வலைப்பதிவர் விழா 2015 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலைப்பதிவர் விழா 2015 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 அக்டோபர், 2015

புலியென புறப்பட்டு வா! சிங்கமென சீறி வா! -1

“கேக்கற செய்திய நம்பறதானு தெரில....அவன் இறந்துட்டான்னும் சொல்லிக்கறாங்க...”

“அடப்பாவி!”......தொடர்ச்சி இதோ....

“ம்ம்ம் என்னத்த சொல்ல.  இது நம்ம ராஜ்ஜியம் இல்லையே...”

இப்படியாக வருத்தத்துடன் நாட்கள் கடந்து இரு புலியார்களும் சாதாரண நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.

“சரி வேற என்ன நாட்டு நடப்பு? என்ன நியூஸ் நீதான் மனுஷங்க வம்புக்கு அலைவியே”

“அந்த வம்பும் உனக்கும் வேண்டித்தானே இருக்கு.  இந்த ஊருல ஒருத்தர் எழுதாறார் இல்லை?  வெங்கட்ஜி னு அவரு போட்டுருந்தாராம்...புதுக்கோட்டைனு ஒரு ஊராமே அங்க இந்த எழுதற மனுசங்க எல்லாம் மீட்டிங்க் போடுறாங்களாம்.”

“ஏய் இது பழைய நியூஸ். ஆங்க் வெங்கட்ஜி நல்லா ஃபோட்டோ புடிப்பாரு தெரியுமா? ம்ம் அதுக்குனு இப்ப உடனே போய் அலங்கரம் பண்ணிக்காத.  அவரு வரும் போது நம்மள ஒரு ஃபோட்டோ எடுக்கச் சொல்லிட்டா போச்சு. ச்சே விஜய் இல்லாம போய்ட்டான். ம்ம்ம்...  சரி விஷயத்துக்கு வர்ரேன். அதுக்கு அப்புறம் வேற நியூஸ் எல்லாம் கேட்டுச்சு. காடு ரொம்ப முக்கியம் அப்படினு போட்டி எல்லாம் வைச்சு,  இந்த மாதிரி காட்டை எல்லாம் மனுஷங்க அழிக்கறாங்க.  பூமி சூடாகுது.  நாலு காலுங்க எல்லாம் வாழ இடம் இல்லாம அலையுதுங்க பாவம் அப்படினு நம்மளுக்கு சப்போர்ட் பண்ணி நிறைய பேரு எழுதிருக்காங்க அது தெரியுமா?”

“ஆரம்பிச்சுட்டியா திரும்பவும் காடு காடுனு....ஹும்...”

“நீ சொகுசுக்குப் பழகிட்ட.  இங்க சுதந்திரக் காத்து இல்ல.  நாத்தக் காத்து. நமக்கு சப்போர்ட் பண்ண நிறைய பேரு இருக்காங்க. அப்புறம் இந்த விழாவை நடத்தறதுக்கு, நம்ம காட்டு ராஜா மாதிரி அங்க முத்துநிலவன் அப்படினு ஒரு பெரியவரு இருக்காராம்.  அவரு வேற நம்மள அழைச்சுருக்காரு அது தெரியுமா உனக்கு?”

“என்னது மனுஷங்க நம்மள அவங்க மீட்டிங்குக்கு அழைச்சுருக்காங்களா..யேய் அப்ப நம்ம உஷாரா இருக்கணும். கூப்பிட்டுட்டு நம்மள சுட்டுறப் போறாங்க....

“ஹ்ஹ்ஹ் ஆமா கண்டிப்பா சுடுவாங்க நம்மள....ஆனா துப்பாக்கியால இல்ல.  கேமரா, அது ஏதோ செல்ஃபோனாமே இங்க கூட நிறைய பேரு நம்மள எடுக்கறாங்க இல்ல.....அத வைச்சு சுடுவாங்க....சுட்டுப் பேப்பர்ல எல்லாம் போடுவாங்க. சும்மா எப்ப பாரு மனுஷங்கள இப்படிச் சந்தேகப்படுறியே.  இங்க பாரு அந்தப் பெரியவரு எப்படிப் பாடி அழைச்சுருக்காருன்னு.....ஆனா கொடுத்து வைக்கலையே..போக முடியாதே.....

புலியெனப் புறப்பட்டு வா!
சிங்கமென சீறி வா!
அலைகடலென ஆர்ப்பரித்து வா!
(ஆனா மனுசனா மட்டும் வந்துறாதே!) என்றழைக்கும் அரசியல் பாணியில் அல்ல நண்பர்களே!  (நன்றி முத்துநிலவன் ஐயா)

அந்தக் கடைசி வரி பாத்தியா....மனுசனா மட்டும் வந்துறாதே!!! அப்படினு. அதுவும் அவங்க நாட்டு அரசியல் பாணில இல்லாம நம்மையும் அன்போடு நண்பர்களே! அப்படினு அழைச்சுருக்காரு பாரு.”

“மாட்டிக்கிட்டியா...மனுசனா மட்டும் வந்துறாதே!  அப்படினா அவரே மனுசங்க எல்லாம் மோசம் அப்படினுதானே சொல்லிருக்காரு?!! பிரியாணி போடுறாங்களோ அதான் இப்படி நாக்கத் தொங்கப் போட்டுட்டுப் பாட்டைக் காமிச்சுப் பேசற....”

“ஏய் சும்மாரு. நாம எப்படி போக முடியும்? மனுஷங்கள்ல நல்லவங்களும் இருக்காங்க. அங்க காட்டுல சிங்க ராஜா மீட்டிங்க் போட்டுருக்காருனு சொன்னல. அந்த மீட்டிங்குக்கும் நாம போக முடியாது நம்மள எங்க இந்த நம்ம டாக்டரும், ஆஃபீசரும் கூட்டிட்டுப் போகப் போறாங்க.  அதனால ஒரு செய்தி அனுப்பலாமானு யோசனை...மேல ஏதாவது கொக்கு இல்லைனா புறா பறக்குதானு பாரு”

“ஹும் என்ன செய்தியோ? சொல்லு பாக்கறேன்”

“நம்மள அன்போடு அழைச்சுருக்காங்க. எழுதறவங்க பலரும் நமக்கு ஆதரவா பேசறவங்க..  இந்த எங்கள் ப்ளாக் ஆளுங்க இல்ல அவங்க கூட நம்ம ஃபோட்டோ வீடியோ எல்லாம் போடுவாங்க. வெங்கட்ஜியும் அப்படித்தான். ஜிஎம்பி னு ஒரு வாலிப வயோதிகர், டிடி,(இவர் ரொம்ப ஃபேமஸ்) அப்புறம் க்ரேஸ் அக்கா, ஏஞ்சலின் அக்கா,, கீதாமதிவாணன் அக்காதுளசிகோபால் அக்கா, செந்தில்அண்ணன், விசு அண்ணன், கில்லர்ஜி அண்ணன் அப்படினு ஒருத்தர் கில்லர்ன உடனே பயந்துராதே.  பேருதான் அப்படி. இப்படி ஒரு பட்டாளமே இருக்குது நமக்கு ஆதரவா பேசஇவங்கள எல்லாம் சொல்லிட்டு எங்களைச் சொல்லலையேனு யாரும் கேட்டுராதீங்க நீங்க எல்லாருமே எங்களுக்கு ஆதரவாதானே எழுதறீங்க.”

“நல்ல மணக்குது......இல்ல நீ சோப் போட்டதச் சொன்னேன்....அதுசரி ஒரு முக்கியமான ஆளை விட்டுட்ட போல....ஏதோ மாறுவேஷத்துல ஓருத்தர் வராருனு நியூஸ் வந்துச்சே”

“ஏய் அது மதுரைத் தமிழன்! பரமரகசியம். வெளில சத்தமா சொல்லாத. அவரும் நம்மளப் போல புலி வேஷமா இல்ல சிங்க வேஷமா இல்ல....வேற...அவங்க மூதாதையர் வேஷமா.....தெரில. அவரு பூரிக்கட்டை அடிலருந்து தப்பிக்க இப்படி வந்தாலும் வரலாம் நம்ம கூட்டத்தோட கூட்டமா. நம்ம சிங்க ராஜா கிட்ட சொல்லணும் காட்டிக் கொடுத்துராதீங்க” அப்படினு. (நம்மளப் போலனு சொன்ன உடனே ம.தமிழன் கேப்பாரு அட நீங்களும் அப்ப மாறுவேஷம் தானா ஒரிஜினல் இல்லையா அப்படினு...நாங்க ஒரிஜினல் தமிழா! உர்ர்ர்ர்ர்)

“ஆமா...காட்டு ராஜாகிட்ட சொல்லிரணும் இல்லைனா அப்புறம் ம.தமிழன் கிட்ட மாட்டிக்கிட்டா அவ்வளவுதான்....ஹிர் ஹிர் ஹிர் ஹிர்...(ஒண்ணும் இல்ல இது எங்க சிரிப்பு!!). சரி அவங்க மூதாதையர்னா?”

“ம்ம்ம் அப்புறமா சொல்லுறேன். இப்ப விஷயத்துக்கு வரேன்.  நம்ம சிங்க ராஜாவுக்கு அனுப்ப ஒரு மனு தயாரிச்சுட்டேன். அவங்கள கேரளாலருந்து, துளசியோட அங்க புதுக்கோட்டைக்கு அனுப்பி அங்க ஸ்ரீமலையப்பன், மது/கஸ்தூரி விதைக்கலாம் குழுவ பார்த்து, “ஐயா அன்பர்களே நீங்க மரம் நடுறீங்கனு கேள்விப்பட்டோம். இங்கேயும் நடுங்க, எங்க காட்டுப் பக்கமும் எங்க ஏரியாவ அழிக்காம, இன்னும் காட்ட விரிவாக்குங்க. அப்படி இல்லைனாலும் இருக்கறதயாவது எங்களுக்கு விட்டுக் கொடுங்க அப்படினு உங்க அரசுக்கு கோரிக்கை வைச்சு செயல்படுத்துங்களேன். உங்களுக்குப் புண்ணியமா போகும்.”னு பேசச் சொல்லப் போறேன்”

“அதேதான்...அங்க பெரிய மனுசங்க எல்லாம் வராங்களாமே! யாராவது நம்ம கோரிக்கையைக் கேட்க மாட்டாங்களா”

“ம்ம்ம் அந்த நம்பிக்கைதான். சொல்லிட்டு அப்படியே அங்க நம்மள பத்தி எழுதினவங்கள்ல யாருக்கு முதல் பரிசு, 2வது பரிசு, 3வது பரிசு கிடைக்குதுனு பார்த்துட்டு கை குலுக்கி குல்ஃபி எடுத்துக்கிட்டு வரச் சொல்லப் போறேன். மனுஷங்க ...

"கிகிகிகி...ஏய் இரு இரு..அது குல்ஃபி இல்ல எனதருமைக் கணவர் புலியாரே!  அது செல்ஃபி”.

“சரி ஏதோ ஒண்ணு விடு...ஆமாம் அது என்ன ஒரு மா....திரி சிரிப்பு குல்ஃபினு சொல்லி?”

“அதெல்லாம் மதுரைத் தமிழன் கிட்ட கேளு..சொல்லுவாரு...."

"உர்ர் ..சரி அதெல்லாம் அப்புறம்.....ஆங்க் நான் சொல்ல வந்தது மறந்துரும்.....மனுஷங்க இந்த மாதிரி விழால என்ன பண்ணறாங்கனும் பார்க்கலாம், நம்ம மனுவ கொடுத்தா, அங்க போற நம்ம உறவுகள ஃபோட்டோ எடுத்து பேப்பர்ல போட்டு நாம படற கஷ்டத்த எழுதி, மனு பத்தி எல்லாம் போடுவாங்கல்ல? நம்ம சப்போர்ட்டர் பெரிய மனுசத் தலைகள் படிப்பாங்கல்ல?  ஏதாவது செய்ய மாட்டாங்களானுதான்..”

“ம்ம்ம்ம்ம் எனக்கு இங்கதான் பிடிச்சுருக்கு. ஹாங்க்....சரி இதெல்லாம் யாரு உனக்கு எழுதிக் கொடுத்தது?”

“அதுவா இதோ நாம பேசறத ஒட்டுக் கேட்டு எழுதுறாங்களே இவங்கதான்.  சரி நீ போய் பாரு சீக்கிரமா கொக்கு, புறா ஏதாவது பறக்குதானு....இன்னும் 4 நாள் தான் இருக்கு...சீகிரமா இதக் கொடுத்து விடணும்.”

கீதா

செவ்வாய், 6 அக்டோபர், 2015

புலியென புறப்பட்டு வா! சிங்கமென சீறி வா!

(இந்தப் பதிவின் தலைப்பு, விழாவிற்கான வலைத்தளத்தில், அழைப்பில் திரு முத்துநிலவன் ஐயா அவர்கள் குறிப்பிட்டுருந்ததிலிருந்து.  நன்றி ஐயா!)

தில்லி விலங்கியல் பூங்கா. அந்தப் புலியார் அவ்வப்பொது அமர்ந்தும் மீண்டும் நடையோ நடை நடந்தும் கொண்டிருந்தார். ஏதோ ஒரு மன உளைச்சல். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா புலியார்,

“விஜய்! எப்பவும் துள்ளிக்கிட்டுருப்ப. உனக்கு என்னாச்சு இன்னைக்கு? என்ன டென்ஷன்? இந்த நடை நடந்துக்கிட்டிருக்க?”

“ம்ம் ஒண்ணும் இல்லைம்மா...”

“இல்ல ஏதோ இருக்கு....ஒண்ணும் இல்லைனா அப்போ உன் உதட்டுல ஏதோ ரத்தக்கறை தெரியுதே...எனக்குத் தெரியாம உனக்கு என்ன ஸ்பெஷல் சாப்பாடு வைச்சாங்க??  இல்லை நீ ஏதாவது அடிச்சுட்டியா”

விஜய் புலியார் நாவினால் தன் வாயைத் தடவிக் கொண்டார். “ஓ அந்த மனுஷனோட ரத்தம் எப்படியோ ஒட்டியிருந்துருக்கு. அதான் அம்மாகிட்ட மாட்டிக்கிட்டோம்.

“ம்ம்ம் இன்னிக்கு வந்த விசிட்டர்ஸ்ல ஒரு மனுஷன் சுவர் தாண்டி உள்ள வந்துட்டாரு. நான் அவர் கிட்ட போய் சும்மாதான் நின்னுக்கிட்டிருந்தேன். இதுவரை மனுஷங்க யாரையும் இவ்வளவு கிட்ட பார்த்ததே இல்லையா...ஹை விளையாடலாம்னு நினைச்சென்.  மேல வேடிக்கைப் பார்த்துட்டுருந்த மனுஷங்க, என் மேல கல்லெல்லாம் விட்டெறிஞ்சாங்க. மூங்கில் கட்டைய எறிஞ்சாங்க.  கத்திக் கூச்சல் போட்டாங்க. நான் அதெல்லாம் அவர் மேல பட்டுறக் கூடாதுன்னு அவர் கழுத்தப் பிடிச்சு - அப்படித்தானே நாம எதையுமே தூக்குவோம் - அப்படித்தான் தூக்கிட்டு வந்து இங்க காட்டுல போட்டேன்.  எப்படியும் டாக்டர் வருவாங்க, அவங்க வந்து அவனக் கூட்டிட்டு போய்டுவாங்கனு. ஆனா, என் பல்லு பட்டு அவர் செத்துட்டார் போல.  நான் கொல்லணும்னு நினைக்கவே இல்லைம்மா.  அதான் ஒரே கவலையா இருக்கும்மா.”

“அதான் விஷயமா... டாக்டர் வந்தப்பவே........நான் நினைச்சேன் ஏதோ பிரச்சனைனு.........அந்த மனுஷன் உள்ள விழுந்ததுமே ஏன் அவங்க முன்னாடியே வந்து உனக்கு மயக்க ஊசி போட்டு அந்த மனுஷனக் காப்பாத்திருக்கலாமே...இப்ப பாரு உனக்கு ஏதாவது ஆயிருச்சுனா?”

“நீ சும்மா இருக்கியா. இவனுக்கு எதுக்கு மயக்க ஊசி போடணும்? மயக்க ஊசி போட்டாலும் ஒரு 15 நிமிஷமாவது ஆகும் இவன் மயங்க. அந்த மனுஷன் உள்ள இறங்காம பாத்துக்கிட்டுருக்கலாம்ல பாதுகாப்பு காவலாளி? நல்ல காலம் மயக்க ஊசி போடலை...விஜய் பாவம்.” - அப்பா புலியார்

“உங்க சித்தப்பன் ஒருத்தர் கேரளாவுல காட்டுல இருக்காரே அவர் கூட இப்படித்தான் சமீபத்துல ஒரு ஆள அடிச்சுட்டதா அங்க இருக்கற துளசினு ஒருத்தர் அதப்பத்தி எழுதினாருன்னும் சொல்லிக்கிட்டாங்க”

“யேய் என்ன ஓவரா உறுமல்? ஏன் உங்க அண்ணனும் அந்தக் காட்டுலதான் இருக்கார். அவரும்தான் ஒரு ஆளைக் கொன்னாரு....ம்ம் இதுக்குத்தான் காட்டுல இருக்கணுன்றது. விஜயாவது காட்டுல இருந்துருக்கலாம். நம்மள இப்படி இங்க அடைச்சு வைச்சு பழசாப் போன சாப்பாட்ட போடறாங்க.  காட்டுல இருந்தா ஃப்ரெஷ்ஷா சாப்பிடலாம். அதுல வேற இவங்களுக்குக் காட்சிப் பொருள் மாதிரி. என்ன வாழ்க்கையோ இது”

“ஏன் இங்க என்ன குறைச்சல். நல்லாத்தானே போயிட்டுருக்கு?  ஹும்!  விஜய்! அப்பா சொல்றத கேக்காத.  நீ சின்னப் புள்ள. உனக்குத் தெரியாது. காட்டுல இருந்தா நாம யாரையாவது அடிச்சுருவோம், அடிச்சா நம்மள சுட்டே கூட கொன்னுடுவாங்க. இப்படித்தான் பல மாசம் முன்னாடி என் மாமாவைச் சுட்டாங்க. அதுக்கு இங்க நாம பாதுகாப்பாதானே இருக்கோம்?! வேளா வேளைக்குச் சாப்பாடு.....அப்புறம் என்ன?”

“எனக்குக் காட்டுலதான் இருக்க பிடிக்குது.  சுதந்திரம் வேணும்.  மனுஷங்க மட்டும் சுதந்திரம் வேணும்னு சொல்றதில்லையா?  அது மாதிரிதான். விஜயாவது காட்டுல வளரணும்னு நினைச்சேன்” அப்பா புலியார்.

“இந்த துளசின்றவரு வேற உன் சித்தப்பன பத்தியும் என் அண்ணனப் பத்தியும் எழுதப் போக, இப்ப விஜய் பத்தியும் செய்தி போயாச்சு. நரியார் தானே நமக்கெல்லாம் பிஆர்ஓ! அவரு நியூஸ் கொடுத்துருக்காரு....இந்த மாதிரி கேரளக் காடு அப்புறம் தமிழ்நாட்டுக் காட்டுல புலியார்கள் காட்டை விட்டு வெளிய போய் கிராமங்கள்ல இருக்கறவங்களை எல்லாம் கொல்லுறாங்க, ஆட்டை அடிக்கறாங்க, மாட்டைக் கொல்லறாங்க அப்படினு... இப்ப என்னன்னா அங்க காட்டுல சிங்க ராஜா ஒரு மீட்டிங்க் போட்டுருக்காராம்...”

“சரி போட்டு என்ன ப்ரயோசனம். நாமதான் போக முடியாதே.  இதுக்குத்தான் நாம காட்டுக்குள்ள இருக்கணும்றது. அப்படி என்ன பேசப் போறாரு? அவருக்கே வயசாச்சு.  வேட்டைக்குப் போக முடியல. அதனால, “நீங்களும் காட்டை விட்டு வெளில போயி ஊருக்குள்ள அட்டகாசம் பண்ணி நம்ம பெயரைக் கெடுக்காதீங்கனு” அறிவுரை வழங்குவாரு.  ஹும்...நம்ம இடம் நம்ம கிட்ட இருந்தா நாம எதுக்கு ஊருக்குள்ள போகப் போறோம்? இங்க பாரு அதான் நம்மள இங்க பிடிச்சு அடைச்சுப் போட்டுட்டாங்க”

“எப்ப பாரு காடு காடுனு.  என்னவோ பெரிசா காடு இருக்கற மாதிரி.  அது எல்லாம் குறையறதுனாலதானே நம்ம சனங்க நாட்டுக்குள்ள போறாங்க. போனா மனுசங்க சும்மாவா இருக்காங்க கொன்னுடுறாங்களே. எனக்கு இங்கதான் பிடிச்சுருக்கு. இங்கதான் பாதுகாப்பு”

“நாறுது.......இதப் போயி பிடிச்சுருக்குன்னு......உவ்வே. விஜய்! உனக்குக் காடு பிடிச்சுருக்கா? இல்ல இந்த இடமா?”

“என்னப்பா?  காடா?  அப்படின்னா?”

“ஓ! இவன் இங்க பொறந்தவன் இல்ல...ம்ம்ம்ம் பாரு என் அருமை மனைவியாரே! நம்ம புள்ளைக்கு நம்ம பூர்வீகமே தெரியல. பூர்வீகத்தைக் காமிக்கவாவது வேண்டாமா சொல்லு. இங்க அவனுக்கு அப்பப்ப ஊசி போட்டு, அடிச்சு வேட்டையாட பயிற்சி வேற. மனுஷங்க எதுக்கு நமக்குப் பயிற்சி கொடுக்கணும் சொல்லு? காட்டுல இருந்துருந்தா காட்டுல மரம் ஏறுறது, தண்ணில நீஞ்சறது, தன் சாப்பாட்டைத் தானே அடிக்கறது இப்படி எல்லாம் அவனுக்கு நம்ம பரம்பரை குணம், செயல் எல்லாம் இயற்கையாவே வந்துருக்கும்ல. ம்ம் விஜய் பாவம்”

“அதெல்லாம் வேண்டாம்.  அவன் இங்கயே இருக்கட்டும்.  பாதுகாப்பா இருக்கான்.”

அப்போது அங்கு விலங்கியல் டாக்டர் வந்து விஜயை மயக்க நிலைக்குக் கொண்டு போய் கூண்டுக்குள் அடைத்துவிட......அப்பா புலியார் தொடர்கின்றார்

“இல்லை. இங்க வரவங்க  விஜய பாக்கறதுக்குன்னே நிறைய பேரு வராங்க.  ஆனா என்னென்னவோ பேசி கேலி பண்ணறாங்க. ஏதேதோ விட்டு எறியராங்க. நம்ம அமைதிய கெடுக்கறாங்க கூச்சல் போட்டு.  நிறைய சமயத்துல ரொம்பக் கோபமா வருது.  இப்ப பாரு விஜய தனியா கூண்டுக்குள்ள அடைச்சுப் போட்டுருக்காங்க.  டாக்டர் அவன் எப்படி இருக்கானு பாத்துக்கிட்டே இருக்காங்க. அவன்கிட்ட ஏதாவது மாத்தம் இருக்கா? நல்லாருக்கானானு...”

“நல்லதுதானே....”

“இல்ல.  இங்க நமக்கு எப்பவும் மாடு இறைச்சி, எருமை இறைச்சி இதெல்லாம் தான் தருவாங்க இல்லையா? மனுஷன் ரத்தம் நமக்குத் தெரியாது.  விஜய்க்கும் புதுசுதான். அவன் அந்த மனுஷன அடிக்கலை......சாப்பிடலைதான். ஆனா, அவன் வாயில, பல்லுல ரத்தம் பட்டுருக்குல்ல. அதான் எனக்குக் கவலையா இருக்கு.”

இப்படியாக ஒரு மூன்று நாட்கள் கடந்தது.  திடீரென்று அம்மா புலியார்,

“ஐயோ இங்கப் பாரேன்....இப்ப அந்தக் கூண்டுல நம்ம விஜய் இல்லையாம்.  அதுல இருக்கறது வேற ஒரு புலியார் ராணினு பேராம்.  ஐயோ..”

“ஐயையோ!  அப்போ நம்ம விஜய் என்னானான்?  போய்ட்டானோ?  இல்ல வேற பூங்காவுக்கு மாத்திட்டாங்களோ? என்னாயிருக்கும்னு தெரியலையே...யாராவது பேசிக்கறாங்களானு பாரு...எனக்கு செய்தி சொல்லு..”  நாட்கள் கடந்தன...

“கேக்கற செய்திய நம்பறதானு தெரில....அவன் இறந்துட்டான்னும் சொல்லிக்கறாங்க...”

“அடப்பாவி!”

தொடரும்...

(பின் குறிப்பு:  நாளை தலைப்பிற்கும், இந்தப் பதிவிற்கும் உள்ள தொடர்புப் பதிவு)

கீதா

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

சபாஷ்! சரியான போட்டி! வாசகர்க்கான விமரிசனப் போட்டி!

2015 ற்கான நமது வலைப் பதிவர் விழா - விழாக்குழுவினர் அறிவித்த போட்டிகள் முடிவுக்கு வந்த நிலையில், விழாக் குழுவினரால் அடுத்து ஒரு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது! 

http://bloggersmeet2015.blogspot.com/2015/10/10000.html

ஸ்பா இப்பதான் எல்லாரும் தலையைப் பிச்சுக்கிட்டு, இரவு எல்லாம் தூக்கம் தோலைத்து போட்டிகளுக்காகக் கை வலிக்க...கணினியில் தட்டி விட்டுக் கணினியை இன்னும் மூடக் கூட இல்லை அதற்குள் அடுத்து ஒரு போட்டியா!!!! என்று ஆர்வத்துடன் எல்லோரும் எட்டிப்பார்க்கின்றீர்கள் தானே?!!! உங்களுக்காகத்தான்...இந்தப் போட்டியில் பங்கெடுக்க, நீங்கள் வலைப்பதிவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  யார் வேண்டுமானாலும் பங்கெடுத்துக் கொள்ளலாம்.  நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...

Image result for writing competition


இந்தச் சுட்டிக்கு போய் சொடுக்குங்க.  போட்டியில் பங்கெடுத்த படைப்புகள் அனைத்தும் வகை வாரியாக உங்கள் கண்ணில் படும்.  வாசியுங்கள்...வாசித்து விட்டு  உடனேயே “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள்" என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15 பேரைத் தேர்வு செய்ய வேண்டும். முதல் பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் போதும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bloggersmeet2015@gmail.com

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ?  ம்ம்ம் ஹூம் ....அதுதான் .இல்ல...


 நம்ம வலைப்பதிவர்கள் என்ன சும்மாவா...என்ன? 

எல்லாரும் எவ்வளவு கஷ்டப்பட்டு ஆராய்ஞ்சு எழுதியிருக்காங்க...

எல்லோரும் அருமையாக எழுதக் கூடியவர்கள் ஆயிற்றே!....தங்கள் திறமையெல்லாம் வெளிவரும் அளவு, ஒரு சிலர் இரண்டு, மூன்று என்று படைப்புகள் படைத்து, அனைத்தும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனவாம்..........இருப்பதால்......

Related image
இப்படித்தான்...

."யாருக்குக் கொடுப்பது" என்று, நடுவர்கள் இப்போது தங்கள் தராசை அப்படியும் இப்படியும் ஆட்டிக் கொண்டு, தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும் நடுவர்கள் ஆராய்ந்து  வெளியிடும் முடிவுகளுடன், உங்கள் முடிவுகள் ஒத்துப் போனால்...பிடியுங்க உங்க பரிசை!  பரிசு கிடைக்கணும்னா எடுங்க பேனாவை...இல்லை கணினியை திறந்துக்கோங்க வாசியுங்கள் படைப்புகளை!

விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்! (எல்லாப் படைப்புகளையும் பற்றி முழுமையாக விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப்பின் விதிமுறை அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம் பின்னால் உதவும்.)  என்ன நீங்களும் இப்ப இப்படி ஆகிட்டீங்களோ!!!

Image result for writing competition

இப்படி எல்லாம் படைப்புகள் அருமையா இருந்தா யாரைங்க கணிப்பது..ஹஹஹஹ் நல்லா மாட்டிக்கிட்டீங்களா...

நமது தேர்தல்களின் போது, பத்திரிகைகள் நடத்தும் கருத்துக் கணிப்புப் போலவே வைத்துக்கொள்ளலாம். சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை எடுத்து கருத்துச் சொன்னவர்க்கே முதல்பரிசு ரூ.5,000, அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர் முறையே இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என மொத்தப் பரிசுத் தொகை ரூ.10,000 விழாவில் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும். 
போட்டிக்கான விதிமுறைகள் :

(01) யார் வேண்டுமானாலும் இந்த “விமரிசனக் கருத்துப் போட்டி“யில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் (E.Mail), மண்ணஞ்சல் (Postal Address) இரண்டு முகவரிகள் மட்டும் தந்தால் போதும். அதை வெளியிட மாட்டோம். உங்கள் முடிவுகளையும் வெளியிட மாட்டோம். கலந்துகொள்பவர் பெயர்ப் பட்டியல் மட்டும் இதே தளத்தில் தனிப் பெட்டியில் வரிசைப்படுத்தி வெளியிடப்படும். முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொள்வோர் விருப்பப்படி இரண்டில் ஒரு முகவரி மட்டும் வெளியிடப்படும். அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

(02) ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். (ஐந்து போட்டிகளிலும் மூனறு பரிசுக்குரியவர் என்று முடிவுசெய்யப்பட்ட (1) போட்டி வகை, (2) வரிசை எண், (3) பெயர் (4) படைப்புத் தலைப்புகளை இதே வரிசையில் தெரிவித்து பதினைந்து பரிசுக்கும் (5x3=15) தமது முடிவை மின்னஞ்சல் செய்தால் போதுமானது. இதற்கான விளக்கம் விசாரணை எதுவும் தேவையில்லை. 

(03) ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது. 

(04) வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59வரை அனுப்பலாம்.

(05) மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம்.

(06) இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.

(07) விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.

(08) வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம்உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும்.மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல் முகவரி இரண்டும் இல்லாத அனாமதேயப் பங்கேற்பை ஏற்பதற்கில்லை.

(09) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது. 

(10) போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.

பூதக் கண்ணாடி எல்லாம் தேவை இல்லைங்க..நல்லா தெளிவா, அழகா எழுதியிருக்காங்க நம்ம நண்பர்கள் தங்கள் படைப்புகளை...

என்ன !?  இந்த பெங்குவின் சொல்றா மாதிரி...ரகுவரன் பாணில சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா?!!!!  உங்கள் முடிவ? அப்படினா உங்களுக்குத்தாங்க கண்டிப்பா பரிசு.....

தம்பு இங்க வாப்பா....எல்லா நண்பர்களுக்கும் சொல்லிடுப்பா...யார் வேணா பங்கெடுக்கலாம்.......நீயும் கலந்துக்க.....ஆனா...இங்க பாரு... இங்கி பிங்கி பாங்கி எல்லாம் போட்டு முடிவு  எழுதக் கூடாது....புரிஞ்சுச்சா...

எல்லோருக்கும் எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள் வெற்றி பெற....Image result for writing competitionஇன் அட்வான்ஸ்

படங்கள் இணையத்திலிருந்து...




வெள்ளி, 2 அக்டோபர், 2015

நாளாம் நாளாம் திருநாளாம் தமிழ் வலைப்பதிவர் கூடும் பெருநாளாம்!

அக்டோபர் 11, 2015 




மன்னாரு அண்ணே!  பதிவர் விழா அழைப்பிதழ் எல்லாம் வந்துருச்சு போல!

டேய் தம்பு!  உன்னையத்தான் தேடிக்கிட்டிருந்தேன்.  ஆமாம் விழா அழைப்பிதழ் வந்துருச்சு.  இப்பதான் முத்துநிலவன் ஐயா அனுப்பியிருந்தாரு. அப்புறம் நம்ம சகோ மைதிலி கூப்பிட்டு பேசினாங்க...

சரி இப்ப நான் என்ன பண்ணனும்?  நம்ம பதிவர் நண்பர்களை எல்லாம் அழைக்கணும் அவ்வளவுதானே..பண்ணிட்டா போச்சு...அப்படியே கொஞ்சம் அந்த லேப்டாப்ப எங்கிட்ட கொடுங்கண்ணே!  

ம்ம் அதானே பார்த்தேன் உன் குடுமி சும்மா ஆடாதேனு....சரி நான் சொல்லறத அப்படியே தட்டி விடு....

வலை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நாம் எல்லோரும் சந்திக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!  இதோ நெருங்கிவிட்டது.  10 நாட்களே உள்ளன.  சந்திக்கும் நாள் நினைவில் உள்ளது தானே! 11-10-2015 அன்று புதுக்கோட்டையில்.  இடம் எல்லாம் மேலே பாருங்கள்!  அதில் இருக்கிறதே! 

குறித்துக் கொண்டிருப்பீர்கள். புதுக்கோட்டையே விழாக் கோலம் பூண்டிருக்கின்றதாம்!  நாம் எல்லோரும் இருப்பது பல இடங்களில், வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு நாடுகளில் என்றாலும் நம்மை எல்லாம் இணைத்தது இந்த வலைத்தளமே!  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இருந்த இடத்திலிருந்தே, முகம் பார்க்காமலேயே வலையுலகினால் அறிமுகமாகி, மீன் பிடிக்க உதவும் வலை போல் இந்த வலை நம்மை எல்லாம் இணைத்து பல கருத்துகளைப் பகிர்ந்து, எண்ணங்களை விதைத்து, பகிரச் செய்து, உறவாட வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.  சென்ற மூன்று வருடங்கள், சென்னை, மதுரை என்று நிகழ்ந்த வலை உறவுகளின் சந்திப்பு, இந்த வருடம் புதுக்கோட்டையில்! நாம் சந்திக்கவிருக்கும் தருணமும், அந்த நாளும் வந்திடாதோ என்று நெருங்கிவிட்டது!  வாருங்கள், வாருங்கள் எல்லோரும்!  கை கோர்ப்போம்!  சந்திப்போம் மகிழ்வுடன்! கொண்டாடுவோம் அந்த இனிய பெருநாளை!

நாங்கள் ரெடி!  அப்போ நீங்களும் தானே!  On Your Mark! At your Place! Set! Ready! Come On! Meet At Puthukottai! 11-10-2015, ஞாயிறு! இதோ அழைப்பிதழ்!


மிக்க நன்றி!


வியாழன், 24 செப்டம்பர், 2015

கேரளத்தில்-செவ்வாய் கிழமை ராகு காலத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கல்யாணம்!!!!.../ தமிழ்நாட்டிலும் ஒரு கோலாகலம்

இணையத்திலிருந்து

சிபிஐ(எம்) கட்சியின் (இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட்) பொலிட் ப்யூரோ மெம்பரும், முன்னாள் கேரள கல்வி அமைச்சருமான எம் ஏ பேபியின் மகன் அஷோக் பெட்டி(Betty) நெல்சன் மற்றும் வாகத்தானம் ஆண்டனி ஜோசெஃபின் மகள் சனிதாவின் திருமணம் வித்தியாசமானதாகவே இருந்தது. தனது மகனது திருமணத்திற்கு, திரு பேபி அவர்கள் திருமண அழைப்பிதழாக மார்க்சிஸ்ட் கட்சியின் நாளிதழான “தேசாபிமானி”யில் எல்லோரையும் வரவேற்று ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டது முதல் தொடங்குகிறது இந்த வித்தியாசமான கல்யாணத்தின் நிகழ்வுகள்.

திருமணம் நடத்தப்பட்டதோ திருவனந்தபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏகேஜி மையத்தின் முதன்மை ஹாலில். மணமகனும், மணமகளும் அமர்ந்ததோ வாஸ்து நிபுணரான(?) ஜி சங்கர் உருவாக்கிய ஓலைப் பந்தலில்(?!).  மணமக்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய மாலைகளை அவருக்கு வழங்கியதோ கே ஜே ஜேசுதாசும், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனும்.

மாலை மாற்றும் போது கெட்டி மேளத்திற்குப் பதிலாக கேட்டதோ கைதட்டல்களும், உமையாள்புரத்தின் மிருதங்க ஒலியும்.

திருமணப் பரிசாக மணமக்களுக்கும், திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கும் வழங்கப்பட்டதோ வீட்டுத் தோட்டத்தில் பயிரிட ஏதுவான காய்கறி விதைகள் அடங்கிய பொட்டலங்கள்.

மணமக்களை வாழ்த்த வந்தவர்களுக்குக் கல்யாண விருந்தாக வழங்கப்பட்டதோ வேக வைத்தக் கப்பைக் கிழங்கும்(மரச்சீனிக் கிழங்கும்) சம்மந்தியும்!(தேங்காய், மிளகாய், வெங்காயம், உப்பும் சேர்த்து அரைக்கப்பட்ட துவையல்) கொழுக்கட்டையும், பருப்பு வடையும், உண்ணி அப்பமும்.

திருமண நாளோ செவ்வாய் கிழமை.  முகூர்த்தமோ சரியான ராகு காலத்தில்.  இப்படி எல்லாவிதத்திலும் புதுமையான இம்மணவிழாவில் பங்கெடுத்தவர்கள் எல்லாம் பிணராயி விஜயன், மம்மூட்டி, மார்க் மேத்யூ அரைக்கல் போன்ற அரசியல் மற்றும் கலை உலக பிரபலங்கள். 

திருமணத்தில் வித்தியாசமில்லாத விஷயங்கள் இரண்டே இரண்டுதான்.  திருமணம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  மணமகளும், மணமகனும் காதலித்து ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டுதான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். 

எனவே, “செவ்வாய் கிழமையும்”, “ராகு காலமும்” அவர்களது இனிய மணவாழ்க்கைக்குப் பிரச்சனை ஏதும் உண்டாக்க வாய்ப்பே இல்லை! “மதம் ஒரு மயக்க மருந்து” என்று மேடையில் மட்டும் பேசி, நிஜ வாழ்க்கையிலும் சாதி, மதம் பார்த்து, முக்காடு போட்டு யாரும் காணாமல் கோயிலுக்குப் போகும் மார்க்சிஸ்ட்காரர்களுக்கு, தான் அப்படிப்பட்டவன் அல்ல என்று தன் மகனது திருமணம் மூலம் புரிய வைத்த திரு எம் ஏ பேபியைப் பாராட்டத்தான் வேண்டும்.


அத்துடன், “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதை செயலில் காட்டிய இக்காலகட்டத்து இளைஞர் அஷோக்கையும் பாராட்டியே தீர வேண்டும்.  கூடவே இதற்கெல்லாம் ஒத்துழைத்த இக்காலகட்டத்துப் பெண்ணான, மருமகளான சனிதாவும் பாராட்டுக்குரியவரே.  நாமும் மணமக்கள் நலமாய் வாழ  பிரார்த்தனை (பிரார்த்தனையோடுதான் வாழ்த்த முடியும் என்பவர்கள் அப்படியும் செய்யலாம்) ஏதும் செய்யாமல் வாழ்த்துவோமே! 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்ன கேரளத்துல மட்டும்தான் புதுமையான கல்யாணமா? நம்ம தமிழ்நாட்டிலும், புதுக்கோட்டையில், புதுமையாக, நம் வலைப்பதிவர் விழா, ஒரு கல்யாண விழா போல் கோலாகலமாக நடைபெற உள்ளதே!!! இனி ஒவ்வொரு வருடமும் நடக்கவிருக்கும் பதிவர் விழாவுக்கு ஒரு உதாரணமாக, முன்னோடியாக இது அமைந்திருக்கும் என்றும் சொல்லலாம். 

அதாவது, குறிப்பாக, பிற நிகழ்வுகளை விட, நாங்கள் முக்கியமாகக் கருதுவது; வலைப்பதிவர்களின் ஆற்றலை, திறமையை வெளிக்கொணரும் விதமாகவும், தமிழ் மொழியை வளர்ப்பது மட்டுமல்லாமல், அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும், தமிழ் வலையுலகையும் தொய்வில்லாமல் அடுத்த நிலைக்கு, ஒரு மேன்மையான நிலைக்கு உயர்த்தவும், இன்னும் பல திறமையுள்ள, எழுத்தார்வம் மிக்க, வளர்ந்து வரும் இளைஞர்களைத் தமிழ் வலையுலகில் இணைந்து, கைகோர்த்திட ஊக்குவிக்கும் அளவிலும், தமிழ் இணையக் கல்விக் கழகம் தமிழ் வலையுலகுடன் கைகோர்த்து, ஆதரவளித்து, போட்டிகள் நடத்தி, விருதுகள் அளித்து, ஊக்கமளித்து, ஒரு நல்ல விதையை விதைத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

இந்த விதை, எதிர்காலத்தில், ஒன்றல்ல பல ஆலமரங்களாய், விழுதுகளை வேரூன்றி, நாளைய தமிழ் சிற்பிகளுக்கு தங்கள் எழுத்துகளை செதுக்கிட உதவும் ஒரு உலகமாய் மாறும், தமிழ் மொழியை பாரெங்கும் ஒலித்திட, ஒளிர்விட, அதிர்வலைகளை எழுப்பிட வழி கோலும் என்ற நம்பிக்கை துளிர் விடுகின்றது.

எனவே புதியதோர் தமிழ் வலையுலகம் படைப்போம் என்று வீறுகொண்டெழுந்து போட்டிகளில் கலந்து கொண்டு உங்கள் படைப்புகளை இந்த மின்அஞ்சல் மூலம் அனுப்பிவிடுங்கள். bloggersmeet2015@gmail.com

தமிழ் இணையக் கல்விக் கழகம் பற்றி நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்ததால் அதன் தளத்திற்குச் சென்று உலா வருவதுண்டு. அரிய பொக்கிஷப் பெட்டகம் எனலாம். பல தகவல்களையும், தமிழ் நூல்களையும் அங்கு வாசிக்கலாம். அறிந்து கொள்ளலாம்.  நாம் எழுதுவதற்கு அடிப்படைத் தகவல்களையும் திரட்டிக் கொள்ளலாம். மதுரைத் தமிழன் அவர்களும் தனது தளத்தில் இந்தக் கழகத்தைப் பற்றி மிக மிக விரிவாக கொடுத்திருந்தார். http://avargal-unmaigal.blogspot.com/2015/09/tamil-virtual-academy.html

தமிழ் இணையக் கல்விக் கழகமும் தனது தளத்தில்  http://www.tamilvu.org/ போட்டிகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.  அந்தத் தளத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.

விழாவிற்கான வலைத்தளத்திலும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதோ சுட்டி.http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_24.html?showComment=1443101628103#c6450725783812729507

மிக்க நன்றி!