வெள்ளி, 31 அக்டோபர், 2014

சில நொடி சினேகம் பல நொடி சினேகமாய் மாறியது.

  சில நொடி சினேகம் 


     நாங்கள் வலைப்பூ ஆரம்பித்து, வலைப்பூக்களை நுகர, வலையில் உலா வந்த போது குடைந்தையூர் சரவணன் அவர்களின் குறும்படம் எடுக்க விரும்பும் வேண்டுகோளைக் கண்டு அவரைத் தொடர்பு கொள்ள, அப்போது பூத்த அந்த சில நொடி நட்பு இன்று அவரது படத்தில் பங்கு பெறும் அளவிற்கு பெரிய ஆழமான நட்பூவாய் விரிந்திருக்கின்றது என்பதை நாங்கள் மிகவும் மகிழ்வுடனும், பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஏனென்றால், இந்த நட்பு எங்களுக்குப் பல நட்புகளை ஏற்படுத்தி விரிவாக்கியுள்ளது.

குடந்தையூர் ஆர் .வி. சரவணன், பதிவர், http://kudanthaiyur.blogspot.in/  இயக்குனர் - குறும்படம் சில நொடி சினேகம்

      நாம் ஒரு படத்தைப் பார்த்ததும் நமக்கு அதன் ஆழ அகலம் தெரிந்தது போன்று விமர்சிக்கின்றோம். நமக்கு உரிமை உண்டுதான்.  என்றாலும், படம் இயக்கும் ஆர்வமும், கனவும் பலருக்கும் இருந்தாலும், ஒரு படம் இயக்கி, அது குறும்படமாக இருந்தாலும், அதை வெளிக் கொண்டுவருவது என்பது சாதாரண விஷயமல்ல. அந்தப் பாதை மிகவும் கரடுமுரடானது. பல இன்னல்கள் நமது பாதையில் முளைத்து நம்மைச் சோர்வடையச் செய்யும்.  ஒரு சாமான்ய மனிதன் அந்த இன்னல்களை எல்லாம் மிகுந்த மன தைரியத்துடன் எதிர்கொண்டு, கடந்து வந்து, வெற்றி இலக்கைத் தொடுவது என்பது எத்தனைக் கஷ்டமானது என்பதை அனுபவத்தினால் மட்டுமே உணர முடியும். அதிர்ஷ்டக் காற்றும் நம் பக்கம் வீச வேண்டும். ஆனால், சரவணன் அவர்களின் முதல் படமாகிய சில நொடி சினேகம், குறும்படம் உங்கள் முன் விரியும் முன் அவர் சந்தித்த இன்னல்கள் பல.  அவர் இயக்க இருந்த முதல் குறும்படத்திற்கான வேலைகள் பாதி முடிந்த நிலையில், சென்னையில் படப்பிடிப்பு என்றும், தேதியும் முடிவு செய்யப்பட்ட நிலையில், அதில் நடிப்பதாக இருந்த, கோவை ஆவியும், துளசியும் வெளியூர் என்பதால் அவர்களது பிரயாணங்கள் முடிவு செய்யப்பட்டு ரயிலில் பதிவும் செய்யப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் தடைபட்டுப் போனது.

      சரவணன் அவர்கள் சிறிது தளர்ந்தாலும், உடன் அடுத்து தனது சிறுகதைகள் பற்றி எங்கள் குழுவுடன் (கோவைஆவி, அரசன், துளசி, கீதா) அதைப் பற்றிக் கருத்துப் பரிமாற்றம் செய்து அதில் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கான வேலைகளைத் தொடங்க ஆரம்பித்தார்.  அதுதான் இந்தக் கதை. முதலில் இந்தக் கதையைச் சென்னையில் தான் இயக்குவதாக இருந்தது. முன்பு முடிவான அதே தேதி என்றும். ஏனென்றால் வெளியூரில் இருந்து வரும் இருவரின் பிரயாணமும் தடைபடாமல் இருக்க வேண்டி. இதன் கதைக் களம் பேருந்து நிலையம் என்பதால், முதலில் ரெட்ஹில்ஸ் பேருந்து நிலையத்தில் படம் பிடிக்கலாம் என்று கேஆர்பி அவர்கள் பரிந்துரைக்க, முடிவும் செய்யப்பட்டது.  பகலில் படப்பிடிப்பு என்பதாலும், அது பொது இடம் என்பதாலும், அதற்குக் காவல் துறை அனுமதி வேண்டும் என்பது தெரிய வர, நாங்கள் காவல்துறையை அணுகுவது எப்படி என்று பல வழிகளிலும் முயன்று, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதிமுறைகள் சொல்ல, ஒவ்வொன்றும், பாம்புக் கட்டத்தில் ஏறி, ஏறி சறுக்கிக் கீழே வருவது போல் வந்துக் கொண்டிருந்தது. மேலும் இந்த வழிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரேட் சொல்லியது! படம் எடுக்க ஆகும் செலவை விட இருமடங்கு ரேட் வரை சென்றது! இரண்டு படமே எடுத்துவிடலாம்!

இரண்டு வாரங்களே இருந்தது. தேதி நெருங்கியதே தவிர, எந்தவிதத்திலும் அனுகூலமான பதில் இல்லை. கும்பகோணமா, சென்னையா என்று முடிவாகவில்லை.  இரு நாட்கள்தான் இருந்தது. கும்பகோணத்திலும் அவர் முயற்சி செய்து கொண்டிருந்தார்.  ஒரு வழி கொஞ்சம் வெளிச்சம் காட்ட, டிக்கெட் எதுவும் ரத்து செய்ய வேண்டாம், படப்பிடிப்பு சென்னையில்தான் என்று இயக்குநரால் அறிவிக்கப்பட்டு, நேரடியாக ரெட் ஹில்ஸ் காவல் நிலையத்தையே அணுகலாமே என்று இயக்குனர் நேரில் சென்றார். அப்போதுதான் தெரியவந்தது, முதலில் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும், அவர்கள் அனுமதித்த பின்னர் பேருந்து நிலைய டெப்போ, ரெட் ஹில்ஸ் காவல் நிலையம், தாசில்தார் என்று தனித்தனியாக மனு கொடுக்க வேண்டும் என்று அறிந்த போது அது இரண்டு நாட்களில் முடியும் வேலையா? கும்பகோணம்தானே நமது இயக்குனரின் ஊர் ஆதாலால் அங்கு பேருந்து நிலைய அனுமதி, பேருந்திற்கு அனுமதி எல்லாம் பெறவேண்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு கும்பகோணத்தில் படப்பிடிப்பு என்று முடிவானது. 

ஆவி, துளசி அவரது மனைவி மூவரும் கோயம்புத்தூரிலிருந்து கும்பகோணத்திற்கு வந்து சேர்ந்தனர்.  அரசன், கீதா மற்றும் புகைப்படக் குழுவினர் சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கிப் பயணம். ஆவியும், துளசியும் ரயிலில் சினிமா பற்றி பல விஷயங்களை ரசனையுடன் பேசி, கருத்துக்கள் பரிமாறிக் கொண்டிருக்க, அரசனும், கீதாவும் பேருந்தில் பல சுவாரஸ்யமானக் கதைகள் பேச என்று பயணம் தொடர்ந்தது. பேருந்து சற்று தாமதமாகத்தான் போய்ச் சேர்ந்தது.  காலையில் இயக்குனரின் தம்பி அவர்கள் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ள, காலை உணவிற்குப் பிறகு, முதல் சீன் ஆட்டோவில் ஆவி, அரசனும் வந்திறங்கும் காட்சி படமாக்கப்பட்டது. இயக்குனருக்கு இது முதல் பட அனுபவம், அரசனுக்கும், ஆவிக்கும் காமராவின் முன் புது அனுபவம் ஆதலால் அந்தக் காட்சி கொஞ்சம் பல டேக்குகள் வாங்கியது.  இயக்குனருக்குக் கொஞ்சம் பதட்டம் வர காட்சியை ஆட்டோ ஓட்டுனருக்கும், அதில் வருபவர்களுக்கும் விளக்க, அந்த இடைப்பட்ட நேரத்தில், ஆவியும், அரசனும் வசனம் பேசிப் பயிற்சி எடுக்க, இப்படியாக நல்ல அனுபவம் எல்லோருக்கும்.  அந்த முதல் காட்சி படமாக்கப்பட்டவுடன், அடுத்த சீனான, அரசன் முன்னே செல்ல ஆவி அவரிடம் மீதிச் சில்லறை கொடுக்க அவரைத் தொடர்வது எடுக்கப்பட, சில டேக்குகள் வாங்க, இப்படியாக தொடர்ந்தது படப்பிடிப்பு.  அதன் பின்னர் பேருந்து நிலையத்தில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு முன்னேற, குழுவினர் அங்கு இடம்பெயர, பேருந்துகள் வந்து சென்றே கொண்டிருக்க, மக்கள் பேருந்திற்கு வேண்டி ஓடி ஏற, இறங்க, இப்படியான ஒரு பரபரப்பான பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்துவது என்பது எவ்வளவு கடினம் என்பது புரிந்தது. இயக்குனருக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும், நடித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்! பின்னர், மதிய உணவிற்குப் பிறகு, ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.  அதுவும் மிகவும் பரபரப்பான பொது இடம் தான்.  அரசனும், துளசியும் சந்திக்கும் காட்சி.  துளசி காரோட்டிக் கொண்டு வந்து அரசனைச் சந்திக்கும் காட்சி சில டேக்குகள் வாங்கியது.  பின்னர், இருவரும் காரில் ஆவியைத் தேடிச் செல்லும் காட்சி, அதுவும் பரபரப்பான சாலையாக இருந்ததால் கொஞ்சம் டேக்குகள் வாங்கியது.  இறுதியில், இடைப்பட்டக் காட்சியான, அரசனும், ஆவியும் பேருந்து நிலையத்தில் பேருந்திற்குக் காத்திருக்கும் போது பேசும் காட்சிப் படமாக்கப்பட, நல்லபடியாக படப்பிடிப்பு முடிந்தது. 

7.06 நிமிடங்கள்தான் படத்தின் நீளம்.  ஆனால், ஒரு நாள் தேவைப்பட்டது. இயக்குனர் பின்னர் “இன்னும் ஒரு நாள் கூட படப்பிடிப்பு நடத்தியிருந்தால் இன்னும் நிதானமாக, நேர்த்தியாக்க் காட்சிகளை அமைத்திருந்திருக்கலாமோ” என்று சொல்லிக் கொண்டார்.  ஏற்பாடுகளை மிகவும் அருமையாக்ச் செய்திருந்தார்கள்.  இயக்குனரின் மொத்தக் குடும்பமும், உறவுகளும் அங்கு வந்திருந்து ஆதரவு அளித்தனர். படப்பிடிப்பின் போது பல நல்ல பாடங்கள் கற்றுக் கொண்டோம்.  காட்சிகள் இன்னும் எப்படி விதப்படுத்தலாம், நேர்த்தியாக வைக்கலாம் என்பது முதல், ஒரு பரபரப்பான பொது இடத்தில், கூட்டத்தைக்  கட்டுப்படுத்த என்று தனி ஆட்கள் இல்லாத போதும் படப்பிடிப்பு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள முடிந்தது!  நல்ல அனுபவம் தான்.  பின்னர் இயக்குநர் பாக்அப் சொல்ல எல்லொரும் நாங்கள் தங்கியிருந்த ரூமிற்கு வந்தோம்.  மறு நாள் நாங்கள் (அரசன், துளசி. அவரது மனைவி, ஆவி, கீதா) எல்லோரும் இயக்குநரின் வீட்டிற்குச் சென்றோம். மிகுந்த அன்பு உபசரிப்பு. அவர்களது அன்பில் நாங்கள் திளைத்தோம்.

படம் முடிந்து பின்னர்தான் முக்கியமான வேலை.  எடிட்டிங்க், டப்பிங்க் போன்ற நகாசு வேலைகள் இயக்குனரையும்,, ஒளிப்பதிவாளர் ஜோன்ஸையும், ஆவி, அரசனையும் இரவு தூங்க விடாமல் வேலை வாங்கியது! துளசி டப்பிங்கிற்கு வேண்டி சென்னை வர முடியாததால், ஒளிப்பதிவாளர் ஜோன்சின் குரல் ஒத்துப் போக அது டப் செய்யப்பட்டது. படத்திற்கான போஸ்டர் இயக்குநரின் மகன் ஹர்ஷவத்தன் மிக நன்றாகச் செய்து தந்தார்.  இப்படியாக வேலைகள் முடிந்து முதல் காப்பியை, வாத்தியாரும், சீனுவும், ஸ்கூல் பையன் சரவணனும் பார்த்து விமர்சிக்க்க் குறைகள் எடுத்துக் கொள்ளப்பட்டுச் சரி செய்யப்பட்டது. ஒரு பெண் கருவுற்ற நாள் முதல், பிரசவிக்கும் வரை எத்தனை எத்தனை இன்ப, துன்பங்களைச் சந்திக்க நேரிடுமோ அது போன்று சந்தித்து, குழந்தை வெளியில் வரும் போது குழந்தையிடம் குறை இருக்கின்றது என்றால் அந்தத் தாய், அந்தச் சமயம் எவ்வளவு வேதனைப் படுவாளோ அது போன்ற ஒரு அனுபவம்தான் ஒவ்வொரு இயக்குனருக்கும் அவர்களது படம் உருவாகி வெளிவருவதும்.  அதுவும் முதல் பிரசவம் என்றால்? என்றாலும் தாய் தன் குழந்தையுடம் சிறு குறைகள் இருந்தாலும், அதை அன்பானவர்கள் சுட்டிக் காட்ட அதை மெருகேற்றி, சரி செய்ய முடிந்தக் குறைகளைச் சரி செய்வது போல், இயக்குநரின் மீதிருந்த அன்பும் அக்கறையும் தான் அந்த விமர்சனங்களுக்குக் காரணம் என்பதால், இயக்குனர் படத்தில் இருந்தக் குறைகளைச் சரி செய்ய முடிந்த அளவு சரி செய்து இதோ உங்கள் முன்னும் வந்து நீங்கள் எல்லோரும் அதைப் பார்த்து விமர்சனங்களும், முகநூலிலும், யூட்யூபிலும் வந்து கொண்டிருக்கின்றது.

குறும்படத்தை முதலில் நம் இயக்குனரின் அபிமான இயக்குனர் திரு பாக்கியராஜ் அவர்கள்தான் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், பாக்யராஜ் அவர்களுக்கு நேரமின்மை  காரணத்தால், அவரை, இயக்குனர், இயக்குனரின் தம்பி, அவரது மனைவி, ஆவி, கீதா ஐவரும் சென்று அவரது அலுவலத்தில் சந்தித்துப் படத்தை அவர் பார்வையிட்டு, 20 நிமிடங்கள் அவர் எங்களுக்காக நேரம் ஒதுக்கியது மிகவும் மகிழ்வாக இருந்தது.

இப்படியாகச், சென்ற வருடம் குடந்தை ஆர்.வி. சரவணன் என்பவருடன் ஆரம்பித்த எங்கள் சில மின் அஞ்சல் நட்பு, சில நொடிகளில் உருவாகி இன்று பல மின் அஞ்சல் நட்பாய்-பல நொடிகளாய் வளர்ந்து, அவரைத் துளசியின் படத்தில் பங்கெடுக்க வைத்துப், பின்னர் அவரது படத்தில் துளசியும் பங்கெடுத்து, எங்கள் நண்பர் குடந்தையூரார் என்றாகி விட்டார்! அவரால் எங்கள் நட்பு வட்டம் வாத்தியார், ஆவி, அரசன், சீனு, ஸ்கூல்பையன் என்று விரிந்து இருக்கின்றது! இயக்குனரும் எங்கள் நண்பருமான  குடந்தையூரார் இன்னும் பல வெற்றிப் படங்கள் தந்து மிளிர எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! இந்தப் படம் உருவாவதற்குக் காரணமாக இருந்த எல்லா அன்பர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்!

    

புதன், 29 அக்டோபர், 2014

அளவுக்கு மீறிய அன்பும், ஆராதனையும், ஆவேசமும் ஆபத்தானது!

இதில் நடுவில் இருப்பவர் உன்னிக் கிருஷ்ணன்

தீபாவளி நாளில், பாலக்காடு அருகே மனதிற்கு மிகவும் வேதனை தந்த ஒரு சம்பவம் நடந்தது. இளையதளபதி விஜயின் “கத்தி பட்த்தின் கட் அவுட்டுக்குப் பாலபிஷேகம் (!?) செய்ய, 30 அடி உயரமுள்ள ஃப்ளக்ஸ் போர்ட் வைத்திருந்த வடக்கன்சேரி ஜெயபாரத் தியேட்டரின், மேல் பகுதியில் ஏறி அபிஷேகம் செய்த பின், ஆவேசத்துடன் தன் நண்பர்களுடன் ஓடிக் கீழே இறங்க முயன்ற வடக்கன்சேரி விஜய் ரசிகர் மன்றத்தின் செயளாளரான உன்னிக் கிருஷ்ணன் (25), ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் தகர்ந்ததால், கீழே விழுந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்திருக்கிறார்.  என்ன செய்வது? இது போல், அரசியல் தலைவர்களுக்காகவும், திரைப்பட நடிகர்களுக்காகவும் அறிந்தோ அறியாமலோ உயிர் பலி கொடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டுதான் இருக்கின்றது.  எத்தனை பேர் என்னென்ன சொன்னாலும், எழுதினாலும், இது போன்ற மரணங்களைத் தவிர்க்க முடியவில்லைதான்.   (உண்மையானவன் வலைத்தளத்தில் நண்பர் சொக்கன் அவர்கள் இதைப் பற்றி மிகவும் வருந்தி திங்களன்று ஒரு அழகான இடுகை பதிந்திருக்கின்றார்).


      திரைப்படங்களில் விஜய், தூரப் போகும் புகைவண்டியில் ஏற பல கட்டிடங்கள், மரங்கள் மீதெல்லாம் தாவிச் செல்லும் காட்சிகள் ரசிகர்களின் மனதில் நிறைந்து நிற்கும் போது, நாம் நிற்பது கட்டிடத்தின் மேல் என்றும், கட்டிடத்தின் கூரையாக இடப்பட்டிருக்கும் ஆஸ்பெஸ்ட்டாஸ் ஷீட் எளிதில் ஒடிந்து விடும் என்றும் அவர்கள் சிந்திப்பதில்லை.  ஆனால், 25 வயதான, கட்டிட வேலைக்குச் சென்று கிடைக்கும் வருமானத்தில், குடும்பத்தினரைப் பாதுகாக்கும் உன்னிக் கிருஷ்ணனின் இழப்பு அக்குடும்பத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றிச் சிந்திக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.  இது போன்ற சம்பவங்கள் இனியும் ஏற்படாமல் இருக்க திரையரங்கு உரிமையாளர்களும் காவல்துறையும், திரைப்பட நடிகர்களும் தங்களால் என்னென்ன செய்ய முடியுமோ, அதைப் பற்றியெல்லாம் சிந்தித்து ஆவன செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.
 

இருப்பினும்,விஜய் ரசிகர்கள் வசூலித்த 2 லட்சம் ரூபாயும், அத்துடன் திரைப்பட விநியோகஸ்தரின் 1 லட்சம் ரூபாயும் சேர்த்து 3 லட்சம் ரூபாயை கடந்த தினம் கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் நடந்த உன்னிக் கிருஷ்ணனின் மறைவுக்கான இறங்கல் கூட்டத்தில்,  மறைந்த உன்னியின் தம்பி மற்றும் தங்கைக்கு வழங்கப்பட்டது.  அதில் விஜயும் கலந்து கொண்டு தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்ததுடன், தாமதமின்றி தான் நேரில் உன்னியின் வீட்டிற்குச் சென்று பெற்றோருக்கு ஆறுதல் சொல்லப் போவதாக்ச் சொல்லியிருக்கின்றார்.  படப்பிடிப்பு மற்றும் நேரமின்மைக்கு இடையே அதை எல்லாம் விட விலைமதிக்க முடியாதது தன் ரசிகரான உன்னியின் உயிர் என்பதை உணர்ந்து வந்தது சிறிது மனதிற்கு ஆறுதல்தான். இருப்பினும், அவர் தன் ரசிகர்களிடம் இது போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதத்தில் ஆராதனை கூடாது என்று அறிவுறுத்தி இனி இது போல் ஒரு மரணம் ஏற்படாமல் இருக்கத் தன்னால் இயன்றதைத் செய்வார் என்று நம்புவோம். 


                ரசிகர்களின் இது போன்ற ஆவேசங்களுக்கு நீண்ட ஆயுள் கிடையாது என்பதுதான் உண்மை.  நடிகை குஷ்புவுக்கு ஒரு கோயிலையே கட்டி ஆராதனை நடத்தியவர்கள் அவரது இடத்தை நிரப்ப புதிய நடிகைகள் வந்ததும்,  அவர்கள் பின்னால் செல்ல, இடையில் ஒரு விவாதத்தில் குஷ்பு சிக்க, பெண்கள் அவருக்கு எதிராகத் துடைப்பக் கட்டையுடன் ஆர்பாட்டம் நடத்திய போது, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோயில் கட்டிய ரசிகர்கள் வரவில்லை. புரட்சித்தலைவருக்கும் மிகப் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கத்தான் செய்தது.  அவர் அரசியலில் இறங்கினார் என்றாலும் அவர் தன் ரசிகர்களைச் சிறப்பாகக் கையாண்டு தமிழ் நாட்டையே ஆண்டிருக்கிறார். நடிகர் திலகமும் - அவரும் அரசியலில் இறங்கினாலும் அது தோல்வியைத் தழுவிய ஒன்று – தனது ரசிகர்களைப் பிரச்சினைகள் வராத அளவு கையாண்டார் என்று சொல்லலாம். உலக நாயகனோ அரசியல் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை! ரஜனி, கமல் ரசிக மன்றங்களுக்கிடையில் பல சச்சரவுகள் நிகழ்ந்தாலும், ரஜனியும், கமலும் பேசி,  ஒருவிதமாக அதைக் கட்டுக் கோப்புக்குள் கொண்டு வர, கமல் தனது மன்றத்தை ஒரு சமுதாய நல மன்றமாக மாற்றி ரசிகர்களின் கவனத்தைத் திசை திருப்பி விட்டார். ரஜனியின் அரசியல் பிரவேசம் கேள்விக் குறியாகவே இருந்தாலும் அவரும், தனது மன்றத்தைத் திசை திருப்பி வைத்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். “தல”, தனது ரசிகர்கள் தனக்காகத் தங்கள் நேரத்தை வீணாக்குவதை விரும்பாமல், குடும்பத்திற்காக உழைத்து, நேரம் செலவிட வேண்டும் என்று அறிவுறுத்தி தனது மன்றத்தையே கலைத்துவிட்டார். சூர்யா தனது ரசிகர்களைத், தன் தந்தை வழி கல்வி அறக்கட்டளையை விரிவாக்கி, அகரம் என்ற அறக்கட்டளையை நிறுவி ரசிகர்களைத் திசை மாற்றி விட்டார்.

சிறந்த நடிகனுக்கு நடிப்பும், பேரும், புகழும், பணமும் மட்டுமல்ல. கூடவே, இவற்றிற்கு மூல காரணமான ரசிகர்களையும் பேணிக் காக்க வேண்டியப் பொறுப்பும் இவர்களுக்கு உண்டு என்பதை மறக்கக்கூடாது. விஜய் இதற்கிடையில் அரசியலில் ஆர்வம் காட்டுவதாகச் செய்திகள் அடிபட்டதால் அவர் இது போன்ற சம்பவங்களை மனதில் கொண்டு மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும்.  அவர், கமல், ரஜனியைப் போல் ஆவாரா, அஜித், சூர்யாவைப் போல் ஆவாரா, புரட்சித் தலைவர் போல் ஆவாரா?!!!!! காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.  காத்திருப்போம்!
     

படங்கள் : இணையம்
     


செவ்வாய், 28 அக்டோபர், 2014

அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம், அபூர்வ ராகம்.....அபஸ்வரமாகியதே! - 3 (முற்றும்)


ஏன் ஞான சூன்யம்!? மொழிப் பிரச்சினைதான் காரணம்! நல்ல உச்சரிப்புத் திறமை எனக்கு இருந்தாலும், மொழிப் பிரச்சினை! மேள தாளத்தோடு, வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்துப் பார்த்தும், சுட்டுப் போட்டு ப்ளாக் மெயில் பண்ணிப்பார்த்தும், மும்மூர்த்திகளும் எனதுள் குடியேற மறுத்தனர்! விவேக் ஒரு படத்தில் சொல்லுவது போல், எனக்கு அவர்களை நன்றாகத் தெரியும்.  ஆனால் அவர்களுக்கு என்னைத் தெரியவில்லையே!! மாறாக, பாரதியும், பெரியசாமிதூரனும், பாபநாசம் சிவனும், அம்புஜம் கிருஷ்ணாவும், கோபாலகிருஷ்ண பாரதியாரும், திருநாவுக்கரசரும், அருணகிரிநாதரும், ஆழ்வார்களும் குடியேறினார்கள்! எனக்குத் தமிழ் கீர்த்தனைகள் எளிதாக வந்ததால் தமிழ் கீர்த்தனைகள் அவ்வளவாகத் தெரியாதவர்களிடமிருந்து என்னால் கற்க முடியாமல் போனது! தமிழ் கீர்த்தனைகளுக்குள் சென்று, லயித்து, உணர்ந்து, அர்த்தம் புரிந்து என்னால் பாடமுடிந்தது போல், தியாகபிரம்மமும், தீக்ஷிதரும் எனக்கு மனனம் ஆக மறுத்ததால், அந்தக் கீர்த்தனைகளைப் பாட முடியவில்லை!  அதனால் ஞான சூன்யம் ஆனேன்! இது அன்றைய காலகட்டம். இப்போது திருக்குறள் கூட கச்சேரிகளில் ராகபாவத்துடன் பாடப்படுகின்றதைக் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!

எனவே, என் மாமியிடமும், பக்கத்து வீட்டு ராதை அக்காவிடமும், தேவைப்படும் சமயத்தில் 2 நிமிட இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல தமிழ் கீர்த்தனைகளை 2 மணி நேரத்தில் கற்று, ஓபி அடித்து, ஒப்பேற்றினேன்.  அப்படித்தான் தியாகபிரம்மமும், தீட்சிதரும், ச்யாமா ஸாஸ்திரியும் கொஞ்சம் கருணை காட்டி என்னுள் புகுந்தனர்.  ஆனால், முழுமையாக இல்லை.

“நீ எதத்தான் முழுசா செஞ்ச?”  இது வேறு யாரும் இல்லை என் உள் மனதின் குரல்!  ம்ம்ம் என்ன செய்ய....இப்படி ஓடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் கல்லூரியில் நடந்த கர்நாடக சங்கீதப் போட்டியில் நானும் பெரிய பாடகி போல் பங்கெடுத்துக் கொண்டு ஹம்சானந்தி ராகத்தில் உள்ள ஸ்ரீனிவாஸ திருவேங்கடமுடையான் எனும் தமிழ் கீர்த்தனையை ராதை அக்காவிடம் ஜெட் வேகத்தில் கற்றுக் கொண்டு, எனது இடைச் செருகலாக, குலம்தரும் செல்வம் தந்திடும் எனும் திருமங்கை ஆழ்வார் பாசுரத்தை விருத்தமாகப் பாடிவிட்டு கீர்த்தனையைப் பாட 3 வது பரிசு கிடைத்தது!!! ஆலாபனை பண்ணாததாலும், ஸ்வரம் போடாததாலும்!  உடனே நீங்கள் எல்லோரும் என்னை வாழ்த்துவீர்கள்! வாழ்த்த வேண்டாம்.  3 ஆம் பரிசு கிடைத்த ரகசியம் இதுதான் குலாப்ஜாமூன் விளம்பரத்தில் அந்தக் குட்டிப்பையன் சொல்லுவானே அது போன்று மொத்தமே மூன்று பேர்தான் கலந்து கொண்டோம்! இது இளம்கலை கற்ற போது!

எங்கள் கஸின்ஸ் நாங்கள் வீட்டில் பெரியவர்கள் இல்லாத போது லொள்ளு சபா போல நாங்கள் அடித்த லொள்ளு பல! திரைப்படப் பாடல்களை இட்டுக் கட்டிப் பாடிக் கலாய்ப்பது! இந்திராகாந்திப் பாட்டி இறைவனடி சேர்ந்த போது, அது பொங்கல் சமயமாதலால், வாங்கிய கரும்பு அப்படியே இருந்தது, யாரும் சீண்டுவார் இல்லாமல். அப்போது எங்களில் ஒருவன் அதை ரகசியாமாகக் கடித்துச் சாப்பிட, அதை எனது மாமா மகனும், நானும் (என்னுடன் சங்கீதம் ரசிப்பவன், என்னைக் கலாய்ப்பவன்) பார்க்க உடனே “கரும்பு  தின்னும் அத்தை மகனே! நீ கை வலிக்க கரும்பொடித்து, பல் வலிக்க தோலுரித்து, தின்னும் போது பல் ஒடையலையா” (அரிசி குத்தும் அக்கா மகளே-பாண்டியன்-ரேவதி பாடல்) என்று சத்தமாகப், ஏதோ பாடுவது போல் பாட அவன் பெரியவர்களிடம் மாட்டிக் கொள்ள....அதன் பின் எங்களுக்குள் பல போக்குவரத்துக்கள், சமாதான்ங்கள் அந்தக் கதை தனி! இது ஒரு உதாரணம் தான். 

பாட்டி இறந்து விட்டதால், நான் கொஞ்சம் தைரியம் வந்து நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் இருந்த மீனா டீச்சரிடம் (நல்ல தமிழ் ஆசிரியையும் கூட! இவர் பாரதிராஜா படத்தில் பாட்டு சொல்லித்தரும் ஆசிரியையாகவே ஒரு காட்சியில் வருவார்) நானும், எனது அத்தை மகளும் பாட்டு கற்கச் செல்ல, அவரு ஸ ப ஸ விலிருந்து ஆரம்பிக்க போனால் போகிறதென்று, வர்ணம் வரை வந்தாலும் இடையில் ஓரிரு தியாகராஜக் கீர்த்தனையும், தமிழ் கீர்த்தனையும் கற்றுக் கொடுத்தார்.  என்றாலும் அங்கும் வேகத்தடை வந்து முற்றுப் புள்ளி வைத்தது.  வீட்டில் பாடும் போது எனது அத்தை மகன்

“கீதா ரொம்ப நன்னா ஸ்வர பேதம் பண்ணர” என்பான்.  அதாவது, நான் ஸ்வரங்களை அதன் இடத்தை விட்டு மாற்றி மாற்றிப் பாடுவதாகச் சொல்லி என்னைக் கலாய்ப்பான்! 

“கீதா நீ ரொம்ப நன்னாதான் பாடற...ஆனா என்ன, பல ராகம் தெரியறது நீ பாடும் போது....அதனால நீ என்ன பாடறனு கொஞ்சம் சொல்லிட்டுப் பாடு...இல்ல ராகமாலிகை பாடினாலும் சொல்லிடு...ம்ம்ம்ம் ராக மாலிகைனும் சொல்லிக் கூடத் தப்பிச்சுடலாம்”  என்றும் கலாய்ப்பான். மாமிதான் எனக்கு ஆதரவு தெரிவிப்பார். 

“என்னடா அப்படிச் சொல்லற.  ஸ்வர பேதம் இல்ல...ஸ்ருதி பேதம் பண்ணிக் கூட பல ராகங்கள் கொண்டு வரலாம். கீதா நீ பாடும்மா...” என்று சொல்லி என்னைக் காலாய்த்தாரா இல்லை அவனுக்கு பதிலா என்று இப்போது வரை விடை இல்லை!  எனக்கு அப்போது இந்த ஸ்ருதி பேதம் ஓரளவு புரிந்தாலும், பின்னர்தான் அதன் முழுமையான டெக்னிக்கல் அர்த்தம் புரிந்தது. இதைப் பற்றி இறுதியில்.

இப்படியாக எனது சங்கீத்த்திற்கு வேகத்தடை வந்து வந்து, திருமணத்திற்குப் பிறகு திருவனந்தபுரத்தில் வாழ்க்கை என்றாலும் புகுந்த வீடு சென்னை என்பதால் திரும்பவும் நவராத்திரி கொலுவில் பாடுவதற்காக மட்டும் வேண்டி மாமியார் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு பாட்டு மாமியிடம் துக்கடாக்கள் கற்க வற்புறுத்த,

“ஆஹா!  திரும்பவும், சுண்டல் பாட்டா! என்ற ஒரு சோர்வு வர, அந்த மாமி என்னை “என்ன ஒரு குரல்!  சபைக்கு ஏத்த மாதிரி கம்பீரமான குரல்.  நல்ல ஞானம்” என்று சொல்லி கற்றுத் தந்தார் ஒரு துக்கடா! அதன் பின்னர் என் சங்கீதமோ தூள் பக்கோடா ஆனது! திருவனந்தபுரம், சென்னை என்று மாறி மாறி ரயிலில் தான் என் வாழ்க்கை என்று ஓடிய போது, டீச்சர் என்னுடனேயே ரயிலிலும் வந்து கற்றுத் தர நான் என்ன டாட்டா, பிர்லா விட்டுப் பெண்ணா இல்லை அரச குலத்துப் பெண்ணா! 

பின்னர், ஒரு நல்ல நாள் வந்தது! அப்படி நான் நினைத்துக் கொண்டேன்!  கணவர் இருந்தால் தானே பாடக் கூடாது! அவர் இல்லாத போது?! என்று திருவனந்தபுரத்தில் அப்போது பிரபலமான, அந்த ஊரின் எம் எஸ் என்று அழைக்கப்பட்ட திருமதி சீதாலக்ஷ்மி மாமியிடம் பாட்டுக் கற்க சென்ற போது, மீண்டும் ஸ ப ஸ.  தாட்டு வரிசை ரொம்பவே என்னைப் புரளி பண்ணியது! எப்படியோ வர்ணம் வரை வந்தேன்.  5 வர்ணம் வரை.  பின்னர், அம்மா என்ற ப்ரமோஷனுக்குத் தகுதி வந்ததால், 3 மாதம் ஆகும் போது, மாமி

“குழந்தே!  உனக்கு இனிமே மாடி ஏறி வரது கஷ்டம்.  மூச்சு வேற வாங்கும்.  அதனால சிரமப்பட வேண்டாம்” என்றார். அங்கு விழுந்தது, பாட்டிற்கு வேட்டு!

ஆனால், நான் வீட்டில் யாரும் இல்லாத போது பாடி சாதகம் செய்ய, அது கருவில் வளர்ந்த மகனின் காதில் விழுந்திருக்கும் போல, மஹாபாரதத்து அபிமன்யு போல! மகன் பிறக்க, அவனுக்காக நிறைய பாடியதாலும், அவனுக்கு சங்கீதத்தில் மிகுந்த நாட்டம்! ஆனால் என்னைப் போல அவனுக்கும் எங்கேயோ சங்கீதம் அடிபட்டது!  அவன் வளர்ந்து வந்த போது, நாங்கள் திருவனந்தபுரத்திலிருந்து, கோயம்பத்தூர், பின்னர் சென்னை என்று இடம் பெயர, சென்னை வந்ததும், அவனுக்கும், அவன் அம்மாவை போன்று திரு சேஷகோபானிடம் சங்கீதம் கற்க ஆசை வந்துவிட்டது! ஏற்கனவே கற்றல் குறைப்பாடு உடைய பையன், இவன் எப்படி  பாட்டுக் கற்றுக் கொள்ளப் போகின்றான்? என்று நினைத்தாலும் நானும் அவனும், சேஷகோபாலனின் வீடு அருகில் இருந்ததால் படையெடுத்தோம்!

அவர் முதலில் கேட்ட கேள்வி “எப்படி என் மீது இவனுக்கு ஆர்வம் வந்தது?”

“உங்கள் காக்கைச் சிறகினிலே! அதை அவன் கேட்டதாலும், நான் அதைக் கற்றுக் கொண்டு அவனுக்காகப் பாடியதாலும்”

ச ரி க ம என்று பாடிக் காட்டச் சொன்னார்.  அவனுக்கு த பிசகியதால், அவர்

“நீங்க முதல்ல கீழ மாமிகிட்டக் அவனக் கத்துக்க வையுங்கோ.  அவன் நன்னா வந்தா இங்க மேல எங்கிட்ட கத்துக்கலாம்”

அப்படியாக, அவனுக்காக நானும் கீழே மாமியிடம், சேர்ந்தேன்/தோம்.  தரை டிக்கெட்.  பெரிய கூட்டம்!  20 பேரில் நாங்கள் இருவரும்.  சேர்ந்து மீண்டும் எனக்கு...ம்ம்ம் அதைச் சொல்லவில்லை நான்.  புரிந்து இருக்கும் உங்களுக்கு! பயின்று வந்த போது, ஜண்டை வரிசை வந்த போது ஒரு நாள் மாமி, ஒவ்வொரு வரிசையையும் ஒவ்வொருவர் பாட வேண்டும் என்று சொல்ல, எனக்குத் திகில். இன்று வந்தது ஆப்பு என்று!  அதுவரை மகன் தப்பித்து வந்தவன் இன்று மாட்டிக் கொண்டான் என்று.  அப்போது அவனுக்குப் 10வயதுதான். மாமி என்னைப் பாடச் சொல்ல...இது எல்லாம் நமக்கு ஜுஜூபி என்று பாட, அவன் திணற

“பாரு, உங்கம்மா எப்படிப் பாடறா.  நீ என்ன பாடற” என்று அவனைசக் கொஞ்சம் வசை பாட, அவன் அங்கிருந்து கிளம்பியதும், கண்ணில் நீருடன்

“அம்மா! பாட்டு வேண்டாம்!  நீ சொல்லித் தா!” என்றான்.  எதிர் பார்த்ததுதான். அவனது குறைபாட்டை அவர்களிடம் சொல்லிப் புரியவைக்க நான் முயலவில்லை.  என்றாலும் சேஷ கோபாலன் என் வீட்டிற்கே வந்து கற்றுக் கொடுத்தார், காசெட் வடிவில்!

வருடங்கள் உருண்டோடியது.  என் மகனின் சங்கீத ஞானமும் பெருகியது! அவன் வீணைக் கற்றுக் கொண்டான். அந்தக் கதையைச் சொல்ல தனி இடுகை வேண்டும். எனவே இங்கு அதற்கு சென்சார். இது என்னுடைய கதை!

எங்கள் வீட்டின் அருகில் தான் முதன் முதலில் ஜலதரங்கம் வாசித்த ஒரே பெண் என்ற பெருமை பெற்ற சீதாலஷ்மி துரைசாமி மாமி இருந்ததாலும் அவர் என் கணவரின் தங்கைக்கு நன்றாகத் தெரியும் என்பதாலும் அவரிடம் சென்றோம். மாமிக்கு ஜலதரங்கம் மட்டுமல்ல, வீணை, கோட்டுவாத்தியம், வயலின் என்று பன்முகக் கலைஞர்!

மீண்டும் பாலபாடம்! இங்கும் வர்ணம் வரை வந்து 10 வர்ணம் அதில் ஒன்றாகக்,  கொஞ்சம் கஷ்டமான அட தாள பைரவி வர்ணமான விரிபோணி வரை கற்றேன்.  மாமி இதைக் கொஞ்சம் வித்தியாசமான ஸடைலில் அவரது குரு அவருக்குக் கற்றுக் கொடுத்தது போலக் கற்றுத் தர நான் அதை மிக நன்றாகக் கற்றுப் பாடுவதாக அவர் சொல்லுவார்.  மாமிக்கு என்னை மிகவும் பிடித்துப் போனது! மிக மிக அன்பானவர்.  ஒரு வார்த்தை அதிர்ந்து பேச மாட்டார்.  நல்ல மனதுடைய மனித நேயமுடையப் பெண்மணி! என் மனதிற்குகந்தவர்! எனக்கு அமைந்த மிகச் சிறந்த குரு! இடையில் மாமியிடம் கெஞ்சிக் கேட்டுத் தமிழில் இருந்த வர்ணங்களையும் கற்று,  மாமிக்குத் தமிழ் கீர்த்தனைகள் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை என்றாலும் எனக்குக் கற்றுத் தருவதாகச் சொன்ன நேரத்தில், மாமியின் கணவரும், எனது ரசிகரும்?! ஆன துரைசாமி மாமாவின் மரணம்! சங்கீத்த்திற்குத் தோன்றியிருக்கும்! “என்னடா இது கீதாவிடம் இவ்வளவு நாள் தங்கிவிட்டோமே! அது சரியல்லவே” என்று!  எனவே எனக்கு டாட்டா, பைபை என்றது! பின்னர் நான் என் மகனுக்கு வேண்டி பாண்டிச்சேரி வாசம்.  பின்னர், மாமியின் வீட்டுப் பக்கம் போனால், அங்கு மாமி இல்லை! வீடு இடித்துக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.  அடையாருக்கு அருகில் இருப்பதால், பெரும்பாலும் தினமும் செல்ல வேண்டி இருக்கும் அதுவும் அந்த வழியாகத்தான்! இன்று கூட அந்த வழியாகத்தான் வந்தேன்! அவரை நேரில் பார்க்க முடியாவிட்டாலும், எங்கிருகின்றார் என்று தெரியாவிட்டாலும், சமீபத்தில் வந்த “திருமணம் என்னு நிக்காஹ்” படத்தில் வரும் மிக அருமையான பாடலான “கண்ணுக்குள் பொத்தி வைப்பாய்” அதில் எனது குரு மாமி ஜலதரங்கம் வாசித்தக் காட்சி அமைந்திருப்பது ஒரு சில துளிகளே ஆனாலும் அதைக் கண்ட போது மகிழ்ச்சியில் துள்ளிவிட்டேன்! இதோ அதன் காணொளி!  நான் மிகவும் ரசிக்கும் பாட்டு!  முகாரியில் ஆரம்பித்து, ஹமீர்கல்யாணி ராகத்தில் தொடரும்....பாடல்.....
இதோ, நான் முன்னர் சொன்ன ஸ்ருதி பேதம்/ஸ்வர பேதம் குறித்த காணொளி! சரத் என்னும் ஒரு மிகச் சிறந்த இசையமைப்பாளர்!  கேரளத்து நாட்டினராயினும், தமிழ் நாட்டில்தான் அவரது குரு!  பாலமுரளிக் கிருஷ்ணாதான்! திரு சரத் தனது குருவைப் போல!  எதில்?  குரு எப்படி மூன்றே மூன்று ஸரங்களைக் கொண்டு பல மணி நேரம் பாடுவாரோ, ஸ்வர பேதம், ஸ்ருதி பேதம் செய்து புதுப்புது சோதனை முயற்சிகள் செய்வாரோ அதைப் போல சிஷ்யனும் ஸ்ருதி பேதம் செய்வதில் வல்லவர்! 16 அடி பாய்பவர்! ஒரு உபரித் தகவல்!  சேட்டன் தமிழிலும் நன்றாக சம்சாரிப்பார்! எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்.
 
பாவையாமி பாடுமென்டே...திரு .ஷரத் இசையமைத்துப் பாடியது! ஸ்ருதி பேதம் செய்து! 13 நிமிடம்....படம் மேகதீர்த்தம். இந்தப் பாட்டு அவார்ட் வாங்கியது!  ராயல் சல்யூட் திரு சரத்!  உங்கள் அபார சங்கீத ஞானத்திற்கு! இந்தக் காணொளி இது நேரடியாக ஐடியா ஸ்டார் சிங்கரில் பாடியது! மிகவும் காம்ப்ளிகேட்டட் பாட்டு!  நேரடியாகப் பாடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று! இதோ அவரது சங்கீத ஞானத்திற்கு ஒரு உதாரணம். என்னுடன் நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கின்றேன்!


இந்தக் காணொளியைப் பாருங்கள்!  இதுவம் ஐடியா ஸ்டார் சிங்க்ரில் தீபாவளிச் சிறப்பு நிகழ்வாக, முருகனையும், தமிழ் பற்றியுமான வரிகள்! சுத்ததன்யாசியில்.....இதுவும் சரத் அவர்களின் இசைவண்ணம் தான்! நான் மிகவும் ரசிக்கும் பாடல்.  நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கின்றேன்!https://www.youtube.com/watch?v=n8H8MoZ04vM  சரத் உன்னிகிருஷ்ணன்

எனது சங்கீதக் கனவு அபஸ்வராமாகிப் போனாலும், எனது ஆர்வமோ, கேட்பதோ குறையவில்லை! இங்கு பகிர்ந்துள்ளது போன்ற பாட்டுகளும், சங்கீதக் கச்சேரிகளும்! வலைத்தளத்தில் கலக்கும் சுப்புத்தாத்தா அவரது வலைத்தளத்தில் மிக நல்ல பாடல்களைப் பகிர்ந்தும், அவரே பாடியும், எனது சங்கீத ஆசையை அவ்வப்போது தூபம் போட்டு கமழச் செய்வார்! 

துளசி எடுக்கப் போகும் அடுத்த படத்தில், அவருக்கு நான் ஆஸ்தான உதவியாளராக இருந்தாலும், நான் பாட வேண்டும் என்று சொல்லி முடிவு செய்துவிட்டார்! எனவே இத்தனை சங்கதிகள் இருக்கும் போது, அபஸ்வரமான  என் சங்கீத சங்கதிகள் உயிர்ப்படையுமோ! பார்ப்போம்! இப்போது எனக்குத் தான் டென்ஷன்! நான் நன்றாகப் பாட வேண்டுமே!  ஆம்! துளசி என்னைப் பயிற்சி செய்யச் சொல்ல ஜுரம் வேகம் பிடித்துள்ளது! அதுதான் நான் முதல் பகுதியில் சொன்ன சங்கீத வைரல் ஜுரம்!  இந்த ஜுரத்திற்கு நான் பயப்படவில்லை! என் ஆனந்த ராகம் அபஸ்வரம் ஆகாது என்ற நம்பிக்கையில்! இந்த அரை செஞ்சுரி அடித்த காலகட்டத்தில் ஏதோ இப்படியாவது, வரும் தடைகளை எல்லாம் தைரியமாக எதிர்கொண்டு செய்ய முடிகின்றதே! அதற்கு வீட்டாருக்கும் நன்றிகள் பல!

என்னை எல்லா விதத்திலும் ஊக்குவிக்கும் நண்பர் துளசிக்கு நன்றிகள் பல! நன்றி துளசி!

(ஹப்பாடா! ஒரு வழியா முடிச்சிட்டேன்பா!)

படங்கள்: கூகுள்!  காணொளிகள்: யுட்யூப்

சனி, 25 அக்டோபர், 2014

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..... வந்ததே...வந்ததே.. - 2 !


.  (இந்தப் பதிவு நம் பதிவர் விழாவில் சிறப்புரை ஆற்ற இருக்கும் பேராசிரியர் திரு த.கு சுப்பிரமணியம் அவர்களைப் பற்றிய, துளசியின் நினைவு ஆதலால்...இன்று பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்பதால்... அதிசய ராகம்.......அபஸ்வரமாகியதே திங்கள் அன்று பதிவிடப்படும்.)
      அக்டோபர் 26, 2014, ஞாயிறு, மதுரையில், கீதா நடன கோபால நாயகி மந்திரில் நடக்க இருக்கும், மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் விழாவைப் பற்றியும் அதில் கலந்து கொள்ள இருக்கும் நம் வலை அன்பர்கள் ஒவ்வொருவரும் மகிழ்வுடன் பதிவுகளும், அழைப்புகளும் விட்டுக் கொண்டிருக்க, நான் அதில் கலந்து கொள்ள முடியாமல் போனதே என்ற என்/எங்கள் ஆற்றாமையை, ( கீதா கலந்து கொள்வதாக இருந்து தவிர்க்க முடியாத காரணங்களினால் இறுதியில் தனது பிரயாணத்தை மேற்கொள்ள முடியாமல் போனதாலும்) நம் விழாவைச் சிறப்பித்துச் சிறப்புரை ஆற்ற இருக்கும் மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு தா.கு சுப்புரமணியம் அவர்களுடனான எனது நினைவுகளைப் பகிர்ந்து தீர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவு.  தமிழ் வாசி பிரகாஷ் அவர்கள் அனுப்பிய நிகழ்ச்சி நிரலில் நம் விழாவைச் சிறப்பித்துச் சிறப்புரை ஆற்ற மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு தா.கு சுப்புரமணியம் வருகிறார் என்பதைப் பார்த்ததும் மட்டற்ற மகிழ்ச்சி ஒரு புறம், கூடவே இந்த இனிய விழாவிற்குப் போக முடியாமல் தடுத்த சூழல்களை எண்ணி மிகுந்த வருத்தம் மறுபுறம்.  

   
இடப்புறத்திலிருந்து இரண்டாவதாக இருப்பவர்தான் பேராசிரியர்

இந்தக் காணொளிச் சுட்டியில் பேராசிரியரைக் காணலாம்.

1980-83 வருடங்களில் மதுரைக் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்ற எனக்கு, தமிழ் கற்பிக்கப் பேராசிரியர் தா. கு சுப்பிரமணியம் அவர்கள் வரவில்லை என்றாலும், 1980-81 ல் மதுரைக் கல்லூரி தேசிய சாரணர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சுப்பிரமணியம் சாருடன் வைரவநத்தம் எனும் கிராமத்தில் 10 நாட்கள் நடத்தப்பட்ட முகாமில் அவருடன் தங்கி சேவை செய்த இனிய நாட்களின் நினைவுகள் இப்போதும் என் மனதில் கற்கண்டாய் இனிக்கின்றது.  அந்த 10 நாள் உறவு என் வாழ்வில் ஏற்படுத்திய, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றம் உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டிய ஒன்றுதான் என்பதை இதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு மட்டுமல்ல இதை வாசித்து முடிக்கும் போது உங்கள் எல்லோருக்கும் உண்டாகும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. 


மதுரைக் கல்லூரி

ஒரு போதும் மேடை ஏறிப் பேசாத நான், வகுப்பில் ஆசிரியர்கள் ஏதேனும் வாசிக்கச் சொன்னால், கைகள் நடுங்க ஒரே மூச்சில் மற்றவர்களுக்குப் புரியாத விதத்தில் வாசிக்கும் பழக்கமுடைய நான், முகாமின்  முதல் நாள் மாலை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது தா. கு. சுப்பிரமணியன் சாரின் குரல் ஒலிபெருக்கியில், “இன்றைய மாணவர்களின் மாலை அரங்கிற்குத் தலைமை வகிப்பது துளசிதரன்” என்று அறிவிக்க, நடுங்கிப் போன நான்,  ஓடினேன் சாரிடம்.  கெஞ்சினேன்.  பலனில்லை.  விடவில்ல. மீண்டும் அழாத குறையாக முறையிட்டேன்.  “உன்னால் எப்படிச் செய்ய முடியுமோ அப்படிச் செய்” என்று சொல்லி, மைக்கைக் கையில் தர, அன்று என்ன பேசினேன் என்றோ, எப்பொழுது அந்த மாணவர் அரங்கு முடிந்தது என்றோ தெரியவில்லை. அதன் பின் ஒவ்வொருநாளும் மாலை தலைமை தாங்கிய நண்பர் எல்லோரும் சிறப்பாகச் செய்ததைக் கண்ட நான் அன்று தீர்மானித்தேன், மேடையில் பேச வேண்டும். பயமின்றி, நடுக்கமின்றி எளிதாகப் பேச வேண்டும். 

அடுத்த வருடம் நண்பன் சீனிவசன், கல்லூரிப் பேரவைச் செயலாளராகப் போட்டியிட, நானும் நண்பர்களும் தேர்தல் பிரச்சாரம் எனும் பெயரில் முதலில் கல்லூரி விடுதியிலும், பின் கல்லூரியிலும் சீனிவாசனுக்கு வாக்களிக்க வேண்டிப் பேசினோம்.  ஒரு சின்ன முன்னேற்றம் என்றாலும் போதாது என்று உணர்ந்த நான், சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டபின் கல்லூரியில் ஒரு நாடகம் எழுதி, இயக்கி, நடிக்கவும் செய்தேன் – “ஒரு கலியுலக மசலா கண்ணோட்டம்”. சிறு வயதில், இளங்கன்று பயமறியாது என்பதால் ஓரிரு நாடகத்தில் நடித்திருக்கின்றேன் என்றாலும், இளைஞனாகக் கல்லூரியில் நாடகத்தில் நடித்த போதும், அதற்கான முன்னுரை வழங்கிய போதும் தான், மேடையில் பயமின்றிப் பேச முடிந்தது. நான் சொல்லியே ஆக வேண்டியவைகளை மட்டும் மனதில் கொண்டு பேசி என் பயத்தையும், நடுக்கத்தையும் அன்று போக்கினேன்.  அப்படி எனக்கு மேடை ஏறிப் பேசியே ஆகவேண்டும் என்ற  ஒரு இலட்சியத்தை என் மனதில் விதைத்துச் சென்ற வித்தகர்தான் மதிப்பிற்குரிய பேராசிரியர் தா. கு. சுப்பிரமணியன் அவர்கள். 

10 நாட்கள் நடந்த முகாமில் ஒரு நாள் அவர் பேசும் போது, தான், அப்போதுதான் முதன் முறையாகத் தன் குடும்பத்தாரை விட்டு விலகி வாழ்வதாகவும், அவரதுத் தம்பியைப் பிரிந்து இருக்க மிகவும் சிரமமாக இருப்பதாகவும் சொல்லி முடித்ததும் தேம்பி அழ ஆரம்பித்தார்.  இப்போதும், ஆழமான அன்பு, குடும்பப் பாசம் என்றால் அதற்கு உதாரணமாக என் மனதில் தோன்றி மறைவது என்னவோ பேராசிரியர் தா. கு. சுப்பிரமணியன் அவர்களின் முகமும் வார்த்தைகளும்தான்.  இத்தனை வருடங்கள் கடந்தும், குடும்பத்தாரின் பிரிவை எண்ணி அது போல் வருந்திய ஒருவரை என்னால் பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

1982 ல், நான் இறுதியாண்டு பயின்ற போது, நண்பர் சீனிவாசன் 1981 ல் கல்லூரிப் பேரவைச் செயளாளராக ஆனது போல், எனக்கும் பேரவைத் தலைவராக ஆசைவர (வெளியில் சொன்னதென்னவோ நண்பர்களின் ஆசைக்காக என்று), பேரவைத் தேர்தலில் போட்டியிட்டேன்.  நண்பர்களான, கனகரத்தினம், ஜெயபால், ரமெஷ், வீரபத்திரன், லட்சுமணன், குமரேசன், கனகவேல் போன்றோர் சுவரொட்டிக்கு நல்ல ஈர்ப்பு மிக்க வாசகம் எழுதச் சிந்தித்தபோது நான் அவர்களை அழைத்துக் கொண்டு பேராசிரியர் த. கு சுப்பிரமணியம் அவர்களிடம் சென்று கேட்க, உடனே அவர் “தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்-தர்மம் மறுபடியும் வெல்லும்” என்று எழுதித் தர அதை நாங்கள் சுவரொட்டியில் சேர்த்து அச்சடித்து ஒட்டினோம்.  அவர் வாக்குப் பொய்யாகவில்லை.

1981 ல் சீனிவாசன் போட்டியிட்டுத் தோற்கடித்த ஆனந்தன் எனும்  பொருளாதாரவியல் மாணவர் ஏனோ படிப்பை நிறுத்தியது எல்லொருக்கும் கவலையைத் தந்தது.  அதற்கு ஒரு காரணம், ஆனந்தனின் தோல்வி என்றும், அதற்குக் காரணம் சீனிவாசனும் அவரது நண்பர்களும்தான் என எல்லோரும் நம்பினார்கள். குறிப்பாக பொருளாதாரத் துறை தலைமைப் பேராசிரியரும் மாணாவர்களும். அதற்கு அடுத்த வருடம், பேரவைத் தலைவராகப் போட்டியிட்டது பொருளாதாரத் துறையைச் சேர்ந்த ராஜனும், ஆங்கில இலக்கியத் துறையைச் சேர்ந்த நானும்.  தலைமைப் பேராசிரியர் பொருளாதாரத் துறை மாணவர்கள் ராஜனுக்கு வாக்களிப்பது மட்டுமின்றி வெற்றிப் பெற உதவ வேண்டும் என்றும் உறுதியாகக் கூற விடுதியில் இருந்த நண்பர்களான நந்தகோபன், பிரதாபன் போன்றோர்கள் கூட எனக்கு எதிராக பிரசாரத்திலும் இறங்கி விட்டார்கள்.  அதில் பிரதாபன் என்னுடன் எனக்காக வாக்குக் கேட்க வரும்போதெல்லாம், நாங்கள் முன்னே நடக்க கொஞ்சம் பின் தங்கி, “நான் துளசி கூட வருவேன் ஆனா ஓட்டு ராஜனுக்கு. நீங்களும், ராஜனுக்கு ஓட்டு போடணும்” என்று சொல்லிச் சென்றதை, ஒரு நண்பன் சொன்னதும் அதிர்ந்து விட்டேன்.  எவரையும் கண்ணை மூடி நம்பக் கூடாது என்ற படிப்பினை கிடைத்த நாள் அது. 

1982 ஜூலை 23 தேர்தல் நாள். ரம்சான் ஆனதால், வாக்களிக்க வேண்டிய 1469 பேரில் வாக்களிக்க 250 பேர் வரவே இல்லை.  ராஜனுக்கு 576 வாக்குகளும், எனக்கு 552 வாக்குகளும்.  24 வாக்குகள் அதிகம் பெற்ற ராஜன் பேரவைத் தலைவர் ஆனார்.  ஆசிரியரின் வாக்கு பலித்தது.  தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வியது. (கொலையாளியே கூட தான் தான் தர்மம், தான் செய்ததும் தர்மம் என்றுதானே சொல்வது வழக்கம்.  அது போல் தேர்தலில் தோற்ற நானும் அப்படிச் சொல்வதில் தப்பில்லையே!).  ஆனால், இந்த தர்மம் (?!) மறுபடியும் எப்போது வெல்லும்? சந்தேகத்துடன் காத்திருந்தேன். காலச்சக்கரம் உருண்டது.
 
1994ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழிக் கல்வி மூலம் வழி பெற்ற பி.எட் சான்றிதழுடன் உயர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரின் நேர்முகத் தேர்வுக்குப் போன என்னிடம்,  ரெகுலர் பி.எட் இல்லாமல் ஆசிரியராக முடியாது என்றதும், கேரளா பல்கலைக் கழகத்தின் அடூர் பி.எட் செண்டருக்கு ஓடினேன்.  என் மாணவர்கள் ஓரிருவருடன் (நான் க்ளாசிக் கல்லூரியில் கற்பித்த இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவர்கள்)  என் 32 வாது வயதில் மீண்டும் மாணவனானேன்.  அப்போதுதான், இந்த வயதான தர்மம் மறுபடியும் வென்றது.  அடூர் பி.எட் கல்லூரியில் போட்டியின்றி நான் மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  ஆம்!  ஆசிரியர் வாக்குப் பொய்யாகவில்லை!  பொய்யாகாது என்ற நம்பிக்கையும் எனக்கு ஏற்பட்டது!  சந்தேகத்திற்கே இடமில்லை அது ஒரு அருள் வாக்குத்தான்.

அது போல், தமிழகத்திலிருந்து கேரளம் வந்த எனக்கு, “ஓம் ஸ்ரீ கணபதயே” க்குப் பதிலாக, “ஹரி ஸ்ரீ கணபதயே நம” என்றும் “ஓம் நமோ பார்வத”யே என்பதற்குப் பதிலாக, “அம்மே நாராயணா”  “தேவி நாராயாணா” என்றும் சொல்லச் செய்தும், குளித்து தேவாரமும், திருவாசகமும் பாடி வாழ்ந்த மலையாளி மக்களை ராமாயாணமும், பாகவதமும் மட்டும் பாடச் செய்தும், முருகக் கடவுளின் ஆலயங்கள் பலதையும், உன்னிக் க்ருஷ்ணன் ஷேத்திரங்களாக மாற்றியும் சைவ மதத்தை வேரோடு வெட்டிச் சாய்த்து அங்கு வைணவ மதத்தை வளர வைக்க முயலும் அக்ரமத்தைக் கண்டு மனம் குமுரத்தான் முடிந்தது.  இருப்பினும் எனக்கு நம்பிக்கை நட்சத்திரமாக என் மதிப்பிற்குரிய ஆசிரியர் தா.கு. சுப்பிரமணியன் தந்த அந்த வரிகள் என்னுள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றது.  அதை மனதில் கொண்டு சைவ நெறிக்கு இழைக்கப்பட்டக் கொடுமையை உலகறியச் செய்ய இரண்டு குறும்படங்கள் எடுத்திருக்கின்றேன்.  (மஹாமுடி த க்ரேட், கார்பெண்டர் த க்ரேட்)

இவ்வருடம், முன்றாம் குறும்படம் “பொயட் தெ க்ரேட்” எனும் குறும்படம் எடுக்க இருக்கின்றேன்.  எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.  “தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்-தர்மம் மறுபடியும் வெல்லும்”.  எனக்கு எழுதவும், குறும்படங்கள் எடுக்கவும் தூண்டு கோலாய் நிற்கும் இவ்வருள் வாக்கை வழங்கிய என் மதிப்பிற்குரிய பேராசிரியர் தா.கு. சுப்பிரமணியன் அவர்களின் நன்மைக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். எத்தனையோ மாணவர்களின் மனதில் மிளிரும் (நம் மதுரைத் தமிழன் உட்பட) ஏராளமான பட்டிமன்றங்களிலும், மேடைகளிலும் தமிழ் அமிழ்து பொழிந்து தமிழ் வளர்க்கும் இப்பேராசிரியரின் நன்மைக்கு நீங்களும் வேண்டிக் கொள்ளுங்களேன்!