நாட்டு இனிப்புகளாகிய கடலைமிட்டாய், கடலை உருண்டை, எள்ளுருண்டை, எள்ளு மிட்டாய்களைக் குழந்தைகளுக்கு வழங்கலாம் என்று நல்லதொரு பரிந்துரையை முத்துநிலவன் அண்ணா வாட்சப்பில் பகிர்ந்திருந்தார். நல்லதொரு தொடக்கம், இனிதே மலரட்டும்!)

-----கீதா

செவ்வாய், 24 ஜனவரி, 2017

ரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு!!

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்தில், குறிப்பாக இணையத்தில் ஹிந்து.காம் மற்றும் மற்றொரு தமிழ் நாளிதழில், உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது என்று வெளியாகியது. ஆனால், எளிதில் நெருங்க முடியவும் இல்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இக்குழுவைப் பற்றி நீங்கள் வாட்சப்பிலோ, மேற்சொன்ன ஊடகத்திலோ வாசித்திருக்கலாம்.

இந்தக் குழுவில் அனைவரும் தொழில்நுட்பத் துறை, வேறு துறைகளில் பணியாற்றும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது. இக்குழுவில் அல்லாமல், சுய ஆர்வத்துடன் பலரும், வயது வேறுபாடின்றி பெண்களும் இக்குழுவுடன் இணைந்து பணியாற்றியதாகவும் ஊடகம் சொல்லுகிறது. அரசியல் மற்றும் சினிமா சார்பில்லாத இளைஞர் குழு! அதை அவர்கள் சுத்தமாக விரும்பவில்லை. எதிர்காலத்திலும் நுழையவிடாமல் உறுதியாக இருக்க வேண்டும்.

யாருடைய முகமோ அடையாளமோ வெளியில் தெரியாது. அதை அவர்கள் வெளியிட விரும்பவும் இல்லை. இவர்களுக்குத் தலைமை கிடையாது. தங்களில் யாரையும் தலைவர் என்று சொல்லுவதும் இல்லை. இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவதாகத் தெரிகிறது. தங்கள் அடையாளத்தை வெளியிடாமல் ஓரிரு வரிகளில் ஓரிருவர் மட்டுமே பேட்டியும் அளித்திருப்பதால்தான் தகவலாக வெளி வந்திருக்கிறது. இவர்கள் 12 குழுக்களாகவும், ஒவ்வொரு குழுவிலும் 200 பேர் இருப்பதாகவும் ஊடகம் சொல்லுகிறது.

இவர்கள்தான் ராணுவக் கட்டுப்பாட்டுடன் மெரினாவில் இயங்கியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஊடகம் சொல்லும் தகவலைப் பார்த்தால், இவர்கள் ரமணா பாணியில் ஆனால் கத்தியின்றி, ரத்தமின்றி, பொறுப்பாக வன்முறையில்லாமல் நாளைய சமுதாயத்தைப் படைக்க விழைவது போல் தெரிகிறது. அதைத் தங்கள் பணி எதுவும் பாதிப்படையாமல் செய்வதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இது தொடக்கமே.

மட்டுமல்ல, அக்குழு உறுப்பினர்கள் பலரும் விவசாயப் பிண்ணனியில் இருந்து வந்திருப்பது போல் தெரிகிறது. அவர்கள் விவசாயத் துறையில் என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் முதலில் கையிலெடுத்திருப்பதாகவும் தெரிகிறது. அதில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அதைச் செயல்படுத்த போராடவும் செய்வார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தக் குழுவில் உறுப்பினரான விவசாயத் துறை மாணவரான ஒருவர், எதிர்காலத்தில் ஒரு வேளை இவர்கள் தேர்தலில் போட்டியும் இடலாம் என்றும் சொல்லியிருக்கிறார்.

நல்லது நடப்பதற்கு அடையாளம் தெரிய வேண்டாம். நல்லது செய்வோருக்கு முக அடையாளம் வேண்டாம்தான்! அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே! அவர்களை வழிநடத்த எதிர்காலத்தில் தலைமை ஒன்று உருவாகலாம், அல்லது அவர்கள் இதே போன்று ஒற்றுமையுடன் பணியாற்றலாம். அவர்கள் எப்போது வெளியில் தங்கள் அடையாளத்துடன் வர விழைகிறார்களோ அப்போது வரட்டும்! அதை விட்டுவிடுவோம்.

"உங்களுக்குத் தலைமை வேண்டாமாக இருக்கலாம் ஆனால், இளரத்தம் ஓடும் மாணவர்களுக்கு நல் வழிகாட்டுங்கள்! நாளைய நம் நாட்டை ஊழலில்லா நாடாக மாற்ற வேண்டும் என்பதுதான் உங்கள் முந்தைய தலைமுறையாகிய எங்கள் விருப்பமும்." 

இவர்கள், 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மக்களைக் காப்பாற்றி மீட்டெடுத்து உதவும் பணியில், சமூகவலைத்தளத்தில் ஒரு குழு அமைத்து அதன் மூலம், இளைஞர்கள் பலரையும் அச்சேவையில் ஈடுபட வைத்து பணியாற்றியிருக்கிறார்கள். அதன் பின் ஒத்த சிந்தனையால் இக்குழு உருவாகியிருக்கிறது. எனவே இவர்கள் முகநூலிலும், பிற சமூக வலைத்தளங்களிலும் இருப்பதாகத் தெரிகிறது.

அதனால், அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள், பதிவுகள் எல்லாவற்றையும் கூர்ந்து நோக்கிக் கொண்டுதான் இருப்பார்கள். எனவே, நாம் நல்ல கருத்துக்களைப் பகிர்வோம். எதிர்காலத் தமிழகம், மற்றும் நம் நாடு எப்படி அமைய நாம் கனவு காண்கின்றோமோ அதனை நாம் எழுதும் பதிவுகளில் பொறுப்புடன் முன் வைப்போம். நாளைய இளைஞர் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை எந்தவிதத்திலும் எதிர்மறையாகவோ, மறைமுகமாகவோ தூண்டும்படி இல்லாமல் நேர்மறையான ஆலோசனைகளைப் பதிவோம். நம் பதிவுகளும், கருத்துகளும் அவர்களை நல் வழியில் வழி நடத்துவதாக இருக்கட்டும். 

“எங்கள் ப்ளாக்” தளத்தில் வியாழன் தோறும் எங்கள் எல்லோரது கனவுகள், விருப்பங்கள் எல்லாம் ஒரு தொகுப்பாகவே வருகிறது. மீராசெல்வகுமார், இளைஞர் இ.பு.ஞானப்பிரகாசன், கிரேஸ் பிரதிபா, கஸ்தூரிரங்கன், முத்துநிலவன் அண்ணா போன்றவர்கள் மட்டுமின்றி பெரும்பான்மையான எல்லா வலைத்தளங்களிலும் நாளைய தமிழகம், நம் நாடு, நாளைய இளைய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்றுதான் வெவ்வேறு விதங்களில் எழுதிவருகிறார்கள். 

இக்குழு விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளதால் இந்தக் கருத்து. விவசாயப் பொருளாதாரம் - அக்ரிகல்சுரல் எக்கனாமிக்ஸ் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். எனவே, அதில் சுயசார்புப் பொருளாதாரத்தை, இன்றையக் காலக்கட்டத்திற்கு ஏற்ப, குழுவில் தொழில்நுட்பத்தில் இருப்பவர்களும் இருப்பதால், எப்படிக் கொண்டுவரலாம் என்பதையும் நன்கு நுட்பமாக அறிந்து, செயல்படுத்த சிந்திக்கலாம். அடிப்படையான கல்வி, மருத்துவம் இதுவும் எல்லா அடித்தட்டு வர்க மக்களுக்கும் சென்றடையச் சிந்திக்கலாம். இதைப் பற்றி பல வலைத்தள நண்பர்கள் எழுதிக் கொண்டுதான் வருகிறார்கள்.

எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் ஆர்வமும் இருப்பதாகச் சொல்லியுள்ளதால், இவற்றைச் சொல்லியுள்ளோம். அதுவும் நீங்கள் அறவழியில் பயணிக்க இருப்பதால் அரசியல் நுட்பங்களையும் சற்றுக் கற்றுக் கொண்டு அறிவுபூர்வமாகக் கையாண்டால்தான் நம் நாட்டு அரசியலையும் உங்களால் கையாண்டு சமாளிக்க முடியும் என்பதையும் சொல்லிக் கொள்கிறோம்.

"இளைஞர்கள் விழித்துக் கொண்டுவிட்டீர்கள்! ஊழலற்ற நாளைய தமிழகத்தை, இந்தியாவைப் படைக்க இருக்கும் முகமறியா இளைஞர் குழுவே உங்களுக்கு எங்கள் எல்லோரது வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறோம். எங்கள் எல்லோரது கனவும் அதுதான்!"

(ஆனால், இவர்கள் இறுதிவரை இல்லாமல் முதல் நாள் ஏன் விலகினார்கள் என்பதற்குக் காரணங்கள் சொல்லப்படவில்லை)

இப்பதிவை எழுதி முடிக்கும் நேரம், வெங்கட்ஜி அவர்களின் தளத்தில் இக்கதையை வாசிக்க நேர்ந்ததால், இந்தப் பதிவிற்கு ஒத்ததாக இருக்கிறதோ என்ற எண்ணத்தில் அந்தச் சுட்டியையும் இங்கு பகிர்ந்துள்ளேன். நன்றி வெங்கட்ஜி!

-------கீதாசனி, 21 ஜனவரி, 2017

இளைய தமிழகமே/இந்தியாவே வா வா வா!!!

Image result for youngsters protested at marina

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா

எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா

ஏறு போல் நடையினாய் வா வா வா


வந்தாய்! திரண்டாய்! கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் செய்தாய்! வென்றாய்! வாழ்த்துகிறோம்! சல்லிக்கட்டைப் பற்றிப் பேசப் போவதில்லை. அறப்போராட்டம் வெல்லும் என்பதை உறுதிசெய்துவிட்டீர்கள்! இனி நம் நாடு இளைஞர்கள் கையில் ஒளிர்ந்திடும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது! இளைஞர்கள் கையில் ஒப்படைக்கலாம்! ஏனென்றால் அவர்கள் அரசியல்வாதிகளையும், ஜிகினாக்களையும் புறம்தள்ளி வெற்றி கண்டுள்ளார்கள்!


இது முடிவல்ல! இதுதான் தொடக்கம்! நாம் இனி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர வேண்டும். ஏறு தழுவுதல் போராட்டம் என்பதை விட அதன் திரைமறைவில் இருக்கும் நல்ல காரணங்கள், மற்றும் அரசியல் பற்றி முந்தைய பதிவில் கோடிட்டுச் சொன்னதாலும், பொதுவெளியில் பேசப்படுவதாலும் இங்கு நான் சொல்லப் போவதில்லை. அதற்குக் காண்செவிக் குழு இருக்கிறது!


இந்தியா விவசாய நாடு என்றும், கிராமங்கள் சார்ந்த நாடு என்பதும் நாம் எல்லோரும் அறிந்ததே. முன்பெல்லாம் வயல்களை வைத்திருந்தோர் வீட்டில் கண்டிப்பாக மாடுகள், காளைகள் இருந்துவந்தன. விவசாயம், கால்நடை வளம், மீன் வளம், நீர் வளம், மனித வளம் எல்லாம் பின்னிப் பிணைந்த ஒன்று என்பது நாம் எல்லோரும் அறிந்ததே!


போராடிய இளைஞர்கள் பலரும் விவசாயக் குடும்பங்களில் இருந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அல்லாதவர்களும் போராடினார்கள், ஆதரவு அளித்தார்கள். சமூக வலைத்தளங்களும்,. பிற மாநிலத்தவர்களும், வெளிநாட்டுத் தமிழர்களும்,  ஆதரவு அளித்தார்கள். உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!


பால் உற்பத்தியில் நடக்கும் ஊழல்கள் அதனால் உடல்நலத்திற்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்பதெல்லாம் ஒரு சில வருடங்களுக்கு முன்னரே பொதுவெளியில் பேசப்பட்டாலும் தீவிரமாகப் பேசப்படாததற்குக் காரணம் அரசியல்! நம் நாட்டில் எதில்தான் அரசியல் இல்லை? இப்போதேனும் அந்த அரசியல் இல்லாமல் போராட்டம் முன்வைக்கப்பட்டதற்குப் பெருமைதான்!


1970களுக்குப் பிறகுதான் நம் நாட்டின் அரசே நம் நாட்டிற்குள் அந்நிய மாடுகளை உள்ளே இறக்கினார்கள். அதன் பின் தொடங்கியது கால்நடைத் துறையில் ஒரு பெரிய எதிர்மறை மாற்றம். அதை எல்லாம் நீங்கள் கூகுள் தேவனை கேட்டால் அள்ளித் தருவார்.


நம் நாட்டுக் காளைகளால் ஏற்படும் இனப்பெருக்க நன்மைகள், நாட்டுமாட்டின் பால் நன்மைகள் என்று எல்லாம் பேசி, காளைகளுக்காகவும், மாடுகளுக்காகவும், உழவர்களுக்காகவும், கலாச்சாரத்திற்காகவும் போராடியது நன்மைக்கே என்றாலும் அதற்கும் அப்பால் நாம் சிந்திக்க வேண்டிய விசயங்கள் பல உள்ளன. இதோ நான் சொல்லப் போவதை, இப்போராட்டத்தினால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் காரணத்தினால், அதன் பாகமாக ஒரு வேண்டுகோளாக எடுத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் முன்வைக்கிறேன்.


நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தின் நிலைமை இன்று நலிவடைந்ததற்குக் காரணங்களை நான் இங்குச் சொல்லத் தேவையில்லை. அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை எல்லோருமே அறிவோம். உலகமயமாக்கலும், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் தாங்கள் சார்ந்துள்ள பெருமுதலைகளுக்காக, சுயநலத்திற்காக, நம் நாட்டிற்குள் அடிப்படைத் தேவைகளான உணவு, விவசாயம், மருத்துவம் போன்றவற்றில் தேவையில்லாமல் பன்னாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய அனுமதித்ததே முதற்காரணம்.


பல விவசாய நிலங்கள் விற்கப்பட்டு இன்று பல மாடிக் கட்டிடங்கள் எழுந்து நிற்கின்றன. இப்போது கிராமங்களில் விவசாயம் செய்யும் தலைமுறையினருக்கு அப்புறம் விவசாயம், கால்நடையின் எதிர்காலம் என்ன? அடுத்த தலைமுறை எல்லாம் பெரு நகரங்களிலும், சிறு நகரங்களிலும், வெளிநாட்டிலும் வயிற்றுப் பிழைப்புக்காக இருக்கிறீர்கள். நகரங்களும் நகரத் தொடங்கி கிராமங்களை எட்டும் நிலையில் இருக்கின்றன.


விவசாயக் குடும்பத்தில் உள்ளவர்களும் சரி, அல்லாதவர்களும் சரி உங்கள் வாழ்க்கைப் பாதையே மாறியிருக்கிறது இல்லையா? மீண்டும் கிராமம் சென்று விவசாயம் செய்து காளைகள் வளர்க்க முடியுமா? யோசிக்க வேண்டிய விசயம் இல்லையா? முடியாது என்ற நிலையில் இப்போது இருக்கும் விவசாயிகளுக்கு உதவலாம், எதிர்கால உழவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.


குரல் கொடுத்து ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு பெற்றதோடு நிறுத்திவிடாமல், அடுத்தக் கட்டமாக கிராமத்து வளம், கிராமத்து மனிதவளம் பெருகிடவும், குடிசைத் தொழில்கள் தழைத்திடவும் நாம் உதவலாம்தானே! மாணவ இளைஞர்கள் ஆற்றல் இப்போது இவ்வளவு திரண்டிருக்கும் போது, நீங்கள் நினைத்தால் அதையும் சாதிக்க முடியும்தானே? இப்போது எப்படி அரசியலையும், ஜிகினாக்களையும் உள்ளே வரவிடாமல் போராடினீர்களோ அப்படி நீங்கள் நினைத்தால் செய்ய முடியாதா என்ன! யோசியுங்கள் இளைய சமுதாயமே! உங்களால் முடியும்!


காந்தியப் பொருளாதாரம் பற்றி எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள் என்று தெரியவில்லை. பொருளாதாரம் கற்ற மாணவர்கள் கண்டிப்பாக காந்தியப் பொருளாதாரம் பற்றி அறிந்திருப்பார்கள். காந்தியப் பொருளாதாரம் என்பது சுயசார்புப் பொருளாதாரம். கிராமங்கள், குடிசைத் தொழில்கள், உழவுத் தொழிலுக்கும் மற்றும் தங்கள் பொருட்களைத் தாங்களே விளைவிக்கும், தொழிலாளியின் உழைப்பிற்கு மரியாதை செலுத்தும், முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதாரம். அப்பொருளாதாரம் இயந்திரத்திற்கு எதிரி அல்ல. இயந்திரம் மனிதனை ஆளத் தொடங்கிவிட்டால், தற்சார்பை இழந்து விடும் அபாயம், மற்றும் மனித நேயம் எல்லாம் மறைந்துவிடும் என்றுதான் எச்சரிக்கிறது.


அந்தப் பொருளாதாரத்தை நாம் கடைப்பிடித்திருந்தால், சிறிதளவேனும் கடைப்பிடித்திருந்தால், இன்று நாம் பால் அரசியல் பேச வேண்டி வந்திருக்காது என்பது உறுதி. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டி வந்திராது. நீங்கள் போராடியிருக்க வேண்டிய அவசியே இருந்திருக்காது. நமது முதல் பிரதமருக்குக் காந்தியப் பொருளாதாரத்தில் காந்தியுடன் கருத்து வேறுபாடு இருந்தது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நமது அடிப்படைத் துறையான விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், தொழில்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தவறில்லை. ஆனால் அதன் பின் ஒவ்வொரு திட்டத்திலும் தொழில்துறைககன முக்கியத்துவம் அதிகரித்து, வேளாண்மை பேசப்பட்டாலும் நடைமுறையில் அதன் முக்கியத்துவம் செயலாக்கத்தில் இல்லாமல் போனது.


இன்று நாம் தொழில்நுட்பத்தில் பல எல்லைகளைத் தொட்டுவிட்டோம். தொழில் நுட்பத்தில் வல்லவர்களாகிய இளைய சமுதாயமே நீங்கள் தொழில்நுட்பத்தை அளவோடு காந்தியப் பொருளாதாரத்தில் உட்படுத்தி, மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் இயற்கை விவசாய நுட்பங்களை உட்படுத்தி, நீர்வள மேம்பாட்டை உட்படுத்தி, கால்நடை நிபுணர் திரு சிவசேனாபதி அவர்களின் வழிநடத்தலில்  கிராமங்களைத் தற்சார்பு உடையதாக மாற்ற முனையலாம். நீங்கள் நினைத்தால் செய்து காட்ட முடியும்.


காந்தியப் பொருளாதாரம் பற்றி நான் இங்கு ஆழமாகப் பேசவில்லை. ஏனென்றால் 60 வருடங்களுக்கும் மேலாகச் சீரழிக்கப்பட்ட நம் தமிழகத்தையும், நாட்டையும் ஒரே நாளில் சீரமைத்திட முடியாது! பல வருடங்கள் ஆகும்! இப்போது விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில் அதையும் தொடங்கலாமே என்ற ஒரு ஆதங்கம். 


இப்போது நம் அரசியல்வாதிகளுக்கு இளைஞர்களின் மற்றும் மக்களின் ஆற்றல் நன்கு தெரிந்துவிட்டது. இனி அவர்கள் தவறு செய்தால் போராடிய மாபெரும் இயக்கமே இருக்கிறது என்று அறிந்துவிட்டார்கள். இந்த அறப்போராட்டம் அவர்களைச் சற்றுப் பயம் கொள்ள வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. 


எனவே, தமிழகம், சல்லிக்கட்டுடன் நின்றிடாமல் கிராமங்களும் இயற்கை உழவும், கால்நடையும், மீன்வளமும், இயற்கையும், மனித வளமும் தழைத்து, கிராமங்கள் தற்சார்பு உடையதாக மாறினால், தமிழகமே மாறிவிடும் என்பதால், மாற்றிடவும், தமிழகம் நாட்டிற்கே முன்னோடியாக அமைந்து, நாட்டையும் மாற்றிடவும், அரசின் உதவியைக் கோரியோ, போராடியோ வாங்குங்கள், ஆனால் அரசியலை நுழைத்துவிடாமல், அடுத்தக் கட்டத்திற்குப் பயணிப்பீர்! புதியதோர் பாதை வகுத்திடுவீர்! இளைஞர்களே! நாங்களும் பயணிப்போம்!


(போராட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சங்கள் பல இருந்தும், “Most remarkable thing about the jallikattu protests is the young women staying at the beach with no fear of harassment. Delhi should learn” என்று என்டிடிவி எடிட்டோரியல் டைரக்டர் சோனியாசிங்க் ட்வீட்டியதாக வாட்சப்பில் வந்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது! பாராட்டுகள் இளைஞர்களே!

 


-------கீதா

படம் இணையத்திலிருந்து.


வெள்ளி, 20 ஜனவரி, 2017

மவுஸ் தழுவுபவர்களும் ஏறு தழுவும் போராட்டக் களத்தில்!!!

என் வீட்டிற்கு அருகில் டைடல் பார்க்கின் முன்பு மென்பொருளாளர்கள் போராட்டத்தில்

இந்தியாவின் தென் கோடி மாநிங்களில் ஒன்றான நம் தமிழ்நாட்டை இன்று உலகமே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்று சொல்லலாம். இதுவரை நம் மாணவர்களோ, மக்களோ இப்படி ஒரு தொடர் போராட்டத்தை மாநிலமே இணையும் வகையில் போராடியிருக்குமா என்று என் சிறிய அறிவிற்குத் தெரியவில்லை. இந்தப் போராட்டத்தை ஜல்லிக்கட்டிற்கு மட்டுமான போராட்டமாக என்னால் பார்க்க முடியவில்லை. தமிழர் அனைவரும் தமிழ் உணர்வுடன் ஒருங்கிணைந்து, சமூகவலைத்தளங்களும் இணைந்து அரசியல்வாதிகளையும், ஜிகினாக்காரர்களையும் புறம்தள்ளி, அரசியல்வாதிகளுக்குச் சவால் விட்டு அவர்களையும் சற்று மிரட்டும் ஒரு போராட்டமாகத்தான் தெரிகிறது.


இல்லை என்றால் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள், கணினியுடன் ஒட்டி உறவாடி, பின்னிப் பிணைந்து, தங்கள் வேலையே கதியென்று, உழவர் குடும்பத்து இளைஞர்களும் கூட சுண்டெலியையே தழுவிக் கிடந்தவர்கள் ஏறுதழுவும் போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் அதுதானே!


இந்த ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாளர்கள் ஒரு புறம், எதிர்ப்பவர்கள் மறு புறம். எதிர்ப்பாளர்களில் இருவகை. ஒன்று இதனை விலங்கு வதை என்று சொல்பவர்கள். மற்றொருவகை மனித உயிர்கள் பறி போகிறது என்று ஆதங்கப்படும் வகை. இரு வகையையும் குற்றம் சொல்லுவதற்கில்லைதான். ஒரு காலத்தில் வீர விளையாட்டாக இருந்த ஏறுதழுவுதல் என்பது இடைக்காலத்தில் சற்று விபரீத விளையாட்டாகத்தான் மாறியிருக்கிறது என்று சொல்லலாம். ஒரு சில இடங்களில் காளைகளுக்குச் சாராயம் கொடுத்ததுண்டு. வாலை முறுக்கி அவற்றைத் தூண்டிவிடுதல் என்ற துன்புறுத்தல்கள் நடந்ததுண்டுதான். அதற்கு அரசு தடை விதித்து சட்டம் கொண்டு வந்துவிட்டது. அதே போன்று பலரும் உயிர் இழத்தல் அல்லது, குற்றுயிராய் அடிபடுதல் என்பதும் நடக்கிறதுதான். இரு வகையினருக்கும் தீர்வுகள் உண்டு. 

அதற்கு முன்.....

நட்சத்திர ஆமைகளைக் கடத்துவதற்குத் தடையை அரசு கொண்டுவந்த போதிலும் கறுப்புச் சந்தையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வகை ஆமைகள் மட்டுமின்றி, நம் நாட்டிலிருக்கும் அரிய இனவகைப் பறவைகள், அவற்றின் குஞ்சுகள், இறகுகள், காட்டு விலங்குகளின் நகங்கள், கொம்புகள், தோல்கள் என்று பலதும் கறுப்புச் சந்தையில் இந்தியாவிற்குள்ளும், வெளிநாட்டிற்கும் கடத்தப்படுகின்றன. இதற்கு அரசியல் ரீதியாகப் பின்புலம் இல்லாமல் நடப்பதற்கு வழி இல்லை. 

போக்குவரத்திற்கு எந்தவிதத் தொந்தரவும் கொடுக்காமல் அமைதியாக நடத்தினார்கள்

நாய் கறிக்காக நாய்கள் கொல்லப்படுவது, முயல்கள் கொல்லப்படுவது மான் கறிக்காக மான்கள் கொல்லப்படுவது? 

விலங்குகளுக்குப் பொதுவாகச் சத்தம் என்பதே கூடாது. அதுவும் பட்டாசு சத்தம் போன்றவை அவற்றிற்கு ஆகாது. யானைகளைக் கோயில்களில் குறிப்பாகக் கேரளத்தில் கொட்டுச் சத்தங்களுக்கிடையில் தானே திருவிழாக்களில் பயன்படுத்துகிறார்கள்.?? 

ஜல்லிக்கட்டு மிருகவதையா என்ற பதிவில் ஒட்டகங்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி நம் நண்பர் வெங்கட்ஜி பதிந்திருந்தார், மனதை வேதனைப்படுத்திய பதிவு. இந்தக் கொடுமை எந்தவகையில் சேரும்?

மாடுகளை வண்டியில் ஏற்றி வேறு இடத்திற்கு, அது வெட்டுவதற்கோ அல்லது விற்பதற்கோ எதுவாக இருந்தாலும், அனுப்புவதற்கு என சில வரம்புகள் விதிகள் உண்டு. அதைப் பின்பற்றாமல், கால்களைக் கூட ஒடித்து, நெருக்கி ஏற்றி, ஒன்றின் கொம்பு மற்றொன்றின் மீது பட்டு கண் பார்வை இழப்பதும், காயம் ஏற்படுவதும் ஏன் பேசப்படுவதில்லை?

ஸ்பெயினில் விளையாடும் காளைச் சண்டை, அதன் பெயர் டாரோமாக்கியா என்று நினைவு...அதைப் போன்ற ஒரு குரூரமான விளையாட்டை யாரும் இவ்வுலகில் பார்த்திருக்க முடியாது. அப்படியான சண்டைகள், விளையாட்டு என்ற பெயரில் நடத்தப்படுகிறது. நாலுகால் பிரியர்கள் அமைப்புகள் இதற்கு என்ன சொல்லுகின்றன?

விலங்குகளை வைத்துக் கோடிக்கோடியாகக் கறுப்புச் சந்தையில் பண வர்த்தகம் நடைபெறுகிறது. அவை எல்லாம் விலங்குகள் இல்லையோ?! தெரியவில்லை. அகராதியில் பார்க்க வேண்டும். பீட்டாவின் அகராதியிலா, பொதுவான அகராதியிலா? ஏனென்றால் பீட்டாவிற்கு என்று ஒரு தனி அகராதி இருக்கிறது. 98 ஆம் வருடத்திலிருந்து அது கொன்ற விலங்குகளின் எண்ணிக்கை 34,000.

செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ், அல்லது தொற்றக் கூடிய கொடிய நோய்கள் வந்தால் அவற்றைக் கருணைக் கொலை செய்வது என்பது தவிர்க்க முடியாதுதான். ஆனால், விலங்குகள் காப்பகம் என்று ஆரம்பிக்கப்பட்ட பீட்டா அமைப்பு தன் பெயரில் Ethical Treatment of Animals என்று வைத்துக் கொண்டு தெருவில் அலையும் நாலுகால் செல்லங்களைப் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டு அவற்றைத் தேடி யாரும் வரவில்லை என்றால் அதனைக் கொன்றுவிடுகிறது. இதை நான் சொல்லவில்லை. இதோ இந்தச் சுட்டி ஆதாரங்களுடன் சொல்லுகிறது. https://www.petakillsanimals.com

எப்படி குழந்தை வளர்ப்பில் அவர்களின் உளவியல்படி வளர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறதோ, எப்படி ஒரு குழந்தையை அதன் திறமையை, சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய குழந்தையை முடக்கி வளர்த்தால் அதன் குணநலன் மாறி மன நலம் பாதிக்கப்படுமோ அப்படித்தான் விலங்குகளும். விலங்குகளுக்கும் உளவியல் உண்டு.

விலங்குகளுக்குச் சில திறன்கள் உண்டு. வீட்டில் வளர்த்தாலும் அந்தத் திறன்படி வளர்த்தால்தான் அவற்றிற்கு நல்லது. எடுத்துக்காட்டாக, லேப்ரடார் எனும் வகை நாய்களை 4, 5 மைல் தூரம்  நடக்க வைக்க வேண்டும். இல்லை என்றால் அவற்றின் எடை கூடி சில உடல் உபாதைகள் வரும்.

குதிரைக்கும், யானைக்கும் முதுகெலும்பு நல்ல உறுதியாக இருப்பதால்தான் அதன் மீது மனிதர்களை ஏற்றி உலா வரச் செய்வது நடக்கிறது. அவர்களுக்கு நாம் அமர்ந்தால் புத்தகப்பையின் சுமை போலத்தான் இருக்கும். அவற்றிற்கு என்று சில பணிகள் உண்டு. அவற்றைச் செய்ய வைத்தால்தான் அவற்றிற்கு நல்லது. ஹார்ஸ் பவர் என்று நாம் சொல்லுவோம் இல்லையா அதற்கேற்ப குதிரைகள் மிகவும் வேகமாக ஓடும் திறன் உடையவை அதனால் குதிரைகள் ஒட்டம் (பந்தையம்) சட்டத்திற்குள் உள்ளதுதான். அதற்காக அதற்கு வளரூட்டிகள், ஊசிகள் கொடுக்கப்படுகிறதே! அதற்குத் தடை இல்லை. யானைகள் ஒட்டம்(பந்தையம்) கேரளாவில் நடத்தப்படுகிறது. தடை இல்லையே!

விலங்கியல் பூங்கா என்று மக்களுக்குக் காட்சிப் பொருட்களாக கூண்டிற்குள் வைக்கப்பட்டிருக்கும் விலங்குகள், விலங்குகள்  இல்லை போலும். அவற்றிற்கு நடக்கும் அநீதிகள் எல்லாம் அநீதிகள் இல்லை போலும்,  சுத்தமாக, துர்நாற்றம் இல்லாத நீருடன், கூண்டுகளுடன் எத்தனைப் பூங்காக்கள் இருக்கின்றன? ஏழு மாநில சகோதரிகள் பயணக் கட்டுரையில் கூட, விலங்கியல் பூங்கா பற்றி வேதனையுடன் வெங்கட்ஜி சொல்லியிருந்தார்

காட்டில் இருக்க வேண்டிய  சிங்கம் புலிகளைக் கூட்டில் அடைப்பதால் எப்படி அவற்றின் இயல்பான வீரம் முடக்கப்படுகிறதோ அப்படித்தான் ஜல்லிக்கட்டுக் காளைகளும். காளைகளை வளர்ப்பதே இனவிருத்திக்காகவும், வீர விளையாட்டிற்காகவும்தான். பண்டையக் காலத்தில் காளைகளை இனவிருத்தி செய்வதற்கு சோதிப்பார்களாம். காளைகளை தூரத்திலிருந்து அழைக்கும் போது, அது ஓடி வரும் போது அதனை வளர்ப்பவர்கள் ஓடிச் சென்று அதன் திமிலைப் பிடித்து அடக்குவார்களாம். காளை மடிந்து உட்கார்ந்துவிட்டால் அதனை மாட்டுடன் இணைவதற்கு அனுப்ப மாட்டார்களாம். அதே சமயம் ஓடி வரும் காளை திமிலைப் பிடிப்பவரையும் தள்ளிவிட்டு ஓடிச் சென்றால் அதனைத்தான் இணைவதற்கு ஏற்ற காளை என்பார்களாம். இப்படியாகக் காளைகளை வளர்த்துவந்த காலம் உண்டு.

இப்போது காளைகள் மிகவும் குறைவு! வட இந்தியாவில் ஒரே காளையை வைத்துப் பல மாடுகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க வியாபார ரீதியில் விந்து கொடுத்து பல லட்சங்கள் ஈட்டுபவரைப் பற்றி வெங்கட்ஜி தனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இப்போதெல்லாம், பெரும்பாலும் செயற்கை முறையில்தான் மாடுகளுக்கு விந்து செலுத்தப்படுகிறது. அந்த மாடுகளுள் எவ்வளவு பெரிய குழாய் போன்ற ஊசியை செலுத்துவார்கள் என்பதை நான் நேரில் கண்டதுண்டு. கொடுமை. இயற்கைக்கு எதிராகத்தான் எல்லாமே நடக்கிறது. இணைவதில் கூட சுதந்திரம் இல்லை. கால்நடை மருத்துவனான என் மகன் காளை வளர்க்க வேண்டும் என்பான். 

இப்படிக் காளைகள் ஒழிக்கப்படுவதால் நமது நாட்டு மாடுகளும் குறைந்து வரும் வேதனையான நிலைமை. கீதாசாம்பசிவம் அக்கா கூட அடிக்கடிச் சொல்லுவதுண்டு, இப்போதெல்லாம் பசும் பால் நன்றாகவே இல்லை என்று. இந்தச் சந்தையை அறிந்து கொள்ள, கறுப்புச் சந்தையாக மாறிய வியாபார உலகில் பாலிலும் அரசியல் புகுந்து விளையாடுவதை இதோ இந்தச் சுட்டியில் பாருங்கள். விகடன்.காம் தளத்தில் வெளியாகியிருக்கும் கட்டுரை யூரியா, சவுக்காரத்தூள் கலந்த பாலை குடிக்கத்தான்... ஜல்லிக்கட்டுக்கு தடையா...? http://www.vikatan.com/news/coverstory/77967-milk-politics-behind-the-ban-on-jallikattu--justiceforjallikattu.art அதிர்ச்சித் தகவல்கள்! இந்தச் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு இந்தக் காரணங்களும் உண்டு என்பதை இக்கட்டுரை மிக அழகாக விளக்குகிறது.

சரி உயிர் பலியாவதனால் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு: உலக அளவில் நடக்கும் குத்துச்சண்டை, கராதே போட்டிகளில் இல்லாத ஆபத்தா? பைக் ரேஸ், கார் ரேஸ் விளையாட்டுக்களில் இல்லாத ஆபத்தா? அதற்கெல்லாம் அவர்கள் முறையான பாதுகாப்புக் கவசங்கள் அணிய வேண்டும், முறையான பயிற்சி பெற்றவர்கள்தான் ஈடுபட வேண்டும் என்ற விதிமுறைகள் இல்லையா? அது போன்று ஜல்லிக்கட்டையே தடை செய்வதற்குப் பதிலாக….

ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாக, இதற்கு அரசியல் சாயம் பூசாதவர்களாக இருந்தால் போராட்டக் களத்திற்கு வந்திருக்க வேண்டும். வந்து ஆதரவாளர்கள் மற்றும் அதனை எதிர்ப்பவர்கள் தரப்பிலிருந்து குழுவையோ, இல்லை பிரதிநிகளையோ அழைத்து இரு தரப்பினரிடமும் பேசி, விலங்கு வதையோ, உயிர்பலியோ இல்லாமல் முறையான பாதுகாப்பு முறைகளுடன், விதி முறைகளுக்கு உட்பட்டு, மேற் சொன்ன விளையாட்டுகளுக்கு அணிவது போன்று தற்காப்புக் கவசங்கள் அணிந்து, காளைகளின் கொம்புகளிலும் அப்படியான கவசம் அணிவித்து, உடனடி மருத்துவ முதலுதவிகள் ஏற்பாடுகளுடன் அரசின் ஆதரவுடன் நடத்தலாம் என்று பேசியிருந்தால் இரு தரப்பினருக்கும் நன்றாக இருந்திருக்கும். அதை விட்டு இப்படி மேலும் மேலும் அரசியலாக்கிக் கொண்டு செல்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை. நம் அரசுகள் மக்கள் அரசாக இல்லாமல், வியாபார உலகு சார்ந்த அரசாக இருப்பது வேதனையளிக்கிறது!

இது போன்று ஒன்றுபட்டு, மக்கள் பொதுப் பிரச்சனைகளுக்குத் திரளுவார்கள் என்றால், ஆட்சியாளர்களுக்கு மக்களின் மேல் ஒரு வித பயம் வரும். மக்களின் நலனில் நாட்டம் இல்லை என்றாலும் பயந்தேனும் நல்லாட்சி புரிவார்கள்தானே!

------கீதா


புதன், 18 ஜனவரி, 2017

விண்ணிலிருந்து வீழ்ந்த நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி

11.01.2017 அன்றைய மாலைப் பொழுது, இந்தப் புதுவருடத்தில் எனக்கு மிகவும் இனிமையான முதல் மாலைப்பொழுது என்றால் அது மிகையல்ல. அரசியல் இல்லை. வம்பு இல்லை. கள்ளம், கபடம் இல்லை. பொறாமை இல்லை. சூதுவாது இல்லை. வெள்ளை மனம். பொய் சொல்லத் தெரியாத மனம். யாரையும் குற்றம் சொல்லத் தெரியாத மனம். எத்தனை வயதானாலும் குழந்தை உள்ளம் படைத்த நட்சத்திரக் குழந்தைகள்! நடிப்பு இல்லை. அன்பு மட்டுமே அறிந்த, அன்பிற்குக் கட்டுப்படும் குழந்தைகள். அப்படியான நட்சத்திரக் குழந்தைகளுடன் தான் எனது இனிய மாலைப்பொழுது! என் மாலைப் பொழுதை இனிதாக்கிய அந்தச் சிறப்பு நட்சத்திரக் குழந்தைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.

எல்லா அறிவுத் திறனும் உள்ள குழந்தைகளைப் பெற்றவர்கள், தங்கள் குழந்தைகள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை என்றாலும் குழந்தைகளைத் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப ஆட வேண்டும் என்றும், தங்கள் குழந்தைகளின் திறனை அறியாமல், உள்வாங்காமல் அவர்கள் என்னவாக வேண்டும் என்ற தங்கள் குறிக்கோளை அவர்கள் மீது திணித்து மூச்சுத் திணற வைத்து குழந்தைகளையும் தங்களையும் மன உளைச்சல்களுக்கு உட்படுத்தும் நிகழ்வுகள் எல்லாம், இக்குழந்தைகளைக் காணும் போதெல்லாம் என் மனதில் நிழலாடும்.

தங்கள் குழந்தைகளைக் குறித்து, அவர்கள் சரியாகப் படிப்பது இல்லை, வெற்றி பெறுவது இல்லை, எந்தத் திறனும் இல்லை என்று எப்போதும் வருத்தத்துடன் பேசும் பெற்றோர் வகை ஒரு புறம் என்றால், ஒரே அடியாகத் தன் குழந்தையைப் போல் யாரும் அறிவு படைத்தவர் இல்லை என்ற அதீத பெருமையில் உலவும் பெற்றோர் மறுபுறம்.

இந்த நட்சத்திரக் குழந்தைகளிடம் நாம் கற்க வேண்டியவை பல. மூளைவளர்ச்சி குன்றியிருந்தாலும், அவர்களது சில செயல்கள் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. அவர்களையும் தங்கள் தேவைகளைத் தாங்களே பார்த்துக் கொள்ளும்படி அவர்கள் பெற்றோரும், சிறப்புப் பயிற்சியாளர்களும், இதற்கான சிறப்புக் கல்விப் பயிற்சி பெற்ற ஒரு சிலரும் தன்னலம் பாராமல், சேவை மனப்பான்மையுடன் ஆற்றும் சேவையும், உழைப்பும் அளப்பற்கரியது.

பொறுமை நிறையவே வேண்டும்
  
இக்குழந்தைகள் தற்சார்பு நிலையை ஓரளவேனும் அடையும் வரை அவர்களுக்காக நேரம் நிறைய செலவிட வேண்டும். சில சமயம் வாழ்நாள் முழுவதும் கூட வேண்டிவரலாம்.

நமக்கு இப்படி ஒரு குழந்தை பிறந்துவிட்டதே என்ற வருத்தமோ, சோர்வோ இல்லாமல், அண்டை அயலார் மற்றும் இச்சமூகத்தின் பார்வை, பேச்சுக்களை ஏற்கும் மன நிலையும், தங்கள் குழந்தைகளின் குறையை ஏற்கும் மனப்பக்குவம் இருந்தால்தான் அக்குழந்தைகளின் உடன் பிறந்தவர்களிடமும், உறவினர்களிடமும், சமூகத்திலும் அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும், அவர்களுடன் உறவாடும் மனநிலையையும் ஏற்படுத்த முடியும்.

சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்குக் கழிவிரக்கம் என்பது கூடவே கூடாது. யாரேனும் இரக்கத்துடன் பார்த்தாலும் மனக்கலக்கம் அடையாமல் அதைப் புறம்தள்ளி, இச்சமூகத்தில் சாதாரணக் குழந்தைகளைப் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுடன் எப்படி உறவாடி வருகிறார்களோ அப்படியே உறவாடி வரலாம், வர வேண்டும்.

என் மகனின் கற்றல் குறைபாட்டைச் சமாளிக்கவே நான் பல முயற்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. நானும் பல விமர்சனங்களை எதிர்கொண்டவள். (அது + சில தகவல்கள் தனி பதிவு) அப்படியிருக்க இக்குழந்தைகளை வளர்ப்பதற்கு எவ்வளவு பொறுமையும், மனப்பக்குவமும் வேண்டும் என்பதை நான் ஒவ்வொரு முறை சிறப்புக் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் போது நினைத்துக் கொள்வது உண்டு. 

நான் இங்கு சொல்லும் மூளை வளர்ச்சிக் குன்றிய சிறப்புக் குழந்தைகளை, இக்குழந்தைகளைப் போன்றே வளர்ப்பதற்குக் கஷ்டமான ஆனால், சற்று வித்தியாசமான, ஆட்டிசம், ஹைப்பர், செரிப்ரல் பால்சி, என்ற வகையிலான குறைபாடுகளுடன் உடைய குழந்தைகள் வகையில் சேர்க்க முடியாதென்றாலும், இவர்களிலும் மூளை வளர்ச்சியைப் பொருத்து, மேற் சொன்ன பிற வகைகளில் இருக்கும் குழந்தைகளிடம் காணப்படும் திறமைகள் போல,  தனித்துவம் மிக்க குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் பல வேறுபாடுகள் உள்ளன. படிநிலைகள் உள்ளன. திறன்களும் வேறுபடும்.  


ஸ்ரீ சக்தி கணபதி டிரஸ்ட்
ராகம் கண்டு பிடிக்கும் திறன் பெற்ற துர்கா
விஜி, சுதா புரியும் திறன் குறைவு சொன்னதைச் செய்கிறார்கள்
ரேணுராஜ், கிருஷ்ணன், புரியும் திறன் குறைவு சொன்னதைச் செய்கிறார்கள்
அனீஷ் நார்மல் போன்று தோற்றம் ஆனால் சொன்னதைச் செய்பவர்
பிரார்த்தனைப் பாடல்
சுதா பாடுகிறார்
கலை நிகழ்ச்சி
கும்மி 1
கும்மி 2
கும்மி 3
விருந்தினருடன் முழு யூனிட்உதாரணத்திற்கு, நான் அன்று கண்ட குழந்தைகளில் துர்கா என்ற குழந்தை ராகம் கண்டுபிடிப்பதில் திறன் பெற்றவளாக இருக்கிறாள்! அவளது வீட்டுச் சூழல் அப்படி! அவள் பேசுவது நமக்குப் புரியவில்லை என்றாலும், மழலை மொழி பேசினாலும், அதற்குத் தனி அகராதி உண்டு. அவளது பெற்றோருக்கும், பயிற்சியாளர்களுக்கும் அவள் மொழி புரிகிறது. அவளுடன் சிறிது நேரம் பேசியதில் எனக்கும் அவளது மொழி புரியத் தொடங்கிவிட்டது! அன்பிற்கு மொழி வேண்டாம்தான்!

அன்று கண்ட குழந்தைகளில் ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள். 4 பேர் ஓரளவிற்குத் தற்சார்புப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்; தனியே சென்று வருகிறார்கள்; ஆனால் குறிப்பிட்ட பேருந்தில், குறிப்பிட்ட நேரத்தில் என்று அவர்கள் ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள் அதில் மட்டுமே செல்ல முடியும். நேரமோ, சூழ்நிலையோ மாறினால் அதற்கு ஏற்றபடி அவர்களால் அதனைச் சமாளிக்க முடியாது. எனவே, ஒரு சில சமயங்களில் பெற்றோர் துணை நின்றுதான் ஆக வேண்டும்.

சில குழந்தைகள் திறன் பெற்றிருந்தாலும் பெற்றோர் துணையின்றி எதுவும் செய்ய இயலாத நிலை. இன்னும் சிலர் பெற்றோர் துணையின்றி எதுவுமே செய்ய இயலாத நிலை. நடப்பதற்குப் பயிற்சி பெற்றிருந்தாலும், பெற்றோரின் உதவி அவ்வப்போது வேண்டித்தான் இருந்தது.

ஓரளவு புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர்கள் நாம் சொல்வதைப் புரிந்து கொண்டு செய்கிறார்கள். அன்று விழாவில் ஒரு சில வேலைகளுக்கு அந்த நான்கு குழந்தைகளில் மூவர் புரிந்து கொண்டு உதவினர். இரு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை.

நான் இங்குக் குழந்தை குழந்தை என்று சொல்வதை வைத்து நீங்கள் சிறுமியர், சிறுவர் என்று நினைத்துவிடாதீர்கள்! எல்லோரும் 20 வயதிலிருந்து 40 ற்குள் உள்ள பெரிய குழந்தைகளின் யூனிட் இது.

பயிற்சி பெற்ற பெற்றோரும், சேவை மனப்பான்மையுடன் உதவுபவர்களும், இவர்களை எல்லாம் வழிநடத்தும் ஓர் ஒருங்கிணைப்பாளரும் இணைந்து வயதில் மூத்த சிறப்புக் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோரால் தொடங்கப்பட்ட ஒரு குழுமம். யூனிட் 1, யூனிட் 2 என்று ஒவ்வொரு பகுதியிலும் தொடங்கியுள்ளார்கள். அந்தந்தப் பகுதியில் இருப்பவர்கள் இது போன்ற குழந்தைகளை உடையவர்கள் இக்குழுமத்தில் இணைந்து தங்கள் குழந்தைகளுக்கு என்ன செய்ய இயலுமோ அதைச் செய்ய வைக்கலாம்.

இக்குழந்தைகள், பெற்றோர், பயிற்சியாளர்கள் உதவியுடன் செய்யும் பேப்பர் கப், பைகள், நவீன நகைகள் போன்ற கைவினைப் பொருட்களை விற்று அதில் வரும் வருமானம் இவர்களுக்கு உதவுகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் அந்தக் குழந்தைகளின் திறன் பொருத்து செய்யப்படும் கைவினைப் பொருட்கள் மாறுபடும். இதில் பயிற்சி பெற்ற பெற்றோர் சிலர் திநகர் குழுமத்தில் சேவை செய்வார்கள், குழந்தைகள் அடையார் அல்லது ஆழ்வார்பேட்டை யூனிட்டில் பயிற்சி பெறுகிறார்கள்.

குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் என்னை அறியாமல் என் கண்களில் நீர்  பெருகியதைத் தடுக்க முடியவில்லை. இக்குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? என்ன தவறு செய்தார்கள்?  

இக்குழந்தைகளின் பெற்றோர் பலரும் 60 வயதைக் கடந்தவர்கள். படி ஏறுவதற்கும் கஷ்டப்படும் பெற்றோர் உள்ளனர். இப்பெற்றோருக்கு உடல் நலன் மிகவும் நலிந்தாலோ, அவர்கள் காலத்திற்குப் பிறகோ இக்குழந்தைகளின் நிலை என்ன என்று என் மனம் வேதனைப்பட்டது. உடன் பிறந்தோர் இருந்தாலும், அவர்களுக்கு இவர்களை வைத்துக்கொள்ளும் மனம் இருந்தாலும் சூழ்நிலை எப்படி இருக்குமோ? ஒரே குழந்தையாக இருந்தால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் அன்றைய மாலைப்பொழுதின் இனிய நினைவுகளை மட்டும் தேக்கிக் கொண்டு, அடுத்து இவர்களுடன் நேரம் செலவழிக்க எப்போது செல்லலாம் என்று யோசித்தவாறே வெளியில் வந்தேன்.

------கீதா